ரோறா போறா சமையல்காரன்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

அ.முத்துலிங்கம்

எனக்கு ஒரு சமையல்காரர் தேவை. அப்படி ஒருவர் கிடைத்தால் அவருடைய வேலை மிகவும் சுலபமானதாக இருக்கும் என்று என்னால் உத்தரவாதம் தர முடியும். அவர் சமைக்கவேண்டியது என் ஒருவனுக்கு மட்டுமே. அதுவும் காலை உணவை நானே தயாரிக்கும் வல்லமை பெற்றிருந்தேன். ரோஸ்டரில் அமத்தி துள்ளிவிழும் ரொட்டியில் வெண்ணெய் தடவி உண்பதற்கு நான் சரியாக நாலு நிமிடம் எடுத்துக்கொள்வேன். மதிய உணவும், இரவு உணவும்தான் பிரச்சினை.

பாகிஸ்தானின் வடமேற்கு மூலையில் இருக்கும் பெஷாவாரில்தான் நான் அப்போது வசித்தேன். மனைவி வருவதற்கு ஆறுமாதகால அவகாசம் இருந்தது. அதற்கிடையில் நான் எப்படியும் ஒரு சமையல்காரரை ஏற்பாடு செய்தாக வேண்டும். இங்கே சமையல்காரர் தேவை என்று யாரும் விளம்பரம் செய்வதில்லை. வாய் வழியாக விசாரித்துத்தான் ஒருவரை பிடிக்க முடியும்.

பெஷாவார் வாழ்க்கையில் பல நூறு வருடங்களை பின்னோக்கி தள்ளிவிட்டது போன்ற உணர்வே எனக்கு தோன்றும். அதிகாலை நேரங்களில் குதிரைக் குளம்படிச் சத்தம் கேட்டுத்தான் எனக்கு விழிப்பு ஏற்படும். டக்கு டக்கென்று இந்தக் குதிரைகள் நடந்து செல்லும்போது நான் ஐந்து நூற்றாண்டுகளைக் கற்பனையில் கடந்துவிடுவேன். இன்னும் சில நேரங்களில் வேகமாக ஓடும் குதிரையின் குளம்படிகள் என் சன்னலின் கீழ் கேட்கும். பக்கத்து நாட்டு அரசனிடம் இருந்து ஒரு தூதுவன் அவசர ஓலை கொண்டு வருகிறான் என்று எண்ணிக்கொள்வேன்.

மணநாளில் பெண் தன் கணவன் வீட்டுக்கு பல்லக்கில் வந்து இறங்குவதையும் நான் மேல் மாடியில் நின்றவாறு பார்த்திருக்கிறேன். இனசனம் புடை சூழ, மங்கல வாத்தியங்கள் முழங்க, நாலு தடியான பேர்வழிகள் பல்லக்கை தூக்கி வருவார்கள். ஒரு வெள்ளையான கால் முதலில் வெளியே தெரியும். பிறகு சரிகை வைத்த முகத்திரை அணிந்த பெண் ஒருத்தி வெளிப்படுவாள். சிறு அசைவிலேயே அவள் பெரும் அழகி என்பது எனக்கு தெரிந்துவிடும்.

காலை நேரங்களில் அலுவலக போக்குவரத்து ரோட்டுகளில் கனத்துவிடும். அப்பொழுதுகூட ஒற்றைக் குதிரை பூட்டிய தட்டை வண்டி ஆசனத்தில் நின்றுகொண்டு குதிரை ஓட்டும் வாலிபர்கள் பென்ஹர் படத்து ரதப் போட்டியை என் ஞாபகத்துக்கு கொண்டு வருவார்கள். இன்னும் பலவிதமான புதிய மொடல் கார்களும், ஓட்டோக்களும், ஸ்கூட்டர்களும், வண்ணச் சித்திரங்கள் வரைந்த பஸ்களும், சைக்கிள்களுமாக சாலை நெருக்கியடிக்கும். ஷட்டில்கொக்கை கவிழ்த்து வைத்ததுபோல கறுப்பு பர்தா அணிந்த பெண்களும், வெள்ளை உடை ஆண்களும் நடைபாதையை நிறைப்பார்கள்.

பெரும் வசதிகள் கொண்ட நகரமாக பெஷாவார் இருந்தாலும் எனக்கு ஒரு சமையல்காரர் கிடைப்பது வரவர சிரமமாகிவிட்டது. அலுவலகத்திலும் பல பேரிடம் சொல்லி வைத்திருந்தேன். என் வீட்டு சொந்தக்காரரிடம் முறையிட்டபோது அவருடைய புத்திமதி ரஸ்யப் போரில் இடம் பெயர்ந்து வரும் ஆப்கானியர்களில் அருமையான சமையல்காரர்கள் இருப்பார்கள், அவர்களில் ஒருவரைப் பிடிக்கவேண்டும் என்பதாக இருந்தது.

ஒரு நாள் காலை என் வீட்டு மாடியில் நின்று பார்த்தபோது சற்று தூரத்தில் வெள்ளம் பாய்ந்து வந்த கால்வாயில் சிறுவர்கள் எருமைகளைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுவன் பெரிய கறுத்த எருமை ஒன்றின் கழுத்தை கட்டிப்பிடித்தபடி தலைகீழாக தொங்க மற்றவர்கள் அவனையும் சேர்த்து குளிப்பாட்டினார்கள். இதைச் சற்றும் பொருட்படுத்தாமல் அதே நீரில் பெரிய அலகுகள் கொண்ட, உடல் சிறுத்த நீர்ப் பறவைகள் மேலே பறப்பதும் டைவ் அடித்து கீழே இறங்குவதுமாக இருந்தன.

அந்த நேரம் பார்த்து வீட்டு அழைப்பு மணி அடித்தது. வந்தது மும்தாஜ். ( எங்களுக்கு மும்தாஜ் என்று ஒரு சினிமா நடிகையைத்தான் தெரியும். ஆனால் பெஷவாரில் மும்தாஜ் என்பது ஆண் பெயர்). மும்தாஜ் என்னுடன் வேலை செய்பவன். அவன் உடல் அலுவலத்தில் இருந்தாலும் உள்ளம் ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும். இராசாளிகளைப் பிடித்து வருடாவருடம் வரும் அராபிய வணிகர்களிடம் விற்பதுதான் அவன் முக்கிய தொழில். கறுப்பு தொப்பி போட்டு பழக்கிய ஒரு பெண் இராசாளியை விற்றால் அந்த லாபம் ஒரு வருடத்து சம்பளத்துக்கு ஈடாகிவிடும் என்று சொல்வான்.

மும்தாஜுக்கு பக்கத்தில் ஒரு கிழவர் செங்குத்தாக நின்று கொண்டிருந்தார். முரட்டுத் துணியில் செய்த சால்வார் கமிஸ் அணிந்து, அதனிலும் முரடான ஒரு சால்வையினால் போர்த்தி அதன் நுனியை பின்னால் எறிந்திருந்தார். கொய்யாப் பழம் பழுப்பதுபோல அவர் கண்கள் மஞ்சளாகிக்கொண்டு வந்தன. ஒரு சமையல்காரருக்கான தோற்றம் அவரிடம் இல்லை. என்னைக் கண்டதும் அவர் ஒரு பட்டாளக்காரனைப் போல காலை உதைத்து விறைப்பாக நின்று ஒரு சல்யூட் அடித்தார். அடித்துவிட்டு சிவத்த முரசு தெரிய பளீரென்று சிரித்தார்.

நேர்முகக் கேள்விகள் ஆரம்பமாயின. பதில்கள் ஒரு வார்த்தை அல்லது இரண்டு வார்த்தைகளில் மட்டுமே வந்தன. அவரிடம் இருப்பில் இருந்த 15 ஆங்கில வார்த்தைகளில் பதில் சொல்லக்கூடிய கேள்விகளையே நான் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்தார். அவருடைய கிராமம் ஆப்கானிஸ்தானிலுள்ள ரோறா போறா. பின்னொரு காலத்தில் இந்த ஊர் உலகப் புகழ் பெறும் என்பதோ, அமெரிக்க வல்லரசின் B- 52 விமானங்கள் இந்தச் சிறு கிராமத்தின்மீது ஆயிரக் கணக்கான குண்டுகளை வீசி அதைத் தரைமட்டமாக்கும் என்பதோ அப்போது கிழவருக்கு தெரியாது. எனக்கும் யூகித்திருக்க வாய்ப்பில்லை. அவருடைய இரு மகன்களும் ரஸ்யப் போரில் இறந்துவிட்டனர். அவர் எஞ்சி இருக்கும் ஒரு மகளுடன் தங்குவதற்காக பெஷாவார் வந்திருந்தார்.

அப்பொழுதுதான் அவர் கொண்டு வந்திருந்த சாக்கு மூட்டையை பார்த்தேன். அதற்குள்ளிருந்து ஒரு வத்தகப் பழத்தை எடுத்து என்னிடம் கொடுத்து அது தன்னுடைய தோட்டத்தில் விளைந்தது என்று சொன்னார். அது சாடையாக வெடித்து உள்ளே இருந்த சிவப்பு தெரிந்தது. பெஷாவாரில் இருந்து ரோறா போறா எண்பது மைல் தூரத்தில் இருந்தது. என் வீட்டிலிருந்து இரண்டே நிமிட நேர தூரத்தில் இருந்த சந்தையில் இந்தப் பழங்கள் மலைபோல குவிந்து, மலிவு விலைக்கு கிடைத்தன. இந்த மனிதர் என்றால் தன் தோட்டத்தில் விளைந்த பழத்தை இத்தனை மைல் தூரம் சுமந்து வந்திருந்தார்.

‘உங்களுக்கு என்ன சமைக்கத் தெரியும் ? ‘ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘எல்லாம் தெரியும் ‘ என்று பதில் கூறினார். அந்தப் பதிலின் நீளம் போதாது என்றோ என்னவோ அவர் சொல்லாமல் விட்ட மீதியை சிரிப்பாக வெளிப்படுத்தினார்.

மும்தாஜ் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவன். கிழவருடைய சில வாசகங்களை எனக்கு மொழிபெயர்த்தான். திடார் திடார் என்று தன் பங்குக்கும் சில வேண்டுகோள்களை வைத்தான். ஒரு கட்டத்தில் எனக்கு எது மும்தாஜ் சொல்வது, எது கிழவர் சொல்வது என்று தெரியாமல் போய் குழப்பமானது. இந்தக் கிழவருக்கு நான் வேலை கொடுக்க வேண்டிய அவசியத்தையும், அவர் படும் துயரத்தையும், இன்னும் ரகஸ்யமான சில குடும்ப நிலவரங்களையும் பகிரங்கப் படுத்தினான். அந்த விவரங்களுக்கும் இந்தக் கிழவருடைய சமைக்கும் திறனுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் எனக்கு தெரியவில்லை.

நேர்முகப் பரீட்சை முடிவுக்கு வந்தது. அவர் பதில்கள் சுருக்கமாக இருந்தன. சிரிப்புகள் நீளமானதாக அமைந்தன. நான் ஏதோ பட்டாளத்துக்கு ஆள் சேர்க்கிறேன் என்று அவரிடம் யாரோ தவறுதலாக சொன்னதுபோல அவர் இன்னும் விறைப்பாகவே என் முன்னால் நின்றார். அவருடைய சமைக்கும் திறன் பற்றிய என் அறிவு நேர்முகப் பரீட்சையின் ஆரம்பத்தில் இருந்ததுபோலவே அதன் முடிவிலும் இருந்தது. இன்னொருமுறை ‘உங்களுக்கு என்ன சமைக்கத் தெரியும் ? ‘ என்று கேட்டேன். அவர் ‘எல்லாம் தெரியும் ‘ என்றார். இந்த வசனம் ஒன்றையே அவர் ரோறா போறாவில் இருந்து பயணம் செய்ய எடுத்துக்கொண்ட அத்தனை மணித்தியாலங்களிலும் மனனம் செய்திருந்தார்போல பட்டது.

என் மனம் இரண்டாகப் பிளந்து ஒரு பாதி மற்றொரு பாதியுடன் மோதிக்கொண்டது. என்னுடைய முகக் குறிப்பில் இருந்து காரியம் நல்லாகப் போகவில்லை என்பதை கிழவர் எப்படியோ ஊ–கித்துக்கொண்டார். இந்த விவகாரத்தை ஒரு சுபமான முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு யுக்தி திடாரென்று தோன்றி அவர் முகத்தில் ஓர் ஒளி அடித்தது. ஆறில் நின்ற கடிகாரமுள் சட்டென்று ஒன்பதுக்கு நகர்ந்ததுபோல கிழவர் விறைப்பாக பக்கவாட்டில் திரும்பினார். குனிந்து தன் கமிசின் ஓரத்தைப் பிடித்து உருட்டி உருட்டி வயிற்றுக்கு மேலே கொண்டுவந்து நிறுத்திவிட்டு, சால்வாருக்குள் கையை நுழைத்து எதையோ இழுத்து எடுத்தார். வியப்பின் அடுத்த நிலைக்கு செல்ல நான் என்னைத் தயாராக்கிக் கொண்டேன். தண்ணீரிலும், வியர்வையிலும், இன்னும் வேறு திரவத்திலும் நனைந்து விடாமல் பாதுகாப்பதற்காக கண்ணாடித்தாளில் சுற்றிவைத்த ஒரு கடித உறையை பத்திரமாக எடுத்து என்னிடம் தந்தார்.

அந்தக் கடிதம் மிகப் பழசாக இருந்தது. உறையை திறந்து கடிதத்தை மெதுவாக இழுத்தால் அது எட்டாக மடிக்கப்பட்டு எந்த நேரமும் தனித் தனியாகப் பிரிந்து பறந்துவிடும் ஆபத்தில் இருந்தது. மடிப்புகளை பக்குவமாக நீவி விரித்தேன். முழுக்கடிதமும் என் கையில் ஓர் உயிர்ப் பிராணிபோல துடித்தபடி கிடந்தது. தேதியை பார்த்தேன். நான் பிறந்த அதே வருடம். கிழவர் இளைஞனாக இருந்தபோது சேவை செய்த ஆங்கிலத் துரை எழுதியது. தன்னிடம் பணியாற்றிய ஒருவரின் விசுவாசத்திற்கும், திறமைக்கும் அத்தாட்சி தருவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெள்ளைக்காரர் ரைப்ரைட்டர் முன் உட்கார்ந்து அச்சடித்த கடிதம். To whom it may concern என்று அது ஆரம்பித்தது.

‘இதனால் சகலருக்கும் அறியத்தருவது,

இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் குலாம் முகம்மது நிஸாருதீன் உங்களிடம் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார் என்று அர்த்தம். இவர் என்னிடம் இரண்டு வருடகாலம் சமையல்காரராக வேலை பார்த்தார். இவருக்கு சமைக்கத் தெரியாது. மிகவும் நல்லவர். மற்ற என்ன வேலை கொடுத்தாலும் செய்வார் என்றே நினைக்கிறேன்.

வில்பிரெட் ஸ்மித் (ஒப்பம்) ‘

ரத்தினச் சுருக்கம் என்று சொல்வார்களே அப்படி இருந்தது. கடிதத்தை இருந்த மாதிரியே ஒடிந்துவிடாமல் மடித்து கவருக்குள் வைத்து அவரிடம் நீட்டினேன். உலகத்தில் புழங்கும் அத்தனை மொழிகளிலும் ஒன்றைக்கூட படிப்பதற்கோ, எழுதுவதற்கோ வேண்டிய திறமை பெற்றவர் அல்ல கிழவர் என்பது பளிச்சென்று தெரிந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அறிய சிறு முயற்சிகூட எடுக்காமல் இத்தனை வருடங்களாக பாதுகாத்து வந்த கடிதத்தை, வலக்கையின் கீழ் இடதுகையை பொருத்தியபடி திரும்பவும் பெற்றுக்கொண்டார். பெரும் எதிர்பார்ப்போடு என் முகத்தை நோக்கினார். இருபது செக்கண்டுகளுக்குள் வேலையை தனக்கென்று எடுத்துக்கொள்ளும் உத்தேசம் அவர் கண்களில் தெரிந்தது. முகத்தில் வென்றுவிட்ட மகிழ்ச்சி. வாயின் அகலத்தை இரண்டு இன்ச் அதிகமாக்கி சிரித்தார். அவர் சுமந்து வந்த வத்தகப் பழம் வெடித்ததுபோல அந்தச் சிரிப்பு சிவப்பாக இருந்தது.

amuttu@rogers.com

Series Navigation