மத்தளராயன்
புஷ்ஷும் பிளேயரும் கடந்து ஆக்கிரமித்த ஈராக்கில் சிறைப்பிடிக்கப்பட்ட ஈராக்கியர்களை அமெரிக்க, பிரிட்டாஷ் ராணுவத்தினர் நடத்தும் விதம் பற்றிக் கடந்த வாரங்களில் அறிந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் உலகம் மீளவில்லை.
போன ஆண்டு அந்நாட்டைக் கீழடக்க இவர்கள் படை நடத்திப்போனபோது பிடிபட்ட அமெரிக்க ராணுவ வீரர்களை ஈராக் ராணுவம் தரையில் உட்கார வைத்திருந்த படங்களை அல் ஜெசீரா தொலைக்காட்சியும் பத்திரிகைகளும் வெளியிட்டன. நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் போர்க் கைதிகளை ஜெனிவா கோட்பாடுகளின் படி கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் அலறியவர்கள் இந்த ஆக்கிரமிப்பாளர்கள்.
ஜெனிவாவுக்கு அல்வா கொடுத்து, சதாம் உசைனுக்கு போர்க் கைதி தகுதி கூட இன்னும் தராத இவர்களிடம் இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ? எங்களுக்கு மனித உரிமை பற்றிய ஜெனிவா கோட்பாடுகள் பற்றி ஏதும் சொல்லித் தரவில்லை என்று சொல்லியபடி சிறை பிடித்த இராக்கியரை நக்னமாக்கி அவமானப்படுத்திப் புகைப்படம் எடுத்து மகிழும் அமெரிக்க வீரர்களையும், காண்ட்ராக்டர்களையும் சொல்லிக் குற்றமில்லை. எய்தவர்கள் வாஷிங்டனிலும் லண்டனிலும் சுகமாக இருக்க இந்த விஷ அம்புகளை நொந்து என்ன பயன் ?
அமெரிக்கா நயந்தும் பயப்படுத்தியும் கேட்டபடி ஈராக் மக்களை வல்லரசு ஏகாதிபத்தியத்தில் அடக்கி வைத்திருக்கப் படை அனுப்பி உதவிய நாடுகள் தங்கள் செயலை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். என்றால், படை அனுப்ப மாட்டோம் என்று உறுதியாக இருக்கும் இந்தியாவையும் ஓராண்டு கடந்து நீளும் இந்த ஆக்கிரமிப்பு பாதித்துள்ளது.
கடனை உடனை வாங்கி, அரபு நாட்டில் நாலு காசு சம்பாதித்துத் திரும்பி வந்து நாட்டில் மான்யமாக ஜீவித்திருக்க உத்தேசித்து இங்கே இருந்து கப்பலும் விமானமும் பிடித்துக் கிளம்பிப் போகும் பாவப்பட்ட மக்கள் உண்டல்லவா ? குவைத்திலும் ஜோர்தானிலும் அவர்களைக் கொண்டுபோய் இறக்கி அங்கேயிருந்து முன்னறிவிப்பு இல்லாமல் பக்கத்து நாடான ஈராக் அழைத்துப் போய் அமெரிக்க ராணுவத் தாவளங்களில் கூலிப்பணி செய்ய விட்டு விடும் அயோக்கியத் தனியார் வேலைவாய்ப்பு ஏஜன்சிகள் நாடு முழுக்க, முக்கியமாகக் கேரளத்தில் ஓசைப்படாமல் வேலையைத் தொடங்கியுள்ளன.
குழந்தைத் தொழிலாளர்களையும் கொத்தடிமைகளையும் ஈவிரக்கம் இல்லாமல் அடித்து உதைத்துத் துன்புறுத்தி மனதையும் முதுகையும் உடைக்கும்படி கடின வேலை செய்ய வைக்கும் இந்தியச் சிறுமுதலாளிகளுக்குக் கொஞ்சமும் சளைக்காத மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அமெரிக்க ராணுவம் இந்த ஏழை இந்தியர்களை நாயினும் கீழாக நடத்தியுள்ள விவரங்கள் ஈராக்கிலிருந்து எப்பாடு பட்டோ திரும்பியவர்களால் தினப் பத்திரிகைகளில் விவரிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரத்துக்கு மேலே வேலை, சரிவர உணவும் அடிப்படைத் தேவைகளும் கிட்டாத நிலைமை, மத உணர்வுகளை மதிக்காமல் அடித்து மிதித்துத் துப்பாக்கியைக் காட்டிப் பன்றி மாமிசம் சமைக்க வைப்பது என்று தொடர்கிறது இந்தப் பேயாட்டம். ஆப்பிரிக்கக் கறுப்பு அடிமைகளைக் கொடுமைப் படுத்திய, சுதந்திரத்தின் ஏக காவலர்களான நாடு தன் பழைய வழக்கங்களை இரண்டு நூற்றாண்டு கழித்து ஒரு தயக்கமும் இல்லாமல் தூசி தட்டி எடுத்துத் தொடர்கிறபோது ஆபிரகாம் லிங்கன் தன் கல்லறையில் திரும்பித் திரும்பித் திரும்பிச் சுழன்று கொண்டிருப்பார்.
இன்னொரு வகையிலும் இந்த அநியாயப் போர் இந்தியாவைப் பாதித்துள்ளது. ஓய்வு பெற்ற இந்திய ராணுவத்தினர் சிலரும் அமெரிக்க ராணுவத்திடம் கைகட்டிச் சேவகம் செய்து வருமானம் ஈட்ட அங்கே போயிருக்கிறதாகத் தெரிகிறது. இவர்களின் தொகை இதுவரை வெளியானதாகத் தகவலில்லை.
முப்பத்தைந்து வயதில் ஓய்வு பெறும் இந்திய ராணுவ வீரனுக்கு இரண்டாயிரம் ரூபாய் மாதாந்திரப் பென்ஷன் வந்தாலே அதிகம். இளமையின் இறங்கு வெய்யில் காலத்தில் இப்படி வீட்டுக்கு அனுப்பப்பட்ட இவர்கள் அலுவலக, தொழிற்சாலைக் காவலர்களாகப் பணியெடுத்துத்தான் அரை வயிறாவது குடும்பத்தோடு சாப்பிட்டு வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம். மனசாட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் காசுக்கு ஆசைப்பட்டு, கூலிப்படையாக இவர்களை ஈராக்குக்குப் புறப்படத் தூண்டுவதும் இந்தப் பரிதாபநிலை தான்.
எல்லாக் கலர் அரசியல்வாதிகளும் தேர்தலில் மூழ்கியிருக்கும் நேரத்தில் ஈராக்கில் அவதிப்படும் இந்தியர்களைப் பற்றி யோசிக்க இங்கே யாருக்கு நேரம் இருக்கிறது ?
****
ஞாயிற்றுக்கிழமைப் பத்திரிகை இணைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாகரன் ‘பதறாதெ முன்னோட்டு ‘ என்று பதட்டமே இல்லாமல் தான் குடும்பத்தோடு முன்னால் முன்னால் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கை வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார். 1975-ல் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனப்படுத்தியதை நிறையச் சர்க்கரை தடவி எமர்ஜன்சி ஒரு இனிப்பு மிட்டாய் என்று அவர் பாட்டுக்கு வழங்கிக் கொண்டிருப்பதை மேய்ந்தபோது ‘அச்சும்மான் ‘ பற்றி அவர் எழுதியிருந்தது கண்ணில் பட்டது.
எமர்ஜென்சி பிரகடனமான நேரத்தில் அச்சும்மான் ஆலுவாயில் இரண்டு பிளாக் மார்க்கெட் வியாபாரிகளை உடனே அரஸ்ட் செய்ய உத்தரவு பிறப்பித்து, இந்திராவுக்குச் சகல விதத்திலும் ஆதரவு பிரகடனப்படுத்திவிட்டு, தனக்கு உடல்நிலை சரியில்லாததால் சோவியத் யூனியனுக்குச் சிகிச்சைக்குப் புறப்பட்டுப் போனதைப் பற்றிய குறிப்பு அது. கருணாகரன் சார் குறிப்பிடும் அச்சும்மான் எமர்ஜென்சி காலத்தில் கேரள முதலமைச்சராக இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மறைந்த தோழர் அச்சுதமேனோன் தான். சளி பிடித்து நாலு தும்மல் அடுக்காகப் போட்டாலும் தலையில் மப்ளரைச் சுற்றிக் கொண்டு மாஸ்கோவில் டாக்டரைப் பார்க்கப் போவது என்ற அந்தக் கால இந்தியக் கம்யூனிஸ்ட்களின் எழுதா வழக்கத்தை அனுசரிப்பது தவிர வேறே எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர் சகாவு மேனோன்.
எல்லாரையும் எல்லாவற்றையும் பற்றித் தெளிவாக அறிந்து தீரச் சிந்தித்து முடிவெடுக்காமல், நல்ல நோக்கத்தோடு அவசரமாக ஏதாவது காரியம் செய்யப்போய் சகதியை வாரி மேலே பூசிக் கொள்வது அப்பாவியான தனிமனிதர்கள் மட்டுமில்லை, அரசியல் கட்சிகளும் தான்.
சிறந்த நிர்வாகியும், நேர்மையாளருமான அச்சுத மேனோனும் அவர் சார்ந்திருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும் அவசரநிலையால் நாட்டுக்கு நல்லதே நடக்கும் என்று அவசர அவசரமாக முடிவு செய்து இந்திரா அரசுக்குப் பக்க பலமாக நின்றார்கள். இந்திராவின் இருபது அம்சத் திட்டம் பிளஸ் சஞ்சய் காந்தியின் ஐந்து அம்சத் திட்டம் என்றவைகளை செங்கொடி கட்டி நிறைவேற்றும் உற்சாகத்தில் அவசரநிலையின் குரூரமான இருளடர்ந்த பிரதேசங்களை அவர்கள் அறியாதே போனார்கள். ஏ.கே.கோபாலன், ஈ.எம்.எஸ், குட்டிமாளு அம்மாள், தாமஸ், கெளரி தாமஸ், அச்சுத மேனோன் போன்ற தலைவர்கள் கட்சி பிளவுக்கு முன்பும், அவர்களில் பலர் அப்புறமும் தம் வாக்காலும் செயலாலும் பெருமை சேர்த்த பொதுவுடைமை வரலாற்றில் ஆழமாகப் படிந்த களங்கமாகப் போனது இது. கருணாகரன் இதெல்லாம் தன் கதையில் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்.
எமர்ஜென்சியைப் பொற்காலமாகக் கருணாகரன் வர்ணித்துக் கொண்டிருக்க, தேர்தலுக்கு முகுந்தபுரம் வேட்பாளராக நிற்கும் அவருடைய திருமகள் பத்மஜா வேணுகோபாலன் அவசரநிலைக் காலத்தில் நடந்த ராஜன் கொலை பற்றிப் போன வாரம் உதாசீனமாக நாலு வார்த்தை சொல்லி வைத்தார். கோழிக்கோடு பொறியியல் கல்லூரி மாணவனாக இருந்து, தீவிரவாதி என்று காவல்துறையால் கைது செய்யப்பட்டுச் சிறையில் இறந்து போனவர் ராஜன்.
தன் மகனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் அரசாங்க அலுவலகங்களுக்குக் கால்தேய நடந்து எத்தனையோ மாதங்களுக்குப் பின் அவன் இறந்த செய்தி அறிந்து துடித்த ராஜனின் தந்தை ஈசர வாரியர் இன்னும் தன் சோகமான நினைவுகளோடு தொண்டு கிழவராக ஜீவித்திருக்கிறார். பத்மஜாவின் அவமானகரமான வார்த்தைகளால் ஆழமாகக் காயப்பட்ட வாரியர் சக்கர நாற்காலியில் ஊர்ந்தபடியே மறுபடி நீதிமன்றப் படி ஏறி இருக்கிறார். வழக்கு முடிவுக்கு வரும்வரை அவரும் நாற்காலியும் இருக்க வேண்டும்.
ராஜன் மேல் பிரயோகிக்கப்பட்ட அரசு வன்முறையைச் சித்தரிக்கும் ஷாஜி என்.கரனின் ‘பிறவி ‘ மலையாளத் திரைப்படத்துக்கு அரசு விருது கிடைத்தது முரணில் விளையும் அங்கதமான துயர நகைச்சுவை.
இதேபோல், நிறுவனம் சார்ந்த வன்முறையைச் சித்தரித்த அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘கதாபுருஷன் ‘ படத்தைப் போனவாரம் இன்னொரு முறை பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவருடைய ‘மதிலுகள் ‘ படமும் சமீபத்திய ‘நிழல்குத்து ‘ம் இந்த வன்முறை பற்றிய விமர்சனத்தை முன் வைப்பவையாகவே முதல் பார்வையில் படுகின்றன. நிழல்குத்தில், காந்தியவாதிகள் சர்க்காவில் நூற்கும் நூல் சிறைச்சாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியைத் தூக்கிலிட்டுக் கொல்லப் பயன்படும் தூக்குக் கயறாவதாகக் காட்டுவது இந்த விமர்சனம் சார்ந்த சக்தி வாய்ந்த ஒரு படிமம்.
அடூரின் மகள் போனவாரம் முக்கியமான அரசு அதிகாரியாகப் பொறுப்பேற்று இருக்கிறார். மும்பை உல்லாஸ் நகரில் டெபுடி போலிஸ் கமிஷனராகப் பணியாற்றத் தொடங்கிய அசுவதி ஐ.பி.எஸ் தான் அவர்.
****
சீனா பற்றிய செய்தி எதுவாக இருந்தாலும் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்கத் தவறுவதில்லை. ‘கேங்க் ஓஃப் ஃபோர் ‘ என்ற சீன நால்வர் அணியின் வளர்ச்சி, வீழ்ச்சி பற்றிய பழைய அரசியல் ரகசியமா, ஆங்கிலம் சரியாக உச்சரிக்க நாக்கு ஆப்பரேஷன் பண்ணிக் கொள்கிற சீனப் பெண்களா, பீய்ஜிங்கில் சார்ஸா, சீனாவின் அசுர வேகத் தொழில் வளர்ச்சியா – எல்லாமே உலகப் பத்திரிகைகளில் குறைந்தது இரண்டாம் பக்கத்தையாவது பிடித்து விடும்.
செஞ்சீனத்தின் மக்கள் தலைவராக இருந்த காலஞ்சென்ற மாசேதுங் குளிக்க மாட்டார். பல்லே தேய்க்க மாட்டார். எண்பது வயசிலும் இருபது வயசுப் பெண்களைக் கண்டால் விடமாட்டார் என்பது போன்ற ‘செய்தி ‘கள் காரசாரமாகப் பரிமாற்றப்பட்ட காலம் உண்டு. அவர் ரயிலில் போகும்போது, சீனாவில் பசுமைப் புரட்சி வெற்றி பெற்று வளம் கொழிப்பதாகத் தலைவருக்குக் காட்டுவதற்காக மெனக்கெடுவார்களாம் சீன அரசு அதிகாரிகள். ரயில் போகிற வழி நெடுகக் காசு கொடுத்து விவசாயிகளை நிறுத்தி வைத்து ஏற்கனவே விளைந்த நெல் கதிர்களைப் பொலியோ பொலியென்று அடித்துத் தூற்றி நெல்மணிகளை அம்பாரமாகக் குவிக்க வைப்பார்கள் என்பது போன்ற நிஜமா பொய்யா என்று தெரியாத தகவல் துணுக்குகள் இன்னொரு ரகம்.
இந்த வாரம் வந்த சீனா பற்றிய செய்தி அவர்கள் வெளியிட்ட உலக வரைபடம் பற்றியது. சிக்கிம் இந்திய நாட்டில் இணைந்து கிட்டத்தட்ட முப்பது வருடம் ஆனாலும் இதுநாள் வரை சிக்கிமை அவர்கள் தயாரித்த மேப்களில் எல்லாம் தனி நாடாகத் தான் காட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது பெரிய மனது பண்ணி சிக்கிமை இந்திய எல்லைக்குள் கொண்டு போய்ப் போட்டு விட்டார்களாம்.
போன ஆண்டு சீன அரசின் இணையத் தளத்தில் அண்டை நாடுகளின் பட்டியலில் சிக்கிம் திடாரென்று காணாமல் போனதில் தொடங்கிய நல்ல முன்னேற்றம் இது என்று அரசியல் நோக்கர்கள் – இவர்கள் நோக்கின நேரம் போக என்ன செய்வார்கள் ? – கருதுகிறார்களாம். கூடிய சீக்கிரம் இந்திய, சீன எல்லையை நிர்ணயிக்கும் மக்மோகன் எல்லைக் கோட்டையும் சீனா அங்கீகரிக்கலாம் என்று தெரிகிறது.
ஷெர்வானியில் சிவந்த ரோஜா மலரை அணிந்து மகிழ்ந்து நின்ற நேருவும், பஞ்ச சீலத்தை இலவம் பஞ்சாகக் காற்றில் பறக்க விட்டு அவருக்கும் கிருஷ்ண மேனோனுக்கும் பட்டை நாமம் பறக்கச் சாற்றிய சீனப் பிரதமராக இருந்த சூ என் லாயும், குளித்துப் பல் தேய்த்த சேர்மன் மாவோவும் நூறு மலர்களை மலர வைத்து மேலே இருந்து தூவிக் கொண்டிருக்கிறது மத்தளராயனுக்கு முன்னோர் சகவாசத்தால் காணக் கிடைக்கிறது.
– மத்தளராயன்
eramurukan@yahoo.com
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 19
- பிறந்த மண்ணுக்கு – 2
- ‘சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்… ‘
- கட்டுகள்
- உள் முகம்
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 1
- வாரபலன் – மே 13, 2004 – ஈராக் இந்தியசோகம் ,எமெர்ஜென்சி முன்னோட்டு, இந்திய வரைபடம் சீனாவின் கபடம்
- அடுத்த பிரதமராக கலைஞர் கருணாநிதி வரவேண்டும்
- உலக வங்கி அறிக்கை : ஆப்பிரிக்க ஏழ்மை 82 சதவீதம் அதிகரிக்கும்
- கூட்டணிகளா, இன்றேல் வேட்டணிகளா ?
- சன்மார்க்கம் – துன்மார்க்கம்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 5
- ஆக்கலும் அழித்தலும்
- இந்தியத் தேர்தல் 2004 – ஒரு பார்வை
- சில குறிப்புகள்
- சமீபத்தில் படித்தவை 2- இளங்கோவன், அசதா, எம் வேதசகாயகுமார், இடாலோ கால்வினோ(தமிழாக்கம் பிரம்மராஜன்), சந்திரன், மணா, உமா மகேஸ்வரி,
- கந்தர்வனும் கடைசிக் கவிதையும்
- புதிய வடிவத்தை¢ தேடி (தழும்பு – கன்னடச் சிறுகதைத் தொகுதியின் அறிமுகம்)
- ஞானப்பல்லக்கு
- சொல்லவா கதை சொல்லவா…
- கடிதங்கள் – மே 13, 2004
- ராமாயணம் – நாட்டிய நாடகம் – இந்தியா இந்தோனேசியா குழுக்கள்
- கம்பராமாயணம் குறுந்தகட்டில்
- கடிதம் மே 13,2004 – ரஜினி, டி ஆர் பாலு
- கடிதம் மே 13,2004 – ஜோதிர்லதா கிரிஜாவுக்கு: வருத்தமும் விளக்கமும்
- இரு கவிதைகள்
- வேடம்
- விதி
- இந்தியா ஒளிரக்கூடும்…
- அன்புடன் இதயம் – 17. கல்யாணமாம் கல்யாணம்
- கடவுளின் மூச்சு எப்படிப்பட்டது
- உள்ளும் புறமும் எழிற் கொள்ளை
- அரவணைப்பு
- வெள்ளத்தில்…
- விபத்து
- திடார் தலைவன்
- சலிப்பு
- வடு
- நீ எனை தொழும் கணங்கள்….!
- எங்களை அறுத்து
- வலிமிகாதது
- புத்தரும் சில கேள்விகளும்
- உன்னில் உறைந்து போனேன்…
- .. மழை ..
- கவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்
- சொல்லின் செல்வன்
- தமிழவன் கவிதைகள்-ஐந்து
- மனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்
- தேனீ – சாதீய கட்டமைப்பு
- மலைகளைக் குடைந்து தோண்டிய ஜப்பானின் நீண்ட செய்கன் கடலடிக் குகை [Japan ‘s Seikan Subsea Mountain Tunnel (1988)]
- காதல் தீவு