வண்ணாத்திக்குளம்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

பாவண்ணன்


நோயல் நடேசன் எழுதிய இக்கதையைப் படித்து முடித்ததும் எங்கள் ஊரான புதுச்சேரியில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வந்தது. புதுச்சேரியில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புகைவண்டி நிலையத்தை நோக்கிச் செல்லும் கிளைப்பாதையொன்றில் கெளஸ் சுப்பரமணியர் கோயில் என அழைக்கப்படும் முருகர் கோயில் உள்ளது. காலம் காலமாக அந்தக் கோயிலைக் கட்டிக்காத்து வந்த கெளஸ் எனப்படும் முஸ்லிம் பெரியவரின் பெயராலேயே அக்கோயிலும் அழைக்கப்பட்டு வந்தது.

திடாரென கடந்தவாரம் உடல்நலம் குன்றி அவர் மறைந்துவிட்டார். இஸ்லாமியரை அடக்கம் செய்யக்கூடிய இடத்தில் அவரது உடலை எடுத்துச்சென்றபோது அவருடைய குடும்பத்தாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வாழும் காலத்தில் அவர் இஸ்லாமிய நெறியைச் சரியான முறையில் பின்பற்றவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டது. இறுதியில் நடந்ததையெல்லாம் ஒரு பிழையாக நினைத்து அப்பிழைக்காக வருந்துவதாக அறிவித்து அக்குடும்பமே மன்னிப்புக் கேட்டபிறகுதான் அடக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளஸ் என்கிற தனிமனிதனுடைய மனம் இந்த உலகத்தைப் பார்த்ததற்கும் பழகியதற்கும் அடக்கம் செய்ய மறுத்த மக்கள்கூட்டத்தின் கூட்டுமனம் தனிமனிதனையும் உலகத்தையும் பார்த்ததற்கும் பழகியதற்கும் உள்ள வேறுபாடு அதிர்ச்சியும் அச்சமும் அளிக்கக்கூடியதாக இருந்தது.

மனம் செயல்படும் விதத்தைப்போன்ற விசித்திரம் வேறெதுவும் உலகில் இல்லை என்பதற்காக இதைக் குறிப்பிட நேர்கிறது. எந்தப் புள்ளியிலிருந்து எதைநோக்கிப் பறக்கும் அல்லது எங்கே இறங்கும் என்று எந்தவிதமான் கணிப்போடும் மனத்தை அணுகமுடியாது. காற்றைப்போன்றது அதன் இயக்கம். அதற்கென தீர்மானிக்கப்பட்ட திசையெதுவும் இல்லை. இயங்குதல் மட்டுமே அதன் செயல்பாடு. அது இயங்கிக்கொண்டே இருப்பதற்குத் தேவையான சக்தியை அதன் கலாச்சாரம் வாரி வழங்குகிறது. அதைக் கண்காணிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் காவலனாக இருக்கும் சக்தியும் கலாச்சாரமே ஆகும்.

தொடர்ந்து ஒருவருடைய செயல்பாடுகளையும் பேச்சையும் கவனிக்கும்போது ஓரளவு அவர் மனம் பயணிக்கிற திசையையும் எண்ண அலைவரிசைகளையும் அறிந்துகொள்ள முடியும். ஆனால் அதே மனிதர் மற்ற சக மனிதர்களுடன் இணைந்து கூட்டாக இயங்கி ஈடுபடும் செயல்களுக்கும் தனிப்பட்ட நிலையில் அவர் புரியும் செயல்பாடுகளுக்கும் துரதிருஷ்டவசமாக எவ்விதமான தொடர்பையும் உருவாக்க இயலாமல் போய்விடுகிறது.

கல்லுாரியில் ஓரளவு நல்ல மதிப்பெண்களோடும் நல்ல ஒழுக்கத்தோடும் நடந்துகொள்ளும் மாணவன், மாணவர் பட்டாளத்துக்குள் ஒருவனாக மாறும்போது நடுத்தெருவில் ஓடுகிற பேருந்தை நிறுத்தி தீவைத்துக் கொளுத்தும் செயலைத் துணிச்சலாகச் செய்பவனாக மாறுவது எப்படி ? எந்தவிதமான வம்புப்பேச்சிலும் ஈடுபடாத ஒரு அப்பாவியுடைய நெஞ்சில் உறங்கும் ஏதோ ஓர் உணர்வைத் துாண்டிவிட்டதும் கும்பலில் ஒருவனாக மாறிக் கற்களைவீசித் தாக்கும் ஆளாக உருமாறுவது எப்படி ? எதன் அடிப்படையில் நிகழ்கிறது இந்த மாற்றம் ? மனிதமனத்தின் தனிப்பட்ட இயக்கத்துக்கும் ச்முகமனத்தின் கூட்டு இயக்கத்துக்கும் இடையே ஏன் இந்த முரண்பாடு உருவாகிறது ?

ஒரு மனிதனுடைய மனஆற்றலையும் குணநலன்களையும் ஒரு குறிப்பிட்ட சதவீத அளவாக நினைத்துக்கொண்டோம் என்றால் நுாறு மனிதர்கள் கூடி இயங்குகிற ஒரு ச்முகத்தின் மனஆற்றலும் குணநலன்களும் அக்குறிப்பிட்ட சதவீத அளவின் நுாறு மடங்காக இருப்பதுதானே தர்க்கப்படி சரியாக இருக்க முடியும். ஆனால் அத்தர்க்கம் ஏன் ஒவ்வொருமுறையும் செல்லுபடியாகாமல் போகிறது ? தனிப்பட்ட மனிதனுக்கு இல்லாத ஒரு வலிமை ஒரு கூட்டத்துக்கு இடையே நிற்கும்போது அபரிமிதமாகப் பொங்கிப் பிரவகிக்கத் தொடங்குகிறது. கட்டுப்பாடற்ற அந்த ராட்சச வலிமை தனிப்பட்ட நெறிகளையோ எண்ணங்களையோ சற்றும் மதிக்காமல் வேறொரு திசையில் இழுத்துச் சென்றுவிடுகிறது. கட்டுப்பாடற்ற ச்முகவலிமை அழிவுக்கே வித்திடுகிறது. இந்த வலிமைதான், தனியாக இருக்கும்போது ஒரு நியாயம், கூட்டாக இருக்கும்போது இன்னொரு நியாயம் என்று சகஜமாக எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது.

தனிமனிதனுடைய மனத்துக்குப் பழகிப்போன கண்ணியத்தையோ மதிப்பீடுகளையோ ச்முகமனிதர்களின் மனத்துக்குள் செலுத்த முடியாமல் போயிருப்பதுதான் நம் மிகப்பெரிய தோல்விக்குக் காரணம். உலகெங்கும் உருவாகியிருக்கிற போர்களுக்கும் பிரிவினைகளுக்கும் மரணங்களுக்கும் அழிவுகளுக்கும் இத்தோல்விதான் காரணம். குருஷேத்திரப்போரின் காலத்திலிருந்து தொடர்ந்து இச்ச்முகமேடையில் இத்தகு தோல்விகளே அரங்கேறி வருகின்றன.

சிங்களர் தமிழர் பிரிவினையை ஒட்டி யோசிக்கும்போது இந்த எண்ணங்கள் அலையலையாக எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு சிங்களப்பெண்ணை ஒரு தமிழன் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதில் தொடக்கத்தில் சில பிரச்சனைகள் இருந்தாலும் இறுதியில் இருவருக்கிடையேயும் திருமணம் சாத்தியமாகிறது. தன்னைப் புரிந்துகொள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் ஒருவர் மற்றொருவருக்கு வழங்குவதில் யாருக்கும் எந்தத்தடையும் இல்லை. ஒரு தமிழன் சகஜமாக சிங்களநண்பனுடைய வீட்டுக்கு விருந்துண்ணச் செல்கிறான். சிங்களப்பெண் தமிழன்வீட்டில் வந்து புட்டும் மீன்குழம்பும் சாப்பிட்டுப்போகிறாள். தமிழர்கள் பாணியில் புடவை அணிந்துகொள்கிறாள். பேருந்து நிலையத்தில் எதிர்பாராத விதமாக உருவாகிற கலவரத்தில் அகப்பட்டு அவதியுறும் நேரத்தில் தன் கணவன் என்று சொல்லி ஒரு தமிழனைச் சிங்களப்பெண் காப்பாற்றுகிறாள். சிங்கள முரடர்களிடமிருந்து தப்பிக்க ஒரு சிங்களக் குடும்பமே தமிழனுக்கும் சிங்களப்பெண்ணுக்கும் அடைக்கலம் தருகிறது. பாதுகாப்புக்குத் துப்பாக்கியும் தருகிறது.

தனிப்பட்ட அளவில் எல்லாருமே நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு ச்முகமாக மாறும்போது அவர்கள் பார்வையும் செயல்பாடும் நம்பிக்கைகளும் இவர்களிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்டுவிடுகின்றன. இருவர் பக்கங்களிலும் அவநம்பிக்கையே எஞ்சுகிறது. தம் தரப்பில் நிகழ்ந்த இழப்புகளையும் புண்களையும் நினைத்து நினைத்து உறுமி ஆத்திரம்கொண்டு பழிவாங்கத் துடிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் இன்னொருவரை அழிப்பதே இறுதி லட்சியமாகிவிடுகிறது. அனைவரையும் அழித்து விட்டுச் சுடுகாட்டுமண்ணை உரமாக்கி நாம் எதைப் பயிரிடப்போகிறோம் என்பது புரியவில்லை.

இந்த ஆதங்கங்களை மனம் அசைபோட இந்த நெடுங்கதை துாண்டுகிறது. மிக எளிய கதையே இது. சிங்களப்பெண்ணுக்கும் தமிழனுக்கும் இடையே உருவாகும் காதலும் திருமணமும் உயிர்ப்பற்றினால் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணத்தின் தொடக்கமும் என்கிற அளவில் உள்ள கதை. பின்னணியில் இனக்கலவரங்களால் ஏற்பட்ட இழப்புகளின் அடையாளங்கள் அங்கங்கே நிலைநிறுத்தப்படுகின்றன. முக்கியமாக யாழ்ப்பாண நுாலக எரிப்பு குறைந்த வார்த்தைகளில் ஆற்றலுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட அளவில் தமிழனுக்கு ஆதரவு தருவதில் சிங்களன் மனத்துக்கும் சிங்களனுக்கு ஆதரவு தருவதில் தமிழன் மனத்துக்கும் எவ்விதமான தடையும் உருவாகவில்லை. ஆனால் கூட்டுநிலையில் அது ஏன் சாத்தியப்படவில்லை என்கிற கேள்வியை இக்கதை மறைமுகமாக ஒருவிதமான குழந்தைமையுடன் முன்வைக்கிறது. இக்கேள்வி பல தளங்களிலும் ஒரு நாவலுக்கே உரிய விதத்தில் கூர்மையான விவாதங்களாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதுதான் மிகப்பெரிய குறை. ஆனால் ஒரு ராட்சசனின் முன்னால் சென்று அச்சமின்றிச் சிரித்துக் கேள்வி கேட்கிற குழந்தையைப்போல கேள்விகேட்கிற ஒரு கலைஞனுடைய கேள்வியை எப்படி உதாசீனப்படுத்தமுடியும் ?

————————————–

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்