வேத வனம் விருட்சம் 65

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

எஸ்ஸார்சி



அப்போது புவியுமில்லை
வானுமில்லை
இறப்புமில்லை
நிலைப்புமில்லை
இரவில்லை பகலுமில்லை
இருள் எங்கும் இருள்
எங்கும் தண்ணீர்
வெப்ப சக்தி
தனியனாய்ச் சனித்தது
.காம இச்சை
முதலாய் முகிழ்த்தது
கவிகள்
அசத்துக்கும் சத்துக்கும்
இடைபயில் உறவைக்
கண்டார்கள்
படைப்பின் காரணம்
யார் அறிவார்
தேவர்கள் புவியுலகு பிறந்த
பின்னரே தோன்றினர்
உலகம் பின் எங்கிருந்து
வந்தது தெரிவார் யார்
எவரின் கடைக் கண்
உலகத்தை நடாத்துகிறதோ
அவரே படைப்பின் பொருள் அறிவார் ( ரிக் 10/129)

தேவர்களே தாழ்த்தப்பட்டோனை
உயர்த்துங்கள் மீண்டும்
பாவஞ்செதோனுக்கு
நீவிர் வாழ்வு தாரும்
சமுத்திரம் தாண்டிச்செல்லும்
காற்றுக்கள் இங்கே இரண்டு
வல்லமை தருவதொன்று
தீமை ஒழிக்குமாம் மற்றொன்று
காற்றே எமக்கு அவுடதமாய் வீசுக
நீரும் அவுடதமாகிப்பாய்க ( ரிக் 10/137)

வச்சிராயுதம் ஏந்தும்
இந்திரனே
மானிடவாழ்வுக்காய்
விருத்திரனைக் கொன்றவன் நீ ( ரிக்10/147)

ஆற்றலுடையோன் ஞானத்தால்
சூரியன் என்னும் பறவையை
தம் இதயத்தில் காண்கிறான்
கவிஞர்கள் சூரிய மண்டல நடுவே
அவனையேப்
புருடனாய்க்காண்கிறார்கள்
சூர்ய உபாசனைச்
செய்வோர் சூரிய மண்டலத்தை
ஔயாமல் நாடுகிறார்கள்
சூரியப்பறவை மனக்குகையில்
மொழியை ஏந்துகிறது
மொழி நடுவே உய்யும்
பிராணவாயு என்னும் கந்தர்வன்
செப்புகிறான் இப்படி
கவிஞர்களே தாமே மொழியைப்பாலிக்கிறார்கள் (ரிக்10/177)

கடுந்தவம் தந்தது
மெய் முனைப்பும் சத்தியமும்
இரவு பிறந்தது
கடுந்தவ உறுதியால்
கடலும் காலமும்
நிமிடமும் இவண் நிலைபெற்றன
படைக்கும் பிரமனே
சூரியனை நிலவை விண்ணை
மண்ணை ஒளியை
வளியைத்தந்தான் ( ரிக் 10/190)

அக்கினி உயிருடை
அனைத்தோடும் அய்க்கியப்படுவோன்
நண்பன் வளம் வழங்கி
எமக்கு ச்செல்வம் தருவோன்
மனங்கூடிப்பின் ஒன்று சேருங்கள்
பேசுங்கள் ஒன்றாய்
தேவர்கள் வேள்வியின் பாகம்
ஒற்றுமையாய்ப் பகிர்வதுபோலே
ஆகுகவே உங்கட்கும்

சபம் சமமாகி
சபை சமமாகி
மனம் சமமாகி
மந்திரம் சமமாகி
வேள்விக்கு அளித்தல் சமமாகிச்
சங்கற்பங்கள் சமமாகி
இதயங்கள் சமமாகி
எண்ணங்கள் சமமாகி
இன்பங்கள் துய்ப்பதுவும்
இவண் சமமே ஆகுக ( ரிக் 10/191 )
———————————————————————–

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி