ரிஷி
(சமீபத்தில் சந்தியா பதிப்பகம் பிரசுரித்துள்ள வாக்கு என்ற தலைப்பிலான ரிஷியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் சில)
ஒருகோடியிலிருந்து மறுகோடிக்கு
தினம்
அறுநூறு முறை பயணமாகிறவர்
அடுத்திருக்கும் வீட்டிற்கு வர
அவகாசமில்லை,ஆரோக்கியமில்லை
யெனச் சொல்லும்
சாக்கின் போக்கில்
அவமானம் தாக்கிச் சிதையும்
அன்பின் செல்வாக்கு.
2) வாக்களிப்பு
அந்தக் கைபேசி படச் செய்தியில்
இடம்பெறுபவன் கூறுகிறான் :
“இத்தனை காலம் முட்டாளாய்
இருந்திருக்கிறேன்”.
அவன் கண்களின் அவலக்குரல்
அடிமன வேதனையாய்
எனக்குள் பரவுகிறது.
அந்தக் கன்னங்களில் உறைந்திருக்கலாகும்
கண்ணீர்க்கோடுகள்
எனக்குள்ளும் நீண்டுருளும் துளிகளாக _
ஆறுதலாய் வாக்களிக்கிறேன்
அவனே நானாய் :
“இனி இல்லை”.
3)ஆண்டியின் நந்தவனம்
யாருடைய பரிந்துரையின் பேரிலோ
எனக்குக் கிடைத்திருக்கலாகும்
அரூப தரிசனம்
என்னை அதிகம் யாசகியாக்க
மீறும் கையறுநிலை
சேராதிருக்கக் கடவது ஏதொரு வாசகரையும்.
4) உள்ளது உள்ளபடி
பத்து உடல்களில் ஒன்றாய் நீட்டிக் கிடத்தப்பட்டிருந்தேன்
கடலோரத்தில்.
படமெடுத்துக் காட்டி சிலரின் வீரியமும் காரியமும்
பத்திரப்படுத்தப்படலாம்.
அம்மணங்களை வெளியிடும் ஊடகங்கள்
ஆண்களை பேராண்மையாளர்களாக்கியவாறு.
உடலும் சடலமும் ஒன்றாகும், வெவ்வேறாகும்
பொழுதுகளில்
நிராயுதமனம் மீது அமிலத்துளிகள் தெறிக்க _
அன்புருக்கும்.
5) கவின் வானும்,கழிப்பறை வாசகமும்
ஆகாயமளவு அகல விரிந்த வெளி
அவர் வசமாகியிருக்கிறது.
கையோயும் வரை காவியங்கள் வரைந்து
கொண்டிருக்கலாம்,
கவின் ஓவியம் பல்லாயிரம் தீட்டி மகிழலாம்,
அல்பகல் நல்வாத்தியங்கள் மீட்டிப் பழகலாம்,
அளந்து பார்க்கலாம் வெறுமையின்
கனபரிமாணங்களை,
இன்மையின் உளதாம் தன்மையை…
வண்ணத்துப்பூச்சியாய், சிட்டுக்குருவியாய்,
வெண்பருந்தாய் சிறகடித்துப் பறக்கலாம்,
இரவிலிருந்து நட்சத்திரங்களையும், சொப்பனங்களையும்
திரட்டியெடுத்துப் பூரிக்கலாம்,
சிறுகுழந்தைகளின் கைகளில் வாரித் தரலாம்
மேகப்பஞ்சு மிட்டாய்களை…
என்னென்னவோ செய்ய வழியிருக்க
போயும்போயும் கரித்துண்டால் கழிப்பறைச் சுவற்றில்
கெட்ட வார்த்தைகளைக் கிறுக்கப் பரபரக்கும் விதமாய்
சக படைப்பாளியைப் பழிக்கப் புகும்
குரங்குமனம் கொள்ளத் தகுமோ வெனும்
கேள்விக்குண்டோ பதிலிங்கு சாமி…?
6) கண்ணாடி வீட்டுக் கற்கள்
உமையொரு பாகனாய், சிநேகனாய்,
ஒருபோதும் தம்மைப் பாவித்தறியாப்
பேராண்மையாளர்கள் நிறை பாவனையுலகம்
அது.
பெண்களெல்லாம் அங்கிங்கெனாதபடி
உருவப்பட்ட துணியணிகள் காற்றில் பறக்க
இரவு பகல், மழை வெய்யிலெப்போதும்
குத்தாட்டம் ஆடிக் கொண்டிருப்பது
கட்டாய தண்டனையாக்கப்பட்டிருக்கிறது
அங்கே.
பகடைகள் எத்தாலும் உருட்டப்பட்டுக்
கொண்டிருக்கும் சூதாட்டக் களம் அது.
ஒரு தனிநபர் பெண்ணை இழிவு செய்ய,
தண்டிக்கும் சட்டம்.
அதையே பலர் கூடி
சின்ன பெரிய திரைகளில் வண்ணமயமாய்ச் செய்ய_
விருதளிக்கப்படுகிறது கலைப்படைப்பென்று.
என்றும் சடங்காய், காமக்கிடங்காய்
பெண் மதிப்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
அப் பெருநிலத்துவாசிகள்
சில உண்மைகள் துலங்க வேண்டி
உடலை முன்வைத்துக் கவியெழுதும்
பெண்களை
ஏசலும், புறம் பேசலும் அறமோ சொல்
பழம் நீ பாரதி..!
7) வாகரை கிராம வெறுங்கால்கள்
எடுக்க எடுக்க குறையாமல் வந்து கொண்டிருந்தன_
வளைந்த ஆணிகள், விஷ முட்கள்
கூர்கற்கள், குண்டூசி, கண்ணாடிச் சில்,
சிகரெட் பீடி துண்டுகள்,
கொதித்து உருகிக் கொண்டிருக்கும் தார்,
கருந்தேள் கொடுக்கு, துருப்பிடித்த அரை ‘ப்ளேட்’,
ஸே·ப்டி பின்கள், ஸ்டாப்ளர் பின்கள்,
தகரப் பட்டைகள்,இரும்புக் கம்பிகள்,
இன்னமும்…
என்னமாய் கடுத்திருக்கும்…
மனதில் கோர்த்த சீழ்
கண்ணில் ரத்தமாய் வழிந்திருக்கும்..
வலித்தாலும் சத்தமாய் அழவியலாது…
அழுதாலும் அது விழலுக்கிறைத்த நீராய்…
பொழுதும் வரவாகும் கொச்சை வார்த்தைகள்…
காலணிகளுக்கான நியாயத் தேவையில்
நள்ளிரவிலும் கொதித்திருக்கும் உச்சி.
8) ஆளுக்கொரு
சிலருக்கு சிங்கம்,
சிலருக்கு பெருமாள்,
சிலருக்கு கோவில்,
சிலருக்கு ரயில்நிறுத்தம்,
சிலருக்கு சரணாலயம்,
சிலருக்கு சண்டைக்களம்,
சிலருக்கு ஏறுமுகம்,
சிலருக்கு இறங்குமுகம்…
ஆறுமுகம் கடவுளா, மனிதனா,
மயிலா, மனமா, மாயத்தோற்றமா,
ஏற்றமா, ஏமாற்றமா,
கனவா, நம்பிக்கையா, சதியா,
இதமா, கதிமோட்சமா,
அதிகாரமா…
இகவாழ்வின் மீட்சிக்கொரு மார்க்கமாய்
நிதமும் நான் இறங்கிக் கொள்ளும்
பணியிடம்
சிங்கப்பெருமாள்கோயில்.
9) திறந்த முனை
கானகத்தை கானகமாக்கியவாறு,
கடவுள் பாதி மனிதன் பாதியாய்,
எனில், மிருகமாதல் பழகாமல்
போய்க் கொண்டிருந்தாயாம் உன் பாட்டில்…
கதை சொன்ன அன்புத் தாத்தா இன்றில்லையாயினும்
என்றும் உண்டு தானே!
‘இருள் பகலாகும், பகல் திருவாகும் உன் தடத்தில்’
என்பார்.
என்றும் மூடிய உள்ளங்கையாய் திகழ்ந்த உன்
முழு உருவம்
எங்கே யென்று தேடத் தலைப்பட்டதில்லை
இத்தனை காலம்.
இழைபிரித்தால் இறுதியில் எல்லாம்
வெங்காயம்தானோ வென…
‘அரசகுலத்தவன் இன்பதுன்பத்தில் சாதாரணர்களுக்கு
என்ன வேலை’ யென்று
எனக்கான காட்டில் போய்க் கொண்டிருந்தேன்.
இன்று முதுகில் அம்புகளோடும் எதிர்ப்படும் நீ…
அங்கிங்கெனாதபடி ஒளி-ஒலி வெளிகளிலெல்லாம்
அருல்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஆண்டவரும், ஆள்பவரும்,
வறியோர் காவலராய் தம்மை விளம்பரப்படுத்தியவாறு
அரண்மனைகளைப் பெருக்கிக் கொண்ட வண்ணமே.
மரவுரி தரித்தவன் தோள்கண்டு தோளே கண்ட
விழிகளுக்குள்
சித்திரத்தன்ன செந்தாமரை முகம் விரிய,
அரசனும் ஆண்டியுமற்ற ஒரு பேரொளியாய்
பிறக்கும் நீ புதிதாய்
திறந்தமுனைக் கவிதையாய்.
ramakrishnanlatha@yahoo.com
- சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்
- சுஜாதா – தமிழ் சூரியன்
- மாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்
- Last Kilo byte – 8 முடிந்துபோன கடைசிப்பக்கம் – இளையதலைமுறையின் அஞ்சலி
- சம்பந்தமில்லை என்றாலும்-ச் ரீவைஷ்ணவம் – -ராமச்வாமி ராமானுஜ தாசர்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1
- ‘ரிஷி’ யின் கவிதைகள்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- சுஜாதா என்றொரு தமி்ழ்ச்சுரங்கம்
- கவிதை
- இது பகடி செய்யும் காலம்
- ரவி ஸ்ரினிவாஸின் கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல
- தாகூரின் கீதங்கள் (19-20) குருவும் நீ சீடனும் நீ !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 9 புல்லாங்குழல் ஊதுவோன் !
- மெழுகுவர்த்தி
- தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
- ஜெயகாந்தன் பதிலளிக்கிறார் – எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்!
- வராண்டா பையன்
- தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
- கவிதை
- ஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்!
- திப்பு சுல்தான், காந்திஜி, பாரதி
- மலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா
- வெளிச்சம்
- “கட்சி கொடிகளும் மரங்களும்”
- பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம்
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – வளர்ச்சியும் விடுபட்ட அடையாளங்களும்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்…………14 அ.ச.ஞானசம்பந்தன்
- குப்பிழான் ஐ. சண்முகனின் ‘உதிரிகளும்;’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஒரு வாசகனின் பார்வை
- மீ ட் சி
- மலையாளக்கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
- பாய்ச்சல் காட்டும் (விண்)மீன்கள். (myth and mystery of “Red Shift”)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின ? (கட்டுரை: 19)
- வெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்
- தும்பைப்பூ மேனியன்
- கறுப்பு தேசம்
- சுஜாதா
- சிலுவைகள் தயார்…
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 1