2004 ஆம் வருட ராசிபலன்

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

பண்டிட் திருவை சொதப்பப்பா சாஸ்திரிகள்


மேஷம்

வளம் தரும் ஆண்டு

மற்றவர்களுக்காகவே வாழும் மேஷராசி அன்பர்களே,

இவ்வாண்டில் எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் வருவதால், இதுவரை இந்திய அரசியல்வாதிகளின் ஊழலைக் கண்டு மனம் வெதும்பிக்கொண்டிருந்தது நின்று, சுரண்டினா சுரண்டிட்டுப் போறானுங்க என்ற நிலைக்கு வந்துவிடுவீர்கள். மற்றவர்களுக்கு உங்கள் சொத்தையும் சோத்தையும் ஓட்டையும் தாராளமாகக் கொடுப்பதால், உறவினர்கள் நண்பர்கள், எம்எல்ஏக்கள், எம்பிகள் மற்றும் சமுதாயத்தில் புகழும் அடைவீர்கள்.

இளைய சகோதர சகோதரிகளால் சற்று மனக்கசப்பு ஏற்படலாம். உங்களது தாராள மனதை மனைவியிடம் சற்று அடகுவைத்துவிட்டு ஜாமீன் கையெழுத்து என்பதை இந்த வருடம் மறந்துவிடுங்கள். அப்போதுதான் கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இல்லையேல் கரண்டியும் தட்டுமே பறக்கும். காசு சேமிக்கும் வழியைப் பாருங்கள்.

நல்ல வேளை, ஐந்து வருடம் கழித்துத் தான் உங்களை அரசியல் வாதிகள் கண்டுகொள்வார்கள் என்று எண்ண வேண்டாம், இன்னும் இரண்டு வருடத்தில் அம்மா, சின்னம்மா, தாத்தா என்று எல்லோரும் உங்களையே வளைய வருவார்கள்.

காங்கிரஸ் கிழங்களுக்கு

சில சிக்கலான கூட்டணி போடுகிறேன் பேர்வழி என்று வருபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும். உங்கள் ஓய்வூதியப் பணத்தை எடுத்து இருமடங்காக்கிக் காட்டுகிறேன் என்று வருபவர்களை, ஜெயலலிதா வைகோவை நடத்துவதுபோல நடத்தவும்.

திமுக அரசாங்க ஊழியர்களுக்கு அன்பர்களுக்கு

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கட்சி மாறலாமா என்று கூட யோசிப்பீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும். வீடு வாங்கும் யோகமும் உண்டு. கனவிலும் இனி ஸ்ட்ரைக் இல்லை என்று எண்ணினாலும் சரியே.

அ தி மு க வியாபாரிகளுக்கு அன்பர்களுக்கு

அம்மா தயவினால் ஆயிரம் பலன் பெற்ற அன்பர்களே, அம்மா வழியில் கொள்கை, கூப்பாடு என்று எதுவும் இல்லாமல், அம்மாவின் பாதாரவிந்தங்களைச் சரண் அடைந்தீர்களானால் ஜன்மம் சாபல்யம் பெறும். தனவிருத்தி உண்டு. கார்த்திகை நட்சத்திர தரிசன யோகம் உண்டு.

அதிமுகவில் இருக்கும் தாய்க்குலங்களுக்கு

வேலையில் கவனம் செலுத்துங்கள். தோழிகளுக்கு பணம் கொடுத்துதவும் அளவுக்கு உங்களிடம் பணம் புரளும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குழந்தைகளிடம் பாசம் செலுத்துங்கள். வருவதை வாங்கிக் கொள்ளுங்கள். அம்மாவின் காலடியில் விழுகிறவர்கள் எல்லோரும் உங்கள் காலில் விழுவதாய்க் கற்பனை செய்யாதீர்கள். உங்கள் விதி பாவம், பணி செய்து கிடப்பதே.

பொதுவாக அனைத்து அரசியல்வாதிகளுக்கும்

காங்கிரஸ் கிழங்களுக்கு கொடுத்த அதே அறிவுரை. சிக்கலான கூட்டணிகளுக்கு அஞ்சவும். பாரம்பரிய அரசியல்வாதி குணத்தை நம்புவதால் தப்பிக்கலாம்.

முஸ்லீம்களுக்கு

அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் பயந்ததுபோல ஏதும் நடக்காது. எதிரிகளைக் காட்டிலும் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு வருபவர்களிடம் ஜாக்கிரதையாய் இருங்கள். பலன் பெற்ற பின்னால், அந்தர்பல்டி அடித்து , அமைச்சர் பதவி பெற்று உங்களை அம்போ என்று விட்டு விடுவார்கள். அதற்கும் ஆயிரம் விளக்கம் தயாராய் வைத்திருப்பார்கள் . செவ்வாய்க்கிழமை நெய்விளக்கு ஏற்றி மாரியம்மனை வணங்கி வரும் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் வழங்கினால் பனிபோல வந்த துன்பம் பனிபோலவே நீங்கிவிடும்.

கிரிஸ்துவர்களுக்கு

தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து கல்வியில் நாட்டம் செலுத்தவும். முஸ்லிம்களுக்குச் சொன்ன ராசிபலன்கள் உங்களுக்கும் பொருந்தும். ஏசுநாதரின் தியாகத்தைச் சொல்லி, மற்றவர்களுக்கு எதிராகக் கொம்பு சீவுகிறவர்களை நம்பாதீர்கள் .சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து நடங்கள். அகோர வீரபத்திரன் கோவிலில் நெய்விளக்கு ஏற்றி வணங்கி வரும் பக்தர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளித்து , பாவிகளே என்று அழைக்காமல், புண்ணியவான்களாய் நடத்துங்கள்.

இந்துக்களுக்கு

ஆயுள்ஸ்தான அதிபதி சஷ்டாஷ்டக அமைப்பில் உள்ளதால் ஆபத்து வரக்கூடிய இடங்களைத் தவிர்க்கவும். மாதா கோவிலில் மணி அடிப்பதும் நாகூர் தர்காவுக்குச் சென்று நெய்விளக்கு போட்டு வருவதும் நல்லது. இந்து என்று கர்வத்துடன் சொல்லு, என்று கொம்பு சீவும் பேர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களைக் காப்பாற்ற வரவில்லை. தம்மைக் காப்பாற்றிக் கொள்ள உங்களை உசுப்பி விடுகிறார்கள் என்ற தெளிவு வந்தால், ஞானம் கிடைக்கும். அந்த ஞானம் வந்தால் பின் வேறெது வேண்டும் ?

Series Navigation