ஜெயகாந்தன்
(நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கக் கூட்டத்தில், ஜெயகாந்தன் ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி )
எனவே வாழ்வின் மகத்துவத்தை அறிவதற்கு பெரிய ஆடம்பரமான இந்த அமெரிக்க வாழ்க்கைதான் வேண்டுமென்பதில்லை. அது குடிசையிலும் ஒரு அகல் விளக்கிலும் ஒரு வாய்க்கூழிலும் கூட மனிதர்க்கு கிடைக்கும். வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும். அது புற வளர்ச்சியினால் மட்டும் நேர்வதல்ல. மனிதனின் அகவளர்ச்சிதான் வாழ்வின் மகத்துவத்தை உணர்த்துகிறது. ஆகவே பலமனிதர்கள் , நான் இந்த நடைபாதை ஞானோபதேசமென்று எழுதியிருக்கின்றேனே, இது மாதிரி சாதாரண மனிதர்கள் பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் அவர்கள் அறியாமலேயே எனக்கு சொல்லித்தந்திருக்கிறார்கள்.
பிச்சைக்காரர்களிலிருந்து பரமரிஷிகள் வரை நம் ஊரில் ஞானவான்களாக இருப்பதினை நான் கண்டிருக்கிறேன். சிறு வயதில் ஒரு கோவிலுக்கு போயிருந்த பொழுது நான் குளத்தருகே போய் கால் வழுக்கி குளத்தில் விழுந்த பொழுது என்னை ஒரு சாமியார் தூக்கிக் காப்பாற்றினார். அவர் பெயர் ராமலிங்கப் பண்டாரம் . எங்கள் ஊர் தெருக்களிலே மாலை நேரத்தில் விளக்கு வைத்த பிறகு பாட்டுப்பாடிக் கொண்டு வருவார். அவர் பாடுகிற பாட்டெல்லாம் ராமலிங்க சுவாமிகளின் திருவருட்பா பாடல்கள். அவர் மூலம் அந்தப் பாடல்களை நான் கற்றேன். அவர் ராமலிங்க சுவாமிகளின் சரிதத்தை எனக்குச் சொல்லித்தந்திருக்கிறார். இது மாதிரி வாழ்க்கையின் மகத்துவத்தை எளிய மனிதர்கள் மூலம் கற்பதுதான் எனக்கு ஏற்புடையதாயிருந்தது.
அவ்வாறு தொழிலாளிகளிடமும் சாதாரண மனிதர்களிடமும் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இந்த வாழ்க்கையின் உண்மை உயிர்ப்பு துடித்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே இந்த நம்பிக்கையை எல்லாருக்கும் தருதல் வேண்டும். விரக்தியுற்ற மனிதர்களுக்கு நம்பிக்கை தரவேண்டும். வாழ்க்கையின் அவலங்களினால் மனமொடிந்து போகிறவர்களுக்கு ‘வாழ்க்கை இப்படியே இராது, இது மாறும் ‘ என்கிற நம்பிக்கையை நானே அவர்களிடமிருந்து கற்று அவர்களுக்குத் திருப்பிச் சொன்னேன்.
வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுகிறபொழுது அது ஒரு கனவு என்றும் அது ஒரு மாயை என்றும் பலர் சொல்லுவார்கள்.
‘உலகெலாம் ஓர் பெருங்கனவு. அஃதுளே உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவினுங் கனவாகும், இதனிடை சிலதினங்கள் உயிர்க்கு அமுதாகியே செப்புதற்கரிதாக மயக்குமால் திலக வாணுதலார் தரு மையலாந் தெய்வீகக் கனவு அன்னது வாழ்கவே ‘ என்று பாரதியார் சொல்வது பெண்களை மிக உயர்த்தி, அவர்களுடைய உறவினால் பெண்ணுக்கு – பெண்ணோடு உறவு என்பது. தாயன்பு சகோதரி அன்பு மகளன்பு எல்லாம் சேர்த்து மனைவியின் அன்பு மாத்திரமன்று. ஒரு மனைவிதான் தாய் . ஒரு மனைவிதான் சகோதரி ஒரு மனைவிதான் மகள். ஆகவே எல்லாரையும், எல்லா உறவையும், பெண்களாக பராசக்தியின் வடிவமாகப் பெண்களைப் பார்ப்பதும் அவர்களுடைய அருளினால் இந்த வாழ்க்கை தழைப்பதையும் பாரதியார்தான் எனக்கு நன்கு உணர்த்தினார்.
வாழ்வு முற்றும் பெருங்கனவு என்று சொன்னாலும் கூட அதை தெய்வீகக் கனவாக எப்படி மாற்றிக் கொள்வது என்பதற்கு இல்லறம் நல்லறம் என்பதனை அவர் உணர்த்தினார்.
‘உலகெலாம் பெருங்கனவு ‘ என்று சொல்வது ஒரு பக்கம். அந்தக்கனவை தெய்வீகக்கனவாகவும் தொடர்ந்து வருகிற ஒரு கனவாகவும், வாழையடி வாழையாக வருகிற கனவாகவும் பார்க்கிறபொழுது, இந்த வாழ்க்கை முடிந்து விடுவதல்ல, அது தொடர்ந்து வருகிறது. திரும்பத்திரும்ப நாமே வந்து வாழ்கிறோம் என்ற உணர்வினை, என்கிற சித்தாந்தத்தை அது எனக்குத் தந்தது.
ஆகவே, இந்த வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்வதற்கு எல்லாக் காலத்திலும், இலக்கியம் பயனுடையதாயிற்று.
நாம் படித்த இலக்கியங்கள்தான் என்னை உருவாக்கிற்று.
விக்டர் ஹ்யூகோவினுடைய ‘லா மிஸராப் ‘ படித்தபொழுது எனக்குள்ளே ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்ததை பதினைந்து பதினாறு வயதில் நான் உணர்ந்தேன். அதனை சுத்தானந்த பாரதியார் ‘ஏழை படும்பாடு ‘ என்று தமிழிலே அக்காலத்திலே மொழிபெயர்த்திருந்தார். அந்தக் கதை எனக்குள்ளே பல நற்பண்புகளை உருவாக்கிற்று.
அந்த ஜீன் வால் ஜீன் என்பவர் சிறைக்கைதியாக இருந்து விடுதலை பெற்று திரும்பி வருகிறபொழுது, ஊரே அவனை புறக்கணிக்கிறது. ஒதுக்குகிறது. ஒரு பாதிரியார் அவனுக்கு அடைக்கலம் தருகிறார். அடைக்கலம் தந்த வீட்டிலிருந்து இரவு தூங்கிக்கொண்டிருக்கையில் அவன் விழித்தெழுந்து அங்குள்ள இரண்டு வெள்ளி விளக்குத் தண்டுகளில் ஒன்றை திருடிக்கொண்டு போய்விடுகிறான். போன இடத்தில் போலீஸ்காரர்களிடம் பிடிபட்டு அவனை கேட்கிறபொழுது அந்த பாதிரியார் வீட்டிலிருந்துதான் அவன் எடுத்துவந்ததாக அவன் சொல்ல, அவனை அவர்கள் அழைத்துக்கொண்டு வந்து பாதிரியாரிடம் விசாரிப்பார்கள். அவர் அவனைப்பார்த்ததும் ‘நண்பரே வாருங்கள். என்ன ? இன்னொரு விளக்கை வைத்துவிட்டுப் போய்விட்டார்கள் ‘ என்று கூறி அவனை கைதியாக கொண்டுவந்து பிடித்து வந்தவனை நண்பனாக்கி அவனை மனிதனாக்குகிறார்.
ஆகவே, திருடன் என்று யாரும் இல்லை. நாம்தான் சிலரைத் திருடராக்கி விடுகிறோம். அவர்களை நேசித்தால், அவர்கள் நண்பர்களாக, உயர்ந்த மனிதர்களாக ஆகிவிடுவார்கள் என்கிற உண்மை எனக்குப் புரிந்தது. அதனை வாழ்க்கையில் நான் பலமுறை பிரயோகித்துப் பார்த்திருக்கிறேன்.
அண்மையில் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னாலே எங்கள் வீட்டிலே எங்கிருந்ததோ யாரோ கொடுத்தனுப்பினார்கள் என்று தென்னங்கன்றுகளை வைத்து மூன்றாண்டிலே மிக அதிகமாக உயர்ந்து, தேங்காய்கள் காய்த்து தொங்க ஆரம்பித்தது. அண்ணாந்து பார்க்கத்தான் எனக்குத் தெரிந்ததே தவிர அதனை ஏறிப் பறிக்கும் திறன் இல்லை. எனவே எவனாவது தேங்காய் பறிக்கிறவன் தெரிகிறானா என்று நாளெல்லாம் பார்த்தேன் எவனையும் காணோம். ஒரு நாள் நடுராத்திரி பொத் பொத்தென்று சத்தம் கேட்டது. ஜன்னலைத் திறந்து பார்த்தால் ஒருவன் தென்னை மரத்திலேறி தேங்காயைப் பறித்துக் கொண்டிருந்தான். ‘என்னய்யா உன்னை பகலெல்லாம் தேடினேன். காணவில்லை. இந்த நேரத்தில் வந்திருக்கிறாயே. உனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு மீதியை போட்டுவிட்டுப் போம் ‘ என்று சொன்னேன். ஜன்னல் கதவை மூடிவிட்டு நிம்மதியாகத் தூங்கினேன். என்ன ஆச்சரியம். மறுநாள் காலையில் ஒவ்வொரு மரத்தடியிலும் தேங்காய்கள் குமித்து வைக்கப்பட்டிருந்தன. எனக்கு ஒரு வருத்தம் நேர்ந்தது. அவன் தனக்கு கூலியாக சில தேங்காய்களாவது எடுத்துப் போயிருப்பானா ? இல்லை நல்ல நண்பனாக அவன் தன் உழைப்பை தானமாகத் தந்து இவற்றை பறித்துக்கொடுத்துவிட்டு வெறுங்கையுடன் போயிருப்பானா என்று நினைத்தேன். அவன் பின் திரும்பி வந்தான் எனக்கு நண்பனானான்
ஆகவே ஒரு திருடனை நண்பனாக்கிக் கொள்வது எப்படி என்கிற அந்த மகத்துவத்தை நான் கற்றது எங்கோ ஒரு காலத்தில் நான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் வேறு பல ஆண்டுகளுக்கு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு தேசத்தில் எனக்குத் தெரியாத மொழியில் எழுதிய அந்த விக்டர் ஹ்யூகோவின் எழுத்து என் மனத்தை பண்படுத்தியது. அது போலவே லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள்.
ஆகவே வாழ்வின் மகத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நல்ல இலக்கியங்களைத் தேடிப் படித்தல் வேண்டும். நல்ல இலக்கியங்கள் நிறைய இருக்கின்றன. மோசமானவற்றைப் படித்துவிட்டு ‘மோசமாக இருக்கிறதே ஒன்றும் நன்றாக இல்லையே ‘ என்று எல்லாரும் சொல்லுகிறார்கள்.
நல்ல இலக்கியங்களைத் தேடினால் நாம் படிக்க வேண்டியது இன்னும், இன்னும் கடல் போல் நிறைந்திருப்பதை நாம் கண்டு கொள்வோம். எனவே வாழ்வின் மகத்துவத்தை அறிந்தவர்கள் அறியத்துடிப்பவர்கள் அந்த நல்ல நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும். அப்படித்தான் நண்பர் முருகானந்தம் பாரதியாரையும் என்னையும் இனங்கண்டு கொண்டிருக்கிறார். ஆகவே நல்ல மனிதர்களை நல்ல நூல்களிலே தேடி நல்ல பண்புகளை அறிவதன்மூலம் வாழ்க்கையின் மகத்துவத்தை நாம் அனைவரும் அறியலாம். அது நல்ல நேரத்தில் தக்க தருணத்தில் உற்ற நண்பனைப்போல் நின்று நமக்கு துணை செய்யும்.
ஆகவே நல்ல மனம் உடையவர்கள் வாழ்வின் மகத்துவத்தை அறிவார்கள். அந்த நல்ல மனத்தைப் பண் படுத்திக் கொள்வதற்கு நல்ல இலக்கியங்கள் துணை புரியும். அவற்றை படித்த பொழுது நாமும் இதுமாதிரி எழுத வேண்டும்; இது மாதிரி காலம் கடந்து எனது கருத்துக்கள் மக்களின் மனத்தைப் பண்படுத்த வேண்டும்; வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்; வாழ்வின் மகத்துவத்தை வாழ்பவர்களுக்கு புரியவைப்பதற்கு உதவிகரமாக அமைய வேண்டும் என்ற நல்ல கொள்கையை அந்த நல்ல நூல்கள் எனக்குத் தந்தன. அந்த நூல்கள்தாம் நான் எழுதவதற்கு எனக்கு ஆக்கமாகவும் ஊக்கமாகவும் இருந்தன. அதில் தலை சிறந்தவர் மகாகவி பாரதியார்.
அவர்தான் நல்ல நூல்கள் பலவற்றை எனக்கு அவரது கட்டுரைகளின் மூலமும் அவரது கவிதையின் மூலமும் அறிமுகப்படுத்தியவர். கம்பனைப்பற்றியும் இளங்கோவைப்பற்றியும் வள்ளுவரைப்பற்றியும் பாரதியார் சொல்லாமல் இருந்திருந்தால் நான் அவர்களைப் படித்தே இருக்க மாட்டேன். நல்ல நூல்களை நாம் படித்து பிறருக்குச் சொல்வது ஒரு நல்ல பணி. அந்த பணியைத்தான் இந்த தமிழ் சங்கங்கள் இங்கே செய்து கொண்டிருக்கின்றன.
நான் வெளிநாடுகளுக்குப் போகிற பொழுது- ருஷ்யாவுக்குப் போனது வேறு கதை- சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் போகிறபொழுது அங்கே நான் பார்க்கின்றேன், (அங்கே உள்ள) இந்தியர்கள் வேறு விதமானவர்கள். அவர்கள் இந்தியாவில் வாழமுடியாமல் விரட்டப்பட்டு வயிற்றுச் சோற்றுக்காக , பிழைப்புக்குப் போனவர்கள். இங்கே வந்தவர்கள் அப்படி அல்லர். அங்கே இருந்த cream of the society மேல்தட்டு வர்க்கத்திலிருந்து, நன்கு படித்து தங்களுடைய அறிவாற்றலாலும் , ஞானத்தினாலும், கல்வியினாலும் உலகத்தின் மதிப்பை இந்தியாவுக்கு பெற்றுத் தருவதற்கும், ‘எல்லாரும் அமர நிலை எய்துகின்ற நல்லொளியை இந்தியா உலகுக்களிக்கும், ஆம் இந்தியா உலகுக்களிக்கும் ‘ என்று மூன்று முறை பாரதியார் அறுதியிட்டு கூறியிருக்கிறாரே அதுபோல இந்தியாவின் மேன்மக்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.
அவர்களிடம் நான் சொல்லி அவர்களுக்குச் சொல்லி உபதேசம் செய்வதற்கு ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டு இந்தியாவுக்கு சென்று அவர்களிடம் சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். ஏற்கெனவே நீங்கள் என்னுடைய புத்தகத்தை படித்ததிலிருந்து, என்னுடைய முன்னுரைகளில் பயின்றதிலிருந்து சொன்னதைவிட அதிகமாக ஒரு சொற்பொழிவிலே நான் சொல்ல வேண்டுமென்று நீங்களும் எதிர்பார்க்க மாட்டார்கள் நானும் சொல்வதற்கு முனைய மாட்டேன். கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதும், நமது எண்ணங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும், உங்களைச் சந்திப்பதும், நீங்கள் தருகின்ற செய்தியை, உங்கள் மூலம் கற்பதை, நான் எனது மக்களுக்கு அங்கே போய் சொல்ல வேண்டும் என்பதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம்.
அதற்கு உதவியாக அமைந்த அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். எனது வாழ்க்கை மகத்துவத்தை இங்கே வந்து நான் நன்கு புரிந்து கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி .. இனிமேல் நீங்கள் கேட்கும் கேள்விகளை வைத்து, தொடர்ந்து என் உரையை தொடர்ந்து ஆற்றலாமென்று இருக்கிறேன்.
(உரை நிறைவு பெறுகிறது. தொடர்ந்து பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளும் , ஜெயகாந்தன் அளித்த பதில்களும் இனி வெளிவரும்.)