சோதிப் பிரகாசம்
(வாழ்க்கையின் கேள்விகள்: இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் இருந்து…)
எளிமையான ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டு இலக்கணம் கூறுகின்ற தமிழ்ப் புலவர்கள்,
எழுவாய்—-செயப் படு பொருள்—-பயன் நிலை
என்று பிரித்து அதற்கு விளக்கம் கூறுகிறார்கள்.
அகமை—-புறமை—-வினை (செயல்)
என்றும் இவற்றை நாம் குறிப்பிடலாம்.
எடுத்துக் காட்டாக,
நான் பள்ளிக்குச் செல்கிறேன்
நான் பணத்திற்காகப் பாடினேன்
நான் வேலையை முடிப்பேன்
என்னும் வாக்கியங்களில்,
நான் என்பது அகமை;
பள்ளிக்கு, பணத்திற்காக, வேலையை, என்பன புறமைகள்;
செல்கிறேன், பாடினேன், முடிப்பேன், என்பன வினைகள்.
ஆனால்,
நான் பணத்திற்காகப் பாடினேன்
என்பதை விட,
பணத்திற்காக நான் பாடினேன்
என்று வாக்கியத்தை அமைப்பதுதான் சரியான ஒரு தமிழ் வாக்கியம் என்று நான் கருதுகிறேன்.
அதாவது,
புறமையின் மீது —- அகமை —- வினை புரிகிறது
என்பதுதான் இயல்பான ஒரு கருத்துக் கோவையாக எனக்குத் தோன்றுகிறது.
எனவே,
பள்ளிக்கு நான் செல்கிறேன்
பணத்திற்காக நான் பாடினேன்
வேலையை நான் முடிப்பேன்
என்று அமைகின்ற வாக்கியங்கள்தாம் தமிழ் இயல்பான வாக்கியங்கள் என்பது எனது கருத்து. ஏனென்றால், இயல்பாக வளர்ந்து வந்து இருக்கின்ற ஒரு தொல் மொழிதான் தமிழ் மொழி ஆகும்.
ஆங்கில மொழியிலோ அல்லது வேறு பிற மொழிகளிலோ அகமையில் இருந்து தொடங்கி வாக்கியங்கள் அமைக்கப் படலாம். ஆனால், அகமையில் இருந்து தொடங்கப் படுகின்ற வாக்கிய அமைப்புகளைக் கொண்ட மொழிகள், செயற்கையான மொழிகளே அன்றி இயற்கையான மொழிகள் அல்ல!
சொல்லப் போனால்,
பணத்திற்காகப் பாடினேன் நான்
என்பதுதான் பழங் காலத் தமிழ் வழக்கு ஆகும்.
செய்கிறேன்
என்னும் நிகழ் கால வினை முற்றினை நாம் எடுத்துக் கொள்வோம்.
செய் + கிறு + ஏன்
என்று இதனை நாம் பிரிக்க முடியும்.
இங்கே,
‘யான் ‘ என்பதன் திரிபுதான்
‘ஏன் ‘ என்பது ஆகும்.
அதே நேரத்தில்,
செய் + இது + யான்
என்ற முந்திய வடிவம்தான்
செய் + கிறு + ஏன்
என்று திரிந்து இருக்கவும் வேண்டும்.
அதாவது,
செய் + இது + யான் —- செய்யிது யான்
என்ற நிகழ் கால வினை முற்றில் இருந்தும்
செய் + அது + யான் —- செய்யது யான்
என்ற கடந்த கால வினை முற்றில் இருந்தும்
செய் + உது + யான் —- செய்யுது யான்
என்ற எதிர் கால வினை முற்றில் இருந்தும்
செய் + இரு + ஏன் —- செய்யிரேன் —- செய் + கிறு + ஏன் —- செய்கிறேன்
என்றும்
செய் + அது + ஏன் —- செய்யதேன் —- செய் + து + ஏன் —-
செய்தேன்
என்றும்
செய் + உது + ஏன் —- செய்யுதேன் —- செய் + உவு + ஏன் —- செய்யுவேன் —- செய் + வு + ஏன் —- செய்வேன்
என்றும் விளர்ந்து வந்து இருக்கக் கூடிய வினை முற்றுகள்தாம்
செய்கிறேன் —- செய்தேன் —- செய்வேன்
என்னும் வினை முற்றுகள் ஆகும்.
இன்னும் சிறப்பாக இதனைத் தமிழ் மொழி வல்லுநர்கள் விளக்கிட முடியும் என்பதில் நமக்கு ஐயம் எதுவும் இல்லை.
ஆக, செய்கிறேன் என்னும் நிகழ் கால வினை முற்றில் வருகின்ற ( செய் + கிறு + ) ‘ஏன் ‘ என்னும் சொல், ‘யான் —- நான் ‘ என்கின்ற அகமையைக் குறிக்கிறது என்பது தெளிவு.
எனவே,
‘செய்கிறேன் ‘
என்று நாம் சொன்னாலே போதும்,
‘செய்கிறேன் நான் ‘
என்று அதற்குப் பொருள் ஆகி விடுகிறது.
இப்படி,
பள்ளிக்குச் செல்கிறேன் நான்
என்ற முந்திய வாக்கிய அமைப்புதான்
பள்ளிக்கு நான் செல்கிறேன்
என்கின்ற இன்றைய வாக்கிய அமைப்பாக மாறி இருக்கிறது.
அதாவது,
புறமை —- வினை —- அகமை
என்பதுதான் பழங் காலத் தமிழ் வாக்கிய அமைப்பு ஆகும்.
உணவினை உண்ண வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு மனிதன், உணவினை முதலில் கருத்தில் கொள்கிறான்; பின்னர் அதனை அவன் உண்கிறான்.
இது போல, ஒரு வேலையை முடித்திட நினைக்கின்ற ஒரு மனிதன், அந்த வேலையை முதலில் கருத்தில் கொள்கிறான்; பின்னர் அதனை அவன் செய்து முடிக்கிறான். இதுதான் மனிதனின் இயல்பான நடவடிக்கை ஆகும்.
அதாவது,
வேலையை நான் செய்கிறேன்
என்பதுதான், இயல்பான ஒரு நடவடிக்கையும் அதனை வெளிப் படுத்துகின்ற ஒரு கருத்துக் கோவையும் அதனால் அமைவு உறுகின்ற வாக்கிய அமைப்பும் ஆகும்.
ஆனால், பழங் காலத் தமிழிலோ, செயல் முன்னதாகவும் அதனைச் செய்பவன் பின்னதாகவும்
செய்கிறேன் நான்
என்று மனிதன் கருதப் பட்டு வந்து இருக்கிறான்.
எனவே, தன்னைப் பின்னிலைப் படுத்திக் கொண்டு மனிதன் வாழ்ந்து வந்து இருந்த ஒரு காலத்தில்தான் இந்த வாக்கிய அமைப்பு நிலவி வந்து இருக்க வேண்டும் என்பது வெளிப்படை!
நுகர்ச்சி நடவடிக்கைக் காலத்தில், இயற்கைக்கு மனிதன் அடி பணிகின்ற ஒரு வாழ்க்கையாகவும் உற்பத்தி நடவடிக்கைக் காலத்தில், இயற்கையின் மீது தனது ஆதிக்கத்தை மனிதன் செலுத்துகின்ற ஒரு வாழ்க்கையாகவும் மனிதனின் வாழ்க்கை நடவடிக்கை இருந்து வந்து இருக்கிறது என்பதை ஈண்டு நான் விளக்கிடத் தேவை இல்லை. ( பார்க்க: வாழ்க்கையின் கேள்விகள், அதிகாரம் – 3. )
இப்படி, இயற்கையாகக் கிடைத்து வந்த உணவுப் பொருள்களை உண்டு மனிதன் உயிர் வாழ்ந்து வந்த காலத்தில், முன்னதாக இயற்கையும் அடுத்ததாக வினையும் பின்னதாக மனிதனும் கருதப் பட்டு வந்ததில் வியப்பும் எதுவும் இல்லைதான்.
எனவே,
செய்கிறேன் நான்
என்கின்ற வாக்கிய அமைப்பு, மனித வாழ்க்கையின் நுகர்ச்சிக் காலத்திற்கு உரிய —- விலங்கு வாழ்க்கைக் காலத்திற்கு உரிய —- ஒரு வாக்கிய அமைப்பு ஆகும்.
மாறாக,
நான் செய்கிறேன்
என்னும் வாக்கிய அமைப்போ, முன்னதாகத் தன்னையும் பின்னதாகத் தனது வினையையும் மனிதன் கருதுகின்ற உற்பத்திக் காலத்திற்கு உரிய ஒரு வாக்கிய அமைப்பு ஆகும்.
ஆனால்,
நான் செய்கிறேன் வேலையை
என்னும் வாக்கிய அமைப்போ, இயல்புக்கு மாறான ஒரு வாக்கிய அமைப்பு என்பது வெளிப்படை!
ஏனென்றால், செயப்படு பொருளை, அதாவது, புறமையை முதலாவதாகவும் எழுவாயை, அதாவது, அகமையை இரண்டாவதாகவும் அகமையின் செயலை, அதாவது, வினையை இறுதியாகவும் கொண்டு அமைக்கப் படுகின்ற கருத்துக் கோவை, இயற்கையான ஒரு கருத்துக் கோவை என்றால், எழுவாயை, அதாவது, அகமையை முதலாவதாகவும் அகமையின் செயலை, அதாவது, வினையை இரண்டாவதாகவும் செயப்படு பொருளை, அதாவது, புறமையை இறுதியாகவும் கொண்டு அமைக்கப் படுகின்ற ஒரு கருத்துக் கோவை, செயற்கையான ஒரு கருத்துக் கோவையாகத்தான் இருந்திட முடியும்.
எனவே,
அகமை —- வினை —- புறமை
என்று வாக்கியங்கள் அமைகின்ற அனைத்து மொழிகளும் செயற்கையான மொழிகள் என்பது எனது கருத்து.
அதாவது,
வேலையைச் செய்கிறேன் நான்
என்னும் வாக்கிய அமைப்பு, மனிதனின் அடிமைத் தன்மையினைக் குணவரைப் படுத்துகிறது என்றால்,
வேலையை நான் செய்கிறேன்
என்னும் வாக்கிய அமைப்பு, மனிதனின் விடுதலைத் தன்மையினைக் குணவரைப் படுத்துகிறது.
இவற்றிற்கு மாறாக,
நான் செய்கிறேன் வேலையை
என்னும் வாக்கிய அமைப்போ, மனிதனின் தடுமாற்றத்தை —- இயல்பான வளர்ச்சி குன்றிய மனிதனின் தத்தளிப்பை —- எனவே, அவனது தன் நலத்தின் தீவிரத்தை —- வெளிப் படுத்துகிறது.
அதாவது,
பள்ளிக்குச் செல்கிறேன் நான்
பணத்திற்காகப் பாடினேன் நான்
வேலையை முடிப்பேன் நான்
என்கின்ற வாக்கிய அமைப்புகள், மனிதனின் அடிமைத் தன்மையினைக் குறிக்கின்றன என்றால்,
பள்ளிக்கு நான் செல்கிறேன்
பணத்திற்காக நான் பாடினேன்
வேலையை நான் முடிப்பேன்
என்கின்ற வாக்கிய அமைப்புகள், மனிதனின் விடுதலைத் தன்மையினைக் குறிக்கின்றன.
அதே நேரத்தில்,
நான் செல்கிறேன் பள்ளிக்கு
நான் பாடினேன் பணத்திற்காக
நான் முடிப்பேன் வேலையை,
சரியாகச் சொல்வது என்றால்,
நான் செல்கிறேன் கு பள்ளி
நான் பாடினேன் ஆக பணம்
நான் முடித்தேன் ஐ வேலை
என்கின்ற வாக்கிய அமைப்புகளோ, மனிதனின் தடுமாற்றத்தையும் தத்தளிப்பையும் துணிச்சலான தீவிரத்தையும் குறிக்கின்றன; எனவே, செயற்கையான வாக்கிய அமைப்புகள் ஆகின்றன.
இன்னும் சிறப்பாக இவற்றை மொழி இயல் வல்லுநரும் உளவியல் வல்லுநரும் வகைப் படுத்திட முடியும் என்பதில் நமக்கு ஐயம் எதுவும் இல்லை.
ஆக,
புறமை —- அகமை —- வினை
என்கின்ற வாக்கிய அமைப்புதான், இயற்கையான —- தமிழ் இயல்பான —- ஒரு வாக்கிய அமைப்பு என்பது எனது கருத்து. இயல்பான ஒரு கருத்துக் கோவையும் இதுதான் ஆகும்.
ஆனால், ஒரே வாக்கியமாக முற்றான பல கருத்துகள் அமைக்கப் படுகின்ற பொழுது, அதாவது, ஒரே வாக்கியமாகப் பல வாக்கியங்கள் அமைக்கப் படுகின்ற பொழுது, மேற் குறித்த எளிமையான வாக்கிய அமைப்புகளில் சில மாறுதல்கள் தேவைப் படலாம். குறிப்பாக, பெயர் நிலைத் தொடர்கள் வருகின்ற ஒரு வாக்கியத்தில் சில மாறுபாடுகள் தேவைப் படலாம்.
எடுத்துக் காட்டாக,
காலையில் பள்ளிக்கு அவன் சென்றான் +
மாலையில் வீட்டிற்கு அவன் வந்தான்.
என்று வருகின்ற இரண்டு வாக்கியங்களில், முதலாவது வாக்கியத்தை ஒரு பெயர் நிலைத் தொடராக நாம் கொள்ளுகின்ற பொழுது, ஓர் எழுவாய்த் தொடராக முதலில் அது வந்து விடுகிறது.
அதாவது,
காலையில் பள்ளிக்குச் சென்று இருந்த அவன்,
மாலையில் வீட்டிற்கு வந்தான்
என்று வாக்கிய அமைப்பு மாறி விடுகிறது.
இங்கே,
அகமைத் தொடர் —- புறமை —- வினை
என்று வாக்கிய அமைப்பு மாறி விடுவதை நாம் காண்கிறோம்.
இது போல, தொடர்ச்சியான கருத்துக் கோவைகளில் அகமையின் பங்கு வலியுறுத்தப் படுகின்ற பொழுதும்,
அகமை —- புறமை —- வினை
என்று வாக்கிய அமைப்பு மாறி விடுகிறது.
இதற்கு எடுத்துக் காட்டாக,
இந்த மதிப்பு-நிகழ்ப்பாடு, பணத்தின் வடிவத்தில்தான் புலப் படுகிறது என்ற போதிலும், அது பணம் அல்ல
என்னும் வாக்கியத்தை நாம் குறிப்பிடலாம்.
இனி, புகழ் பெற்ற சில எழுத்தாளர்களின் எளிமையான சில வாக்கியங்களை எடுத்துக் கொண்டு, அவற்றின் அமைப்புகளைச் சற்று நாம் அலசிப் பார்ப்போம்.
தன் மகளைக் கூஉய்க்
கடைகயிறும் மத்தும் கொண்டு
இடை முதுமகள் வந்து தோன்றும் மன்.
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் வருகின்ற இந்த வரிகளை உரை நடைப் பகுதி என்று வி. செல்வ நாயகம் கூறுகிறார். ( தமிழ் உரை நடை வரலாறு, இலங்கைப் பல்கலைக் கழகம் (1957), பக். 6. )
இங்கே,
கடைகயிறும் மத்தும் கொண்டு
என்பது புறமை;
முதுமகள்
என்பது அகமை;
வந்து தோன்றும்
என்பது வினை.
இப்படி,
புறமை —- அகமை —- வினை
என்று இயல்பான ஒரு வாக்கியமாக இந்த வாக்கியம் அமைந்து இருப்பதை நாம் காண்கிறோம்.
ஆனால், சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதையில் வருகின்ற
நீ வெய்யோளொடு
குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்பு
என்னும் அகவல் பா வாக்கியம் ( வரிகள்: 96-97. ) தமிழ் இயல்பான ஒரு வாக்கியம் அல்ல.
ஏனென்றால்,
அவை அவை குறுகாது குறி அறிந்து,
வெய்யோளொடு நீ ஓம்பு
என்று இந்த வாக்கியம் அமைவதுதான் தமிழ் இயல்பு ஆகும்.
இனி, வி. செல்வ நாயகம் எடுத்துக் காட்டுகின்ற இறையனார் அகப் பொருள் உரையின் ஒரு வாக்கியத்தை நாம் எடுத்துக் கொள்வோம்:
இது கற்க இன்னது பயக்கும்! ( மேற்படி, பக். 26. )
இதனைக் கற்றால் இன்ன பயன் கிடைக்கும்
என்பதுதான் இதன் பொருள் ஆகும்.
எனவே,
இது கற்க —- புறமை
இன்னது —- அகமை
பயக்கும் —- வினை
என்று தமிழ் இயல்பாக இந்த வாக்கியம் அமைந்து இருக்கிறது என்பது தெளிவு. இதில் இருந்து, வாக்கியங்களுள் வருகின்ற ஒரு சில தொடர் நிலைகளைப் புறமையாக நாம் கொள்ளலாம் என்பதும் நமக்குத் தெளிவு ஆகிறது.
கா. சு. (பிள்ளை) எழுதி உள்ள இலக்கிய வரலாறு (1958), இரண்டாம் பகுதி, பக்.379-இல்,
அவள் தனது கற்பைப் பாதுகாத்தற் பொருட்டுத் தற்கொலையுற்றனள்
என்று ஒரு வாக்கியம் வருகிறது. ஆனால்,
தனது கற்பைப் பாது காத்தற் பொருட்டு அவள் தற்கொலை யுற்றனள்
என்பதுதான் தமிழ் இயல்பான வாக்கிய அமைப்பு ஆகும்.
திருக் குறள், பொருள் பால், அரசியலுக்கு முன்னுரை எழுதுகின்ற பரிமேலழகர்,
அது தன் துணைக் காரணமாய அரச நீதி கூறவே அடங்கும்
என்று ஒரு வாக்கியத்தை அமைத்து இருக்கிறார்.
ஆனால்,
தன் துணைக் காரணமாய அரச நீதி கூறவே அது அடங்கும்
என்பதுதான் தமிழ் இயல்பான வாக்கியம் ஆகும்.
706-ஆவது திருக் குறளுக்கு உரை எழுதுகின்ற பரிமேலழகர்,
உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக்
கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது
என்று எழுதுகிறார். இதனை,
பிறிது ஒரு பொருளின் பண்பைக் கொண்டு ஒரு பொருள் தோற்றுதல் ஆகிய தொழில் பற்றி உவமை வந்தது
என்று அவர் எழுதி இருந்தார் என்றால், இந்த வாக்கியத்தின் அமைப்பும் பொருளும் தெளிவாக வெளிப் பட்டு இருந்து இருக்கும்.
தென்னாட்டுப் போர்க் களங்கள் (2001) 1-ஆவது பக்கத்தில், கா. அப்பாத் துரையார் எழுதுகின்ற ஒரு வாக்கியத்தை நாம் பார்ப்போம்:
அவர் அவற்றை வரலாற்றுப் புலவன் மரபில் நின்று வகுத்துரைக்க முயன்றுள்ளார்.
இந்த வாக்கியத்தை,
வரலாற்றுப் புலவன் மரபில் நின்று அவற்றை வகுத்து உரைக்க அவர் முயன்று உள்ளார்.
என்று அவர் அமைத்து இருந்தார் என்றால், தமிழ் இயல்பான ஒரு வாக்கியமாக அது இருந்து இருக்கும்.
எந்த ஒரு கவிதைக்கும் அல்லது இலக்கியத்திற்கும் சிறந்த தெளிவான ஒரு எண்ணம் இருத்தல் வேண்டும்
( சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே (1997) பக். 271. ) என்று எழுதுகின்ற ச. அகத்திய லிங்கம்,
அது பெரும்பான்மையினரின் நன்மையைப் பாதிப்பதாக அமைந்து விடும்
என்றும் ( அதே நூல், பக். 135. ) எழுதுகிறார். ஆனால்,
பெரும் பான்மையினரின் நன்மையைப் பாதிப்பதாக அது அமைந்து விடும்
என்பதுதான் தமிழ் இயல்பான வாக்கிய அமைப்பு ஆகும்.
‘அமிழ் ‘ என்ற வினையடியாகவே தமிழ், தமிழர் என்ற சொற்கள் தோன்றியிருத்தல் கூடும்
என்று ஒரு வாக்கியத்தை அமைத்து இருக்கின்ற க.ப. அறவாணன்,
ஒரு மொழிக்குப் பெயர் பல் வேறு அடிப்படையில் இடப் படும்
என்றும் ( தமிழ்ச் சமுதாய வரலாறு: பண்டைக் காலம் (1992), பக். 43. ) ஒரு வாக்கியத்தை அமைத்து இருக்கிறார்.
பல் வேறு அடிப்படையில் ஒரு மொழிக்குப் பெயர் இடப் படும்
என்று இந்த வாக்கியம் அமைக்கப் படலாம்.
ஈண்டு நான் மேற்கோள் காட்டி இருக்கின்ற தமிழ் அறிஞர்கள், சிறந்த சாதனையாளர்கள் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. இவர்களைக் குறை கூறுவதும் எனது நோக்கம் அல்ல; இவற்றை விட பிழையான வாக்கிய அமைப்புகளை எனது நூல்களிலும் வாசகர்கள் காணலாம்.
எனவே, வரலாற்று முறையாகத் தமிழ் மொழியின் வாக்கிய அமைப்புகள் ஆராயப் பட்டு ஒழுங்கு படுத்தப் பட வேண்டும் என்று கோருவதுதான் எனது நோக்கம் ஆகும்.
மற்றும் தனித் தனிச் சொற்களாகத் தமிழ்ச் சொற்கள் பிரிக்கப் பட வேண்டும் என்றும் நான் கருதுகிறேன். படிப்பதற்கு எளிமையாக அது இருக்கும் என்பதால் மட்டும் அல்ல, தமிழ்ச் சொற்களின் இயல்பினை எல்லோரும் புரிந்து கொள்வதற்கு வசதியாகவும் அது இருக்கும் என்பது எனது கருத்து.
ஆனால், இப்படிப் பிரித்து எழுதுவதால் படிப்பதில் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன என்று கவிஞர் இன்குலாப் கருதுகிறார். ‘இத் தகையது ஒரு ‘, ‘குறிப்பிட்டது ஒரு ‘, என்று சொற்களைப் பிரித்து எழுதுவது, படிப்பதில் ஒரு தடங்கலை ஏற்படுத்துகிறது என்பதும், மாறாக, ‘இத் தகைய ஒரு ‘, ‘குறிப்பிட்ட ஒரு ‘, என்று எழுதுவதுதான் சரியானது என்பதும் அவரது கருத்துகள். ( பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று: பக். 22. ) அதே நேரத்தில், ‘இந்த நூலும் ‘குறிப்பிட்டதொரு ‘ பங்களிப்பைச் செய்யும் ‘ ( அதே நூல், பக். 24. ) என்றும் அவர் எழுதுகிறார்.
அப்படி என்றால், ‘குறிப்பிட்டது ஒரு ‘ என்பதைக் ‘குறிப்பிட்ட ஒரு ‘ என்று எழுத வேண்டும் என்பது அல்ல அவரது பிறழ்ச்சனை; மாறாக, சொற்களைப் பிரித்து எழுதுவதுதான் அவரது பிறழ்ச்சனை; என்பது தெளிவு. ‘சரியானதாக ‘ என்பதைச் ‘சரியானது ஆக ‘ என்று பிரித்து எழுதினாலும் அவர் இடர்ப் படத்தான் செய்வார். ஆனால், தனித் தனிச் சொற்களாகத் தமிழ்ச் சொற்கள் வரையறுக்கப் பட வேண்டும் என்பதுதான் எனது உறுதியான கருத்து.
‘இருப்போமானால் ‘ என்பதை ‘இருப்போம் ஆனால் ‘ என்று பிரித்து எழுதுகின்ற பொழுது, அதன் பொருள் வேறு பட்டு விடுகிறது என்று சொ. கண்ணன் கருதுகிறார். ஆனால், பிரித்து எழுதுவதால் ஏற்படுவது அல்ல இந்தச் சிக்கல்; மாறாக, ‘என்றால் ‘ என்னும் பொருளில் ‘ஆனால் ‘ என்னும் சொல் பயன் படுத்தப் பட்டு வருவதுதான் இதில் சிக்கல்! ஏனென்றால், ‘என்றால் ‘ என்பது நேர் மறையான பொருளையும் ‘ஆனால் ‘ என்பது எதிர் மறையான பொருளையும் உடைய சொற்கள் ஆகும்.
எனவே, எதிர் மறையாக மட்டும்தான் ‘ஆனால் ‘ என்னும் சொல்லைப் பயன் படுத்திட வேண்டும் என்று கருதி, நேர் மறையான பொருள்கள் வருகின்ற இடங்களில் எல்லாம் ‘என்றால் ‘ என்னும் சொல்லை நான் பயன் படுத்தி இருக்கிறேன்.
ஆக, எளிமையான வாக்கிய அமைப்புகளையும் தொடர் நிலை வாக்கிய அமைப்புகளையும் அகமையின் அழுத்தங்களையும் கருத்தில் கொண்டு, தமிழ் இயல்பான வாக்கியங்களாக இந்த நூலின் வாக்கிய அமைப்புகளை மாற்றி அமைத்திட நான் முயன்று இருக்கிறேன்.
கொள்ளுவன கொண்டும் தள்ளுவன தள்ளியும் தமிழின் வாக்கிய அமைப்புகளைச் செப்பம் செய்திட வேண்டியது வாசகர்களின் பொறுப்பு!
sothipiragasam@lycos.com
- ஆட்டோகிராஃப் ‘செந்தமிழ் தேன் மொழியாள் ‘
- மலை ஆமணக்கு எண்ணெயிலிருந்து கார் ஓட்டும் எண்ணெய்
- தேனீ – கட்டுப்பாடும் கலகமும்
Thinnai – Weekly Tamil Magazine - வாக்கிய அமைப்புகள்
- மெதுவாக உன்னைத் தொட்டு..
- மெய்மையின் மயக்கம்: 2
- நி னை வு ப் பு கை
- சூதாட்டமும் காதலும் (ஒரு சங்கீதம்போல – மலையாள நாவல் அறிமுகம் )
- வன்முறையின் நிறம் (போராட்டம் -கன்னட நாவல் அறிமுகம்)
- மலட்டுத்தனம் என்ற குறியீடு : செம்பனே ஓஸ்மனே அவர்களது க்ஸாலா நாவலில் ஆண் பெண்கள் பாத்திரப் படைப்பு பெறும் தலைகீழ் மாற்றம்
- அன்னமிட்ட வெள்ளெலி
- நயாகரா நீர்வீழ்ச்சிப் பள்ளத்தாக்கில் இயங்கும் நீரழுத்த மின்சக்தி நிலையங்கள் [Hydroelectric Power Stations in the Niagara Falls E
- கடிதம் ஜூன் 3,2004
- கடிதம் ஜூன் 3 , 2004
- கடிதம் ஜூன் 3,2004
- கடிதம் ஜூன் 3, 2004
- கடிதம் – ஜூன் 3,2004
- எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு என் அஞ்சலி
- கவிதைகள்…
- அச்சம்
- சிகரெட் நண்பன்
- கவிதைகள்
- நீ சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்
- விகிதாச்சார பிரதிநிதித்துவம் – பல்வேறு முறைகள்
- தீர்ப்பு
- பிறந்த மண்ணுக்கு – 4
- ஹிண்டு பேப்பரும் குத்துவிளக்கும்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -22
- மஸ்னவி கதை 9.1 — சிங்கமும் முயலும் (தொடர்ச்சி)
- உறுத்தல்
- கலை வளர்க்கும் பூனைகள்
- வாரபலன் ஜூன் 3 , 2004 – மலேசியா ஸ்பெஷல் சேடிஸம் – இத்தாலிய பிட்ஸா எமெர்ஜென்ஸி – கேரள புஷ் மாங்கல்ய பிரஸ்னம்
- சோனியா காந்தி – ஒரு நடுநிலைப் பார்வை
- பாலைவன மூளைகளும் பேரீத்தமரங்களும்- மத்திய கிழக்கை முன்வைத்து
- தமிழ் நாட்டு அரசியலில் நடிகர்கள்
- கருணையினால்தான்..
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 5)
- நிறம்
- அதனதன் இரகசியங்கள்
- தமிழவன் கவிதைகள்-எட்டு
- அம்மா+ அப்பா+காதல்
- அன்புடன் இதயம் – 20 – பனிரெண்டாம் குடியரசுத் தலைவா
- ஆதிமூலம்
- ஈன்ற பொழுதில்….
- கவிக்கட்டு – 9 -அன்றொருநாள் அம்மா
- அன்பு