மத்தளராயன்
நாலடுக்கு டிபன் காரியரில் வழிய வழியக் கொண்டு வந்ததையோ, காண்டானில் அரக்கப் பரக்க இலை முழுக்க வட்டித்ததையோ சாப்பிட்டு, மரமேஜைக்குப் பின்னால் ஏப்பம் விட்டபடி குண்டூசியால் பல் குத்திக் கொண்டு பிற்பகல் சாயாக்காரனை எதிர்பார்த்துக் கண்கள் செருக, ‘ரூல்ஸ்னா ரூல்ஸ் தான் ‘ என்று சட்டம் பேசும் நம் சர்க்காரி பாபுக்களை எல்லாம் ஜுஜுபியாக்கக் கூடியவர்கள் அவர்களின் பெல்ஜியம் அண்ணாத்தைகள் என்பதைக் கேட்க எனக்கு என்னமோ விநோதமான சந்தோஷம் ஏற்பட்டது.
ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் ஆப்பிரிக்காவில் இருக்கப்பட்ட காங்கோவை ஒரு காலத்தில் ஆக்கிரமித்து ஆண்டபோது பெல்ஜியத்துக்கு ஆள், அம்பு, படை, சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் பட்டாளம் எல்லாம் தேவையாக இருந்தது உண்மைதான் என்றாலும் தற்போதைய சுண்டைக்காய் சைஸ் நாட்டுக்கு எதற்காக இத்தனை அரசு ஊழியர்கள் ?
எதுக்கா ? எம்புட்டு சட்டதிட்டம் இருக்கு. அதையெல்லாம் மகாஜனங்கள் கடைப்பிடிக்கிறதைக் கண்காணிக்க வேணாமா என்று பெல்ஜியக் கண்ணாடி போல் பளீரென்று பதில் சொல்கிறார்கள் அங்கத்திய அதிகாரிகள்.
சட்டம் என்றால் உங்க நாட்டு எங்க நாட்டுச் சட்டம் இல்லிங்கோ.
நீங்கள் கார் வைத்திருப்பீர்கள். பழைய காரை விற்று விட்டுப் புதுக்கார் வாங்க நினைத்தால், சட்டென்று ஓர் எளிய வழி. காரில் ‘இந்தக் கார் விற்பனைக்கு ‘ என்று தொலைபேசி எண் குறித்து ஒரு ஸ்டிக்கர் ஒட்டி வைத்தால், விரும்பியவர்கள் தொடர்பு கொண்டு விலை படியுமா என்று பார்ப்பார்கள். பழைய கார் விற்கிறவர்கள், பேரிச்சம் பழ வியாபாரிகளைத் தேடிப் போவதற்கு முன் இப்படி சங்கடப்படாமலே காரை விற்றுக் காசு பார்ப்பது பல நாடுகளிலும் நடக்கும் விஷயம் என்றாலும் பெல்ஜியத்தில் – மூச்!
ஓடுகிற காரில் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டினால், காரோடும் வீதியில் ஜாமான்செட்டு பரத்திப் போட்டு வைத்து விற்பதாகக் கருதப்படும். சட்டப்படி தப்பு, தப்பு, மகாத் தப்பு.
விடிந்ததும் பெல்ஜிய வானொலியைப் போட்டால், மங்கல இசையாகச் சட்ட திட்டங்களின் அட்டவணையைச் சொல்லித்தான் தொடங்குகிற வழக்கமாம். ஏகப்பட்ட சட்டம் இருப்பதால், தினசரி காலையில் கரைத்துப் புகட்டித்தான் நாட்டு மக்களை வீட்டை விட்டு வெளியே கிளம்ப வைக்கிற கரிசனம் அது.
அரசுத் துறை உங்கள் கூடவே எப்போதும் இருக்கும் நாடு பெல்ஜியம். வீடு மாற்ற வேண்டும் என்றால் மூட்டை முடிச்சைக் கட்டிப் புது வீட்டில் பால் காய்ச்சிக் குடிக்கக் கிளம்பும் முன், பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் தெரியப்படுத்தி அனுமதி வாங்க வேண்டும். இல்லாவிட்டால், கட்டிய மூட்டை முடிச்சோடு நாடு கடத்தப்பட நேரலாம்.
குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று எல்லா நாட்டிலும், குப்பைகளைக் குப்பைத் தொட்டியைச் சுற்றிப் போடவேண்டும் என்று பாரதப் பொன்னாட்டிலும் இருப்பது போல், ஒவ்வொரு தெருவிலும் இருக்கப்பட்டவர்கள் வாரத்தில் இன்ன நாட்களில் தான் குப்பைத் தொட்டியில் மூட்டை கட்டிய குப்பையைப் போட வேண்டும் என்கிறது பெல்ஜிய நாட்டுச் சட்டம்.
ஒரு நாள் முன்னரே குப்பையைத் தொட்டியில் போட்ட ஓர் அம்மையாருக்கு நூறு யூரோ அபராதம் கட்டச் சொல்லி சம்மன் வந்து விட்டது.
தொட்டிக்குள் கிடந்தது இந்தம்மா வீட்டுக் குப்பை என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் ? ‘குப்பை போலீஸ் ‘ எதற்கு இருக்கிறது ? பெல்ஜிய நாடு முழுக்கக் குப்பைத் தொட்டிகளைக் கண்காணிப்பதே இந்தத் துறையின் தலையாய பணி.
ஒரு நாள் முந்திக் குப்பை கொட்டிய அம்மா செய்த குற்றத்தை நிரூபிக்க, அந்த மூட்டையை மூக்கைப் பிடித்துக் கொண்டு திறந்து பார்த்து, கிழித்துப் போட்ட கடிதங்களைக் கண்டுபிடித்து, அவற்றை வைத்து யார் வீட்டுக் குப்பை என்று முடிவு செய்தது மட்டுமில்லை இவர்களின் சீரிய பணி. அந்தக் கிழிசல் கடுதாசையெல்லாம் கர்ம சிரத்தையாக ஜெராக்ஸ் எடுத்துச் சம்மனோடு இணைத்திருந்தார்கள். அரசுத் துறை என்றால் சும்மா மசமச என்று பஞ்சப்படி, பயணப்படி வாங்கிக் குப்பை கொட்டுகிறவர்கள் என்று நாக்கில் பல்லுப் போட்டுச் சொல்கிறவர்கள் வாயை டெட்டால் போட்டுக் கழுவ வேண்டுமாக்கும்.
பெல்ஜியத்தில் வரிச் சிறப்பை இன்றைக்கு முழுக்கப் புகழலாம். காரில் ரேடியோ வைத்திருக்கிறீர்களா ? கட்டு வரி. புதிதாக ஆப்பீஸ் திறந்து ஏழெட்டு கம்ப்யூட்டர் வைத்திருக்கிறீர்களா ? சரி, எத்தனை கம்ப்யூட்டர் ஸ்கிரீன் வச்சுருக்கீங்க ? அதாங்க, மானிட்டர். ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு மானிட்டர். ரொம்ப சரி. மொத்தம் எத்தனை ? எட்டு. அப்புறம் ஒரு மல்ட்டி டெர்மினல் சிஸ்டம். அதுலே எத்தனை டெர்மினல் ? பத்து. ஆக எட்டும் பத்தும் பதினெட்டு. பதினெட்டு கம்ப்யூட்டர் திரைக்கும் திரை (இது வரி) கட்டுங்கண்ணா.
பெல்ஜிய மக்கள் சாதுப் பிராணிகள் போல் இருக்கிறது. இத்தனை சட்ட திட்டம், வரி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அவர்கள் பாட்டுக்குக் கல்யாணம் செய்து கொண்டு, குழந்தை பெற்று, உத்தியோகம் பார்த்து, ரிடையர்ட் ஆகிப் போய்ச் சேருகிறார்கள். அப்புறம் இடுகாட்டில் புதைப்பதற்கும் ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கலாம். அதை அவர்கள் பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைக்கும் அந்த நல்ல உள்ளங்கள் வாழ்க என்று வரிவரியாகக் கவி பாடி வாழ்த்தலாம்.
இங்கிலாந்தில் இந்தியர்களாலும் பாக்கிஸ்தானியர்களாலும் நடத்தப்படும் விபச்சார வர்த்தகம் பெருகி விட்டிருப்பதாகப் படித்தேன்.
லண்டனிலும், பிராட்போர்டிலும், பர்மிங்க்ஹாமிலும் வெகு மும்முரமாகிக் கொண்டிருக்கும் இந்த வர்த்தகம் இந்திய, பாக்கிஸ்தானியத் திரைப்படத் துறையின் பாதிப்பில் வளருவது.
முஜ்ரா என்ற நாட்டிய வடிவத்தைக் கொச்சைப்படுத்தி விபச்சார வர்த்தகம் செய்யும் அயோக்கியர்கள் இங்கிலாந்தில் குடியேறிய சில இந்திய, பாக்கிஸ்தானிய வம்சாவளியினர். இவர்களின் நாச வலையில் மாட்டுவது இந்த நாடுகளில் சினிமாக் கனவுகளோடு அலையும் பெண்கள்.
முஜ்ரா நடனக் குழு என்ற பெயரில் இந்த இளம் பெண்களை இங்கிலாந்துக்கு அழைத்து வந்து, உடலை இறுக்கும் உடைகளில் இவர்களைப் புதிய இந்திப்படப் பாடல்களுக்கு நடனமாட வைக்கிறார்கள். இந்நிகழ்ச்சிகள் வாய்மொழி வாயிலாகவே செய்தியாகப் பரவி, இவற்றுக்கான பார்வையாளர்கள் முழுக்க முழுக்க ஆண்கள் தாம்.
இரவின் தொடக்கத்தில் மேடையில் ஆடத் தொடங்கும் நடனப் பெண்கள், மெல்ல மேடையை விட்டு இறங்கிப் பார்வையளர்களோடு கலக்க வைக்கப்படுகிறார்கள். அப்புறம் அவர்கள் உடல் அவர்களுக்குச் சொந்தமில்லை.
முஜ்ரா ஒரு பாரம்பரியமான நடனம். பங்க்ரா போல, திருவாதிரக் களி போல முஜ்ராவும் ஒரு குழு நடன வடிவம். அழகான இளம் பெண்கள் இப்படிச் சேர்ந்து ஆடுவதின் மகிழ்ச்சி பார்வையாளர்களையும் பற்றிக் கொள்ளும். மகிழ்ச்சியைப் பகிர்வது தவிர்த்த கலை வெளிப்பாட்டுக்கான சாத்தியம் ஏதும் இந்த வடிவத்தில் இல்லை.
இனிமையான பாடல்களின் மூலமும், ஒத்திசைந்த அங்க அசைவுகள் மூலமும் பகிர்ந்து கொள்ளப்படும் இந்த சந்தோஷம், இக்கலை வடிவம் கொச்சைப்படுத்தப்படும் போது, முழுக்கக் காமம் சார்ந்ததாகி விடுகிறது. பின் அதன் நீட்சியாகப் பெண்ணுடல் வர்த்தகப் பொருளாவது நடந்தேறுகிறது.
இந்திய நடன மரபில் சிருங்காரம் ஒரு இன்றியமையாத கூறு. பதங்களிலும், அபிநயத்திலும் சிருங்காரம் நளினமாகக் கலை வெளிப்பாடு காணும் பரதமும், கதக்கும், குச்சிப்புடியும், மோகினியாட்டமும் நாட்டியக் கலையின் மேன்மையான ரசனை சார்ந்த தளங்களில் இயங்குவதால் இவற்றை மலினப்படுத்தவும், அதன் மூலம் இவ்வடிவங்களை சிற்றின்ப நுகர்ச்சிக்கான வாய்க்காலாக மாற்றி வணிகப்படுத்தவும் முயற்சிகள் ஏற்படுவது தற்போது இல்லை எனலாம்.
வணிகப்படுத்தல் இந்த, முந்திய நூற்றாண்டு நிகழ்வு. அது எழாத கடந்த காலத்தில் மன்னர்களும், ஜமீந்தார்களும், மிட்டா மிராசுகளும் கலைகளின், தாங்களே நியமித்துக்கொண்ட புரவலர்களாக விளங்கினார்கள். நாட்டியக் கலையை அதன் அத்துக்களுக்குள்ளேயே சீரழித்துப் பெண்ணடிமை செய்தவர்கள் இந்தச் சேர, சோழ, பாண்டிய, பல்லவ, ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராவ்பகதூர், திவான்பகதூர் முடியாண்டிகளே. இவர்களைப் போற்றித் துதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இலக்கிய, வரலாற்றுப் பதிவு முயற்சிகள் என்றென்றும் சமூக விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உரியவை.
நாட்டியக் கலையை ஆணாதிக்கத்தின் அடிப்படையில் எழும் வேசைத்தனத்துக்குக் கருவியாகப் பயன்படுத்தி, பரத்தைமை என்று அந்த அவலத்தை இகழ்ந்து கொண்டே அதைத் தவிர்க்க முடியாத சமூக அங்கமாக்கியது பல நூற்றாண்டுகள் உள்ளடக்கிய தொடர் நிகழ்வு என்றால், அது முழுக்க முழுக்க வணிகம் சார்ந்து திசை திரிந்தது கடந்த இரண்டு நூறு ஆண்டுகளாகத் தான். கிராமங்களை மையமாகக் கொண்டிருந்த சமுதாய அமைப்பு சந்தைப் பொருளாதாரத் தாக்கத்தால் இந்தக் காலகட்டத்தில் நகரம் நோக்கி நகர்ந்தது.
பெண்ணை மூலதனமாக வைத்து வேசையர் விடுதிகள் ஏற்படுத்தி அவர்களின் சுயமரியாதையை மிதித்து நசுக்கி, யோனியே, யோனி மட்டுமே முழுக்க வியாபித்த உடலாக அவர்களைக் கற்பித்துப் பணம் பண்ணும் தொழில் நகரக் கலாச்சாரத்தின் விளைவான கடுத்த சமுதாயச் சீரழிவாகப் போய்க் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
இந்த அவலத்துக்குக் காரணமான அந்தத் ‘தொழில் முனைவர் ‘களைக் கழுவேற்றாமல் விட்டுவிட்டு அவர்களிடம் கொத்தடிமையாக ஊழியம் புரியும் தொண்டச்சிகளைப் பிடித்து இழுத்து வந்து ஊடகங்களின் கண் கூசும் வெளிச்சத்தில் நிறுத்துவது தான் நம்மால் வெளிப்படுத்தக் கூடிய அதிகபட்ச சமூக விழிப்புணர்ச்சி என்றால் நம் மேல் நாமே காறி உமிழ்ந்து கொள்ளலாம்.
உடல் மூலதனமாக்கி இடைப்பட்டோர் நடத்தும் இந்த வர்த்தகம் இந்தியாவையும், பாக்கிஸ்தானையும் கடந்து உலகமயமாகிக் கொண்டிருப்பது நம் சமூக விழுமியங்களை, அவற்றை உறுதி செய்ய ஏற்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய உடனடி அவசியத்தை நமக்கு உணர்த்தும்.
இந்த வார ‘மாம்பலம் டைம்ஸ் ‘ பத்திரிகையில் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் எழுதுகிறார் –
(சென்னை அண்ணாநகர் கோபுரப் பூங்காவில்) ‘தப்பான ‘ இடத்தில் ‘தப்பான ‘ முறையில் நடமாடியதாகச் சொல்லி சில இளைஞர்களையும் பெண்களையும் போலீஸ் பிடித்துச் சென்று விட்டது என்று செய்தி.
ஓர் ஆணும் பெண்ணும் தனியாகச் சந்திப்பதோ, சேர்ந்து நடப்பதோ, பேசிக் கொண்டு உட்கார்ந்திருப்பதோ எப்படித் தப்பான காரியமாகும் என்பது பெரிய சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது.
இது பற்றிக் கவிஞர் வைரமுத்துவுக்கு டெலிபோன் செய்து கேட்டேன். அரைமணி கழித்துக் கூப்பிடுவதாகச் சொன்னார். வார்த்தை தவறாமல் கூப்பிட்டதோடு, தன் கருத்தையும் கவிதையாகவே சொன்னார்.
வண்டுக்கு மடிதந்த பூவைக் கைது செய்யுங்கள்.
பூவைத் தொட்டதற்காகக் காற்றைக் கைது செய்யுங்கள்.
கடைசியில் கைது செய்யலாம் காதலர்களை.
கள்வர்களைத் தப்பவிட்டுக் காதலர்களைக் கைது செய்வதா ?
சுதந்திரம் மட்டுமல்ல,
அத்துமீறாத காதலும் பிறப்புரிமைதான்.
——————————
அழகாகவும் ஆணித்தரமாகவும் சொல்லியிருக்கும் கவிஞருக்கு நன்றி. இந்த விஷயத்தில் நாம் எல்லோரும் வைரமுத்துவோடுதான்.
eramurukan@yahoo.com
- உணவும் நம்பிக்கையும்
- பேசாதிரு மனமே
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 1
- செந்தில்
- அறிவுத்திறத்தின் பரிணாமம்- செடி SETI மற்றும் விண்வெளி உயிரியலின் இன்றியமையா பகுதி
- வியாழனைச் சுற்றிய காலிலியோ விண்வெளிக் கப்பல் [Galileo Spaceship that orbited Jupiter (1989-2003)]
- யார் எழுதலாம் எவ்வளவு எழுதலாம் ?
- கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி
- முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும்
- அறிவியல் புனைவுகள் – ஓர் எளிய அறிமுக வரலாறு
- ஆவேசமும் குழந்தைமையும் -வில்லியம் பாக்னரின் ‘இரு சிப்பாய்கள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 74 )
- சிவகாசி சித்திரங்கள்
- கோபிகிருஷ்ணனை முன்வைத்து எழுத்தாளர்களுக்கான இயக்கம்
- குறிப்புகள் சில – 28 ஆகஸ்ட் 2003 தி ஹிந்து-குளிர் பானங்கள்-வணிக முத்திரை,பதிப்புரிமையும் கருத்துச்சுதந்திரமும்
- உயிர்மை
- பேய் அரசுசெய்தால்
- தெய்வமனம் அமைந்திடுமோ!
- பிக்பாக்கெட்
- நந்தா விளக்கு !
- பச்சோந்த்ி வாழ்வு
- யேன் செய்ததில்லை ?
- பண்பெனப்படுவது யாதெனக் கேட்பின்….
- …காற்று தீரும் வரை
- யாதுமாகி நின்றாய் பராசக்தி…….
- விடியும்! நாவல் – (11)
- ஜாதிகள் ஜாக்கிரதை
- பிறகு….
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்று
- கடிதங்கள்
- வாரபலன் ஆகஸ்ட் 22 (பெல்ஜிய அதிகாரிகள், விபச்சார வர்த்தகம், காந்தர்வம்)
- 40 சீனில் என்ன செய்யமுடியும் ?
- மறைந்த எழுத்தாளருக்கான மரியாதையும் மதிப்பீடுகளும்
- குயவன் (குறுநாவல்)
- ஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை, மணப்பெண் சொத்துரிமை, மணப்பெண் வயது, வரதட்சணைக்கு அஞ்சி பெண்சிசுக்கள் கருஅழிப்பு!
- ஜேனஸின் முகங்கள் : 20 ஆம் நூற்றாண்டில் மார்க்சியமும் பாசிஸமும்
- எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி
- புதுமைப்பித்தனின் சமூகப்பார்வை
- வானம் காலடியில்
- இறுதி
- தாரகை
- அசல் வரிகள்
- சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கிறேன்