வல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு!

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

மலர்மன்னன்


ஹிந்துஸ்தானத்தின் சந்தை மிகப் பிரமாண்டமான சந்தை. இங்கு நூறு கோடியையும் தாண்டிவிட்ட மக்கள் தொகையில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை துரித கதியில் அதிகரித்து வருவதோடு, தன் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதில் அதன் ஆர்வமும் கூடுதலாகி வருகிறது. இதற்கு ஏற்ப, அதன் வாங்கும் திறனும் அதிகரித்து வருகிறது.

கடந்த இருபதாண்டுகளில் நுகர்வோர் கலாசாரம் அதிவேகமாகப் பரவி, தமது அன்றாட அத்தியாவசியத் தேவைகளின் எண்ணிக்கையை இந்த நடுத்தர வர்க்கத்தினர் அதிகரித்துக் கொண்டுள்ள போதிலும், அவர்களின் அன்றாட அடிப்படைத் தேவையும் அதற்காக அவர்கள் செலவிடும் தொகையும் உணவு சார்ந்ததாகத்தான் உள்ளது. உணவுப் பொருள்களின் விலைவாசி எவ்வளவுதான் உயர்ந்தாலும் அவற்றின் தேவை தவிர்க்க முடியாததாகையால் அவற்றை வாங்கித்தான் தீர வேண்டிய நிலையும் உள்ளது. இந்நிலையில் நடுத்தர வர்க்கத்தினரின் உணவுப் பழக்கமும் மாறி வருகிறது. முழுமையாகவோ பாதியளவிலோ தயாரித்துப் பக்குவமாகப் பதனம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை உண்பது நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும், உண்பதற்கு வசதியாகவும், உடல் ஆரோக்கியத்திற்கும் சாதகமாகவும் இருப்பதை உணர்ந்து அத்தகைய தயார் நிலை உணவுப் பண்டங்களை வாங்கும் பழக்கம் நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் வேரூன்றி விட்டது.

கூறு போடப்படும் நமது உணசுப் பொருள் சந்தை

இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு ஏராளமாக லாபம் திரட்டுவதில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகியவை தீவிரமாக முனைந்துள்ளன. ஹிந்துஸ்தானத்தின் மாபெரும் சந்தையை, குறிப்பாக உணவுப் பொருள் சந்தையைக் கூறுபோட்டுக் கொள்வதில் அவற்றுக்கிடையே பெரும் போட்டியே நடந்து
கொண்டிருக்கிறது.

முன்னூறு அல்லது நானூறு ஆண்டுகளுக்கு முன் ஹிந்துஸ்தானத்தில் வர்த்தக மேலாதிக்கத்தை நிறுவ இங்கிலாந்து, ஹாலந்து, ஃப்ரான்ஸ் முதலான ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் போட்டி நிலவிய சூழல்தான் இப்போதும் உருவாகியுள்ளது. இதில் சீனாவும் இப்போது ஆவலுடன் இறங்கியிருக்கிறது.

எப்போதும் நிரந்தரமான அத்தியாவசியத் தேவையாக இருந்துகொண்டிருப்பது நிச்சயமாக உணவுப் பொருள்கள்தாம். இவற்றுக்கு ஆதாரம் வேளாண்மையும், வேளாண்மை சார்ந்த தொழில்களும் கால் நடை வளர்ப்பு முதலானவையும்தாம். மிக மிகச் சாமானிய அறிவிற்குக் கூட வெகு எளிதில் புரிந்துவிடுகிற இந்த உண்மை, நமது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டும் ஏனோ சரியாகப் புலப்படாமல் போய்விடுகிறது.

பூமியின் தட்ப வெப்பநிலை பெரும்பாலும் சாதகமாகவே உள்ள பகுதியில் அமைந்திருக்கும் அரிய வாய்ப்பு ஹிந்துஸ்தானத்திற்குக் கிட்டியுள்ளது. இந்த வாய்ப்பு நாமாகச் சீரழித்துக் கொண்டாலன்றி எவரலும் கவர்ந்துகொள்ளப் பட முடியாதது! இத்துடன் மிக விசாலமான நிலப்பரப்பும் அதில் நல்ல மண் வளமும், நீர் வளமும் நமக்கு இயற்கையாகவே அமைந்துள்
ளன. எல்லாவற்றையும்விட முக்கியமாக ஏராளமான மனித ஆற்றலும் நமக்குக் கிட்டியுள்ளது.

மக்கள் தொகைப் பெருக்கம் சுமை அல்ல!

மக்கள் தொகைப் பெருக்கத்தை ஒரு சுமையாகக் காணும் மனப்போக்கைக் கைவிட்டு அதனை மாபெரும் மனித ஆற்றலாக அடையாளம் கண்டு சரிவரப் பயன்படுத்திக்
கொள்ளும் புத்திசாலித்தனம் நமக்கு வரவேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் அளவு கடந்த மக்கள் தொகைப் பெருக்கத்தினால் முழுமையான பலன்தரத் தவறிவிட்டதாக அங்கலாய்ப்பதை நிறுத்தி, அதிகரித்துவரும் மக்கள் தொகையினை மனித ஆற்றலாக மாற்றி அதனை உரிய வழிகளில் செலவிட நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். போதுமான அளவில் மனித ஆற்றல் இன்றித் தவிக்கும் தேசங்கள் பல உலகி லுள்ளன. நமக்கோ அது ஏராளமாகவும் அதிகச் செலவு ஏதும் இன்றியும் கொட்டிக் கிடக்கிறது.

நமது தேசத்திற்குப் பல்லாயிரக் கணக்கான ஆண்டு அனுபவம் ஒரு குறிப்பிட்ட தொழிலில் இருக்கிறது என்று பெருமிதம் கொள்ள முடியும் என்றால், அது வேளாண்மையும், வேளாண்மை சார்ந்த தொழில்களும்தாம்.

ஆனால் இன்று மத்திய மாநில அரசுகளின் மதிப்பீட்டில் கவனிப்புப் பெற வேண்டிய துறைகளுள் அடிமட்டத்தில் இருப்பது வேளாண்மைதான். வேளாண்மையின் நலனுக்காக அவை எடுக்கும் நடவடிக்கைகளும் தவறானவையாகவே உள்ளன. உரம், பூச்சி கொல்லி மருந்து ஆகியவற்றிற்கான மானியம், விவசாயத்திற்குக் கூட்டுறவு வங்கிக் கடன் மற்றும் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்தல் போன்றவை எல்லாமே வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுபவர்களை ஒரு விஷச் சக்கரத்தில் சிக்க வைப்பதாகத்தான் உள்ளனவே தவிர, ஊக்குவிப்பனவாக இல்லை.

மானியங்களால் பயன் பெறுவது யார்?

சொல்லப் போனால் வேளாண்மைத் துறையில் வழங்கப்படும் மானியங்களுக்கு அவசியமே இல்லை. அந்த மானியங்கள் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நேரடியகப் பயன்படுவதுமில்லை. செயற்கையான ரசாயன உரம், ரசாயன பூச்சிகொல்லி மருந்து ஆகியவற்றைத் தயாரிப்போருக்குத்தான் அரசு வழங்கும் மானியங்கள் போய்ச் சேருகின்றன.
எவ்வளவுதான் மானியங்கள் அளித்தாலும் வேளாண்மையானது போடுகின்ற முதலீட்டைக்கூடத் திரும்ப எடுக்கமுடியாத தொழிலாக ஆகிப் போனதால் அதனைக் கைவிட்டு, வேறுதொழிலில் இறங்குவதும் அல்லது உணவுப் பொருள் அல்லாத பயிர்களை மேற்கொள்வதுமாக விவசாயிகளின் கவனம் திசைமாறியிருக்கிறது. விவசாய நிலங்கள் துரித கதியில் வீட்டு மனைகளாகவும், தொழில் வர்த்தகக் கூடங்கள், பொருளாதார மையங்களாகவும் மாறிக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, விவசாயத் தொழிலில் நேரடியன அனுபவம் உள்ளவர்கள் அதனைக் கைவிட்டு, தங்களுக்குப் பழக்கமில்லாத மாற்றுத் தொழில்களைத் தேடி நகர்ப்புறங்களில் அலைய வேண்டியதாகிறது. இதனால்விவசாயத் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு, எத்தனை இடர்கள் இருந்தாலும், வாழையடி வாழையாக வந்த பழக்கம் காரணமாகத் தொடர்ந்து வேளாண்மைத் தொழிலில் இருப்பவர்கள் மேலும் திண்டாடி, நன்றாக விளைச்சல் தரக் கூடிய நிலங்களைக் கூடத் தரிசாகப் போட்டுவிடுகிற நிலைமை உருவாகியிருக்கிறது.
இதற்கிடையில், எதிர் வரும் 2030 ல் ஹிந்துஸ்தானத்து மக்களின் உணவு தானியத் தேவை தற்போதையதைவிட மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று ஓர் ஐ. நா. ஆய்வறிக்கை அச்சுறுத்துகிறது.

அதற்குள்ளாக வேளாண்மைத் தொழிலில் நேரடி ஈடுபாடும் அனுபவமும் உள்ளவர்களுக்கே ஹிந்துஸ்தானத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும்.

இந்த உண்மைகளின் அடிப்படையில் நிலைமையைப் பரிசீலனை செய்வோமானால் வெகு விரைவிலேயே ஹிந்துஸ்தானத்தில் வேளாண்மைத் தொழில் குன்றி, பெருமளவில் உணவுப் பொருள்களைப் பல்வேறு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யும் நாடாக அது மாறிவிடும் அபாயம் புலப்படுகிறது.

ஹிந்துஸ்தானத்தின் தற்போதைய உணவுப் பொருள்களின் தேவை ஆண்டுக்கு இருபத்துமூன்றாயிரத்து முன்னூறு கோடி டாலராக இருக்கிறது. இது மேலும் மேலும் கூடுதலாகிக் கொண்டே போகும். உணவு தானியங்கள், தயார் நிலை உணவுப் பொருள்கள், கால்நடைகளின் வாயிலாகக் கிட்டும் உணவுப் பண்டங்கள் யாவும் இதில் அடங்கும். இதனைப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு புத்திசாலி தேசமும், ஹிந்துஸ்தானத்தின் உணவுப் பொருள் சந்தையை ஆக்கிரமித்து முடிந்தவரை ஆதாயம் காணுமாறு தன் தேசத்து உணவுப் பொருள் தயரிப்பாளர்களை அறைகூவி அழைத்துக் கொண்டிருக்கிறது.

ஹிந்துஸ்தானத்தி லுள்ள வர்த்தக வய்ப்புகளை ஆராய்வதற்கென்றே ஆஸ்திரேலிய அரசு நியமித்த ஆய்வுக் குழு தனது அறிக்கையில் ஹிந்துஸ்தனத்தின் உணவுப் பொருள் தேவை அதிவிரைவாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் வர்த்தக அமைச்சர் வாரன் ட்ரஸ், விவசாய அமைச்சர் பீட்டர் மேக் கௌரன் இருவரும் இதனைச் சுட்டிக்காட்டி, ஆஸ்திரேலிய உணவுப் பொருள் தாயாரிப்பாளர்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

நமது நாட்டிற்கு இது ஒரு அபாய அறிவிப்பு என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் சேர்ந்துள்ள அந்நியச் செலாவணியெல்லாம் பலவாறான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதில் கரைந்து போகப் போகிறது. இதுபற்றிய பிரக்ஞையோ, வெகு விரைவாக நமது உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்து வருவதுபற்றிய கவலையோ இன்றி வேறு விவகாரங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறோம்.

விழலுக்கு இறைத்த நீராகிப் போன
நா. மகாலிங்கம் அறிவுரை

ஏறத் தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் சர்க்கரைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சர்க்கரை தயரிப்பில் முன்னணியிலுள்ள க்யூபா போன்ற நாடுகளில் பல்வேறு காரணங்களால் உற்பத்தி வீழ்சியடைந்தது. இந்தச் சந்தர்ப்பத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டு சர்க்கரை ஏற்றுமதியில் நாம் அந்நியச் செலாவணியை அள்ளிவிடலாம், அரசாங்கம் மட்டும் சிறிது மனம் வைத்து சர்க்கரை ஆலைகளுக்கும், கரும்பு உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கும் விரைந்து சில சலுகைகள் அளித்து ஊக்குவித்தால் போதும் என்று நா. மகாலிங்கம் போன்ற அறிஞர்கள் அடித்துக் கொண்டார்கள். ஆனால் மத்திய, மாநில அரசாங்கங்கள் வழக்கம்போலக் கோப்புகளைக் கிடப்பில் போட்டு, காலவிரையம் செய்து உலகின் சர்க்கரைத் தட்டுப்பாட்டின் பலன் நமக்கு முழுமையாகக் கிடைக்கவொட்டாமல் செய்தன.

இன்றைய காலகட்டத்திலும் அரசாங்கங்களின் மெத்தனப் போக்கில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. இன்னும் சொல்லப் போனால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி அரசும், தமிழ் நாட்டில் பிற கட்சிகளின் ஆதரவோடு இயங்கும்
தி. மு.க. அரசும், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களின் இடது கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சிகளும், மஹராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் ஆளும் காங்கிரஸும் வேளாண்மைக்கு விரோதமான போக்கைத்தான் கடைப் பிடிக்கின்றன. அவற்றின் கவனம் முழுவதும் தொழில் மற்றும் கட்டுமானத் துறைகளை அபரிமிதமாக அபிவிருத்தி செய்து வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு முதலீடு செய்யத் தூண்டுவதிலேயே உள்ளது.

வெளிநாடுகளுக்கு லாபம்தான் நோக்கம். ஹிந்துஸ்தானத்தின் மீது அபிமானத்துடன் அவை நடந்துகொள்ளும் என எதிர்பர்க்க இயலாது. திடீரென அவை முதலீட்டைக் கூடுதல் லாபம் தரும் நாடுகளுக்கு மாற்றிக்கொண்டால் நாம் கேள்வி கேட்க முடியாது.

உண்மையில் சாதகமான தட்ப வெப்ப நிலை, விசாலமான நிலப் பரப்பு, கூடுதலான மண், நீர் வளங்கள், ஏராளமான மனித ஆற்றல், குறைந்த கூலி மற்றும் இடுபொருள் செலவு, எல்லாவற்றுக்கும் மேலாகப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ரத்தத்தில் ஊறிப்போன தொழில் நுட்ப அறிவு, இவ்வளவையும் எவ்வித முதலீடும் இல்லாமலேயே பெற்றிருக்கிற நம் நாடு வெறும் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களை மட்டுமே பெருக்கி, உலக நாடுகள் அனைத்திற்கும் உணவூட்டும் திறன் மிக்க வல்லரசாக முடியும்.
இதன் பயனாகச் சுற்றுச் சூழலையும் பாதுகாத்து, மக்களின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிப்பதும் சாத்தியமாகும்.

நச்சுத் தொழில்கள் நமக்குத் தேவையா?

தோல் பதனிடும் தொழிலிலும், சாயம் ஏற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிலும் வெளிநாடு
கள் நமக்கு ஊக்கம் அளிக்கக் காரணம் சுறுப்புறச் சூழலை அவை மிகக் கடுமையாக பாதிக்கின்றன, ஆகையால் அவற்றைத் தமது பூமியில் வைத்துக்கொள்ள வேண்டாம் என அவை புத்திசாலித்தனமாகக் கருதுவதால்தான். இதை உணராமல் அவற்றின் மூலம் ஏராளமாக அந்நியச் செலாவணி ஈட்டுகிறோம் எனப் பெருமைப் பட்டுக் கொள்கிறோம். இம்மாதிரியான தொழில்கள் நமது நீர் வளம், நில வளம் இரண்டையும் பாழடித்து மக்களின் உடல் நலனையும் சீர்குலைக்கிறது என்று தெளிவாகத் தெரிந்திரு ந்தும் அந்நியச் செலாவணி வரவு, வேலை வாய்ப்பு ஆகிய காரணங்களைச் சொல்லி அவை தொடர்ந்து நீடிப்பதையே விரும்புகிறோம்.

கிராமப் புறங்களிலேயே வேளாண்மை சார்ந்த சிறு தொழில் கூடங்களை அமைத்து விளை பொருள்களை விளையும் இடத்திற்கு அருகாமையிலிருந்தே பெற்று தயார் நிலை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வது ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பது போலாகும். விளைபொருளை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு அதிக வண்டிச் சத்தம் இன்றி விரைவில் நேரடியாக வருமானம், வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு அருகாமையிலிருந்து சீரான கச்சாப் பொருள் வரத்தால் உற்பத்திச் செலவு குறைதல், அதனல் அவை தயாரிக்கும் தயார் நிலை உணவுப் பண்டங்கள் குறைந்த விலையில் நுகர்வோருக்குக் கிடைத்தல், கிராமப்புற மக்களுக்குத் தாம் வசிக்குமிடத்திற்கு அருகமையிலேயே எளிதில் கிட்டும் வேலை வாய்ப்பு, அதன் பயனாக வேலை வாய்ப்புத் தேடி கிராமப் புற மக்கள் நகர்ப்புறங்களுக்குப் புலம் பெயர்ந்து அதனால் அவர்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் ஏற்படக் கூடிய பலவாறான தொல்லைகள் தவிர்ப்பு எனப் பல ஆதாயங்கள் இதில் உள்ளன. சில சமயங்களில் சில பொருள்கள் அபரிமிதமாக விளைந்து விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் அடக்கச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் நொடித்துப் போவதையும் இதனால் தவிர்க்க முடியும். வேளாண்மை சார்ந்த தொழில்கள் அத்தகைய அபரிமித விளைபொருள்களைக் கொள்முதல் செய்து சேமித்து வைத்து, தட்டுப்பாடின்றித் தொழிலைத் தொடர்ந்து நடத்திவரும்.

இன்று பல தயார் நிலை உணவுப் பொருள்கள் உள் நாட்டிலேயே உற்பத்தியாகின்றன என்றாலும் அவற்றிலிருந்து வரக் கூடிய லாபத்தில் கணிசமான பகுதி காப்புரிமை என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் போய் விடுகிறது. நுகர்வோருக்கு வெளிநாட்டுப் பெயர்களின் மீது உள்ள மோகம்தான் இதற்குக் காரணம். பொருளின் தரத்திற்கு உத்தரவதம், நியாய விலை, விளம்பரம் அகியவற்றின் மூலம் இந்த மோகத்தை நீக்கிவிட முடியும். அப்போது காப்புரிமையாக நமது பணம் வெளியே போவதைத் தடுத்துவிடலாம்.

பசுமைப் புரட்சி எனும் மாயை

பசுமைப் புரட்சி என்ற பெயரால் ரசாயன உரத்தையும் ரசாயன பூச்சிகொல்லி மருந்துகளை
யும் பயன்படுத்தி வீரிய விதைகளையும் விதைத்து, அபார விளைச்சல் என்கிற மாய வித்தையைச் செய்துகாட்டினோமேயன்றி, இதன் பின் விளைவுகள் எப்படியிருக்கும் என யோசிக்க வில்லை. ரசாயன உரமிட்டு மண்ணின் இயற்கையான சாரத்தை அழித்தோம். ரசாயன பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்து பூச்சிகளோடு பயிர்களின் சிநேகிதர்களான மண் புழு மற்றும்பல நுண் உயிர்களைக் கொன்றொழித்தோம். போதாக்குறைக்கு அவற்றின் நச்சுத் தன்மையினைப் பயிர்களே உறிஞ்சிக்கொள்ள வைத்து இன்று மக்களின், கால்நடை
களின் உடல் நலத்திற்கும் உலை வைத்துவிட்டோம்.

இனியாகிலும் இந்த மாயையிலிருந்து வெளிப்பட்டு மாற்று வழி தேடுவோம்.
ரசாயன உரம், ரசாயன பூச்சி கொல்லி மருந்து, வீரிய விதைகள் ஆகியவற்றை கிராமப் புறங்களில் இருக்கிற விவசாயி வாங்க முனைவதால் கிராமங்களில் இருக்கிற பண ஊற்று வற்றிப் போகும். ஊடு பயிராகத் தழைச் சத்து தரும் தாவரங்களை பயிர்களுக்கு நடுவே விளைவித்தால் அவற்றையே பிற்பாடு இயற்கை உரமாகத் தயாரித்துக் கொள்ளலாம். அதுபோல இயற்கை முறையில் பூச்சி கொல்லி மருந்துகளையும் தயாரித்துக்கொள்ளலாம். சாணிப்பால் உரம், பூச்சி கொல்லி இரண்டுக்குமே பயன்படும். அதிலிருந்து எரிவாயு
வையும் பெற்று வீட்டுத் தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும். உழவுத் தொழிலுக்கும் பால் கறவைக்கும் இனிப் பயன்படாது என்று முடிவுசெய்யப்படும் கால்நடைகளைச் சிறிதும் நன்றியின்றி அடிமாடுகளாகக் கசாப்புக்கு அனுப்பாமல் அவற்றை எரிபொருள், இயற்கை உரம், பூச்சி கொல்லி மருந்து ஆகியவறைத் தயாரிப்பதற்கு உதவும் தொழில் கூட்டாளிகளாகக் கருத வேண்டும். இப்படிச் செய்வதால் கிரமப் புறத்தில் புழங்கும் பணம் கிராமங்களிலேயே வலம் வந்து சுபிட்சத்தை வழங்கிக் கொண்டிருக்கும்.

வேளாண்மையை ஒரு தொழிலாக அங்கீகரித்து, அதற்கும் வேளாண் பொருள்கள் சார்ந்த தொழில்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அவற்றைக் கை தூக்கிவிட்டால் அவை தாமாகவே தலையெடுத்து லாபகரமாக இயங்கத் தொடங்கிவிடும். அதன் பிறகு மானியம் சலுகை விலை என்பதற்கெல்லாம் அவசியம் ஏற்படாது போய்விடும்.

உணவு தானியங்களுக்கும் உணவுப் பொருள்களுக்கும் தேவை எப்போதும் இருந்துகொண்டிருப்பதோடு, அது அதிகரித்துக் கொண்டும்தான் இருக்கும். வேளாண்மைத் தொழிலில் பாரம்பரிய அனுபவ அறிவும் அதற்குத் தேவையான எல்லா வசதிகளும் உள்ள நமது நாடு, வேளாண்மையிலும் அது சார்ந்த தொழில்களிலும் சரியான கவனம் செலுத்தி அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களைச் செயல்படுத்தினால் வெகு விரைவிலேயே உலக நாடுகள் யாவும் நம்மைச் சார்ந்திருக்கும்படியான வல்லரசாக எழுச்சி பெற்றுவிட முடியும்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்