வைதீஸ்வரன் கவிதைகளில் மறுபார்வை (1)
சுகுமாரன்
தற்சார்பற்ற கண்ணோட்டத்துடன் வைதீஸ்வரன் கவிதைகளை அணுகுவது சில ஆண்டுகள் முன்பு வரை எனக்கு இயலாததாக இருந்தது. குறிப்பாக , எனது கவிதைகளைத் தொகுப்பாகக் காண்பது வரை இந்த இயலாமை நீடித்தது.
நான் நகரத்துப் பண்டம் . நகர வாழ்வின் அனுபவங்களைக் கவிதையாக்குவதில் யாரோ ஒருவரை முன்னோடியாகக் கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு இருந்தது. நகர வாழ்வின் பின்னணி , மரபு சாராதகுறிப்பீடுகள் , பிரத்தியேகத் தன்மையற்ற படிமங்கள் என்று கவிதையின் அணிகளை எனக்கு வழங்கியவை வைதீஸ்வரனின் கவிதைகள்.
இன்னொரு விதத்திலும் வைதீஸ்வரனுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன். அவரது கவிதை உலகில் அவ்வப்போது சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த கிளியை எனது கவிதைகளின் முக்கியப் படிமமாக நான் உரு மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
காற்றில் கிளி உருண்டு
சிரிப்பொலியாய் சிறகு கொட்ட. . .
மாலைக் கோலம்
வெளியில் பல கிளிகள்
மிதிபட்டுக் கிடக்குதங்கே
மைலாய் வீதி
பசிக் குரலின் உறுமலில்
பசுங்கிளிகள் ஊமையாச்சு
வைதீஸ்வரனின் இந்தப் படிமத்தை வாழ்வதற்கான மனித இச்சையின் உருவகமாக நான் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
இந்த இரண்டு காரணங்களுக்காக வைதீஸ்வரன் கவிதைகளிடம் எனக்கு நன்றி உணர்வு இருக்கிறது. இந்தத் தற்சார்பு உணர்வு வைதீஸ்வரன் கவிதைகளைப் புறவயமாகப் பார்ப்பதை திரையாகவே விழுந்து சமீப காலம் வரை தடை செய்து வந்திருக்கிறது.
அறுபதுகளில் எழுத ஆரம்பித்த வைதீஸ்வரன் அவ்வப்போது இடைவெளி விட்டு இன்று வரை எழுதி வருகிறார். ஏறத் தாழ முப்பதாண்டு காலம் தொடர்ந்து செயல் பட்டு ஆளுமையைத் தக்க வைத்திருக்கும் கவிஞரின் முழுக்கவிதைத் தொகுப்பு இது.
புதுக் கவிதை என்ற அறுபது வருடப் பழமை வாய்ந்த வடிவத்துடன் சரிபாதி காலம் இயக்க உறவு கொண்டிருக்கும் கவிஞரின் படைப்புகளை மறு வாசிப்புக்கு உட்படுத்தும் போது புதிய திசைகள் தென்படலாம். முந்திய அபிப்பிராயங்கள் மறு விவாதத்திற்குக் காரணமாகலாம்.
எழுத்து சிற்றேட்டின் மூலம் அறிமுகமான கவிஞர்களில் வைதீஸ்வரன் குறிப்பிடத்தகுந்தவர். அந்தக் காலப் பகுதியில் எழுதப் பட்ட கவிதைகளில் மிக நவீனமான உணர்வு வெளிப்பட்டது அவரிடம் தான்.
புதுக் கவிதை என்ற மேற்கத்திய வடிவத்தில் புராதனமான இந்திய மதிப்பீடுகளையே எழுத்து கவிஞர்கள் வலியுறுத்தினார்கள். தம் காலத்தின் புன்னகையையும், கண்ணீரையும் கவிதைகளில் வெளிப்படுத்தினார்கள். எனினுன் அவர்களது சமகால உணர்வு நிலை இழந்த காலத்திற்கு ஏங்கும் உணர்வின் எதிரொலியாகவே இருந்தது. உதாரணம் : பிச்ச மூர்த்தி.
பிச்ச மூர்த்தியின் கவிதை அனுபவமும் பர்வையும் பழைய மதிப்பீடுகளைச் சார்ந்தவை. கவிதையின் வடிவம் மட்டுமே புதியது. அதே போல சி மணி. மணியிடம் பார்வை புதியது. ஆனால் கவிதை மொழி பழையது.
எழுத்து கவிஞர்களில் மூன்று பெயர்களை விதி விலக்காகக் குறிப்பிடலாம். அவர்கள் தர்மு சிவராமு, பசுவய்யா, எஸ் வைதீஸ்வரன்.
‘ஆரீன்றாள் என்னை ‘ ‘ (நான்) என்று ‘தோய்புரிப் பழங்கயிறா ‘ன தத்துவக் கவிதையுடன் அறிமுகமானவர் தர்மு சிவராமு. ஆனால் விரைவில் தமிழ்க் கவிதையின் செழுமையான மரபோடு பொருந்தக் கூடிய அதே சமயம் புதிய பார்வை கொண்ட கவிதை மொழியை உருவாக்கிக் கொண்டார்.
தர்மு சிவராமு நீங்கலாக எழுத்து காலகட்டத்தில் புதுக் கவிதை என்பது உணர்வு நிலையில் ஏற்பட்ட மாறுதல் என்று இனங்கண்டவர்கள் பசுவய்யாவும், வைதீஸ்வரனும். பசுவய்யாவின் எழுத்து காலக் கவிதை அப்போது புழக்கத்திலிருந்த மதிப்பீடுகளுக்கான குரலாக ஒலித்தது.
‘என் சிலையை உடை
கடலோரம்
காலடிச் சுவடு
0
கதவைத் திற காற்று வரட்டும் ‘
அறுபதுகளில் நவீனம் வெளிப்பட்டது எஸ்.வைதீஸ்வரன் கவிதைகளில் தான்.
மறந்து வைத்த பிளாஸ்டிக் பையாய்
மரத்தின் மேல் ஒரு தேன் கூடு
என்ற உவமையும், ‘எவர்சில்வர் நிலவு ‘ என்ற சொற்சேர்க்கையும் பிற கவிஞர்களிடம் இல்லாதவை. எஸ் வைதீஸ்வரனுக்கே உரியவை. பிற எழுத்துக் கவிஞர்களிடம் அடர்ந்து இருந்த கற்பனாவாதத் தன்மை இவரிடம் சாயலாகவே படிந்திருந்தது.
நூற்றைம்பது கவிதைகள் அடங்கிய இந்தத் தொகுதியிலிருந்து வைதீஸ்வரன் கவிதையின் குணாம்சங்களாகச் சிலவற்ரைத் தொகுக்கலாம். நகர மத்திய தர வாழ்க்கையே கவிதைகளின் களம். அதன் சலனங்களைக் குறித்த பார்வையே கவிதைக்கான தூண்டுதல். எளிமையான மொழி. நமது அன்றாடப் பார்வையில் தென்படும் சாதாரண வஸ்துக்களைக் கொண்ட படிமங்கள். இயற்கை மீதான காதல். சமூக அவலங்கள் குறித்த கோபம். மரணம் பற்றிய விசாரம். இவை வைதீஸ்வரன் கவிதையின் பொது இயல்புகள். சரியான அர்த்தத்தில் இன்றைய கவிதையின் பாடு பொருட்கள் இவை.
இந்தப் பொது இயல்புகளை உள்ளடக்கி இருக்கும் வைதீஸ்வரன் கவிதைகளை இன்று மீன்உம் வாசிக்கும் போது புதிய விமர்சனக்கள் எழுகின்றன.
வைதீஸ்வரன் கவிதைகள் பெரும்பாலும் ஒரே குரலில் வெளிபடுகின்றன. கவிதைக்குள் பல குரல்கள் வெளிப்படும் தருணமிது. எனினும் இந்தக் கவிதைகளில் ஒற்றைக் குரலை மட்டுமே பிரதானமாகக் கேட்க முடிகிறது. வைதீஸ்வரனின் கவிதைக் குரல் மென்மையானது. தீவிரமற்றது.
கவிதை , சொற்களில் பொருள்படும் சொல்லைக் கடந்த இயக்கம். அதன் மொழி ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது ‘ . இந்த இயல்பு இவர் கவிதைகளில் மிகச் சிலவற்றில் மட்டுமே தென்படுகிறது. என் (அறைக்) கதவு, என் (மனக்)கதவு என்று பொருள் படலாம் என்பது போல சில இடங்கள்.
கவிதையில் செறிவு (diction) ஓர் அம்சம் என்றால் வைதீஸ்வரன் ஒரு ஊதாரி. அனுபவம் கவிதையாக மாற போதுமான சொற்களைக் கடந்தும் கவிதையை நீட்டுகிறார். ‘நாய்மை ‘ ‘பரிணாமத்தின் புழுக்கம் ‘ போன்ற கவிதைகளின் இறுதி வரிகள் நீண்டு கவிதைத் தளத்தை விரிசல் விடச் செய்கின்றன.
செறிவு பற்றிப் பேசும் போது இவரிடம் தென்படும் இன்னொரு குறை : பொருந்தாத வார்த்தைகள். உதாரணம் ‘லீலை ‘ (பக் 127)
சிறு காற்றில்
கரு மேகம்
தலையவிழ்க்க,
வெளியில்
பல பல
நீர்ப் பூச்சித் துளிகள்
கலகலத்து
உதிர்ந்து
விழும் வழியில்
மழையான மழையாகும்.
நடுவில்
இலையை,
தெருவில் நடக்கும்
தலையை,
கீழே காயும்
நிலத்தை
மெள்ளத் தடவி
நனைக்கும்.
உடனே
திருட்டுத் தலைகள்
குடைக்குள் ஒளிந்து
விரல் வெளி நீட்டி
விளையாடிப் பார்க்கும்
இலைகள் வழியின்றி
நடுநடுங்கி
வியர்த்து வடியும்.
அட! மழையோ
விடாமல்
நிலத்தின் மண்கதவைத்
‘திற திற ‘வென்று
தட்டியுடைத்துன்
பின் உள்பாய்ந்து
ஓயாமல் கற்பழிக்கும் . .
ஒரு வேளை
நெல் பிறக்கும்
நினைவில்
நிலமோ,
நீருக்குள் தூங்கும்
மழையின் பயணமே கவிதை. மழையின் ஒவ்வொரு அசைவையும் மனிதனின் இயல்பான செயல்களுடன் சொல்லி வருகிற கவிஞர் இறுதியில் அத்து மீறலான சொல்லை – – ‘உள்பாய்ந்து ஓயாமல் கற்பழிக்கும் ‘ — பயன் படுத்துகிறார். முந்திய வரி வரை காப்பாற்றப் பட்டு வந்த அழகியல் இங்கே சிதைகிறது. பூமியுடன் மழை கொள்ளும் முயக்கம் கற்பழிப்பா ? ‘ஏன் ‘ என்ற கவிதையிலும் தவறான சொற்பொரெயோகம் பொருளைத் திரித்து விடுகிறது.
என் முகம்
மலரச் செய்த சிறு காற்று
அந்த இலைச் சருகை
சாக்கடையில் தள்ளியது. (பக் 45)
இதில் என்ன வியப்பு என்ற கேள்வி மிஞ்சுகிறது. சருகு காற்றில் விழும். விழுல் இடம் சாக்கடை என்பதால் எந்தத் துயரமும் இல்லை. அதுவே ‘மலர் இதழ் ‘ என்று இருக்குமானால் கவிதை இன்னொரு தளத்தில் புரிந்து கொள்ளப்பட உதவியாக இருந்திருக்கும்.
(அடுத்த இதழில் முடியும்)