மத்தளராயன்
நண்பர் பா.ராகவன், திருட்டு விசிடிகளில் கொஞ்சம் மேம்பொடி கலந்த ஒரு ரகம் பற்றிக் குறிப்பிட்டார். சென்சாருக்குப் போட்டுக் காட்டி, அவர்கள் வெட்டச் சொன்ன காட்சிகளை ‘வெட்டப்பட வேண்டியது ‘ என்ற குறிப்போடு சேர்த்த திரைப்பட விசிடி அது. இல்லாவிட்டால், அந்த மாதிரிக் கத்தரித்ததை எல்லாம் ஒட்டுமொத்தமாகப் படத்தின் முன்னால் சேர்த்து விடுவார்களாம். இந்த மாதிரி விசிடிகளுக்கு நிறைய டிமாண்ட் போல் தெரிகிறது. இவை வெளியே வருவதில் படத்தோடு சம்பந்தப்பட்டவர்களும் காரணமாக இருக்கலாமாம்.
விலக்கப்பட்டதை ருசிக்கத் தன்னிச்சையாக எழும் ஆர்வத்தைக் குறி வைத்து எழும் முயற்சிகள் தயாரிப்பாளர்கள் தரப்பிலேயே உருக் கொள்கின்றன என்றால் அதைவிடக் கேவலம் எதுவும் இருக்க முடியாது.
திரையரங்குகளில் சில நேரம் நான் கவனித்த காட்சி – ஒரு அறிவிப்புப் பலகையைச் சுற்றிக் கூட்டமாக நின்று பலர் சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருப்பது. என்னவாகத்தான் இருக்கும் அது என்று நானும் தலையை நீட்ட, அது சென்சார் போர்டின் அறிக்கை. திரையிடப்படும் படத்தில் எந்தக் காட்சிகள் நீக்கப் பட்டன என்ற பட்டியல். கதாநாயகியின் இந்த உடலுறுப்பு இந்த அளவுக்குத் தெரிவதால் அல்லது அசைவதால், கதாநாயகன் கதாநாயகி மீது சாய்ந்து ஆடுவது இந்தக் குறிப்பிட்ட செயலைப் போல இருப்பதால்.. இப்படி ஏகப்பட்ட காரணங்களால் வெட்டப்பட்ட காட்சிகள் பற்றிய விவரம்.
கிளர்ச்சியை உண்டாக்க சரோஜாதேவி புத்தகங்கள் தேவையில்லை, அரசாங்க அறிக்கையே போதும்.
****
காமனஹள்ளிக்குக் குடிபெயர்ந்தேன். பெங்களூரின் ஈசானிய மூலையில் ஊரோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பகுதி. புறநகரின் சாமுத்ரிகா லட்சணங்களான பிளாஸ்டிக் டப்பா மற்றும் எவர்சில்வர் பளபளப்பு எலிப்பொறி விற்கும் அங்காடி, ஐயங்கார் பேக்கரி, நீலகிரிஸ் குட்டி சூப்பர் மார்க்கெட், பிராந்திக் கடை, பிரவுசிங் செண்டர், பல் டாக்டர், தள்ளுவண்டியில் ஹைதராபாத் பிரியாணி, பனாரசி பத்தா ஜர்தா பான்வாலா வகையறாக்கள் இனம் புரியாத ஆசுவாசம் தருகின்றன. தெருவுக்கு ஒரு சாந்தி சாகர் ஓட்டல். மும்பையில் இட்லி வடை ஓட்டல் திறக்கிறவர்களெல்லாம் பிதாமகனாகக் காமத் பெயரை வளைத்துப் பிடித்து ஒட்டிக் கொள்வது போல், இங்கே சாந்தி சாகரம்.
‘பட்டரே, ஒன் பை டூ காப்பி கொட்றீ ‘ என்று விண்ணப்பித்து விட்டு ஒண்ணரை டேபிள் ஸ்பூன் காப்பியை அரை மணி நேரம் ருசித்தபடி வட்ட மேஜையைச் சுற்றி நின்று குமார் பங்காரப்பா பா.ஜ.கவில் சேர்ந்தது பற்றி சிலாகித்தும் எதிர்த்தும் பேசுகிறவர்களின் பொதுவான மொழி தமிழ் என்றால், ஆமாவா சார் என்று கேட்காதீர்கள். ஆமா தான். குமார் பங்காரப்பா நடிகர் என்பதும், கிருஷ்ணாவின் காங்கிரஸ் அமைச்சரவையில் உருப்படியாகப் பணியாற்றிய இளைஞர் என்பதும் சாயா குடித்தபடி கேட்டுக் கொண்டிருந்தபோது காதில் விழுந்தது.
துள்ளாத மனமும் ‘தூள்ளும் ‘(கொஞ்சம் அதிகம் துள்ளலாக இருக்கும்), சாமி, காதல் கொண்டேன் என்று அங்கங்கே சுவர்களில் தமிழ்ப் பட சுவரொட்டிகள். கோடம்பாக்கத்துக்காரர்கள் அடிக்கும் பல வண்ண போஸ்டர்களை ஒதுக்கி உள்ளூர் ஓவியரே வரைந்த இவை எல்லாவற்றிலும் ஹீரோவுக்கு ஒரே முகம் தான். கோமல் சாமிநாதனின் நாடகம் ஒன்றில் பல மட்டத்து அரசாங்க அதிகாரிகளின் ஒரே மாதிரி மனோபாவத்தைக் காட்ட ஒற்றை நடிகரையே திரும்பத் திரும்ப மேடையில் மேஜை போட்டு அமர்த்தியிருப்பார். தற்காலத் தமிழ்ச் சினிமாவுக்கும் ஒரே முகம் என்பதை பெங்களூர் போஸ்டர் ஓவியர் சொல்லாமல் சொல்கிறார் போல.
விடிகாலையில் மூத்திரச் சுவடு உலராத தெருக்களில் அரை நிஜார் கனவான்களையும், முதிர் பெண்டுகளையும் பிடித்து இழுத்துக் கொண்டு பாமரேனியன், டாஷ்ஹண்ட் ஜாதி நாய்கள் வாக்கிங் போகின்றன. அந்தி சாய்ந்து மெயின் ரோட்டில் ஏழெட்டு ஜூஸ் கடைகளில் சாத்துக்குடி ஜுஸ் குடிக்கக் கூட்டம் அலைமோதுகிறது. குடித்து விட்டு சத்யா ஆஸ்பத்திரி வாசலில் அவசர கேஸ்களை ஆம்புலன்ஸில் இறக்கி எடுத்துக் கொண்டு ஓடுவதைச் சாவதானமாக வேடிக்கை பார்ப்பது என்ன மாதிரிப் பொழுதுபோக்கு என்று புரியவில்லை.
ஆஸ்பத்திரிக்கு இந்தப் பக்கம் மருந்துக் கடைகள் அணிவகுப்பு. அந்தப் பக்கம் நாலடி நடந்தால் பீட்டர்ஸ் அண்டர்டேக்கர். தரமான சவப்பெட்டிகள் குறித்த நேரத்தில் உங்கள் முழுத் திருப்திக்கு ஏற்பத் தயாரித்துக் கொடுக்கப்படும். சடலம் வைக்க பனிப் பெட்டி, சவம் கொண்டு போக வண்டி ஆகியவற்றுக்கும் ரெடிமேட் கல்லறை வாசகங்களுக்கும் இருபத்து நாலு மணி நேரமும் அணுக மொபைல் எண்..
ஆஸ்பத்திரிக்கும் இரண்டு பக்கத்துக் கடைகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று நம்புகிறேன்.
****
இரவு தூர்தர்ஷன் (மலையாளம்) நிசாகந்தி நிகழ்ச்சியில் – இது ஒரு தொலைபேசி ஊடாட்ட நிகழ்ச்சி – இயக்குனர் லெனின் ராஜேந்திரனின் சந்திப்பு. மலையாள இணைத் திரைப்படங்களை அடூர் கோபாலகிருஷ்ணன் ஒரு தளத்தில் அணுகுகிறார் என்றால், லெனின் ராஜேந்திரன் இயங்குவது அடுத்த ஒரு தளத்தில். லெனினைப் புரிந்து கொள்ள அவ்வளவாக மெனக்கெட வேண்டாம். (காலஞ்சென்ற எழுத்தாளரும், இயக்குனருமான பத்மராஜனின் படைப்புகள் இவ்வகைப் பட்டவை. இவர் வாசந்தியின் தமிழ் நாவல் ஒன்றினையும் மலையாளத் திரைப்படமாக்கியவர்).
புன்னப்புர வயலார் தியாகிகள் குறித்த அவருடைய ‘மேட மாதத்தில் சூரியன் ‘ (கன்னட நாவலாசிரியர் நிரஞ்சனா எழுதிய ‘சிரஸ்மரணா ‘வை ஒட்டியது), இசை மேதை சுவாதித் திருநாள் மகாராஜா பற்றிச் சமூகக் கண்ணோட்டத்தோடு எடுக்கப்பட்ட அற்புதமான திரைப்படமான ‘சுவாதித் திருநாள் ‘ (மது அம்பாட்டின் படப்பிடிப்பு, கிருஷ்ணமூர்த்தியின் கலை பற்றிச் சொல்லியாக வேண்டும்) என்பவற்றுக்கும் மேல், லெனின் இயக்கிய படங்களில் குறிப்பிடத்தக்கது ‘தெய்வத்திண்டெ விக்ருதிகள் ‘. முகுந்தனின் நாவல் அடிப்படையாக, மையழிப் புழைப் பகுதியை நிலைக் களமாகக் கொண்டது இந்தத் திரைப்படம்.
நாவலைப் படமாக்கும்போது, தான் டெக்ஸ்டிலிருந்து, விஷுவலாக மாறுபட்டுக் கதை சொல்ல, கதை யார் பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது என்பதையே மாற்ற வேண்டியிருந்ததாகச் சொன்னார் லெனின் – நாவலாசிரியர் முகுந்தனோடு விவாதித்துத்தான். கிருஷ்ணன் மாஸ்டர் என்ற கதாபாத்திரத்தின் பார்வையில் விரிகிறது நாவல். இன்னொரு முக்கியக் கதாபாத்திரமான அல்போன்சாவின் நோக்கில் திரையில் கதை சொல்லப்படும்போது, இந்த மாற்றம் இயல்பாக, உறுத்தலில்லாமல் நிகழ்ந்திருப்பதை நாவலும் படித்து, படமும் பார்த்த வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள்.
அல்போன்சாவாக நடித்தவர் ரகுவரன். இப்படத்தின் கானங்களை மலையாளக் கவிஞர்களான சுகதகுமாரி, மதுசூதனன் நாயர் ஆகியோர் எழுதியிருந்தார்கள். குரல் வளம் உள்ள மதுசூதனன் நாயர் தன் கவிதையை, இயல்பாக மலையாளத்தில் கவிதை சொல்லும் இசை கலந்த பாணியில் சொல்வது அப்படியே படத்தில் ஒரு காட்சியில் – பின்னணிக் குரலாக – இடம் பெற்றிருந்தது.
தமிழில் நாவல்களிலிருந்து திரைப்படமாக்கப்பட்டவற்றில் குறிப்பிடப்பட வேண்டியவை – ஜெ.கேயின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ‘, து.ராமமூர்த்தியின் ‘குடிசை ‘. இம்மாதிரி முயற்சிகள் இங்கே வெற்றியடைவது அபூர்வம் என்பதற்கு என்ன காரணம் இருக்கக் கூடும் ?
****
தேர்தல் வந்தாலும் வந்தது, அரசியல்வாதிகளின் தங்கந் தங்கமான பேச்சுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. கேரள முன் முக்கிய மந்திரி கருணாகரன் இப்போது முனகுவது இந்த மாதிரி –
தேர்தலில் போட்டியிட சீட்டுக்காக நான் யாரிடமும் அப்ளிக்கேஷன் போடவில்லை. கேரளத்தில் யார் யாரைக் காங்கிரஸ் வேட்பாளராக்குவது என்பது குறித்த சர்ச்சை இப்போது கேரளத்துக்கு வெளியே நடக்கிறது. ஆனாலும், எனக்கும் இதுக்கும் தொடர்பே இல்லை. பொன் உருக்குன்ன இடத்துப் பூச்சய்க்கு எந்து கார்யம் ? (கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலைக்குச் சமமான பழமொழி).
உருத்திராட்சப் பூனையாகப் பழமொழி உதிர்த்தாலும் மூப்பர் தேனீ போல் சுறுசுறுப்பாகத் தனக்கு ராஜ்ய சபை, மகள் பத்மஜாவுக்கு லோக்சபை, மகன் முரளீதரனுக்குச் லோக்கல் மந்திரிசபை என்று வட்டம் கட்டி ஆடிக் கொண்டிருக்கிறதாக செய்தி தருகிற மாத்ருபூமியைப் புரட்டினால் கவனத்தை ஈர்க்கும் விளம்பரம் –
விவசாய வேலைக்கு ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் நாலாயிரம் ரூபாய். நாற்று நட, களை பறிக்க, மருந்து தெளிக்க, அறுவடை செய்ய, தென்னை மரம் ஏறித் தேங்காய் பறிக்க என்று வேலைகள். திருச்சூர் மாவட்டம் மணப்பூர் பண்ணைக்கு விண்ணப்பிக்கவும்.
வயநாடு, குட்டநாடு என்று கேரள விவசாயப் பகுதிகளில் விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது சிரமமாகிக் கொண்டு போகிறதாம். கட்டிட வேலைக்கு காலை நேர பஸ்ஸில் நகரத்துக்குப் போய், சாயந்திரம் சட்டையில் சிமிண்டோடு திரும்புகிற சேட்டன்மாருக்கு விவசாயத்தில் ஆர்வம் ஆகக் குறைந்தே போய்விட்டதாகத் தெரிகிறது.
கதிர் அரிவாள் பிடிக்க சகாக்கள் கிட்டாத கேரளத்தில் தமிழர்களுக்கு நல்ல அறுவடையாம்.
****
மத்தளராயன்
- Dalit History Month: 1 April to 30 April
- கவிதையின் ஆன்மீகச் சிகரம் : ஜலாலுத்தீன் ரூமி மெளலானா ஜலாலுத்தீன் ரூமியின் கதைகளும் கவிதைகளும்
- திறனாய்வுக் கூட்டம்
- ஆஸ்ட்விட்சின் வாயு அறைக்கதவுகளைத் திறக்கும் கிராபிக்ஸ் சிலுவைபாடு
- ரோறா போறா சமையல்காரன்
- கடிதங்கள் – மார்ச் 11,2004
- கடிதம் – மார்ச் 11 ,2004 – இலக்கிய மதிப்பீடுகளும் பூசல்களும் : காஞ்சனா தாமோதரன், ஜெயமோஹன் நிலைப்பாடுகள் பற்றிய ஒரு குறிப்பு
- யாரோ, அவர் யாரோ ?
- நரேந்திரனின் கட்டுரை பற்றி
- அறிவிப்பு : தமிழில் கலைச் சொற்கள் திட்டம்
- கடிதம் மார்ச் 11, 2004-சமஸ்கிருதம் பற்றிய பித்தனின் கருத்துகள் மீது
- கடிதம் : மார்ச் 11,2004 – பென்கள் பள்ளிவாசலுக்கு போவது பற்றி
- போனதும், போனவைகளும்
- மார்ச் 11, 2004 : சென்ற வாரங்கள்
- பதிவிரதம்
- இனிய காட்சி
- வீடு
- இரண்டு கவிதைகள்
- நீயும் நானும்
- நீரலைப்பு
- மூன்று குறுங்கவிதைகள்
- ஆறாம் அறிவு
- துளிகள்.
- மூன்று கவிதைகள்
- Bowling for Columbine (2002)
- விண்ணின்று மீளினும்….
- நீலக்கடல்- (தொடர்) -அத்தியாயம் -10
- விடியும்!நாவல் – (39)
- கடை
- இதை மட்டும் கொடுக்கமாட்டேன்..
- ரோறா போறா சமையல்காரன்
- வாரபலன் – மார்ச் 11 ,2004 : செருகல் திருட்டு , காமனஹள்ளியில் குடியேற்றம், சினிமாவான நாவல், கேரள மண்ணில் வேலை தேடி
- திருவள்ளுவரின் பெண்ணுரிமை
- எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?
- ஓ போடு ! – அசல் முகங்கள்
- அமெரிக்காவை ஆளுவது யார் ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்பது
- அன்புடன் இதயம் – 10 – தோழியரே தோழியரே
- தாகம்
- இரு கவிதைகள்
- மனம்
- பழக்கம்
- பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம்
- இரண்டு கவிதைகள்
- ஒரு சீட்டு வாங்கிடுவீர்..
- மின்சாரக் கூட்டமைப்புக் கோப்பு துண்டிப்பாகி வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் நீண்ட இருட்டடிப்பு (2003 August 14 Power Grid Failure)
- ஐஸ்கிரீம் வகைகள்
- வாசம் வீசும் தென்றல் – என் கண்களில்