ரஜினி என்ற ஆதர்சம்

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

இரா மதுவந்தி


பாண்டியன் என்ற ஒரு மட்டமான ரஜினி படத்துக்குச் சென்றிருந்தேன். எனக்கு பின்னால் ஒரு அப்பா, ஐந்து அல்லது ஆறு வயதுடைய இரண்டு சிறுமிகளையும் அழைத்துவந்திருந்தார். ரஜினியின் முகம் திரையில் வந்ததும், இரண்டு சிறுமிகளும் எழுந்து நின்று ரஜினி ரஜினி என்று கத்தினார்கள். எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர், இந்த வயதிலேயே ரஜினி பைத்தியமா என்றார். இன்னொரு நண்பர், இந்த வயதில் அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய இரண்டு நபர்கள் 1) ரஜினி 2) சிலுக்கு என்றார்.

ரஜினிக்கு ஒரு பிரம்மாதமான காரிஸ்மா (Charisma), திரையை நிரப்பும் இருப்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. திரையில் சிலுக்கு இருந்தால், சிலுக்கிலிருந்து உங்கள் கண்ணை எடுக்க முடியாது என்பதும் உண்மை. ஏன் ரஜினி ஆதர்சம் ஆனார், சிலுக்கு ஆகவில்லை ? அப்படிப்பட்ட ஒரு காரிஸ்மா நிச்சயம் ஜெயலலிதாவுக்கு கிடையாது. இருப்பினும் ஏன் அவர் தமிழ்நாட்டின் தலைமைப்பதவிக்குச் சென்றார் ? காரிஸ்மா மட்டுமே ஒரு ஆளைத் தூக்கிக்கொண்டு போய்விடாது. எம்ஜியாருக்கு காரிஸ்மா இருந்தது. சிவாஜி கணேசனுக்கும் காரிஸ்மா இருந்தது. ஆனால் அரசியலில் சிவாஜி கணேசன் பெற்ற இடம் எது ? எம் ஜி ஆர் பெற்ற இடம் எது ?

***

ஞாநி அவர்கள் எழுதிய கட்டுரை, ரஜினிக்கு மூலம் சிவாஜிராவ் அவர்களது படைப்பாகக் கண்டு, படைப்பின் மூலம் சிவாஜிராவை விமர்சனம் செய்ய முயல்கிறது. சிவாஜி ராவ் உண்மை , ரஜனி மாயை என்று சொல்கிறது.

நான் எதிர்திசையில் வரலாம்.

படைப்பின் மூலம் படைப்பை ரசிப்பவனை ஆராயலாம்.

‘படைப்பை ரசிப்பவன் ஏன் அந்த படைப்பை ரசிக்கிறான் ? ஒரு குறிப்பிட்ட படைப்பை ரசிப்பதன் மூலம், எதனை வெளிப்படுத்துகிறான் ? ‘ என்பது முக்கியமான கேள்வி. ஏன் இந்தக் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது ? அதன் விடை, ஏன் பாபா ‘ஊத்திகிச்சி ‘ என்பதில் இருக்கிறது.

ரஜினியின் எல்லாப்படங்களும் வெற்றிப்படங்களல்ல. ஏன், எம்ஜியாரின் எல்லாப்படங்களும் கூட வெற்றிப்படங்களல்ல. ஏன் ஒரு சில படங்கள் வெற்றிப்படங்களாகின்றன ?

எங்கே மனிதன் தன்னைக் காண்கின்றானா அந்தப் படங்கள் வெற்றி பெறுகின்றனவா ? அல்ல. அப்படியானால் பெரும்பாலான தமிழ்நாட்டு, இந்திய ‘கலைப்படங்கள் ‘ வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஒருவன் டாக்கடையில் உட்கார்ந்து அரைமணிநேரம் டா குடிப்பதைக் காட்டும் கலைப்படங்கள் அந்த மனிதனின் ‘வெறுமை ‘, ‘வேலையின்மை ‘, ஆகியவற்றையும், ஒருவன் பீடி குடிக்கும்போது விடும் புகைக்குள் அலையும் காமிரா, ‘மனக்குழப்பத்தை ‘யும் காட்டுவதாக வியாக்கியானம் செய்தாலும், அவனைத்தானே காட்டுகின்றன ? அவை வெற்றி பெற்றிருக்க வேண்டுமே ? இல்லையே ?

விவேக்கின் நகைச்சுவையும் , செந்தில் கவுண்டமணியின் நகைச்சுவையும் இல்லாமல் ஒரு படம் கூட வெளிவர முடியாது என்ற ஒரு சூழ்நிலை இருந்தது. இளையராஜாவின் இசை எல்லோர் மனதையும் நிறைத்த காலம் ஒன்று இருந்தது. இதனால் விவேக் , இளையராஜா, செந்தில் ஆகியோர் ரஜனியின் இடத்தைப் பிடிக்ககூடுமா ? வாய்ப்பே இல்லை. வெறும் சினிமாப் புகழ் மட்டுமே மக்கள் பின் தொடரக் காரணமாகி விடாது.

ஜெயலலிதாவிற்குப் பின்னால் செல்கிற சந்தர்ப்ப வாதிகள் அனேகம் உண்டு. ஆனால் சாதாரணப் பெண்கள் தமக்கான ஆதர்சமாக, ஆண்களின் உலகில் தாமும் வெற்றி பெறக் கூடும் என்ற நம்பிக்கைக்கு உதாரணமாகப் பார்ப்பதால் தான் ஜெயலலிதா வெற்றி பெற முடிகிறது.

எங்கே ஒரு மனிதன் தன் ஆதர்சத்தைக் காண்கின்றானோ, அவை வெற்றி பெறுகின்றன. எந்தப் கலைப்படைப்பு ஒருவனுக்கு நிஜமான நம்பிக்கையையும், ஆதர்சத்தையும் தருகின்றதோ அது வெற்றி பெறுகிறது. பின் தொடர உந்துதலை அளிக்கிறது. அந்தப் படம் முழுமையாக அவனுக்கு ஆதர்சமாக, அதில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் ஆதர்சமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த கலைப்படைப்பில் வரும் ஒரு வரி போதும், சில நேரங்களில் அந்தப் படம் வெற்றி பெற. அதன் அடிப்படைக் கருத்து போதும்.

ஆதர்சம் என்பது உபதேசங்கள் அல்ல. ஆதர்சம் என்பது பார்வையாளன் இனங்கண்டு கொள்ளக் கூடிய ஒரு கதாபாத்திரம் ஆனால் பார்வையாளன் எட்டக் கூடும் என்ற நம்பிக்கை கொடுக்கும் வகையில் வித்தியாசமாக , பிரகாசமாக இருக்க வேண்டும். வெற்றிக்கான படிகளில் செல்லக் கூடியதாய் அந்தக் கதாபாத்திரம் அமைய வேண்டும். சிவாஜி கணேசனின் படத்துக்கு ஒரு ஃபார்முலா கிடையாது. ‘வசந்த மாளிகை ‘ யும் வரும். ‘புதிய பறவை ‘யும் வரும். கமல் ஜாசன் படத்துக்கு ஒரு ஃபார்முலா கிடையாது ‘சிவப்பு ரோஜாக்களும் ‘ வரும். ‘ மூன்றாம் பிறை ‘ யும் வரும். ஆனால் எம் ஜி ஆர் , ரஜினி படங்களுக்கு ஒரு ஃபார்முலா இருக்கிறது. அது இப்படிப் பட்ட ஆதர்சத்தை எடுத்துக் கொண்டு அதையொட்டி அமைக்கப் படும் கதையின் வழியாக வெளிப்படுகிறது. அது ‘எங்க வீட்டுப் பிள்ளை ‘யானாலும், ‘உலகம் சுற்றும் வாலிப ‘னானாலும் நல்லவன் கடைசியில் வெல்வான். தீயவன் இறுதியில் திருந்து விடுவான். அல்லது அழிவான். கதா நாயகன் சிகரெட் , மது குடிக்க மாட்டான். பெண்களால் விரும்பத்தக்கவனாக இருப்பான். ஆனால் அவன் ஒரு பெண்ணை மட்டும் தான் ஏற்றுக் கொள்வான். ஆனால் இறுதியில் எல்லாம் சுபமே.

ரஜனி சிகரெட் , மது அருந்துவது ஏன் ஆதர்ச எதிர்பார்ப்பிற்கிடையே ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்று பார்த்தால் காலகட்டங்களின் வித்தியாசத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். எம் ஜி ஆர் திரையுலகில் சிறப்பாய் இருந்த காலத்தில் மதுவிலக்கு பெரிதும் அமலில் இருந்தது. மதுவிற்கு எதிராக ஒரு பொதுக் கருத்தும் இருந்தது. இன்று அப்படி இல்லை.

இந்த ஆதர்சம் காலத்துக்கு ஏற்ப மாறுகிறது என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. சுதந்திரப்போராட்ட காலகட்டத்தில் நிஜத்தோடு இணைந்து, சாதாரண கூலி விவசாயி போல உடை உடுத்தி, பெரும் மக்கள் போராட்டத்தை வழி நடத்திய காந்தி ஒரு நிஜமான ஆதர்சம். பிறகு சாதாரண விவசாயியின் மகனான காமராஜர் முதல்வராக ஆனது இன்னொரு ஆதர்சம். அண்ணா, பெரியார், கருணாநிதி ஆகியோரும் பலதரப்பு மக்களில் இன்னும் ஆதர்சமாகவே இருக்கிறார்கள்.

எவ்வாறு கருணாநிதி, அண்ணா போன்றோர் மேடைப்பேச்சுக்கலையை தன் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தினார்களோ, அது போல சினிமா என்னும் கலைப்படைப்பை தன் பிரச்சாரக் கருவியாகக் கொண்ட எம்ஜியார் தெளிவாக மக்களுக்குப் புரியும் என்பதாக தன் சினிமா வாழ்க்கையையும் நிஜ வாழ்க்கையையும் இணைத்துக்கொண்டார். இல்லையென்றால், சினிமா அவர் கையில் பிரச்சாரக் கருவியாக இருந்திருக்க முடியாது. சினிமாவையும் நிஜத்தையும் தமிழர்கள் குழப்பிக்கொள்கிறார்கள் என்று சொல்வதில் கூட உண்மையில்லை. அப்படியென்றால் ஜெயலலிதா முதலமைச்சராக ஆகியிருக்க முடியாது. ஜெயலலிதாவை நடிகையாக தோல்வியடையச் செய்த தமிழர்கள், அரசியல்வாதியாக ஏற்றுக்கொண்டார்கள். ‘நதியைத் தேடிவந்த கடல் ‘ கண்டுகொள்ளப்படாமல் தோல்விப்படங்களில் ஒன்றாக கரைந்ததை மறக்கக்கூடாது. சினிமா எது அரசியல் எது என்பது பற்றி மக்கள் மிகத் தெளிவாகவே தான் இருக்கிறார்கள்.

விதி என்ற ஒரு படம் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட ஒரு பெண் நீதி கேட்டுப் போராடுவதைப் பற்றியது. இது இந்தியில் இன்சாஃப் கா தராசு என்ற பெயரிலும் தமிழிலும் வெளிவந்து, பெண்கள் கூட்டம் அலைமோதி, மாபெரும் வெற்றி பெற்றதைக் கவனியுங்கள். ஏன் ராமராஜன் ஒரு ரோல் மாடலாக ஆனார் ? அவர் எந்த மக்களிடம் ரோல் மாடலாக ஆனார் ? யோசித்துப் பாருங்கள். விவசாயம் செய்யும் கிராம இளைஞர்களின் ஆதர்சம் ராமராஜன். அந்த மக்களிடம் இருக்கும் மனிதாபிமானத்தை, காதலை, ‘நேர்மையான வழியில் நடந்தால், இன்றையப் பிரச்னைகள் தீர்ந்துவிடும் ‘ என்ற நம்பிக்கையைச் சொல்லும் படங்கள் ராமராஜனின் படங்கள். அவை கிராமங்களில் மகத்தான வெற்றி பெற்றன. இது எம்ஜியார் பாணி என்பதையும் கவனியுங்கள்.

லைசன்ஸ் கோட்டா சாம்ராஜயத்தில் தேங்கிக்கிடந்த இந்தியாவின் மக்களிடம், வாழ்க்கையில் பணக்காரன் பணக்காரனாகத்தான் இருப்பான், ஏழை ஏழையாகத்தான் இருப்பான். ஆனாலும், பணக்காரனின் மகள் ஏழையைக் கல்யாணம் செய்துகொள்ளலாம். நான் ஏழையாக இருந்தாலும் நேர்மையானவன் ஆகிய கருத்துக்கள்தானே நம்பிக்கையை ஊட்டும் ? அதைத்தானே எம்ஜியார் செய்தார் ? ராமராஜன் இப்படிச் சொல்லும்போது அது எங்கே கேட்கப்படுகிறது ? வேகமாக முன்னேறும் நகரத்திலா, இன்னும் தேங்கிக்கிடக்கும் கிராமத்திலா ?

ரஜினி பார்முலா என்று ஒன்று இருக்கிறது. அது ஏழை பணக்காரனாக ஆவது. அது பணக்காரனின் மகளை திருமணம் செய்து அல்ல. ஒரு ஏழை பணக்காரனுக்குச் சவால் விட்டு, உழைத்து பணக்காரனாக ஆவது. அது நவீன இந்தியாவின் மக்களின் நம்பிக்கை. ஏழை ஏழையாகவே இருந்த காலம் போய் விட்டது. இன்று உழைத்தால் (கூடவே கடவுளின் கருணையும் இருந்தால்-ரஜினி) நிச்சயம் பெரும் பணக்காரனாக ஆகலாம். அதுதான் இன்றைய நம்பிக்கை. அதைத்தான் குடியரசுத்தலைவராக ஆன அப்துல் கலாமும், பஸ் கண்டக்டராக இருந்து வாழ்க்கையைத் தொடங்கி, இன்று 300 கோடிக்கு தன் படத்தை வியாபாரம் செய்ய முடிகின்ற ரஜினிகாந்தும் பிரதிபலிக்கிறார்கள்.

ரஜினி ரசிகன் லும்பன் என்று பலர் சொல்கிறார்கள். எம்ஜியார் ரசிகனும் லும்பனாக இருந்தவன் தான். பல மருத்துவர்களும், தொழில்நுட்ப பொறியாளர்களும் , இல்லத்தரசிகளும் , மாணவமாணவியரும் இன்றும் ரஜினி ரசிகர்களாக இருக்கிறார்கள். லும்பனெல்லாம் ரஜினி ரசிகனாக இருப்பதால், ரஜினி ரசிகனெல்லாம் லும்பன் என்று சொல்வது சரியல்ல.

இவர்கள் சொல்லும் அந்த லும்பனுக்கும் கனவுகள் இருக்கின்றன. அவன் தன் வாழ்நாள் முழுவதும் லும்பனாகவே இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவனல்ல. தன் வாழ்க்கைக்கு ஒரு பொருள் இருக்கிறது. அது ரஜினியைப் போல தன்னையும் பார்ப்பது. ரஜினியைப் போல தானும் முன்னேறுவது. தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள ரஜினியின் வழிகாட்டுதலைத் துணைக்கழைப்பது. தான் குடும்பத்தை எதிர்த்து தன் காதலியைத் திருமணம் செய்து கொண்டதற்கு ‘வானவராய ‘னுக்கு நன்றி தெரிவித்து – ரஜினிக்கு அந்தப் படத்தில் பெயர் – சுவரொட்டி ஒட்டுகிறார் ஒரு ரசிகர்.

நியூ ஜெர்சியில் இருப்பவர்கள் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் லும்பன்கள் அல்ல. அவர்களிடையே ரஜனியின் ஆதர்சம் வேலை செய்கிறது. ரஜனியைப் போலவே தம்முடைய முயற்சியால் முன்னுக்கு வந்தவர்களாய்த் தங்களைக் காண்கிறார்கள் இவர்கள். முதல் நாள் ரஜனி படத்துக்குப் போகும் இந்த அமெரிக்க ரசிகன் சொல்வது இதைத்தான்.

ரஜினி ரசிகன் தன் வளமையான எதிர்காலத்தை ரஜினியின் சொந்த வாழ்க்கையிலும், அதனைப் பிரதிபலிக்கும் ரஜினி பார்முலாப் படங்களிலும் பார்க்கிறான். ரஜினி பார்முலா இல்லையென்றால், ரஜினியும் ஒரு இறந்தகாலம் என்பதை அவன் சொல்லத்தயங்கமாட்டான். அதனால்தான் பாபா ஊத்திக்கிச்சி. வள்ளி படம் பெட்டியில் அடங்கியது. அருணாச்சலமும், படையப்பாவும், முத்துவும் வெற்றி பெற்றன.

சிவாஜி ராவும் உண்மை தான். ரஜனியும் உண்மைதான். உங்கள் நிகழ்காலம் சிவாஜி ராவ் என்றாலும் கவலைப் படாதீர்கள் , உங்களுக்குள் ஒரு ரஜனி உண்டு என்பது தான் ரஜனி படங்களின் செய்தி. அதை வலுவாக package செய்வது தான் கே எஜ ரவிகுமார் , கிருஷ்ணா போன்ற இயக்குநர்களின் வேலை.

அடுத்து ஒரு ஆதர்சம் எழும் . அதுவரையில் ரஜனியின் வண்டி ஓடத் தான் செய்யும். எம் கே டிக்கும் இது நடந்தது. எம் ஜி ஆருக்கும் நடந்தது. ரஜனிக்கும் நடக்கும்.

***

Series Navigation

இரா மதுவந்தி

இரா மதுவந்தி