சி.அண்ணாமலை
விருதுடன் சர்ச்சையும் இயல்பாகிப் போன தமிழ்ச்சூழலில் அதிலிருந்து தப்பிய விருதுகளில் ஒன்று விளக்கு விருது. அதனால் மிகவும் மதிக்கப்படுவதோடு, விருதைப் பெறுபவர்கள் ஆத்மார்த்தமாய் உணர்கிறார்கள். ஆகவே, தொகை, விழாக்களை விட விருதின் மதிப்பு உயர்ந்து கொண்டிருக்கிறது எனலாம்.
அமெரிக்கவாழ் தமிழர்கள் பெரும்பாலும் பிரபலம் – கவர்ச்சி – மேலோட்டம் -மசாலாக்களில் ஈடுபட்டாலும் குறைந்த அளவிலானவர்கள் காத்திரமான தமிழ்க்கலை, இலக்கியத்தின் மீது மதிப்பையும் கவனத்தையும் செலுத்திவிடுகிறார்கள். அதற்காக தங்கள் அளவிலான நிதியை அளித்து கலை இலக்கியங்களுக்கு பங்காற்றுகிறார்கள். இந்த மாதிரியான கலை – இலக்கிய முயற்சிகள்தான் தமிழுக்குப் பங்களிப்பாகவும் பிறமொழிகளுடன் ஒப்பிடக்கூடியதாகவும் அமைகின்றன. அம்முயற்சிகளில் ஒன்றுதான் ‘விளக்கு விருது ‘.
சி.சு.செல்லப்பாவில் ஆரம்பித்த இந்த விருது இந்த ஆண்டு அந்த விருதுக்குரியவராய் நாடகப்பேராசிரியர் சே.இராமானுஜத்தைத் தேர்வு செய்தது. மிகவும் ஆழமாய் – படைப்பாற்றலோடு செயல்படும் அவர் தமிழ் – மலையாள நாடக உலகில் மிகவும் மதிக்கத்தக்க ஒரு நாடகக் கலைஞர்.
திண்டுக்கல் அருகிலுள்ள காந்தி கிராமத்தில் பள்ளி ஆசிரியராக பணியைத் தொடங்கி, கதை சொல்லல் சிறுசிறு நாடகங்கள் என்று கலையில் ஈடுபட்டவர் தனது நண்பர்களின் உற்சாகத்தில் தில்லி தேசிய நாடகப் பள்ளியில் நாடகத்தை முறையாகப் படித்தார். சிறப்புப் பாடம்: சிறுவர் அரங்கு. அதன் பிறகு 1968ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற பல நாடகப் பயிலரங்கங்களில் பயிற்றுவிப்பவராக இருந்தார். அதன் தொடர்ச்சியாக 1977 மற்றும் 1978ம் ஆண்டுகளில் முறையே ஏழு நாட்கள் மற்றும் எழுபது நாட்கள் நாடகப் பயிலரங்கை நடத்த பெரிதும் காரணமாக இருந்தார். தேசிய நாடகப் பள்ளியுடன் இணைந்து நடத்தப்பட்ட அப்பட்டறைகளும் பாதல் சர்க்காரைக் கொண்டு சென்னையில் நடத்தப்பட்ட ஒரு மாத நாடகப்பட்டறையும் தான் தமிழ் நாடக உலகில் புதிய பார்வை – முயற்சிக்கு காரணமானவை.
கேரளாவின் திருச்சூர் நாடகப்பள்ளியில் துணை இயக்குநராகவும் தமிழ்ப் பல்கலை நாடகத்துறையின் தலைவராகவும் இருந்தாலும் ஒரு கல்வியாளராகிவிடாமல் தொடர்ந்து நாடகப்பயிலரங்கம், நாடகத் தயாரிப்பு, கருத்தரங்கு என்று செயல்பட்டவர் சே. இராமானுஜம். தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் நவீன தமிழின் செறிவான மொழிநடையையும் கொண்டவர். இதற்கு அவரது ந. முத்துசாமியின் ‘சுவரொட்டிகள் ‘ நாடகநூல் முன்னுரை அவரது ‘நாடகப் படைப்பாக்கம் அடித்தளங்கள் ‘ மற்றும் ‘சே.இராமானுஜம்- நாடகக் கட்டுரைகள் ‘ ஆகியவற்றை உதாரணமாக்கலாம்.
சே.இராமானுஜத்தின் இருநூல்களும் நாடகத்துறையின் நுட்பங்களையும் பண்புகளையும் சக்திகளையும் உணர்த்துபவை. அவை பேராசிரியரின் நாடகப் பார்வையோடு தமிழில் புதியவற்றை செறிவாகச் சொல்ல முன்னுதாரணமாகவும் சொல்லமுடியும்.
இவரது பங்களிப்பு – வீச்சு முக்கியமாக நான்கு நிலைகளில் இருப்பதாகச் சொல்லலாம்.
1.ஒரு நாடக இயக்குநராக
2.நாடகப் பயிற்சியளிப்பவராக
3.இவரது சிறுவர் நாடக அணுகுமுறை
4.நாடகம் குறித்த எழுத்தாளராக.
தனது 37 ஆண்டுகால நாடக வாழ்க்கையில் தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கில மொழிகளில் நாற்பது நாடகங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். இந்திய நாடகமேதை இப்ராஹிம் அல்காஷியிடம் நாடகம் பயின்ற இவர், தமிழ் மரபையும் சமகால பிரச்னைகளையும் தனது நாடகங்களில் தவறாது கொண்டு வந்துவிடுவார்.
தமிழில் அரிதாக காணக்கிடைக்கும் ‘நாடக இயக்கம் ‘ இவரது படைப்புகளில் இருக்கும். குறிப்பாக பல கூறுகளையும் இணைத்து சரியான படைப்பாக்குவது இவரின் சிறப்பு. கிடைக்கும் பொருட்களை உயிரூட்டி அதற்கு பன்முகப்பொருள் தருகிறவிதம் வியப்பளிக்கின்ற ஒன்று. இவரது எல்லா நாடகங்களிலும் தாள – லயம் உரிய இடம்பெற்று கலையாக மலர்ந்திருப்பதைக் காணலாம். சிறுவர் அரங்கு – பெரியவர் அரங்கு இரண்டிலும் இவர் வெற்றி பெற்ற மாதிரி வேறு யாராவது இந்தியாவில் வெற்றிபெற்றனரா தெரியவில்லை. குறிப்பாக சிறுவர் அரங்கை கேரளாவில் தொடர்ந்து செய்துவிடுகிறர்.
தமிழில் சிறந்த நாடகங்கள் என்றால் பேராசிரியர் இராமானுஜத்தின் நாடகங்களான வெறியாட்டம், நாற்காலிக்காரர், மெளனக்குறம் போன்ற நாடகங்களை எவராலும் தவிர்க்க முடியாது.
ஓய்வுபெற்ற பின்னும் தொடர்ந்து நாடகப் பயிலரங்குகள், கருத்தரங்குகள், நாடக உருவாக்கம், நானூறு ஆண்டு பழமை வாய்ந்த கைசிக நாடக மீட்டுருவாக்கம் என்று செயலாற்றி வருகிறார் சே.இராமானுஜம்.
விருதுகள், பரிசுகளை நினைக்காத அவருக்கு ‘விளக்குவிருது ‘ கிடைத்ததும் அதை வழங்கும் விழாவின் அவரது நாடகப்பங்களிப்பு குறித்து பலர் பேசியதும் அவரை உற்சாகப்படுத்தியுள்ளது. தனது நாடக அறிவை – சாதனைகளை மனதில் ஏற்றிக் கொள்ளாத இராமானுஜம் ‘விளக்கு விருது ‘ வழங்கும் விழாவிலும் மிக எளிமையாக இருந்தார்.
29.12.04 அன்று மாலை சென்னை எழும்பூர் மியூசியம் எதிரிலுள்ள இக்ஸா அரங்கம் நாடகக்காரர்களால் நிரம்பியிருந்தது. நீண்ட நாட்களுக்குப்பின் ஓரிடத்தில் காணும் வாய்ப்பு. நாடகவெளி ரெங்கராஜன் தலைமையில் – ஒருங்கிணைப்பில் விழா நடந்தது. விழாவில் பேசியவர்களின் கருத்துகள் இங்கு சுருக்கமாக இடம்பெறுகின்றன. முதலில் கானா விஜய் அவர்களின் பாடல்கள் இடம் பெற்றன. அவை கடல் கொந்தளிப்பால இறந்தவர்களுக்கு அஞ்சலியாய் அமைந்தன.
வெளி ரெங்கராஜன்:
கோ.ராஜாராம், கோபால்சாமி மற்றும் பல தமிழ் நண்பர்கள் இணைந்து உருவாக்கிய இந்த ‘விளக்கு விருது ‘ கலை – இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கடந்த பத்து ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.25,000 வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் ரூபாய் 40,000/ஆக உயர்த்தப்பட்டு விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்ச் சூழலில் தகுதிவாய்ந்த படைப்பாளிகள் உரிய அங்கீகாரமும், கவனமும் பெறவேண்டும் என்பதுதான் இந்த விருதின் நோக்கம். இந்த விருது இராமானுஜத்திற்கு வழங்கப்படுவதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி – பெருமிதம். அவர் கடந்த 35 ஆண்டுகளாக நாடகத்துறையின் எல்லா அம்சங்களிலும் பணியாற்றியுள்ளார். அவரது நாடகச் செயல்பாடு நாடகச் சூழலில் பெரும் உத்வேகத்தை வழங்கியுள்ளது.
ந. முத்துசாமி (கூத்துப்பட்டறை) விளக்கு விருது 2003ஐ வழங்க பேராசிரியர் சே.இராமானுஜம் பெற்றுக் கொண்டார்.
ந.முத்துசாமி
ரொம்ப சந்தோஷம். என் கையால் அவருக்கு இந்த விருது வழங்கியது இன்னும் சந்தோஷம். எப்போதுமே நல்ல விஷயங்கள் பாராட்டப்பட வேண்டும். இல்லையேல் ரொம்பப் பெரிய விஷயங்கள் பாராட்டாமல் போய்விடும். அதற்காக முதலில் ‘விளக்கு ‘ அமைப்பைப் பாராட்ட வேண்டும். விரோதி என்று யாருமே இல்லாதவர் இராமானுஜம். அதனால் எல்லோருக்குமே சந்தோஷம். அவர் ஓர் அற்புதமான மனிதரும் கூட. சாதி – மதமற்ற ஒரு நபரைச் சொல்லச் சொன்னால் நான் இவரைத்தான் உதாரணமாகச் சொல்லுவேன். சமீபத்தில் இராமானுஜம் மீட்டுருவாக்கம் செய்த கைசிக நாடகத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. வெறும் வாசிப்பாய் இருந்த அதை பல ஆண்டுகள் உழைத்து ஒரு வடிவமாக்கி பலநூறுபேர்களை பார்க்கவைத்தவர். அது பலவிதமான பரிமாணங்களைத் தருகிறது. அவரைப் பாராட்டுகிறேன்.
வெங்கட் சாமிநாதன்:
சாதாரணமாக நடக்காத விஷயம் இது. அதாவது விருதை நாடிச்செல்லாதவரை, விருது பிரக்ஞையற்றவரை விருது போய் சேர்ந்துள்ளது. முதலில் நான் இராமானுஜத்தை டெல்லியில் ஒரு பஸ் நிறுத்தத்தில் சந்தித்தேன். அது இருவரும் தமிழர்களாக இருந்ததால் நேர்ந்தது. அன்றிலிருந்து இன்றுவரை நாற்பது ஆண்டுகள் எங்களின் நட்பு தொடர்கிறது. அவரை சந்திக்கும் கணங்கள் அற்புதமானவை. எப்போதும் தேடல் உள்ளவர். கடுமையான வார்த்தையைச் சொல்லமாட்டார். சாதுவாகத் தொடர்ந்து காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார். ஜெயந்தன், பூமணி, பரம்பைச் செல்வன் போன்ற பலருக்கும் இராமானுஜம் நாடகக்குரு. கேரளத்தில் இவரது பாதிப்பு கூடுதலாக உள்ளது. நான் சந்தித்த கேரளாக்காரர்கள் இவரை குருவாக நினைக்கிறார்கள். அவரை நண்பராகப் பெற்றதை நினைத்துப் பார்க்கிறேன். இந்த விருது வழங்கியவர்கள் தங்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல் பின்னிருந்து இங்கு ஒரு குழுவை நியமித்து விருதுக்குரியவரை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு பரிசுக்குழு அமைக்கப்பட்டது. அதன் முதல்பரிசை குழுவின் தலைவரே எடுத்துக் கொண்டுவிட்டார். இப்படியும் நடந்துள்ளது. ‘விளக்கு ‘ அமைப்புக்கு எனது பாராட்டுகள்.
எம்.எஸ்.காந்திமேரி
(இராமானுஜத்தின் ‘வெறியாட்டம் ‘ நாடகத்தில் முக்கியபாத்திரமேற்று பலராலும் பாராட்டப்பெற்றவர். நாடகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தொடர்ந்து நாடகத்தில் செயல்பட்டுவருகிறார்.)
எனது நாடகத் தந்தைக்குப் பாராட்டுகள். எனது வாழ்வில் பல மாற்றங்கள் நடக்க பலவற்றை எதிர்கொள்ள எனது நாடகப் பங்கேற்பு காரணமாக அமைந்துள்ளது. எனது நாடக ஈடுபாட்டிற்கு காரணம் இராமானுஜம் அவர்கள்தான். உதாரணத்திற்கு அவரது ‘வெறியாட்டம் ‘ நாடகத்தில் வரும் ‘வாருங்கள் பெண்டுகளே வரும் விதியை எதிர்கொள்வோம்; வலுவேதும் உள்ளவரைவிதியையும் எதிர்த்து நிற்போம் ‘ என்ற வரிகளை அடிக்கடி ஏன் தினமும் கூட நினைத்துக்கொள்வேன். நடிப்போடு எனது நாடக ஆய்வுக்கும் துணை செய்து ஆலோசனை கூறியுள்ளார். எனது நாடக ஈடுபாடு அனுபவம் பலவற்றை எதிர்கொள்ளவும் எதையும் புதியதாகச் செய்யவும் உதவுகிறது.
பிரளயன்
(வீதி நாடகத்தில் மிக முக்கியமானவர். சென்னை கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்)
‘விளக்கு ‘விழாவில் பங்கேற்பதில் உண்மையில் மகிழ்ச்சி – பெருமை. பேராசிரியரின் விரல்நுனிபடாத இடமே இந்தியாவில் இல்லையென்பேன். ஒரு முறை டெல்லியில் நான் பேராசிரியருடன் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டேன் என்று சொன்னதும் ஹபீப் தன்வீர் போன்ற முக்கிய நாடகக்காரர்கள் என்னை கேரளக்காரன் என்று நினைத்துக் கொண்டார்கள். அந்த அளவு இராமானுஜம் கேரளாவுடன் தொடர்புள்ளவர். பின்பு அறிவொளி இயக்கம் சார்பாக மாநிலம் தழுவிய ஒரு நாடகப்பட்டறை நடந்தபோது, அதில் பங்கேற்று நாடகங்களை மிகக்குறுகிய காலத்தில் செம்மைப்படுத்தினார். அதன் மூலம் நாடகங்கள் பல பரிமாணங்களைப் பெற்றன. அவ்வளவு நுட்பமாக, இசை, அசைவுகளை, நிசப்தங்களை இடம் பெறச் செய்தார். பயிற்சிக்கிடையில் சாதாரணமாகப் பேசும்போது கூட அபூர்வமான விஷயங்களைச் சொல்வார். கேரளாவில் இராமானுஜம் செய்துள்ள பணிக்கு அவர்கள் அவருக்கு செய்துள்ளனர். ஆனால் நாம் எந்த அளவு செய்துள்ளோம் ? இந்தப் பரிசு ஓர் அங்கீகாரம். என்னைப் போன்றவர்களை நெகிழவைக்கிறது.
வேலு.சரவணன்:
இராமானுஜம் என்ற நாடகமேதையோடு இருந்த காலம் மிகவும் முக்கியமானது. அவரை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. இந்த சமுதாயத்தில் மருத்துவர், அதிகாரிகள் எல்லோரையும் விட முக்கியமானவர்களாக நாடகக்காரர்களை நினைக்கின்றேன். காரணம் அவர்கள்தான் ஆற்றலை விதைக்கிறார்கள். நான் பாண்டிச்சேரி நாடகப்பள்ளியில் படித்தபோது இராமானுஜம் அவர்களின் ஆலோசனை உற்சாகம் எனக்குக் கிடைத்தது. அது இன்றும் எனக்கு உதவுகிறது.
ப்ரஸன்னா ராமஸ்வாமி
கிரேக்க நாடகத்தை நிறைய முறை படித்துள்ளேன். ஆனால் என்னவென்றே புரியவில்லை. ‘வெறியாட்டம் ‘ பார்த்தபின் எனக்கு அதுபற்றிய ஒரு பெரிய ‘திரைவிலகல் ‘ கிடைத்தது. வெறியாட்டம் நிகழ்ச்சியைப் பார்த்தபின் பிரதியை வாசித்த போது ஆச்சரியமாக இருந்தது. அந்த நாடகத்தில் படிமங்கள் செறிவாக உருவாக்கப்பட்டுள்ளன. நான் அதை செய்ய நினைத்தேன். பல முறை செய்தேன். இராமானுஜத்தின் நாடகங்களில் நமது மரபிலுள்ள அனைத்துக் கூறுகளும் உள்ளன. குழந்தைகள் நாடகத் தயாரிப்பிலும் அவரது தனித்துவத்தை காணமுடியும். ஒரு முறை புரிசை கிராமத்தில் அவரது பயிலரங்கை காண நேர்ந்த போது குழந்தைகளை அவர்கள் உலகிலிருந்து கண்டுபிடிக்க வைத்தது ஆச்சர்யமாக இருந்தது. பொதுவாக நடிகர்களின் சாத்தியங்களை அறிந்து பங்கேற்கச் செய்வார். இராமானுஜம் பற்றி திரும்பத் திரும்ப ஞாபகம் வரும்போது எப்போதும் நேர்மையான ஒரு மனிதராகவே அவர் இருக்கிறார்.
அ.மங்கை
எனக்கு முதலில் பேராசிரியர் அறிமுகமானது, அவரது ‘கருத்த தெய்வத்தைத் தேடி ‘ நாடகம் மூலம்தான். அது ஓர் அரியவாய்ப்பு. நாடகம் பிறவற்றிலிருந்து வேறுபட்டு நேரடியாகப் போய்ச்சேர்வது. அதை உருவாக்க புலமை மட்டும் போதாது. அனுபவங்களை நேரடியாகப் பார்த்து அதனூடாக பக்குவம் பெருவதும் முக்கியம். இவரது நாடகங்களில் பெண்களின் இருப்பைக் காணலாம். உலகநடப்புகளுடன் தொடர்புப்படுத்துவதையும் காணமுடியும். அவரது அனைத்து நாடகங்களையும் கொண்ட ஒரு விழாவை ஏற்பாடு செய்வது நாம் அவருக்குச் செய்யும் கடமையாகும்.
ஜெயந்தன்
இராமானுஜம் அவர்கள் சுயசரிதை எழுத வேண்டும். அது சுயசரிதையாக இருப்பதுடன் நாடக வரலாறாகவும் இருக்கும். இவர் எனது ஆசான் – குரு – ஆசிரியர். இவருக்கு கேரளாவில் ஆசான் விருது வழங்கியபோது, ‘ஆசான் விருது கிடைத்தபோது மலையாளிகள் தங்கள் கடமையைச் செய்து விட்டார்கள். நாம் எப்போது செய்யப்போகிறோம் ‘ என்று எனது ‘கோடு ‘ இதழில் எழுதினேன். இராமானுஜம் எதையும் நாடகமாக்கிவிடுவார். ஒரு முறை கேரளாவில் ஒரு சிறுகதையை நாடகமாக்கி வியப்படையச் செய்தார். அவரது பயிற்சிப்பட்டறையில் பங்கேற்றபோது உலகத்தையே மறக்கமுடிந்தது. மேடையில் எந்த இடத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை சிறப்பாகக் கூறினார். உடற்பயிற்சி, தனி மனித நடிப்பு, ஸ்லைடுகள், ஒலிநாடா…என்று பலவற்றை அவரது பயிற்சியில் இடம்பெறச் செய்தார். ‘பதேர்பாஞ்சாலி ‘ படத்தை திரையிட்டு அது பற்றி விளக்கத்தை அளித்தார். அப்படிப்பட்ட இராமானுஜத்திற்கு ‘விளக்கு விருது ‘ அளித்தமைக்கு நன்றி.
செ.ரவீந்திரன்(தில்லி பல்கலையில் பேராசிரியர்)
இன்று உள்ளபடியே ஒரு மகிழ்ச்சியான நாள். ‘விளக்கு ‘விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இராமானுஜத்தின் ‘வெறியாட்டம் ‘ எஸ்ரா பவுண்டின் தழுவலைக் காட்டிலும் சக்திமிக்கது. இவரது நாடகங்களுக்கு ஒளியமைப்புச் செய்யும்போது ஒரு சுதந்திரம் கிடைக்கும். நடிகர்களுடன் மட்டுமல்லாது எல்லோருடனும் நெருக்கமாகப் பழகுவார். அவர்களது பார்வையையும் ஏற்றுக்கொள்வார். ராமானுஜம் எங்களை உற்சாகப்படுத்திவரும் ஒரு மனிதர். தமிழனுக்கு ஒரு நாடக அரங்கத்தை உற்சாகப்படுத்திய ஒரு மனிதர் இராமானுஜம். இவரது நாடகங்கள் கொண்ட ஒரு விழா அவசியம் என்று நினைக்கிறேன். ஒருமுறை கன்னட நாடகாசிரியர் கிரிஷ்கர்னாட்டிற்கு விருது கிடைத்தபோது 5 நாட்கள் 5 நாடகங்கள் கொண்ட விழாவை ஒருநாள் கருத்தரங்குடன் ஏற்பாடு செய்தார்கள். அப்படிப்பட்ட ஒரு விழாவில் நாம் நிறைய பேச முடியும் பகிர முடியும். இப்போது பேராசிரியர் அவர்களை வாழ்த்துவதைவிட வணங்குகிறேன்.
(ஓவியர் கலை இயக்குநர் கிருஷணமூர்த்தியும் இராமானுஜத்தின் வகுப்புத் தோழர் ஆர்.கே.வானமாமலையும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.)
ஏற்புரை; சே.இராமானுஜம் :
இங்கு பேசியவர்களில் ஒருவர் நான் அழுத்தமாக எதிர்ப்புக்குரல் தராதவன் என்று கூறினார். நான் குழந்தைகள் நாடகத்தை எடுத்தவன். இதுவரை பயிற்சியற்ற குழுக்களுக்குத்தான் நாடகங்களை உருவாக்கியுள்ளேன். வளரும் குழுக்களுக்குத்தான் இடம் தருவேன். இன்னொரு விமரிசனம் நான் தேச அளவில் பிரபலமாகாதது குறித்தது. அதற்குக் காரணம் நான் பலரைப் போல ஒரு பாணியோடு நின்று போய்விடவில்லை. காட்சிப் பொருளாக்கவில்லை. எனது ஆதாரம் நாடகப் பிரதியும் நடிகர்களும்தான். இதுதான் என் அணுகுமுறை. பிரதி மற்றும் பங்கேற்பாளர்களைத்தான் நான் நம்புகிறேன். நடித்த பலருக்கு அவர்களுக்குத் தெரியாமல் தன்னம்பிக்கை அளித்துள்ளேன். எனக்கு நாடகம் என்பது ஒரு Discovery. அது புதுப்புது அர்த்தங்கள் தரவல்லது. அரைத்த மாவையே எத்தனை நாளைக்கு அரைப்பது. அதேநேரம் நமது creativityஐ காட்டுவது நாடகமாகாது. நாடகத்திற்கான creativityதான் முக்கியம். அதற்காக நாம்கண்டுபிடித்த பெரிய படிமங்களைக்கூட இழக்கத் தயாராக இருக்க வேண்டும். தமிழகத்தில் பலபுது முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் அவை consolidate ஆகவில்லை.
உயிர்த்துடிப்பான விஷயங்களை தேடுவதுதான் நாடகம். இங்கு பேசிய பலரும் வெறியாட்டம் பற்றி மிகவும் பாராட்டி பேசினார்கள். அந்த நாடகத்தில் 30 இடங்களில் உள்ள குறைகளை கண்டுபிடித்து வைத்திருக்கிறேன்.
சுயவிமர்சனம் மிகவும் முக்கியம். பாராட்டுகளில் மயங்கி விழுந்துவிடக் கூடாது. அதேபோல் வெற்றியில் மட்டும் மயங்கிவிடக்கூடாது. வெற்றியை விட்டு புதுப்புது ஆழங்களுக்கு போக வேண்டும். இந்த பரிசு எனது பொறுப்பை அதிகமாக்கி உள்ளது. சாதனைகள் – பரிசுகள் வரிசையில் என்னையும் சேர்த்த விளக்கு அமைப்பினருக்கு எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
****
- கடிதம் ஜனவரி 6,2005
- ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்
- உயர்பாவை 3
- விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை
- ‘விளக்கு விருது ‘ விழா
- தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)
- கடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- விளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா
- tsunami aid
- இஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்
- கடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்
- கடிதம் ஜனவரி 6,2005
- சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி
- உயிர்மை அரங்கில் சந்திப்பு
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6, 2005
- பேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்
- ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
- சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்
- உதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு
- சுனாமி உதவி
- வன்முறை : பாலுறவு : தணிக்கை
- கலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா ?
- ‘சுனாமி ‘
- மஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.
- கோடெலும் ஐன்ஸ்டைனும்
- அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு
- நிழல் அழைத்துச்சென்ற இடங்கள்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53
- மறுபிறவி
- அலைப் போர்
- நிலாவிற்கு
- ஒரு கவிதை
- ஆய்வு க்கூடத்தின் இழுப்பறைகள்
- கவிதை
- கவிக்கட்டு — 43
- கதவைத் தட்டிய கடலலைகள்
- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்
- சுனாமி என்றொரு பினாமி.
- ஊழி
- கிழித்து வந்த காலமே!
- உலகமே
- பிதாவே..எங்களை மன்னியும்!
- கடலுக்கு மடல்
- பெரியபுராணம் – 25
- என் வேள்வி
- கிழித்து வந்த காலமே!
- அறிய கவிதைகள்
- சுனாமி வேட்கை
- பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்!
- முட்டாள்களின் பெட்டகம்