சாரங்கா தயாநந்தன்
எதுவுமற்ற இடத்தில்
கூர்ந்தபோது
அமைதியாய் உட்கார்ந்திருந்தது
வெளி .
போகும் திசை
தீர்மானத்தின் பின்னர்
வழியாகிற்று வெளி.
நடக்க நடக்க
நீண்ட வெறுமையில்
மறுதிசை திரும்பின
என் பாதங்கள்.
அந்த மீள் கணத்தின்
ஆரம்பத்தில்
நடந்த வழி
வெளியாகியிருந்தது
புதிய வெளியொன்று
வழியாகியிருந்தது.
எனின்….
வெளி எது ?
வழி எது ?
சிரிக்க மறக்கின்ற மனசு
சாரங்கா தயநந்தன்
இலையுதிர்த்துக் கிடக்கின்ற
பனியுறை கிளையொன்றில்
தொங்கிக் கிடக்கிறது மனசு
வாலறுந்த பட்டமாய்…
வானவில் கனவுகளின்
பறப்புகள் தொலைத்து…
முன்பொருநாள்
வாழ்ந்திருந்த மண்ணின்
மலர்களை மட்டுமன்றி
முள்ளையும் கூட ரசித்திருந்த
அதே என் மனசு.
பக்கலில் உட்கார்ந்திருக்கிறது
பாடாப் பறவை ஒன்று.
வந்திருப்பது புதிய வருடமே
எனினும் இன்று
ஒளிபரவ எழுந்த நன்னாளில்
களிபரவக் கோலமிடவில்லை
என் தாய்.
கண்ணீணிர் வரைகின்ற கோலங்களே
சிலநாளாய் அவள்
கன்னங்களில் வாழ்ந்திருப்பதாய்
சேதி.
விடலைப் பிள்ளைகளின்
கூச்சலில் கிழியாத
பெருந்தெருக்களில்
அருவருப்பாய் ஊர்கிறது
காற்று
அந்நிய முகங்களை மோதி.
இயல்புநிலை தேடிப் பறக்கும்
காகங்களின் மேலாக
இரைகின்றன போர்க்கழுகுகள்.
தாய்ப்பூமியில்
விரியப் போகின்ற போரெண்ணி
சிரிப்பை மறக்கிறது மனசு.
இனியென் தாய்நிலத்தில்
வழியுமென
எதிர்வுகூறப்படுகின்ற
குருதியின் துளிகளாய்த்
தொங்குகின்றன
மார்கழிச் செம்பழங்கள்.
அம்மரத்திற்குத் தாவி
அமைதியாய்
உறைகிறது மனசு.
—-
nanthasaranga@gmail.com