விடியும்! நாவல் – (9)

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


9

பிரயாண அலுப்பில் உடல் பாரித்தது. விமானச் சாப்பாடு செமியாமல் வயிறு பொருமிக் கொண்டு இருந்தது போல ஒரு கனம். கொழும்பு வெய்யில் அதிகமாகவே சுட்டது. கழுத்தடியில் வியர்த்து வழிந்தது. உள்ளுக்குள் பிசுபிசுத்து ஒட்டியது. வெக்கை தாளாமல் டையை உருவி இளக்கினான் செல்வம். வீடு போய்ச் சேரும் வரை டையைக் கட்டியிருப்பதா வேண்டாமா என்று யோசித்தான். யாரும் டை கட்டியிருப்பதாகத் தெரியவில்லை. இளக்கிய டையை உருவிக் கழட்டி மடித்து பைக்குள் வைத்தான். பஸ் நிலையத்தில் திருகோணமலை பஸ் எங்கு நிற்குமோ தெரியவில்லை. இருக்கிற அலுப்பில் இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டு தேடித் திரிவதென்பது முடியாத காரியம். வெய்யில் வெக்கையை விட மனவெக்கை கூடுதலாயிருந்தது. இரண்டாங் குறுக்குத் தெருவால் நுழைந்த ட்டோவை நிறுத்தினான்.

“பஸ் ஸ்ராண்ட் யண்ட கீயத ?”

“ஹதலியக் தென்ன”

கல்லெறி தூரத்திலிருக்கும் பஸ் நிலையத்திற்கு நாற்பது ரூபாய் கூலி! தவிச்ச முயல் அடிக்கும் சந்தர்ப்பம் அவனுக்கு. எதுவும் சொல்லாமல் ஏறிக் கொண்டான். போய்ச் சேர்ந்தால் போதும். இருக்கிற நிலைமையில் எவ்வளவு என்று கூட கேட்டிருக்க மாட்டான். தனக்கும் சிங்களம் தெரியும் என்று மெலிதாகக் காட்டிக் கொள்ளும் விருப்பம். முன்பின் தெரியாத ஒரு ட்டோ டிரைவருக்கு தன் சிங்கள அறிவை, அதிலும் பிடரிக்குச் சேதம் விளைவிக்கும் அரைகுறைச் சரக்கைக் காட்டிக் கொள்வதில் என்ன பிரயோசனம் ? எல்லாம் ஒரு ஜாக்கிரதை உணர்வுதான். தமிழன் என்று காட்டிக் கொள்ளாமல் போய் விட வேனும்.

“திருகுணாமலை பஸ் கீயடத தியன்னே ? ”

“தொளகயி வெனகங் தியனவா”

பன்னிரண்டு மணிக்காம் கடைசி பஸ். இருட்ட முன் தம்பலகாமத்தை கடந்து விடலாம். இரவில் அந்தப் பக்கத்தில் பயணத்திற்குத் தடை. டிரைவர் படு பயங்கரமாக ட்டோவை வெட்டி நுழைத்து ஓட்டியும் பஸ் நிலையத்திற்கு வந்து சேர தாமதமாயிற்று. அவன் ஐம்பது ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினான், மிகுதியைக் கேட்டு வாங்கும் நோக்கமில்லாமல்.

“இந்தாங்க சொச்சம் ‘.. .. .. தமிழில் சொல்லி பத்து ரூபாயை நீட்டினான் டிரைவர். செல்வத்தின் முகத்தில் அறை விழாத குறை. அந்தத் தமிழ் உச்சரிப்பு கொழும்பு வாழ் முஸ்லிம் மக்களுடையது. இந்தத் தொழிலில் உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன் என்று டிரைவர் ஏளனம் செய்வது போன்ற பிரமை. கொழும்பில் வகைதொகையான வாடிக்கையாளரைக் கண்டு பழம் தின்று கொட்டை போட்டிருக்கும் ட்டோ டிரைவர்களிடம் இந்த வாடிக்கையெல்லாம் வாயாது. அவர்கள் சிங்கள தமிழ் மொழிகளில் அனுபவ பாண்டித்யம் பெற்றவர்கள். உடைந்த ங்கிலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைச் சமாளிப்பவர்கள்.

செல்வத்திற்கு யாரும் சிங்களத்தில் பேசினால் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாவிடினும் பேசப்பட்ட விசயத்தின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள முடியும். சின்னச் சின்ன வசனங்களில் நிலைமைகளைச் சமாளித்துக் கொள்ளவும் தெரியும். பெரிய பேச்சில் இறங்கினால் ங்கிலம் கலக்க வேண்டி வரும். சிங்களச் சொற்களின் சேமிப்புக் காணாது. அதனால் துண்டு துண்டாகப் பேசிச் சமாளிப்பான். ட்டோ டிரைவர் அவனை அடையாளம் கண்டு கொண்டதை நினைக்க சிரிப்பு வந்தது. கொஞ்சம் சிங்களம் தெரியும் என்டதால கொழும்பில எல்லாரிட்டையும் பேசிக் கொண்டு நிற்காதே என்று டானியல் எச்சரிக்கை செய்து அனுப்பியது பொறியென வந்து தெறித்தது.

முதலில் வீட்டிற்குப் போய் எல்லாத்தையும் கழட்டியெறிந்து விட்டு சரிய வேண்டும். அதுதான் தேவை இப்போது. திருகோணமலை பஸ் நிரம்பி விட்டிருந்தது. இருந்தும் கிளீனர் படியில் நின்று கூப்பிட்டான்.

“மத சீட் தியனவா மாத்தயா என்ட.”

நடுவில் உள்ள மடக்கும் சீட் இருக்கும் இருக்கிறதாம். அதில் இருந்து கொண்டு டியாடி அவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியாது. பின்னால் அடித்திருந்த பஸ்ஸைப் பார்த்தான். இது போய் அரைமணிக்குப் பிறகு அது புறப்படக் கூடும். நேரத்தைப் பார்த்தான். இன்னும் கனடா நேரத்தைக் காட்டியது மணிக்கூடு. அவன் யோசித்து முடிக்குமுன்னரே பையனொருவன் அவனது மனதைப் படித்தவன் போல், கேட்டுக் கேள்வியில்லாமல் பைகளைத் தூக்கிக் கொண்டு அடுத்த பஸ்ஸில் முன் சீற்றில் இடம் பிடித்துக் கொடுத்தான். டிரைவருக்குப் பின்னாலுக்கும் பின்னாலுள்ள இருக்கை. பைகளை காலடியில் திணித்துவிட்டு ஜன்னலோரம் இருந்து வசதி பார்த்தான். அந்த நிமிடமே வீட்டிலிருக்க முடிந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்! நினைக்க சுகமாயிருந்தது.

பையனுக்குச் சுளையாகப் பத்து ரூபாய் கொடுத்தான். இப்போது யாரிடமிருந்தும் பிரச்னை வரக்கூடாது.

சரியான இடம் பிடித்து மனம் அடங்கியதும் ஜன்னலால் தெரிந்த கொழும்பைப் பார்த்தான். முந்திப் பார்த்த கொழும்பு இல்லை இது. எங்கு பார்க்கினும் குப்பை கூளங்கள். யாருக்கும் சமூக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. சிகரட் ஊதிவிட்டு நின்ற இடத்திலேயே போட்டு மிதிக்கிறான் ஒருவன். வாழைப்பழத்தை உரித்து விழுங்கிவிட்டு தோலை காலடியில் எறிகிறான் இன்னொருவன். வெற்றிலையைப் புளிச்சென்று காறித் துப்பிவிட்டு அருவருப்பில்லாமல் நிற்கிறான் ஒருவன்.

பஸ் நிலைய வளவிற்குள் கட்டுமான வேலைகள் பாதியில் நிற்கின்றன. பாதையில் வெட்டிக் கொத்திய பள்ளங்கள் மூடியும் மூடாமலும் ட்களை தடுக்கி விழுத்தத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மக்களா ஏமாறுவார்கள்! தாண்டித் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவசரம் அவர்களுக்கு.

பதினேழு பதினெட்டு வயதில் முதன் முதலாக கொழும்பிற்கு வந்த போது இப்படி வெய்யில் எறிக்கவில்லை என்று எண்ணினான் செல்வம். நெரிசல் கூடி மூச்சு எடுக்க முடியாத இடமாகி விட்டது. ஒருவேளை கனடாவின் துப்புரவை ஐந்து வருடங்கள் அனுபவித்து விட்டு வந்ததால் இப்படித் தோன்றுகிறதோ!

பின்னுக்கு நேரம் கேட்டான்.

“அட்டாய் தகயயி”

மணியை எட்டுப்பத்துக்கு மாற்றிவிட்டான். மாற்றிய போது கனடா கண்ணில் வந்தது. அங்கு இப்போது நடுச்சாமம். கால் விறைக்கிற குளிர் அடிக்கிற காலம். கம்பளியை தலை வரை இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்தால் எழும்ப மனம் வராது. மணிக்கூட்டில் வைத்த எலாம் கடமைக்கு அடிக்கும். நிறுத்திவிட்டு பத்து நிமிசம் படுப்பம் என்று தொடர்ந்தால் நித்திரை அமத்திப் போடும். என்ன இருந்தாலும் கனடா கனடாதான். அந்த சுகம் எங்கு கிடைக்கும்! அவன் கனடாவை நன்றியோடு நினைத்தான். அங்கு இருக்கையில் இங்கேயும் இங்கு வந்ததும் அங்கேயும் நினைத்து சுகிப்பதே மனுச மனம்.

வியர்வை அடங்க மனமும் அடங்கி சமநிலைக்கு வந்தான் செல்வம். பல் விளக்கவில்லை. காலைக்கடன் முடிக்கவில்லை. சூடாக ஒரு டா அடித்தால் நல்லாயிருக்கும். இறங்கிப் போகப் பஞ்சி. கையில் அடுக்கிய பத்திரிகைகளை கூறிக் கொண்டு வந்தான் ஒருவன். தமிழும் இருந்தது. செல்வம் ங்கிலப் பத்திரிகை வாங்கினான். வலியப் போய் தமிழன் என்று பிரகடனம் செய்து கொள்ள இது தருணமில்லை.

தான் அநாவசியமாக அளவுக்கு மீறிப் பயப்படுகிறேனோ என்று அவனுக்குத் தோன்றியது. கனடாவிலிருந்து வந்து போனவர்கள் சொன்னவை தேக்கு மரத்தில் ஏறிய ணி மாதிரி மனதில் இருந்தன. கொழும்பு முன்னர் போல இல்லை. ஏமலாந்திக் கொண்டு நின்றால் புலியென்று சொல்லிப் பிடித்துக் கொடுக்க நிறையப் பேர் இருக்கிறார்கள். அதை பேப்பர் விற்கிற பொடியனும் செய்யலாம், ட்டோ ஓட்டுகிற டிரைவரும் செய்யலாம். எனவே இது அநாவசியமான பயமில்லை, ஜாக்கிரதை உணர்வுதான் என்று தன் பயத்திற்கு சார்பு தேடினான் செல்வம்.

‘பத்தொன்பது புலிகள் பலி.’

பத்திரிகையைப் புரட்ட, முதல் பக்கத்திலேயே முழு முழு எழுத்துக்களில் செய்தி. மடித்து மறைத்துப் பிடித்து வாசித்தான். திடாரென தலை கிறுகிறுத்தது. ஜெயமும் அதில் சிக்கியிருப்பானோ ? அது அரச நிறுவனத்தால் வெளிவரும் பத்திரிகை. எதை எப்படிப் போட வேண்டும் எதை எப்படிப் போடக் கூடாது என்ற வழிகாட்டலில் வருகிற பத்திரிகை.

சின்னம்மாவின் பக்ஸ் வந்த நாட்களை மனக் கல்குலேட்டர் கணக்கிட்டுப் பார்த்தது. செவ்வாயோடு செவ்வாய் எட்டு. எட்டு நாட்களுக்குள் சண்டைக்கு அனுப்பியிருப்பார்களா ? இருக்காது. கண்கள் பத்திரிகையில் படர்ந்ததே தவிர அவன் எங்கோ போய்க் கொண்டிருந்தான்.

“அம்மா ஒன்டுக்கு வருது.”

தம்பி அடுப்படிக்குள் சின்னம்மாவை நச்சரித்துக் கொண்டிருந்தான். அவளால் இப்போது எழும்பி வர முடியாது. பொச்சும் கையுமாக சட்டிபானை கழுவிக் கொண்டிருக்கும் சின்னம்மா எல்லாம் முடித்து குசினி மாடத்தில் வைத்துவிட்டு கைகால் அலம்பி வர இரவு பத்தரையாகும்.

“செல்வம், தம்பியைக் கோடிக்குள்ள கொண்டே விடு”

“நீ போயிரு, நான் இங்க நிக்கிறன்.”

“நீயும் வாண்ணா, வந்து பக்கத்தில நில்லு ‘

அப்போது தம்பிக்கு எட்டு வயசு இருக்கும். அப்பாவும் பயந்தவர் தான். பிரச்னைக்குப் பிறகு எட்டு மணிக்கே தெருக்கதவை மூடி சங்கிலி போட்டு பூட்டை மாட்டி விடுவார். பத்தாதற்கு உரலை தள்ளி நிறுத்தி கதவை இழுத்துப் பார்ப்பார். பிள்ளைகளும் அவரையே அச்சிலெடுத்த மாதிரி. பிபிசி, வெறிட்டாஸ் செய்திகள் மட்டும் வெளியில் கசியாமல் மெதுவாய் ஒலிக்கும். சாமியறை விளக்கு மட்டுமே முழு வீட்டுக்குமாக அடக்கி வாசிக்கும். எட்டு மணிக்கு தெரு முற்றாக வெறிச்சோடிப் போகும். சட்டம் இல்லாமலே ஊர் முழுக்க அடங்கிப் போகும். தென்னோலைகள் காற்றுக்கு அசையாது பயத்தில் நிற்பது போலவே தோன்றும். இடையிடையே இரானுவ வாகனங்கள் போகும் சத்தம் கேட்கும். அதைத் தொடர்ந்து ஒரு நாய் குரைக்கும். கொஞ்சத்தில் பல நாய்கள் சேர்ந்து கொள்ளும்.

செல்வத்தால் அதற்கு மேலும் மனத்தின் வழி போக முடியவில்லை. முன்னேயோ பின்னேயோ போய், வந்ததையும் வரப்போவதையும் புரட்டிப் பார்த்து விடும் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. கொஞ்சம் இளக விட்டால் போதும் இழுத்துக் கொண்டு போய்விடுகிறது. ஒரு வினாடியில் கனடாவிற்குப் பறந்து போய் டானியல் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என்று பார்க்கிறது. அடுத்த வினாடி ஊருக்குப் பாய்ந்து தம்பி ஒன்றுக்கு இருக்கப் பயந்ததை பின்னோக்கிப் போய் பார்க்கிறது. செல்வம் நெற்றியைப் பிடித்தான்.

முன்னால் நின்ற பஸ் போய் விட்டது. முழுதாக நிறையாவிட்டாலும் இது இன்னும் சில நிமிடங்களில் புறப்பட்டு விடும். அடுத்த பஸ் பின்னால் அடித்து விட்டார்கள். நேரம் பார்த்தான். எட்டு ஐம்பது. ஒன்பதுக்கு வெளிக்கிட்டாலும் இருட்ட முதல் போய்ச் சேர்ந்து விடலாம்.

பின்னுக்குத் திரும்பிப் பார்த்தான். இரண்டொரு ஊர் முகங்கள் தெரிந்தன. ஒன்று நன்றாகப் பழகிய முகம். பசாரில் மணிக்கடை வைத்திருந்த அப்துல்லா நாநா. சோனகவாடியில் வீடு. சின்ன வயதில் பட்டம் கட்ட பட்டுத்தாள் நூல், டுவைன் அங்குதான் வாங்குவான். கடையிலிருந்து காலடிக்குள்ளிருக்கும் மசூதியில் ஐந்து நேரமும் தொழுகை செய்யும் மனுசன். அப்பெல்லாம் கடையில் உதவிக்கு ளில்லை. தொழுகை நேரத்தில் பக்கத்து வெற்றிலைக்கடை கந்தசாமி தற்காலிகமாய் கல்லாவைப் பார்த்துக் கொள்வார்.

நன்றாக ஞாபகம் இருக்கிறது. விண் கூவுகிற நகரைப் பட்டம் கட்டி அரைவாசியில் இருந்தது. அயல் வட்டன்கள் மொய்த்தார்கள். அவர்களுக்கு பட்டத்தின் இழுவை பார்க்க வேண்டும். அது கூவும் விண் ஓசை கேட்க வேண்டும். சரியான இழுவையடா, மச்சான் என்று நாள் முழுக்க வாயூறி விமர்சிக்க வேண்டும். அவர்களது சித்திரை விடுமுறை முழுக்க பட்டக்காலந்தான். வீடுகளில் தாய்மார்களுக்கு தொல்லை தாங்க முடியாமலிருக்கும்.

வரும் வரை ரும் தொடக் கூடாது என்று எச்சரிக்கை காட்டி தாள் ஒட்டாத பட்டத்தைச் சுவரோடு சாய்த்து விட்டு அவனும் ரெத்தினமும் பட்டுத்தாள் வாங்க மணிக்கடைக்குப் போனார்கள். அந்த நேரம் பார்த்து மசூதியில் பாங்கு ஓதிக் கேட்டது.

“தம்பிமாரே கொஞ்சம் கடையைப் பாத்துக் கொள்ளுங்க. இந்தா ஓட்டத்தில வந்திர்றன்.” என்றார் அப்துல்லா நாநா.

அவரது முகத்திலே ஒரு கனிவு ஒட்டி வைத்த மாதிரி எப்போதும் இருக்கும். இரண்டு விலை சொல்ல மாட்டார். கடையைப் பத்து நிமிசம் பார்த்துக் கொண்டதற்காக பல வர்ணப் பல்லி முட்டாசி கை நிறைய அள்ளிக் கொடுத்தார். உள்ளுக்குள் நற்சீரகம் போட்ட பல்லி முட்டாசி. வாய்க்குள் போட்டு சூப்பிக் கொண்டே போக நற்சீரகம் மட்டுந்தான் மிஞ்சும். அதைக் கடைசியாக கடித்து விழுங்கினால் அந்த ருசியே தனி. இப்ப அந்த மாதிரி பல்லி முட்டாசி இருக்குமா!

“என்ன தம்பி எங்க உங்களை கொஞ்ச நாளா இந்தப் பக்கமே காணேல்லை ?”

அவனை அடையாளம் கண்டு கொண்டதும் கேட்டார் அப்துல்லா நாநா. இன்றைய நேற்றைய பழக்கமா ? பத்துப் பன்னிரண்டு வயசில் பட்டம் ஏற்றிய காலத்தில் துளிர்த்து மலர்ந்த பழக்கம். என்றாலும் கொழும்பு பஸ்ஸில் இப்படி சத்தமாக எல்லோரின் கவனத்தைக் கவர்கிற மாதிரி மனுசன் கூப்பிடாமல் இருந்திருக்கலாம்.

“இங்கதான்”

ஒற்றைச்சொல்லில் இழுத்துப் பதிலைச் சொல்லி விட்டுச் சிரித்த மாதிரியில் தமிழில் சத்தம் போட்டுக் கதைக்க இது இடமல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான் செல்வம்.

சுகமாயிருக்கிறீங்களா நாநா என்று மெதுவாகக் கேட்டான்.

“இன்சா அல்லா ண்டவன் புண்ணியத்தில நல்லாயிருக்கம். ”

சம்பிரதாய விசாரிப்பு முடிந்ததும் அவன் மேலும் வளர்க்காமல் திரும்பிக் கொண்டான். அவரது சன்னமான விசாரிப்பில் இரண்டொருவர் தன்னைத் திரும்பிப் பார்த்தது தேவையற்ற விளம்பரம் போலிருந்தது. பக்கத்திலிருந்தவன் முப்பத்திரண்டு பல்லையும் காட்டிச் சிரித்தான். ள் கன்னம் கறுப்பு. வெய்யிலடித்து மினுங்கிய கைகள்.

“உங்களுக்கு மீசை இல்லையா, சிங்களால்ன்னு நெச்சிட்டேன்.”

“திருமலை போறீங்களா ?”

“மாங்க”.. .. .. .. பதிலில் மலையகத் தமிழின் மரியாதை கொஞ்சியது.

“நீங்க ? ”

“நானுங்க, ஹட்டன்ல மாணிக்கவத்தைத் தோட்டம்.”

“திருலையில எங்க ? ”

“மச்சான் பன்குளத்தில விவசாயம் செய்யிறாறு. பாக்கப் போறேன்.”

வண்டி அதிராமல் புறப்பட, வீட்டு எண்ணம் வந்தது. முழுசாக ஐந்து வருடங்களுக்குப் பிறகு போகிறான். கடைசித் தங்கச்சிக்கு மிச்சமாயிருந்த ஏழு பேச்சர்ஸ் காணியில் இப்ப வீடு கட்டி முடியுது. அதற்கு முந்தி இரண்டு தங்கச்சிமாரின் கல்யாணத்திற்கும் இருந்த காணியில் ஏழு ஏழு பேர்ச்சேஸ் கப் பிரித்து வீடு கட்டிக் கொடுத்தது.

அப்பா அந்தக் காலத்தில் இரண்டு பவுணுக்கு வாங்கிய வளவு. இரண்டு பவுண் என்றால் அப்போது இருநூறு ரூபா. அது வெள்ளைக்காரன் ண்ட காலம். மார்க்கெட்டுக்கு இருபத்தைந்து சதம் கொண்டு போனால் அரிசி பருப்பு சரக்கு எல்லாம் வாங்கி இரண்டு சதம் மிச்சமும் கொண்டு வந்த காலம். அப்பா புழுகிப் புழுகி வெள்ளைக்காரன் பெருமை பாடுவார். அவரோடு ஒத்த சிலரும் இதே பல்லவி பாடியிருக்கிறார்கள். பழைய இரண்டறை விறாந்தை வீடு அப்படியேதான் இருக்கிறது. நாலு எட்டுக்குள் குசினி. முற்றத்தை அடைத்துக் கொண்டு மாமரம். அதில் இப்போது பிஞ்சு பிடித்திருக்கும். பங்குனி வெய்யிலோடு காய் நன்றாக முற்றிப் போகும். மாங்கொப்பில் கட்டியிருந்த ஊஞ்சலில் தம்பியை மடியில் வைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டு ராணி இருப்பாள். செல்வம் பின்னால் நின்று மெதுவாகத் தள்ளுவான். தங்கச்சி காலை ஊன்றி ஊன்றி மேலே எம்புவாள். தம்பி பயப்படுவான்.

“அக்காவை நல்லா இறுக்கிப் பிடி. பயப்பிடாதே”. எவ்வளவு இறுக்கிப் பிடித்தாலும் அவனுக்குப் பயம் போகாது. இறங்கவும் மனம் வராது.

எங்கே தொடங்கினாலும் தம்பியில் வந்து நின்றது மனம். இப்ப எங்கே இருக்கிறானோ. எப்படிக் கஷ்டப்படுகிறானோ. இவனுக்கு ஏன் இந்த வேலை ? சித்திரைக்குள் கனடாவுக்கு எடுக்கிற வழியைப் பார்த்திருப்பனே! கொம்யுட்டர் கோர்ஸ் செய்து மூனு வருசத்தில சிஸ்டம் அனலிஸ்ற்றா பெரிய ளா வந்திருக்கலாம். நல்ல வேலையும் கிடைத்திருக்கும். அதற்குள் அவசரப்பட்டுட்டானே!

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்