மஞ்சுளா நவநீதன்
தீராநதி இதழில் எஸ். ராமகிருஷ்ணன், ரஜினிகாந்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அந்தக் கட்டுரையைப் பற்றி மருதம் இதழில் பற்றி சூர்யா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையை, இரண்டு கட்டுரைகளுக்கு ஒரு எதிர்வினையாக எடுத்துக்கொள்ளலாம்.
ரஜினிகாந்த் என்ற ஒரு தனிநபரைப் பற்றியோ, அவரது குணாம்சங்களை இன்னொரு தனிமனிதரான எஸ்.ராமகிருஷ்ணன் பேசுவது பற்றியோ எனக்கு அக்கறை இல்லை. எஸ்.ராமகிருஷ்ணன் இப்படி இருந்தார், இப்படி ஆகிவிட்டார் என்று சூர்யா வருத்தப்படுவதோ கூட எனக்கு அக்கறை இல்லை. அவரவர் இப்படி அப்படி எழுதிப்பார்த்துக்கொள்ளலாம். இடமிருந்தால் போட்டுக்கொள்ளலாம். இவைகளைத் தாண்டி, இந்தக் கட்டுரைகளில் ஓடும் ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே இந்தக் கட்டுரை.
இன்று ரஜனிகாந்த் பின்னால் போகும் ராமகிருஷ்ணனைக் குற்றம் சாட்டிக் கட்டுரை எழுதியுள்ளார் சூரியா. இது பற்றி எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. தமிழ்நாட்டில் வாழ்க்கை மிகச் சிரமமானது. குறைந்தபட்ச வசதிகள் கூட மிகுந்த பிரயாசைக்குப் பின்னால் தான் வாய்க்கிறது இந்தச் சூழ்நிலையில் தன் சமரசங்கள் தவிர்கக் முடியாதவை. அதில்லாமல் ரஜனி நிஜமாகவே ராமகிருஷ்ணன் மனங்கவர்ந்த மனிதராய் இருக்கக் கூடாது என்று ஒன்றும் சட்டம் இல்லை. இன்று ரஜனி பின்னால் ராமகிருஷ்ணன் போகலாம். நாளை ஜெயலலிதாவின் பின்னால் போகலாம். அன்று இப்படிச் சொன்னாயே இன்று இப்படிச் சொல்கிறாயே என்று பிலாக்கணம் வைப்பது அர்த்தமற்ற விஷயம்.
எஸ் ராமகிருஷ்ணன் ஒரு கூட்டத்தில் வந்து உட்கார்ந்த மம்முட்டியை எழுந்து போகச் சொன்னார் என்று சூர்யா கூறியிருக்கிறார். அடுத்து சிலுக்குவையும் கூட்டிக்கொண்டு வந்து உட்காரவைக்க வேண்டியதுதானே என்று எஸ்.ராமகிருஷ்ணன் கோவப்பட்டதாகக் எழுதியிருக்கிறார். இந்த அறக்கோபம் சூர்யாவுக்கும் பிடித்திருந்ததாக எழுதியிருந்தார்.
இதற்குப் பெயர் இருக்கிறது. அதன் பெயர் பிராம்மணியம். மேட்டிமைத் தனம். எலீட்டிசம். உனக்கு என் பேச்சைக் கேட்கும் தகுதி இருக்கிறதா என்று நான் கூடச் சோதிக்கத் தயாரில்லை. உன் தொழில் தீண்டத்தகாதது. என்னுடைய அறிவு உனக்கு கிடையாது. உன்னிடம் என் வேதத்தை – அறிவைச் சொல்லமாட்டேன். உன்னிடம் பேசுவதால் என்னுடைய இருத்தலுக்கு மாசு வந்துவிடுகிறது என்ற புனிதச் சிந்தனை.
மம்முட்டியை எப்படி எஸ்.ராமகிருஷ்ணன் எழுந்து போகச் சொல்லலாம் ? மம்முட்டி இருக்கும் ஒரு அறையே மாசு பட்டது என்று எஸ்.ராமகிருஷ்ணன் நினைக்கிறாரா ? மம்முட்டிக்கு மற்றவர்கள் தந்த கவனத்தினால் பேசத் தடை என்று சொல்லி அந்த கவனத்தைத் தம் பேச்சின் மீது திருப்ப அவகாசம் கொடுத்திருக்கலாம். அவர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைக்கு என்ன நியாயம் இருக்கிறது ?
மம்முட்டி நடிப்பு சரியில்லை என்று சொல்லுங்கள். உங்களுக்கு அதனைச் சொல்ல உரிமை இருக்கிறது என்று எடுத்துக்கொள்கிறேன். மம்முட்டியை தெய்வமாக வணங்குவது தவறு என்று சொல்லுங்கள். அதனை உங்களது கருத்தாக எடுத்துக்கொள்கிறேன். ஆனால், அவர் நீங்கள் பேசும் பொதுக்கூட்டத்தில் உட்கார்ந்தால், அவரை வெளியேற்ற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ? ஒழுக்கக்கேடானவர் என்றா ? கூத்தாடி என்றா ? அவருடைய இருப்பே எஸ் ராமகிருஷ்ணன் பேச முடியாமல் தொந்தரவு செய்கிறதா ? கூத்தாடிகளின் தனிவாழ்க்கை சரியானதல்ல என்ற கருத்தினால் இந்த அவமதிப்பு நிகழ்ந்ததா ? அப்படியென்றால், அந்தக்கூட்டத்தில் இருப்பவர் ஒவ்வொருவரின் தனி வாழ்க்கையையும் சென்று ஆராய்ந்து, அவரவர் ஒழுக்கத்தை சர்ட்டிஃபிகேட் மூலம் உறுதி செய்து கொண்டு தான் உங்கள் கூட்டத்தில் உட்கார அனுமதி அளித்தீர்களா ? அந்தக்கூட்டத்தில் அவர் தகராறு செய்தார் என்று அவரை நீக்கினால் கூட ஒப்புக்கொள்ளலாம். ஆனால், அந்தக் கூட்டத்தில் இன்னார் இருந்தாலே நான் பேச மாட்டேன் என்ற பேச்சு என்ன மனிதநேயமற்ற செயல் ?
சரி சிலுக்கு என்ன பாவம் செய்தார் ? கவர்ச்சி நடிகைக்கு மட்டும் தான் இந்தச் சட்டமா ? அல்லது எல்லா நடிகைகளுக்குமே தானா ? குற்ற உணர்வற்ற சந்தோஷத்தை லட்சக்கணக்கான மக்களுக்கு வழங்குகிற சினிமா பிம்பங்களுக்கு இவர்கள் சொந்தக் காரர்கள். ராமகிருஷ்ணன் . சூர்யா போன்றவர்கள் எழுத்தை படிப்பவர்கள் பத்துப் பேர். அதில் எட்டரை ஆட்களுக்குப் புரிவதில்லை என்று கேள்விப்படுகிறேன். கவர்ச்சி நடனம் ஆடுகிற பெண்மணிகள் மீது என்ன குறை ராமகிருஷ்ணனுக்கும் சூர்யாவிற்கும் ? சமூகத்தைக் கெடுப்பவர்கள் இவர்கள் என்ற எண்ணமா ? இவர்களால் கெட்டுப் போகிற அளவிற்கு சமூகம் இருக்கிறதா ? சுற்றிலும் உள்ள அரசியல்வாதிகள், மதவாதிகள், லஞ்ச அதிகாரிகள் இவர்களால் எல்லாம் கெட்டுப் போகாத சமூக கவர்ச்சி நடனம் ஆடுபவர்களால் கெட்டுப் போய்விடப் போகிறதா ? இன்ன தொழில் செய்பவர்கள் மாஜிகல் ரியலிசம் படிக்கக்கூடாது என்று ஏதேனும் சட்டம் எழுத விரும்புகிறாரா எஸ்.ராமகிருஷ்ணன் ? எனில் அதற்கு ஓட்டுப்போட சூர்யா தயார்.
நடிகர்கள் தொழிலாளிகள். அந்தத் தொழிலாளர்களில் ஒரு சிலர் அதிகம் காசு வாங்கக்கூடிய தொழிலாளிகள். ஒரு சிலர் நடனமாடுகிறார்கள் . ஒரு சிலர் அழுது வடிந்து நடிக்கிறார்கள். ஒரு சிலர் நகைச்சுவை நடிகர்கள். இது ஒரு பிழைப்பு. வறுமையும், நிச்சயமின்மையும் அன்றாடப் போராட்டமாய் இருக்கும் இந்திய வாழ்வில் அவரவர் ஏதேனும் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் . அதை மீறி நடிகர் நடிகைகளுக்கு மரியாதை தருவதோ, அல்லது ஒரு சாதாரண தொழிலாளிக்கு, மனிதனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தராமல் இருப்பதோ தவறு. ஒவ்வொரு வெற்றி பெற்ற சிலுக்கிற்கும் பின்னால் ஓராயிரம் தோல்வி பெற்ற சிலுக்குகள் கோடம்பாக்கத்தின் சினிமா உலகால் ஒதுக்கப் பட்டு வாழ்கிறார்கள். மாஜிகல் ரியலிசம் மண்ணாங்கட்டி எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் முதலில் மனிதத்துவத்தைக் கற்றுக் கொள்ளுவோம்.
***
manjulanavaneedhan@yahoo.com
***
- முற்றும்
- மனம்
- மழை.
- கடிதங்கள்
- விருப்பமும் விருப்பமின்மையும் (எனக்குப் பிடித்த கதைகள் -33 -வண்ணதாசனின் ‘தனுமை ‘)
- சிறைக்குள்ளிருந்து ஒரு கவிதை (ரஷ்ய கவிஞர் மூஸா ஜலீல் பற்றி)
- இலக்கிய உலகில் விருது வாங்குவது எப்படி ? சில ஆலோசனைகள்.
- உலகின் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர் (1904-1967)
- அறிவியல் மேதைகள் கேலன் (Galen)
- தண்டனை
- அன்னையும் அண்ணலும்
- கண்களின் அருவியை நிறுத்து…!
- நகரம் பற்றிய பத்து கவிதைகள்
- எனக்குள் ஒருவன்
- நான்காவது கொலை !!! (அத்யாயம் 13)
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (தொடர்கவிதை -1)
- நிகழ்வு
- புலம் பெயர்ந்த தமிழர் ஒருவரின் சந்தேகம் ?
- வாழ்க சிலுக்கு!!! ஒழிக சூர்யாவும் , எஸ் ராமகிருஷ்ணனும்!!!
- தலித்துகள், இந்து மதம், மதமாற்றம்
- லுடோ டெ விட்டே எழுதிய ‘லுமும்பா படுகொலை ‘ புத்தக விமர்சனம்
- யாதும் ஊரே….
- மரபணுக்கள் மூலம் ஆரிய படையெடுப்புக் கோட்பாடு நிரூபிக்கப்படுகிறதா ?
- மதமாற்றம் பற்றி காந்தி
- ஓட்டைக் காலணாக்கள்
- அங்கிச்சி
- விடியல்