மத்தள ராயன்
கேரளத்தில் கடையில் படியேறி வி.ஐ.பி சூட்கேஸ் வாங்கக்கூட மக்கள் யோசிக்கிறார்கள். வி.ஐ.பி என்ற வார்த்தையே தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் உபயத்தில் விலகி ஓட வைக்கிற ஒன்றாகிப் போயிருக்கிறது. கோட்டயம் லதா நாயர் விவகாரம் வி.ஐ.பி ரூபத்தில் கேரள அரசியலை ஆக்கிரமித்ததின் விளைவு இது.
பதினைந்தும் பதினாறும் கூடத் திகையாத சிறுமிகளை சின்னத்திரை தொடர்களில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி, நிஜ வாழ்க்கையை ராத்திரி எட்டுமணி சீரியலை விடத் துக்கமானதாக மாற்றியதாக லதா மேல் புகார். இந்த அறியாப் பிஞ்சுகளை பிரமுகர்களோடு பழக வைப்பது வழக்கமாக நடந்த காரியமாம். நம்ம நாட்டுப் பிரமுகர்கள் பற்றியும் அவர்கள் சின்னஞ் சிறிசுகளோடு பழகும் சீலம் பற்றியும் எல்லாம் சொல்ல வேணுமா என்ன ? இனியும் தொடரும் லதா நாயர் புராணத்தில், நீலத் திரைப்படத் தயாரிப்புக்கும் முக்கியமான இடம் உண்டு என்கின்றன பத்திரிக்கைகள்.
இதுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல், லதாவால் அடைத்து வைத்துக் கொடுமைப் படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு இளம்பெண்ணை கிளிரூர் மருத்துவனையில் போய்ப் பார்த்துவிட்டு வந்த அச்சுதானந்தன் சார் பத்திரிகைகளுக்கு உடன் விடுத்த ஸ்டேட்மெண்ட் –
‘அந்த அபலைப் பெண்ணைப் பார்க்க ஒரு வி.ஐ.பி கொஞ்ச நாள் முன்னால் வந்தாராம். மனுஷரைப் பார்த்ததுமே அவள் பாவம், பயந்து அலறி மூர்ச்சையடைந்து விழுந்து உடல்நிலை மகா மோசமாகி விட்டதாம். பெண்ணின் அச்சன் என்னோடு சொன்னது இது. வந்த வி.ஐ.பி யார் என்று உடனடியாகக் கண்டுபிடித்தாக வேண்டும். ‘
கேரளத்தில் இப்படிப் பெண்வணிகம் புரையோடிக் கிடப்பதில் அரசியலுக்கும் பங்கு இருப்பது வெட்கக்கேடு என்று அடித்துச் சொல்லும் மார்க்சிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் தோழர் அச்சுதானந்தன், முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கும் ‘உடனே வி.ஐ.பியை பிடியுங்கள் ‘ என்று புகார் எழுதிப்போட்டார். சாண்டியோ மராத்திய மாநிலத் தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் ஷிண்டேக்கும், சிஞ்ச்போக்லி அருண் காவ்லி, உல்லாஸ் நகர் பப்பு கலானி போன்ற ‘பிரமுகர் ‘களுக்கும் கைகொடுக்க மும்பை பறந்து விட்டார்.
ஆனாலும் ‘வி.ஐ.பி யாருமே கிடையாதுங்க ‘ என்று மறுத்து உடனடியாக அறிக்கை வெளிவந்தது. அதை இறக்கி விட்டது காங்கிரஸின் எந்தக் கோஷ்டியிலும் பட்ட நண்டு சிண்டு, சுமார் பெரிசு, பெருந்தலைத் தலைவர் யாரும் இல்லை. சாட்சாத் பிணராயி விஜயன். கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்.
விஜயன் அண்ணாச்சி சில நாள் முன்னால் அதே மருத்துவ மனைக்குப் போய் அந்தப் பெண்ணைக் கண்ட விஷயத்தைப் பத்திரிகைகள் நைசாக எடுத்து விட்டது அடுத்து ஜரூராக நடந்தது. ஆக, ஒண்ணும் ஒண்ணும் ரெண்டா இல்லை அதுக்கும் மேலேயா என்று சந்தேகமோ சந்தேகம்.
காங்கிரஸ்காரர்கள் இந்த சிவப்புச் சந்தேகத்தையும் புரட்சி ஆட்சேபத்தையும் படுகுஷியாகப் பார்த்துக் கொண்டிருக்க, ‘அச்சுதானந்தன் வாயைத் திறக்கவே இல்லை.
அவர் இப்போது மலையாள சுப்பிரமணிய சுவாமியாகிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
‘வி.ஐ.பி உண்டு. சத்தியம். ஒண்ணு இல்லை. அஞ்சு பேர். ஒரு மந்திரி, மாஜி மந்திரி, பொலீஸ். எல்லாரும் இதிலே கூட்டணி ‘ என்று இன்னும் மர்மமாக அடுத்த அறிக்கை விட்டிருக்கிறார்.
இந்த வாரம் அனந்தையில் கூடிய கட்சி மாநிலக் குழுவில் வி.ஐ.பியாவது ஒண்ணாவது; ஒரு புழு பூச்சியும் ஆஸ்பத்திரிக்குப் போகவே இல்லை என்று காரல் மார்க்ஸ் தலையில் அடித்துச் சத்தியம் செய்துவிட்டார்கள் தோழர்கள். அச்சுதானந்தனுக்கு என்ன போச்சு ? அவர் சொன்னால் சொன்னதுதான்.
இதற்கிடையே, பிடிகிட்டாப் புள்ளி சுகுமார குரூப்பு போல யார் கண்ணிலும் படாது நழுவிவிடுவாரோ என்று வாரபலனில் விசனப்பட்டது பிசகாக, கோட்டயம் லதா நாயர் சரணடைந்ததும் இன்னொரு சிறப்புச் செய்தி.
இந்த வாரம் ஒரு மழைநாள் பகலில் அடிமாலி மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் லதாவை அவருடைய வழக்கறிஞர் பிரான்சிஸ் வட்டக்குழி ஆஜராக்கியபோது, வரிசையாக விசாரிக்க வேண்டிய வழக்குகளின் சுமையில் அழுந்தி, புதுக் கேசெல்லாம் இப்ப எடுக்க முடியாதுய்யா என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார் நீதிபதி. வட்டக்குழி வக்கீல் ஜட்ஜ் காதில் ‘இந்தம்மா தான் சார் லதா நாயர் ‘ என்றதுதான் தாமதம். கைக்காரியத்தை எல்லாம் அப்புறம் பார்க்கலாம் என்று எடுத்து ஏறக்கட்டி விட்டு நீதிபதி லதாவைக் கூண்டிலேற்ற, எப்படியோ மோப்பம் பிடித்து மழையில் சொட்டச் சொட்ட நனைந்து நிருபர்கள் ஆஜர். சிம்ப்ளி முண்டு மடித்துக் கட்டிக் கொண்டு அடுத்த வேலைநிறுத்தத்தை எப்போது எதற்காக நடத்தலாம் என்று கேரளத்தில் கணிசமான மகாஜனங்கள் சதா சும்மா நடமாடுகிறபடியால், அவர்களும் உடனே நிகழ்ச்சியைச் சிறப்பிக்க சுற்றமும் நட்பும் புடைசூழ வந்துசேர, கோர்ட்டில் திருவிழாக் கூட்டம்.
லதா நாயரிடம் வி.ஐ.பி பற்றிப் பத்திரிகைக்காரர்களும், தாடி வைத்த டிவிக்காரர்களும் விசாரிப்பதற்கு முன், பொலீஸ்காரர்கள் அவரைக் கொண்டுபோய் விட்டதால், தற்போது அச்சுதானந்தனைச் சுற்றித்தான் அவர்கள் எல்லோரும்.
****
ஆடு, மாடு, வாத்து, தேனி வளர்க்க ஐ.ஆர்.டி.பி என்ற ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்தில் கடன் கொடுப்பதும், கோடிகோடியாக நகரங்களில் பண முதலைகளுக்குக் கொடுத்து வராமல் போன பணத்தை காந்தி கணக்கில் எழுதிவிட்டு, குக்கிராமத்தில் ஒயிட் லெக்கான் கோழி வாங்க ஆயிரம் ரூபாய் ஐ.ஆர்.டி.பி கடன் பெற்ற விவசாயி வீட்டை ஜப்தி பண்ண செம்மண் சாலையில் மோட்டார் சைக்கிள் விட்டுக்கொண்டு போய் அதிகாரிகள் சட்டமாக நிற்பதும், நம் அரசுடைமையாக்கப் பட்ட வங்கிகள் பல மாநிலங்களிலும் செய்யும் வழக்கமான காரியம்.
கேரளத்திலும் ஐ.ஆர்.டி.பி உண்டு. அங்கே ஐ.ஆர்.டி.பியில் யானை வாங்க வங்கிக் கடன். லீடர் கருணாகரன் நாடு பரிக்கும்போதே வழக்கத்தில் வந்த ஏற்பாடு இது. அவர் தன் டிரேட் மார்க் செவண்டி எம்.எம் புன்சிரிப்போடு மூன்று சேட்டருக்கு கோஷ்டியாக ஒரு யானையை வங்கிக் கடனில் வழங்கி வருடம் பத்துக்கும் மேலாகி விட்டது. அப்புறம் காங்கிரஸ் குரூப் தகராறு போல் யானை விஷயத்திலும் உடமையாளர்களுக்கு நடுவே சண்டை மண்டை உடைந்து கோர்ட்டுப் படி ஏறினார்கள்.
யானை கோயம்புத்தூருக்கு விசிட் அடித்து தமிழக முதல்வர் ஜெ வரவேற்பில் கலந்து கொண்டு, என்ன கோபமோ, திரும்பி வரும் வழியில் யானைக்கார முதலாளிகளில் ஒருத்தரைத் தூக்கிப் போட்டு மிதித்துவிட, மிஞ்சியவர்களிடம் பணம் வசூல் பண்ண முடியாமல் வங்கிக்காரர்கள் முழிக்கிறார்கள். ஏற்கனவே வங்கி ஊழியர்களுக்கு சம்பளம், பஞ்சப்படி என்று கொடுத்துக் கொண்டிருக்கும்போது, ஜப்தி செய்து கொண்டு வந்து கவுண்டருக்கு முன்னால் கட்டி, இன்னொரு யானைக்கும் தீனி போடுவது சிரமமான காரியம்தான்.
ஆனால் எல்லாருமா ஐ.ஆர்.டி.பியில் ஆனை வாங்குகிறார்கள் ? குட்டநாடு பக்கம் கொரட்டிக்கர முள்ளத்து நாயர் யானை வாங்கியது லண்டனில் சாப்பாட்டு ஓட்டல் நடத்தி கப்பையும், சாயாவும், புழுங்கின பழமும், புட்டும் கடலையும் துரைகளுக்கும் துரைசானிகளுக்கும் விற்றுச் சம்பாதித்த சொந்தப் பணத்திலாக்கும்.
நாயருடைய கம்ப்யூட்டர் இஞ்சினீயரான பிள்ளை வேறு விளையாட்டெல்லாம் அலுத்துப் போயோ என்னமோ ‘அச்சா, ஆனை வேணும் ‘ என்று கேட்டதுதான் தாமதம். ‘ ‘ஒண்ணு மதியோ மோனே ‘ என்று விசாரித்துவிட்டுச் செருப்பில் காலை நுழைத்துக்கொண்டு கேரளம் கிளம்பி வந்து ஒரு எட்டு லட்சம் ரூபாயை விட்டெறிந்து யானை வாங்கினார்.
யானையை வாங்குவதைப் பற்றிய சட்ட விவரம் தெரியவில்லை. ஆனால் வளர்ப்பது பற்றிச் சட்டம் என்ன சொல்கிறது ?
யானைக்கு இருப்பிடமாக ஒன்பதுக்கு ஆறு அதாவது ஐம்பத்திநாலு சதுர மீட்டர் பரப்பிலும், ஐந்தரை மீட்டர் உயரத்திலும் காண்க்ரீட் ஷெட் அமைக்கப்பட வேண்டும்.
இம்புட்டுத்தானா ? பதினொண்ணுக்கு ஒன்பது மீட்டர் நீள அகலம், ஆறரை மீட்டர் உயரத்தில் நம்ம யானைக்கு ஒரு ஷெட் கட்ட என்ன செலவாகும் ?
நாயர் விருப்பம் உடனடியாக மூணரை லட்சம் ரூபாய் செலவில் கட்டடமாக நிறைவேறியது. அது மட்டுமில்லை. யானை குளிக்க தனிக் குளம் ஒன்று. அதில் ஒரு தடவை குளித்தால் உடனே தண்ணீரைக் காலியாக்கி விட்டு, திரும்பத் தண்ணீர் நிரம்ப வசதி. தினசரி சாப்பிட விதை நீக்கிய ரெண்டு கிலோ பேரீச்சம் பழம். கிலோக் கணக்கில் அரிசி வட்டித்து வேளா வேளைக்குச் சோறு. அம்பாரம் அம்பாரமாக இலை தழை இத்யாதி. சாப்பிட்டது ஜீரணமாக தினசரி ரெண்டு வேளை கவளம் கவளமாக உருட்டி சியவனப் ப்ராச லேகியம். மாதாமாதம் அஷ்ட சூர்ணத்தோடு ஆயூர்வேத சிகிச்சை. பார்த்துக் கொள்ள இரண்டு பாகன்மார்.
சொக்கலால் ராம்சேட் போல் யானைக்கு திருநெல்வேலி அல்வா மட்டும்தான் நாயர் வாங்கித் தரவில்லை.
இதுவரை பதினைந்து லட்சம் ரூபாய் யானைக் காரியத்தில் செலவு. தவிர, மாதாமாதம் இருபதாயிரம் ரூபாய் அதே வகையில் பற்றுக் கணக்கு எழுதிவிட்டு நாயர் லண்டனில் திருப்தியாக சாயா ஆற்றிக் கொண்டிருக்கிறார்.
இவ்வளவு கஷ்டப்படாமல் யானை காட்டிலும், நாயர் லண்டனிலும் பரம சுகமாக இருந்திருக்கலாம். அன்னார் பதினைந்து லட்சம் ரூபாய்க்கு ஒரு அனாதை ஆஸ்ரமத்தை தத்தெடுத்துக் கொண்டிருக்கவும் செய்யலாம்.
அது சரி, நாம் சொல்லி நடக்கிற விஷயமா என்ன இதெல்லாம் ? ஆனாலும்,ஆன காரியத்தில் ஒரு சேன காரியமாக சொல்வதைச் சொல்லிவைப்போம்.
****
சில மாதம் முன்னால் வாரபலனில் மலையாளத்தில் முதல் கூட்டு நாவல் எம்.டி.வாசுதேவன் நாயரும், ‘உருபு ‘ உண்ணிகிருஷ்ணனும் எழுதிய ‘அரபிப் பொன் ‘ என்று எழுதியதற்கு அடுத்த வாரம் நண்பர் கவிஞர் சுகுமாரன் அதை எழுதியது வாசுதேவன் நாயரும் மறைந்த எழுத்தாளர் என்.பி.முகம்மதுவும் என்று கடிதம் எழுதியிருந்தார். எழுதிய கையோடு மத்தளராயனுக்கு அரபிப் பொன் நாவலையும் அனுப்பி வைக்கத் தவறவில்லை அவர்.
லைஃப் இண்டர்நேஷனல் பத்திரிகையில் அறுபதுக்களில் வந்த ஒரு ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையில் எழுந்த நாவல் இது. இந்தியர்களுக்கு சுபாவமாகவே தங்கத்தில் இருக்கும் ஈர்ப்பு பற்றிய கட்டுரை. பொன் நகையை விட அதிகம் மதிப்பு வாய்ந்த, பல உலோகங்கள் கலந்து கலாநேர்த்தியோடு உருவாக்கிய நகைகளை அணிந்து கொண்டு வெளி நாட்டு சுந்தரிகள் இங்கே ஒயிலாக வந்து நின்றாலும் அவர்களைத் துச்சமாகவே பார்ப்பது நம்ம நாட்டு வழக்கம். தங்க நகை இல்லாமல் கண்டதையும் காதிலும் மூக்கிலும் அள்ளி எடுத்து மாட்டிக் கொண்டு வந்தால் என்னத்த மதிப்பு ?
இந்தத் தங்கத் தாகம் தான் வருடத்துக்கு நூற்று எண்பது கோடி ரூபாய் கள்ளத்தங்கம் துபாய் மற்றும் அரபு நாடுகளிலிருந்து கராச்சி வழியாக இங்கே கடத்தப்படக் காரணம் என்கிற அந்தக்காலப் பத்திரிகைச் செய்தியோடு ஒத்துப் போகிற விதமாக வாசுதேவன் நாயர் எழுதிய நாவல் முன்னுரை அமைந்திருக்கிறது.
தான் வசித்த நகரத்தில் தங்கம் கள்ளக் கடத்தலில் ஈடுபட்டு அதில் ஏகப்பட்ட பணம் சம்பாதித்து ஏழடுக்கு மாளிகை கட்டியவர்களைப் பற்றியும், சொகுசு கார் வாங்கி உலா வந்தவர்கள் பற்றியும், இருப்பதை எல்லாம் பறிகொடுத்து ஒன்றுமே இல்லாமல் போனவர்கள் பற்றியும் சொல்கிற வாசுதேவன் நாயர், அரபிப் பொன் தன்னைப் பாதித்த விதம் பற்றியும் மறக்காமல் சொல்கிறார்.
அது நாவல் எழுத வைக்கிற விதத்தில் எழுந்த பாதிப்பு இல்லை. எப்படியாவது இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு நாலு காசு பார்த்தால் என்ன என்றுதான் அவரும் அவருடைய நண்பர் எம்.பி.முகம்மதுவும் முதலில் யோசித்திருக்கிறார்கள். கடத்தல்காரனுக்கும், கஸ்டமருக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து இடுப்பு பெல்டில் மறைத்து எடுத்து வந்த தங்கக் கட்டிகளை விற்க வழி செய்து தருவதன் மூலம் கமிஷன் பார்க்க விரிவாகத் திட்டம் எல்லாம் தீட்டி இருக்கிறார்கள்!
ஆனால், ‘ஒரு நாவல் எழுத வேண்டியதைவிட அதிகம் புத்தியும், துணிச்சலும் அறிவும் அதற்கு வேண்டும் என்பதால் ‘, கள்ளக் கடத்தல் எண்ணத்தைக் கைவிட்டு சமர்த்தாக நாவல் எழுத இரண்டு பேரும் உட்கார்ந்ததாக வாசுதேவன் நாயர் சொல்வது ‘சும்மா ஒரு ரசத்துக்காக ‘ என்ற மட்டில் கூட இருக்கலாம்.
அப்படி வாசுதேவன் நாயர் எழுத உத்தேசித்தது துப்பறியும் நாவல் என்பது இன்னொரு ஆச்சரியமான செய்தி. துப்பறியும் நாவல் ஒரு கெட்ட வார்த்தை சமாச்சாரமில்லை தான். ஆர்தர் கானண்டாயிலின் ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் கதைகளுக்கு இலக்கிய மதிப்பு இருக்கிறதோ என்னவோ, போன நூற்றாண்டுத் தொடக்க லண்டன் மாநகரை விரிவாகப் பதிவு செய்யும் சிறப்பான micro history ஆவணங்கள் அவை.
உத்தேசித்தது துப்பறியும் நாவல் ஆனாலும், வாசுதேவன் நாயரும் முகம்மதுவும் எழுதி முடித்தது கள்ளக் கடத்தல் தங்கம் கேரள மண்ணையும் மக்களையும் பாதித்தது பற்றிய அழகான வரலாற்று, கலாச்சாரப் பதிவு.
டி.சி.புக்ஸ், கோட்டயம் அதி நேர்த்தியாகப் பதிப்பித்திருக்கும் இந்த நாவலை விரைவில் இங்கே அறிமுகப்படுத்த மத்தளராயனுக்கு எண்ணம் உண்டு.
அதற்கு முன் நாவலை அனுப்பி உதவிய சுகுமாரனுக்கு நன்றி சொல்லத் தொலைபேசியது சில நாட்களுக்கு முன்பு. சூர்யா டிவியில் கவிஞர் சச்சிதானந்தனின் அருமையான ஒரு செவ்வியைப் பார்த்து ரசித்து, அது முடிந்ததும் நகர்ந்து போன டைட்டில் கார்டில் தயாரிப்பாளர் பெயராக சுகுமாரன். திருவனந்தபுரம் சூர்யா தொலைக்காட்சியின் தொலைபேசி எண்களைத் தட்ட அந்தப் பக்கம் குரல் சொன்னது – இப்பத்தான் அவர் இறங்கிப் போனார்.
சமதளமான திருவனந்தபுரத்தில் சுகுமாரன் இறங்கி ஏறித் திரும்பியதும் இன்னொரு தடவை விளிக்கலாம்.
மத்தளராயன்
- கடிதம் அக்டோபர் 21,2004 -பகவத் கீதையைச் சுற்றி நடக்கும் மதச்சார்ப்பற்ற சித்து விளையாட்டுக்களுக்கு சில பதில்கள்
- மக்கள்தெய்வங்களின் கதைகள்-6 -பிச்சைக்காலன் கதை
- புதுவை ஞானத்தின் கட்டுரை : நீதாம், பாரம்பரிய அறிவு – ஒரு குறிப்பு
- இருளிலிருந்து பேரிருளுக்கு
- மெய்மையின் மயக்கம்-22
- எழுத்து வன்முறை
- அமெரிக்காவில் அல்பங்கள் ஆயிரம்…
- ஆட்டோகிராஃப்- 23-இதயம் என்றொரு ஏடெடுத்தேன் அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்!!
- நாணயமா ? நமக்கா ? – நான் சொல்வதெல்லாம் நம்பிடும் உடன்பிறப்பே பொங்கியெழு
- திலகபாமாவின் ‘நனைந்த நதி ‘ சிறுகதை தொகுதி வெளியீடு- ஹோட்டல் சிதம்பரம், சிவகாசி 31.10.04, ஞாயிறு மாலை 5 மணி
- கடிதம் அக்டோபர் 21,2004 – ஜெயமோகனின் அபத்தங்கள்!
- கடிதம் அக்டோபர் 21,2004
- வெ.சா. – சு.ரா. விவாதம்: சில குறிப்புகள்
- கடிதம் அக்டோபர் 21,2004 – அன்பிற்குரிய மெமிட்டிக் க்ளோன்களுக்கு
- கடிதம் அக்டோபர் 21,2004 – ஜெய மோகனின் கீதை
- காலச்சுவடு – மாத இதழாகிறது
- இருந்திருக்கலாம்..ம்ம்
- பெரியபுராணம் – 14 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)
- சாலை
- கவிதை
- அழியாத குற்றங்கள்
- நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் – ஓர் பார்வை
- ஓவியப் பக்கம்- மூன்று : பிலிப் கஸ்டன் (Philip Guston) – இனவாதத்தின் எதிர்ப்புக் குரல்
- ‘விண் ‘-தொலைக்காட்சிக் கவிதை – 2 எங்கள் கிராமத்து ஞானபீடம்
- சுதந்திரம் என்றால் என்ன ?
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 42
- நெருப்புக் கோழி
- தூதன்
- வாரபலன்- அக்டோபர் 21,2004 – லதா நாயரின் வி ஐ பி படலம், யானைக் கடன் படலம், அரபிப் பொன் படலம்
- கலைஞர் தயவில் மீண்டும் மும்மொழித்திட்டம் : வாழ்த்துவோம் வரவேற்போம்
- தியாகத் திருவுரு வீர சாவர்க்கர்
- கீதாஞ்சலி (1) (உடையும் பாண்டம்) மூலம் : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- சாலை
- கவிதை
- கவிக்கட்டு 32-வாழ்க்கை வியாபாரம்
- அது மறக்க முடியாத துயரம்..
- அய்யோ…. அய்யோ….
- அஃறிணைகள்
- ஒத்திகை
- துடுப்புகள்
- அறிவியலில் தன்னுணர்வுத் தேடல் – ஒரு எளிய பறவை நோக்கு
- சரித்திரப் பதிவுகள் – 4 : ஐ.என்.எஸ். தரங்கினி
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (5)
- உரத்த சிந்தனைகள்- 4
- அ.முத்துலிங்கம் பரம்பரை -5
- தந்தை தாயான கதை