வ. சுப. மாணிக்கனாரும் வள்ளுவச் செயல் நெறியும்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

முனைவர் மு. பழனியப்பன்


பேருரையாளர். மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை

வள்ளுவ வழி வளம் பெருக்கும் வழியாகும். படிப்பது, பொருளோடு படிப்பது என்பதைத் தாண்டி வள்ளுவ வழியில் செயல்படுவது என்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். இந்நோக்கம் அனைவரையும் வளப்படுத்தும். திருக்குறள் வெறும் மேற்கோள் நூலல்ல; அது செயல்வழி நூல் என மொழிந்தவர் செம்மல் வ. சுப. மாணிக்கனார் ஆவார்.

இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலைச்சிவபுரி என்ற ஊரைச் சார்ந்தவர். அவ்வூரிலேயே தொடக்கக் கல்வி கற்றுப் பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்ந்து தன் கல்வியறிவை மேம்படுத்திக் கொண்டவர். இப்பல்கலைக்கழக வழியாக பி.ஓ.எல், எம்.ஏ, முனைவர் போன்ற பட்டங்கள் பெற்றவர். இளம் வயதில் பர்மாவிற்குச் சென்ற இவர் அங்குப் பொய் கூறச் சொல்லி வற்புறுத்தல் ஏற்பட்டபோது அதனை மறுத்து மெய்யன்றி வேறு கூறேன் என்ற கொள்கைவழி நின்றவர். இதனால் இவர் பொய் சொல்லா மாணிக்கம் என்றும் பொய் சொல்லா மெய்யர் என்றும் போற்றப் பெற்றவர். தொடர்ந்து அந்நெறிப்படியே வாழ்ந்தவர். இவர் தன் ஆசானாக பண்டிதமணி கதிரேசன் செட்டியாரை வரித்துக் கொண்டவர். மதுரைப்பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், தமிழ், பாண்டிச்சேரி பல்கலைக்கழகங்களின் உருவாக்கத்தின்போது துணைசெய்தவராகவும் இவர் விளங்கினார். காரைக்குடி அழகப்பா கல்லூரியின் முதல்வராகவும் இவர் விளங்கினார். சங்க இலக்கியப் புலமையும், திருக்குறள் புலமையும் ஒருங்கே கொண்ட இவர் தமிழ்வழிக்கல்வி, தமிழ்வழிபாடு முதலானவற்றை தமிழகம் முழுவதும் கொண்டுவரப் பாடுபட்டார்.

இவர் பல நூல்களை வரைந்துள்ளார். இவரின் தமிழ்க்காதல் மிகச் சிறந்த சங்க இலக்கிய ஆய்வு நூலாகும். இது ஆங்கில மொழியிலும் தமிழ் மொழியிலும் வெளிவந்துள்ளது. இந்நூல் காட்டும் திறனாய்வுப் பாதை வழிப் பல திறனாய்வு நூல்கள் தோன்ற இயலும்.

இவர் படைத்த நூல்களில் திருக்குறள் கருத்துக்களுக்கு முக்கிய இடம் இருக்கும். இவரின் திருக்குறட்சுடர், உரைநடைத்திருக்குறள், வள்ளுவம், திருக்குறள் தெளிவுரை முதலியன இவரின் திருக்குறள் புலமையைக் காட்டும் நூல்கள் ஆகும்.

குறிப்பாக இவரின் வள்ளுவம் என்ற நூல் திருக்குறளை ஆழ்ந்து படித்தோரை இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் நூல் ஆகும். இந்நூல் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் ஆண்டில் எழுதப் பெற்றுள்ளது. இது ஒரு சொற்பொழிவு நூல். இவர் ஒரு சொற்பொழிவாளராக இருக்க பன்னிரண்டு நாட்கள் வாய்மைக் கழகம் என்னும் பெயர் கொண்ட கழகத்தாரால் நடத்தப் பெற்ற கற்பனைக் கூட்டத் தொடர் இதுவாகும். இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கினர் வந்து கலந்து கொண்டதாகவும்- அவர்களில் பலர் பல்வேறு நாட்டவராக இருந்தததாகவும் இப்பொழிவாளர் கொண்டு இந்நூலைப் படைத்துள்ளார். இந்நூலின் இத்தன்மை மிகப் புதுமை வாய்ந்ததாகும்.

இந்நூலுள் இவரின் வள்ளுவ ஈர்ப்பு நெஞ்சம் தெரியவருகிறது. திருக்குறளை இவர் தெளிவு சான்ற வாழ்க்கைச் செயல் நூல்(வள்ளுவம் ப. 81) என்பதாகக் காண்கிறார்.

திருக்குறள் ஒரு மருந்துக்கடை. அவரவர் நோய்க்கேற்ப உரிய மருந்துகள் கடையில் உளவாதல் போல திருக்குறளகத்தும் நம் வாழ்நிலைக்கு ஏற்ப உரிய அறங்கள் உண்டு. ஆயின் ஒரு பெருவேறுபாடு. நம் உடல் நிலையை மருத்துவனால் அறிந்து மருந்தினை அவன் பாலோ பிறர் பாலோ வாணு;குகிறேhம். திருக்குறளோ வள்ளுவர் தாமே செய்துவைத்துச் சென்ற உயிர் மருந்துக் கடையாதலின் நம் வாழ்நிலையை நாமே நாடி நிலைக்கேற்ற அறத்தினையும் நாமே கண்டு கொள்ளல் வேண்டும். ஈண்டு பொறுப்பும் எடுப்பும் நம் மேலன(வள்ளுவம். ப. 45)

திருக்குறள் என் கருத்தில் ஒரு பெருஞ்சந்தை. நடப்புச் சந்தையில் பல இனச் சரக்குகளும், ஓரினத்துள்ளே பலவகைப் பொருள்களும் உள. திருக்குறட் சந்தைக் கண் அதிகாரங்கள் பல வினச் சரக்குகளாகும்.(வள்ளுவம்.ப. 61)

என்று காணும் பொருள்களெல்லாம் நடக்கும் நடப்பெல்லாம் திருக்குறள் மயமாகவே வ. சுப. மாணிக்கனார் கண்டுள்ளார்.

இவரது பேச்சுரை பன்னிரண்டு தலைப்புகளை உடையதாக உள்ளது. இவ்வுரை கேட்க வந்தோர் சிற்சில வேண்டுகோள்களை அவ்வப்போது வைத்துள்ளனர். அவற்றுள் சில பின்வருமாறு.

சில நாட்கள் பேசி முடித்தபின் அன்பர் ஒருவர் உரை கேட்க வந்திருக்கும் அனைவருக்கும் தன் செலவில் திருக்குறள் நூல் ஒன்றைப் பரிசாக அளிப்பதாகக் கூறுகின்றார். இச்செயலை வேண்டாம் என மறுத்துரைக்கிறார் இவர்.திருக்குறள் என் வாழ்க்கைச் சுவடி என்று உணர்ந்து அவரவரும் தாமே வாங்கிக் கற்கும் நாள் வரும். உழைத்து ஈட்டிய தன் பொருளால் திருக்குறள் யாரும் பெறுக(வள்ளுவம். ப. 57) என்று இவர் திருக்குறள் நூல் அன்பளிப்பைத் தவிர்த்து மாற்றாக அவரவர் உழைப்பில் திருக்குறளைப் பெற வழிவகை செய்கிறார்.

இதுபோன்றே மற்றொரு நாள் இவர் உரை கேட்ட செல்வர்கள் பலர் ஒன்று கூடி பல பத்தாயிரம் ரூபாய்களைச் சேர்த்து இவரிடம் திருக்குறள் பரப்ப ஆவன செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். திருக்குறளை யாண்டும் யார்க்கும் பரப்பவேண்டும். தமிழகமும், இந்தியாவும், உலகமும் ஏசு பெருமான் விவிலிய நூல் போல் அறியச் செய்ய வேண்டும்…. வள்ளுவர்க்குக் கோயிலொடு மண்டபம் கட்டலும் இன்ன பிறவும் எங்கள் நோக்கம் என்று கூறிய அவர்களைப் பார்த்து வள்ளுவ வழிபரவத் தக்க வழியை இவர் எடுத்துரைக்கிறார்.

மக்கட்கெல்லாம் கல்வி வேண்டும்; கேள்வி வேண்டும்; முயற்சி வேண்டும் என்பது வள்ளுவம். இக்கோட்பாடு செயற்படுத்தற்கு உரிய வழித்துறைகளை அன்பராகிய நாம் பற்றல் வேண்டும். கல்வி வேண்டும் வள்ளுவர் பெயரால், தெருத்தோறும் பள்ளி அமைக்க. ஊர் தோறும் பெரும்பள்ளிகள் நிறுவுக. நூல் நிலையம் படிப்பகங்கள் பெருக்குக. கேள்வி வேண்டும் வள்ளுவர் பெயரால் கூடங்கள் கட்டுக. முயற்சி வேண்டும் வள்ளுவர் பெயரால் தொழிற்களகள் உழைப்புச்சாலைகள், உழவுப் பண்ணைகள் தொடங்குக. ஈகை வேண்டும் வள்ளுவர் பெயரால் ஏழை இல்லங்கள், குழந்தை விடுதிகள் பேணுக. மடிமனும், பசிமகனும், மடமகனும் இல்லை எனும்படி பள்ளியில் தெருவும், தொழிலில் ஊரும் இல்லை எனும்படி வள்ளவர்க்குத் தொண்டு செய்க. .. இவ்வெல்லாம் முதற்கண் தத்தம் ஊரிலேயே ஆற்றுவார் ஆற்றுக. செல்வ மிகுதியிருப்பின் பிற ஊர்களுக்குத் தொண்டினைப் பரப்புக. கோடிச் செல்வம் குவியின் வள்ளுவர் பல்கலைக் கல்லூரிகளும், வள்ளுவர் பல்கலைக்கழகமும் நிறுவ முயல்க. (வள்ளுவம். ப.102) என்ற இவரின் கூற்று ஊர்தோறும் நடைபெறவேண்டியனவாகும்.

ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய இவரின் பல்கலைக்கழக கனவு இன்று மெய்யாகிவிட்டது. அப்பல்கலைக்கழகம் மற்ற பல்லகலைக்கழகங்கள் ஆற்றும் பணிகளைச் செய்து வருகிறது. இருப்பினும் அது வள்ளுவ நெறி பரவத் தனித்திட்டம் கொள்ள வேண்டும்.

இவ்வகையில் வள்ளுவத்தை வாழ்விலக்கியமாகக் கொண்டு வ. சுப. மாணிக்கனார் வாழ்ந்துள்ளார். இவர் இவ்வள்ளுவ நூலில் கூற வரும் மையக் கருத்து தனிமனிதர் ஒவ்வொருவரின் நெஞ்சமும் தூய்மைப்பட வேண்டும் என்பதே ஆகும். இது நிறைவேறினால் உலகம் நல்வழிப்படும், இதுவே வள்ளுவரின் நெஞ்சம் என்கிறார்,

மனமாசுடையவர் யாவர் கண்ணும் இகலுவர். முரணுவர். பகைப்பர். மனமாசற்றவர் எவ்வகை வேற்றுமைக் கண்ணும் உறவு கொள்வர்; உதவுவர்; கலப்பர். இதுவே முடிந்த பேரடிப்படை உண்மை. ஆதலின் திருக்குறளுக்குச் சாதி, சமய முதலாய பொதுமை நிலைக்களமன்று. மக்கள் மனம் நிலைக்களம். ஆளுக்கொரு மனம் உடையராதலின் அப்பன்மை நிலைக்களம் மனத்து விரிந்து பரந்த நல்ல தீய எண்ணங்கள் நிலைக்களம். சாதி சமய நாடுகளிடைப் பொதுமைநாட்டல் திருக்குறள் நோக்கமன்று. மேற்கூறியாங்குப் பொதுமைக்குள் பகையும் வேற்றுமைக்குள் நட்பும் கண்ட மனவறிஞர் வள்ளுவராதலின் தனித்தனியோரின் வஞ்சனை போக்கி நெஞ்சத்தூய்மை செய்வதே வள்ளுவம்.( வள்ளுவம் ப.44)

வள்ளுவத்தை செயல்நூலாக்கி, வள்ளுவரைச் செயலாக்க ஆற்றல் உடையவராக உயர்த்தி உலக சிக்கல்களுக்குத் தீர்வு காண விழையும் திருக்குறள் அன்பராக வ. சுப. மாணிக்கம் அமைந்துள்ளார் என்பது தெளிவு.

M.Palaniappan
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்