வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூள்கள் ஆய்வு -2 (Stardust Program: Comet ‘s Coma Sample Analysis)

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


பரிதி ஈர்ப்பு வலையில் ஈசலாய்த்

திரிந்து வரும்

வால்மீன் வால் ஒளியில் வெளியேறும்

வாயுத் தூள்களைப் பிடித்தது

வடிகட்டி!

அண்டக் கோள்களின்

பிண்டத் தோற்றம் அறியவும்,

மேவிய உயிர் மூலம் உளவவும்

ஏவிய விண்சிமிழ்

மீண்டது

நீண்ட குடையில்!

‘பூகோளத்தில் வாழும் கரிம இரசாயனப் பிறவிகள் [Organic Beings] அனைத்தும், ஏதோ ஓர் ஆதி வடிவிலிருந்து இறங்கி வந்து, முதல் மூச்சு எடுத்த ஓர் உயிர்ப் பிராணியாய்த் தோன்றி யிருக்கலாம்! இந்த கோளம் நிலையான ஈர்ப்பாற்றல் நியதியில் பலதடவைச் சுற்றி எளிதான தோற்றங்களில் துவங்கிப் பேரழகிய உருவங்களிலும், பெருவியப்பான வடிவங்களிலும் மாறி மாறி வளர்ச்சி யுற்று மேலும் விருத்தியாகி வருகிறது! அவ்வித உயிரின வளர்ச்சியைப் பற்றிய ஒரு காட்சியைக் காண்பதில் பெரும் மகத்துவம் இருக்கிறது!

சார்லஸ் டார்வின் [உயிர் மூலத்தின் ஆதித் தோற்றம் (1859)]

“வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் ? வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் ? ஏனென்றால் பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீக அண்டமாகக் கருதப் படுகின்றன! அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன என்று ஊகிக்கப் படுகிறது! ஆழ்மோதல் திட்டம் [Deep Impact Project] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும் ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது!”

ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]

‘பூமியின் பெருவாரியான நீர்மை, கரிய இரசாயனங்கள் [Water & Organics], மனித உடல்களில் உள்ள மூலக்கூறுகள் [Molecules] வால்மீன்களிலிருந்து ஒருவேளை வந்திருக்கலாம் என்று நினைக்கிறோம். ஆனால் நீருள்ளதற்கு வேண்டிய ஆதாரம் எதுவும் இதுவரை விண்சிமிழ் மாதிரியில் அறியப்பட வில்லை. பரிதி மண்டலத்தின் கரிம இரசாயன வரலாற்றை அறியப் பெரியதோர் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அடிப்படையில் பார்த்தால், நாம் நமது பூர்வீகப் பாட்டனார், பூட்டனார் ஆகியோரைப் பற்றிதான் கற்கப் போகிறோம்! ‘

டாக்டர் மைக்கேல் ஸொலன்ஸ்கி, இணை ஆய்வாளி, ஜான்ஸன் விண்வெளி மையம்

‘நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மேல் டென்னிஸ் மட்டை போன்ற வடிகட்டித் தட்டில் வால்மீன் தூள்கள் சேமிக்கப் பட்டுள்ளன! சுமார் 150 மைல் தூரத்தில் ஸ்டார்டஸ்ட் விண்கப்பல் வில்ட்-2 வால்மீனுக்கு அருகே பயணம் செய்து, ஆயிரக் கணக்கான துணுக்குகள் வாயுக்கோந்தில் [Aerogel] மோதி யிருப்பதைக் காணும் போது மெய்சிலிர்த்துப் பேருவகை உண்டாகிறது! ஒவ்வொரு தூளும் சுமார் 11 மைக்கிரோ அகண்டு பளிங்கு தானியம் போல் தோன்றியது! அது ஓர் விஞ்ஞான மகத்துவம். ஏனெனில் வால்மீனில் இருப்பது தாதுக்களா அல்லது பளிங்கு போலிருக்கும் கண்ணாடியா [Minerals or Glass] என்று பெரும் வாக்குவாதம் நடந்து வருகிறது. ‘

டாக்டர் டொனால்டு பிரெளன்லீ பணித்திட்ட பிரதம ஆய்வாளி (ஜனவரி 15, 2006)

‘வால்மீனின் மாதிரியை எடுத்து மீளும் ஸ்டார்டஸ்ட் திட்டம் 25 ஆண்டுகள் பாடுபட்டு வெற்றி பெற்ற ஒரு மகத்தான விஞ்ஞான யந்திரப் பணி. வெகு தூரத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனில் பிடித்து வந்த துணுக்குகள், நமது பண்டைய காலத்தைக் காண ஒரு அசுரப் பலகணியைத் திறக்கப் போகிறது! ‘

டாக்டர் பீட்டர் ஸாவ், இணை ஆய்வாளி [Dr. Peter Tsou, Dy Principal Investigator, JPL]

முன்னுரை: ஏழாண்டுக்கு முன்பு (1999 பிப்ரவரி 7) ஏவுகணை வாகனம் டெல்டா: 7000 [Delta: 7000] கேப் கெனாவரல் ஏவுதளத்தில் 370 கி.கிராம் பளுத் தலையோடு கிளம்பியது. அதன் சிரசிலிருந்த விண்கப்பல் 106 மில்லியன் மைல்கள் விண்வெளியில் பயணம் செய்து, வில்டு-2 [Comet: Wild-2] என்னும் வால்மீனின் வால் வீச்சுத் துணுக்கு மாதிரிகளை ஒரு தேன்கூட்டுத் தட்டில் பிடித்துக் கொண்டு, திரும்பி அதே தூரம் பயணம் செய்து, 2006 ஜனவரி 15 ஆம் தேதி யூடா [Utah, USA] பாலை மணலில், தாய்க்கப்பலை விட்டு விண்சிமிழ் பாதுகாப்பாய் வந்திறங்கியது. தாய்க்கப்பல் விண்சிமிழைப் பிரித்து விட்டதும், புவியீர்ப்பு விசையில் கீழிறங்கி, சுமார் 10,000 அடி உயரத்தில் பாராசூட் குடை விரித்து, தரையை அணுகியது. பூமியிலிருந்த நீள்வீச்சு உட்சிவப்புக் கதிர் காமிராக்கள் [Long Range Infrared Cameras] குடை விரிவதையும், விண்சிமிழ் மெதுவாய்க் கீழிறங்குவதையும் தரையாட்சிக் குழுவினருக்குக் காட்டிக் கொண்டிருந்தன. முன்னால் அனுப்பப்பட்ட ஜெனெஸிஸ் விண்சிமிழ் தரைக்கு மீளும் போது குடை விரிக்க முடியாமல் போனதால், 2004 செப்டம்பர் 9 இல் யூடா பாலைத் தளத்தில் விழுந்து உடைந்து போனது!

பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயிரினங்கள், உயிரினங்கள் ஆகியவை தோன்றுவதற்கு வேண்டிய ஆர்கானிக் மூலவிகளைப் புவிமீது கொட்டியவை வால்மீன்கள் என்னும் கருத்தை வானியல் விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வால்மீன்கள், சிற்றுருவக் கோள்கள் [Asteroids] ஆகியவைப் பெருமளவில் மோதிச் சிதைவாகி நின்று போன காலநிலை வந்தது என்று அண்டக் கோள்களின் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது. ஏறக்குறைய அதே யுகத்தில்தான் புவியில் உயிரினமும், பயிரினமும் தோன்றின என்றும் ஊகிப்படுகின்றது. நீர்க் களஞ்சியமும், கார்பன் சார்ந்த மூலக்கூறுகளும் [Carbon Based Molecules] பேரளவில் சேமித்துள்ள வால்மீன்கள், முன்பு ஒரு காலத்தில் பூகோளத்துக்கு வாரி வாரி வழங்கி வந்துள்ளன என்று வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வால்மீன்களில் எடை நிறையில் 50% நீர், (10%-20%) கார்பன் சார்ந்த பண்டங்கள் இருக்கலாம் என்று தற்போது ஊகிக்கப் படுகிறது. வால்மீன்கள் இவ்விதம் பூமியில் உயிரனங்கள், பயிரினங்கள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் படைப்புக் கோள்களாக இருந்திருக்கலாம் என்பதை ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் பிடித்து வந்த மாதிரிகள் நிரூபிக்க உறுதியான வாய்ப்புகள் உள்ளன!

வால்மீன் விண்துகள் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கருதப்படும் பரிதி மண்டல அண்டங்களை வடிவாக்கிய மூலப் பண்டங்களான பூர்வீகப் பச்சை மாதிரியை வில்டு-2 வால்மீன் கொண்டுள்ளதாக ஊகிக்கப் படுகிறது. மேலும் அண்டங்கள் உண்டாவதற்கு முன்பே கிடந்த பழுதுபடாத பண்டைய மாதிரித் தூள்களையும் வில்டு-2 வால்மீன் பெற்றிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் 100 மில்லியன் மைல்களுக்கு அப்பால் ஊர்ந்து கொண்டிருக்கும் வில்டு-2 வால்மீனின் கருத்தலையை [Nucleus of Comet] 150 மைலுக்கு அருகில் பயணம் செய்து படமெடுத்தது ஒரு மகத்தான விண்வெளிப் பயண வரலாற்றுச் சாதனை! விண்சிமிழ் அண்டவெளிக் கற்களிடம் மோதிக் கொள்ளாமல், வால்மீன் வீச்சுத் துணுக்களால் காயப் படாது, வாயுத் தூள்களைப் பிடித்து வந்தது, முதன்முதல் நிகழ்ந்த விண்வெளி விந்தையாகக் கருதப் படுகிறது! ஸ்டார்டஸ்ட் விண்கப்பலின் முக்கிய குறிக்கோள் வில்டு-2 வால்மீனின் அருகில் பயணம் செய்யும் போது, வால்மீனின் வாயு ஒளிமுகில் [Comet ‘s Coma] திரட்சியில் மூழ்கி, அதன் வாயுத் தூசிகளை மாதிரியாகப் பற்றிக் கொண்டு மீள்வது. சில வான்மீன்களின் வாயு ஒளிமுகில் கோளம் [Coma] 60,000 மைல் விட்டமுடன் கூட இருக்கலாம் என்று அறியப் படுகிறது!

2006 ஜனவரி 15 ஆம் தேதி, அதிகாலையில் மணிக்கு 29,000 மைல் வேகத்தில் மீண்டு, யூடாவின் ஸால்ட் லேக் சிட்டிக்கு 100 மைல் தூரத்தில் உள்ள பாலை மணலில் குடை பிடித்திறங்கிய விண்சிமிழின் மாதிரிகளை உளவு செய்ய, ஹெலிகாப்டரில் ஹூஸ்டன் ஜான்ஸன் விண்வெளி ஆய்வு மையத்துக்குக் [Johnson Space Center, Houston Texas, USA] கொண்டு செல்லப் பட்டது! அந்த மாதிரித் துணுக்குகளில் மயிரளவுக்கும் குன்றிய சுமார் ஒரு மில்லியன் வால்மீன் தூள்கள் பிடிபட்டிருக்கும் என்று நம்பப் படுகிறது! ஸ்டார்டஸ்ட் வால்மீன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு 212 மில்லியன் டாலர் [2005 பணமதிப்பு]. 25 ஆண்டுகளாக நாசா வால்மீன் விஞ்ஞானிகள் உழைத்து வெற்றி பெற்ற ஒரு மகத்தான விண்வெளி உளவுத் திட்டமாகக் கருதப்படுகிறது.

வில்ட்-2 வால்மீனின் மாதிரித் தூள் உளவுகள்

அமெரிக்காவின் டெக்ஸஸ் ஹூஸ்டனில் இருக்கும் நாசாவைச் சேர்ந்த ஜான்ஸன் விண்வெளி மையத்தின் விஞ்ஞானிகள், ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் பிடித்து வந்த மாதிரித் துணுக்குகளைக் கண்டு ஆரவாரப் பூரிப்பில் முழ்கிப் போயிருந்தனர். ‘நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மேல் டென்னிஸ் மட்டை போன்ற வடிகட்டித் தட்டில் வால்மீன் தூள்கள் சேமிக்கப் பட்டிருந்தன! சுமார் 150 தூரத்தில் ஸ்டார்டஸ்ட் விண்கப்பல் வில்ட்-2 வால்மீனுக்கு அருகே பயணம் செய்து, ஆயிரக் கணக்கான துணுக்குகள் வாயுத்தூள் பிசினில் [Aerogel] மோதி யிருப்பதைக் காணும் போது மெய்சிலிர்த்துப் பேருவகை உண்டாகிறது! ஒவ்வொரு தூளும் சுமார் 11 மைக்கிரோ அகண்டு பளிங்கு தானியம் போல் தோன்றியது! அது ஓர் விஞ்ஞான மகத்துவதம்; ஏனெனில் வால்மீனில் இருப்பது தாதுக்களா அல்லது பளிங்கு போலிருக்கும் கண்ணாடியா [Minerals or Glass] என்று பெரும் வாக்குவாதம் நடந்து வருகிறது, ‘ என்று பணித்திட்ட பிரதம ஆய்வாளி, டாக்டர் டொனால்டு பிரெளன்லீ கூறினார்.

விண்சிமிழ் எடுத்து வந்த வால்மீன் மாதிரிகள் அகில உலக நாடுகளின் 150 விஞ்ஞானிகளுக்கு உளவு செய்ய அனுப்பப்படும். அனைவரது ஆய்வுச் சிறப்புகளும் 2006 மார்ச் மாதத்தில் அண்டக்கோள், நிலவு விஞ்ஞானக் கூட்டவையில் [Lunar & Planetory Science Conference] அறிவிக்கப்படும். ‘பூமியின் பெருவாரியான நீர்மை, கரிய இரசாயனங்கள் [Water & Organics], மனித உடல்களில் உள்ள மூலக்கூறுகள் [Molecules] வால்மீன்களிலிருந்து ஒருவேளை வந்திருக்கலாம் என்று நினைக்கிறோம். ஆதலால் பரிதி மண்டலத்தின் கரிம இரசாயன வரலாற்றை அறியப் பெரியதோர் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அடிப்படையில் பார்த்தால், நாம் நமது பூர்வீகப் பாட்டனார், பூட்டனார் ஆகியோரைப் பற்றிதான் கற்கப் போகிறோம், ‘ என்று மைக்கேல் ஸொலன்ஸ்கி, ஜான்ஸன் விண்வெளி மையம் இணை ஆய்வாளி பெருமைப் பட்டார்.

விண்சிமிழ் யூடாவில் குடை விரித்துக் கீழிறங்குமா என்பது முதல் ஐயப்பாடாய் நாசா விஞ்ஞானிகளை அலைமோதச் செய்தது! அடுத்த ஐயப்பாடு வடிகட்டுத் தட்டு வால்மீனின் மாதிரித் துணுக்குகளால் தாக்கப்பட்டு உடையாமல் மீள வேண்டுமே என்பது! மூன்றாவது ஐயப்பாடு தட்டின் தேன்கூட்டுத் துளைகளில் தூள்கள் விழுங்கப் பட்டிருக்குமா என்பது! கடைசியில் ஜான்ஸன் விண்வெளி மையத்துக்கு விண்சிமிழ் கொண்டு வரப்பட்டு, அம்மூன்று ஐயப்பாடுகளும் நீங்கி, அற்புதமாக எல்லாம் திட்ட மிட்டபடி நிகழ்ந்து விட்டதை அறிந்து நாசா விஞ்ஞானிகள் பூரிப்படைந்தனர். மனித மயிரளவு தடிப்பில் சில மாதிரித் தூள்களுடன் மில்லியன் கணக்கில் வடிக்கட்டித் தட்டு வாயுக்கோந்தில் [Aerogel] விழுங்கப் பட்டிருந்தன. வால்மீன் தூள்களை உளவி அறிக்கை வெளியிட ஓரிரு மாதங்கள் ஆகலாம். விஞ்ஞான முடிவுகள் 2006 மார்ச்சில் வெளியிடப்படும்.

விண்கப்பல் பாதுகாப்புச் சாதனங்கள் பற்றிச் சில விளக்கம்

ஸ்டார்டஸ்ட் விண்கப்பல் கெனாவரல் முனை ஏவு தளத்திலிருந்து 1999 பிப்ரவரி 7 ஆம் தேதியன்று கிளம்பி 2 பில்லியன் மைல்களுக்கும் அதிகமாக விண்வெளியில் பயணம் செய்துள்ளது. ஒரு பில்லியன் மைல் தூரத்தில் வில்ட்-2 வால்மீனை 150 மைல் அருகில் சென்று, வால்மீன் ஒளிமுகில் [Comet ‘s Coma] வெளியேற்றும் மாதிரித் தூள்களைச் சேகரித்தது. வால்மீனின் அண்டையில் வேகமாய் வீசி எறியப்படும் பாறைத்தூள் கணைகள் தாக்காதபடி விண்கப்பல் ஒருபுறமாகத் திரும்பி, தனது விப்பிள் கவசங்களைப் [Whipple Shields] பாதுகாப்பாய் முன்வைத்துக் கொண்டது. பாறைத் தூள் கணைகள் மோதாதபடி பாதுகாப்புக் கவசத் தடைகள், இரு புறத்திலும் அமைக்கப் பட்ட பரிதிச் சக்திப் பந்தல்களைக் [Solar Power Panels] காத்தன. வால்மீனிலிருந்து வீசும் அதிவேகத் தூள்கற்கள் விண்கப்பலைத் தாக்காமலிருக்க முதலில் அவ்விதப் பாதுகாப்புத் தட்டுகளை அமெரிக்க வானியல் விஞ்ஞானி பிரடெரிக் விப்பிள் [Frederick Whipple] 1950 ஆண்டுகளில் கண்டுபிடித்தார். அவரது பெயரே பின்னால் அத்தகையக் காப்புத் தட்டுகளுக்கு வைக்கப்பட்டது. அத்துடன் செராமிக் போர்வையால் [Ceramic Blankets] விண்கப்பலின் உறுப்புக்கள் மூடப்பட்டு, விண் துணுக்குகள் மோதினாலும் பழுதுகள் நேராதபடிப் பாதுகாக்கப் பட்டன.

அண்டமீன், வால்மீனின் ஒளிமுகில் தூள்கள் சேகரிப்பு

விண்கப்பலில் இறுதியாக மீண்டு பூதளத்தில் இறங்கும் விண்சிமிழில் [Stardust Return Capsule (SRC)] வால்மீனின் அதிவேகத் தூள்களைப் பிடிக்க டென்னிஸ் ராக்கெட் தட்டுபோல் ஒரு தேன்கூடு பஞ்சுப்பிசின் அல்லது கோந்து போல் ஒரு திரவத் திரட்டைக் [Aerogel] கொண்டிருந்தது. பரிதியைச் சுற்றிவரும் வில்ட்-2 வால்மீனுக்கு இணையாக, விண்கப்பல் வினாடிக்கு 3.7 மைல் [6.1 கி.மீ/வினாடி] வேகத்தில் சென்று, வால் தூள்களைப் பஞ்சுப்பிசினில் பிடித்தது! அந்த வேகத்தில் 1-100 மைக்கிரான் நுண்ணளவுத் தூள்கள் பிடிபட்டுப் பிசினில் சேமிப்பாயின. அதே போல் அண்டமீன் தூள்களைச் [Interstellar Particles] சேகரிக்க வினாடிக்கு 18 மைல் [30 கி.மீ/வினாடி] வேகத்தில் விண்கப்பல் பயணம் செய்ய வேண்டும். ஸ்டார்டஸ்ட் திட்டத்தின் வால்மீன் மாதிரித் தூள்கள், அண்டமீன் துணுக்குகள் ஆகியவற்றை 150 மேற்பட்ட அகில நாட்டு விஞ்ஞானிகள் ஓரிரு மாதங்களாய்த் தமது ஆய்வகங்களில் ஆராயப் போகிறார்கள். அவரது அரிய, புதிய கண்டுபிடிப்புகள் யாவும் 2006 மார்ச் மாதம் நடைபெறும் அண்டக்கோள், நிலவு விஞ்ஞானக் கூட்டவையில் அறிவிக்கப்படப் போவதாய் நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

****

தகவல்:

[Picture Credits: NASA Space Center, USA]

1. The Stardust Mission, Silicone Chip Online-NASA Mission, To Catch a Comet [Jan 15, 2006] [www.siliconchip.com.au/cms]

2. Stardust: How to Bring Home a Comet [http://stardust.jpl.nasa.gov/science/feature002.html] [Jan 15, 2006]

3. Public to Look for Dust Grains in Stardust Detectors By: Robert Sanders [Jan 10, 2006] [www.berkeley.edu/news/media/releases/2006/01/10_dust.shtml]

4. Stardust Comet Sample Program [www.astronautix.com/craft/stardust.htm]

5. Genesis Capsule Crash, Space Capsule Slams into Desert [www.abc.net.au/egi-bin] [Sep 9, 2004]

6. Space Capsule Carrying Comet Dust Returns to Earth [http://usatoday]

7. NASA – The Fiery Return of NASA ‘s Space Dust Cargo [Nov 29, 2005]

8. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005

9. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]

10 Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]

11 Watch Deep Impact ‘s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.com July 1, 2005]

12 NASA to Study Comet Collision www.PhysOrg.com [2005]

13 NASA Looks for Signs of Success from Celestial Broadside www.PhysOrg.com [2005]

14 Deep Impact Makes a Better Impact than Planned http://english.people.com.cn/ [July 5, 2005]

815 Deep Impact Slams into Comet By: Anthony Duignan-Cabrera Space.com Managing Editor {July 4, 2005]

15 Thinnai Article on Deep Impact http://www.thinnai.com/sc0707051.html

16 Thinnai Article on the Significance of Deep Impact http://www.thinnai.com/sc0715051.html

17 A Comet Tale By Paul Weissman, Senior Research Scientist, NASA ‘s Jet Propulsion Lab. Sky & Telescope Magazine [Feb. 2006]

18. Probing of Stardust Particles Moves Ahead [www.earthtimes.org/articles (Jan 23, 2006)]

19 Comet Sample Collection Bedazzles Scientists [www.loacalnewsleader.com/elytimes/stories/ (Jan 19, 2006)]

20 Space Flight Now, Stardust ‘s Comet Flyby [www.spaceflightnow.com/stardust/ (Jan 2, 2004)]

21 Scientists Confirm Comet Samples [www.stardust.jpl.nasa.gov/news/status (Jan 8, 2006)]

22 Spacecraft Configuration for Comet Particle Collection, Interstellar Dust Collection.

22 Stardust Mission Succeeds in Returning Comet Dust [www.space.com/scienceastronomy/] (Jan 19, 2006)

24 Scientists Ecstatic About Cosmic Dust [www2.tooeletranscript.com/] (Jan 24, 2006)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 26, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா