வைதேகி காத்திருப்பாள்

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

T.V.ராதாகிருஷ்ணன்


‘அப்பாவிடம் தயங்கித் தயங்கி தன் காதலைச் சொன்னாள் வைதேகி..

அப்போதுதான்..குளித்துவிட்டு வந்திருந்த அரவாமுதன்..தன் குடுமியில்
இருந்த சிக்கலையும்..ஈரத்தையும் நீவி விட்டவாறு..அவள் கூறியவற்றை
அலட்சியத்துடன் கேட்டபடி..தன் ஸ்ரீசூர்ணம் பெட்டியைத் திறந்து..அதில்
இருந்த செந்நிறப் பொடியை சிறிது தன் இடது உள்ளங்கையில் எடுத்துக்
கொண்டு..சிறிது நீர்விட்டு கலக்கி..சிறு குச்சியில் அதைத்
தோய்த்து..நெற்றியில் நீண்ட கோடு ஒன்றை இட்டுக் கொண்டார்.குழாயைத்
திறந்து இடது கையை கழுவிக் கொண்டார்.பக்கத்து துவாலையில் கைகளைத்
துடைத்துக் கொண்டார்.

அப்பாவின் செயல்களை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்த வைதேகி..அவர் என்ன
சொல்லப் போகிறாரோ என அவர் முகத்தையும்..தரையையும் மாறி மாறி
பார்த்துக் கொண்டிருந்தாள்.

நைட் ஷிஃப்ட் முடிந்து வந்து நேரமாகியும்..இன்னும் காஃபிக்காக
அடுக்களையில் நுழையா மகளை அழைத்த படியே வந்தாள் ரங்கநாயகி.

அங்கு..தன் கணவனையும், மகளையும், நிசப்தத்தையும் கண்டு..”ஏதோ நடக்கக்
கூடாதது நடந்திருக்கிறது என உணர்ந்துக் கொண்டாள்..

‘என்ன ஆச்சு..அப்பாவுக்கும்..பொண்ணுக்கும்’ என மௌனத்தை
உடைத்தாள்.அதற்கு பதில் வராததால்..’யாராவது ஒருத்தர் வாயைத் திறந்து
சொன்னால்தானே தெரியும்..’ என்றபடி வைதேகியை நோக்கி..”ஏண்டி..ரெஷசன்ல
வேலை போயிடுச்சா?’ என்றாள்.

வைதேகி தலையைக் குனிந்துக் கொண்டாள்.கண்ணீர்த் துளிகள் இரண்டு..கால்
கட்டைவிரல்களில் விழுந்தது.

‘அது ஒண்ணுமில்லடி..அவளுக்கு..இந்த அரவாமுதனோட..அப்பாவோட “ஏ’ ங்கிற
இனிஷியல் வேண்டாமாம்..ஆமாம்..என்ன பேர் சொன்ன..” என்றார் வைதேகியிடம்.

“ஜேம்ஸ்” தன் செப்பு வாயைத் திறந்து மெல்லிய குரலில் சொன்னாள்
வைதேகி..அது அவளுக்கேக் கேட்டிருக்குமாவென்று தெரியவில்லை..

‘ஜேம்ஸ்..அவளுக்கு இப்ப ஜே ங்கற இனிஷியல் வேணுமாம்..வெள்ளிக்கிழமை
பார்த்தசாரதி கோவிலுக்கு போயிண்டு இருந்தவள்..இனிமே ஞாயிற்றுக் கிழமை
சர்ச்சுக்கு போகட்டான்னு கேட்கறா.பெருமாள் பிரசாதம்..துளசியை
மென்னவளுக்கு..அப்பம் முழுங்க ஆசையாம்..’கோபத்துடன்..அதே சமயம் அது
வெளியே தெரியா நக்கலுடன் கூறினார்.

சற்றே..தைரியம் வந்த வைதேகி..’அம்மா..என் கூட கால்சென்டர்ல வேலை செய்யற
ஜேம்ஸை எனக்குப் பிடிச்சு இருக்கு..அவரைக் கல்யாணம் பண்ணிக்க அப்பாவோட
பர்மிஷனைக் கேட்டேன்..’என்று சொல்லிக் கொண்டிருந்த போதே..அவள்
கன்னங்களில் ‘பளார்..பளார்..’ என நாலு அறை அறைந்த ரங்கநாயகி
‘அடிப்பாவி..எவ்வளவு லேசா சொல்ற..நாம என்ன ஜாதி..அவன் என்ன ஜாதி..நம்ம
குடும்பம் சாஸ்தோஸ்ரமான குடும்பம்..நம்ம ஜாதியைத் தவிர யார்
வந்தாலும்..அவா தண்ணீ கேட்டாக் கூட..சொம்புல கொண்டு வந்து கீழ
வைப்போம்.அவா குடிச்சுட்டு கீழ வச்சதும்..தண்ணீ தெளிச்சு எடுத்து
வைப்போம்..அப்படி ஒரு குடும்பத்துல வந்து பொறந்துட்டு..அப்படிப்பட்ட
அப்பாவுக்கு வந்து பொறந்துட்டு..உன் மூளை ஏண்டி இப்படிப் போச்சு..’ என
அழத் தொடங்கினாள்.

‘அம்மா..இப்ப என்ன ஆச்சு..அப்பா சரின்னாதான்..இந்த கல்யாணம்
நடக்கும்..இல்லேனா..காலம் பூரா நான் கல்யாணம் பண்ணிக்காமலேயே
இருப்பேன்.வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்…ஆனா ஒன்னு
சொல்லட்டா..எனக்கு இருபத்தெட்டு வயசாச்சு..எனக்குக் கீழ நாலு
பொண்ணுங்க..எல்லாருக்கும் கல்யாணம் பண்ணனும்னா எவ்வளவு பணம் தேவை..நாம
இருக்கற நிலைல அது எவ்வளவு கஷ்டம் யோசனைப் பண்ணுங்க..இந்த ஜேம்ஸ் ரொம்ப
நல்லவன்..பணக்காரன்..நம்ம குடும்பத்துக்கு ஒரு மகனா இருந்து ஒத்தாசை
பண்ணுவான்’ என்றாள்.

‘இனிமே இதைப் பத்தி யாரும் பேசக் கூடாது..வேற மதத்துக்காரன்..வேற
ஜாதிக்காரன் தயவு எனக்குத் தேவையில்லை.பணமாம்..பணம்..யாருக்கு வேண்டும்
பணம்..பணம்னதுமே அப்பா வாயை இளிப்பான்னு நினைச்சியா..அப்படி ஒரு
பெயரைச்சொல்லி வரப் பணம் எனக்கு வேண்டாம்..கடைசிவரை நம்ம ஜாதிதான்
உயர்ந்ததுங்கற எண்ணம் இருக்கணும்.அன்னிக்கு டி.வி.ல பார்த்தியே..அந்த
பொண்ணு என்ன சொல்லித்து..நான் இந்த ஜாதில பொறந்ததுக்கு பெருமாளுக்கு
நன்றி சொல்லறேன்னுத்தே..அது பொண்ணு..உனக்கு கடைசியா சொல்றேன்..இனிமே
என் மூச்சுக் காத்திலக் கூட அவன் பெயர் படக்கூடாது..’ என்றார் கறாராக.

***** ***** ***** *****
அன்று இரவு நைட் ஷிஃப்டிற்கு வந்த வைதேகி..அலுவலகத்தில்..அவள்
பதிலுக்குக் காத்திருந்த ஜேம்ஸை நளினமாக தவிர்த்துவிட்டு தன் இருக்கையில்
வந்து அமர்ந்து ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டாள்.

முதல் அழைப்பு வந்தது..

“குட் மார்னிங் சார்..கேத்ரின் ஹியர்..வாட் கேன் ஐ டு ஃபார் யு சார் ”
என்றாள் இயந்திரமாக….

Series Navigation