அரவிந்தன் நீலகண்டன்
‘உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்திரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர்,பெரிசியர், ஏவியர், எபூசியர், என்னும் ஜனங்களின் பட்டணங்களிலே மாத்திரம் சுவாசமுள்ள ஒன்றையும் உயிரோடே வைக்காமல் அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம் பண்ணக்கடவாய் ‘
(விவிலியம் – உபாகமம். 21:16-17)
“ஜெர்மானிய ஆப்பிரிக்க எல்லைக்குள் கண்ணில்படும் ஒவ்வொரு ஹெரெரோவையும் அவனிடம் ஆயுதம் இருந்தாலும் இல்லாவிடினும் அவனிடம் கால்நடைகள் இருந்தாலும் இல்லாவிடினும் சுடப்படுவான். அனைத்து ஹெரெரோவும் இத்தேசத்தை விட்டு ஓடிப்போய்விட வேண்டும். நான் பெண்களையும் குழந்தைகளையும் கைது செய்ய மாட்டேன். அவர்கள் துரத்தியடிக்கப்படுவார்கள் அல்லது சுடப்படுவார்கள். ஹெரெரோ தேசத்தவர்களுக்கு இதுவே எனது வார்த்தை” – மேன்மை தங்கிய பேரரசரின் பெரும் தளகர்த்தனான லொதார் வான் ட்ரோத்தா. (1904-இன் ‘முழு ஒழிப்பு அறிக்கை – Extermination order)
பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய காலனிய விரிவாக்கம் ஆரம்பித்தது எனலாம். அதே காலகட்டத்தில் அமெரிக்க கண்டங்களில் உருவான பெரும் தோட்டங்களில் பயிரிடுவதற்கு அடிமைகள் தேவைப்பட்டனர். அமெரிக்க தேவையை பூர்த்தி செய்ய ஆப்பிரிக்க கண்டங்களின் கண்டுபிடிப்பு பயன்பட்டது. ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக்கி விற்கும் கடல்கடந்த ‘மானுட சரக்கு ‘ வியாபாரமும் ஆரம்பமாயிற்று. ‘கிறிஸ்தவரற்றவரின் நிலை கிறிஸ்தவர்களுக்கு இயற்கையாகவே அடிமையாக இருப்பது ‘ எனும் இறையியல் கோட்பாடு இதனை நியாயப்படுத்தப் பயன்பட்டது. விவிலியத்தின் லேவியாகமம் கூறும் பின்வரும் வார்த்தைகள் கிறிஸ்தவராயில்லாத ஆப்பிரிக்க தேசத்தவரை அடிமைகளாக்கிட நியாயம் வழங்கியது. ‘உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்க வேண்டும்….என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம். உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது. ‘ (லேவியாகமம் 25:44-46) மேலும் விவிலியத்தில் பெருவெள்ளக் கால மானுட மூதாதையாக யூத புராணம் நோவாவினைக் கற்பித்தது. அவனது மகனான கானான் என்றென்றைக்கும் அடிமையாக இருக்கும் படி நோவா சபித்தான் என்கிறது யூத புராணக்கதை. விவிலியத்தின் இந்த வசனங்கள் வரலாற்று ஆதாரமாக ஆப்பிரிக்க கண்டத்தவரை அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்த முன்வைக்கப்பட்டது. விக்கிர ஆராதனையாளர்களான கானான் தேசவாசிகள் இந்த சபிக்கப்பட்ட அடிமையிலிருந்து வந்தவர்கள் என்பதாக வரலாறு புனைந்து ஆப்பிரிக்க கண்டத்தவர்களுக்கு அளிக்கப்பட்டது.(ஆதியாகமம். 9:25-27) இவ்வாறு ஆப்பிரிக்க பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட இம்மக்களுக்கு ஓரளவு வசதிகளும் உரிமைகளும் கிடைக்க அவர்கள் தம்மை கிறிஸ்தவர்களாக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
1587 இல் ஏசுசபை பாதிரியார்கள் அடிமைகளை தம் ஆப்பிரிக்க பண்ணைகளில் வைத்திருந்தனர். அவர்களது திருச்சபை செயல்பாடுகளுக்குத் தேவையான பணத்தினை பெற அடிமைகள் தேவைப்பட்டனர். வருடத்திற்கு 300 அடிமைகள் விற்கப்பட்டனர். கிறிஸ்தவ அடிமைகள் விற்கப்படுவது எதிர்க்கப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டது. 300 ஆப்பிரிக்கர்கள் பிடிக்கப்பட்டு அதில் 100 பேர் அடிமைகளாக ஏசுசபை பண்ணைகளில் பணியாற்ற வைக்கப்படுவார்கள் எனவும், 150 பேர் விலைக்கு விற்கப்படுவார்கள் எனவும், 50பேர் உண்மையான மதம் கற்பிக்கப்பட்டு ஞான ஸ்நானம் செய்து விடுவிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆப்பிரிக்க அடிமைச்சந்தையிலேயே விற்கப்பட்டால் விலை மலிவாக இருக்கும் என்பதால் அடிமையாக்கப்பட்ட ஆப்பிரிக்கர்கள் பிரேஸிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விற்கப்பட்டனர். ஆப்பிரிக்கர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட கிறிஸ்தவம் அவர்களுக்கு வெள்ளை எஜமானர்களுக்கு அடங்கி நடப்பதையும் போதித்தது. பிரார்த்தனைகள் ‘ஆண்டவரே எங்கள் எசமானர்களுக்கு எங்களை கீழ்படிதல் உள்ளவர்களாக்கும் ‘ எனும் வேண்டுதலுடன் முடிந்தன. பெல்ஜியம் தனது ஆளுகைக்கு உட்பட்ட லவாண்டா எனும் ஆப்பிரிக்க பிரதேசத்தில் பிரான்ஸிஸ்கன் துறவிகளான கபூசின்கள் (Capuchins) தாம் மதம் மாற்றிய ஆப்பிரிக்கர்கள் பாகன் கோவில்களுக்கு மீண்டும் சென்று தொழுத போது பாகன் கோவில்களை எரித்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பெல்ஜிய கபூசின் துறவி கொல்லப்பட்டார். பெல்ஜியம் லவாண்டா எனும் ஆப்பிரிக்க பிரதேசத்தில் பன்மை தெய்வத்துவ விக்கிரக ஆராதனையை தடைசெய்து வழிபாடு நடத்துவோரை கைது செய்து பிரேசில் தோட்டங்களில் வேலை செய்ய அனுப்பியது. பிரேசிலில் போர்ச்சுகீசிய புனிதவிசாரணை (Holy inquisition) நிறுவப்பட்டிருந்தது. வலுக்கட்டாய மதமாற்றத்தின் பின்னர் மீண்டும் பூர்விக ஆன்மிகத்தினை மேற்கொள்பவர்கள், அல்லது அவ்வாறு சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டவர்கள் -குறிப்பாக பெண்கள்- கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தாம் பேய்களுடன் உறவு கொண்டதாக பொதுமக்கள் முன்னிலையில் சாட்சி அளிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். உதாரணமாக, 1620 இல் நியூ கிரானடாவில் ஐந்து ஆப்பிரிக்கர்கள் மேல்கண்ட ‘குற்றங்களுக்காக ‘ கைது செய்யப்பட்டனர். இவர்களில் நால்வர் பெண்கள். அவர்கள் தம் குற்றங்களை ஒத்துக்கொண்டதால் இரக்கம் காட்டப்பட்டனர். அதாவது கொல்லப்படாமல் வாழ்நாளுக்கு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த ‘கறுப்பு சூனியக்காரிகளின் ‘ ஒப்புதல் வாக்குமூலங்கள் ஆப்பிரிக்க மக்களின் பூர்விக ஆன்மிகத்தினை அழிக்க உதவியது. இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஒரு கிறிஸ்தவ பிரார்த்தனையும் தெரியாது. ஏசுசபை துறவியான அலோன்ஸோ டி சாண்டோவல் இதனைக் குறித்து ‘அவர்களுக்குள் சிலர் மோசமான எடுத்துக்காட்டுகளாக இருந்து அவர்களை பண்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கை வாழவிடாமல் காட்டுமிராண்டிகளாக்குவதாக ‘ குறைகூறினார். இவையெல்லாமாக ஆப்பிரிக்க ஆன்மிக நினைவுகளையே அழித்தொழிக்கப் பயன்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ திருச்சபைகள் ஆப்பிரிக்க பாகன்களை கிறிஸ்தவராக்குவது பண்பாடுடையவர்களாக்குவது ஆகிய கடமைகளை செய்ய அடிமை அமைப்பு ஒரு கருவி என ஏற்றுக்கொண்டது. ஸிம்பாபுவே பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த எட்மோர் முபுமே கூறுகிறார்: ‘ஐரோப்பிய குடியேறிகள் ஆப்பிரிக்க நில ஆக்கிரமிப்பின் மீதே தமது பொருளாதார அரசியல் அமைப்பினை உருவாக்கினர். ஐரோப்பிய காலனியாக்கம் ஆப்பிரிக்க நில அபகரிப்பின் மூலம் நிகழ்ந்தது. இதற்கான பல எடுத்துக்காட்டுகளை அளிக்கமுடியும். மாலாவாயின் ஷைர் பிரதேசங்கள், கென்யாவின் சமவெளிகள், தென்னாப்பிரிக்க ஸிம்பாபுவே ஆகிய இடங்களின் நில ஆக்கிரமிப்புகள், பிரெஞ்சு காலனியாதிக்கத்திற்கு எதிரான அல்ஜீரிய நிலப் பிரச்சினைகள் போன்றவை. இக்காலனிய காலங்களில் வெறும் இனரீதியான உள்ளோட்டங்களுக்கு அப்பாலும் நில அபகரிப்புக்கு பரிமாணங்கள் இருந்தன. மத அமைப்புகளும் கிறிஸ்தவ சபைகளும் பெரும் அளவிலான ஆப்பிரிக்க நிலங்களை இங்கு எடுத்துக்கொண்டன. கிறிஸ்தவ சபைகள் காலனிய சமத்துவமற்ற கோட்பாடுகளால் பெரிதும் இலாபமடைந்தன. அத்துடன் ஆப்பிரிக்க இயல்பான ஆன்மிக அமைப்புகளையும் நம்பிக்கைகளையும் அழிப்பதில் (கிறிஸ்தவ சபைகளின் நில அபகரிப்பு) பெரிதும் உதவின. ஆப்பிரிக்காவின் பூர்விக நில உடமை-,நில மேலாண்மை நில-உற்பத்தி அமைப்புகள் அழிக்கப்பட்டன. கிறிஸ்தவத்தினை ஏற்றுக்கொண்ட உள்ளூர்வாசிகளுக்கும் தலைவர்களுக்கும் நிலங்கள் பெருமளவில் அளிக்கப்பட்டன. பெரும்பாலான ஆப்பிரிக்க பூர்விகக் குடிகள் நிலமின்றி நாடோடிகளாக்கப்பட்டனர். ‘
தென்னாப்பிரிக்காவின் கடற்கரையில் 1652 இல் டச்சுக்கள் குடியேறினர். டச்சு கிழக்கிந்திய கம்பெனி அங்கு தனது மையத்தினை ஸ்தாபித்தது. ஹாலந்திலிருந்து பலர் அங்கு குடியேறலாயினர். இவர்கள் தம்மை ‘போயர் ‘ என அழைத்தனர். 1814 இல் நெதர்லாந்து தமது பிரதேசத்தை பிரிட்டிஷுக்கு அளித்ததைத் தொடர்ந்து இவர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் மோதல் ஏற்பட்டது. 1836 இல் கடற்கரையிலிருந்து மையப்பகுதிக்கு தம்மை ‘ஆப்பிரிக்கானர் ‘(Afrikaner) என அழைத்துக்கொண்ட இவர்கள் நகரத் தொடங்கினர். இது பெரும் நடைபயணமாக (Great Trek) கருதப்பட்டது. இப்பயணம் குறித்த அவர்கள் விவரணம் விவிலியத்தின் வாக்களிக்கப்பட்ட பூமியை நோக்கிய இஸ்ரவேலர் பிரயாணத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்கியது. உதாரணமாக, ‘பிரிட்டிஷார் எகிப்தியர்களை போல அவர்களைத் தொடர்ந்திட, சுற்றி எங்கினும் நம்பிக்கையற்ற கரும் கானான் தேசத்தவர் இருக்க ஆண்டவரின் குழந்தைகளான அவர்கள் ஆண்டவரின் சங்கல்பப்படி அனைத்து தீமைகளிலிருந்தும் சத்துருக்களின் கரங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு வாக்களிக்கப்பட்ட பூமியில் அவர்களுக்கு சகல சுதந்திரத்துடனும் வாழ வைக்கப்பட்டனர். ‘ ஆப்பிரிக்கானர்களின் விரிவாதிக்கத்தை எதிர்த்த 10000 ஸூலு பூர்விகக்குடிகள் டிசம்பர் 16 1838 அன்று கொல்லப்பட்டனர். இப்படுகொலையில் எந்த ஆப்பிரிக்கானரும் இறக்கவில்லை. இது ஆண்டவர் ஆண்டவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளான ஆப்பிரிக்கானருடன் செய்து கொண்ட ஏற்பாட்டின் அடையாளமாகக் கூறப்பட்டது. ‘நிர்வாண கறுப்பு கீழினக் கும்பல்கள் நடுவில் ஆண்டவர் வழிநடத்த விடுதலை தேடி நடந்த புதிய இஸ்ரேலியரான ‘ ஆப்பிரிக்கானர்கள் குறித்து பாடல்கள் புனையப்பட்டன. பின்னர் அண்மைக்காலம் வரைத் தொடர்ந்த அபார்தைட்டின் வேர்கள் இவைதாம்.
இன்றைக்கும் இந்த நில உரிமை போராட்டங்கள் ஆப்பிரிக்காவில் தொடரத்தான் செய்கின்றன. கிறிஸ்தவ திருச்சபையினர் இந்நிலம் குறித்த போராட்டம் முடிவில் ஆப்பிரிக்க பூர்விகக்குடிகளின் ஆன்மிக நெறிகளை கிளறும் என அறிவர். எனவே பெரிய அளவில் ஆப்பிரிக்க ஆன்மிக நெறிகளை கிறிஸ்தவத்தில் உள்ளடக்க முயற்சிகள் நடக்கின்றன. கிறிஸ்தவ ஓரிறைக் கோட்பாட்டுடன் ஆப்பிரிக்க ஆன்மிக நெறிகளை இணைப்பதுடன், ஆப்பிரிக்க சமுதாயங்களுக்கு உள்ளே இருக்கும் சமுதாய தீமைகளையும் (உதாரணமாக பெண்களின் நிலை), இன அடிப்படையிலான வேறுபாடுகளையும் மேம்படுத்தி கிறிஸ்தவ ஓரிறை ஆன்மிகத்துக்குள் ஆப்பிரிக்க ஆன்மிகத்தை உள்வாங்குவதே இன்று கிறிஸ்தவ உலக அமைப்பினால் மேற்கொள்ளப்படும் பெரும் முயற்சியாகும். உதாரணமாக மேற்கூறிய அமைப்பு ‘நிலமும் ஆப்பிரிக்க ஆன்மிக மரபுகளும் ‘ என்கிற தலைப்பில் மதம் மாற்றப்பட்ட ஆப்பிரிக்க அறிஞர்களாலும் மிஷிநரிகளாலும் நடத்திய சர்வதேச கருத்தரங்கினைக் குறிப்பிடலாம். படுகொலைகள், பூர்விக வாழ்விடங்களை விட்டுத் துரத்துதல் அதன் பின்னர் மதம் மாற்றுதல், பின்னர் கிறிஸ்தவ அடிப்படையில் ஆப்பிரிக்க மக்களுக்கு பொருளாதார உரிமைகளை ‘பெற்றுக் கொடுத்தல் ‘ என்பதே கிறிஸ்தவ சபைகளின் செயல்பாடுகளாகும். ஒரு உதாரண ஆப்பிரிக்க ஆன்மிக மரபினை நோக்கலாம். 1904 இல் ஜெர்மானியரால் படுகொலை செய்யப்பட்டு நிலங்கள் பறிக்கப்பட்டு இன்று நாடோடி மாடு மேய்க்கும் இனமாக வாழும் மக்கள் ஓமுகுரு எனும் தெய்வத்தினை வணங்கியவர்கள் ஹிரேராக்கள். மேலும் புனித அக்கினி வழிபாட்டாளர்கள். ஜீவன், கருவுறுதல், வளமை என அனைத்தையும் அக்கினியே குறிக்கிறது. இன்று பெரும்பாலான ஹெராராக்கள் அவர்களை படுகொலை செய்த அதே ஜெர்மனியின் கத்தோலிக்க பாதிரிகளால் மதம் மாற்றப்பட்டுவிட்டனர். ஆயின் சிறுபான்மையினர் இன்னமும் தம் முந்தைய ஆன்மிக மரபுகளை விடாமல் – அதனால் ஏற்படும் பாதகங்களையும் ஏற்று-வாழ்கின்றனர்.
மற்றொரு மிஷிநரி மதமாற்ற முறையானது விவிலியத்தின் நோவா பிரளயத்தின் பின்னர் ஏற்பட்ட குடியேற்றம் மற்றும் அதனால் ஏற்பட்ட இனங்கள் என்பது குறித்ததாக இருந்தன. மனித ‘இனங்கள் ‘ (races) எனும் பகுப்பு ஆப்பிரிக்க சமுதாயங்களின் மீது ஏற்றப்பட்டன. ஒரு மனிதக் குழுமத்தை ‘தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும் ‘ ‘காணாமல் போன ஆட்டுக்குட்டியாகவும் ‘ மிஷிநரிகள் வர்ணித்தனர். அவர்களது மத நம்பிக்கைகள் பாரம்பரிய கதைப்பாடல்கள் வீரக்கதைகள் ஆகியவற்றிற்கு இன ரீதியிலான வியாக்கியானங்களை கொடுத்தனர். மிஷிநரிகளுக்கும் காலனிய வாதிகளுக்கும் இம்முறை மிகுந்த பயனை விளைவித்தது. ஆனால் ஆப்பிரிக்க மக்களுக்கு இது மிகவும் கொடுமையான பிற்கால விளைவுகளுக்கு வழிவகுத்தது. பிரெஞ்சு மானிடவியலாளர் ஜீன் பியேரி லான்கெல்லியர் கூறுகிறார்: ‘ஹூட்டுக்களும் டட்ஸிகளும் உருவ அமைப்பில் வேறுபட்டவர்கள் எனும் கூற்று 1860களில் ஜோன் ஸ்போகே என்பவரால் கூறப்பட்டது. ருவாண்டா (பொதுவாகவே ஆப்பிரிக்கா) சரித்திரம் மிஷிநரிகளால், காலனிய ஆதிக்கவாதிகளால் திரிக்கப்பட்டது. மிஷிநரிகள் ஹூட்டுக்களுக்கு அவர்கள் சரித்திரத்தை அடிப்படை தவறுடன் கற்பித்தனர். ஹூட்டுக்களை டட்ஸிக்கள் வெளியே இருந்து வந்து வென்றதாக கற்பித்தனர். மிஷிநரிகள் இவ்வாறாக ஐரோப்பியத்தன்மை கொண்ட கற்பிதங்களை ஆப்பிரிக்கர் மீது திணித்தனர். 1950களி இக்கற்பிதங்கள் டட்ஸிகளுக்கு எதிராக வலுவான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. ‘
ருவாண்டாவே மிகவும் கிறிஸ்தவமயமாக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடு என்பதையும், பெல்ஜிய கத்தோலிக்க மிஷிநரிகளால் அன்றும் கத்தோலிக்கச் சபையால் இன்றும் மிகவும் கட்டுப்படுத்தப்படும் மக்களைக் கொண்ட நாடு என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. மிஷிநரிகளும் ஐரோப்பியரும் வருவதற்கு முன்னர் ஹீட்டுக்களும் டட்ஸிகளும் ஒருவராக ஒருவர் மாறும் தன்மையுடன் இருந்தனர்,. விவசாயம் செய்ய விரும்புபவர் ஹூட்டுவாகவும் கால்நடை மேய்ப்பவர் டட்ஸியாகவும் மாறலாம். ஆனால் இதற்கு இன வியாக்கியானம் அளிக்கப்பட்ட பின் அது கடுமையான இறுக்கத்துடன் மாறியது. இறுதியில் 50000 பேர்களை பலிகொண்ட இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனப் படுகொலைகளில் ஒன்றில் அது முடிந்தது.
இன்று ஒரு மிகச்சிறிய சிறுபான்மை ஆப்பிரிக்க அறிஞர்களும் ஆன்மிகவாதிகளும் கிறிஸ்தவர்கள் தம் ஆன்மிகத்தின் மீது கட்டியுள்ள தளைகளை நீக்கி தமது பூர்விக ஆன்மிகத்தினை வலியுறுத்துகின்றனர். இவர்களுக்கு சர்வதேச அளவில் குரலெழுப்பும் தளம் ஏதுமில்லை. எனினும் இவர்கள் குரல் மெதுவாக உறுதியாக ஆப்பிரிக்காவின் மூலைகளுக்கு சேர ஆரம்பித்துள்ளன. முனைவர் க்வாபினா அசாந்தே கூறுகிறார்: ‘ ஆப்பிர்ிக்க தேவ தேவியர் ஆப்பிரிக்கரின் பிரக்ஞையிலிருந்து அகற்றப்பட்டு, அங்கு ஒரு வெள்ளைத்தோலும் நீல கண்களும், நீண்ட நாசியும் நீள முடியும் கொண்ட ஒரு ஆண்டவர் -ஏசு எனும் பெயரில் நமது ஆன்மாக்களை சொர்க்கத்திற்கு எடுத்துச்செல்ல கொண்டுவரப்பட்டுள்ளார். ஆப்பிர்க்க கோவில்களும் புண்ணிய தலங்களும் அழிக்கப்பட்டு அங்கு கிறிஸ்தவ சபைகள் உருவாகியுள்ளன. நம் குழந்தைகளுக்கு நாம் ஆப்பிரிக்க பெயர்களை வைக்கவில்லை மாறாக, அவை கிறிஸ்தவ பெயர்களாக ஜானாகவும், மேரியாகவும், ஜேம்ஸாகவும் உள்ளன ‘. ஆப்பிரிக்க அமெரிக்க ஆய்வுகளில் முனைவர் பட்டம் ஏற்பட காரணமாக இருந்தவரும் 42 நூல்களின் ஆசிரியருமான பேராசிரியர் மோலெபி அசாந்தே கூறுகிறார்: ‘இன்று 53 ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே ஒரு நாடுதான் சமயத்தில் கிறிஸ்தவ இஸ்லாமியரின்றி ஆப்பிரிக்க பெரும்பான்மை நாடாக விளங்குகிறது. இந்நாடு பெனின் ஆகும். 87 சதவிகித மக்கள் பூர்விக ஆப்பிரிக்க ஆன்மிக மரபுகளை பின்பற்றுவோர் ஆவார். ஆனால் இது ஒரு சிறிய நாடு. பிரச்சார ரீதியில் பெருமளவு ஏதும் சாதிக்க இயலாத நாடு. வருங்கால ஆப்பிரிக்க அரசியலில் இது எதுவும் பெரிதாக சாதித்துவிடுமென தோன்றவில்லை. என்றாலும் அடிப்படை கேள்விகளை நாம் கேட்க வேண்டிய நேரம் வந்துள்ளது. ‘
—-
aravindan.neelakandan@gmail.com
- பிரதாபசந்திர விலாசம் -2
- ஒரு கிராமத்து இளைஞனும் புலமைப் பரிசிலும்
- சகுனம்
- பொங்கல் வாழ்த்துக்கள்
- வ.ந.கிரிதரன் கவிதைகள்!
- விடியலை நேரம் உணர்த்தினாலும் ….
- ஓராண்டு கடந்து ஸ்ரீலங்காவில் சுனாமி மீட்சி வசதிகள் -2
- திறந்திடு சீஸேம்! / கவிதாவதாரம் / எஸ். ஷங்கரநாராயணன்
- வளர்ச்சி
- கற்பனையும் சித்தரிப்பும் : எம். யுவனின் ‘கைமறதியாய் வைத்த நாள் ‘
- நம்பி வந்த வழியில் சேக்கிழார்
- பிரெஞ்சு படைப்புலகில் ‘சுயகதைகள் ‘(Autofiction)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 6. கல்வி- மருத்துவம் எல்லாம் இலவசம்.
- ஆகாயப் பந்தலிலே
- கடிதம்
- வாக்களிக்கப்பட்ட பூமி ஸிண்ட்ரோம்-2 (Promised Land Syndrome- 2) வாக்களிக்கப்பட்ட பூமி: ஆப்பிரிக்க கண்டம்
- ஹிந்து சமூகப் பிளவும், வகுப்பு வாரி பிரதிநிதித்துவமும்
- சி.என்.ஜி
- முரண்பாடுகளின் அறுவடை
- கதை
- பாக்கி
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 4
- தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் ?
- எதிர் குலக் கல்வி எனும் சிந்தனையின் அடியொற்றி…
- வகாபிசமும் நவீன முதலாளியமும்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்
- இயற்கையும்,விடுதலையும்…
- ‘தமிழ் பாதுகாப்புக்குழு ‘ ஒரு கண்ணோட்டம்
- எடின்பரோ குறிப்புகள் – 6
- கீதாஞ்சலி (57) வலியூட்டும் இன்னிசை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- வார்த்தை
- பெரியபுராணம் – 73 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி