மத்தளராயன்
இந்தப் பொதுத் தேர்தலில் இந்தியா பிரகாசிக்கிறதோ என்னவோ, தமிழகம் வழிகாட்ட மற்ற மாநிலம் எல்லாம் மறுபேச்சு பேசாமல் அதேபடிக்கு நடக்கிறது. வேறெதிலும் இல்லை. அகில இந்திய அளவில் தற்போது அரசியல் கட்சிகள் அடித்துப் பிடித்துக் கொண்டு சினிமா நடிக நடிகைகளைக் கட்சியில் சேர்க்க போட்டி போட்டுக்கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். மார்க்கெட் போன நடிகரிலிருந்து சின்னத்திரை சீரியலில் நாலு சீனில் தலைகாட்டி மறைகிற நடிகை வரை யாரையும் விட்டுவைக்கவில்லை இவர்கள். அரசியல் கட்சிகளின் திரை மோகம் நடிகர்களைத் தாண்டி இசையமைப்பாளர், பாடகர் என்று நீள்கிறது. சினிமா டைட்டில் கார்டில் இடம் பெறும் எல்லாரையும் இனிமேல் எல்லா அரசியல் கட்சிகளிலும் பார்க்கலாம் என்று தெரிகிறது.
ஹேமமாலினி, யுக்தாமுகி, மலையாள ஆர்ட் சினிமா நடிகர் பரத் கோபி என்று ஒரு பட்டாளம் பா.ஜ.கவிலும், கோவிந்தா, ஜீனத் அம்மன், ஓம் புரி, அஸ்ரானி என்று இன்னொரு கும்பல் காங்கிரசிலும் ஐக்கியமாக, அனந்த் நாக் தேவே கெளடாவின் ஜனதா தளத்தில் திரும்ப இணைந்து விட்டார். கூடவே தெலுங்கு தேசத்திலிருந்து முலாயம் சிங்க் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாவுக்குத் தாவிய ஜெயப்ரதா. தனித் தெலுங்கானா மாநிலம் வேணும் என்று கட்சி கட்டி நின்றாலும் ஆந்திரத்தில் தெலுங்கானா பிரதேசத்துக்கு வெளியே பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக நிற்கும் விஜயசாந்தி.
அசாம் மாநிலத்தின் மலைப் பிரதேச இசையில் விற்பன்னரான இசையமைப்பாளர் பூபேன் ஹசாரிகா பா.ஜா.காவில் சேர்ந்தபோது, ‘சோனியா என்னை தேனீருக்குத்தான் கூப்பிட்டார். ஆனால் வாஜ்பாயோ விருந்தே வைத்தார் ‘ என்று சொன்னதன் பொருள் இன்னும் விளங்கவில்லை. என்னத்துக்குப் பேச்சு என்று பாடிக்கொண்டே போய் வாஜ்பாய் கட்சியில் சேர்ந்துவிட்ட பின்னணிப் பாடகர் குமார் சானுவுக்கும் போட்டியாகக் காங்கிரசில் ரவீந்திர ஜெயின்.
சினிமாவிலிருந்து இத்தனை பேர் அரசியலுக்குப் போனதாலோ என்னவோ அரசியலில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமான ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவியான தோழியர் விருந்தா (பிருந்தா) கராட். ஒரு கலைப்படத்தில் நடிக்கும் பிருந்தாவுக்கு, கொங்கணா சென்னின் அம்மா வேடம் கிடைத்திருக்கிறதாகத் தகவல்.
சினிமாவோடு, கிரிக்கெட்டும் அரசியலை வெகுவாகப் பாதிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நாள் தள்ளிக்கொண்டே போகிறது. அறிக்கை வெளியாக தில்லி ஜன்பத் கதவிலக்கம் பத்து வீட்டில் நாள் குறிக்கும்போதெல்லாம் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் மாட்ச் குறுக்கிடுகிறது. ராவல்பிண்டி, கராச்சி, லாஹூர் என்று இந்தியா மொத்தமும் தொலைக்காட்சி கிரிக்கெட் விளையாட்டில் ஒன்றியிருப்பதால், மேட்ச் இல்லாத தினத்துக்கு அரசியலைத் தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம்.
பா.ஜ.க வெங்கையா நாயுடு மதியத்துக்கு மேல் பத்திரிகையாளர் சந்திப்பு என்று அறிவிக்க, அந்த நேரத்தில் டே யண்ட் நைற் மேட்ச் இருக்கு அண்ணே என்று யாரோ காதைக் கடிக்க, தேவுடா என்று அவசரமாகப் பகல் ஒரு மணிக்கே நிருபர் கூட்டத்தைத் தன் வீட்டிலேயே கூட்டிப் பசி வேளையில் நிருபர்களுக்கு ஆறிப்போன செய்தியும், சூடான சமோசாவுமாகக் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு டி.வியைப் போட்டுக் கொண்டு மேட்ச் பார்க்க உட்கார்கிறார். நவ்ஜோத்சிங்க் சித்துவோடு மொத்த இந்திய கிரிக்கெட் டாமையும் பா.ஜ.கவில் சேர்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நாயுடுகாரு சமோசாவைக் கடித்துக்கொண்டே யோசித்திருப்பார்.
***
அமரன்மார் வாணீடுன்னோர்
அயல் பக்கத்துள்ளொரு நாட்டில்
பலநாளாய் உல்ஸவம் அத்ரே,
பலரும் போகுன்னுண்டத்ரே!
பலமாதிரி வேஷக்காரும்
பலமாதிரி வாத்யக்காரும்
பல சங்கீதஜ்ஞன்மாரும்
ஒருமிச்சுத் தகர்க்குகயத்ரே!
கண்ணுகள் உண்டென்னாலும் ஞான்
காணேண்டது கண்டில்லல்லோ;
காதுகள் உண்டென்னாலும் ஞான்
கேள்க்கேண்டது கேட்டிட்டல்லோ!
கள்ளம் பறயுன்னு லோகம்
கண்டவரில்லாரும் பாரில்.
வண்டி வராராயி வேகம்
வேண்டதொருக்கேண்டே ஞானும்.
(வானவர் நாட்டில்
வருடங்களாய்த் திருவிழா.
போகிறார் எல்லோரும்
…. …. …. ….
வண்டி வருகிறது வேகமாய்
வேண்டியதெல்லாம் எடுத்து வைக்க வேணும்.)
இந்த ஆண்டு கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாளக் கவிஞர் எம்.என்.பாலூரின் கவிதை ஒன்று தொடங்குவது இப்படி. மத்திய சாகித்ய அகாதமி வெளியிட்ட ‘சமகாலிக மலையாளக் கவிதகள் ‘ தொகுப்பில் உள்ளது இக்கவிதை.
பாலூர் ஒரு கதகளி ஆட்டக கலைஞர் என்றும் அரசு அலுவலகத்தில் ஜீப் டிரைவராக உத்தியோகம் பார்த்தவர் என்றும் புத்தகத்திலே பின்குறிப்பு.
கதகளி அரங்கிலே பிரபலமானவராக இருந்தும் சாயாக்கடை வைத்துப் பிழைக்க வேண்டி வந்த அந்தக் காலக் கதகளி ஆட்டக்காரர் ஒருவரைப் பற்றி கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருந்தார்.
கதகளியும், கவிதையும் தெரிந்த பாலூரின் ஜீப் சாகித்ய அகாதமிக்கு வந்து சேர்ந்தது பற்றி எழுதக் கிருஷ்ணன் நாயர் இன்று உயிரோடு இல்லை.
***
சத்யன் அந்திக்காட்டின் ‘மனசின் அக்கரெ ‘ படத்தில் ஒரு பூந்தென்றலாக எத்தனையோ வருடங்களுக்கு அப்புறம் ‘செம்மீன் ‘ கருத்தம்மா ஷீலா. கொச்சு தெரசா என்ற வயதான கிறிஸ்துவ ஸ்திரியாக ஷீலா அபிநயித்திருப்பது மலையாள சினிமாவின் பொற்காலங்களின் நினைவை வரவழைக்கிறது. நசீரும், சத்யனும் தழைய உடுத்த வேட்டியோடு நதிக்கரைப் பக்கம் ஏசுதாஸ் குரலில் பாடிக்கொண்டே நடக்க, படகுக்கு அப்புறமோ, ஆற்றுக் கடவிலோ மறைந்தும் மறையாமலும் நின்று ஷீலாவும், சாரதாவும், ஜெயபாரதியும் நின்ற நிமிடங்கள் அவை.
கேரள அரசாங்க அவார்டுகள் இரண்டு வாரம் முன்னால் அறிவிக்கப்பட்டபோது, ‘மனசின் அக்கரெ ‘ ஷீலாவுக்கு விருது எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் விருதுகளைத் தேர்ந்தெடுத்த நீதிபதிகளின் சார்பாக, இயக்குனர் ஹரிஹரன் அறிவித்தது – ‘கொச்சு தெரசா ஒரு செயற்கையான பாத்திரம் ‘.
ஆனாலும், மாத்ருபூமி பத்திரிகையின் வருடாந்திர விருதுக்காக ஷீலா சேச்சியை மகிழ்ச்சியோடு தேர்ந்தெடுத்தவர் நீதிபதியான கமல்ஹாசன்.
இந்த ஆண்டு விருது பெற்ற படங்களில் குறிப்பிடப்பட வேண்டியது பழைய நடிகரும், தற்கால இயக்குனருமான சந்திரன் இயக்கிய ‘பாடம் ஒண்ணு – ஒரு விலாபம் ‘. இஸ்லாமிய யுவதியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இப்படத்துக்குக் கிடைத்த கவனிப்பு, அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘நிழல் கூத்து ‘க்குக் கிட்டாது போனது. தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளைத் தூக்குமரத்தில் ஏற்றிக் கொல்லும் ஆராயராக நடித்த ஒடுவில் உன்னிகிருஷ்ணனும் அடூரோடு கவனிக்கப்படாமலே போனது துரதிர்ஷ்டம்.
‘என் படங்களை விமர்சகர்கள் புரிந்து கொள்வது தவறான விதத்தில் இருக்கிறது ‘ என்று அடூர் சொல்ல, ‘இத்தனை நாள் சராசரி ரசிகனுக்குத் தான் இவர் எடுத்த படம் புரியவில்லை; இப்போது விமர்சகர்களுக்கும் கூடப் புரியவில்லையாம். அப்பாடா, நிம்மதி ‘ என்று சந்தோஷப்படுகிற சினிமாப் பத்திரிகை ஒன்றைப் புரட்டியபோது சிரிப்புதான் வந்தது. அடூரை நினைத்து இல்லை, மலையாள சினிமா ரசனை போய்க் கொண்டிருக்கும் திசையை நினைத்துத்தான்.
****
‘Public interest ‘ என்பது வேறு. ‘what the public is interested ‘ என்பது வேறு என்கிறார் டைம்ஸ் ஓஃப் இந்தியாவில் சுவாமிநாதன் அங்க்லேஷ்வரய்யர்.
தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பை கேபிள் டிவி கம்பெனியான டென் ஸ்போர்ட்ஸ் ஏலம் எடுக்க, தூர்தர்ஷன் அந்தக் கம்பெனி கேட்ட தொகையைக் கொடுக்க முடியாமல் அதில் கொஞ்சம்போல் வேணுமானால் தரோம் என்று அரைமனசோடு சொல்ல, பெரிய ற போட்ட தகராறு.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தக் கிரிக்கெட் பந்தயங்கள் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கைக்கு எட்டாத கனியாகப் போய்விடுமோ என்று நீதிமன்றத்தில் உடனே பொதுநல வழக்கு. டென் ஸ்போர்ட்ஸ் முதல் ஒரு நாள் மேட்சை தூர்தர்ஷனுக்கு மட்டுமில்லாமல் மற்றக் கேபிள் டிவிகளுக்கும் இலவசமாக ஒளிபரப்பத் தருவதாக அறிவிக்க, கொஞ்சம் போல் பரபரப்பு ஓய்ந்தது.
ஓசியில் வந்து விழுந்த ஒளிபரப்பில், டென் ஸ்போர்ட்ஸ் பிடித்த விளம்பரங்களைக் கத்தரித்து விட்டு, தான் வாங்கிய விளம்பரங்களை நுழைத்து தூர்தர்ஷன் காசு பார்த்தது அரசுத் துறைக்குக் கவுரவம் அளிக்கும் செயலாகத் தெரியவில்லை.
ஜனங்களுக்குப் பிடித்த எல்லாம் அரசாங்கம் மூலம் இலவசமாகத் தரவேண்டும் என்றால், போன வருடம் ஸ்டார் டிவியில் சக்கைப் போடு போட்ட அமிதாப் பச்சனின் ‘கோன் பனேகா கரோட்பதி ‘ க்விஸ் நிகழ்ச்சியையும் தேசியமயமாக்கி இருக்க வேண்டாமா என்கிறார் சுவாமிநாதன்.
ராத்திரி எட்டு மணிக்கு சுருதி சுத்தமாக எல்லா மொழிச் சானல்களிலும் அழுது தீர்க்கும் சீரியல்களை விட்டுவிட்டாரே அவர்.
****
மத்தளராயன்
eramurukan@yahoo.com
- முரன்புதிரான சவுதி அரேபியாவும் முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானும்
- இந்தியாவில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை
- தாமதமான காரணம்
- வட அமெரிக்காவில் மனிதரைக் கொல்லும் அசுர வலுக்கொண்ட இடிப்புயல் சூறைக்காற்றுகள் (North America ‘s Killer Thunderstorm Tornadoes)
- பேரீச்சம்பழ மிட்டாய்
- கேரட் அல்வா
- கடலைப்பருப்பு அல்வா
- தாய்மையின் குரல் – வாசிப்பனுபவம் (எட்டுத் திசையெங்கும் தேடி-பாவண்ணன். தினமணிக்கட்டுரைகளின் தொகுப்பு)
- ஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும்
- நமது இலக்கிய மரபு – பாிபாடலில் திருமால் –
- கடிதங்கள் மார்ச் 25 2004
- திரு.பித்தன் அவர்களுக்கு கடிதம்
- வேதனையின் நிழல்…
- ஓடாமல் இருப்பதே ஆச்சரியம்
- காதல் பொதுவானது
- தரிசானாலும் தாயெனக்கு!
- தொடர்ந்து வரும் நட்பு..
- கேட்க முடியா ஓசை
- ஞாயிற்றுக்கிழமை மின்விசிறி
- இட்லிப் பானையும் ரொட்டித் துண்டும்
- அனிதா கவிதைகள்
- புத்தர் ஏவிய தூதுப் புறாக்கள்
- மானுடம்
- தனக்கான நிகழ் காலங்கள்
- மதுபானக் கம்பெனியால் நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்!
- கதை 01 – அலீ தந்த ஒளி
- கொரியர் (ஓ. ஹென்றி யின் ‘By Courier’ கதையின் மொழிபெயர்ப்பு)
- வடு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்தொன்று
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 17
- புழுத் துளைகள் (குறுநாவல்) – பகுதி 1
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 12
- சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப்பட விழா
- இருபது/இருபது
- வாரபலன் – மார்ச் 25,2004- கட்சிக்கு ஆள்சேர்ப்பு, மலையாளக்கவிதை, சினிமா, தேசியமயம்
- காவிப் பயங்கரமும் காஞ்சி சங்கராச்சாரியும்
- வாழ முற்ப்படுதல்.
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 2
- பெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்
- மெக்ஸிக்க மணித்துளிகள்
- சூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு
- நண்பன்
- நான்
- ஜென் கதை ஒன்று
- இயன்றது
- தொடரட்டும் பயணம்…!!!
- அன்புடன் இதயம் – 12 – நெருப்பு