ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ஒரு மைல்கல்- ‘இலக்கிய வெள்ளி’

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

மு இராமனாதன்



[ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. 13 ஜூலை 2008 அன்று 25ஆம் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது வட்டம் இதுவரை நடத்திய 24 கூட்டங்களின் பதிவுகள் அடங்கிய நூல், “இலக்கிய வெள்ளி” வெளியிடப்படும். நூலில் இடம் பெறும் தொகுப்பாசிரியரின் முகவுரை]

‘இலக்கிய வெள்ளி’
முகவுரை

தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் பலவும் – அவை சிறிதாகிலும் பெரிதாகிலும்- தனி நபர்களாலும் சிறிய குழுக்களாலுமே முன்னெடுத்துச் செல்லபட்டிருக்கின்றன. டிசம்பர் 2001இல் துவங்கப்பட்ட ஹாங்காங் இலக்கிய வட்டமும் இந்த விதிக்கு விலக்காக அமையவில்லை.இது போன்ற,தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு முறையான மேடை ஹாங்காங்கில் அதற்கு முன்பு இருந்ததாகத் தெரியவில்லை.

இலக்கிய வட்டத்தை நிறுவியவரும் அதன் ஆரம்ப கால ஒருங்கிணைப்பாளரும் திரு. எஸ். நரசிம்மன் ஆவார். வட்டத்திற்குத் தலைவர், செயலர், பொருளாளர், என்றெல்லாம் யாரும் இல்லை. செயற்குழு, பொதுக்குழு, சந்தா, ஆண்டறிக்கை என்பனவும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் வரலாம், பேசலாம். சமயம் வாய்க்கிற போது கூடுவதும், படித்ததை ரசித்ததை அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதும் வட்டத்தின் எளிய செயல் திட்டம் ஆகியது. மூன்று நான்கு கூட்டங்களுக்குப் பிறகு, தமிழ் இலக்கியம் மட்டுமின்றி, பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் இலக்கிய வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்று முடிவாகியது.

கூட்டங்களில் பேசியதைக் குறித்தும், பேசத் தவறியவை குறித்தும் உரையாடுவதற்காக ஒரு மின்னஞ்சல் குழு ஏப்ரல் 2002இல் ஏற்படுத்தப்பட்டது (ilakkya@yahoogroups.com). 20 பேருடன் தொடங்கிய குழுவில் இப்போது 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டத்தின் அழைப்பிதழ்கள் இந்த மின்னஞ்சல் குழுவின் வழியாகவே அனுப்பப்படுகின்றன. தகவல் தொடர்பிற்கும், இலக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்த தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் மின்னஞ்சல் குழு உதவி வருகிறது. அக்டோபர் 2002இல் திரு. எஸ். நரசிம்மன் பணிமாற்றல் காரணமாக ஹாங்காங்கிலிருந்து சென்றார். தொடர்ந்து திரு. எஸ். பிரசாத்தும், தற்போது நானும் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து வருகிறோம்.

இலக்கிய வட்டக் கூட்டங்களில் நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகளே அதிகமும் பேசப்பட்டிருக்கின்றன. எனினும், பழந்தமிழ் படைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. தீவிர இலக்கியமே வட்டத்தின் ஊடுபாவாக இருந்து வருகிறது. எனில், வெகுஜனப் படைப்புகளைக் குறித்து அதில் ஆர்வமுள்ளவர்கள் பேசியிருக்கிறார்கள். இவையன்னியில் ஆங்கில இலக்கியம், திரைப்படம், நாடகம், இசை, இணையம், நிழற்படம், ஓவியம், நாட்டியம், வாழ்வனுபவம், புலம் பெயர் வாழ்க்கை என்று பலவும் பேசு பொருளாக இருந்திருக்கின்றன.

உள்ளூர்த் தமிழர்களே கூட்டங்களில் பேசுவார்கள். விதிவிலக்காக மூன்று பேர் பேசியிருக்கிறார்கள். ஹாங்காங் அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர், அகராதியியல் அறிஞர் கிரிகோரி ஜேம்ஸ் தமிழ் அகராதியியல் பற்றியும் ; Form Asia எனும் புகழ் பெற்ற பதிப்பகத்தின் இயக்குனர், நிழற்படக் கலைஞர் பிராங் பிஷ்பெர்க் நிழற்பட இதழியல் மற்றும் நூல்கள் பற்றியும் பேசியிருக்கிறார்கள். ஒரு சமயச் சொற்பொழிவிற்கு ஹாங்காங் வந்திருந்த டாக்டர் சாரதா நம்பி ஆரூரன் ‘கம்பனும் தமிழிசையும்’ என்ற பொருளில் ஒரு சீரிய உரையாற்றினார்.

டிசம்பர் 2001இல் துவங்கிய இலக்கிய வட்டத்தின் 25ஆம் கூட்டம் ஜூலை 13, 2008 அன்று நடைபெறவுள்ளது. அதாவது 6-1/2 ஆண்டுகளில் 25 கூட்டங்கள்; சராசரியாக ஆண்டுக்கு நான்கு கூட்டங்கள். இது குறைவானதுதான். கூட்டங்களின் எண்ணிக்கை மட்டுமல்ல கூட்டங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்து வருகிறது. ஆகக் குறைந்த கூட்டம் வந்தது 2005 இல் நடந்த பாரதி விழாவிற்கு; ஒன்பது பேர். அதிகமானோர் வந்தது ‘கம்பனும் தமிழிசையும்’ உரைக்கு. 70 பேர் அமரக்கூடிய அரங்கு ஏறத்தாழ நிறைந்திருந்தது. ‘ரசனை’ ‘அனுபவம்’ ‘அபுனைவு’ போன்ற தலைப்புகளில் நடந்த கூட்டங்களுக்கு 40க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். பெரும்பாலான இலக்கிய வட்டக் கூட்டங்களுக்கு 20 முதல் 25 பேர் வருகின்றனர்.

குறைவான கூட்டம் வருவதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதல் காரணம் : நிகழிடம். அரசின் கலாச்சாரத் துறைக்குச் சொந்தமான, குறைவான வாடகையில் எல்லா வசதிகளும் பொருந்திய காட்சிக் கலை மையத்தின் விரிவுரை அரங்கில்தான் வட்டத்தின் எல்லாக் கூட்டங்களும் நடந்திருக்கின்றன. அரங்கு,ரயில்- பேருந்து நிலையங்களிலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கிறது. இரண்டாவதாகச் சொல்லப்படுகிற காரணம் : ஹாங்காங்கின் பணி அழுத்தம்.

ஆரம்ப காலங்களில் அறிவிக்கப்பட்ட பேச்சாளர்களின் உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் இருந்தது. வர வர அது குறைந்து விட்டது. இதற்கு இரண்டு காரணங்கள் : முன்னெல்லாம் உரைகள் பத்துப் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. இப்போது அரை முக்கால் மணி நேரம் தேவைப்படுகிறது. இரண்டாவது காரணம்-பல கூட்டங்களைச் சரியான நேரத்தில் துவங்க முடிந்ததில்லை. வருவதற்குச் சாத்தியமுள்ள பார்வையாளர்களுக்காகக் காத்திருந்து தாமதமாகத் தொடங்குவதால், கூட்டத்தை அவசரமாக முடிக்க வேண்டியிருக்கிறது.

எனில், இந்தக் குறைபாடுகளுடனேயே இலக்கிய வட்டம் முன்னோக்கிச் செல்கிறது. நோக்கத்தில் தெளிவும், நடைமுறையில் தொடர்ச்சியும் இருப்பது வட்டத்திற்கு ஆர்வலர்களிடையே ஒரு பரவலான மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது. எண்ணிக்கையில் குறைவானாலும் ஆர்வலர்கள் தொடர்ந்து ஆதரவு நல்குகின்றனர்.

கூட்டங்களில் பேசுபவர்களில் பலரும் ஆராய்ச்சியாளர்களோ பெரும் புலமையாளர்களோ அல்லர். சாதாரண மற்றும் தீவிர வாசகர்கள். ஆயினும், இலக்கியம் குறித்தும் வாழ்வனுபவம் குறித்துமான பல சிறந்த உரைகள் இந்த மேடையில் அரங்கேறியிருக்கின்றன. இந்த உரைகள் ஹாங்காங்கில் நிகழ்த்தப்பட்டவை என்ற சலுகையைச் சேராதவை. தம்மளவில் தனித்துவமும், சிறப்பும் மிக்கவை.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பான உரைகளைத் தொகுத்து ஒரு நூலாகப் போடலாமே என்று தோன்றியது. இதைப் பற்றி ஒரு சிலரிடம்கேட்டேன். அவர்கள் சராமாரியாகக் கேள்வி கேட்டார்கள் : ‘இந்த நூலை யார் பதிப்பிப்பார்கள்? கைக்காசைப் போட்டு நன்கொடை திரட்டிப் பிரசுரித்தாலும் ஹாங்காங்கில் எத்தனை பேர் வாங்குவார்கள்? ஹாங்காங்கிற்கு வெளியே உங்களை யாருக்குத் தெரியும்? அவர்கள் இந்த நூலை ஏன் வாங்க வேண்டும்?’. ஆகவே, இதை ஒரு நெடுங்காலத் திட்டமாக வைத்துக் கொண்டு, தற்போதைக்குக் கூட்டத்தின் பதிவுகளைத் திரட்டி அவற்றை ஒரு தொகை நூலாகப் போடலாம் என்று முன்மொழிந்தேன். ஆர்வமுள்ள உறுப்பினர்கள் பலரும் உற்சாகமூட்டினார்கள். ஜூலை மாதம் நடக்கவிருப்பது வட்டத்தின் 25ஆம் கூட்டம்; ஒரு கணக்கில் மைல்கல். பதிவுகளின் தொகை நூலை இந்தக் கூட்டத்தில் வெளியிடலாம் என்று முடிவாகியது.

வட்டத்தின் கூட்டங்கள் அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தன என்று சொல்வதற்கில்லை. மடலாடற் குழு அமைக்கப்படுவதற்கு முன் நடந்த முதல் இரண்டு கூட்டங்களைப் (‘தற்காலத் தமிழிலக்கியம்’, ‘பக்தி இலக்கியம்’) பற்றி சிறுகுறிப்பு மாதிரி எழுதி நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அப்போதெல்லாம் ஆண்டிற்கு இரண்டு முறை, அப்போதையப் பிரபலமான வைரஸ் என் கணினிக்கு விஜயம் செய்வதும், நான் கணினியை சுத்திகரிப்பதும் வழக்கம். அதையும் மீறி இந்தக் குறிப்புகள் தங்கி விட்டன. அதை விரிவுபடுத்தி, தன் நினைவுகளையும் மீட்டெடுத்து இவ்விரு கூட்டங்களுக்கானப் பதிவுகளைச் சிறப்பாக எழுதியிருப்பவர் வட்டத்தின் நிறுவனர் திரு. எஸ். நரசிம்மன்.

மடலாடற் குழு ஏற்பட்ட பிறகு எல்லாக் கூட்டங்களைக் குறித்தும் விரிவான பதிவுகள் எழுத வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் எழுதியவை ஏழு. இவற்றில் ஆறு பதிவுகள் (‘சிறுகதைகள்’, ‘திருக்குறள்’, ‘தமிழ் நாடகங்கள்’, ‘படைப்பாளிகள்’, ‘ புதினங்கள்’, மற்றும் ‘நூல் நயம்’ ஆகிய தலைப்புகளில் நடந்த கூட்டங்கள்) ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. மின்னஞ்சல்களின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலமே கோலோச்சி வருகிறது. இந்த ஆறு பதிவுகளையும் இந்த நூலுக்காகச் செம்மையாக மொழி பெயர்த்திருப்பவர்கள் திரு. ராஜேஷ் ஜெயராமனும், திருமதி. ஆர். அலமேலுவும்.

தமிழில் எழுதப்பட்ட ஏழாவது பதிவு (‘திரைப்பட ரசனை- 1’) இந்த நூலில் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. இதைத் தவிர திருமதி. சுகந்தி பன்னீர்செல்வம் ‘இலக்கிய வடிவங்கள்’ என்ற கூட்டத்திற்கு தமிழில் எழுதி மடலாடற் குழுவிற்கு அனுப்பிய பதிவும் அப்படியே பயன்படுத்தப்படுகிறது.

இன்னொரு பதிவும் மடலாடற் குழு வாயிலாக அனுப்பப்பட்டது. ‘அனுபவங்கள்’ என்ற கூட்டத்திற்கு திரு. சேகர் சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் எழுதிய பதிவு. 5500 வார்த்தைகளில் 2004இல் எழுதப்பட்ட அந்தப் பதிவை அவர் மின்னஞ்சலின் இணைப்பாக அனுப்பியிருந்தார். மடலாடற் குழு, இணைப்புகளைக் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் சேமித்து வைத்துக் கொள்வதில்லை. இப்போது அந்தக் கோப்பு அவரிடத்திலேயே இல்லை. ஆனால் தன் கணினியின் அலகுகளில் ஒன்றில் அதை சேமித்து வைத்திருந்து இப்போது எடுத்துத் தந்தவர் திரு. எஸ். பிரசாத். அதை ஆறிலொரு பங்காகச் சுருக்கி மொழி பெயர்த்திருப்பவர் திருமதி. எஸ். வைதேஹி.

கூட்டம் நடந்தவுடன் எழுதப்பட்டவை மேற்சொன்ன 11 பதிவுகள் மட்டுமே. இவற்றைத் தவிர ஆறு கூட்டங்களுக்கு ஒலிப்பதிவுகள் இருந்தன. அவை : ‘கவிதைகள் -1’ ‘தமிழ் எழுத்தாளர்கள்’, ‘ரசனை’, ‘பாரதி -125’, ‘புலம் பெயர் வாழ்வு -2’ மற்றும் ‘கம்பனும் தமிழிசையும்’ ஆகிய கூட்டங்கள். ஒலிப்பதிவுகளின் துணையோடு இந்தக் கூட்டங்களின் பதிவுகளைச் சிறப்பாக எழுதியிருப்பவர்கள் முறையே திரு. எஸ். நரசிம்மன், திருமதி. நளினா ராஜேந்திரன, திருமதி. எஸ். வைதேஹி, திருமதி. சுகந்தி பன்னீர்செல்வம், திரு. அ. செந்தில்குமார் மற்றும் திருமதி. கவிதா குமார் ஆகியோர்.

‘அபுனைவு’ என்ற கூட்டத்தில் எட்டுப் பேர் பேசினார்கள். அனைவரும் தங்கள் உரைகளை எழுதித் தந்திருந்தார்கள்.அவற்றைப் பயன்படுத்தி இந்த நூலுக்கான பதிவை எழுதியிருப்பவர் திருமதி. எஸ். வைதேஹி.

எஞ்சிய கூட்டங்களில், சில உரைகளைக் குறித்து கூட்டத்திற்குப் பிற்பாடு மடலாடற் குழுவில் உரையாடல் நிகழ்ந்திருந்தது. சில உரைக் குறிப்புகள் பேச்சாளர்களிடமிருந்தன. இவற்றைப் பயன்படுத்தி இப்போது பதிவு எழுதப்பட்ட கூட்டங்கள் : ‘பாரதி விழா’ , ‘எனக்குப் பிடித்த சிறுகதை’, ‘கவிதைகள் -2’ மற்றும் ‘திரைப்பட ரசனை -2’. இதில் கடைசி இரண்டிற்கு நானும், முதலிரண்டுக்கு திருமதி. கவிதா குமார் மற்றும் திரு. கே.ஜி. ஸ்ரீனிவாசன் ஆகியோரும் பதிவுகள் எழுதியிருக்கிறார்கள்.

இப்படியான எந்தத் தடங்களும் இல்லாமற் போனவை இரண்டு கூட்டங்கள் : ‘புலம் பெயர் வாழ்வு -1’ மற்றும் ‘கம்பன் தரும் காவிய இன்பம்’ . முதல் கூட்டம் 2002இலும் இரண்டாவது கூட்டம் 2004இலும் நடந்தது. இப்போது இந்தக் கூட்டங்களைப் பதிவு செய்திருப்பவர் திரு. எஸ். பிரசாத். அவரது நினாவாற்றல் அபாரமானது.

இந்தப் பதிவுகளில் கணிசமானவற்றை கணினியில் ஏற்றியவர் திருமதி. ஜெய்னப் கதீஜா.

முகப்பு ஓவியம் வடிவமைத்து உதவியவர் திரு. அ. சுவாமிநாதன். பக்கங்களை வடிவமைத்தவர் திரு. காழி அலாவுதீன். அச்சகத் தொடர்பு சம்பந்தமான பணிகளையும் இவர்கள் இருவருமே மேற்கொண்டனர். குறைந்த அவகாசத்தில் அச்சடித்துத் தந்தவர்கள் Bynock Printing & Design Co.

இவர்கள் அனைவரையும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

இலக்கிய வட்டக் கூட்டங்கள், ஹாங்காங் சூழலில் இலக்கிய ஈடுபாட்டையும், வாழ்வியல் அக்கறையையும்,செழுமையான விமர்சனக் கலாச்சாரத்தையும் வளர்த்தெடுப்பதில் உதவி வருகின்றன. அவற்றைப் பதிவு செய்து ஆவணமாக்குதலில் முதல்படி இது. நூலைச் செம்மைப் படுத்தும் வகையில், குறைகளையும் பிழைகளையும் அன்பர்கள் சுட்டிக் காட்டினால், இப்பதிவுகளை இணையதளத்தில் ஏற்றிவைக்கையில் திருத்த உதவியாக இருக்கும்.

சீரிய இலக்கிய முயற்சிகளுக்கு தமிழ்ச் சூழலில் உள்ள ஆதரவு எப்படிப் பட்டது என்பது யாவரும் அறிந்ததே. வெளிநாடுகளில், அதுவும் ஹாங்காங் போன்ற பணி அழுத்தம் அதிகமுள்ள இடங்களில் உள்ள நிலையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுவதில்லை. எனில், இவையெதுவும் இலக்கிய வட்டத்தைத் தொடங்குவதற்கு திரு. எஸ்.நரசிம்மனுக்குத் தடையாக இருக்கவில்லை. தொடங்கியதோடு மட்டுமல்லாமல் அவர் முதல் ஏழு கூட்டங்களைச் சிறப்பாக நடத்தவும் செய்தார். இது வட்டத்தின் நடவடிக்கைகளில் ஒரு தொடர்ச்சி ஏற்பட வழி கோலியது. ஹாங்காங்கிலிருந்து சென்ற பின்பும் வட்டத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்றும் உற்சாகப்படுத்தியும் வருகிறார். ‘இலக்கிய வெள்ளி’ நூல் வெளிவருகிற இந்தத் தருணத்தில் அவருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்சியடைகிறேன்.

ஹாங்காங் இந்தியர்களால் ‘யூனுஸ் பாய்’ என்று அன்போடு அழைக்கப்படுபவர் திரு. செ. முஹம்மது யூனூஸ். தான் வாழ்கிற சமூகத்தைக் குறித்த அக்கறையும், சக மனிதர்கள் மீது எல்லையற்ற நேசமும், தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடும் கொண்டவர். இலக்கிய வட்டக் கூட்டங்கள் பலவும் அவரது ஆழ்ந்த தமிழ்க் கல்வியையும் , பட்டறிவையும் எமக்குப் பறைசாற்றியிருக்கின்றன. அவருக்குச் சமர்ப்பணம் செய்யப்படுகிற தகுதி இந்த நூலுக்கு உண்டு என்று நம்புகிறேன்.


“இலக்கிய வெள்ளி”
(ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய 24 கூட்டங்களின் பதிவுகள்)
தொகுப்பு: மு.இராமனாதன்
வெளியீடு:Tamil Literary Circle
TST Post Box 91221,Hong Kong

ISBN 978-988-17729-1-6

mu.ramanathan@gmail.com
http://www.muramanathan.com

Series Navigation

மு இராமனாதன்

மு இராமனாதன்