ரெ.கார்த்திகேசு
காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு சிறுகதைத் தொகுப்பின் எல்லாக் கதைகளையும் படித்து விட்டு அவர் கற்பனா மனம் எப்படிப்பட்டது என்பதைச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய முதற் கதையிலிருந்தே எனக்கு அதற்கான வாசகங்கள் கிடைத்தன:
“என்னிடம் எல்லாரும் வழமையாகக் கேட்பது: மலைமேலிருக்கையில் என்ன உணறுகிறாய்?”
ஆம், இவர் எழுத்துக்கள் மலை மேலிருந்து தனக்குக் கீழுள்ள உலகத்தைப் பறவைப் பார்வையாகப் பார்ப்பதுதான். அது ஒரு அமெரிக்க வழுக்கைத் தலைக் கழுகின் அகன்ற பார்வை. புதிதாக ஏதேனும் தென்பட்டால் அதன் இண்டு இடுக்குகளையும் மேயும் பார்வை. வழமையில் கொஞ்சமும் விருப்பமில்லாத புதிய விஷயங்களையே தேடும் பார்வை.
இப்படியாகத் தன்னைச் சுற்றி உள்ள உலகத்தைப் பார்த்து, அந்தப் பார்வையைத் தன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் அவருடைய பாணி. அந்தப் பார்வையில் படுபவை பெரும்பாலும் தமிழ் வாசகனுக்குப் பழக்கமில்லாத பிரதேசங்கள். தமிழ்ச் சிறுகதைக்குப் புதிய தளங்கள். உண்மையில் பெரும்பாலான தமிழகச் சிறுகதை எழுத்தாளர்களும் வாசகர்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்பில்லாத புதிய தூரநோக்காடிக் காட்சிகள். அமெரிக்காவும், கியூபாவும், அயர்லந்தும் அவற்றின் வரலாற்றுப் பின்னணி பிறழாமல், அவற்றின் தற்காலத் தன்மையையும் இழக்காமல் தமிழ் வாசகன் முன்னே கதைப் பரப்புக்களாக விரிகின்றன.
ஐந்தே கதைகளை மட்டும் கொண்டு, ஆனால் ஒவ்வொரு கதையிலும் செறிவான அடர்த்தியான கருத்துக்களைக் கொண்டு உருவாகியிருக்கிறது இந்த நூல்.
தமிழ் வாசகத் தளத்தில் இன்னும் வழமையாகாத வெளிநாட்டு வாழ்க்கைதான் இதன் தொனி என்றால், இந்தத் தொனிக்கு அன்னியச் சுருதியாக அமைந்திருக்கும் ஒரே கதை “உறவுச் சங்கிலிகள்”. வரிசைக்குள் அடங்கவில்லையே தவிர அதன் அளவில் மிகச் சிறந்த கதைதான்.
ஏற்கனவே “ஓட்டைக் காலணாக்கள்” (இதுவே சிறந்த தலைப்பு என நான் நினைக்கிறேன்) என்னும் தலைப்பில் இது கணையாழியில் வந்திருந்த போது நான் என் கருத்தை எழுதியிருந்தேன். அதன் ஒரு பகுதி:
“காஞ்சனா தாமோதரனின் “ஓட்டைக் காலணா” (கணையாழி: டிசம்பர் 2002) உருவகச் செழுமையும், இதமான நடையும், மனதை வருடும் நிகழ்வுகளும் உள்ள கதை. தங்களின் சுய இன்பங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிற குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அக்கறையாகக் கவனித்துக் கொண்டு குடும்பப் பின்னணியில் கரைந்துவிடும் ஒற்றையான பெண்கள் நம் குடும்பங்களில் உண்டு. இவர்களை ஒரு தேய்ந்த அச்சில் வார்த்திருக்கும் பல கதைகள் உண்டு.
ஆனால் காஞ்சனா இந்தப் பெண்ணின் தனித்துவத்தை முன்னெடுத்து வைக்கிறார். தான் அடுத்திருந்த சொந்தக்காரர்கள் எல்லாம் செத்துப்போக இவர் மட்டும் தனியாளாய் இருப்பதுதான் இவருடைய சாபம். சொந்தக்காரர்கள் இல்லாமல் போய்விட அன்னியரைச் சொந்தக்காரர்களாகப் பொய்சொல்லி வரித்துக் கொள்வதும், செத்துப் போன சொந்தக்காரர்களுக்கு மற்றவர்களைவிட்டுக் கடிதம் எழுத வைப்பதும், ஓட்டைக் காலணாக்கள் அடங்கிய பையின் மர்மத்தைப் பாதுகாப்பதுமாக இவர் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்.
இவருக்குப் பாதுகாப்பு வளையம் போல இருந்த ஓட்டைக் காலணாப் பை காணாமல் போகிறது. இவர் உறவினர்கள் என்று ஏமாற்றிவந்த குடும்பம் இவருடைய பொய்யைப் புரிந்துகொண்டும் இருக்கிறது. நம்பிக்கனி அத்தையின் உலகம் உடைந்து உதிர்ந்து போகும் நேரம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த நெருக்கடி காலத்தில் நல்ல மனிதர்கள் எப்படி நயமாக, நாகரிகமாக, அன்பாக நடந்துகொள்ளுகிறார்கள் என்று காஞ்சனா கதையை முடித்திருக்கும் விதம் வாழ்வின் மேல், மனிதத்தின் மேல் நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறது.”
இனி தொகுப்பின் மற்ற நான்கு கதைகள்தான் இங்கு நமது குவியம்.
“ஸியர்ரா நெவாடா” கதையில் அதன் நாயகி சித்ரா தன் கணவன் லேரியுடன் ஸியர்ரா நெவாடா மலையில் ஏறச் செல்கிறாள். அது நடந்து ஏறும் பாதை அல்ல. செங்குத்தான பாறைகளில் ஆணி அடித்து ஏற வேண்டிய பாறை. அது அவளுக்கு ஒரு சவால். ஏன் ஏறுகிறாள் என்றால் அவை “ஏறாத பாறைகள். எனவே ஏறத்தான் வேண்டும்.”
இதனை ஒரு கதை என்பதை விட மன அவசங்களின் அலசல் என்று கூடச் சொல்லலாம். தன் மனம் ஏன் நிம்மதி இல்லாமல் அலைகிறது என்பதைத் தனக்குள் அலசுவதற்கே இவள் இந்த மலையேறும் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்கிறாள். ஆபத்தான கம்பிகளில் தொங்கி செங்குத்தான மலைப்பாறைகளில் ஏறிக்கொண்டிருக்கும்போதும் இந்த மன அவசம் மனதுக்குள் அலைமோதுவதுடன் கணவனுடன் உரையாடலாகவும் எழுகிறது. அந்த உரையாடலை ஒரு கவிதைத் தளத்துக்கே கொண்டேசெல்கிறார் காஞ்சனா.
“லேரி, நாம் ஏன் இப்படி நம்மையே வருத்திக் கொள்கிறோம்?”
“சித்ரா, பதில் தெரிந்த கேள்விகளைக் கேட்பதில் நீ வித்தகி ஆகிவிட்டாய்!”
“லேரி, நாம் ஏன் இப்படி நம்மையே வருத்திக் கொள்கிறோம்?”
“சித்ரா, மனித அளவிலான உணர்வுகளை உணர இயலாமல் மரத்த மனது உணர்வுமிகையை வேண்டுவதால்!”
“லேரி, நாம் ஏன் இப்படி நம்மையே வருத்திக் கொள்கிறோம்?”
“சித்ரா, உலகில் வெற்றியென்று சொல்லப்படுபவற்றில் வெற்றியின் உண்மையான கரு இல்லை என்று உணர்வதால்!”
“லேரி, நாம் ஏன் இப்படி நம்மையே வருத்திக் கொள்கிறோம்?”
“சித்ரா, ஆதிப் பயத்தின் காரணியாக மரணத்தைச் சீண்டி நம் தைரியத்தை நிருபிக்க விரும்புவதால்”
இந்தத் தருணத்தில் பனிப்பாறைகள் சரிந்து ஒரு பெரும் விபத்து ஏற்பட்டு லேரி விழுந்து மரணமடைகிறார். சித்ரா ஒரு குகைக்குள் நுழைந்து உதவிக்குக் காத்திருக்கிறாள். ஆனால் எந்த உதவியும் வரவில்லை.
பல நூற்றாண்டுகள் கழித்த எதிர்காலத்துக்கு கதை பெரும் தாண்டாகத் தாண்டுகிறது. ஊழிக் காலங்கள் கழிகின்றன. பூமி உறைந்து மீண்டும் வெப்பமடைகிறது. புதிய உலக ஆய்வாளர்கள் சித்ராவின் எலும்புக்கூட்டைக் கண்டெடுக்கிறார்கள். ஒரு ஆய்வாளன் இவள் “பனிக்கட்டி யுகத்துக்கு முற்பட்ட பெண்… நிலம் கண்டங்களாய்ப் பிரிந்து கிடந்த காலத்தைச் சேர்ந்த பெண்” என்று குறிப்பெழுதி அந்த எலும்புக் கூட்டுக்கு ஒரு எண் கொடுத்துப் பதிந்து கொள்கிறான்.
இப்படி ஒரு பிரளயங்கள் உள்ளடக்கிய காலவெளியை இந்தக் கதை கொண்டிருக்கிறது. இறுதியில் தத்துவார்த்தமான பல சிந்தனைகளை நம்முள் எழுப்பும் கதை. ‘வாழ்வு என்பது என்ன? மனிதர்களின் மன அவசங்களுக்குப் பொருள் இருக்கிறதா?’ என்பன போன்ற கேள்விகள். இறுதியில் நம்மைப் படைத்த இயற்கைச் சக்திகளுக்கு முன் நாம் துகள்களே என்ற பேருண்மை நம்மைப் பீடிக்கிறது. இந்த எண்ணங்களில் கதை சிறியதாகிவிடுகிறது. இது கதை சொல்லும் கதை அல்ல; மனித வாழ்வின் முக்கியமின்மையை ஒரு கவிதையாகக் கூறும் கலை வெளிப்பாடு என்றே உணருகிறோம்.
“ஓர் அமெரிக்க நெடுஞ்சாலைப் பயணம்” என்னும் கதையில் இன்னொரு அமெரிக்கப் பிரதேசம் பெரும் காட்சியாக விரிகிறது. இங்கே அமெரிக்க 9/11 பேரழிவில் நியூ யார்க் இரட்டைக் கோபுரத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த பெண், இனி தன் வாழ்வு என்ன என்பதனைக் கண்டடையத் தவிக்கிறாள். சில காலம் பெற்றோருடன் வாழ்ந்து பார்க்கிறாள். சில காலம் தனித்து வாழ்ந்து பார்க்கிறாள். தனக்குக் கைவந்த ஓவியக் கலையை பயன் படுத்தி ஓவியங்களை வரைந்து தள்ளுகிறாள். தனிமை அதிகமாகிறதே தவிரக் குறையவில்லை.
“ஒரு நூலையும் இரண்டு ஊக்குகளையும் வைத்துத்தான் என் வாழ்வையே கோர்த்து வைத்திருந்தேன். ஒவ்வொரு காலையும் ஒரு புகைமூட்டத்தினூடே இன்னுமொரு நாள் என்பதாய்த்தான் விடிந்தது. ஆனாலும் அந்த ஊர்வலத்தில் ஓர் அனாமதேயச் சிறு புள்ளியாய் நடப்பது முக்கியமாகத் தெரிந்தது.”
பின்னும் தனிமை தொடர்ந்து விரட்ட ஒரு பெரும் திறந்த வெளியில் தன்னைக் கரைத்துக் கொள்ள வட அமெரிக்கக் கண்டத்தின் குறுக்காகத் தன் காரில் தன் நாயை மட்டும் துணையாகக் கொண்டு தன் ஓவிய முக்காலியையும் கித்தான்களையும் தூக்கிகொண்டு பெரும் பயணம் தொடங்குகிறாள். பயணத்துக்கு இலக்கு ஏதும் இல்லை. மன வெறுமையைத் தணித்துக் கொள்ள தான் காணுகின்ற வெவ்வேறு விதமான காட்சிகளையும் அதில் போட்டுத் திணித்துக் கொள்ளுகிறாள்.
ஓராண்டு அமெரிக்காவின் நான்கு பருவ காலங்களிலும் நெடுஞ்சாலையிலும் விடுதிகளிலும் பிறர் வீடுகளில் ஒட்டுக்குடித்தனமுமாக அவள் வாழ்க்கை ஓடுகிறது. மெய்ன் மானிலத்தில் ஒரு தனித்த கலங்கரை விளக்கத்தில் அதன் காவலரான அமெரிக்கப் பழங்குடி பெனாப்ஸ்காட் இன மனிதரைச் சந்தித்து அவர்களைப் பற்றி அறிந்து கொள்கிறாள். மிஸ்ஸிஸ்ஸிப்பியில் ஃபாக்னர் வாழ்ந்த கிராமத்தைத் தேடிச் செல்லும் வழியில் ஒரு குக்கிராமத்தில் (?) கத்ரீனா புயலால் அலைக்கழிக்கப்பட்டு சிதறி ஓடிய எந்த உதவியும் இல்லாத நிலையில் பரதேசிகளாக வாழும் மக்களிடையே சில நாட்கள் தங்கி இருக்கிறாள். பின் நாவாஹோ பூர்வ இனக் குடிமக்களிடையே கொஞ்ச நாள் வாசம். பின் மொஹாவி பாலைவனத்தைக் கடக்கிறாள்.
“ஒரு வருடமும் பல மாநிலங்களும் பல ஓவியக் கித்தான்களும் பல உணர்வு நிலைகளும் கடந்த பின்” நியூ யார்க் நோக்கித் திரும்புகிறாள். வழியில் வர்ஜீனியா மாநிலத்தில் ஒரு பழம்பெரும் பண்ணை வீட்டைப் பார்த்து அதன் உரிமையாளர்களை நட்பாக்கிக்கொண்டு அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக அவர்களின் சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டு தங்கியிருக்கிறாள். சில மாதங்களுக்குப் பின் பிரிவுத் துயர் கவிய விடைபெற்று வீடு திரும்புகிறாள்.
பயணத்தையும் சந்தித்த மனிதர்களையும் என்ணிப் பார்க்கும் பொழுது,
“உணர்வு மரத்து அர்த்தம் இழந்து நின்ற எனக்கு, உணர்வுகளை உணரவும் அர்த்தங்களை ஏற்றுக்கொள்ளவும் கற்றுத் தந்தவர்கள். மூடி அடைக்கவிருந்த என் அகக்கண்ணைத் திறந்து விழிக்க வைத்தவர்கள். தாமே அறியாத கருணையுடன் என்னைப் புதுப்பித்து மீண்டும் பிறப்பித்தவர்கள். மனம் நெகிழ்கிறது.”
காஞ்சனா இந்தக் கதையில் காட்டும் காட்சிகள் அமெரிக்க ஹாலிவுட் படங்கள் மூலம் நாம் அறிந்துள்ள காட்சிகளிலிருந்து தீவிரமாக வேறுபடுபவை. இப்படித் தனியாகப் பிரயாணம் செய்யும் பெண்கள் மனவக்கிரம் பிடித்த அமெரிக்க மனிதர்களிடம் (வெள்ளை, கறுப்பு என வண்ணம் என்னவானாலும்) அகப்பட்டுக்கொண்டு கொடுமைப்படும் பயங்கரக் காட்சிகளே நமக்குப் பழக்கம். ஆனால் காஞ்சனாவின் கதாநாயகி சந்திக்கும் மனிதர்கள் நல்லவர்களாகவும், குறைந்தபட்சம் அப்பாவிகளாகவுமே இருக்கிறார்கள். இதுவே நிதர்சனமாக இருக்க வேண்டும். காஞ்சனா சுவாரஸ்யத்துக்காகவும் திகிலுக்காகவும் கதை எழுதவில்லை. அவர் கதை மனிதர்களின் இயல்பை அவர் கண்டபடி சொல்லுவது. அதில் கற்பனைப் பூச்சு கொஞ்சம் இருக்குமென்று கொண்டாலும் அது சொல்லும் விதத்தில் நளினத்தைக் கூட்டுவதற்காகச் சேர்க்கப்பட்டதே அன்றி நிதர்சனத்தை மாற்றுவதற்காக அல்ல.
இதைத் தொடர்ந்து “கூபாவுக்குப் போன கியூப அமெரிக்கர்கள்” என்னும் சிறுகதை, காஸ்ட்ரோ ஆட்சியில் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்துபோய் அமெரிக்க வாழ்க்கையில் தோய்ந்துவிட்ட ஒரு கியூபக் குடும்பம் சில தலைமுறைகளுக்குப் பின் கியுபாவுக்குத் திரும்பிப் போய் அதன் வாழ்க்கை முறைக்கு ஏங்குவதையும் முரண்படுவதையும் விரிவாகப் பேசுகிறது. நிறைய அரசியல், கலாச்சாரம், தலைமுறை மாற்றம் இங்கு பேசப்படுகிறது.
தமிழர்களின் புலம்பெயர் வாழ்வு (இந்தக் கதையின் பாத்திரங்கள் தமிழர்களுக்கு மிகவும் அந்நியமானவர்கள் என்றாலும்) இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. கதையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் இடத்தில் காஞ்சனா சொல்லுகிறார்:
“பிறப்பிடம் என்பது என்றுமே மாறாத தகவல்புள்ளித் தொப்புளாய் நிற்பது. வாழ்வானுபவமோ காலத்துடன் கனத்து மாறிக் கொண்டேயிருப்பது. பிறப்பிடத்துக்கும் அனுபவத்தின் மையத்துக்கும் இடையேயான தொலைவு விரிந்துகொண்டே போவது இயல்புதான்போலும். அந்தத் தொலைவின் உள்ளே ஒரு வினோதமான விடுதலை உணர்வு பொதிந்து கிடக்கிறது.”
‘வினோதமான விடுதலை உணர்வு’? ஆம். பிறப்பிடத்தின் பாசத்தை விடமுடிவதில்லை. அது ஆன்மாவோடு ஒட்டிக் கொண்டு புனிதமான நினைவாகக் கிடக்கிறது. ஆனால் புகலிடம் தரும் சுகம் பழக்கப்பட்டும் போனது. பிறப்பிடத்தின் வாழ்வு இனி செயல் சாத்தியமானதல்ல. அது இனி ஒத்து வராதது. அதன் முக்கியத்துவம் நினைவில் மட்டுமே. நிஜ வாழ்க்கையில் அது தூரமாகி விடுவது நமக்குக் கிடைக்கும் விடுதலைதான். வேண்டும்; ஆனால் வேண்டாம். அந்த உணர்வுதான் வினோதம்.
மிகவும் நுணுக்கமான கருத்து இது. புலம்பெயர்தல் என்றால் பளிச்சென்று நினைவுக்கு வரும் அவலத்தில் புலம் பெயர்ந்த ஈழ மக்களுக்கும் ஆசையில் புலம்பெயர்ந்த தமிழக மக்களுக்கும் நச்சென்று பொருந்தும் வாசகம் இது.
ஐந்து கதைகள் மட்டுமே (ஆனால் நீளமான கதைகள்) கொண்ட இந்தத் தொகுப்பில் கடைசிக் கதை ‘மரகதத் தீவு’. மீண்டும் ஒரு புலம் பெயர்ந்தோர் கதை. இம்முறை அமெரிக்காவில் வசிக்கும் ஐரிஷ் குடும்பத்தின் கதை. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து கல்லூரி செல்லும் வயதை அடைந்த கெல்லியை அவள் தந்தை, அவள் வர்ஜீனியாப் பல்கலைக் கழகத்துக்குச் சென்று பதிந்து கொள்ளு முன்னர், ‘உன் பூர்வீகப் பூமியைப் பார்த்து வா’ என்று அயர்லந்துக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே சென்று தன் தந்தையின் குடும்ப நண்பர்களோடு தங்கி இருந்து அயர்லந்தின் வாழ்க்கையையும், கலாச்சாரத்தையும் அனுபவிக்கிறாள் கெல்லி. அன்பான மனிதர்கள். கெல்லியைப் பரிவோடு பார்த்துக் கொள்ளுகிறர்கள். அவளும் தான் அமெரிக்கன் என்ற அன்னிய உணர்வு ஏதுமின்றிக் கலந்து பழகுகிறாள்.
இங்கும் அயர்லந்தின் காட்சிகள் பரந்து விரிகின்றன. அழகிய வருணனைகள். வாழ்க்கை முறை பற்றிய விவரிப்புக்கள். அயர்லந்து மக்களின் வாழ்வோடு பிணைந்து கிடக்கின்ற நம்பிக்கைகளும் புராணங்களும். அங்கு அவளுக்கு ஒரு மெல்லிதான காதலும் அரும்புகிறது. ஆனால் அதை அவளும் சரி, அந்தக் காதலனும் சரி, பெரிது படுத்திக்கொள்ளாமல் இருந்து பிரிந்து விடுகிறார்கள். புலம்பெயர்தல் பற்றிய பேச்சுக்களும் உண்டு. ஆனால் அதுவே தலையாய கரு இல்லை.
சில காலம் அப்படித் தங்கியிருந்த பின் கெல்லி திரும்பி வர்ஜீனியா பல்கலையில் சேருகிறாள். அங்கு வந்து சேருகிறான் அவள் அயர்லந்தில் சந்தித்த அந்த இளைஞன். சுபம்.
காஞ்சனா வழமையைப் புறக்கணிப்பவர் என்று ஆரம்பத்தில் சொன்னேன். முடிவில் நின்று திரும்பிப் பார்க்கும்போது பலவகைகளில் அது உண்மை என்றே உறுதிப்படுகிறது.
முதலில் அவர் தம் கதைகளை வரையும் திரைகள். அவை அமெரிக்க ஐரோப்பிய நிலவெளிகளைக் கொண்டவை. அவற்றைத் தமிழ் வாசகனுக்கு உகந்த முறையில் வளைக்கவேண்டும் என அவர் முயற்சி செய்வதில்லை. வாசகன்தான் தன்னை வளைத்து அவற்றை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து அந்தத் திரைகளின் பரப்பு. அவை மிகப் பரந்த – சில வேளைகளில் பிரம்மாண்டமான – திரைகள். அவற்றின் வருணிப்பிலேயே வாசகனின் மனதை ஈர்த்துக்கொண்டு விரிவாக்குபவை.
மூன்றாவதாக அவருடைய பாத்திரங்கள். இந்த நெல்லிக்கனி அத்தையின் கதையில் மட்டும் அவை தமிழ் இன வார்புக்கள். மற்றபடி ‘ஸியர்ரா நெவாடா’ கதையில் கதாநாயகி அமெரிக்கத் தமிழச்சி. அவ்வாறே ‘நெடுஞ்சாலைப் பயணம்’ கதாநாயகியும் ஒரு அமெரிக்கத் தமிழச்சி. இவ்விரு கதைகளிலும் அநேகமாக மற்ற அனைவரும் தமிழரல்லாத பாத்திரங்களே. ‘கியூபா’, ‘மரகதத் தீவு’ கதைகளில் இந்தத் தொடுப்புகள் கூட இல்லை. அத்தனை பாத்திரங்களுமே தமிழர் அல்லாதவர்கள்.
இப்படி முற்றாக அந்நியப் பாத்திரங்களை வைத்துக் கதைகள் பின்னும் உத்தி ஏற்கனவே தமிழில் இருந்திருக்கிறது என்றாலும் (அம்பையும், திலிப் குமாரும், இறையன்புவும் நினைவுக்கு வருகிறார்கள்) அவை கலாச்சார ரீதியாக இவ்வளவு தூரம் அந்நியமாயிருந்ததில்லை. முத்துலிங்கம் ஒருவரே இணைவைத்துச் சொல்லக்கூடியவர். அவரும் இந்த அந்நியத் தன்மைகளே அந்நியம் என்றே கையாண்டார். ஆனால் காஞ்சனாவுக்கு இவை எவையும் அந்நியம் இல்லை. தான் தமிழராக இருந்து மாற்றார் கதையைச் சொல்லுகிறோம் (இதுதான் முத்துலிங்கம்) என்ற எண்ணம் சிறிதும் எழாவண்ணம் அவர் கதைகள் இயல்பாக இருக்கின்றன.
தமிழ் வாசகர்களின் வாசகப் பரப்பில் தான் அறிந்த அந்நிய வாழ்க்கையின் வெவ்வேறு கூறுகளை கொண்டு வருவதை ஒரு mission ஆகவே காஞ்சனா கொண்டிருக்கிறார் என்றும் சொல்லலாம்.
காஞ்சனாவின் நடை அறிவுச் செறிவும் தகவல் செறிவும் கொண்ட முதிர்ச்சி உள்ளது. அவரது கவித்துமான மனதைத் துல்லியமாக எழுத்தில் கொண்டுவரக் கூடியது. வாசகனை – அதாவது அக்கறையுள்ள வாசகனை – முற்றாக ஈர்த்துக் கொள்வது.
தமிழ் இலக்கியம் உலகளாவியது என்ற கோணத்தில் இந்தத் தொகுப்பைப் பார்க்கும்போது இது ஒரு முக்கியமான பங்களிப்பாகும். எழுத்தாளர்களின் உலக அனுபவம் பெருகி அது அவர்கள் எழுத்தில் வெளிப்படும் இந்நாட்களில், தமிழ் வாசகனும் அந்தப் பல்முனை அனுபவங்களுக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
(முடிந்தது)
(காஞ்சனா தாமோதரன்: “மரகதத் தீவு” (சிறுகதைகள்) (2009); உயிர்மை பதிப்பகம், சென்னை. விலை ரூ.100.00)
- எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Reactor) (கட்டுரை -2)
- தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்
- வேத வனம்- விருட்சம் 83
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1
- ஆதலினால்..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று
- மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்
- அமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)
- ஆற்றுப்படைநூல்களில் வறியோர் வாழ்க்கை
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12
- வழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு
- எப்போதும் நம் வசமே
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! (ஏப்ரல் 26, 1986)
- மின்னல் விழுதுகள்!
- முள்பாதை 27
- தூக்கம் …
- இரவுகளின் சாவித்துவாரம்
- குறத்தியின் முத்தம்
- எழுத்தின் வன்மம் .
- 108எண் வண்டி
- 27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு
- எழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்!
- நினைவுகளின் தடத்தில் – (46)
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15
- பேசாதவன்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது
- சுஜாதா 2010 விருது வழங்கும் விழா
- அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு