வாயு (குறுநாவல் -அத்தியாயம் இரண்டு )

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

இரா.முருகன்


அறை கிட்டத்தட்டக் காலியாக இருந்தது.

மூன்று மூன்று நாற்காலிகளாக ஐந்து வரிசை. கடைசி இரண்டு வரிசைகளில் யாரும் இல்லை. அவற்றுக்கு முந்தியதில் மொட்டைத் தலை இளைஞன் ஒருவனும் பக்கத்தில் ஒரு யுவதியும் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களுக்கும் முன் வரிசையில் வெண்மையான உடையும், ஆரஞ்சு வண்ணத்தில் தலைமுடியுமாக ஒரு கறுப்பர் இனப் பெண். நடுவயதுக்காரி அவள்.

முதல் வரிசையில் சதா இருமியபடி ஒரு கிழவர்.

இவர்களை இந்த இருக்கைகளில் யாராவது உட்காரச் சொல்லியிருக்கிறார்களா அல்லது அவர்களே விரும்பியபடிக்கு விரும்பிய இடத்தில் உட்கார்ந்து கொண்டார்களா என்று குளோரியா அம்மாளுக்குத் தெரியவில்லை.

சக்கரம் வைத்த வண்டியில் ஏதோ பெயர் தெரியாத சாதனத்தை வைத்து உருட்டிப்போனவன் குளோரியா அம்மாளை ஒரு வினாடி தீர்க்கமாகப் பார்த்தான்.

அவன் தன்னை ஒரு நாற்காலியைக் காட்டி அமரச் சொல்லுவான் என்று எதிர்பார்த்துக் குளோரியா அம்மாள் நிற்க, வண்டியை உருட்டியபடியே யாரையோ உரக்கப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு அவன் பக்கத்தில் பலகை அடைத்த தடுப்புக்குள் மறைந்தான்.

யாரும் உட்காரச் சொல்லப்போவதில்லை. குளோரியா அம்மாளேதான் அவள் இருக்க வேண்டிய இடத்தை முடிவு செய்ய வேண்டும்.

முதல் வரிசையில் இருந்து பர்ர்ர் என்று சத்தம். கிழவர் பின்னால் திரும்பிப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தார். நான் தயாராகி விட்டேன் என்றார் அந்த மொட்டைத் தலை இளைஞனைப் பார்த்து.

மொட்டைத் தலையன் பக்கத்து யுவதியை இழுத்து அணைத்துத் தீவிரமாக முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

அவர் கொஞ்சம் ஏமாற்றத்தோடு அவர்களைப் பார்க்க, இடையில் குளோரியா அம்மாள் கண்ணில் பட்டாள்.

இங்கே வந்து உட்காருங்கள்.

பக்கத்து இருக்கையை நேசத்தோடு காட்டியபோது இன்னொரு பர்ர்ர்ர்.

குளோரியா அம்மாளுக்கு ஏனோ அவர் பக்கத்தில் போய் அமரக் கூச்சமாக இருந்தது. சிறிது தயங்கி, அவள் நடு வரிசையில் கறுப்பர் இனப்பெண் பக்கமாக நடந்தாள்.

அந்தப் பெண் பக்கத்து நாற்காலியில் வைத்திருந்த தன் கைப்பையை மடியில் நகர்த்தி வைத்துக் கொண்டு குளோரியா அம்மாளுக்கு இடம் ஒழித்துக் கொடுத்தாள். நினைத்துக் கொண்டதுபோல் கைப்பையைத் திறந்து எதையோ எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

வேக வைத்த மொச்சைகளின் வாடை.

எடுத்துக் கொள்ளச் சொல்லி ஒரு பெரிய பழுப்புக் காகிதப் பையை அவள் குளோரியா அம்மாளிடம் நீட்டினாள்.

இதன் உபயோகம் தெரிந்ததுதானே ?

அவள் குளோரியா அம்மாளைப் பார்த்துச் சிரித்தாள்.

வேண்டாம் என்று மரியாதையாகத் தலையசைத்தாள் குளோரியா அம்மாள். அவளுக்கு மொச்சைகளைப் பார்க்கும்போது குமட்டல் எடுத்தது.

நேற்றுக் காலையில் இருந்து அவள் மொச்சைகளைத் தான் சாப்பிட்டிருக்கிறாள். முதலில் சாப்பிடும்போது ருசியாக இருந்தது, அடுத்த வேளைகளில் ருசி குறைந்து அப்புறம் சகிக்க முடியாமல் போனது. ஆனாலும் வயிற்றில் வாயு தாராளமாக நடமாட அவை ஒத்தாசை செய்யும் என்பதால் பொறுமையாக மென்று தின்ன வேண்டி வந்தது.

இன்னும் ஒரு வாரம் இருக்கிறது குடும்ப பென்ஷன் பணம் வர. இருந்த பணத்தில் மொச்சை வாங்க, இங்கே பஸ் பிடித்து வர என்று செலவழித்ததால், வாரக் கடைசியில் குளோரியா அம்மாளுக்குச் சாப்பிட வீட்டில் ஒன்றும் இருக்காது என்று பட்டது.

மொச்சைகள் விலையேறி இருக்கின்றன. எல்லாமேதான் விலை ஏறி இருக்கின்றன.

ஆனாலும் இன்றைக்கு அவை உதவி செய்யும் பட்சத்தில் குளோரியா அம்மாள் இங்கே சொன்ன மாத்திரத்தில் வாயு வெளியேற்றுவாள். முதல் இடம் அவளுக்குக் கிடைக்குமோ என்னமோ. அந்தக் கிழவருக்கு அதைப் பெறச் சகல தகுதிகளும் இருக்கக்கூடும்.

குறைந்த பட்சம் மூன்றாவது இடத்தையாவது தான் பெறமுடியும் என்று குளோரியா அம்மாளுக்குத் தோன்றியது.

அதற்குக் கிடைக்கும் பணத்தில் இன்னும் சில மாதங்கள் பசி இல்லாமல் இருக்கலாம். முதல் பரிசு என்றால் ஒரு வருடம் இரண்டு வருடம்

சாப்பாட்டுப் பிரச்சனையே எட்டிப் பார்க்காது. ஒரு உடுப்புக் கூடப் புதிதாக வாங்கிக் கொள்ளலாம்.

இந்தக் கறுப்பி ? இப்படித் தின்று கொண்டே இருப்பதால் இவள் இரண்டாம் இடத்தைப் பிடிப்பாளோ ? அதற்கு எவ்வளவு பரிசுத்தொகை ?

தன்னுடைய ஆறு மாதச் சாப்பாட்டை அபகரிக்கப் போகிற அவளைத் தன்னிச்சையாக உற்றுப் பார்த்தாள் குளோரியா அம்மாள்.

நான் துக்கத்தில் இருக்கிறேன்.

கறுப்பி ரகசியம் பேசும் குரலில் சொன்னாள்.

குளோரியா அம்மாள் ஆதரவாகத் தலையசைத்தாள்.

என் கணவர் இறந்துபோய் இரண்டு வாரமாகிறது.

சொல்லியபடி கறுப்பி கைப்பையில் இருந்து உதட்டுச் சாயத்தை எடுத்துக் கவனமாக உதட்டைக் குவித்துப் பூசிக்கொண்டாள்.

குளோரியா அம்மாள் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தபோது அசந்தர்ப்பவசமாக கூடவே அவளிடமிருந்து வாயு வெளியேறியது. இது இந்த நேரத்தில் நடந்திருக்க வேண்டாம்தான்.

நீங்களும் தயாராக வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.

முதல் வரிசைக் கிழவர் திரும்பிக் குளோரியா அம்மாளைப் பார்த்துச் சிரித்தார். அவளும் ஒரு வினாடி மரியாதைக்குச் சிரித்து உடனே மவுனமானாள்.

அந்தக் கிழவரின் மூக்குக் கண்ணாடி குளோரியா அம்மாளுடைய கணவர் அணிந்திருந்ததுபோல் செவ்வகக் கண்ணாடிகளால் ஆனது என்பதை அவள் கவனித்தபோது அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. அவர் பக்கத்தில் உட்காரத் தயக்கம் உண்டானதற்கும் அந்தக் கண்ணாடிகள்

காரணமாக இருக்க வேண்டும்.

கறுப்பியிடம் தான் அவமரியாதையாக நடந்துகொண்டதாக அவளுக்குப் பட்டது. இன்னொரு தடவை அனுதாபம் தெரிவிக்கலாமா என்று யோசித்தாள். சொல்லியதையே திரும்பச் சொல்ல ஆயாசமாக இருந்தது. இன்னொரு முறை வாயு வெளிப்படலாம்.

என் கணவரைப் புதைத்த இடத்தில் நிலச்சரிவு வந்ததால், சவப்பெட்டியை வெளியே எடுக்க வேண்டிப் போனது.

கறுப்பி மறுபடி ரகசியம் பேசுகிற குரலில் குளோரியா அம்மாளிடம் சொன்னாள்.

கிழவர் எழுந்து கைத்தடியை ஊன்றிக் கொண்டு நின்றார். கையில் காமிராவைச் சுமந்து போன ஒருவனைத் தடுத்து நிறுத்திக் கழிப்பறை எங்கே இருக்கிறது என்று சத்தமாக விசாரித்தார்.

அவன் காட்டிய திசையில் அவர் நடக்கும்போது கூடவே போன பார்வையைச் சங்கடத்தோடு குளோரியா அம்மாள் தவ்ிர்த்தாள்.

சவப்பெட்டியைத் திரும்ப எடுப்பது நல்லதல்லவே..

கறுப்பியிடம் மெல்லச் சொன்னாள் அவள்.

என்ன செய்ய ? அந்த இடம் முழுக்கத் தண்ணீர் நிரம்பிப் போனதால் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். பளுத்தூக்கியால் அதை எடுத்து வண்டியில் வைத்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு போக உத்தேசித்து கயிறு கட்டித் தூக்கியபோது பளுத்தூக்கி இயங்காமல் பாதியில் நின்று போனது.

சவப்பெட்டி என்ன ஆனது ?

குளோரியா அம்மாள் அவசரமாக விசாரித்தாள்.

பின்னால் இருந்து தொடர்ந்து முத்தம் கொடுத்துக்கொள்ளும் சத்தம் கேட்டபடி இருந்தது.

சவப்பெட்டியில் ஆணிகள் சரிவரப் பொருத்தப்படாமல் போனதால் அது ஒரு ஓரமாகத் திரும்பி ஒருக்களித்துத் திறந்து கொண்டது. அந்த நேரத்தில் மழை வேறு பெய்ய ஆரம்பிக்க, வேலை நேரம் முடிந்தது என்று தோண்ட வந்தவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள். என் வீட்டுக்காரன் ஒரு ராத்திரி முழுக்க மழையில் நனைந்தான். இப்போது அவனை உலர வைத்துவிட்டு வந்திருக்கிறேன். இங்கே பணம் கிடைத்தால் நாளைக்கு அவனை நல்லடக்கம் செய்யலாம். பார்க்கலாம்..அவனுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று ..

கறுப்பி இதைச் சொல்லியபடி இன்னொரு பிடி மொச்சையைக் கைப்பையில் இருந்து எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

பர்ர்ர். பர்ர்ர். பர்ர்ர்.

பின்வரிசையிலிருந்து சத்தம். இளைஞன் வாயைக் குவித்து ஒலி எழுப்ப ஆரம்பித்திருந்தான்.

அது வேறு இடத்தில் இருந்து வரவேண்டும். வாய் அதற்காக இல்லை.

கறுப்பி பின்னால் திரும்பிச் சிரிப்பு மாறாமல் சொன்னாள்.

தெரியும். நன்றி. வாய் இதற்குத்தான்.

குளோரியா அம்மாள் திரும்பாமலேயே இன்னொரு முத்தம் ஒலிக்கப் போவதை எதிர்பார்த்தாள்.

பிளாஸ்டிக் உறை பிரிக்கப்படும் சத்தம். உருளைக்கிழங்கு வறுவலாக இருக்கும். அவள் நாசியில் தட்டுப்பட்ட வாடை சொன்னது.

அவளுக்குப் பசித்தது. சாப்பிட வேண்டும். மொச்சை தவிர வேறு ஏதாவது.

(தொடரும்)

eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்