வேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

மாதங்கி


சிங்கப்பூரில் வேலை கிடைத்து விட்டது!

அவ்வளவுதான் நம் கதாநாயகனுக்கு, பெயர் வேண்டுமானால் செல்வமணி என்று அழகாக வைத்து விடுவோம், செல்வமணிக்கு வாயெல்லாம் பல். மனபூர்வமான மகிழ்ச்சி. நாம் மணி என்றே அழைப்போம்;

செல்வமணி ஒரு கணிப்பொறி கண்மணி. வேலை கிடைத்த ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு முன் மணியை நோக்கி கேள்விகள் ஏவுகணைகள் போல் பறந்து வரும்.

‘ஆமாம் மணி, நீ எங்கே தங்கி இருக்கிறாய் ? ‘

‘வீடு எடுத்துக்கொண்டிருக்கிறேன் ‘

‘ அது தெரியுமப்பா, அபார்ட்மெண்ட்டிலா அல்லது ரூமிலா ? ‘ ஒரு அன்பர்.

‘ஓகோ ரூம் எடுத்துக் கொண்டிருக்கிறாயா ? ‘

‘அதெல்லாம் சரி மணி, உனக்கு வேலை கிடைத்ததைப் பற்றி சந்தோஷம்தான். என்ன விசா கிடைத்திருக்கிறது. ‘ இது இன்னொரு அன்பர்.

‘ஓ கியூ 1 விசாவா, நல்லது உடனே அப்பா அம்மாவை நல்ல பெண்ணாகப் பார்க்கச் சொல்லி கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து விடு. கியூ 1 என்றால் மனைவியையும் கூட்டி வந்து வைத்துக் கொள்ளலாம் ‘

சுதந்திர மணியின் சோதனைகள் இப்போதுதான் ஆரம்பிக்கும் கட்டம்.

‘என்ன மணி உனக்கு வீடு கிடைத்துவிட்டதா ? ‘

‘நல்லது. ‘

‘என்ன மணி என்ன நீ, இப்போது நீ இருக்கும் ப்ளாட் அப்ரூவ்டா அனப்ரூவ்டா ? ‘

அப்ரூவ்ட் தான் என்று பதில் சொல்லி விட்டு மணி பேச்சை மாற்ற இயலாது.

‘அப்ரூவ்ட் என்கிறாயே, எத்தனை அறை உனது வீட்டில் இருக்கிறது ? ‘ இது அடுத்த கணை.

சிங்கப்பூருக்கு புதிதாக வந்துள்ள மணிக்கு இது தமாஷாக இருக்கும்.

வரவேற்பறை, படுக்கை அறை, என்று நிறுத்தாமல், பாத்ரூம், சமையலறை, ஸ்டோர் ரூம், ஒரு

வேளை சொல்லாவிட்டால் இல்லை என்று நினைத்துவிடுவார்களோ என்று டாய்லெட்டையும் அவசரமாகச்

சேர்த்துச் சொல்ல அவ்வளவுதான், இடைமறிக்கப் படுவார்.

‘நான் அதைக் கேட்கவில்லையப்பா ‘

( எத்தனை ரூம் என்பதற்கு வேறு என்ன அர்த்தம் என்று மணி ஒரு கணம் அசந்து போக,

அட எத்தனை ரூம் என்றால் எத்தனை படுக்கையறை என்பதையும் உடன் வரவேற்பறையையும் கூட்டிச் சொல்லவேண்டும் என்ற அர்த்தத்தில் புது விளக்கம் எழும்ப

‘மணியும் இரண்டு படுக்கை அறை என்று மணி பெருமையாகச் சொல்ல

ஓகோ, மூன்று அறை வீடா என்று ஆமோதிக்க

நம் கதாநாயகனுக்கு மீண்டும் குழப்பம் கண்டு அந்த அன்பர் வீட்டில் உள்ள படுக்கைஅறைகளையும் வரவேற்பறையையும் கூட்டிச் சொல்லவேண்டும் என்று தெளிவு படுத்துவார்.

ஓகோ இது புது விஷயம் தான் என்று மணியும் ஒத்துக்கொண்டு தலையாட்டுவார்.

சரி என்று நிம்மதியாக மணி ஒரு மாதமிருந்துவிட முடியாது

‘என்னப்பா எம்பளாய்மெண்ட் பாசுக்கு மனு போட்டாயா ‘

சரி போட்டாயிற்று; நல்ல காலம் அதுவும் கிடைத்தாயிற்று என்று மணி நிம்மதி மூச்சு விடமுடியுமா ?

‘என்னப்பா பி.ஆர் ருக்கு மனு போடாமல் என்ன செய்துகொண்டிருக்கிறாய் ? ‘

அது எதற்கு என்றால் ‘என்னப்பா ஒண்ணும் தெரியாத அப்பாவிப் பயலாக இருக்கிறாயே; உன் மனைவி ஒன்று சொல்லவில்லையா. பி. ஆருக்கு முதல் வேலையாக மனு போடுற வழியைப் பாரு ‘ என்று அன்பு கட்டளை வேறு தொடரும்.

பி. ஆர் வரும் வரை இடைப்பட்ட நாட்களில் பார்ப்பவர், தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர்,

கேட்பது இதைப் பற்றியே தான்.

அப்பாடா ஒரு வழியாக வந்து விட்டது இனி நிம்மதி என்று மணியை நினைக்க யார் விட்டார்கள்.

‘என்னப்பா இது சொந்த வீடு வாங்க வேண்டாமா; வீடு வாங்கும் வழியைப்பார்; ‘

அன்பரின் அடுத்த அஸ்திரம் பயன்படுத்தப்படும்.

மணி தயங்கினால், ஒரு வேளை ம.சேம நிதி பற்றவில்லையோ என்ற ஐயம் எதிராளிக்கு ஏற்பட்டு, உடனே எப்படி பண ஏற்பாடுகள்( கடன் எடுப்பது எப்படி) செய்வது என்பதற்கு வகுப்பு எடுக்கப்படும்.

வாங்கும் போது மூன்று அறை வீடெல்லாம் வாங்காதே, இடம் பற்றாது நான்கு அறை வீடு வாங்கிவிடு என்று அறிவுரைவேறு தீபாவளி இலவச இணைப்பாக.

‘நானும் என் மனைவியுமாக இரண்டு பேர் தானே, இரண்டு படுக்கையறைகள் போதுமே ‘ என்று வெகுளியாக மணி கூறி விட்டால அவ்வளவுதான்

‘இன்றைக்கு நீங்கள் இரண்டு பேர்; நாளை மூன்று ஆக மாட்டார்களா ‘ என்று அன்பர் ஒரு போடு போடுவார்.

அட அடா என்ன முன் யோசனை என்று மணி புல்லரித்துப் போவார்.

‘சரிதான் ஆனால் பிறந்த குழந்தை தனியாகப் படுக்குமா ‘ என்றால் போச்சு

என்னப்பா, குழந்தையின் பேபி காட், விளையாட்டுச் சாமான்கள், அதன் துணிமணிகள், டயாபர் மூட்டைகள், அதன் ை ? சேர் (அப்போது தானே மேசை நாகரிகம் கற்றுக் கொள்ளும் ), நடை வண்டி, மூன்று சக்கர சைக்கிள் இதெல்லாம் வைப்பதற்கு இடம் வேண்டுமே மீண்டும் மீண்டும் வீடு மாற்றுவாயா ‘ என்று அழகாகச் சுட்டிக் காட்ட, நம் கதாநாயகன் நான்கு அறை வீடுதான் என்ற திண்ணமான முடிவுக்கு வந்த பிறகே தற்காலிக ஓய்வு கிடைக்கும்.

சரி, பாடுபட்டு, பேருந்து, ரயில் நிலையமருகில் அலைந்து திரிந்து வீடு பார்த்து ஒரு வழியாக வாங்கியாயிற்றா ?

அடுத்து வீட்டுப் பொருட்கள், துவைக்கும் இயந்திரம், சாப்பாட்டு மேசை, வரவேற்பறை நாற்காலிகள், இதெல்லாம் புதிதாக வாங்கப் போகிறாயா அல்லது போதும் என்று கராஜ் சேலில் பழையதை வாங்கப் போகிறாயா ?

ஓகோ இது வேறா என்ற புதிய அச்சம் மனதில் பரவ, இவ்வளவு செலவழித்து வீடு வாங்கிவிட்டு, புது சாமான்கள் வாங்காவிட்டால் எப்படி என்று புதிய சாமான்கள் வாங்கத் தீர்மானிக்க

‘இதோ பார் டிவி யை மேசை மீதா வைக்க முடியும், வி.ஸா.ஆர், கேபிள் பெட்டி, காஸெட்டுக்கள், சி. டி.க்கள், ம்யூசிக் சிஸ்டம் இதெல்லாம் வைக்கக் கூடியதாக ஷோகேஸ் வாங்கி விடு ‘ என்று இலவச இணைப்பாக யோசனைகள் கிடைக்கும்.

ஒரு வழியாக சந்தோஷமாக குடி புகுந்தால்,

‘என்னப்பா, புது மனை புகு விழாவுக்கு என்னைக் கூப்பிடுவாயா ‘ என்ற அடுத்த கேள்வி இன்னொரு அன்பரிடமிருந்து பறக்கும்.

ஓகோ இதையும் கொண்டாடவேண்டும் போலிருக்கிறது என்று கொண்டாடிவிட்டு நிமிந்தால்

‘என்னப்பா எப்போது அப்பா ஆகப் போகிறாய் ? ரொம்பத் தள்ளிப் போடாதே ‘ என்ற அன்புக் கட்டளை வேறு வரும்.

சரிதான் என்று ஒரு வழியாக அதுவுமாகி விடா

‘ஆமாம் பாப்பா பிறந்த நாளை எந்த இடத்தில் கொண்டாடப் போகிறாய் ? இல்லை, எளிமையாக வீட்டிலேயே கொண்டாடி விடப் போகிறாயா ?

‘ஓகோ இது வேறு ஒன்று இருக்கிறதா ‘ என்று அந்தக் குறையையும் தீர்க்கப்படும்.

இனி யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது என்று மணி ஆசுவாசப்படுத்திக் கொண்டால்,

‘எப்போதும் வேலை வேலை என்று இருந்துவிடாதே தம்பி, பக்கத்தில் உள்ள வெளிநாட்டுகெல்லாம் போய்விட்டு வந்து விடு; அங்கு எல்லா பொருட்களும் மிகவும் மலிவு ‘ அடுத்த ஆலோசனை அழைக்காமலே வந்தடையும். இதில் உன்னை எனக்கு மிகவும் பிடித்துவிட்டதப்பா; அதனால்தான் உரிமையோடு சொல்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசி மனதைத் தொட்டுவிடுவார்.

சுயசிந்தனை உடையவர்களை நம் அன்பருக்கு பிடிக்கவே பிடிக்காது. அன்பருக்கும் அவர்களுக்கும் ஏழாம் பொருத்தம்.

சரி என்று பக்கத்து நாடு, அங்கே இங்கே போய் வருவதும் பொருட்கள் வாங்குவது நடக்கும்.

ஒரு வருடம் கழிந்திருக்கும்

மணி மறந்து போனாலும் அவர் வீடு வாங்கி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டதை நினைவூட்டி

ாஎன்னப்பா அடுத்து எப்போ அப்கிரேடிங்; ஆச்சே இரண்டரை வருடம் ‘ என்ற கேள்வி எழும்பும்

அட ஆமாம் என்று மணிக்கு அப்போதுதான் உறைக்கும்.

‘என்ன ஐந்து அறை வீடா அல்லது மேசனட்டா என்ற அடுத்த கேள்விக் கணை வரும் . கூடவே வீட்டில் மாடிப்படி இருந்தாலே ஒரு தனி அந்தஸ்து தான் என்று குட்டி ஆலோசனையும் கொசுறாக வரும்.

இதற்குள் மணிக்கு தலைமுடி ஒன்று நரைக்கத் துவங்கும் அல்லது உதிரத் துவங்கும்

சே சே என்ன வாழ்க்கை, அப்கிரேட் பண்ணாமல் இங்கிருந்து என்ன பயன் என்ற எண்ணம் மேலோங்கும்.

ஒரு நாள் கிழமை என்றால் மனிதர்கள் நிற்கக் கூட வீட்டில் இடமில்லை என்ற புலம்பல் வேறு பின்ணணியில் ஒலிக்கும்.

ஒரு வழியாக ம.சேம நிதி வங்கிக் கடன் அது இது என்று போட்டு எடுத்து, மேசனெட் வாங்கி கொண்டு நிம்மதியாக உட்கார முடியுமா ?

‘என்னப்பா இப்படி இருக்கிறாய் ? அடுத்ததற்குத் தயாரா ? ‘

‘இனி என்ன மீதி, எல்லாம் தான் ஆயிற்றே ‘ என்று மணி சொன்னால் அற்பப் புழு போல் பார்க்கப்படுவார்.

‘ உனக்கு ஒவ்வொன்று சொல்லித்தர வேண்டுமா ? ‘

மணிக்கு இரத்த அழுத்தம் லேசாக கூடுவதுபோல் இருக்கும்.

‘நீ அலுவலகத்திற்கு எப்படிப் போகிறாய் ? ‘

‘பேருந்து அல்லது ரயில் ‘ என்று மெல்லிய குரலில் அச்சத்துடன் மணி கூற

‘வாரயிறுதியில் ஆர்சர்ட், செராங்கூன், கோயில்,பீச்சு, பார்க்கெல்லாம் போவாயா ; அதற்கு ஆகும் பயணச்செலவைக் கணக்குச் செய்து பார், ஆயிற்றா, இப்போது உன் அலுவலகம் செல்ல உனது பயணச் செலவைக் கூட்டிக் கொள்ளப்பா.; இரண்டு குழந்தைகளுடன் பஸ்ஸாலா போவாய்; கேப்பில் செல்வாய்;

கிடைக்காவிட்டால், தொலைபேசியில் வீட்டிலிருந்து அழைப்பாய்; அதற்கு இன்னும் கூடுதல் கட்டணம்; இத்தோடு விட்டதா ? சனி, ஞாயிறு இரவுகளில் சில சமயம் உனக்கு கேப் கூப்பிட தொலைபேசி இணைப்பே கிடைக்காது; அப்போது என்ன செய்வாய் ; உன் கைக்குழந்தை அழுது தீர்த்ததா; பார் பணம் இருந்தும் உனக்கு பயன்படாத நிலை; உடனே புத்திசாலித்தனமாக செயல்பட்டு கார் வாங்கிவிடு.

‘ஆனால் கார் இல்லாவிட்டால் கூட இந்த ஊரில் பயணம் செளகரியமாக இருக்கிறதே ‘ என்றால் போயிற்று

‘உனக்குத் தெரியவில்லையா; கார் வாங்க இயலாத பயல்கள் சொல்லும் சப்பைக் கட்டுக் கதைத் தம்பி ‘என்று தெளிவுர வேறு தேனொழுகும் குரலில் கிடைக்கும்.

அவ்வளவு பணம் கைவசம் ஏது என்று நம் கதாநாயகன் திகைத்தால், ஆபத்பாந்தகனாக, அனாத ரட்சகனாக நம் அன்பர் எதற்கு இருக்கிறார்.

‘கவலைப்படாதே அப்பா ( அப்பனே) எடுத்த எடுப்பில் புதிய கார் வாங்கிவிடாதே; தேவையேயில்லை; விலை ரொம்ப அதிகம்; பழையது செகண்ட் ஹாண்டாக வாங்கு; கையைக் கடிக்காது; சி.ஒ.இ இரண்டு வருடங்களில் முடியக்கூடியதாக வாங்கு அப்போது நீ விற்றால் கூட ஸ்கராப் சேல்ஸ்ஸாக ஏழாயிரமாவது கையில் கிடைக்கும். மேசனெட்டில் இருந்து கொண்டு கார் இல்லாமல் எப்படியப்பா ? ‘

கடனை உடனை வாங்கி சரி ஒரு வழியாக அதுவும் ஆயிற்றா ?

‘என்னப்பா பிள்ளைகளை இதில் சேர்த்திருக்கிறாய்; நான் சொல்லும் தனியார் பள்ளி தான் சிறந்தது; இங்கெல்லாம் சேர்த்தால் சளி பிடித்துவிடும்; தவிர உன் அந்தஸ்த்தை மறந்துவிடாதே ‘ என்று அடிக்கடி அதை நினைவூட்டும் படலம் ஒன்று நடக்கும்.

‘இல்லையே, பக்கத்து ப்ளோக் நண்பர் மகள் இந்தப் பள்ளிக்குத் தானே செல்கிறாள்; நன்றாக ஆரோக்கியமாகத் தானே இருக்கிறாள் ‘ என்றால் போயிற்று அன்பருக்கு கோபம் வந்து விடும்.

ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்.

‘அட அவர்கள் தனியாரில் கட்டணம் அதிகம் என்பதால் அனுப்பவில்லை ‘என்று காரணம் வேறு கண்டுபிடிக்கப்பட்டுச் சொல்லப்படும்

‘எல்லாம் ஒரே எ,பி, ஸி, டி, தானே ‘ என்றால் பிடித்தது தொல்லை என்று அர்த்தம்

‘என்னப்பா, வெறும் எ,பி, ஸி,டி, கற்றால் போதுமா ‘

‘உன் பெண்ணுக்கு ஆளுமை வளர வேண்டாமா, உன்மகன் சிற்ந்த விளையாட்டு வீரனாக வரவேண்டாமா.

நிர்வாகத் திறன், முடிவெடுக்கும் திறன், சுய சிந்தனை இதெல்லாம் எப்படிவரும்; நான் சொல்லும் பள்ளிதான் சிறந்தது ‘ என்ற மிரட்டல் தொடரும்.

பலூனுக்கு அழுது கொண்டிருக்கும் மூன்று வயது பிங்கி, நிர்வாகத் திறன், ஆளுமை, முடிவெடுக்கும் திறன், சுய சிந்தனை, பெற சரி அந்த வலையிலும் விழுந்தாயிற்றா ?

இனியாவது எல்லாக் கடமைகள் ஆயிற்றா என்றால்

அன்பர் அடுத்து ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போடுவார்;

அது அணுகுண்டையும் விட ஆற்றல் பெற்றது.

‘எல்லாம் சரிதான் தம்பி, ஆனால் நீ இத்தனை வருடமாகியும் இன்னும் யு.எஸ்(அமெரிக்கா) சுற்றிப் பார்க்கவில்லையே ; சிங்கப்பூரில் இருந்து என்ன பயன் என்ற வேதனையும் வெளிப்படும்.

‘அதுகெல்லாம் நிறைய ஆகுமே ‘ என்றால் போச்சு.

‘ செலவை யோசிக்காதேயப்பா, பணம் இன்று வரும் நாளை போகும். நீயும் உன் குழந்தைகளும் குடும்பமும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டாமா ? கிணற்றுத் தவளையாக இருக்கப் போகிறாயா; குடும்ப நலனை முன்னிட்டும், குழந்தைகளுடன் நீ அதிக நேரம் செலவிடவும் அமெரிக்காவை உடனடியாகச் சுற்றிப் பார்க்க வேண்டும் ‘

மணி திணறுவதைப் பார்த்து அன்பருக்கு எப்போதாவது இரக்கம் பிறக்கும்.

‘ உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அமெரிக்கா உன் தகுதிக்கு ஏற்றதுதான். அது முடியாத பட்சத்தில், ஏதோ லண்டன், பாரிஸ், ஆஸ்திரேலியா, சப்பான், இவற்றில் எதாவது ஒன்றுக்கு இந்த வருடம் போய்வா; அடுத்த ஆண்டு பணம் சேர்த்துக் கொண்டு அமெரிக்கா போய்விடலாம் கவலைப் படாதே ‘ என்ற ஆறுதல் வேறு கிடைக்க்கும் அனுதாபத்துடன்.

‘ இரண்டாவது கைக்குழந்தையாக இருக்கிறதே, எப்படி பிரயாணம் செய்வது, என்று மணி கொஞ்சம் யோசித்தால், அன்பர் இருக்க பயமேன் ? இதோ பார், பத்துமாத பப்புலு ரொம்ப சமர்த்து, அழகாக ஒத்துழைக்கும்; என்ன கைவசம் எப்போதுமே பால் பவுடர், பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அங்கெல்லாம் எல்லா வசதிகள் உண்டு. இப்போது விட்டால் பின் உன் பிங்கி பெரிய வகுப்பு போக ஆரம்பித்தால் விடுமுறை கூட எடுக்க முடியாது தெரியுமா ? ‘ என்று புள்ளி விவரத்துடன் ஆதாரங்கள் கொடுக்கப்படும்.

சரி, அதையும் சுற்றி விட்டு வந்தவுடன் முடிந்ததா,

‘என்னப்பா, ஒரு பணிப்பெண்ணை வைத்துக் கொள்ளாமல் எப்படி வாழ்க்கை நடத்துகிறாய் ? உன் மனைவி என்ன அடிமையா ? அவள் எப்போதும் சமையல் கரண்டியும் துடைப்பதுடன் இருந்தால் பிள்ளைகளுக்கு யார் பாடம் சொல்லிக் கொடுப்பது.

குழந்தைகள் படிப்பு மிகவும் முக்கியம், ‘ என்று அன்பரின் பேச்சுத் திசை மாறினாலும்; இலக்கு ஒன்றே: தான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்; நான் பட்ட கடன்களைப் போல் நீயும் படுக என்ற நல்ல எண்ணம்.

இப்போதே மணி கந்தல் துணியாகியிருப்பார்; தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று நினைத்தாலும் இயலாது. பாதி தலைமுடி நரைத்திருக்கும் அல்லது முன்புறம் வழுக்கை விழிந்திருக்கும்.

இந்த வாங்கும் படலங்கள் முடிந்து விட்டது என்று யாராவது தப்புக் கணக்கு போட்டு விட வேண்டாம்,

பணிப்பெண் அமர்த்தியாயிற்றா ? இனி அடுத்து ப்ரைவேட் அபார்ட்மெண்ட், அதாவது தனியார் வீடு,

‘பின் என்ன பொது நீச்சல் குளத்திலா குளிப்பார்கள், வீட்டில் ஒரு நாள் கிழமை என்றால் ஒரு தனி சிறு அரங்கு

அல்லது கூடம் வேண்டாமா. பணிப்பெண் நம் குளியலறையைப் பயன்படுத்தலாமா, அவளுக்கென்று ஒரு தனி

இடம் கொடுத்துவிட வேண்டும், இன்னும் செகண்ட் ?ாண்ட் காரை வைத்திருந்தால் சிரிக்கமாட்டார்களா ?

புத்தம் புது சப்பான் கார் வாங்க வேண்டும், ஆயிற்றா, அடுத்தது கால்ப் ஆட்டம் ஆடக் கற்றுக் கொள்ள

வேண்டாமா; இல்லையென்றால் இவ்வுலகில் இருந்தும் என்ன பயன், அதற்கு க்ளப்புகளில் ஆண்டுச் சந்தா

என்று ஒரு பழுத்த தொகையைக் கட்டினால் தானே முடியும், அதுவுமாயிற்றா, மனைவி, மக்கள் பெயரில்,

வெளிநாட்டில் நிலம் வாங்க வேண்டாமா, வீடு கட்டி, வாடகக்கு விட வேண்டாமா, இன்னும்,,,இன்னும்,,,,

***

madhunaga@yahoo.com.sg

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>

மாதங்கி

மாதங்கி