லட்சியமானவன்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

ஜெயந்தன்


கனமானவன்.
காதவழி வரும் போதே
கை வீச்சில் ஆள் தெரியும்.

மேனி முறுக்கானவன்-மனசு
வெல்லப் பாகானவன்.

கல்லாடம் கற்ற புலவன்-என்றாலுமது
சொல்லாடிக் காதை அறுக்க அல்ல.

தண்ணீரைப் போல எளிதானவன் – அப்படியே
நீங்கள் தவிர்க்க இயலாதவன்.

பொல்லாமை பொறுக்காத நெஞ்சு – நல்லார்க்கோ
காலடியைத் தாங்கும் பாதச்சரம்.

வாழ்ந்து காட்டுவான் – அதையே
வாழ்வுக்குப் பொழிப்புரையாய்த் தருவான்.

வீரியம் மிக்க காவியம் – நீங்கள்
பாட முடிகின்ற வரிகள்.

தோள் மீது கை போட்டால் – உங்களுக்கு
நூறு துணை கூட வரும்.

சொல்லில் மணமிருக்கும்
மெளனமும் மணம் வீசும்.

கையில் காசிருந்தால் கொடுப்பான்.

எல்லார் தலைக்கும் மேலான ஞானம் – ஆனால்
யார் தலைமீதும் ஏறாத ஞானம்.

ஈரோட்டுப் பாதை அவன் பாதை
உடன் நடக்க முடிந்தால் உங்கள் வரம்.

கண்ணியம் அறிவு தோழமை
திரண்டு வந்த தேன் குழம்பு.

என்னுடைய
குருவானவன்
திசையானவன்
வழித்துணை.

இவனைத்தான் தேடுகிறேன்
இதுவரைக்கும்.

(jeyanthan@sancharnet.in)

Series Navigation

ஜெயந்தன்

ஜெயந்தன்