வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன்

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

மஞ்சுளா நவநீதன்


கலைஞருக்கு வணக்கம், வாழ்த்துகள்

இது உங்கள் வெற்றி. சன் டிவி ஊடகங்களின் பெரும் உதவி மத்திய அரசின் உதவி என்றெல்லாம் காரணிகள் இருந்தாலும், தி மு க வைக்கட்டிக் காத்து, அதன் ஏற்ற இறக்கங்களைத் துல்லியமாய்க் கணித்து, கட்சி துவண்ட போதெல்லாம், உங்கள் நாவன்மையாலும், உறுப்பினர்களைக் கட்டிப்போடுகிற நினைவாற்றல் மற்றும் திறமையாலும் தான் தி மு கவைக் காப்பாற்றி வந்திருக்கிறீர்கள். கடந்த ஐம்பது வருடங்களாய்த் தொடர்ந்து கருக்குலையாமல் இருக்கும் ஒரே பிராந்தியக் கட்சி என்று தி மு கவை ஆக்கியிருக்கிறீர்கள் இதன் முழுப் பெருமையும் உங்களுக்கே. உங்களை அகற்றி தி முகவைக் கைப்பற்ற, தகாத செயல்களில் ஈடுபட்டுப் பிரிந்து சென்றவரின் அரசியலையும் ,எல்லை தாண்டிய விசுவாசத்தையும் மக்கள் நம்பவில்லை என்பதும் இந்த தேர்தலில் நிரூபணமாகியிருக்கிறது. வாழ்த்துகள்.

உங்களிடம் சில வேண்டுகோள்கள்

1. உழவர் சந்தையை மீண்டும் கொண்டு வாருங்கள்.

2. தாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டாம். அ தி மு க செய்தது என்பதற்காகவே ஒரு நடவடிக்கையை முறிப்பது என்ற விவேகமற்ற, பக்குவமற்ற செயலை நீங்களும் செய்ய வேண்டாம். போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கி பஸ்களை அரசுடைமையாக்கியதால் தமிழ்நாட்டில் பெரும் மாற்றம் நிகழக் காரணமாய் இருந்தவர்கள் நீங்கள். அரசுடைமையைத் தொடருங்கள்.

3. மீண்டும் சமத்துவபுரங்கள் உருவாகட்டும்.

4. இலவச தொலைக்காட்சிப் பெட்டியும், அரிசி கிலோ இரண்டு ரூபாய்க்கும் கிடைக்க வழி செய்யுங்கள். மக்களை பிச்சைக் காரர்களாய் ஆக்குகிறார் என்று சொல்பவர்கள் சொல்லட்டும். மக்கள் ஏதோ முன்னால் கோடீஸ்வரர்களாய் இருப்பது போல், நீங்கள் தான் அவர்களைக் கையேந்த வைப்பதாகவும் அவர்கள் பேச்சு இருக்கிறது. தமிழ்நாடு போன்ற மானிலங்களில் ஓரளவு வறியவர்களுக்கு இப்படிப் பட்ட உதவிகள் நிச்சயம் தேவை.

5. மும்மொழித் திட்டத்தைக் கொண்டுவந்து தமிழைக்கட்டாய பாடமாக்குங்கள். மும்மொழித் திட்டம் வந்தால் இந்தி நுழைந்துவிடும் என்ற அச்சம் வேண்டாம். இந்தி நுழைந்தால் பரவாயில்லை, ஆனால் தமிழே ஒழிந்து போகும் அபாயம் வந்துள்ளது. இந்தி தேவையில்லை என்றால், திராவிட மொழிகளான கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யலாம் ஆனால் தமிழ் கட்டாய பாடம் ஆக்கப் படவேண்டும்.

6. தொழில் வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டு வேலைவாய்ப்பைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

7. லாட்டரிச் சீட்டுகளை மீண்டும் கொண்டுவருவது பற்றிக் கனவிலும் நினைக்காதீர்கள்.

விஜயகாந்திற்கு வணக்கம், வாழ்த்துகள்

தேர்தலுக்கு ஓரிரு மாதங்கள் முன்பு கட்சியை ஆரம்பித்து, மற்ற பழைய கட்சிகளுடன் கூட்டணி சேராமல் துணிந்து தனியாக தமிழ்நாட்டின் எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய ஒரு செயலுக்காகவே உங்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அதில்லாமல், தமிழ் சினிமாவை அர்த்தமில்லாமல் எதிர்த்து , திரையிடுவதில் தடைகளை ஏற்படுத்திய பா ம க வின் அராஜகச் செயலுக்கு அவர்களின் கோட்டையிலேயே முடிவு கட்டுமாறு விருத்தாசலத்தில் வேட்பாளராய் நிற்க முன்வந்ததற்கு உங்களுக்குத் தனிப் பாராட்டுகள். தமிழகத்தின் மக்கள் சாதியை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுவதில்லை என்பதன் நிரூபணமாக உங்கள் வெற்றி அமைந்திருக்கிறது. தொடர்ந்து உங்கள் கட்சியைக் கட்டுங்கள். சமூக பொருளாதார நிபுணர்களையும், மற்ற தொழில்முறை கட்சியில் அதிருப்தி அடைந்துள்ள பேராசிரியர்கள், தொழில் முனைவர்கள் சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து ஒரு செயல் திட்டம் வகுத்து மக்கள் முன்னால் தொடர்ந்து உங்கள் இருப்பைக் காண்பியுங்கள். ஒரு வித்தியாசமான கட்சி இது என்ற உணர்வைத் தொடர்ந்து மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் செயல்படுங்கள். எதிர்காலம் உங்களுக்கே. மேலும் உங்களது வெற்றி உங்களது சினிமா கவர்ச்சிக்கான வெற்றி அல்ல என்பதையும் உணருங்கள். ஒரு மாற்று சக்திக்கான மக்களின் ஏக்கம் தான் உங்களுக்கு வாக்களிக்குமாறு மக்களைத் தூண்டியுள்ளது. எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிட்டதன் மூலம் உங்கள் அரசியல் ஈடுபாடு வெறும் கூட்டணி சேர்ந்து பலனை அனுபவிப்பது மட்டுமல்ல, தனித்து நின்று மக்களின் குரலை எதிரொலிப்பது என்ற நிலையை மக்கள் புரிந்து வரவேற்றதன் மூலமாக உங்களிடம் ஒரு எதிர்பார்ப்பை மக்கள் வெளியிட்டுள்ளார்கள். உங்களுக்கு விழுந்த ஓட்டு வெறும் எதிர்ப்பு ஒட்டுகள் மட்டுமல்ல. பா ஜ க போன்ற தேசியக் கட்சியின் மீது வைக்காத நம்பிக்கையை மக்கள் உங்கள் மீது வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு தகுதியானவராய்த் தொடர்ந்து செயல்படுங்கள்.

ஜெயலலிதாவிற்கு வணக்கம், வாழ்த்துகள்

கருணாநிதியின் ஒட்டுமொத்த வளர்ச்சியைத் தடுப்பதில் உங்களுக்கு ஓரளவு வெற்றி தான். தி மு க தனித்து ஆட்சி அமைக்க இயலாதபடி, உங்கள் வியூகம் அமைந்தது. அ தி மு கவைச் சிதறுண்டுவிடாமல் கட்டிக் காக்க ஜனநாயக முறையை நம்பாமல் தன்முனைப்பு மட்டுமே போதும் என்று நீங்கள் எதேச்சாதிகாரம் செய்வது, அ தி மு கவைச் சிதறச் செய்யாமல் இருக்கலாம். ஆனால் இரண்டாம் நிலைத் தலைமை உருவாகாமல் இருப்பது நல்லதல்ல. பொறுப்பான எதிர்க்கட்சியாய்ச் செயல்படுங்கள்.

தமிழக மக்களுக்கு வணக்கங்கள், வாழ்த்துகள்

தமிழக மக்களே! உங்களை நேசிக்கும் என்னைப் போன்றவர்கள் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்க வைக்கும் வகையில் தான் எல்லா அரசியல்வாதிகளும், தமிழ்பேரினவாதிகளும், சாதிக்கட்சி தலைவர்களும், அரசு ஊழியர்களும் செயல்பட்டு வருகின்றார்கள். இருந்தும் நீங்கள் திட்டவட்டமாய் உங்கள் முடிவுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இம்முறை சதவீதமும் அதிகமாகியிருக்கிறது. மாறி மாறி நீங்கள் வாக்களிப்பதை அறிவுஜீவிகள் “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற முறையில், தமிழக மக்கள் செயலிழந்து நிற்பதாய்ச் சொல்வதுண்டு. நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது கட்சி என்று நிலைத்த கருத்துக் கொண்டுள்ள குறிப்பிட்ட சதவீதத்தினரைத் தவிர்த்துப் பார்த்தால், தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் திறந்த மனத்துடன் தலைவர்களையும், செயல் திட்டங்களையும் சீர்தூக்கித்தான் வாக்களிக்கிறார்கள் என்று தெரியும். ராஜிவ் காந்தி கொலையைத் தொடர்ந்து ஒரு உணர்வு பூர்வமான முடிவு எடுத்த தேர்தல் தவிர மற்ற தேர்தல்களில் அவர்கள் தமக்கு எது நல்லது என்று சிந்தித்துத் தான் வாக்களித்து வந்திருக்கிறார்கள்.

25 வருடமாய் வறுமைக்கும், வளர்ச்சியின்மைக்கும் தொடர்ந்து ஓட்டுப் போடும் மேற்கு வங்க வாக்காளர்களைக் காட்டிலும், சாதியமும் மதவெறியும் இடதுசாரி வேடத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கேரளாவின் வாக்காளர்களைக் காட்டிலும், தமிழ் நாட்டின் வாக்காளர்கள் தம்முடைய தேர்வை மிக அறிவு பூர்வமாகவும் தெளிவாகவும் முன்வைத்திருக்கிறார்கள். மாறி மாறி வாக்களிப்பதும் கூட ஜனநாயக சுழற்சி முறையில் புதிய கருத்துகளும், செயல் திட்டங்களும் வருவதற்கு வாய்ப்பளிப்பதால் தேக்கங்கள் தவிர்க்கப் படுகின்றன. எனவே என் வணக்கங்கள் தமிழ்நாட்டின் ஜனநாயகக் காவலர்களாய்ச் செயல்படும் மக்களுக்கு.

————————

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்