விடியும் -நாவல்- (35)

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


இமைகள் மூடித் திறப்பதற்கிடையில் விணாடி பறந்து விடுகிறது. இருந்து எழும்புவதற்கிடையில் நிமிசம் ஓடி விடுகிறது. அடுத்து செய்ய இருக்கும் அலுவலைப் பற்றிச் சிந்திக்கும் போதே மணி நடந்து விடுகிறது. படுப்பதற்கு பாய் விரிக்கையில் அன்றைய நாள் ஓய்ந்து விட்டது புரிகிறது. நாள் வாரமாகி வாரம் மாதமாகி மாதங்கள் வருசமாகி யுகம் யுகமாக காலம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஆருக்காகவும் எதற்காகவும் அது காத்திருப்பதாகத் தெரியவில்லை.

செல்வத்திற்கு அதிகாலை மூன்று மணிக்கே முழிப்பு வந்து விட்டது. புரண்டு புரண்டு பார்த்தும் போன நித்திரை போனதுதான். விறாந்தைக்கு வந்து அப்பாவின் சாய்மனக்கதிரையில் சும்மா கண்ணை மூடிக்கொண்டு சரிந்தான். முகட்டு வளையிலிருந்து பல்லி ஒன்று தவறி விழுந்து இருட்டின் நிசப்தத்தை மெலிதாகக் குலைத்துவிட்டு சுவரில் தொற்றி ஊர்ந்து வளைக்குள் மறைந்து கொண்டது. இந்த நடுச்சாமத்தில் இந்த ஊரில் தான் மட்டுமே முட்டு முட்டென்று முழித்திருப்பதாக அவன் நினைத்தான். முற்றத்து முருங்கை மரம் அசைவில்லாமல் நின்றதைப் பார்க்க, அதுவும் நல்ல நித்திரையில் இருப்பது போலவே தோன்றிற்று.

சுவர் நாட்கலண்டரில் பல நாட்கள் கிழிபடவில்லை. இந்த மாதிரி விசயங்களுக்கு அப்பாதான் பொறுப்பு. பார்த்துப் பார்த்துச் செய்வார். முகட்டுவரி, டெலிபோன் பில், எலக்ரிக் பில், இன்சூரன்ஸ் பிரிமியம் எல்லாம் மாதாமாதம் பிந்தவிடாமல் கட்டுவதும், இருட்ட முதல் நாயைப் பிடித்துக் கட்டுவதும் விடிந்தபின் அவிழ்ப்பதும், நாள் தவறாமல் கலண்டர் கிழிப்பதும், அவர்தான். அப்பாவே கிழிக்கத் தவறியிருக்கிறார் என்றால் வீட்டு நிலைமையைப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

அவன் எழுந்து கலண்டரைக் கிழித்து விட்டு கிழித்த தாள்களை மேலோட்டமாகப் பார்த்தான். குழப்பம் மிகுந்த நாட்கள்! கசக்கி மூலையில் போட்டான். சின்னம்மாவென்றால் கசக்கி எறியாமல் பத்திரப்படுத்தி மளிகைச் சாமான்கள் எழுதுவதற்காக பாவித்துக் கொள்வாள்.

வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது. 1999ம் ஆண்டு வயிறு நோகும் போது வந்தவன். 2000 சித்திரை வருசம் பிறந்து தவழவும் தொடங்கி விட்டது. ஆறு மாத “மள்டிபிள்” விசாவில் வந்ததால் விசாவில் பிரச்னை வராது. லீவில் வந்திருக்கிறது!

கம்பனி முகாமையாளரிடம் நடந்ததைக் கூறி மூன்று மாதங்கள் லீவு பெற்றிருந்தான். மேலும் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அறிவிப்பதாகவும் சொன்னான். முகாமையாளர் அதை ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதை சலனமற்றிருந்த அவரது முகத்திலிருந்து ஊகிக்க முடியவில்லை. அந்த சந்தேகத்தின் ஆதாயத்தை தனக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ள முடியும் என அவன் கருதியிருந்தான். அவசரத் தொடர்புக்கு டானியலின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்து விட்டும் வந்திருந்தான்.

லீவு முடிந்து நாலாவது நாள், அரைமணி நேரத்திற்கும் மேலாக டெலிபோனில் பேசினான் டானியல். முகாமையாளர் விட்டாலும் அவன் விடமாட்டான் போலிருந்தது. கெதியில் வரும்படி நெருக்கினான். சின்னம்மாதான் டெலிபோன் தூக்கினாள்.

“சுகமாயிருக்கிறீங்களாம்மா ?”

“ஓமனை. தம்பீர ரிசல்ட் வந்திருக்கு. பள்ளிக்கூடத்திலயே திறமான ரிசல்ட்.” கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத கவலை அவளது தளதளத்த குரலில் தொணித்ததை டானியல் புரிந்து கொண்டான்.

“தம்பீர பாடு ?”

“வந்திருவார். எல்லாக் கோயிலுக்கும் நேர்த்திக் கடன் வைச்சிருக்குத் தம்பி.”

“கவலைப்படாதீங்கம்மா. எல்லாம் நல்லபடியா நடக்கும். தம்பி வந்தவுடன இங்க அனுப்பியிருங்க. நாங்க பாத்துக் கொள்ளுறம். செல்வம் எங்கயம்மா ?”

சைக்கிளுக்கு காற்றடித்துக் கொண்டிருந்த செல்வம் வந்து ரிசீவரைக் கையில் வாங்கினான்.

“பிறகு என்ன பாடுகள் ?”

“இருக்கிறம்.”

“தம்பி ?”

“அம்மா அங்கால நிக்கிறா. பிறகு சொல்றன்.”

“அம்மா நம்பிக்கையோட இருக்கிற மாதிரித் தெரியுது.”

“பிறகு சொல்றனே.”

“சரி. எப்ப வாறாய் ? உன்ர கம்பனி மனேஜர் ரெண்டு தரம் கோல் எடுத்திற்றான்.”

“உடன விட்டுட்டு வரேலாது மச்சான்.”

“அப்ப எக்ஸ்டென்சன் கேட்டு பக்ஸ் அல்லோ அடிக்க வேனும். சும்மாயிருந்தா அவன் சாத்திரமா பாக்கிறது ?”

“இன்டைக்கு அடிக்கிறன்.”

“உடன அதைச் செய். அடுத்தது – ஒரு குட் நியூஸ்!”

“என்ன ?”

“தேவசகாயம் நேற்றுப் பின்னேரம் குடும்பத்தோட வீட்டை வந்து மேரிக்கும் உனக்கும் கல்யாணத்துக்கு பூரண சம்மதம் என்டு சொல்லீற்றுப் போயிருக்கிறார். வீட்டில விசயத்தைச் சொல்லு.”

“நிலைமையைப் பாத்துச் சொல்றன்.”

“தேவசகாயத்தாருக்கு என்ன சொல்ல ?”

“எல்லாம் வந்து பாப்பம்.”

“என்னடா எல்லாத்துக்கும் தொத்துப் பறியில மறுமொழி சொல்றாய்.”

செல்வம் வாசலைப் பார்த்தான். அம்மாவும் செவ்வந்தியும் அடுப்படிக்குள் நிற்பது பட்டும் படாமலும் தெரிந்தது. அப்பா வெய்யிலில் நின்ற சைக்கிளை நிழலுக்கு நகர்த்திக் கொண்டிருந்தார்.

“மச்சான் பொறுமையாக் கேள். தம்பி திட்டவட்டமாக அறிவிச்சிற்றான். வரமாட்டானாம். அம்மாட்டைச் சொல்றதுக்கு சங்கடமாயிருக்கு. இதுக்குள்ள வேற சிக்கலும் கிளம்பியிருக்கு.”

“என்ன ?”

“டவுன் பள்ளிக்கூடங்களில புலிக்குப் போன பொடியளின்ர பேர் விலாசம் பொலிஸ் கேட்டிருக்கு.”

“பொலிஸ் ஒன்டுஞ் செய்யேலாது நீ பயப்பிடாதை.”

“ஒன்டைத் தொட்டு ஒன்டா முகந்து பிடிச்சாலும் பிடிச்சிருவாங்கள். அதோட அடுத்த தலையிடி.”

“என்ன ?”

“செவ்வந்தியின்ர கல்யாண எழுத்து இழுபடுது. இந்த நிலைமையில அம்மாஅப்பாவை விட்டுட்டு என்னன்டு மச்சான் வாறது ?”

டானியல் பக்கம் சிறிது நேரம் சத்தம் இல்லாமலிருந்து பிறகு கேட்டது.”

“மனேஜரிட்டை என்ன சொல்ல ? ‘

“இன்டைக்கு பக்ஸ் அனுப்பிறன் என்டு சொல்லு. லீவு தராட்டி என்ன செய்யிறது, வேற வேலை தேட வேண்டியதுதான்.”

“டேய் மடைக் கதை கதைக்காம முதல்ல ரெண்டு கிழமை கேட்டு பக்ஸ் அடி. தங்கச்சியின்ர எழுத்து விசயத்தை உடன பார். அது முடிஞ்சா பெரிய பாரம் இறங்கின மாதிரி. சின்னம்மாவுக்கு பக்குவமா எடுத்துச் சொல்லு. பெற்ற தாய்க்குச் சொல்றது கஷ்டந்தான். பொலிஸ் விசயத்தில ஒன்டுக்கும் பயப்பிடாதை. தம்பி புலிக்குப் போனதுக்காக இருக்கிற எல்லாரையும் கொண்டு போய் சிறையில வைக்கேலுமா ? எல்லாத்தையும் முடிச்சிற்று கெதீல வந்து சேர்ர வழியைப் பார். வேறென்ன மச்சான் வைக்கட்டா, அப்பா சுகமாயிருக்கிறாரா ?”

“ஓம் மச்சான். வந்ததுக்கு நான் கோல் எடுக்கேல்லை. குறை விளங்காதை. சியாமளாட்டையும் பிள்ளையளிட்டையும் கேட்டதாச் சொல்லு.”

ரிசீவரை வைத்தான். செவ்வந்தியின் கல்யாண எழுத்து விசயம் டானியலோடு கதைத்தபின் பென்னாம் பெரிய கேள்விக்குறியாக முன்னால் நின்றது. செவ்வந்திக்குப் பார்த்தது எக்கவுண்டன்ட் மாப்பிள்ளை. குடிகிடியில்லை. நல்ல இடம், சீதனம் கூட்டித் தரச்சொல்லிக் கேட்பதற்காக இழுத்தடிக்கிறார்களோ என்னவோ!

திகதியைப் பார்த்தான். ஏப்றில் 12 – கூட்டுத் தொகை 3. அவனது பிறந்த நாள் 3 கூட்டுத்தொகை 9. பிறந்த வீட்டு இலக்கம் 57. ஒரு 9ந் திகதியன்றுதான் கனடாவில் வந்து இறங்கினான். அவனது எபாட்மென்ட் இலக்கம் 9. செல்போன் இலக்கத்தின் கூட்டுத்தொகை 3. எந்த இலக்கத்தையும் அவனாகக் கேட்டுப் பெற்றதில்லை. தானாக அமைந்தவை. ஏதாவது ஒரு தினத்தில் மனம் முழுக்க மகிழ்ச்சியாக இருக்கும் காரணத்தை தற்செயலாக ஆராயும் போது, அன்றைய தினம் இந்த இலக்கங்களில் அமைந்திருப்பதைக் கண்டு அவன் வியந்திருக்கிறான். மூன்றும் ஒன்பதும் தனக்கு அதஷ்டமான எண்கள் என்பது அவனது நம்பிக்கை.

அன்றைக்கே மாப்பிள்ளை வீட்டிற்குப் போவதற்குத் தீர்மானித்துக் கொண்டான். வீட்டில் விளக்கு வைக்கிற நேரத்தில் போவது நல்லதென நினைத்துக் காத்திருந்தான். காண்டாவனம் கிட்டிக் கொண்டு வருகிற கோடை. நிலம் வியர்த்து காலில் ஈரமண் ஒட்டுகிற புழுக்கம். இருட்டவே ஏழு மணியாகி விடுகிறது.

அங்கு போன போது ரூபவாஹினி தொலைக்காட்சியில் மீண்டும் தலைப்புச் செய்திகள் போய்க் கொண்டிருந்தன. ஆனையிறவு முகாம் பயங்கரவாதிகளால் முற்றுகையிட்டிருப்பது வெறும் வதந்தியெனவும், மக்கள் இவ்வதந்திகளுக்கு காதுகொடுக்கக் கூடாதெனவும், அரசபடைகள் எதற்கும் ஆயத்தமாக இருப்பதாகவும் – நாலைந்து நாட்களாக திருப்பித் திருப்பிச் சொல்லப்பட்ட அதே செய்தி வாசிக்கப்பட்டது.

வீடுகளில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு இப்போது நேரகாலமென்றில்லை. படிக்கிற பிள்ளைகள் மட்டுமல்ல வீட்டுப் பெண்களும் பலதரப்பட்ட ரீவி சானல்களின் வரவால் நேரஒழுங்கு கெட்டுப் போயிருந்தார்கள். “சித்தி துவங்கப் போகுது, வாங்கம்மா” என்று மகள் கூப்பிட, அடுப்படியில் புட்டுக்கு மா குழைத்துக் கொண்டிருந்த தாய் சருவச்சட்டியோடு போவதை திறந்திருந்த ஜன்னலால் கண்டான் செல்வம். ரீவியில் லயிக்கப் போகிறவர்களிடம் என் கதை எடுபடுமா ? சற்றுப் பின்வாங்கி வளவைப் பார்த்தான். சுற்று மதில் கோட்டைச் சுவர் மாதிரி எழும்பியிருந்தது – வெளியிலிருந்து எட்டிப் பார்க்க முடியாத படிக்கு.

“ஆரோ கதவைத் தட்டுகினம்.”

சட்டை மாட்டியபடியே ஒருவன் வந்து “ஆரது” என்று கேட்டான். அவன் – செவ்வந்திக்குப் பார்த்த மாப்பிள்ளை.

“நான் செல்வநாயகம்.”

இருங்கோ என்று சொல்லி விட்டு அம்மாவைக் கூப்பிடுகிற சாட்டில் அவன் உள்ளே போனான். குசுகுசுவென்று கதைத்துக் கேட்டது. டிவி சத்தம் குறைத்து வைக்கப்பட்டது. அடுத்த நிமிசம், வயது முதிர்ந்தவர் ஒருவர், தகப்பனாக இருக்க வேண்டும், அடித்து விட்ட பந்தாக வந்து செற்றியில் குந்தினார். முன்பின் கண்டிராவிட்டாலும் உடனேயே அவனோடு அன்யோன்யமாகிப் போனார்.

“வாங்கோ. நீங்க வந்ததென்டு கேள்விப்பட்டனான். வெளிய தெருவ போக முடியேல்லை. வாதம் குத்தி விழுத்திப் போட்டுது. பத்தியச்சாப்பாடும் எண்ணையும் தூளுமா இப்பதான் கொஞ்சம் சுகம்.”

“இங்கிலிஸ் வைத்தியம் பாக்கேல்லையோ ? ‘

“வாதத்துக்கு தமிழ் வைத்தியந்தான் திறம்.”

“நீங்க சொல்றது சரிதான். எங்கட அப்பாவுக்கும் தமிழ்வைத்தியம் தான் ஒத்துக் கொள்ளும். சந்திரன் சதுரவடிவானது என அவர் இப்போது சொன்னாலும் அதை மறுதலிக்காமல் அப்படியே ஒத்துக் கொள்ள அவன் தயார். அப்படியாவது அவரை மடக்கி வந்த விசயத்தை ஒப்பேற்றிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஒரு அமுக்கமான மெளனம் நிலவிற்று. இரண்டு பக்கமும் ஸ்ராட்டிங் ட்ரபிள்.

மாப்பிள்ளையின் தகப்பன் சொன்னார்.

“ஆனையிறவு காம்ப் விழுந்துரும் போல கிடக்கு. ரூபவாஹினியில ஒன்டுஞ் சொல்றாங்களில்லை. சன்டிவி செய்தியை மறைச்சு மியூசிக் போட்டு இருட்டடிப்புச் செய்யிறாங்கள்.”

“ஓமோம் ஊர் முழுக்க அதுதான் கதை.”

“ஆனையிறவு உடம்புக்குக் கழுத்து மாதிரி. ரெண்டு பகுதியும் லேசில விட்டுக் குடுக்காது.”

வீட்டிலிருந்து கொண்டு ஒரு பேப்பரையும் விடாமல் வாசிக்கிறார் என்பது புரிந்தது. குளித்து விட்டு சட்டை மாட்டி திருநீறு பூசிக் கொண்டு வந்தான் மாப்பிள்ளை சிவலோகநாதன். இருங்கோ தம்பி என்றான் செல்வம். அவன் புதிதாகச் சிரித்துவிட்டு, சொன்னதற்காகவே இருப்பவன் போல இருந்தான். தகப்பனும் மகனும் பார்த்துக் கொண்டார்கள். யார் பூனைக்கு மணி கட்டுவது ? செல்வமே கட்டத் தயாராகி சுற்றி வளைக்காமல் நேராகவே கோதாவில் இறங்கினான்.

“ஐயா, கனடாவிலருந்து வந்த உடன உங்களை வந்து பாத்திருக்க வேனும். வர முடியாமப் போச்சு. இன்னம் ரெண்டு கிழமையில நான் திரும்ப வேண்டியிருக்கு. போறதுக்கிடையில தங்கச்சியின்ர எழுத்து முடிஞ்சா நல்லாயிருக்கும். பிறகு வாறதுக்கு லீவு எடுக்கிறதும் கஷ்டம். அதுதான் உங்களைப் பாக்க வந்தனான். ஏதும் பிரச்னையிருந்தா தயவுசெய்து சொல்லுங்க. ”

குனிந்த தலை நிமிராமலிருந்தான் மகன். தகப்பன் சொன்னார்.

“தம்பி எங்களை குறை விளங்கக் கூடாது. நாங்கள் ஆருடைய வம்புதும்புக்கும் போறதில்லை. வெளியிலிருந்து வாறதையும் விரும்பிறேல்லை. எங்கட பிள்ளையளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீங்க – தாங்களும் தங்கட பாடுமா இருக்கிறதுகள். இன்டை வரைக்கும் பொலிஸ் ஸ்டேசன் வாசல்படி ஏறாத குடும்பம்.”

அவர்களது வளவின் சுற்றுமதில் உயரமே அவர் சொன்னதை நிறுவுவதற்குப் போதுமானது. ஆனால் இப்போது என்ன சொல்ல வருகிறார்!

“உங்கட தம்பி!”

அவனுக்கு நெஞ்சு இடித்தது.

“புலியில சேந்திற்றார் என்டு கேள்விப்பட்டம். ஆமியும் நேவியும் அடிக்கடி ரவுண்டப் பண்ணுது. நாளைக்கு பொலிஸ் ஆமியென்று எதென்டாலும் வந்தா எங்களால அலையேலாது.”

செல்வத்தின் முகம் ஒரு கணத்தில் சூம்பிய கத்தரிக்காயாக சுருங்கிப் போயிற்று. சுவரில் இருந்த கலண்டரில் 12ந் திகதித் தாளை ஏக்கத்துடன் பார்த்தான்.

karulsubramaniam@yahoo.com>

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்