வேத வனம் –விருட்சம் 64

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

எஸ்ஸார்சி


முலைப்பால் தொடாது
பிறந்தோன் அக்கினி
அவன் தேவ தூதன்
மரம் மீதமருமோர் பறவை
வேள்விக்குக்காத்திருப்போன்
முழங்கி அவன்
வனம் சுடுவோன்
மழை அருள்வோன்
வேதங்கள் மூன்றில்
நிலைப்போன் அக்கினி
உத்தமப்பிதிர்க்கள்
பெற்ற பிள்ளை அவன்
உணவு பண்டம்
கொண்டுதந்த வாரிசு
எமக்கு நீண்ட ஆயுளும்
வீரப்புதல்வர்களும்
அக்கினியே தருவான் ( ரிக் 10/115)

பசி மரணம் தராது
புசித்தவன் மரணிக்காதவனா
அள்ளித்தருவோனுக்கே
வெள்ளமாய்ச்சேரும்
கொடாதவனை யாரும்
தொடார் மெய்

உணவிருந்தும்
நாடிவரும் ஏழைக்குத் தராதோர்
துன்பப்படுவோன் முன்
போகமாய் வாழ்வோர்
தனிதனித்தேபோவர்
வறியவர்க்கு ஒன்றீவோன்
வள்ளல்
பகை இல்லோதோன்
வெற்றித்திருமகன்
நட்புக்கு அன்னமிடாதோன்
நண்பனில்லை
அவன் வீடும் மனையாகாது
செல்வங்கள் தேரின் சக்கரங்கள்
உருண்டு செல்பவை எப்போதும்
அளிக்கத்தெரியாதவன் அறிவிலி
தானே தனித்துண்போன் பாவி
கலப்பை உணவு தருவது
எங்கெல்லாமோ ஒடோடிச்
சென்று தலைவனுக்கு வளம்
மக்களே சேர்க்கிறார்கள்
வேதமறிந்தோன் உயர்ந்தோன்
அளிப்போன் அளிக்காதோனை
பகை கொளல் விலக்குக
ஒரு காலுள்ள க்கதிரோன்
இருகாலுள்ள மனிதனை க்கடந்துபோகிறான்
இருகால் மனிதனோ
கோலூன்றும் முக்காலோனை சேர்கிறான்
இரு காலோன் அழைத்தால்
நான்கு காலிகள்
ஐவர் கூடும் இடம் வந்து வருகின்றன
கைகள் இரண்டு
பார்க்கவே ஒப்பு பணியில் வேறு வேறு
ஒரே சமயம் ஈன்ற பசுக்கள்
பால் சமமாய்ப்பொழிவதில்லை
இரட்டைகள் சம வலிமை இல்லாதன
ஒருதாய் மக்களிருவவரின்
ஈகைக்குணம் வேறு வேறு ( ரிக்10/117)
யான் சொல்லின் செல்வி
வாக் தேவி
உண்பது காண்பது
செவியுறுவது சுவாசிப்பது
யாதுமாகிய நான்
அறிஞன் முனி
மேதையென யானே சமைகிறேன்
விண்ணைப்பிறப்பித்த
என் பிறப்பிடம் அறிவீரோ
சமுத்திரம் நடு அது
புவனம் எங்கணும் வியாபித்து
சொர்க்கம் தொடும்
யான் வாக்தேவி யாதும் படைத்தவள் ( ரிக் 10/125)
—————————————————–

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி