வே.சபாநாயகம்
‘ஒவ்வொருவரும் தம் வாழ்க்கை அனுபவத்திலிருந்து தம் வாழ்நாளில் ஒரு நாவலாவது எழுதிவிட முடியும்’ என்பது உண்மைதான் என்பதை பா.விசாலம் அவர்களது ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்…’ என்கிற நாவலைப் படிக்கிற எவரும் உணர முடியும். வாழ்க்கையின் பதிவுதானே இலக்கியம்? ஒரு நாவலாவது எழுதிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களுக்கு இந்த நாவல் நம்பிக்கையை ஊட்டி உடனே எழுதத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது. அவ்வளவு எளிமையாய், வெகு இயல்பாய், மனத்தடையற்ற போக்கில் பா.விசாலம் இதனை எழுதி இருக்கிறார். ஒரு நாவலை எழுதுவதுபோல அல்லாமல் தனது வாழ்க்கையை – தினமும் எழுதும் நாட்குறிப்பு போல அநாயசமாக, மிக லகுவாக எழுதிச் செல்கிறார். இது இவரது முதல் நாவல். முதல் நாவலே வெகு சிறப்பாக அமைவது மிகச் சிலருக்கே சாத்தியம். அதனை விசாலம் அவர்கள் சாதித்திருக்கிறார்கள்.
தன் வரலாற்று நாவலான இது மற்றைய தன் வரலாற்று நாவல்களிலிருந்து மாறுபடுவதால்தான் இது பெரிதும் பேசப்படும் நாவலாகிறது. எல்லா தன் வரலாற்று நாவல்களிலும் தான் வளர்ந்த சூழல், உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம் பக்கத்தவர் என்று அவர்களோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை நினைவுகூர்வதாகவே அதிகமும் இருக்கும். ஆனால் இந்த நாவல் படைப்பாளியின் ஆளுமையைக் காட்டுவதாகவும அந்தக் காலகட்ட அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளின் வரலாற்றுப் பதிவாகவும் அமைந்துள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பழம்பெருமை வாய்ந்த நாஞ்சில் நாட்டுக் கூட்டுக் குடும்பத்தின் கடைக் கொழுந்தான ஒரு பெண், தகப்பனாரின் மரணத்துக்குப் பின், மருமக்கள் தாயம் நடைமுறையால் சொந்தச் சகோதரிகளாலேயே கைவிடப்பட்டு, மரபுவழியிலிருந்து தடம் புரள மறுக்கும் தாயுடன், வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் நிர்ப்பந்தங்களையும், ‘லார்வா’ எனும் பட்டுப் புழு படிப்படியாய் பரிணாமவளர்ச்சி பெற்று அழகான பட்டுப் பூச்சியாய் உருவாகிப் பறக்கிற மாதிரி, எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்டு காரணகாரியப் பிரக்ஞையுடனும் முன்னேறும் மனப்பாங்குடனும் அவள் ஒரு கம்யூனிஸ்டாக எப்படிப் பரிணாமம் கொள்கிறாள் என்பதுதான் கதை. ஒரு மொட்டு, அவசரமின்றி மெல்ல மலர்ந்து மணம் வீசும் பாங்கில், ஒரு பெண் குழந்தை மெல்ல வளர்ந்து பெரியவளாகி குடும்பவாழ்வின் உறவுகளிலிருந்து மேலெழுந்து சமூக வாழ்வின் உறவுகளில் பிரவேசம் கொள்ளும் தீரவாழ்க்கையை நாவல் வெகு ரசமாகச் சொல்லுகிறது. குழந்தைப் பருவ நினைவுகளில் குழந்தைமையின் வெகுளித்தனத்தோடு வெளிப்படுத்தும் இடங்களில் நேரடியாகப் பேசுவது மாதிரியான உணர்வு வாசகனுக்கு ஏற்படுகிறது. இயல்பான மனிதநேயம் தொடக்கத்திலிருந்து இறுதிவரை நாவலில் இழையோடுகிறது.
நாவலின் தொடக்கம் நனவோடை உக்தியில் ஒரு சிறுமி தன் கனவை விஸ்தரிப்பதிலிருந்து தொடங்குகிறது. அப்பாவின் செல்லப் பெண்ணான கதை சொல்லி, அவரிடமிருந்து கேட்ட கதைகளையும், பள்ளியில் ஆசிரியை சொல்லும் அறிவுரைகள், பழமொழிகளையும் அது தொடர்பான குழந்தைகளுக்கே உரிய அறிவார்ந்த – பெரியவர்கள் பொருட்படுத்தாத கேள்விகளை எழுப்பிக் கொண்டு, சமூக பழக்க வழக்கங்களையும் பேத அபேதங்களையும் எதிர்ச்சிந்தனையோடு சிந்திப்பதாய் கதை வளர்கிறது. இயற்கை அழகிலும், தோட்டத்தில் பார்க்கிற பறவைகள், அணில் போன்ற சிறு ஜீவன்களின் விளையாட்டுகளிலும் மனம் பறிகொடுக்கிற பிள்ளை மனம் இயல்பாகப் பதிவாகி இருக்கிறது. சில இடங்களில் வயதுக்குமீறிய சிந்தனைகளாய் வலிந்து பதிவு செய்திருப்பதையும் பார்க்க முடிகிறது. கேட்கும் ஒலிகளை – உதாரணத்துக்கு தானியம் புடைக்கும்போது எழும் ஒலி போன்றவற்றை தி.ஜானகிராமன் போல வாசிப்பவர் காதில் அதே ஒலி கேட்கிறமாதிரி பதிவு செய்திருப்பதும் வித்தியாசமானது.
நூல் நெடுக ஒரு பெண்ணின் பார்வையில் மட்டுமே சாத்யமாகும் நுண்ணிய விஷயங்கள் பதிவாகி இருப்பதும் கூடுதல் சிறப்பாகும். வட்டார நாவல் என்று சொல்ல முடியாதபடி, வட்டாரவழக்குப் பேச்சுக்களில் அதிகம் சிக்கிக் கொள்ளாமலும் அதே சமயம் அதிலிருந்து விலகாமலும் சொல்லி இருப்பவை இதமாக இருக்கின்றன. நாஞ்சில் நாட்டு மரபார்ந்த நடைமுறை வாழ்க்கையை, கேரள வாழ்வின் சாயலுடன் பல புதிய தகவல்களுடன் அறிய முடிகிறது. நடுநிலைமையுடன் நேர்மையான தொனியுடன் செய்யப்பட்டுள்ள சூதுவாதற்ற பல இளமை நினைவுகளும் சிந்தனைகளும் வாசிப்பை சுகமாக்குகின்றன. ஆனால் அவையெல்லாம் பழங்கனவாய்ப் போன சோகத்தை மெல்ல மெல்ல வாசகனின் மனதில் இடமாற்றம் செய்திருப்பது நெஞ்சை நெகிழ்விப்பதாய் இருக்கிறது. மேலும் முன்னுரையில் திரு.கோ. ராஜாராம் குறிப்பிடுவதுபோல ‘குழந்தைகளின் வளர்நிலைப் பருவ வெளிப்பாடுகளையும், அனுபவங்களையும் சித்தரிக்கும் நாவல்கள் தமிழில் மிக அரிது. பா. விசாலத்தின் இந்த நாவல் அந்த இன்மையைப் போக்குகிறது’ என்பது உண்மைதான்.
வளர்நிலையில் நித்திய உணவுக்கே வழியற்ற வறுமை பீடிக்கும்போது, விதவையானபின் ‘நாலு பேர் என்ன சொல்வார்கள்’ என்று வெளியே தலைகாட்ட மறுக்கும் கட்டுப்பெட்டித்தனத்துடன் தன்னைக் குறுக்கிக் கொள்கிற தாயிடம் யதார்த்த நிலையைச் சுட்டிக் காட்டி மனம் மாற்றி, குத்தகை அளப்பவன் ஊருக்கே அழைத்துச் சென்று ஊரார் உதவியுடன் பாக்கியை வசூலிப்பதில் அவரது புரட்சி தொடங்குகிறது. பின்னர் பொது உடைமைக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிச நண்பர்களின் தொடர்பால் அவ்வியக்கத்தில் ஈடுபாடும் தீவிர செயல்பாடும் கொள்ள நேர்வது அச்சிறுமியின் அசாத்திய நம்பிக்கையின் நீட்சியாகவே அமைகிறது. அதன் தொடர்பான அரசியல் வாழ்க்கையும் காதல் திருமணமும் – சூழ்நிலையின் நிர்ப்பந்தம் எப்படி ஒரு வெகுளிப் பெண்ணை துணிவுண்டாக்கி தன் வாழ்வைத் தீரமாக எதிர்கொள்ள வைக்கிறது என்பதை நாவலின் பின்பகுதி சொல்கிறது. அதே சமயம் முற்பகுதியில் குழந்தைப் பருவ அனுபவங்களை விவரிக்கையில் ஏற்படும் சுவாரஸ்யம் அரசியலில் ஈட்டுபட்டபின் வரும் பதிவுகளில் குறைந்து, வாசிப்பில் தொய்வு ஏற்படுவதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆரம்பத்தில் சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால் ஏற்படும் நம்பிக்கை, இறுதியில் மெல்ல அவநம்பிக்கையாகி ஒரு கனவின் லட்சியத்தின் எச்சத்தைச் சுட்டுவதாகவே ‘மெல்லக் கனவாய் பழங்கதையாய்…’ என்கிற நாவலின் தலைப்பு அமைந்துள்ளது எனலாம்.
விரும்பி ஏற்ற கம்யூனிஸ வாழ்வில் அவளுக்கு ஏற்படுகிற சில அதிர்ச்சியான அனுபவங்கள் ‘கம்யூனிசத்தில் தவறு இல்லை; கம்யூனிஸ்ட்களிடம் தான் தவறு உள்ளது’ என்று அதைவிட்டு வெளியே வந்தவர்களின் விமர்சனத்தை ஆமோதிப்பதாக உள்ளது.
இதுபற்றி விமர்சிக்கிற வேதசகாயகுமார் இப்படிச் சொல்கிறார்;
‘மறைக்கப் பட்ட மார்க்ஸிய வரலாறு என்றே இதனைக் கூறிவிடத் தோன்றுகிறது.ஆனால் புள்ளி விவரங்களை அடுக்கித் தரும் வறட்டு வரலாற்றாசிரியனின் பார்வையில் அல்ல. நில உடமைச் சமூக மதிப்பீடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஒரு பெண்ணின் பார்வையில் இவ்வரலாறு பதிவு செய்யப் பட்டிருக்கிறது. மார்க்ஸியத்தின் பேரன்பே இவளுக்கு இதனைச் சாத்தியமாக்கியது எனும்போது, இவளது வாழ்வும் மார்க்ஸியமாகிறது.’
படைப்பினூடே சொல்லப்படும் புகழ்வாய்ந்த பெரிய மனிதர்களின் பலவீனங்கள் சம்பந்தப்பட்ட சில தகவல்கள் நேரடியாகப் பெயரைக் குறிப்பிடாவிடினும் நம்மால் யூகிக்க முடிவதாகவே இருக்கிறது. திருவிதாங்கூர் மகாராணிக்கும் திவானுக்கும் உள்ள கள்ள உறவினைக் குறிப்பிடும்போதும், இலக்கியத்திலும் பேச்சாற்றலிலும் பெயர்பெற்ற இயக்கத் தலைவர் ஒருவர், தனிமையில் பெண்களிடம் பலவீனப்படுவதைக் காட்டும்போதும் வாசகனுக்கு எளிதாகவே அவர்களை இனம் காண முடிகிறது. என்றாலும் இவர்களுடனான தனது தொடர்பை மிகைப்படுத்தி விளம்பரப்படுத்திக் கொள்ளும் சிறுமை ஏதும் இதில் தென்படவில்லை. காலஓட்டத்தில் அரசியல் கட்சிகள் – அது எதுவாயினும் வெளிப்படுத்தும் நடைமுறைகளும் முரண்களும் மிகையின்றி இயல்பாகப் பதிவாகி உள்ளன.
பெரியார் – மணியம்மை திருமணம், திராவிடக் கட்சிகளின் உதயம், சென்னையில் எம்ப்டன் குண்டு வீச்சுக்குப் பயந்து சென்னையை விட்டு மக்கள் வெளியேறியது, பொட்டி ஸ்ரீராமுலு நாயுடு உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தது, கேரளத்தில் முதல் தடவையாக கம்யூனிஸ்ட் ஆட்சியமைத்தது போன்ற சமகால நிகழ்வுகளையும் நாவல் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கதைசொல்லிக்கு லட்சியபுருஷராய் வாழ்ந்த அப்பாவும், கொட்டிக்கொட்டிப் புழுவைக் குளவியாக்குகிற மாதிரி கதைநாயகியால் கட்டுப்பெட்டித்தனத்திலிருந்து மீட்கப்பட்டதும் மகளைவிடவும் அதிகமாக யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் அம்மாவும் மறக்க முடியாத பாத்திரங்களாய் உருவாக்கப் பட்டுள்ளார்கள்.
ஆங்காங்கே பாரதியின் கவிதை வரிகள் – தலைப்பு உட்பட- விரவி இருப்பது ஆசிரியை பாரதியின் கவிதைகளில் கொண்டிருக்கும் ஈடுபாட்டைத் தெரிவிப்பதாக உள்ளது.
படைப்பில் வரும் அனைத்துத் தகவல்களும் கதை சொல்லியின் நினைவுச் சுரங்கத்திலிருந்து மேலெழும்பியதாகவே அமைந்திருப்பதாலும், ஆர்ப்பாட்டமில்லாது, பொய்மைச் சாயம் ஏற்றப்படாது, பாசாங்கற்று, உண்மை ஒளிரும் வாழ்க்கையைச் சித்திரப்படுத்துவதாக இருப்பதாலுமே இந்நாவல் தனிக்கவனம் பெறுகிறது.
நாவலின் அடிநாதமாக இருப்பது பொருளாதார விசாரம்தான். நாயகி கம்யூனிஸ்டாக ஆவது, அவள் அனுபவித்த பொருளாதார நெருக்கடியினால்தான். வாழ்வு – சாவு, உறவு – பகை, பந்தம் – பாசம் எல்லாவற்றிற்கும் பொருளாதாரப் பிரச்சினையே அடிப்படையாய் இருக்கிறது என்ற அவளது கணிப்பே நாவல் தரும் செய்தி எனலாம்.
நூல் விவரம்:
தலைப்பு: ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்…!’விலை: 180.00 ரூபாய்.
ஆசிரியர்: பா.விசாலம்.
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்.
(‘வார்த்தை’ ஏப்ரல் 2008 இதழில் வெளியான புத்தக விமர்சனம்
- தவறிய அவதாரம்
- ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்!
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வாங்க காலாக்ஸிகள் எப்படித் தோன்றின ? (கட்டுரை: 34)
- வசந்தாவிற்காகக் காத்திருக்கிறேன்
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27 லியோ டால்ஸ்டாய்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 15 (சுருக்கப் பட்டது)
- தாகூரின் கீதங்கள் – 39 நான் பாடும் கீதம் !
- புதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள் -2
- வாழ்க்கையில் முதல்முறை!
- சதாசிவபண்டாரத்தார் ஆய்வு நூல்கள் பத்து தொகுதிகள் வெளியீடு
- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு விழா
- விசய் (Vijay) தொலைக்காட்சியில் ‘நீயா? நானா?’ – பாராட்டு! நெஞ்சார்ந்த பாராட்டு!
- “இலட்சிய எழுத்தாளர் அமரர் விந்தன் படைப்புகளின் சமூகப்பார்வை – ஆய்வரங்கம்.
- குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்-ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளியீடு
- நூல்வெளியீடு
- இலக்கிய வட்டம், ஹாங்காங் ‘இலக்கிய வெள்ளி’- 25ஆம் கூட்டம்
- சீரான இயக்கம்
- ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ஒரு மைல்கல்- ‘இலக்கிய வெள்ளி’
- புதிய இலக்கிய இதழ் – ‘மணல் புத்தகம்’
- வரலாற்று ஆவணமாகும் ஒரு வாழ்க்கைச் சித்திரம்.
- தீராநதி வெளியிடாத கடிதம் – நாஞ்சில் நாடன் நேர்காணல் குறித்து
- தயங்குதலுண்டோ இனி!
- ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ நூலுக்கான மோனிகாவின் மதிப்புரை
- அரவக்கோனின் ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ – ஒரு விமர்சனப் பார்வை
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் -ஒரு வரலாற்றுப் பார்வை
- மின்சாரம் போய்விட்ட ஒரு மழை இரவின் நடுநிசியில், கன்னியாகுமா¢க் கடலோரத்தில்…
- காற்றினிலே வரும் கீதங்கள் – 27 என்னிய நேசனே ! திரும்பி வா !
- சோகங்களின் விரல்கள்
- தூக்கிலிடப்பட்ட புடவை
- கம்பனுக்(கு) ஈடில்லை என்றே இயம்பு
- சில சிந்தனைகள்
- வாழ்த்துகள்
- அ.ந.கந்தசாமியின் கவிதைகள் மூன்று!