வேண்டாமா இந்தியா ?

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

காஞ்சனா தாமோதரன்


Say ‘No ‘ to Unemployment

Say ‘No ‘ to India

வடமேற்குப் பஸிஃபிக் பகுதியின் ஸியாட்டில் நகருக்குச் சமீபத்தில் தொழில் நிமித்தமாய்ப் போயிருந்தேன். விமான நிலையத்துக்குத் திரும்பும் வழியில் ஒரு சிறு கூட்டம் எதிர்ப்புக் கோஷத் தட்டிகள் சகிதமாய்க் கடந்து போனது. ‘இந்தியா ‘ என்ற வார்த்தை கண்ணுக்குத் தட்டுப்பட்டதும் மீண்டும் திரும்பிப் பார்த்தேன். ‘வேலையில்லாத் திண்டாட்டம் ‘வேண்டாம் ‘ என்று சொல்: இந்தியா ‘வேண்டாம் ‘ என்று சொல் ‘.

என்னுள் ஏதோ சங்கடம் நெளிந்தது. அமைதியாய் நடக்கும் கூட்டத்தினரைக் கார்ச் சன்னல் வழியே கவனித்தேன். பல சமூக மட்டங்களையும் வயதுப் பகுப்புகளையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும். கழுத்தில் புடைக்கும் நரம்புகள். தட்டிக் கம்புகளைச் சுற்றி இறுகும் விரல்கள். அமைதிக்கு அடியே புரளும் நிச்சயமின்மை. பயம்.

ஸியாட்டில் விமானநிலையம் எப்போதும் போல் நிரம்பி வழிந்தது. மைக்ரோஸாஃப்ட்டின் தலைநகரப் போக்குவரத்தாயிற்றே. கண்ணில் உலக வரைபடமும் கையில் குறும்பேசியும் உதட்டோர இயந்திரக் கட்டளையும் உறையிட்ட லேப்டாப்புமாய், பில் கேட்ஸின் இளம் பரிவாரங்கள் அங்குமிங்கும் விரைந்து கொண்டிருந்தார்கள். எதிர்ப்புக் கூட்டத்தில் பார்த்த முகங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தன.

Say ‘No ‘ to Unemployment

Say ‘No ‘ to India

அமெரிக்கத் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒரு பகுதி புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறது. வெகுவாக இந்தியாவுக்கு. அடுத்ததாகச் சீனா, ரஷ்யா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு. இதனால் அமெரிக்காவில் உள்ளவர்களில் — வேலைக்காக வந்த அயல்தேசத்தவர் உள்பட — ஒரு பகுதியினர் வேலை இழக்கிறார்கள்.

சில சிறு அமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள் முன்பே வெளிநாடுகளில் செயல்பட்டு வந்திருக்கின்றன. இப்போது மைக்ரோஸாஃப்ட் மற்றும் மைக்ரோஸாஃப்டை மிஞ்சக் காத்திருக்கும் ஆரக்கிள் போன்ற நிறுவனங்களும் தமது இந்தியக் கிளைகளை விரிவாக்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் பல நிறுவனங்கள் ‘இந்திய வளர்ச்சி மையம் ‘ என்று ஒரு தனிப் பிரிவை உருவாக்கி, இந்தியாவில் கிளை பரப்பும் நாளை எதிர்நோக்கியிருக்கின்றன.

இந்திய நிறுவனங்கள் சிலவும் வெளிநாடுகளில் பல காலமாய்ச் செயல்பட்டு வருகின்றன. டாட்டா கன்சல்டன்ஸி, விப்ரோ, இன்ஃபோசிஸ், எச்.ஸி.எல். போன்றவை நிரல் எழுதுவது முதல் கணினிக் கட்டமைப்புப் பாதுகாப்பு வரையிலான பல வேலைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முடித்துக் கொடுப்பதில் பெயர் பெற்றவை; இந்தத் தளத்தில் பிற உலக நிறுவனங்களுடன் ஆரோக்கியமாகப் போட்டியிடும் பலமுள்ளவை.

அமெரிக்க மண்ணிலிருந்து இந்தப் பணிகள் இடம் பெயர்தலுக்கு முக்கியக் காரணம் சம்பளச் செலவுக் கட்டுப்பாடு. இன்றைய மந்தப் பொருளாதாரச் சூழல் விலைக்குறைப்பை நிர்ப்பந்திக்கிறது; எனவே, உற்பத்திச் செலவைக் குறைப்பதன் மூலம் லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வழிகளை நிறுவனங்கள் தேடுகின்றன. இந்தியா போன்ற மனிதவளமும் தொழில்நுட்ப முன்னேற்றமும் உள்ள நாடுகள் முக்கியமாகின்றன. பெங்களூரில் நிரல் எழுதுபவருக்கான சம்பளம் அமெரிக்காவில் உள்ளவரின் சம்பளத்தில் கால்வாசி. மேலும், இந்தத் துறையின் உச்சகட்ட காலத்தில் இங்கு வேலைக்காக வந்த இந்திய (மற்றும் பல அயல்நாட்டு) வல்லுநர்களின் திறமையும் நம்பகத்தன்மையும் எல்லாரும் அறிந்தவை. இன்றைய அதிவேகத் தொடர்புகளும் மென்பொருள்களும் உலகளாவிய குழுக்கள் சேர்ந்து வேலை பார்ப்பதை எளிதாக்கி விடுகின்றன.

மென்பொருள், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், வர்த்தக இயங்குமுறைகள் (business processes: சரியான கலைச்சொல்லாக்கம் என்ன ?) ஆகியவற்றின் எல்லைக்கோடுகள் மங்கி வரும் காலம் இது. பெரிய அமெரிக்க நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பம் மூலம் தங்களது ஒரு வர்த்தகச் செயல்பாடு முழுதையுமே வெளிநாட்டுக்கு அனுப்புவதும் உண்டு. இத்தகைய ஒரு வர்த்தகச் செயல்பாடுதான் அழைப்பு மையம் ( ‘கால் சென்டர் ‘). அமெரிக்கப் பெருநிறுவனம் ஒன்றின் நுகர்வோர் பிரிவுக்கான கேள்வியுடன் தொலைபேசினால், அமெரிக்க ஆங்கிலத்தில் அமெரிக்கத் தன்மையுடன் பதிலளிப்பவர் பெங்களூர் அல்லது மும்பை அழைப்பு மையத்தில் பணியாற்றும் இந்தியராய் இருக்கலாம். அலுவலகப் பின்கட்டுப் பணிகள் (back office) எனப்படும் பலவற்றில் அழைப்பு மையமும் ஒன்று. ஜெனரல் எலெக்ட்ரிக் போன்ற அமெரிக்கப் பெருநிறுவனங்கள் பல ‘பின்கட்டுப் ‘ பணிகளை இந்தியாவிலிருந்தே நடத்துகின்றன. காப்பீடுகளை மதிப்பிடுதல், கடன் நம்பகத்தன்மை மதிப்பீடு, கடன் உத்தரவாதம் முதலிய முக்கியமான பணிகள் இவற்றுள் அடக்கம்.

அமெரிக்கத் தகவல் தொழில்நுட்ப வேலைகள் பிற தேசங்களுக்குப் போவது பற்றிப் பல எதிர்வினைகள் கிளம்பியுள்ளன. வலதுசாரி ‘ரிப்பப்ளிக்கன் ‘ கட்சியினர் கொள்கையளவில் பெருநிறுவன வர்த்தகத்தை ஆதரிப்பவர்களாய் இருந்தாலும், அமெரிக்கப் பொருளாதாரம் பலவீனப்படுகிறது என்ற அடிப்படையில் இதை எதிர்க்கிறார்கள். எதிர்க்கட்சித் தாராளவாதிகளான ‘டெமோக்கிராட்டு ‘களும் வேலைக்குறைப்புப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்–கொள்கையளவில், பெருநிறுவன வர்த்தகத்தை அதிகம் ஆதரிக்காத கட்சி என்பதாலும். இங்குள்ள வாடிக்கையாள நிறுவனங்களில் அயல்நாட்டு நிறுவன வல்லுனர்கள் பயிற்சிக்கான எச்-1 விசா வழங்குவதை அமெரிக்க அரசு குறைக்க வேண்டும் என்ற குரல்கள் கேட்கின்றன. அமெரிக்க அரசு நிறுவனங்கள் தமது தகவல் தொழில்நுட்ப வேலைகளை அயல்நாடுகளுக்கு அனுப்புவதை எதிர்த்து, பல மாநிலச் சட்டமன்றங்களில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாளிதழ்கள் எதிர்த்தும் ஆதரித்தும் எழுதுகின்றன (பிறகு வேறு பிரச்சினைகளுக்குத் தாவி விடுகின்றன). தீவிரத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உரத்த விவாதங்கள் நடக்கின்றன. வர்த்தக மற்றும் பொது வார இதழ்கள் இந்தியாவின் சமீபத்திய பொருளாதார-சமூக மாற்றங்களை அலசுகின்றன; அங்கே மெர்ஸீடிஸ்-பென்ஸ் கார் வைத்திருப்போர் சதவிகிதத்தை வியக்கின்றன; சான் ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு அடுத்ததாகும் ‘இரண்டாம் சிலிக்கான் வேலி ‘யான பெங்களூரை வானளாவப் புகழ்கின்றன; அங்கே புடவை கட்டிப் பூக்கடையருகே நிற்கும் மென்பொருள் மேலாளர்களின் படங்களைப் பிரசுரிக்கின்றன.

எதிர்ப்புகளுக்கும் கருத்துக்களுக்கும் கட்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட தனியார் நிறுவனங்கள், அயல்தேசங்களுக்கு வேலைகள் அனுப்புவதைத் தொடர்கின்றன. வேலையைக் குறைந்த செலவில் எங்கு முடிக்க முடியுமோ அங்கு வேலைகளை அனுப்பி, மொத்தச் செலவைக் கட்டுப்படுத்தி, அந்தச் சேமிப்பின் மூலம் புதிய வேலைகளை உருவாக்குவதே தொலைநோக்கு என்பது இவர்கள் வாதம். உலக வர்த்தகத்தில் இது வரை தாண்டியதாய்ச் சொல்லி வந்த தேசீய எல்லைகள் இப்போது மட்டும் திடாரென்று முளைப்பதை இவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

வேலைகள் இவ்வாறு புலம் பெயர்வதற்கு மொழி மற்றும் கலாச்சாரப் புரிதலுள்ள தொழில்முறை உறவு, அயல்தேசத்தின் உள்நாட்டு அரசியல் நிலவரம், தனிநபர் தகவல்களின் அந்தரங்கம் பேணுதல், அறிவார்ந்த சொத்துரிமைப் பாதுகாப்பு முதலிய பலவற்றையும் மதிப்பிடுவதுண்டு. பொருளியல், சூழல், தகுதியுள்ள மனிதவளம் ஆகிய அனைத்து முக்கியப் பரிமாணங்களிலும் தற்போது முதலிடம் வகிப்பது இந்தியாவே என்கிறது ஏ.டி.கேர்ணி நிறுவனம். அடுத்ததாக வரும் ப்ரஸீல், மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகள் அந்த முதலிடத்தைப் பிடிக்கும் போட்டியில் விரைந்து கொண்டிருக்கின்றன. சூழலிலும் மனிதவளத் தன்மையிலும் சீனா இந்தியாவை விட மிக மிகத் தாழ்ந்த இடத்தில் இருப்பதாய் ஆய்வுகள் குறிக்கின்றன. ஆனால், சில இந்திய நிறுவனங்கள் இப்போதே தம் வேலைகளைச் சீனாவுக்கு அனுப்பும் அளவுக்குக் குறைந்ததாய்ச் சீனாவின் சம்பளக் கட்டமைப்பு இருப்பதாய்த் தெரிகிறது. (கவனிக்க!)

வெளியே அனுப்பப்பட்ட பணிகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு திருப்திகரமாகச் செய்யப்படாததால் இங்கேயே மீண்டும் திரும்பி வருவதாயும் கேள்வி.

ஆக, இப்போது என்பது மாற்றச் சுழலின் நடுவில் ஒரு புள்ளி. சமநிலை எப்போது ? எங்கு ? பொருளாதார வரலாற்றாளர்களுக்கு இந்த நிலை புதிதல்ல. 1970-களிலும் 1980-களிலும் பொருள் உற்பத்தி மையங்களைப் பிற நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் நகர்த்தின. கணிப்பொறித் துறையிலேயே, பெரும்பான்மைத் திண்பொருள்கள் தூரதேசங்களில்தான் தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றன. கணிப்பொறிகள் உள்படப் பல மின்னணுப் பொருள்களின் உற்பத்தி இன்று உலகம் முழுதும் சிதறிக் கிடக்கிறதே, அது போலவே–சம்பள அமைப்பு, திறமை, பண்பாடு+தொழில் கலாச்சாரப் பொருத்தம், சந்தை அருகாமை, வரிக் கட்டண அமைப்பு உள்படப் பலவற்றையும் கணக்கிலெடுத்து–மென்பொருள்-தகவல் தொழில்நுட்பத் துறைகளும் காலப்போக்கில் உலகமயச் சமநிலைக்கு வரக்கூடும்.

(எப்போதும் போல், அறம் சார்ந்த பல கேள்விகள் உண்டு. (1) புதிதாய் உருவாகும் உலகமய உற்பத்தி-விநியோகச் சங்கிலியில், அதன் கீழ்மட்டம் உள்பட எல்லா மட்டங்களும்/ தேசங்களும் முன்னேறுகின்றனவா ? எப்படி ? எவ்வளவு ? (2) கண்ணுக்குத் தெரியாத, கணக்கில் வராத இழப்புகள் ஏதும் இருக்கின்றனவா ? பாதிக்கப்படுவோர் யார் ? எப்படி ? எவ்வளவு ? (3) இதில் பங்கே பெறாதவர்களின் மீதான பாதிப்பு என்ன ? இன்னும் பல விஞ்ஞானரீதியான, பாரபட்சமில்லாத அலசல்களை நிபுணர்கள் நடத்துவது முக்கியம். இத்தகைய அலசல்கள் ஏன் தேவை ? ஒருவர் இழந்துதான் மற்றொருவர் பெற முடியும், எஞ்சுவது ஒன்றுமில்லை என்ற நிலையைப் பூஜ்யக் கூட்டுத்தொகை ஆட்டம் என்று கணிதத்தில் சொல்லுவார்கள் (zero-sum game). ஒரு தரப்பு மட்டுமே வெல்ல இயலும் சதுரங்க விளையாட்டு இதற்கு ஓர் எளிய உதாரணம். மொத்த மனிதகுல நாகரீகமும் சரித்திரமும் முன்னேற வழி செய்யும் பூஜ்யமல்லாத ஆட்டங்களைத்தான் ஆடிக் கொண்டிருக்கிறோமா என்று அவ்வப்போது நாம் அறிவுபூர்வமாக உறுதி செய்து கொள்வது நலம். தொழில்நுட்பம் உள்பட, எல்லா அறிவுத்துறைகளும் அவற்றின் பயன்பாடுகளும் சமூக அறவியலுடன் (ethics) கைகோர்த்து வளர வேண்டியவை.)

அடுத்து என்ன ? பல்கலைக்கழகப் பண்டித வட்டாரங்கள், வர்த்தக விற்பன்னர்கள், தீவிரப் பொது வாசகர்கள் ஆகியோர் வாசிக்கும் பல்கலைக்கழக ஜர்னலான ‘ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ ‘வில் ஒரு சமீபத்தியக் கட்டுரை தகவல் தொழில்நுட்பப் புரட்சி முடிந்து விட்டதாய் அறிவிக்கிறது (ஆசிரியர் குழுவின் கருத்து அல்ல). இத்தகைய பரந்த கூற்றுகளை அவற்றின் நாடகத்தன்மைக்காக அரைக் கணம் ரசிக்கலாம்; முழுதாய் ஒப்புக் கொள்ள இயலாது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஒற்றை அலையாகத்தான் நினைக்க வேண்டுமென்பதில்லை. அடுத்த அலையின் துவக்கங்களாகச் சில துளிகள் இப்போது தெரிகின்றன. தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், நானோடெக்னாலஜி ( ‘நுண்மைத் தொழில்நுட்பம் ‘ ? ?) ஆகிய மூன்று முக்கியத் துறைகளும் இணைந்து புதிய திசையொன்றை உருவாக்கும் சாத்தியம் உள்ளது. இன்னும் பல சாத்தியங்களும் இருக்கக் கூடும். தொழில்நுட்பவாதிகள் என்ன சொல்கிறார்களென்று காத்திருந்து பார்க்கலாம்.

அகல்தளத்துத் (macro-) தொழில்நுட்பப் பொருளாதார மாற்றங்களால் விளையும் நுட்பமான உணர்வுகளையும் இங்கே குறிப்பிட வேண்டும். தொழில்ரீதியாக எனக்கோ என் கணவருக்கோ மென்பொருள்-தகவல் தொழில்நுட்பத் துறையுடன் நேரடித் தொடர்பு கிடையாது. அங்கே நண்பர்கள் பலர் உண்டு. 1980-களில் இந்தியாவிலிருந்து இங்கு புலம்பெயர்ந்து, உயர்பதவியிலிருந்த மென்பொருளாளர்கள் சிலர் தம் வேலைகளைப் பறிகொடுத்தது, இங்கு அவர்களிடம் பயிற்சி பெற்றுத் திரும்பிச் சென்ற இந்தியக் குழுவினரிடம். தாயகத்தில் வேலைவாய்ப்புப் பெருகுவது பற்றி இவர்கள் எப்படிக் குறை சொல்ல ? இங்கு வேலையிழந்த பல தேசத்துக் குடும்பங்களையும் பார்க்கையில் வேதனைப்படத்தான் வேண்டியுள்ளது. தொடர்ந்து வேலைக்குறைப்பு நடக்கும் சூழலில், வேலைநீக்கம் இன்றோ நாளையோ என்று பயப்படும் மற்றும் வேலை கிடைக்காமல் தத்தளிக்கும் இளைஞர்களின் உணர்வுகளும் கோஷங்களும் புரிகின்றன–என் பிறந்த நாட்டிலும் புகுந்த நாட்டிலும் இத்தகைய காலகட்டங்களில் சிக்கி அழுந்திய அனுபவம் எனக்கும் உண்டு, மறக்கவில்லை. இவர்களுக்காகப் புதிய திசைகள் விரைவில் திறக்கட்டும்.

மறுபக்கமாக, ‘Say ‘No ‘ to India ‘ என்ற கோஷத்தைப் பார்த்துச் சங்கடப்படவும் செய்கிறது மனம். ஊக்கமும் திறமையும் கல்வித் தகைமையும் அறிவும் உள்ள பல கோடி இளைஞர்களைப் பிறப்பிக்கும் என் தாயகமும் காலத்துடன் வளர்வது இயல்புதானே. (இளைஞர் என்பதை இருபாற்சொல்லாகவே நான் பயன்படுத்துகிறேன்.) இன்று தாயகத்துக்குள்ளேயே இருக்கும் பல்வேறு வாய்ப்புகள் பற்றி அங்குள்ள எல்லா மட்டத்து இளைஞர்களுக்கும் புரிய வேண்டும். ‘வாய்ப்பு ‘ என்றால் பளபளக்கும் அலுவலகக் கட்டடங்களில் அமெரிக்க ஆங்கிலம் பேசிக்கொண்டு செய்யும் வேலை மட்டுமல்ல, உண்மையுடன் செய்யும் எல்லாத் தொழிலுக்கும் மதிப்புண்டு என்னும் அடிப்படைக் கலாச்சார மாற்றம் வர வேண்டும் (சராசரி அமெரிக்க மக்களிடம் பொதுவாக நான் கண்டு மதிக்கும் முக்கியமான குணம் இது). எல்லா மட்டத்து இளைஞர்களுக்குமான வாய்ப்பின்மை பற்றிப் பல்துறை அதிகார மையங்கள் ஆவன செய்ய வேண்டும்; பிரச்சினையின் பல பரிமாணங்களையும் புரிந்து, ஆழ அலசிக் கண்ட தீர்வைச் செயல்படுத்துவது நிர்வாகத் திறமை; அரசாட்சி/ அரசாங்கம் என்பது நிர்வாக அமைப்பன்றி வேறென்ன ?

வெளியிலிருந்து உள்ளே வரும் வாய்ப்புகளால் தாயகம் பயனடைவது இயல்பு. ஆனால், உள்ளார்ந்த பலங்களையும் வளர்ச்சியையும் விரித்து நிலைப்படுத்திக் கொள்ளுவதே தொலைநோக்கு. வளர்ச்சியின் பயன்கள் சமூகத்தின் அனைத்து மட்டங்களுக்கும் எட்டும்படிச் செய்யும் நிர்வாகக் கொள்கைகளும் உள்கட்டமைப்புகளும் அத்தியாவசியத் தேவை; சமூகவளர்ச்சிக் கண்ணோட்டத்துடன் வழிநடத்தப்படாத பொருளாதார ‘வளர்ச்சி( ?) ‘, கடுமையாகப் பிளவுபட்ட சமநிலையற்றவொரு சமுதாய அமைப்புக்கு இட்டுச் செல்லும். தனது ஆதார வளங்கள் மற்றும் இன்மைகளுடன், உலகளாவிய வளங்களையும் இன்மைகளையும் புரிந்து தெளிவாய் அலசி மதிப்பிட்ட அடிப்படையில், தனக்கேற்ற குறிக்கோள்களுடன் திட்டங்களுடன் உள்கட்டமைப்புகளுடன் மனிதவள மேம்பாட்டுடன் வளர்ச்சியின் பகிர்தலுடன் சமூக மனசாட்சியுடன், பல பரிமாணங்களிலும் தாயகம் முன்னேற வாழ்த்துகிறது மனம்.

குறிப்புகள்

1. சில தகவல்களுக்கு நன்றி: ‘ஃபார்ச்சூன் ‘, ‘பிசினஸ் வீக் ‘ வர்த்தக இதழ்கள்; ‘ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ ‘ பல்கலைக்கழக இதழ்.

2. ஓர் இயந்திரத்தை அணு அணுவாகக் கட்டுமானம் செய்யும் நுணுக்கமான தொழில்நுட்பம் நானோடெக்னாலஜி எனப்படுகிறது; ‘நானோ ‘=ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பங்கு. (பில்லியன்=நூறு கோடி). மரபணுவில் பதிந்துள்ள கட்டளைக் குறிப்பைப் பின்பற்றி, அமினோ அமில அணுச்சேர்க்கைகள் ஒவ்வொன்றாய் அடுக்கிக் கட்டப்பட்டவையே நம் பூமியின் உயிரினங்கள் எல்லாம்–இயற்கை கூட ஒரு நானோடெக்னாலஜிக்காரி!

3. ‘நானோடெக்னாலஜி ‘ பற்றிய தொழில்நுட்பரீதியான வாசிப்புக்கு: ‘Nanosystems: Molecular Machinery, Manufacturing, and Computation ‘ by Eric Drexler, New York: John Wiley and Sons, 1992.

( ‘உயிர்மை ‘ இதழில் கட்டுரையாளரின் ‘பதிவுகள்…பார்வைகள் ‘ மாதாந்திரப் பகுதியின் அக்டோபர் பதிவு, ஒரு சில விரிவுகளுடன்.)

kanchanat@aol.com

uyirmmai@yahoo.co.in

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்