ஜடாயு
முந்தைய பகுதிகள்:
// கேள்வி 9 : தங்கள் விமர்சனத்தில் சித்தம் என்பதும், மனம் என்பதும் ஒன்றே என்ற பொருளில் மனம் போன போக்கில் என்று அர்த்தம் செய்துள்ளீர்கள். இரண்டும் ஒன்றே என்று கருதுகிறீர்களா? வேறு வேறு என்பதை நிஜமாகவே அறிவீர்களா இல்லையா? //
யோக மொழியில் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இந்த நான்கிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி அறிவேன். அந்த சந்தர்ப்பத்தில் “சித்தத்திற்கு இசைந்த படி” என்பதை “மனத்துக்கு இசைந்த படி” என்று சொன்னாலும் பொருள் மாறப் போவதில்லை. “மனம் போன போக்கில்” என்ற எனது பயன்பாடு தவறு தான்.
// கேள்வி 10 : சித்தர்கள் பற்றிய உங்கள் செய்தியும் முழு உண்மையல்ல. வேதத்தை முற்றிலுமே ஏற்காமல் புறக்கணித்த, பழித்த, இழிவுபடச் சொல்லி பாடிய சித்தர்கள் பாடல்கள் உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? அந்த சித்தர்கள் வேதாந்திகளா? சித்தாந்திகளா? என்று எப்போதாவது யோசித்ததுண்டா? சித்தி பெற்ற ஒருவருக்கு ஏற்படும் சித்தி வேதப் பிரமாணங்களை அறிந்து சொல்லுவதால் அல்லது ஒப்புக் கொள்வதால் ஏற்பட்டதா? அல்லது சுய அனுபவத்தால் எட்டப்படுகிறதா? சித்தர்களின் சுய அனுபவம் எதனால் எட்டப்படுகிறது?//
வேத பிரமாணம் என்பதன் பொருளை முந்தைய பதில் ஒன்றில் சொன்னபடி புரிந்து கொள்கிறேன். எனவே, இந்த “புறக்கணித்த, பழித்த, இழிவுபடச் சொல்லிய” விஷயங்கள் எல்லாம் தூய வேத *ஞானத்தை* மறுத்து அல்ல, வேதத்தை வெறும் வெளியுரையாகவும், நூலறிவாகவும் மட்டுமே எண்ணி அதிலேயே அமிழ்ந்து விடுவதைக் குறித்து தான் கூறப்பட்டது. ஓங்காரத்தையும், பிராணாயாமத்தையும், தியான முறைகளையும், அஷ்டாங்க யோகத்தையும் சித்தர்கள் கைக்கொள்ளத் தானே செய்தார்கள்? அவை வேத, வேதாந்த மரபில் இல்லாமல் வேறு எங்கிருந்து வந்தன?
நிந்தை போன்று தொனிக்கும் இத்தகைய வாக்குகள் ஒருவிதமான முழு நிராகரிப்பு நிலையில் ஞானிகள் பாடியவை (யோக மொழியில் “நிவ்ருத்தி”). இந்த நிலை பற்றிய தத்துவக் கருத்தின் மூலமும் வேதத்திலிருந்தே தோன்றியது.
முண்டக உபநிஷதம் 1.5 கூறுகிறது –
“ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள், ஸ்வரங்கள், சடங்குகள், இலக்கணம், மொழி, யாப்பு, வானவியல், ஜோதிஷம் இவை அனைத்தும் சாதாரண அறிவே (அபரா வித்யா). அழிவற்ற பரம்பொருளை அடையும் அறிவே உயர் அறிவு (பரா வித்யா”)”.
உபநிஷத்தில் பின்னர் இந்தக் கருத்து மிகவும் விரிவாகப் பேசப் படுகிறது. இதே கருத்து கீதையில் சாங்கிய யோகத்திலும் (அத்யாயம் 2) வருகிறது : “எங்கும் நீர்ப் பெருக்கெடுத்திருக்கையில் கிணற்றுக்கு என்ன அவசியமோ, அதே போன்று தான் பிரம்மத்தை உணர்ந்த ஞானிக்கு வேதங்களும்”.
“நான் சைவமும் அல்ல, சாக்தமும் அல்ல,
ஐந்து இரவுகள் திருமாலை வழிபடும் வைணவமும் அல்ல,
எனக்கு வேதமும் இல்லை, வேள்வியும் இல்லை,
ஆசாரமும் இல்லை, தவமும் இல்லை
சிதானந்த ரூபம் சிவம் நான் சிவம் நான்”!
(ஆத்ம ஷட்கம், ஆதிசங்கரர்)
வேதநெறி தழைக்க வந்த ஆசாரியார் தான் இப்படியும் பாடியுள்ளார்.
“வேதங்களின் சிறப்பு என்ன” என்று கேட்டபோது சுவாமி விவேகானந்தர் “தங்கள் போதனையையும் கடந்து செல்லவேண்டும்’ என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்ற சாஸ்திரம் அது ஒன்றே… புனித நூல்கள் குழந்தை உள்ளத்திற்கே, நீ வளர்ந்ததும் அவற்றையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்கின்றன வேதங்கள்” என்கிறார்.
வேதநெறி உருவாக்கிய இந்தக் கலாசாரம் ஆழப் பதிந்திருந்ததனால் மட்டுமே, சித்தர்கள் இந்த தேசத்தில் வெறுக்கவோ, ஒதுக்கவோ, இழிக்கவோ படவில்லை. அவர்களது நிவ்ருத்தி மார்க்கம் ஏற்றுக்கொள்ளப் பட்டது, அவர்கள் வணங்கப் பட்டார்கள். எந்த எழுத்தறிவும், வேதக் கல்வியும் இல்லாத ஸ்ரீராமகிருஷ்ணர் அவதார புருஷராக வணங்கப் பட்டார். (16-ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக் கால ஐரோப்பாவில், கிறிஸ்தவ பைபிளில் இருப்பதற்கு மாறாக “பூமி சூரியனைச் சுற்றுகிறது” என்கிற அறிவியல் உண்மையைக் கூறியதற்காக விஞ்ஞானி கலிலியோவுக்கு வாடிகன் திருச்சபை பல கடுமையான தண்டனைகள் விதித்து அவரை வீட்டுக் காவலில் வைத்தது ; பல விஞ்ஞானிகள், கலைஞர்கள், அறிஞர்கள் திருச்சபையைக் கண்டு அஞ்சி நடுங்கி, ஒளிந்து வாழ்ந்தனர் என்பதை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்).
// கேள்வி 11 : தெந்நாட்டுக் கோயில்கள் ஆகம அடிப்படையில் கட்டப்பட்டது போல், வட நாட்டுக் கோயில்கள் அமையாமைக்கு என்ன காரணம்? //
ஏனென்றால் வடநாட்டுக் கோயில்கள் அவற்றிற்கென்று உரிய முறையில் கட்டப் பட்டிருக்கின்றன. கோயில் அமைப்பு என்பது ஆகமம் (சமயக்கொள்கைகள்), சிற்ப சாஸ்திரம் (கட்டிடக் கலை) இரண்டும் இணைந்து உருவானது. சிற்ப சாஸ்திரம் நான்கு கோயில் அமைப்பு முறைகள் உள்ளதாகக் கூறுகிறது – திராவிடம் (தென்னிந்திய கோபுர,விமான பிராகார அமைப்பு), நாகரம் (வட இந்திய அகன்ற கூம்பு வடிவ சிகரம், விமானம் ) வேசரம் (ஒரிஸ்ஸா, வங்காள கோயில்கள்), கூர்ஜரம் (பென்சில் சீவியது போல கூரிய முனை கோபுரம்). பூரியின் ஜகன்னாதர், புவனேஷ்வர் லிங்கராஜர், கொணார்க் சூர்யபகவான் கோயில்களின் அதி அற்புதமான நுணுக்கங்கள் கொண்டவை. இவை அந்தப் பிரதேசத்தில் புழக்கத்தில் இருந்த சைவ, வைணவ ஆகமங்களையும், சிற்ப சாஸ்திரத்தையும் இணைத்து அமைக்கப் பட்டவை என்று கொள்வதே சரியாக இருக்கும். ஏன், தென்னாட்டிலேயே கூட கேரளக் கோயில்கள் ஒரு தனி அமைப்பு கொண்டுள்ளன. கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் இவை அனைத்திலும் பொதுவாக உள்ள அம்சங்களையும் (விமானம், வாகனம், கருவறை, பிராகாரம்) நாம் கண்டறியலாம்.
இந்த வேறுபாடுகள் இந்து கலை மற்றும் கலாசாரத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்றன. கட்டிடக் கலை வேறுபட்டிருப்பதாலேயே ஆதாரமான சமய நம்பிக்கையும், தத்துவச் சார்பும் மாறுபட்டு விடுமா? Is it right to say they belong to different religions because Russian Orthodox Church looks different from Scottish Orthodox Church?
அதுவும் தவிர, வேதாந்த தத்துவத்தில் (சொல்லப் போனால் எந்த தத்துவ தரிசனத்திலும்) கோயில்கள் என்பவை மையமான விஷயம் அல்ல. ஆத்ம ஞான சாதனமாகிய பக்தியோகத்தில் “கோயில்” என்பது ஒரு அங்கம், அவ்வளவே.
// கேள்வி 12 : வட நாட்டுக் கோயில்களில் பின்பற்றப்படும் பூசை முறை வைதீகமா? ஆகமநெறியா? //
வடநாடு என்று ஒற்றைப் படையாக கிழக்கு, மேற்கு, வடக்கு பாரதக் கோயில்களின் எல்லா பூஜை முறைகளையும் அடக்கி விட முடியாது. பல சமூகத்து பூசாரிகளும் பங்குபெறும் பூரி ஜகன்னாதர் கோயில் பூஜை முறையை விளக்குவதற்கே ஒரு தனி புஸ்தகம் எழுத வேண்டும் – அவ்வளவு elaborate ஆன சமாசாரம் அது. மேலும், பல வடபாரதக் கோயில்கள் முஸ்லீம் படையெடுப்பில் மண்ணோடு மண்ணாகி விட்டதால், அவற்றின் புராதன, தனிப்பட்ட பூஜை முறைகள் பற்றிய முழுமையான தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. அவை மீட்கப் பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்ட போது ஏற்பட்ட முறைகளே இன்று காணக்கிடைப்பவை. இவை பெரும்பாலும் ஆகம, வைதீக முறைகளின் கலவை. பக்தி இயக்கம் பிரவாகம் எடுத்து ஓடியதன் விளைவாக, “முறை”களைத் தாண்டி மூலவிக்கிரத்தைக் கட்டியணைத்து முத்தமிடும் பக்திப் பெருக்கையே பெரும்பாலான கோயில்களில் காணமுடியும்.
ஒவ்வொரு கோயிலின் மரபுகளையும், சம்பிரதாயங்களையும் பொறுத்து பூஜை முறை ஆகமம், வைதீகம், தாந்திரீகம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அடங்கியதாகவே இருக்கும். இவை மூன்றுமே இந்துமதத்தில் அங்கீகரிக்கப் பட்டவை தான். உதாரணமாக, வங்காளம், அஸ்ஸாம், கேரள தேவி கோயில் பூஜை முறைகள், பெரும்பாலான குலதெய்வக் கோயில் வழிபாடுகள் இவையெல்லாம் தாந்திரிக முறையின் கீழ்வரும். இந்த முறைகளைப் பயில்வதற்கு சாஸ்திரங்கள் எந்த குல, வர்ணக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்பதும் கருத்தில் கொள்ளத் தக்கது.
சக்தி என்றே ஒரே தேவதையை அடிப்படையாக வைத்து எத்தனை விதமான ஐதிகங்களையும், பூஜை முறைகளையும், தாந்திரீக சாதனைகளையும் சாக்த வழிபாட்டினர் உருவாக்கியிருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். இவற்றை வைத்து ஒவ்வொரு பூஜை முறைக்கும் அடிப்படையாக தனித்தனி ஆதார தத்துவம் இருக்கிறது வாதிடுவது அர்த்தமற்றது. இவற்றை ஆராய்ந்து பார்த்தால் அதன் மூலம் அனைத்தும் வேதங்கள், வேதாந்த தத்துவம், சாக்த மரபின் ஆதார நூலான தேவி மகாத்மியம், லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றிலிருந்தே உதிப்பது புலனாகும்.
மேலும், ஆதார தத்துவங்களை ஆராய்வதற்கு மிகத் தெளிவான, விஞ்ஞான பூர்வமான வழிமுறைகள் உள்ளன. பூஜை முறைகள் என்ற விஷயம் தத்துவம்->சமயம்->சடங்குகள்->பிரதேச வேறுபாடுகள் என்று பல படிகள் தாண்டியே அதனுடன் தொடர்பு கொள்கிறது.
// கேள்வி 13 : ஆதி சைவர்கள் எனப்படும் சிவாச்சாரியர்களும், வைதீக பிராமணர்களும் ஒரே சமூகமா? வேறு வேறா? கொண்டும் கொடுத்தும், சரளமான சம்பவங்கள் நிகழ்கின்றனவா? ஆதி சைவர்கள், மூலஸ்தானத்தில் உள்ளே வந்து வைதீகப்
பிராமணர்கள் (சங்கராச்சாரியார் உட்பட) பூஜை செய்வதை காலம் காலமாக எதிர்ப்பதற்கு என்ன காரணம்? //
முதலில், இரு பரம்பரை புரோகித சமூகங்களுக்கிடையேயான சமூகப் பிணக்கு பற்றிய இந்தக் கேள்வி இங்கே எதற்காக என்றே எனக்குப் புரியவில்லை. இந்த இரு சமூகங்கள் தான் வேதாந்தம், சைவசித்தாந்தம் ஆகியவற்றின் பிரதிநிதிகளா?
வேதாந்தம் என்பது ஒரு *தத்துவப்* பிரிவு, அது ஒரு சாதிக் கருத்தாக்கம் அல்ல. மிகப் பெரிய வேதாந்த ஞானிகளான சங்கரர், பிரம்மசூத்திரம் தந்த வியாச மகரிஷி, கீதை அருளிய கிருஷ்ணன், சுவாமி விவேகானந்தர், நாராயண குரு, சுவாமி சித்பவானந்தர், சுவாமி சின்மயானந்தர் ஒவ்வொருவரும் பற்பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள். ஏன், வெளிநாட்டவர் கூட வேதாந்திகளாகி இருக்கிறார்கள்.
சைவசித்தாந்தமும் அப்படியே, அதுவும் எந்த சாதியின் சொத்தும் அல்ல. ஹவாய் தீவில் மிகப் பெரிய ஹிந்து ஆசிரமம் மற்றும் சிவன் கோவிலை நிறுவிய, சில வருடம் முன்பு மகாசமாதி அடைந்த சத்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி பிறப்பால் ஒரு அமெரிக்கர்.
அதிலும் குறிப்பாக, வேதாந்தம் வைதீக புரோகித பிராமணர்கள் என்கிற குழு தூக்கிப் பிடித்த தத்துவம் அல்லவே அல்ல. இந்து மதத்தின் ஆறு தரிசனங்களில் (தத்துவப் பிரிவுகளில்) பூர்வமீமாம்சம் என்பதே கர்மகாண்டத்தை உயர்த்திப் பிடித்த புரோகித வர்க்கத்தின் தத்துவத்தரப்பு. அதை விவாதத்தில் வென்று வளர்ந்தது உத்தர மீமாம்சம் ஆகிய வேதாந்தம். புரோகிதரான மண்டன மிஸ்ரருக்கும், வேதாந்தியான சங்கரருக்கும் இடையிலான புகழ்பெற்ற விவாதம் பற்றி சங்கரரின் வரலாற்றில் கூறப்படுவது பற்றித் தாங்கள் கட்டாயம் அறிந்திருப்பீர்கள்.
(எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து மரபில் ஆறு தரிசனங்கள்” என்ற நூல், இந்து தத்துவப் பிரிவுகளைப் பற்றிய விரிவான அறிமுகத்தைத் தருகிறது).
// கேள்வி 14 : சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கும் தமிழில் மட்டுமே எழுதப்பட்டனவே ஏன்? தமிழில் மட்டுமே எழுதப்பட்ட சித்தாந்த சாஸ்திரத்தை தெற்கின் கொடை என்பதா? வடக்கின் கொடை என்பதா? //
தமிழ்நாட்டில் செழித்து வளர்ந்த மரபு என்ற சிறப்பு சைவசித்தாந்தத்திற்குக் கண்டிப்பாக உண்டு : அதை நான் மறுக்கவே இல்லை. நாயன்மார்களைப் பற்றி பிறமொழி நண்பர்களுக்கு நான் எடுத்துரைக்கையில் “தமிழ் சைவம்” (Tamil Saivism) என்கிற சொல்லாட்சியையே பயன்படுத்துகிறேன். ஆனால் சித்தாந்தம் என்பது வேறு எதனோடும் தொடர்பு இல்லாத (குறிப்பாக வடக்கோடு) ஏதோ ஒரு “தனி”சைவம் என்கிற கருத்து மட்டுமே எனக்கு சிறிதும் ஏற்பில்லாதது. இந்த சாத்திரங்களை உருவாக்கியவர்களே திருக்கயிலாய குருபரம்பரை என்று தான் கூறுகிறார்கள்.
கர்நாடக வீரசைவம், காஷ்மீர சைவம், வடநாட்டு சித்த சைவம், வங்காள சைவம், தமிழ் சைவ சித்தாந்தம் இந்த அனைத்து சமயப் பிரிவுகளும் அடிப்படை தத்துவ அளவில் அனேகமாக ஒன்று போலவே இருக்கின்றன, சில சிறு வித்தியாசங்கள் தவிர்த்து.
மேலும், அனைத்து தமிழ் சித்தாந்த சாத்திரங்களிலும் உள்ள 95% தத்துவச் சொற்கள், சம்ஸ்கிருதச் சொற்கள். முக்தி, கர்மம், மாயை, சம்சாரம் (பிறவி), பசு, பதி, பாசம், ஆன்மா, சீவன் போன்ற ஒவ்வொரு சொல்லும், அந்த சொல்லின் பின் நிற்கும் கருத்தாக்கமும், வேத, உபநிஷத காலம் தொடங்கி, இந்தியா முழுவதும் எல்லா தத்துவ விவாதங்களிலும், எல்லா சமயவாதிகளாலும் எடுத்தாளப் பட்டவை. அவை திடீரென்று எங்கிருந்தோ முளைத்தவை அல்ல. இத்தகைய ஒரு பொதுவான தத்துவ அடித்தளம் இருப்பதால் தான், சிவஞான சித்தியார் போன்ற நூல்கள் சுபக்கம் (தன் தரப்பு), பரபக்கம் (பிற தரப்பு) என்று அனைத்து தத்துவங்களையும் ஒரு systematic முறையில் விவாதிக்கின்றன. இந்த விவாத முறையே சம்ஸ்கிருத தர்க்க சாஸ்திர நூல்களின் அடிப்படையில் அமைந்தது தான். ஆகமங்கள் அனைத்தும் இருப்பதும் சம்ஸ்கிருத மொழியில் தான். அதனால் சைவ சித்தாந்தத்தில் “வடக்கின்” பங்களிப்பு இல்லை என்று சொல்வதற்கு சிறிது கூட ஆதாரம் கிடையாது.
// கேள்வி 15 : வேதத்தில் தென்னாட்டைச் சேர்ந்த ரிஷிகள் பாடிய வேத சுலோகங்கள் எவை? எவை? வேத மொழியும், சமஸ்கிருதமும் வடக்கே தோன்றியதா? தெற்கே தோன்றியதா? //
(அ) வேத ரிஷிகள் வாழ்ந்த இடங்கள் பற்றிய எந்த விவரமும் நமக்குக் கிடைக்கவில்லை. மிக மிகப் புராதனமான வரலாறு அது. பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப் படும் கருத்து வேதங்கள் சிந்து மற்றும் (பின்னாளில் வறண்டு விட்ட) சரஸ்வதி நதிக் கரைகளிலும், கங்கை , யமுனைப் பகுதிகளிலும் (சில யஜுர்வேத சூக்தங்கள்) உருவாகியிருக்கலாம் என்பது. மிகக்கடினமான வரலாற்று ஆராய்ச்சிப் புதிர்கள் இவை. உதாரணமாக, ரிக்வேத ரிஷி அகஸ்தியர், ராமாயணத்தில் ராமனை ஆசிர்வதிக்கும் அகஸ்தியர், புராணத்தில் விந்திய மலையைத் தாண்டும் அகஸ்தியர், தமிழ் இலக்கணம் எழுதியதாகச் சொல்லப் படும் அகஸ்தியர் இப்படி ஒரே பெயரில் உள்ள ரிஷியைப் பற்றி பல வரலாறுகள், மரபுகள் உள்ளன. வருங்கால ஆராய்ச்சிகளில் தென்னகத்திலும் வேதரிஷி இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கலாம். யாரே அறிவர்?
(ஆ) வேதமொழியாகிய ஆதி சம்ஸ்கிருதம் தோன்றிய இடமும் மேற்சொன்ன நதிக்கரைகளே. ஆனால், மிகப் பழங்காலம் எனப் படும் தொல்காப்பிய காலம், சங்க இலக்கிய, சிலப்பதிகார காலத்திலேயெ சம்ஸ்கிருத மொழியும், அதன் சொற்களும் தமிழில் புழங்கத் தொடங்கி விட்டன.
ஆனால், இதற்கும், நாம் பேசும் பொருளுக்கும் என்ன தொடர்பு என்றே புரியவில்லை.
தென்னாட்டில் வேதாந்தம் என்கிற தத்துவம் மிக ஆழ வேரூன்றியிருந்ததாலேயே அத்வைதம், விசிஷ்டாட்வைதம், த்வைதம் ஆகிய மூன்று பிரிவுகளை உருவாக்கியவர்களும் தென்னாட்டிலேயே தோன்றினர் என்று நான் குறிப்பிட்டேன், இது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. வரலாற்றுப் படி ஆதி சங்கரரின் காலம் கி.பி.6-7ஆம் நூற்றாண்டு. சித்தாந்த சாஸ்திரங்களின் காலம் கி.பி 10-11 ஆம் நூற்றாண்டுகள்: சைவசித்தாந்தம் முழுமையான தத்துவப் பிரிவாக ஆகியது இந்தக் காலகட்டத்தில் தான். ஸ்ரீராமானுஜரின் காலமும் இதை ஒட்டியே.
அதனால் இந்தத் தத்துவப் பிரிவுகளின் வளர்ச்சி பற்றிப் புரிந்து கொள்வதற்கு நாம் வேதரிஷிகள் வரையெல்லாம் போகவேண்டியதே இல்லை.
// கேள்வி 16 : வைதீக பிராமண குலத்தில் பிறந்த ஞானசம்பந்தர் தன்னை நற்றமிழ் ஞானசம்பந்தர் என்றும், தமிழ் ஞான சம்பந்தன் என்றும் கூறிக் கொண்டதற்குச் சிறப்பான காரணம் ஏதும் உண்டா?//
இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? தமிழ்நாட்டில் பிறந்த பிராமணர் தமிழர் இல்லையா, அவர் தெலுங்கர் ஆகி விடுவாரா? சம்பந்தருக்கு எத்தனையோ நூற்றாண்டுகள் முன்பு அந்தணாளர் கபிலர் சங்க இலக்கியம் எழுதவில்லையா?
தமிழும், வைதீகம்/வேதமும், பிராமணர்களும் ஒன்றுக்கொன்று விரோதமானவை என்று கண்டிப்பாக நான் நினைக்கவில்லை. ஒரு மரியாதைக்குரிய ஆன்மிக சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர் ஆகிய தாங்களும், சாதி துவேஷத்தையும், நாஸ்திகத்தையும், வரலாற்று ஆராய்ச்சியில் தூக்கி எறியப் பட்டுவிட்ட பொய்யான ஆரிய திராவிட இனவாதக் கொள்கைகளையும் பரப்பும் அரசியல் கட்சிகளின் பார்வையில் நின்று இதனை அணுகமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதனால் இந்தக் கேள்வி ஏன் என்றே எனக்குப் புரியவில்லை.
“நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்” என்றும் தன்னை சம்பந்தர் சொல்லிக் கொள்கிறார். வேதம் ஓதும் கௌண்டின்ய கோத்திரத்தில் பிறந்தவர் என்று அவரை விளித்து “சீரார் சண்பைக் கவுணியர் தம் தெய்வ மரபிற் திகழ் விளக்கே” என்று வள்ளலார் பாடுகிறார்.
தமிழ், வேதம் இரண்டையுமே தன் இரு கண்களாகவும் போற்றியவர் ஞானசம்பந்தர். மற்ற சைவப் பெருந்தகைகளும் அப்படியே.
(தொடரும்)
http://jataayu.blogspot.com/
- துய்ப்பேம் எனினே தப்புந பலவே – வாழ்க்கை இதுதான்!
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 3
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 4
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(2) (முற்றும்)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 25 விலகிச் செல்லாது விதி !
- தாகூரின் கீதங்கள் – 37 மரணமே எனக்குச் சொல்லிடு -2 !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 13 (சுருக்கப் பட்டது)
- திருமதி. “ரத்திகா” அவர்களின் கவிதைநூல் வெளியீடு நிகழ்ச்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேபி பிரபஞ்சத்தைப் பின்னிய அகில நாண்கள் (Cosmic Strings) (கட்டுரை: 32)
- மாயமாய்ச் சூலுற்ற தூயமாது!
- அபார்ட்மெண்ட் அட்டகாசம்!!!
- கவிதைகள்
- Last kilo byte – 18 மும்பை அரங்குகளில் தமிழ்படங்களும், முகங்களும்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(1)
- தழல் ததும்பும் கோப்பை
- சீனாவின் ஆக்கிரமிப்பு திட்டங்கள் – நரேந்திரன் கட்டுரை
- Launching of Creative Foundation
- உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா
- பைரவர்களின் ராஜ்ஜியம்!
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 25. ந.சிதம்பரசுப்பிரமண்யம்
- ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம் – இலக்கிய வடிவங்கள்
- நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்
- மானுடத்தைக் கவிபாடி…
- பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்
- தூக்கத்தோடு சண்டை
- தன்னுடலை பிளந்து தந்தவள்