கரு. திருவரசு
தமிழ் இளைஞர் மணிமன்ற மூத்த மணிகளின் ஒன்றுகூடல் வரிசையில், அண்மையில் (02.03.2007) தலைநகரில் திரு.வைர.கணபதியின் பிறந்தநாள் ஒன்றுகூடல் விருந்தொன்று நடந்தது.
அதுபோது நடந்த கலந்துரையாடலில் பேச்சுவாக்கில் எழுத்தாளர், கவிஞர் மைதீ.சுல்தான் லாகவமாக – லாவகமாக எனும் வழக்கைக் கேள்வியாக எழுப்பி, அது லாகவம்தான் என்று உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கு யாரும் மாற்றமோ மறுப்போ சொல்லவில்லை. எனக்கு அது லாவகம் என்பதாக நினைவு ஓடியது. அவர் அடித்துச்சொன்ன உறுதியால் நானும் அமைதியாக அதை விட்டுவிட்டேன், உரையாடல் எங்கேயோ திரும்பிவிட்டது.
இல்லம் திரும்பியதும் அகரமுதலிகளைப் பார்த்தேன். அவர் சொன்னபடி லாகவம் என்பதே சரி. சிலர் லாவகம் என வழங்குவதையும் பார்த்திருக்கிறேன். ஏன் இந்தக் குழப்பம்?
தமிழில் ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எட்டு எழுத்துகளில் ஒரு சொல் தொடங்காது என்பதால் அவற்றுள் ஓர் எழுத்தில் தொடங்கும் இச்சொல் தமிழ்ச்சொல் அன்று என்பது உறுதி. லாகவம் என்பது தமிழில் அதிகமாக வழங்கும் வேற்றுமொழிச் சொற்களில் முதன்மை இடத்திலுள்ள சமற்கிருதச் சொல். அதனால்தான் அந்தச் சொல்லின் எழுத்துக்கூட்டலில் நமக்குக் குழப்பம்.
இது சமற்கிருதச் சொல் என்பதை மொழியாய்வறிஞர் ப. அருளியின் “அயற்சொல் அகராதி” உறுதிப்படுத்துகிறது.
(கிரகம், கிருகம் எனும் வடசொற்களின் சரியான எழுத்துக்கூட்டலும் சரியான பொருளும் தெரியாததால் புதுமனை புகுவிழாவின்போது வீட்டில் (கிருகம்) குடியேறுவதற்கு மாறாக, வானில் உலவும் கோளத்தில் (கிரகம்) குடியேறுவதாகச் (கிரகப் பிரவேசம்) சிலர் சொல்கிறார்கள்.)
இலாகவம் என்பதன் பொருள் என்ன? திறமை, எளிமை, சாமர்த்தியம், விரைவு, இலகு என்பனவோடு மேலும் பல பொருள்களும் காட்டப்படுகின்றன.
இலகு – இலாகு – இலாகை – இலாகவம்.
இலாகையாயிருக்க = தளர்ச்சியாய் இருக்க.
இலாகையாய்ப் பேச = கட்டுப்பாடில்லாமல் பேச.
இலாகவம் என்பதற்கு இணையாகத் தமிழில் வாகு என்றொரு சொல் உண்டு. இது எழுத்துக்கூட்டல் குழப்பமெல்லாம் இல்லாத சொல். இந்தச் சொல்லை நாம் வாகாக மறந்துவிட்டு இலாகவத்தில் கலந்துவிட்டோமோ!
வாகு எனும் பெயர்ச்சொல்லுக்கு அழகு, ஒழுங்கு, அமைப்பு, வடிவம், திறமை, வசதி, தோது என்றெல்லாம் பொருள்.
இச்சொல் “வாகா நியாய வட்டி வாங்காமல்” எனப் ‘பணவிடுதூது’ நூலிலும், “வாகுபெறு தேர்வலவனை” எனக் ‘கந்தபுராண’த்திலும் வருகிறது.
வட்டார வழக்காக
“அந்த மாட்டின் வாகு அப்படி” என்றும்,
“வாகா இருக்கிறாளா பாரு” என்றும்,
பொதுவாக
”அது தங்குவதற்கு வாகான இடம்”
“கை வாகாக வைத்திருந்த தடியை எடுத்து அடித்தார்”
என்றெல்லாம் வழங்குகிறது ‘வாகு’.
வாகு என்பதற்கு அழகு என்றும் பொருள்.
அதை வாகாய்ச் செய்! = Do it nicely என்கிறது வின்சுலோ அகராதி.
thiruv36@yahoo.com
- ரஜினியின் “சிவாஜி”யின் வசூல் சாதனை – திரைப்படத்தின் சாதனையா? – ஏ.வி.எம்.நிறுவனத்தின் வியாபார உத்தியின் சாதனையா?
- இலக்கிய வட்டம், ஹாங்காங்
- சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ? மனிதர் கடைப்பிடிக்கக் கூடிய ஐம்பது முறைகள் -1
- நான்…….?
- கடிதம்
- மனவெளி கலையாற்றுக் குழு – 14 ம் அரங்காடல்
- மெய் எழுத்து வெளியீடு
- கடிதம்
- மலர் மன்னனின் …..மனவெளிக்கு!
- குணவதிமைந்தனின் ‘புதுச்சேரியில் பாரதி’ குறும்பட வெளியீட்டு விழா
- மலேசியக் கவிஞர் இளம்வழுதியின் புதிய நூற்றாண்டுத் தமிழர் நூல் வெளியீடு
- இசைக்கவிதைப் போட்டிக்கு நடுவர் ரமணன் கருத்துக்கள்
- ‘கதைச்சொல்லி’யும், கதையும்
- விழலுக்கு நீர் பாய்ச்சி ஓய்ந்து போனவர்களின் மூதுரை ! – சால் ஒன்று.
- லாகவமா? லாவகமா?
- காலம் மட்டுமே அறியும் ரகசியம்
- காதல் – King Arthur – கார்ல் ஜுங்
- சிவாஜி முதல் சிவாஜி வரை
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – இசைக்கவிதைப் பிரிவு
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 6
- கனகமணி!
- தீபச்செல்வன் கவிதைகள்
- அன்னையின் வீடு
- புரிந்து செய்!!
- நித்திரை யோகம்/மலம்கொண்ட உடல்
- ஒரு சொல்.. தேடி..
- காதல் நாற்பது (26) தோழமை தேடிய உள்ளொளி !
- கோவிலில் எம்மதத்தார்
- தமிழர் நீதி
- ஷா ஆலம் முகாமின் ஆவிகள்
- “கிராமம்”
- தொடர் நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்!
- கால நதிக்கரையில்……(நாவல்)-11
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 15