சோ.சுப்புராஜ்
அலுவலக வாசலில் காத்திருந்த மாடசாமிக்கு அலுப்பாகவும் ஆயாசமாகவு மிருந்தது. எத்தனை எத்தனை காத்திருப்புகள்! பாதி ஆயுள் காத்திருப்புகளிலேயே கழிந்து விடும் போலிருக்கிறது. இந்த தொழிற்சாலை வாசலில் காத்திருந்த நிமிஷங்களைக் கணக்கெடுத்தாலே…… கண்மூடி யோசனை யிலிருந்தவனை உலுக்கினான் அதிகாரியின் உதவியாளன்.
“என்ன அதுக்குள்ள தூக்கமா? உள்ள கூப்புடுறாங்க, போ…..நீயும் விடாம வந்துக்கிட்த் தான். இருக்குற! இவனுங்க எதுவும் செய்ய மாட்டானுங்கப்பா…இவனுங்களயே நம்பி வீணாப் போகாம, வேற ஏதாவது முயற்சி பண்ணிப் பாரேன்…..” என்றபடி அறைக்குள்ளே அனுப்பி வைத்தான் அவன்.
இவன் கை கூப்பியபடி உள்ளே நுழைந்ததும், கோப்புகளில் தீவிரமாக மூழ்கி இருப்பது போன்ற பாவனையுடன் உட்கார்ந்திருந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரி மாடசாமியிடம் எரிந்து விழுந்தார்.
“ஏன் திரும்பித் திரும்பி வந்து என் உயிரை எடுக்குற? உனக்குப் பொருத்தமான வேலை எதுவும் இந்தத் தொழிற்சாலையில இல்லைன்னு எத்தனை தடவை சொல்லியாச்சு…..”
“அப்படி எல்லாம் ஒரேயடியா இல்லைன்னு சொல்லீடாதிங்க ஸார் … பொண்டாட்டி புள்ளைக எல்லாம் பட்டினியாக் கெடக்குறாங்க…..கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ஏதாவது சின்ன வேலையாவது – டெம்ப்ரரினாலும் பரவாயில்ல – போட்டுக் குடுத்தீங்கன்னா பொழச்சுக்குவோம்…..” அழுகிற தொனியில் அவன் கெஞ்சினான்.
“இது வெளிநாட்டுக்காரன் கம்பெனிப்பா, நீயோ SSLC பெயிலு; இங்கிலீசும் பேச வராது; இங்க உனக்கு நான் என்ன வேலை தர முடியும் சொல்லு! இரும்படிக்குற எடத்துல ஈக்கென்ன வேலை? சொன்னாக் கேளு; இப்ப நீ கெளம்பு…உனக்குத் தோதான வேலை வந்ததும் கண்டிப்பா சொல்லி அனுப்புறேன்; அப்புறம் வந்து பாரு…..”
“இந்த வார்த்தைகளக் கேட்டுக் கேட்டு என் காதே புளிச்சுப் போச்சு ஸார்…..அன்னைக்கு உங்க பெரிய அதிகாரி – அந்த இங்கிலீசுக்காரர்கிட்ட நான் நியாயம் கேட்டப்போ, நீங்க என்ன சொல்லி என்னை வெளியில கூட்டிட்டு வந்தீங்க…..! எனக்கு எப்படியும் ஏதாவது வேலை போட்டுத் தர்றதா உறுதி சொன்னீங்கள்ல… இப்ப ஏன் வேலை இல்லைன்றீங்க?” கோபப்பட்டான் மாடசாமி.
“மாடசாமி சொன்னாப் புரிஞ்சுக்கோ…இங்க ஏற்கெனவே ஆட்கள் நிறையா இருக்காங்கன்னு, ஆட்குறைப்பு பண்ணச் சொல்லி அதே வெளிநாட்டுக்காரன் தான் என்னை நச்சரிச்சுக்கிட்டு இருக்கான். யாரை அனுப்புறதுன்னு நான் மண்டையப் போட்டு உடைச்சுக்கிட்டிருக்கேன். இதுல நீ வேற புதுசா வேலை கேட்டு வந்து வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்காத….! எனக்கு நெறையா வேலை கெடக்கு; ஒன்னோட மல்லுக்கெட்றதுக் கெல்லாம் நேரமில்ல….” என்றபடி மீண்டும் கோப்புகளுக்குள் முகம் புதைத்துக் கொண்டார் அவர்.
“இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு முடிவு தெரியாம இங்கருந்து நான் வெளிய போகப் போற தில்ல ஸார். ஒண்ணு எனக்கு வேலை போட்டுக் குடுங்க; இல்லைன்னா உங்க இங்கிலீசுக்கார பெரிய அதிகாரிய இன்னொரு தடவை பார்க்க விடுங்க……” அலுவலகத்தின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான் மாடசாமி. கொஞ்ச நேரம் அவனைக் கவனிக்காமல் விட்டு விட்டால் அவனாகவே எழுந்து போய் விடுவான் என்ற எண்ணத்தில் – இதற்கு முன்பும் சில சந்திப்புகள் இப்படித்தான் முறியடிக்கப் பட்டிருக்கின்றன – அவரும் அவனது இருப்பை உதாசீனப் படுத்திவிட்டு தான் வேலையில் மும்முரமாய் இருப்பதாக பாவணை செய்யலானார்.
அப்போதெல்லாம் – அதாவது மாடசாமி பிறப்பதற்கெல்லாம் முன்பு – அவனது சிறு கிராமம் சென்னையிலிருந்து விலகி, வெகு தூரத்தில் ஆழ்கிணற்றுத் தண்ணீரைப் போல் அமைதியாக குளிர்ச்சியாக இருந்தது. ஊரில் விவசாயம் செழித்து, திருவிழாக்கள் களைகட்டி இருந்த காலமது. அவர்கள் அபூர்வமாகத் தான் அதுவும் விஷேஷங்களுக்கு ஜவுளி எடுக்க, பண்ட பாத்திரங்கள் வாங்க என்று முக்கியமான தருணங்களில் மட்டுமே சென்னைக்குப் போவார்கள்.
அதுவும் நிறைய திட்டமிட்டு சொந்தபந்தங்களை எல்லாம் திரட்டிக் கொண்டு, கட்டுச் சோறு கட்டிக் கொண்டு, மாட்டு வண்டி பூட்டி அதில் வைக்கோலைப் பரப்பி, அதன் மீது பவானி ஜமுக்காலம் விரித்து, நாள்க் கணக்கில் பயணித்து…. பயணங்களைக் கொண்டாடிய காலமது. அப்படியும் போய்விட்டுத் திரும்பியதும் நாலைந்து சொந்தங்களாவது தங்களையும் கூட்டிப் போகவில்லை என்று மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு சடவாய்த் திரிவார்கள். சின்ன வயதில் மாடசாமியின் பாட்டைய்யா கதைகதையாய்ச் சொல்லி இருக்கிறார் இதையெல்லாம்.
முதலில் ஊருக்கு வெளியே சாலைகள் போடப்பட்டன. அதில் மாடசாமி குடும்பத்திற்குச் சொந்தமான பூர்வீக நிலம் கொஞ்சம் பறி போனது. மாடசாமியின் பாட்டைய்யா மிகச் சந்தோஷமாக நிலங்களை ஒப்படைத்தார். மின்சாரமும் சாலைகளும் கிராமங்களை வளர்ச்சியின் பாதைக்கு வழி நடத்தும் என்று நிலம் போனதற்காக வருத்தப் பட்டவர்களிட மெல்லாம் எடுத்துச் சொன்னார்.
சாலையை ஒட்டி புதிய குடியிருப்புகள் முளைத்தன. பாட்டைய்யா அதை விரும்பவில்லை.ஆனால் அவர் எவ்வளவோ தடுத்தும், எடுத்துச் சொல்லியும் கேட்காமல் மாடசாமியின் அப்பா, தாராளமாக நிலங்களை குடியிருப்புகள் கட்டித் தருபவர்களிடம் விற்றார். பருத்தியும், கடலையும், பருப்பும், சோளமும், வரகும், கேப்பையும் சடை சடையாய் காய்த்துத் தொங்கிய நிலங்களில் எல்லாம் சதுரஞ் சதுரமாய்க் கட்டிடங்கள் முளைத்து, புதிது புதிதாய் மனிதர்கள் குடி வந்தார்கள். எங்கு பார்த்தாலும் விதவிதமான கடைகளே காட்சிகளாகி, பட்டணத்தின் பவிசும் மினுக்கும் கிராமத்திற்குள்ளும் வாளைக் குமரிகளாய் வலம் வரத் தொடங்கின.
பஸ் வசதி பெருகவும் தூரங்கள் தொலைந்து போய் பட்டணம் பக்கத்தில் கூப்பிடு தூரத்திற்குள் வந்தது. மாடசாமியின் அப்பா நிலம் விற்ற காசை எல்லாம் குடியிலும், பட்டணத்திற்கு அடிக்கடி போய் அதன் சொகுசிலும் உல்லாசங்களிலும் பறி கொடுத்தார்.வானம் பொய்த்து விவசாயம் கொஞ்சம் சுணங்கியதாலும், விவசாயம் செய்ய உடம்பு வளையாததாலும் மிச்ச நிலங்களையும் தரிசாகவே போட்டிருந்தார். குந்தித் தின்றதில் குன்றும் குறைந்து, கையிருப்பெல்லாம் காலாவதியாகி, கடன்கள் பெருகி, கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி தாங்காமல் ஒருநாள் மாடசாமியின் அப்பா ஊரைவிட்டே ஓடிப்போனார்.
மாடசாமிக்கு, அப்புறம் தான் குடும்ப நிலைமை உறைத்தது. சென்னைக்குப் போய் வீதி வீதியாய் அலைந்து வேலை தேடினான். பத்தாம் வகுப்பில் பெயிலான அவனது காகிதப் படிப்பிற்கு காரியமாகவில்லை. பட்டணம் பரிகாசம் செய்து துரத்தி அடிக்க மீண்டும் சொந்தக் கிராமத்திற்கே திரும்பிப் போனான். “எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு மறுபடியும் ஏரப் புடிய்யா.. நம்ம குடும்பம் தலையெடுக்க அது ஒண்ணுதான் வழி…” என்று பாட்டைய்யா காண்பித்த வழியில் பயணிக்கத் தொடங்கினான்.
ஒரு டிராக்டர் வாங்கி அப்பா தரிசாகப் போட்டிருந்த நிலத்தை உழுது, கரடு வெட்டி, பக்குவப் படுத்தி விவசாயம் செய்யத் தொடங்கினான். குடும்பமே மிகக் கடுமையாக உழைத்தது. ஆரம்ப நாட்கள் இறுகிக் கிடந்த நிலம் போல அவர்களின் வாழ்க்கையும் வெக்கையும் வெடிப்புமாகவே கழிந்தன. நிலம் நெகிழ நெகிழ அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் குலை தள்ளத் தொடங்கியது. பொட்டைக் காடு பூப்பூக்கத் தொடங்கியது. அவர்களைப் பார்த்து கிராமத்தில் இன்னும் சிலரும் தங்கள் நிலங்களைப் பதப்படுத்தி விவசாயம் செய்யத் தொடங்கினார்கள்.
அப்போது தான் அந்தச் செய்தி ஊருக்குள் உலாவரத் தொடங்கியது – அந்த கிராமத்தில் வெளிநாட்டுக்காரன் ஒரு கார்த் தொழிற்சாலை தொடங்கப் போவதாக. ஊரில் கார்த் தொழிற்சாலைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குழுக்கள் உருவாயின. ஆதரவு கூட்டம் – ஊரில் தொழில் வளமும் வேலை வாய்ப்பும் பெருகும்; ஊரே சுபிட்ஷமாகும் – என்றது. எதிர் கோஷ்டியோ – கிராமத்தின் இயல்பும் ஒழுங்கும் பாழாகும்; சுற்றுச் சூழல் நாசமாகும்; விவசாயம் நசிந்து போகும் – என்றது.
“விவசாய நிலத்துல கார்த் தொழிற்சாலை கட்டீட்டு, அப்புறம் பசிக்கு காரையா பிய்ச்சுத் திம்பீங்க…..!” என்றார்கள் வயசாளிகள்.
அரசாங்க வாகனங்கள் ஊருக்குள் அடிக்கடி அலையலாயின. வட்டாட்சியர்களும், வருவாய்த் துறை அதிகாரிகளும் தொழிற்சாலைக்கு நிலம் பிடித்துத் தரும் வேலையில் இறங்கினர். ஊர்ப் பெரியவர்களையும் நிலமிருப்பவர்களையும் சந்தித்து குழையக் குழையப் பேசி அடிமாட்டு விலைக்கு நிலங்களை ஆர்ஜிதம் செய்தார்கள். “எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே தொழிலு விவசாயம் தான்; அதுக்கான நிலங்களை உங்களுக்கு வித்துட்டா, அப்புறம் வயித்துப் பாட்டுக்கு நாங்க என்ன செய்யிறது?” என்ற அப்பாவிகள் சிலரின் கேள்விக்கு “நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினர்களில் தலா ஒருவருக்கு அவர்களின் தகுதிக்குத் தக்கபடி கார்க் கம்பெனியிலேயே வேலை போட்டுத் தரப்படும்…” என்று சொல்லி வாயடைத்தார்கள்.
‘நாமதான் நிலத்தோட மல்லுக்கட்டி, ஓடாய்த் தேய்ந்து உருக்குலைந்து போனோம்; நம் பிள்ளைகளாவது சொகுசான வேலை செய்து சுகப்படட்டும்….” என்ற நப்பாசையில் போட்டி போட்டுக் கொண்டு நிலங்களை கார்க் கம்பெனிக் காரர்களிடம் ஒப்படைத்தார்கள் குடியானவர்கள். எந்த உத்திரவாதத்திற்கும் மசியாமல் சிலர் நிலங்களைக் கொடுக்க மறுத்து அரசாங்கத்துடன் சண்டைக்குப் போனார்கள். அவர்களில் மாடசாமியின் குடும்பமும் ஒன்று.
மாடசாமியின் பாட்டைய்யா இதில் மிகத் தீவிரமாய் இருந்தார். கார்க் கம்பெனி மென்று செரிக்க நினைத்த பகுதியில் தான், அவர்கள் சமீபத்தில் பக்குவப் படுத்தி பயிர்கள் தழைக்கத் தொடங்கி இருந்த நிலமும் இருந்தது. அவர் நிலம் கொடுக்க ஆட்சேபிப்பவர்களைத் திரட்டிக் கொண்டு அரசாங்கத்திற் கெதிராக போராடினார். உண்ணாவிரதமிருந்தார்; சாலை மறியல் செய்தார்.
ஒருமுறை போலீஸ் அவரைக் கைது செய்து கொண்டு போய், பிணமாக திருப்பிக் கொண்டு வந்து போட்டு விட்டுப் போனது. அந்த வயசாளியை அடித்தே கொன்று விட்டு மாரடைப்பில் மரணித்துப் போனதாக ரிப்போர்ட் கொடுத்தது. அதற்காக தாசில்தாரின் பேற்பார்வையில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் கூட இன்னும் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது. ஆனால் மாடசாமியின் பாட்டைய்யா இறந்த பின்பு போராட்டம் பிசுபிசுத்துப் போய், எல்லோரும் தங்கள் நிலங்களை கார்க் கம்பெனிக்கு எழுதிக் கொடுத்து விட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று ஒதுங்கிக் கொண்டார்கள்.
கார்க்கம்பெனி கட்டுமானம் தொடங்கியது. இராட்சஷ இயந்திரங்கள் வந்து இறங்கின. இரவும் பகலும் ஒரே இரைச்சலும் புகையுமாய் அந்த சூழலே இரணகளப் பட்டது. பச்சைக் குழந்தைகளை மிதித்தே கொல்வது போல பசும் பயிர்கள் எல்லாம் அழிக்கப் பட்டன. மரங்கள் வேரோடு வீழ்த்தப் பட்டதில் கூடுகளை இழந்த பறவைகளின் கூக்குரல் அந்தப் பிராந்தியத்தையே பதைபதைக்கச் செய்தன. ஆனாலும் நிலம் கொடுத்தவர்கள் பலருக்கும் கட்டுமானக் கம்பெனியிலும் அதன் உதவிக் கம்பெனிகளிலும் தற்காலியமாகவும் தினக்கூலி அடிப்படையிலும் வேலை கிடைத்தது. மாடசாமியும் கட்டுமானக் கம்பெனியில் நேரக் காப்பாளராக நியமிக்கப் பட்டான். பதினெட்டு மாதங்கள் பிரச்னை இல்லாமல் போனது.
கார்க் கம்பெனி தரையிலிருந்து மேலெழும்பி உற்பத்தியைத் தொடங்கியது. நெல்லும் கரும்பும் விளைந்த நிலங்களில் அல்லும் பகலும் அழகழகாய்க் கார்கள் முளைத்து அணி வகுத்தன. வண்ணமயமான கார்கள் வரிசைகட்டி நிற்பதைப் பார்க்க பார்க்க பிரமித்துப் போனார்கள் யாவரும். அப்புறந்தான் ஆரம்பித்தது பிரச்னை. கட்டுமானக் கம்பெனி உள்ளூர் ஆட்களை எல்லாம் ஒரேநாளில் கை கழுவி விட்டு போய்ச் சேர்ந்தது.
வேலை இழந்தவர்கள் கார்க் கம்பெனியை முற்றுகையிட்டு முறையிட செல்வாக்கான சிலருக்கு மட்டும் வேலை கிடைத்தது – அத்தனையும் சின்னச் சின்ன அடிப்படை வேலைகள். அதுவாவது கிடைத் ததே என்று சந்தோஷமானார்கள். வேலை கிடைக்காத பெரும்பாலோர் போராடிப் பார்த்து விட்டு தேறாது என்று தெரிந்ததும் வேறு பிழைப்பு தேடிப் போனார்கள். சிலர் சூழலை சாதகமாக்கி கடைகளும் தொழில்களும் தொடங்கி வளரலானார்கள். மாடசாமியும் மற்றும் சிலரும் எப்படியாவது கார்க் கம்பெனியில் வேலை பிடித்தே தீர்வதென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கோப்பில் முகம் புதைத்துக் கிடந்த அதிகாரி, முகந்தூக்கி மாடசாமியிடம் “இன்னுமா இங்க இருக்க? கிளம்பு; நான் வெளியில போகணும்…..” என்றார். “என்னோட வேலை பத்தி ஏதாவது முடிவு தெரியாம கிளம்புறதா இல்ல ஸார்….” என்றான் உறுதியான குரலில்.
“என்ன தெரியணும் உனக்கு? தகராறு பண்றதுக்குன்னு வந்துருக்கியா….? உனக்கு வேலை தரணும்னு எங்களுக் கென்ன கட்டாயம்? பேசாம ஒழுங்கு மரியாதையா வெளியில போயிடு…..”
“வேலை குடுக்கணும் ஸார்; குடுக்குறோம்னு இளிச்சு இளிச்சுப் பேசித்தான் எங்க நிலங் களை எல்லாம் எழுதி வாங்கி கார்க் கம்பெனி கட்டியிருக்கீங்க….இப்ப நீங்க ஒய்யாரமா உட்கார்ந்திருக்கிறது என்னோட நிலத்து மேல தான்; எங்க ஜீவனத்துக்கான ஆதாரத்தையே புடுங்கிக்கிட்டு, சட்டம் பேசுறீங்களே, வெளிநாட்டுக்கெல்லாம் போயி இதத்தான் படிச்சுட்டு வந்தீங்களா? ஏழைங்கள ஏமாத்தாதிங்க ஸார்….எங்க சாபம் உங்களச் சும்மா உடாது…..” கண் கலங்கினான் மாடசாமி.
“இங்க பாரு மாடசாமி; சும்மா அனாவசியமாப் பேசி என் நேரத்த வீணாக்கிக்கிட்டு இருக்காத….நீ என்ன சும்மாவா நிலம் கொடுத்த? சுளையா பணம் வாங்கல….! அவ்வளவு தான் உனக்கும் கம்பெனிக்குமான உறவு….” எகிறினார் மனிதவள மேம்பாட்டு அதிகாரி.
“பணம்; பெரிய பணம்!பிசாத்து பிச்சைக் காசு. அது என் பிள்ளைக்கு பீத்துணி வாங்கக் கூட போதாது…பணத்துக்காகவா நிலம் கொடுத்தோம்? வேலை தருவீங்கன்னு நம்பித் தான ஸார் நிலத்தக் கிரயம் பண்ணிக் குடுத்தோம். இப்படி மோசம் பண்றீங்களே….!” – மாடசாமி அழுதே விட்டான்.
“நாங்க வேலை கொடுப்போமின்னு எப்பவும் யார்கிட்டயும் சொன்னதேயில்ல…அரசாங்கம் அப்படிச் சொல்லி யிருந்தா அதுக்கு நாங்க பொறுப்பாக முடியாது….ஏதோ நிலம் கொடுத்துருக்கியேன் றதுக்காகத் தான் இவ்வளவு நேரம் நிக்க வச்சுப் பேசிக்கிட்டு இருக்கேன்; இதுக்கு மேலயும் நீ வெளிய போகலைன்னா நான் போலீசுல புகார் கொடுத்துடுவேன். அப்புறம் நீ முழுசா வீடு போய்ச் சேர மாட்ட. உங்க தாத்தாவுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும்; நான் அவ்வளவு தான் சொல்வேன்….”
மாடசாமிக்கு பயமாக இருந்தது. இவர்கள் செய்யக் கூடியவர்கள் தான். போலீஸ், அரசாங்கம் எல்லாம் இவர்களுக்குத் தான் சாதகமாய் இருக்கின்றன. எத்தனை மனுக்கள்! எத்தனை சந்திப்புகள்! எதுவும் பலனளிக்கவில்லை. அதற்கு மேல் என்ன செய்வதென்று அவனுக்கும் தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டுமென்று அதிகாரியை கைகூப்பி வணங்கியபடி, “நான் தப்பா எதுவும் பேசியிருந்தா மன்னிச்சுக்குங்க ஸார்…..உங்களால முடிஞ்சா ஏதாவது கருணை காட்டுங்க…” என்றபடி வெளியேறினான். அதிகாரி ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவன் போவதை வெற்றிக் களிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
சோர்ந்து போய் வீடு திரும்பியவனை, “அப்பா சாப்பிட ஏதாச்சும் வாங்கி வந்தியா?” என்றபடி குழந்தைகள் எதிர் கொண்டன. நான்கு வயதிலும், ஐந்து வயதிலுமிருந்த பெண் குழந்தைகள். “இல்லைடா செல்லங்களா……!” என்றதும் ஏக்கத்தோடு, விளையாடுவதற்கு வெளியே ஓடின மறுபடியும்.
“என்னங்க, போன காரியம் இப்பவும் காய் தானா? அதான் உங்க முகக் குறியே சொல்லுதே! நான் தான் படிச்சுப் படிச்சுச் சொன்னனே, அது பாறைங்க; அதுல முட்டுனா நம்ம தலைக்குத் தான் வலியும் வேதனைன்னு…நீங்கதான் சொல்லச் சொல்லக் கேட்காம போயிப்போயி முட்டிட்டு இப்ப இரத்தத்த எல்லாம் இழந்துட்டு வந்து நிக்கிறீங்க……” என்றாள் மனைவி.
“நீ வேற நோகடிக்காத புஸ்பா…! பேசாம கொஞ்சம் விஷம் வாங்கி நாமளும் சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் குடுத்து செத்துப் போயிடலாம் போலத் தோணுது….இப்ப எல்லா ஊர்கள்லயும் விவசாயிங்க அதைத்தான செஞ்சுக்கிட்டு இருக்காங்க…” என்றான் கண் கலங்கியபடி.
“அடப்பாவி மனுஷா, உன் புத்தி ஏன் இப்படிப் போகுது! பொசுக்குன்னு செத்துப் போறதுக்கா மனுஷ ஜென்மம் எடுத்தோம். போராடி வாழணும்யா. இன்னொரு தடவை இப்படிப் பேசாத….” என்றாள்.
“எனக்கும் அது தப்புன்னு தான் தோணுது; ஆனா பசியோட இருக்கிற புள்ளைங்க முகம் பார்த்ததும் மனசு பதறுதே, நான் என்ன தான் செய்யட்டும் சொல்லு?” உடைந்து அழுது விட்டான் மாடசாமி.அவனை இழுத்து அணைத்து, தோள் தட்டியபடி, “ஆம்பள அழுவாதய்யா; பார்க்கவே அசிங்கமா இருக்கு….நான் ஒரு வழி சொல்றேன்; கேக்குறியா…?” என்றபடி புருஷனின் முகம் பார்த்தாள் புஸ்பா.
“சொல்லு….” என்று தலை யாட்டினான் மாடசாமி.
“இங்க கார்க்கம்பெனி வந்துட்டதால இப்ப இந்தப் பகுதியில நில விலை யெல்லாம் ஏகத்துக்கு ஏறிக் கெடக்கு. நம்ம வீட்டையும் வீட்டடி மனையையும் வித்துடலாம்; அந்தப் பணத்தை வச்சு கொஞ்ச நஞ்சம் இருக்கிற கடனை யெல்லாம் அடச்சுட்டு, கண்காணாத இடத்துக்கு – இன்னும் விவசாயம் உயிப்போட இருக்குற – ஏதாவது சின்ன கிராமத்துக்குப் போவோம்…”
“போயி….அங்க என்ன பண்றது?” – இடைமறித்தான் மாடசாமி.
“அவசரப்படாம பொறுமையாக் கேளுய்யா…அங்க போயி, மிச்சமிருக்குற காசுல கொஞ்சம் காடு கழனின்னு வாங்கி, நமக்குத் தெரிஞ்ச விவசாயம் பண்ணிப் பொழச்சுக்குவோம்…சரியா?” என்றாள்.
மாடசாமி கொஞ்சம் யோசித்தான். “எல்லோரும் கிராமத்துலருந்து பட்டணத்துக்குப் போவாங்க பொழைக்குறதுக்கு….நீ என்னடான்னா அப்படியே தலை கீழா மாத்தி பட்டணமா வளர்ந்துட்டு வர்ற ஊரை விட்டுட்டு குக்கிராமத்துக்குப் போகணும்கிறீயே! அது சரியா வருமா?” என்றான் சந்தேகமாக.
“சரியா வரும்யா….நமக்குத் தெரிஞ்ச தொழிலு எங்க நடக்குதோ அங்க தான நாம போகணும்; அப்பத்தான் பொழைக்க முடியும்…” என்றாள் உறுதியாக.
“இருந்தாலும் பூர்வீகமா இருந்த இடத்தை வித்துட்டு வெளியிடம் போறதுன்னா.. கொஞ்சம் தயக்கமா இருக்கே புஸ்பா…” மருகினான் மாடசாமி.
“அப்படியெல்லாம் அனாவசியமா தயங்காதய்யா…முதல்ல உயிர் பொழைச்சுக் கெடக்குறது முக்கியமில்லையா! மனுஷ வாழ்க்கையே நாடோடித் தனமானது தான்யா…உனக்கும் எனக்கும் இந்த இடம் பூர்வீகம்னா, போற இடம் நம்ம புள்ளைங்களுக்குப் பூர்வீகமாயிட்டுப் போகட்டும்…….”
“சரித்தான்; உன் யோசணைப்படியே செய்வோம்……” தீர்மானமாகச் சொன்னான் மாடசாமி. மேகத்துக்குள் மறைந்து கிடந்த உச்சிச் சூரியன் மெல்ல மெல்ல வெளியேறி, பிரகாசமாகி உறைக்கத் தொடங்கியது.
– முற்றும்
(நன்றி : கல்கி தீபாவளிமலர் 2007)
சோ.சுப்புராஜ்
- 20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு
- இழுக்காதே எனக்குரியவனை !
- அன்புள்ள திரு சிவகுமார்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சம் எத்தனை பெரியது ? (கட்டுரை: 2)
- இறந்தவன் குறிப்புகள் – 1
- பி.கே.சிவகுமார் கண்ணோட்டம்
- திரு பி.கே.சிவக்குமார் கடிதம் பற்றி
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2
- நான்தான் சட்டுவம் பேசுகிறேன்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்
- படித்ததும் புரிந்ததும்..(9) பாகிஸ்தான் நெருக்கடியும் : இந்தியாவின் செருப்புக்கடியும்;
- பாட்டு வாத்தியார் – ஜெ. ராம்கியின் பாகவதர்
- தீபாவளி பற்றி ஒரு கடிதம்
- தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு!
- இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு
- பெண்ணியத்தின் மூன்றாம இதிகாசத்தின் அமானுஷ்ய பக்கங்கள்
- சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்
- உதயகுமரன் கதை
- திரு.பிகே.சிவகுமார் கருத்தைப் படிக்கும்போது
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 1 – அம்பாளின் தொப்புள்கொடி
- நினைவுகளின் தடத்தில்
- கடிதங்கள் குறித்த கடிதங்கள் குறித்த ஒரு கடிதம்
- கல்லறைக் கவிதை
- கடிதம்
- பி.கே. சிவகுமாரின் கடிதம்…
- த.கோவேந்தனின் ‘வானம்பாடி’ இதழ் அறிமுகம்
- அமெரிக்காவும் விழுமியங்களும்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 35
- வேரற்றுப் போகிறவர்கள்
- பண்பாட்டிற்கு எதிரானது
- சுநாதர்
- இருபது ரூபாய் நோட்டு
- யார் அகதிகள்?
- “பயன்பாடு”
- குறிப்பேட்டுப் பதிவுகள் சில……
- சிந்தாநதி சகாப்தம்
- நாவடிமை (கண்ணிகள்)
- தாகூரின் கீதங்கள் -2 கண்ணுக்குப் பின்னே அமர்ந்துள்ளாய் !
- இல்லாமல் போனவர்கள்
- தீபாவளித் திருநாளில்
- கிளி ஜோசியம்!
- இலை போட்டாச்சு 37 – ரவா லாடு
- லா.ச.ரா
- இலஞ்சி சொக்கலிங்கனார் கண்ட ‘சமய கிண்டர்கார்டன்(அ) ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்’