1/4 என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

தேவமைந்தன்சென்ற எண்பதுகளின் பிற்பாதியில், புதுச்சேரி நீடா ராஜப்பையர் வீதியின் 60ஆம் எண்ணிட்ட தன் இல்லத்துக்கு வந்திருந்த மலர் மன்னன் அவர்களையும் அவர் வெளியிட்டு வந்த 1/4 என்ற பெயர்கொண்ட காலாண்டிதழையும் காரை சிசே பிலோமிநாதன் (எ) காரை சிபி அறிமுகம் செய்து வைத்தார். ‘தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்கான காலாண்டிதழ்’ என்று அதன் அறிமுகம் ஒற்றை வரியில் அட்டையின் கீழ்ப் பகுதியில் கண்டிருந்தது. அளவு,தெமி கால். ஓர் இதழின் விலை ரூ.15. பக்கங்கள் தொடர் எண் இடப்பட்டிருந்தன. அதாவது ‘ஜூலை-செப்டம்பர் 1980 இதழ் 1 முதல் 96 வரை எண்ணிடப்பட்டிருந்தால் அடுத்த அக்டோபர்-டிசம்பர் 1980 இதழின் பக்கம் 97இல் தொடங்கி 196இல் முடியும். இப்படி நான் பார்க்க வாய்த்த நான்காம் 1/4 இதழின் கடைசிப் பக்கம் 347ஆவது ஆகும். அது அக்டோபர்-டிசம்பர் 1981 இதழ். “இவ்விதழை முதலாண்டின் கடைசி இதழாக — நான்காவது இதழாகக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்ட மலர் மன்னன், வாசகருக்காக ஆண்டுச் சந்தாவை முப்பது ரூபாய் குறைத்தும்[அதாவது ரூ.20] தனி இதழைப் பத்து ரூபாய் குறைத்தும்[அதாவது ரூ.5] அறிவித்திருந்தார்.

முதல் இதழே, கே.எம்.ஆதிமூலம் அவர்களின் அட்டைச் சித்திரத்துடன் பரிமளித்தது. கடைசி அட்டையில் அவரைக் குறித்த விவரமும் முகவரியும் இருந்தன. அடுத்து வந்த இதழின் அட்டைச் சித்திரங்களை சி.தட்சிணாமூர்த்தி, ஆர்.பி.பாஸ்கரன், கே.பி.சிதம்பர கிருஷ்ணன் முதலானோர் வரைந்திருந்தனர். ந.முத்துசாமியின் ‘திருவிழாவும் கூத்தும்'(புரிசை கண்ணப்பத் தம்பிரான் குறித்த விவரம் கொண்டது) என்ற ஆய்வில் தொடங்கி, கோமல் சுவாமிநாதன், ஞானக்கூத்தன், வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, சா.கந்தசாமி, என்.ஆர்.என்.சத்யா, செ.ரவீந்திரன்,காரை சிபி, பிரபஞ்சன் முதலானோரின் ஆய்வுரைகள் 1/4 இதழைக் கருத்துள்ளோர் கவனிக்க வைத்தன.

காரை சிபி அவர்களின் ‘புதுவைத் தமிழர் வாழ்க்கையில் பிரெஞ்சு கலாசாரத் தாக்கம்'[ஜனுவரி *-மார்ச் 1981: பக்.199-223] என்ற ஆய்வு என்னை மிகவும் கவர்ந்தது. ஆய்வின் பொருள் மிகவும் விரிவானது; சிக்கல் மிகுந்தது. ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள், சிற்சில ஆண்டுகள் இடைவிட்டு ஒன்றை ஒன்று பிணைந்தும் உறழ்ந்தும் நீடித்த பிரஞ்சுப் பண்பாட்டையும் தமிழ்ப் பண்பாட்டையும் குறித்துத் தெளிவாக ஆராய்ந்திருந்தார். தோராயமாக நாற்பத்தைந்து அடிப்படைத் தரவுகள் தந்திருந்தார். அந்த ஆய்வின் – ஆகவும் முதன்மையான செய்திகளை மட்டும் இங்கே தருகிறேன்.

பாவேந்தர் பாரதிதாசன் பற்றி, “புதுவை மாநிலத்திலிருந்து தமிழுக்குக் கிடைத்த ஒரே படைப்பாளி பாரதிதாசன்தான். அவரும் பிரெஞ்சுக் கலாசாரத்தின் தாக்கம் தம்மீது விழாமல் தம்மை ஒதுக்கிக்கொண்டு(1), தமிழ்நாட்டில் தோன்றிய திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு விட்டவரானார். ஓர் இயக்கத்தைப் பரப்பும் பணிக்குத் தமது படைப்பாற்றலைப் பயன்படுத்துவதிலேயே அவர் கவனம் சென்றது… இவருக்கு மட்டிலும் பிரெஞ்சு தர்சனக் கவிஞர்களான பொதலேர், ரைம்போ, போல்வலேரி முதலானோரின் கவிதைகளில் பரிச்சயமும் ஈடுபாடும் ஏற்பட்டிருக்குமானால் இதே நூற்றாண்டில் பாரதிக்குப் பின் இன்னொரு தலைசிறந்த கவியைப் பெறும் வாய்ப்பு தமிழுக்குக் கிட்டியிருக்கும். விடுதலை இயக்கப் பிரசாரத்திற்கு சுப்பிரமணிய பாரதியார் தமது படைப்பாற்றலைப் பயன்படுத்திய போதிலும் கவித்துவத்தைக் காபந்து செய்து கொள்ளும் வித்தை அவருக்குக் கைவரப் பெற்றிருந்தது. பாரதிதாசனோ ஆவேச மிகுதியால் தமிழ்நாட்டின் திராவிட இயக்கத்திற்கு புதுவைப் பகுதியின் காணிக்கையாகவே தம்மை ஆக்கிக் கொண்டவர். இதன் விளைவாகத் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு மிகச் சிறந்த பங்கினை வழங்கும் பெருமையினைப் புதுவை இழக்க நேர்ந்தது.”(2)

“இவருக்கு மட்டிலும் பிரெஞ்சு தர்சனக் கவிஞர்களான பொதலேர், ரைம்போ, போல்வலேரி முதலானோரின் கவிதைகளில் பரிச்சயமும் ஈடுபாடும் ஏற்பட்டிருக்குமானால் இதே நூற்றாண்டில் பாரதிக்குப் பின் இன்னொரு தலை சிறந்த கவியைப் பெறும் வாய்ப்பு தமிழுக்குக் கிட்டியிருக்கும்” என்ற காரை சிபியின் கருத்தை உடன்படாமல் எதிர்த்தவர்களுள் முதல்வனாக நான் இருந்தேன். தமிழ்நாட்டின் கோயமுத்தூரிலிருந்து புதுவைக்கு வேலைபார்க்க வந்தவன் என்றதால் எனக்கு அந்தக் கருத்தின் ஆழம் தென்படவில்லை என்று அவர் கருதினார். காரை சிபி மறைந்து பல்லாண்டுகள் ஆனபோதும், அவர் கருத்து என் மனத்துள் உறுத்திக்கொண்டே இருக்கிறது. ‘காலனியாக்கத்தின் தாக்கம்,’ புதுச்சேரியின் மக்கள் பலரை இன்றளவும் விடவில்லை.

புதுவைத் தமிழர்கள் என்பவர்கள் யார் என்பதை, “இங்கு தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு புதுவையிலும், காரைக்காலிலும் வாழ்ந்துவரும் அனைவரையும் ஒருசௌகரியம் கருதி புதுவைத் தமிழர்கள் என்று எடுத்துக் கொள்வது பொருந்தும்” என்று காரை சிபி வரையறுத்துக் கொண்டார்.(3)

புதுவைவாழ் தமிழ் எழுத்தாளர்களை இவ்வாறு சாடினார் அவர்: “பிரெஞ்சு நாட்டு மொழிபெயர்ப்பாளர்களைப் பின்பற்றி நம்மவர்கள் இந்த மொழிபெயர்ப்பு வேலையே பெரிய இலக்கியப்பணி என்று எண்ணி விட்டனர் போலும்.(4) தமிழகத்தில் ஒரு புதுமைப்பித்தன், ஒரு க.நா.சு. இவர்களைப் போன்ற இன்னும் சிலரை பிரெஞ்சு இலக்கியங்கள் பாதித்த அளவுக்குக் கூட புதுவைவாழ் தமிழ் எழுத்தாளர்களைப் பாதிக்காது போனது துரதிர்ஷ்டமே….. அரவிந்த ஆசிரமவாசிகளா யிருந்த சுத்தானந்த பாரதியும், ப.கோதண்டராமனும் பிரெஞ்சு இலக்கியத் தாக்கத்தால் உந்தப்பட்டவர்கள். பிரபல பிரெஞ்சுக் கவிஞன் விக்தோர் உய்கோவின் ‘லெ மிசெராபிள்’ என்ற நாவலை ‘ஏழை படும் பாடு’ என்றும் ‘லோம் கிரீ’ என்னும் நாவலை ‘இளிச்சவாயன்’ என்றும் மொழிபெயர்த்திருக்கிறார், சுத்தானந்த பாரதி. இவரது மற்ற படைப்புகளிலும் பிரெஞ்சு இலக்கியத் தாக்கம் உண்டு. இவரைப் போலவே ப.கோதண்டராமன் விக்தோர் உய்கோவின் நாடகமான ‘நோத்ருதாம் தெ பரி’ என்பதை ‘மரகதம்’ என்று வெளியிட்டிருக்கிறார்.
ஆசிரமத்தோடு சம்பந்தப்பட்டிருந்த மண்டபம் சீனிவாச சாஸ்திரி, நகைச்சுவை நாடகாசிரியனான மொலியேரின் ‘லே ஃபூர்பரி தெ ஸ்காப்பேன்’ என்ற நாடகத்தை ‘குப்பனின் பித்தலாட்டங்கள்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்……சுப்பிரமணிய பாரதியார் பிரெஞ்சு தேசியப் பாடலான ‘La Marseillaise’ஐ மொழிபெயர்த்திருக்கிறார். மொழியும் இசையும் சிதையாமல் இந்த பிரெஞ்சு தேசிய கீதத்தை சகுந்தலா பாரதி அவர்கள் பாடக் கேட்டிருக்கிறேன். இப்பாடலைத் தம் மகளைப் பாடச் சொல்லிவிட்டு பாரதியார் எழுந்து நின்று மரியாதை செய்வதோடு தம்முடன் இருப்பவரையும் எழுந்து நின்று மரியாதை செய்யும்படிக் கட்டளை இடுவாராம்.”(5)

பாரதியாரின் வசன கவிதைகள், வால்ட் விட்மன் படைத்த ‘புல்லின் இதழ்க’ளின் தாக்கம் என்று திறனாய்வாளர் குறிப்பது வழக்கம். அதை மறுக்கும் காரை சிபி, பிரெஞ்சுக் கவிஞர் ரைம்போவின் ‘இல்லூமினேஷன்ஸ்’ என்ற தலைப்பிலான கவிதைகளின் தாக்கம் கொண்டவை மட்டுமல்ல வடிவத்திலும் அவற்றை ஒத்திருக்கின்றன பாரதியின் வசன கவிதைகள் என்றார்.(6)

ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் தினசரி நமக்குக் கிடைத்த வரலாற்றுப் பெட்டகம் மட்டுமன்று; இலக்கியத் துறையில் பிரெஞ்சுப் பண்பாடு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதற்கும் சான்று என்றார் காரை சிபி. “பிரெஞ்சு வர்த்தகக் குழுவினர், அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துக் காபந்து செய்து வைப்பதையும், தேவைப்படும்போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதையும் கண்ட பிள்ளையவர்கள், தாமும்” தமக்குத் தெரியவந்த முதன்மையான சேதிகளைக் குறித்து வைக்கும் விழிப்புணர்வு பெற்றார் என்றும் எழுதியுள்ளார்.

தவிர, ‘புதுச்சேரியின் முதல் கப்பலோட்டிய தமிழர்’ என்ற புகழை ஆனந்தரங்கப் பிள்ளை பெற்றதற்குக் காரணம், பிரெஞ்சுக்காரர்களோடு ‘ஆனந்தப் புரவி’ என்ற மரக்கலத்தை ஓட்டியதுதான் என்றார்.

பிரெஞ்சுப் பாதிரிமார் தமிழுக்குச் செய்த மிகப் பெரிய தொண்டு, பிரெஞ்சு-தமிழ், தமிழ்-பிரெஞ்சு அகராதி தொகுத்ததுதான்; இது இன்றளவும் பயன்படுகிறது என்றார்.

‘இலக்கணக் கண்ணாடி’ என்ற நூலில் ஜோசப் தாவீது வாத்தியார் என்ற தமிழறிஞர் பிரெஞ்சு இலக்கண வினையியலில் வரும் பெண்பாற் சொல்லான ‘conjugaison’ என்ற பகுதியைக் ‘கிரியா மாலை’ என்றாக்கிச் சேர்த்திருப்பது அக்காலப் பிரெஞ்சுக் கல்வியின் தாக்கம் என்று காரை சிபி எழுதி, மேலும் விளக்கியிருப்பது தமிழ்-பிரெஞ்சு இலக்கணங்களின் தகைமைக்கு அரிய சான்று. நிகழ்வு, நிகழ்வில் நிகழ்வு, நிகழ்வில் எதிர்வு, நிகழ்வில் இறப்பு; இறப்பு, இறப்பில் நிகழ்வு, இறப்பில் எதிர்வு; எதிர்வு, எதிர்வில் எதிர்வு, எதிர்வில் இறப்பு, எதிர்வில் நிகழ்வு ஆகிய காலங்களைத் தமிழில் உள்ள காலங்களுடன் சேர்த்திருக்கிறார் ஜோசப் தாவீது வாத்தியார். இவற்றுள், ‘இறப்பில் இறப்பு’க்குச் சான்றாக “நினைத்தேன் வந்தாய்” என்பதைக் குறிப்பிட்டார் காரை சிபி.

ஒரு வியப்புக்குரிய சேதியைக் குறிப்பிட்டார் இவர்.

பிரான்சில் 1789 ஆமாண்டு ஜூலைத் திங்கள் 14ஆம் நாள் நடந்த புரட்சி பற்றிய செய்தி புதுச்சேரிக்கு 22-02-1790 அன்றுதான் தெரிய வந்ததாம். புதுச்சேரித் தமிழர்கள் இதனால் எந்தவகையிலும் தாக்கமெய்தாமல் நாமக்கல் கவிஞர் சொன்னதுபோல் ‘கத்தியின்றி, ரத்தமின்றி’ பிரெஞ்சுப்புரட்சியின் முழுப்பலன்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள் என்கிறார். பிறகு 1848இல் நடந்த பொதுத் தேர்தலிலும் அடுத்த தேர்தல்களிலும் நடந்த ‘விசித்திரங்க’ளை விரிவாகச் சொல்லியிருந்தார்.
அது மட்டுமல்ல, 1882 சட்டம் ஒன்றின்படி ‘ரெனோன்சான்’களாக(those who wilfully renounce their citizenship rights and opt for French Citizenship Rights) மாறியவர்களின் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் தந்திரங்களையும் பிரெஞ்சு அரசாங்கம் அதற்கு ஆற்றிய எதிர்வினைகளையும் தெளிவாக விளக்கியிருந்தார்.(7)

புதுச்சேரியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டில் சிறையர்களாகவும் கூலிகளாகவும் பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள் எப்படி இன்னும் நடந்து கொள்ளுகிறார்கள் என்பதைச் சிறப்பாகக் காரை சிபி விளக்கியிருந்தார். அதில் ஒரு பகுதி:
“புதுவைத் தமிழர் கடல் கடந்து சென்ற பின்பும் பிரெஞ்சுக் கலாசாரத்தை மேற்கொண்ட போதிலும் மத நம்பிக்கைகளில் அவர்கள் இந்து மதத்தை இன்றும் பேணிக் காத்து வருகின்றனர். இங்கு நான் குறிப்பிடுவது ரெயூனியன் என்னும் கடல் கடந்த பிரெஞ்சுப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களைப் பற்றி. இன்றும்கூட அவர்கள் தங்களை மலபார்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறார்கள். அங்கு கொண்டு செல்லப்பட்ட அத்தனை தமிழர்களும் கிறித்துவ மதத்துக்கு மாற்றப்பட்டு விட்டனர். இவர்கள் அங்கு சென்று குடியேறிய தம் மூதாதையரின் பெயரைத் தம் குடும்பப் பாரம்பரியப் பெயராக இன்றும் வைத்துக் கொள்கிறார்கள். அதனோடு ஒரு கிறித்தவப் பெயரையும் சேர்த்து வைத்துக் கொள்கின்றனர். கிருஷ்ணன், கருப்பன், சுப்பிரமணியன், வீரப்பெருமாள், வீரக்கவுந்தன்(கவுண்டன்), மன்னார் காது(காடு – ‘ட’ உச்சரிப்பு பிரெஞ்சில் இல்லை). இன்றைக்கும் இவர்கள் இந்து மதச் சடங்குகளை மேற்கொள்ளுகின்றனர். தீமிதி விழாக் கூட நடத்துகின்றனர். தங்கள் பிள்ளைகளை முதலில் தீ மிதிக்கச் செய்கிறார்கள். அதன் பின்னரே கிறித்தவ மத சம்பிரதாயப்படி புது நன்மை ஏற்கச் செய்கிறார்கள். இவர்கள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்கு ‘இதை எங்கள் பெரியோர்கள் செய்தார்கள், நாங்களும் செய்கிறோம்’ என்பதைத் தவிர வேறு விளக்கம் சொல்லத் தெரியவில்லை. காலையில் மாதாகோயிலுக்குச் சென்று பூசை கேட்டு நன்மை ஏற்கின்றார்கள்(புனித அப்பம் விழுங்குதல்). மாலையில் நீறுபூத்த அல்லது நாமம் ஏற்ற நெற்றியினராய் மாரியம்மன் கோயிலுக்கோ, முருகன் கோயிலுக்கோ சென்று வழிபடுகின்றனர். இந்த விசித்திரமான மலபார்களைக் கண்ட அந்தத் தீவிலேயே பிறந்த ஒரு வெள்ளைச் சிறுவன் கூர்ந்து கவனித்துப் புரிந்து கொள்ள முயன்று இருக்கிறான். இவனே பிற்காலத்தில் பிரெஞ்சுக் கவிஞருள் ஒருவனாய் மலர்ந்த ‘Le Conte De Listle’ என்பவன். இவன் ஆரம்பப் படிப்பை ரெயூனியனில் முடித்துக் கொண்டு மேல்படிப்புக்குப் பாரீசுக்குச் சென்ற போது அங்கு இந்துமத சம்பிரதாயங்களையும் தத்துவங்களையும் பற்றிப் புரிந்து கொண்டான். அதன் பயனாய் இந்து கவிதைகள் Poêms Hindous என்று பல கவிதைகள் எழுதியுள்ளான்.”(8)

புதுச்சேரி ஐந்து முற்றுகைகளைச் சந்தித்திருக்கிறது. 1748இல், துய்ப்ளே காலத்தில் நிகழ்ந்த முற்றுகையின் போது துணிச்சலான தமிழர்கள் பலர் நகருக்குள்ளேயே இருந்தனர். அவர்களுள் ஒருவரான ஆனந்தரங்கப் பிள்ளை அந்த நாற்பது நாட்களிலும் கூட, தம் தினப்படி சேதி குறிப்பை விடாது எழுதினார். 1760இல் நிகழ்ந்த முற்றுகையின் பொழுது “யானை கட்டி அரசாண்ட நகரில், மக்கள் பூனைகளையும் நாய்களையும் பெருச்சாளிகளையும் உணவாகக் கொள்ள நேர்ந்தது.(9)

இப்பொழுது உள்ள புதுச்சேரி நகரம் 1763க்குப் பின் நிர்மாணிக்கப் பெற்றது. பிரான்சிலிருந்து வந்த பொறியியல் அறிஞர்கள் அதைச் செய்தனர். கட்டடக் கலையில் பிரெஞ்சுப் பொறியாளர்கள் வல்லவர்கள் என்பதால்தான், பிற்காலத்தில், சண்டிகர் நகரை உருவாக்கும் பொறுப்பை ‘கொர்புய்சியே’ என்ற பிரெஞ்சுக் கட்டடக் கலைஞரிடம் ஜவஹர்லால் நேரு ஒப்படைத்தார்.

இன்றுங்கூட, புதுவையில் வெண்சுதை தீட்டப்பெற்ற நீண்ட தூண்களைக் கொண்ட ரோமன் ஆர்ட் கட்டடங்களைக் காணலாம். அவைகளின் கம்பீரமே தனி. சுண்ணாம்புக் கலவையை அம்மியில் வைத்து விழுதுபோல் அரைத்து, அதனுடன் கோழிமுட்டை வெண்கருவைச் சேர்த்துக் குழைத்து தூண்களுக்கும் சுவர்களுக்கும் சலவைக்கல் போன்ற பளபளப்பேற்றிய அந்தக் கலை, சிமெண்ட் யுகமான இக்காலத்தில் மறைந்தே போயிற்று. கோத்திக் கலையைப் பறைசாற்றும் புதுவை இருதய ஆண்டவர் கோயில் போல் ஒன்றை இன்று கட்டவே முடியாது. ஷார்ல் தெகோல் பூங்காவில் நடுநாயகமாக அமைந்து விளங்கும் நினைவாலயம், பிரெஞ்சுக்காரர் கட்டடக் கலையின் சின்னமாய் இன்றும் விளங்குகிறது. அதன் தூண்கள் கோரிந்தியேன் கலைச்சாயல் கொண்டவை.

கட்டடங்களில் மட்டுமல்ல; வீடுகளில் உள்ள பொருட்களும் அத்தகையவை. பதினான்காம் லூயி, நெப்போலியன் காலத்துக் கலைச்சாயல் கொண்ட கட்டில்கள், நிலைப்பேழைகள், மேசைகள், நாற்காலிகள், கடிகார ஸ்டாண்டுகள் முதலியவற்றை இன்றும் பல வீடுகளில் காணலாம். இவற்றை மாதிரியாகக் கொண்டு, புதுவையில் தச்சுப்பொருட்கள் செய்பவர்கள் இன்றளவும் உள்ளனர். பிரான்சில் பதினான்காம் லூயி காலத்தில் செய்த சுவர் அணைவு மேசையை முன்மாதிரியாகக் கொண்டு, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் ‘அக்காழு’ என்ற செம்மரவகையால் சிற்றுளி வேலை நிறைந்ததாகப் புதுச்சேரித் தச்சர்கள் செய்ததும் நூறு வயதானதுமான ‘கொன்சோல்’ மேசையின் படத்தைக் காரை சிபி கொடுக்க, மலர் மன்னன் தன் ¼ இதழில் வெளியிட்டுள்ளார்.(10) இந்தக் ‘கொன்சோல்’ சுவரணைவு மேசை, ஆங்கிலத்தில் ‘pier-table’ என்று கூறப்படுகிறது என்ற குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக, பிரெஞ்சுச் சமையற்கலையின் தாக்கத்திற்குள்ளாகிய புதுச்சேரித் தமிழர் உணவு வகைகளான க்ரேம், கத்தோ, சல்மி, ஃபர்சி, ரொத்தி, புவாசோன் அலா மய்யோனேஜ், பிழோன் ஓ பெத்தி புவா, ரகு முதலானவற்றின் செய்முறைகளைக் கூட காரை சிபி தன் ஆய்வில் தந்துள்ளார்.(11) அவற்றுள், ‘க்ரேம்’ செய்முறையைப் பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம்.

க்ரேம்: பால், முட்டை, சீனி மூன்றையும் சேர்த்து நுரையாக அடித்து, ஆவியில் வேகவைத்து எடுக்கும் வெண்ணெய்ப்புட்டு போன்ற பலகாரம். விருந்தின் முடிவில்தான் இதைப் பரிமாறுவார்கள். நிறச்சேர்க்கைக்காகச் சாக்லெட் அல்லது சீனிக்கறுக்கைப் பயன்படுத்துவார்கள்.

இந்த ஆய்வில் சுவையான இன்னொரு தகவல்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர் படையின்முன் விரைவிலேயே பிரான்சு வீழ்ந்தது. பெத்தேன் அரசு, ‘Vichy’யைத் தலைநகராகக் கொண்டு, ஜெர்மானியரின் அங்கீகாரத்துடன் ஆட்சி புரிந்தது. தளபதி தெகோல் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து அவர் செய்த சங்கநாதம் — “பிரான்சு அங்கில்லை.. இங்கே என்னுருவில்தான் இருக்கிறாள். பிரான்சு இங்கே போராடிக்கொண்டிருக்கிறாள்!” என்பதாகும். அதன்பின் சிரியாவுக்கு வந்திருந்து கொண்ட தெகோல் புதியதொரு படையை உருவாக்கினார். அதில் சேர விரும்பும் வயதுவந்த புதுவைவாழ் மக்கள் அனைவருக்கும் இராணுவத்தில் சேருமாறு அழைப்பு விடுத்தார். போருக்குப் போய்த் திரும்பினால் நல்ல ‘பென்ஷன்’ கிடைக்குமென்று கண்ட இளைஞர்கள் பலர் “தெகோ”லுக்குப் போயினர். அப்பொழுதெல்லாம் போருக்குப் போவது என்பதும் ‘தெகோ’லுக்குப் போவதென்பதும் ஒன்றுதான். புதுச்சேரியில் கை ரிக்ஷா இழுத்துக்கொண்டிருந்த தொழிலாளர் பலர் தெகோலுக்குப் போனார்கள். போர் முடிந்து அவர்கள் பென்ஷனோடு திரும்பியதும் அவர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் தென்பட்டன. “அவனுக்கென்ன! தெகோல் காசு கொழிக்கிறது..” என்று சொல்லுவது பழக்கத்தில் வந்தது. சக ரிக் ஷாத் தொழிலாளர்கள் நாட்டுப் பாடல் ஒன்றும் மேட்டுக்கு மேடு பாடுவார்கள். அது:

“அப்போ அரைப் பணத்து மையக்கிழங்கு தெகோலு!
இப்போ ஆறுபணம் வவ்வா மீனு தெகோலு!”

-அப்போது ரூபாய்க்கு 8 பணம் – ½ பணத்துக்கு மையக் கிழங்கில்(12) நாளை ஓட்டியவருக்கு இப்போது மீன் மட்டிலும் 6 பணத்துக்கு வாங்க முடிந்தது.

புதுச்சேரித் தமிழர் பெறும் பிரெஞ்சு ‘பிரவே’ தமிழ் ‘பிரவே’ கல்வி முதலாக இன்னும் பல சுவையான சேதிகள் காரை சிபியின் ஆய்வில் உள்ள பொழுதும், புதுச்சேரியில் இன்றும் இயல்பாகப் புழங்கும் பிரெஞ்சுமொழிச் சொற்களையும் திருவிழாப் பெயர்களையும் பார்த்துவிட்டு இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்வோம்.(13)

புதுவைத் தமிழுக்கு வந்த பிரெஞ்சுச் சொற்கள்:

போன்ழூர்(bonjour) — காலை வணக்கம்
போன்சுவார்(bonsoir) — மாலை வணக்கம்
போனன்னே(bonne année) — இனிய புத்தாண்டு!
போனப்பெத்தி(bon appétit) — விருந்துபசாரத்துக்குச் சொல்லும் வாழ்த்து
ஓரெவுஆர்/’ஒவ்வார்'(au revoir)– போய் வருகிறேன்(“வர்றேன்”/Bye!)
மெர்சி(merci) — நன்றி [மெர்சி பொக்கூ/Merci beaucoup – மிக்க நன்றி]
பர்தோ(ன்)(pardon) — மன்னிக்கவும்
கம்ராத்(camarade) — தோழர்/நண்பர்
குய்சின்/க்யுசின்(cuisine) — சமையற்கட்டு
பொத்தான்(bouton) — சட்டைப் பித்தான்
பூதர் மாவு/பூதுரு மாவு(poudre) — முகச்சுண்ணம்(Face Powder)
முசியே(monsieur) — ஐயா/திருவாளர்
மலாத்(malade) — நோயாளி
கான்(canne) — கைத்தடி; நீர்க்குழாய் கைத்தடி போல வளைந்திருப்பதால் ‘தண்ணீர்க்கான்’ (“போயி கான்’ல தண்ணி புடிச்சு வா!…”)

பிரெஞ்சுக்குப் போன தமிழ்ச் சொற்களில், சில:

பந்தல், கட்டுமரம், பண்ணையாள், நெல்லி(நெல்-புதுவை உச்சரிப்பில்), அடமானம், மனை, மனைமாப்பு, மானியம், தேவஸ்தானம், தோட்டி, தலையாரி, கொம்புக்காரன், தோட்டக்காரன், சிப்பந்தி, நெல்வகைகளான சிறுமணியம், கார், கல்லுண்டை, தில்லைநாயகம் – இப்படிப் பற்பல; மரவகைகளான மாங்கியே(மாமரம்), முராங்கியே(முருங்கை மரம்), கொய்யாவியே(கொய்யா மரம்) போன்ற பற்பல. “கூர்ந்து கவனிக்கும்பொழுது அலுவலக நிர்வாக வசதி கருதியே தமிழ்ச் சொற்கள் பிரெஞ்சு மொழியில் கையாளப்பட்டிருக்கின்றன என்று புலப்படும்” என்றார் காரை சிபி.(14)

பிரஞ்சுக்காரர் தாக்கத்தால் புதுச்சேரி மக்களிடையே தோன்றிய நல்ல பழக்கங்கள், சில:

* யாரைச் சந்தித்தாலும் முதலில் கைகுலுக்கி போன்ழூர் சொல்லி நலம் கேட்ட பின்னால்தான், மற்றவற்றைப் பேசுவார்கள். தொலைபேசியில் பேசத் தொடங்கும்பொழுதும் போன்ழூர் சொல்லியே தொடங்குவார்கள். போன்ழூர் சொல்லாவிட்டாலும், “நல்லா இருக்கீங்களா!” என்று கேட்டுவிட்டே மற்றவற்றைப் பேசத் தொடங்குவார்கள்.(15) பிரெஞ்சுப் பாதிப்பில்லாமல் வாழும் புதுவைத் தமிழர்கள், ஒருநாளில் மற்றவர்களை எங்கே கண்டாலும், வழியில் சந்தித்தாலும் – “வாங்க!” என்று சொல்லிவிட்டுத்தான் மற்றவற்றைக் கவனிப்பார்கள்.

** விடைபெறும்பொழுது, நன்மைப் பொருள் தரும் சொற்களைச் சொல்லித்தான் விடைபெறுவார்கள்.

*** அரசூழியர்களிடையே இன்றுள்ள ‘பேதம்’ அன்றில்லை. கடைநிலை ஊழியரானாலும் மேல்நிலைத் தலைவர்களானாலும் எல்லோரும் சமமே. இப்பொழுதும்கூட ‘இந்தியவியல் குறித்த பிரெஞ்சு ஆய்வுக் கழகம்’ (Institut Française d’ Indologie), ‘அல்லியான்ஸ் ஃப்ரான்சேய்ஸ்’ (Alliance Française) ஆகிய அமைப்புகளில் பணிபுரிபவர் எந்நிலையில் உள்ளவராயினும் அவற்றின் இயக்குநர் போன்று மேல்நிலையில் உள்ளோர் – ‘போன்ழூர் முசியே!’ என்று மரியாதை கொடுத்த பின்பு தான் பிறவற்றைப் பேசுவார்கள்.

பிரெஞ்சு-தமிழ்ப் பண்பாடு இரண்டும் சேருமிடம்:

புதுவை மாநிலத்தில் மஞ்சளை முகத்தில் பூசிக்கொண்டு உதட்டுக்கும் சாயம் பூசிக் கொள்ளும் கிறித்தவ# மகளிர் உள்ளனர்.

கிறித்தவர்# கொண்டாடும் பெரும்பாலான விழாக்கள் இந்துக்கள் விழாக்களின் மறுபதிப்பாகவே கொண்டாடப்படும். கிறிஸ்துமஸ் = தீபாவளி; ஏப்பிஃபானி = பொங்கல்; ரெவெய்யோன் = சிவராத்திரி; ரெவெய்யோன் – இயேசு பிறந்த திசம்பர் 24 இரவு விடிய விடியக் கண்விழித்து ஆடிப்பாடி, குடித்து கும்மாளமிட்டு கிறித்தவர்# சிலர் கொண்டாடும் விழா. இந்த மார்கழி மாதத்தில் பஜனையும் நடத்துகிறார்கள்.(ப.217)

********
புதுச்சேரி வரலாற்றில் புதுவைத் தமிழர் உற்ற பிரெஞ்சுப் பண்பாட்டின் தாக்கம் குறித்த தரவுகள் பலவற்றைத் திரட்டி அரியதோர் ஆய்வாக்கிய காரை சிபியை ஒரு கணம் நெஞ்சு கனக்க நினைக்கிறேன்.
அந்த ஆய்வைத் தன் ¼ இதழில் செறிவாக வெளியிட்டவரும் இன்று நம் ‘திண்ணை’யில் உடனிருப்பவருமான மலர் மன்னன் அவர்களைப் புதுச்சேரி வரலாற்றாய்வாளர் சார்பாகப் பாராட்டுகிறேன்.

**
அடிக் குறிப்புகள்:

# இந்தக் கட்டுரையில் கிறித்தவர் என்று எங்கே வந்தாலும் அது கத்தோலிக்க கிறித்தவரையே குறிக்கும்.
* இதழின் அட்டையிலும், உட்பக்கங்களிலும் கண்டுள்ளபடி ‘ஜனுவரி’ என்றே தட்டெழுதியுள்ளேன்.
(1) காரை சிபியின் ஆய்வு, 1981 தொடக்கத்தில் எழுதப்பட்டது என்பதால் இவ்வாறு வருகிறது. “தமிழைத் தவிர வேறு எந்த மொழியையும் தெரிந்து கொள்ள விரும்பாதவராகவே இருந்திருக்கிறார் பாரதிதாசன். இதை ஒரு பெருமையாகக் கூறிக் கொள்வார் அவர். ‘வேறு மொழி தெரியாது போனது ஒரு நன்மையே. இல்லையென்றால் அதிலே இருந்து காப்பி இதிலேயிருந்து காப்பி என்று சொல்லுவான்கள்” என்று அவர் கூறக் கேட்டிருக்கிறேன்.” – காரை சிபி. ப.207.
(2)1/4 ஜனுவரி-மார்ச் 1981. ப.218
(3) மேலது, ப.199.
(4) “பிரெஞ்சு மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் பலர் தமிழ் கற்றதில்லை. தமிழில் பெரும் புலவராய் இருந்தோர் பிரெஞ்சு மொழியை நாடியதில்லை. இந்த இரு மொழியிலும் போதிய ஞானம் பெற்றோர் படைப்பிலக்கியவாதிகளாய்த் திகழவில்லை. பெரும்பாலோர், மொழி பெயர்ப்பாளர்களாகவே இருந்து விட்டனர்.” மேலது, ப.205.
(5) 1/4 ஜனுவரி-மார்ச் 1981. பக்.207, 222.
(6) மேலது, ப.207.
(7) மேலது, பக்.209-210.
(8) மேலது, ப.211.
(9) Gaeblé, Y.R., Histoire de Pondichèry, Pg. 61.
(10) 1/4 ஜனுவரி-மார்ச் 1981. ப.215.
(11) இந்த பிரெஞ்சு உணவு வகைகளை இன்றும் புதுச்சேரி நகரில் ‘போனப்பெத்தி'(Bon Appétit) போன்றுள்ள உணவகங்களில் உண்டு மகிழலாம்.
(12) மரவள்ளிக் கிழங்கு; manioc என்ற பிரெஞ்சுச் சொல்லின் திரிபு.
(13) 1/4 இதழில் வெளியான காரை சிபி அவர்களின் ஆய்வின் அச்சில் பிழைபட்டுள்ள பிரெஞ்சு மொழிச் சொற்களை மட்டும் இக்கட்டுரையில் திருத்தியிருக்கிறேன் – கட்டுரையாளர்.
(14) 1/4 ஜனுவரி-மார்ச் 1981. ப.217.
(15) டாக்டர் சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர், பிரெஞ்சுமொழி பேசுபவர்களுக்குப் பேச்சுத்தமிழ் கற்றுக் கொடுக்க உருவாக்கியுள்ள கையேடு+ஒலி நாடாவில் ‘நெல்லாருக்கீங்களா?’ என்ற புதுச்சேரித் தமிழர் பேச்சு வடிவத்தையே பயன்படுத்தியுள்ளார்.

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்