வாழ்க்கையில் முதல்முறை!

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

தமிழாக்கம்: தமிழநம்பி


ஐந்து தடவைகளில், முதல் தடவையாக மாரடைப்பால் நான் துன்புற்றபோது போது, 1959ஆம் ஆண்டில் கொழும்பு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.

நான் இருந்த அறையில் மூன்று படுக்கைகள் இருந்தன. அவற்றுள் ஒன்றில் சிரீலங்காப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த திரு.குணசேகராவும், இன்னொன்றில் மொரட்டுவா பகுதியைச் சேர்ந்த கிறித்தவ மதத் தலைவரான அருள்திரு ‘க’வும், மூன்றாவதில் பகுத்தறிவுத் தலைவரான நானும் இருந்தோம். நாங்கள் மூவருமே ‘நெஞ்சுப்பைக் குருதித் திரைப்பு’ (Coronary thrombosis) நோயினால் தாக்கப்பட்டிருந்தோம்.

ஒரு காரி(சனி)க்கிழமை மாலையில் பணிக்குழுச் செவிலி, அருட்டிரு ‘க’வுக்கு கொழும்பு ஆயர் ஆரண்மனையிலிருந்து வந்த செய்தியை அவருக்குத் தெரிவித்தார். மறுநாள், நோயுற்றிருக்கும் அருள்திரு ‘க’வின் நலத்திற்காகத் திருப்பலி வழிபாடு (Holy Mass) செய்வதற்காகக் கொழும்பு ஆயர் மருத்துவமனைக்கு வருகின்றார் என்பதே அச்செய்தி.

அச்செய்தியைக் கேட்டவுடன் சமயக்குரு ‘க’வுக்குப் பேரச்சம் ஏறபட்டது. தாம் விரைவில் இறந்துபோய்விடுவோம் என்பதற்காகத் தமக்கு இறுதி எண்ணெய்க்காப்பு (Last Unction) தருவதற்காகவே ஆயர் வருகிறாரென அவர் கருதிக் கொண்டார்.

மறுநாள், கொழும்பு ஆயர் பேரருள்திரு உரோலோ கிரகாமும் அவருடைய கருமியக்குரு அருள்திரு கேனன் பாசில் செயவர்த்தனாவும் குழுவினருடன் அறைக்குள் வந்தனர். அவர்கள் உள்ளே வரும்போதே, நான் ஒரு புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே, படிப்பதைப்போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தேன். வழிபாட்டு நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் ஆயர் என்னிடம் வந்தார்; கருமியக்குரு குணசேகராவிடம் சென்றார்.

என் கையிலிருந்த நூலின் பெயரைப் பார்த்து விட்டு,”கருத்து மாறுபாடு மிக்க நூலைப் படிக்கின்றீர்களே!” என்றார் ஆயர். என் கையிலிருந்தது அறிஞர் கின்சே எழுதிய “அமெரிக்க இளைஞரின் பாலியல் நடத்தைகள்” என்ற புத்தகம்!

“உங்கள் கையிலுள்ள திருமறை(Bible) அளவிற்கு இந்நூலில் அதிக முரண்பாடு இல்லை” என்றேன் நான். “அறிஞர் கின்சேயும் அவருடைய மாணவர்களும் நடத்திய ஆய்வில் திரட்டிய உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, கின்சே இந்நூலை எழுதியிருக்கின்றார். ஆனால், இத் திருமறையோ ‘அராபிய இரவுகள்’, ‘கல்லிவர் செலவுகள்’ போலும் முழுக் கற்பனைக் கதைகளையே கொண்டதா யிருக்கின்றது” என்றும் கூறினேன்.

“நீர் நம்பிக்கையற்றவர் போல் தெரிகிறது! உங்களுக்கு என்ன உடல்நலக்குறை, உடன்பிறப்பே!” என்று கேட்டார் ஆயர்.

“உங்கள் மொரட்டுவா அருள்தந்தைக்கு வந்துள்ள அதே நோய்தான்” என்றேன்.

“நீங்கள் நலம்பெற இறைவனிடம் வேண்டிக் கொள்ளட்டுமா?” என்றார் ஆயர்.

“வேண்டவே வேண்டாம்! மருத்துவத்தினால் குணமடையவே நான் இங்கு வந்தேன். திறமைமிக்க மருத்துவக் கவனிப்பினால் குணமடைந்தும் வருகிறேன். என்னைக் குணப்படுத்திய பெருமையில் ஒரு பங்கை நீங்கள் பறித்துக் கொள்வதை நான் விரும்பவில்லை! உங்கள் வழிபாடுகள் பயனில்லாதவை என்பதை நீங்களே அறிவீர்கள்! வழிபாட்டினால் குணமாக்க முடியுமென்றால் நீங்கள் உங்கள் அருள்தந்தையை மருத்துவ மனையில் சேர்த்திருக்க மாட்டீர்களல்லவா? இப்போது, அவர் உடல்நிலை தேறி வருகின்றார். அவரைக் குணமடையச் செய்த சிறப்பில் உங்களுக்குப் பங்கு உண்டு என்று காட்டிக் கொள்ளவே நீங்கள் வந்திருக்கின்றீர்கள்!”

என்னுடைய நேரிடையான, ஒளிவுமறைவற்ற குற்றச்சாட்டுகளைக் கேட்டு ஆயர் பின்வாங்கியபோது, கருமியக்குரு, அவரிடம் வந்து நான் யாரென்பதை அவர் காதருகில் கிசுகிசுத்தார்.

அதன்பின்னர், “நான் நோயுற்ற ஒருவருக்காக இறைவனை வேண்டிக்கொள்வதாகக் கூறியும், அவர் அதை வேண்டாமென்று மறுத்துவிட்ட நிகழ்ச்சி என் வாழ்வில் இதுவே முதல் முறை!” என்று கூறிவிட்டுச் சென்றார் அந்த நல்ல ஆயர்.

சாவை எதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளின் மருத்துவமனை அறைகளும், தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சிறையாளிகளின் சிறை அறைகளும் மதகுருமார்களுக்கு மிகநல்ல வேட்டைக் காடுகளாக இருக்கின்றன!


thamizhanambi44@gmail.com

Series Navigation

தமிழநம்பி

தமிழநம்பி