ஆபிதீன்
இடம் : தூர்தர்ஷன் (பொதிகை) அரங்கம்.
விருந்தினர் : ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர் இயக்கிய படத்தை பாக்குறது இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கு. அதுக்கு முன்னாலே அது என்னா கதைண்டு அவர்ட்டேயே கேட்போம். சொல்லுங்க தம்பி.
இயக்குநர் : எல்லாருக்கும் என்னோட வணக்கத்தை தெரிவிச்சிக்குறேன். ‘சுவடுகள் ‘ங்குற இந்த படத்தோட கான்சப்ட் என்னாண்டா , ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே ‘ங்குறதுதான். So, இது பழசு; ஆனா இதெ எப்படி புதுசா செய்யலாம்டு யோசிச்சி தொல்பொருள் ஆராய்ச்சி பேக்ரவுண்டை வச்சிக்கிட்டு, கண்ட விஷயங்கள் கேட்ட விஷயங்கள் எல்லாத்தையும் கலவையா செஞ்சி , ஒரு கதையா பண்ணியிருக்கோம். பாக்கும்போது உங்களுக்கு புரியும். (பக்கத்திலுருக்கிற) இவன் பேரு ஞானம். இந்த கதையோட ஒளிப்பதிவாளர். இவன் பேரு பிரேம்நாத் – சவுண்ட் எஞ்ஜினியர். இவன் பாலாஜி – படத்தோட எடிட்டர்.
விருந்தினர் : பொதுவா ஒரு ப்யூச்சர் ஃபிலிம்ங்குறதுலெ நெறய பொழுதுபோக்கு அம்சங்கள் நெறஞ்சிருக்கும். குறும்படம்ண்டா ஏதாவது ஒரு thoughtஐ சொல்லுறது. நான் பார்த்த திரைப்படக் கல்லூரி படங்களும் சரி, நான் கேள்விப்பட்ட படங்களும் சரி. ஏதோ ஒன்னை சொல்லனும். ஒரு aim இருக்கனும்; ஒரு மெஸேஜ் இருக்கனும்; ஒரு விளைவை, ஒரு பாதிப்பை ஏற்படுத்தனும்ங்குறதுதான் குறும்படங்களோட நோக்கமா இருக்கும். நீங்க அதே மாதிரி சிந்தனைலதான் உருவாகியிருப்பீங்க. நீங்க ஏற்படுத்தனும்டு நெனச்ச பாதிப்பை உங்க படம் ஏற்படுத்துமா ?
இயக்குநர் : கண்டிப்பா.
விருந்தினர் : அப்ப அதை பார்த்துட்டு நாம விரிவா பேசலாம். பார்ப்போமா ?
***
தூக்கலாக நின்று உறுத்தும் இசையுடன் , திறமையாக வெட்டி வெட்டி முன்னும் பின்னும் ஓடும் காட்சிகளின் வரிசை :
I : a) தொல்பொருள்துறையில் வேலை பார்க்கும் ரிஷி என்ற இளைஞன். கடுமையாக உழைத்து, பல சுவடிகளைப் புரட்டி , குறிப்புகள் எடுத்து , வரைபடம் தயாரிக்கிறான். b) ‘யார் செய்யிறது; யார் பேருவாங்குறது ? ‘ – பாராட்டும் பத்திரிக்கை ஒன்றை அதிகாரியின் முகத்தில் வீசுகிறான். c) ‘எவ்வளவு உழைச்சேன்; எவ்வளவு கஷ்டப்பட்டேன் ‘ – தன் காதலியிடம் புலம்புகிறான். d) ரிஷியின் ஆத்மார்த்தமான உழைப்பை மெளனமாக விவரிக்கும் காட்சிகள்.
II : அதிகாரி : நீங்க சொல்றது புரியிது ரிஷி. ஒவ்வொரு ஆர்க்கியாலஜிஸ்ட்டுக்கும் இந்த நவரோஹினி சிலையைக் கண்டுபிடிக்கிறதுதான் லட்சியமா இருக்கும். ஆனால் நெறய பேரு இதைத்தேடி ஃபெயிலியர் ஆயிருக்காங்க.
ரிஷி : சார், நான் சரியான இடத்தை லொகேட் பண்ணிட்டேன். explorationலெ ப்ரூஃபும் பண்ணியிருக்கேன்.
அதிகாரி : ஒகே ரிஷி, on my own risk, உங்களுக்கு மூணு மாசம் excavate பண்ண டைம் தர்றேன்
ரிஷி : தேங்க் யூ சார்
III : ரிஷி (அதிகாரியின் உதவியாளரிடம்): ஹிஸ்டாரிகல் எவிடென்ஸ்படி இந்த ஏரியாவை லொகேட் பண்ணிட்டோம். இந்த map படிதான் escavate பண்ணப் போறோம். Any Doubt ?
உதவியாளர் : நத்திங் சார்.
அகழ்வாராய்ச்சி நடக்கிது. நண்பன் நரேஷ் பதட்டப்படுகிறான்
ரிஷி : என் மேல் நம்பிக்கையில்லையா நரேஷ் ?
நரேஷ் : அதுக்கில்லே ரிஷி. ரெண்டுமாசமா ஆச்சி. particularஆ ஒரு sculptureஐ தேடுறது ரொம்ப ரிஸ்க். கொஞ்சம் மிஸ் ஆனாலும் எல்லாமே வேஸ்ட்டா பொயிடும்.
ரிஷி : ஒவ்வொரு ஸ்டெப்பா பாத்துப் பாத்து சக்ஸஸ் பண்ணியிருக்கேன். நான் இதை யோசிச்சிருக்க மாட்டேனா ? Please co-operate with me. – ரிஷிக்கு கோபம்
தோண்டுகிறார்கள். வயலின்கள் ஒன்றாக எழுந்து பீறிட , ‘நவரோஹினி ‘ கண்டுபிடிக்கப்பட்டதும் பியானோ மென்மையாக ஒலிக்கிறது. பிரஷ்கள் மூலம் துகள்கள் துடைக்கப்பட்டு , ஜொலிக்கிறாள் நவரோஹினி!
ரிஷி : அந்த மன்னரோட பெயர் இருக்குதாண்டு பார்ப்போம். பட் அதே நவரோஹினி சிலைதான்.
தயாரித்த மன்னரின் பெயரும் சிலையில் இருந்தவுடன் ‘ஹே…. ‘. எங்கும் உற்சாகம். குழுவில் இருந்த Mr.Rன் முகம் மட்டும் இருளடைகிறது.
IV : ரிஷியின் காதலி ஸ்வேதா முகத்தில் பெருமிதம். ரிஷியிடம் சொல்கிறாள் : நாலு மாசம் ஆயிடிச்சில்லே.. ?! ஷேவ் கூட பண்ணலையே. ரொம்ப கஷ்டப்பட்டே..
ரிஷி : அதுக்குள்ள பலன்தான் கெடைச்சிடும்லே
ஸ்வேதா : அப்படி என்ன ரிஷி அந்த சிலையிலே இருக்கு ?
V : Good Question! – தன்னால் ‘கண்டுபிடிக்கப்பட்ட ‘ நவரோஹினி சிலை பற்றி , ரிஷியின் குழுவில் இருந்த Mr. R மிகப் பெருமையாக விவரிக்கிறான் பத்திரிக்கையாளர்களிடம் : இது பழங்காலத்து சிற்பம்ங்குறதை விட இது ஒரு காதல் சின்னம். நலங்கிள்ளிங்குற மன்னன் தன் காதலிகெட்டே இந்த சிலையைக் கொடுக்குறதுக்கு முன்னாடி போரிலே ஊரே அழிஞ்சி போயிடுச்சி. அந்த சிலையை மக்கள் பாக்குறதுக்கு நான் காரணமா இருக்கனும்டு நெனச்சேன். That ‘s all.
VI : a) ரிஷியிடம் அவன் காதலி : எப்படி கரெக்டா இந்த இடம்தாண்டு கண்டுபிடிச்சே ? b) நவரோஹினி சிலை மிகச் சரியாக இருக்கும் இடத்தை (தன் கண்டுபிடிப்பை) அப்பாவித்தனமாக ஒருவரிடம் சொல்கிறான் ரிஷி : ‘என்ன சார் இது!. உங்களுக்கே தெரியலையா ? அந்த இளவரசர் வாழ்ந்த ஊரு மங்களநாதபுரம். இப்ப நாம் மங்களநாதபுரத்தை விட்டு ஏழு கி.மீ தள்ளியிருக்கோம். actualஆ அந்த இளவரசர் இருந்த ஊரு இதுதான். காலப்போக்குல ஆறு போற திசை மாறி மாறி ஊரும் சேர்ந்து பொய்டிச்சி. ok ?
VII : பத்திரிக்கையாளர்களிடம் Mr. R : ok ?
VII : ரிஷி ஒரு கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து அழுகிறான். அருகே ஸ்வேதா. தேற்றுகிறாள் அவனை : எல்லாத்தையும் கேள்விப்பட்டேன் ரிஷி..(வருந்தாதேடா கண்ணா)
எப்படி இந்தமாதிரி ஆளுங்க இருக்காங்கண்டே தெரியலே ஸ்வேதா
விடுங்க ரிஷி. அவன் ஒரு கோழை. தன்னம்பிக்கையில்லாதவன்.
ஆமாமா.. எல்லாமே பொய்டிச்சி, அப்புறம் என்ன ?
ச்சூ, இங்கே தனியாயிருக்காதே, வா என்னோட ரிஷி.
கோயிலைச் சுற்றிவரும்போது ஸ்வேதா ஒரு கேள்வி கேட்கிறாள் : ரிஷி..இந்த கோயில் எந்த பீரியட்லெ கட்டியிருப்பாங்க ?
பல்லவா பீரியட்
எத்தனை சிற்பிகள் சேர்த்து கட்டியிருப்பாங்க ? சொல்லு ரிஷி
ம்..என்ன ஒரு ஐநூறு பேரு சேர்ந்து கட்டியிருப்பாங்க
ஏன் ரிஷி, யாருமே தான் செதுக்குன எதிலேயுமெ தன்னோட பெயரை போட்டுக்கலை ? அவங்க யாருண்டு தெரியாமயே பொய்டிச்சி!- ரிஷியை திகைக்க வைத்த கேள்வி. அவன் யோசிக்க ஆரம்பிக்கிறான்.
ஸ்வேதா தொடர்கிறாள்: ofcourse, ராஜாவுக்காகண்டு சொல்லலாம். ஆனா அடிமையா வொர்க் பண்ணியிருந்தா இவ்வளவு பியூட்டிஃபுல்லான ரிஸல்ட்-ஐ கொடுத்திருக்க முடியாது ரிஷி…முகம் தெரியாத எத்தனையோ சிற்பிகள்! பெயர், புகழை விட கலையைத்தான் மதிச்சிருக்காங்க. படைப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. ஏன், இப்பல்லாம் தாஜ்மஹால் மாதிரியோ மஹாபலிபுரம் மாதிரியோ உருவாக முடியிறதில்லே ? நீங்க நினைக்கிற மாதிரியே எல்லாமே பெயர் , புகழுக்கு ஆசைப்படுறவங்க! இவ்வளவு ஏன், நீங்க கண்டுபுடிச்ச சிலையே யாராவது செஞ்சதுதானே ? ஆனா கண்டிப்பா அவங்களே பெயர் போட்டிருக்க மாட்டாங்க. படைப்புதான் ரிஷி காலம் கடந்து நிற்கும். ரிஷி, உங்க லட்சியம் இந்த கோயில் கட்டுற மாதிரி பெருசா இருக்கனும். டியூப் லைட்-ஐ போட்டுட்டு அதுலெ ‘உபயம் ‘ம்டு எழுதுற மாதிரி இருக்கக் கூடாது. தொல்பொருள் ஆராய்ச்சிக் கலையே உங்கள்ட்டே இருக்கு. வேறென்ன வேணும் ? இது ஒரு எக்ஸ்பீரியன்ஸ். Like your Job, Do your Job!
VIII : ரிஷியின் முகத்தில் தெளிவின் வெளிச்சம்.
***
பத்துநிமிட குறும்படம் முடிந்து விட்டது. சுருக்கமாகச் சொல்ல அதிகமாகவே சிந்தனை செய்ய வேண்டும். திடாரென இயக்குநருக்கு தன் படத்தின் தலைப்பு ஞாபகம் வந்து விடுவதால் ‘இப்போது பெயரும் புகழும் தொல்பொருள் துறையில் சுவடுகளாக அவனை பின் தொடர்கின்றன ‘ என்று நொடியில் ஒரு கார்டு போட்டுத் தொலைக்கிறார். அட ஏங்கப்பா…
‘இதுவரை யாரும் செய்திராத அரும்ம்முயற்சி ‘ என்கிறார்கள் நிகழ்ச்சி பற்றி. பாடல்கள் ஒளிபரப்ப பணம் வேண்டுமென்று ஆரம்பத்தில் சினிமாத் துறையினரை நெருக்குவது போல் நாடகமாடி தனியார் தொலைக் காட்சிகளை வளர வைத்ததில் இந்த பொதுத்துறை ஒளி பெருக்கோபெருக்கிகளுக்கு அரும்பெரும் பங்கு உண்டு. ஆனாலும் , நம் இளைஞர்களின் ‘முதல் முயற்சிக ‘ளுக்கு ஆதரவு கொடுக்கும் இவர்களுக்கு நாமும் ஆதரவு கொடுக்கவே வேண்டும். எனவே டி.வி பார்க்கும்போது, அணில்மார்க் சேமியாவில் ஆச்சி மசாலா கலந்தபடி மான் மார்க் அப்பளம் பொரிக்கவோ, துபாய் ‘ஜொலிலினா ‘ கடையில் ஊர் மச்சிகளுக்கு உள்பாவாடைகள் வாங்குவது பற்றி யோசிக்கவோ கூடாது.
எப்போதாவது நல்ல விஷயங்கள் , அப்புறம் பாரம்பரிய கலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தவிர மற்ற தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் எல்லாம் அப்படியே அசட்டு ‘மண் டி.வி ‘க்களைத்தானே ஒத்தி எடுக்கின்றன என்ற ஆதங்கம் எனக்குண்டு. ‘அன்பே சிவம் ‘ பாட்டு போடுங்கய்யா. அப்படியே தூங்கப் போறேன் ‘ என்றார் ஒரு கிழவர் – ‘ஹலோ உங்களுடன் ‘ நிகழ்ச்சியில். ‘பொதிகை ‘ போட்ட பாட்டு : ‘இடுப்போர மச்சம் காட்டவா ? அ, அப்புறமா —- காட்டவா ? ‘. உச்சம்! கிழவர் தூங்கியிருப்பார் என்றா நினைக்கிறீர்கள் ? பாவம் பாட்டி !
விஷயத்திற்கு வருகிறேன், கடந்த 10.02.2005 அன்று – வியாழன் இரவுதான் – மேற்சொன்ன குறும்படத்தைப் பார்த்தேன். அந்த அழகான காதலி நீளமாக வசனம் பேசும் நேரத்தில் வந்த எரிச்சலுக்கு அளவேயில்லை. இதை , சிலை பற்றிய விபரம் கொடுப்பதில் காட்ட வேண்டும். அதென்ன, சுனாமி முடிந்து வெளிவருவது போல் ‘டபக் ‘ கென்று வருகிறது! இன்னொன்று… ஏன் இந்த காதலிகள் சொன்னால் மட்டும் கதாநாயகர்கள் உடனே ஒத்துக் கொள்கிறார்கள் ? எனக்கோ என் துபாய் காதலியைப் பார்த்தாலே அவளின் sandwichதான் ஞாபகம் வருகிறது. Obsession ? காதலி என்று துபாயைச் சொன்னேன். துபாயும் ‘நவரோஹினி ‘தான். ஒம்பது வியாதி உள்ளவ!
‘சுவடுகள் ‘ ஐ எழுதிய இயக்கியவர் கோழிக்குஞ்சு மாதிரி நடுங்கிக்கொண்டே ‘karmany evadhikaras te / ma phalesu kadacana / ma karma-phala-hetur bhur / ma te sango ‘stv akarmani ‘ என்று கீதோபதேசம் சொன்னதற்காக (இந்த வயசிலெல்லாம் ஆன்மிகம் தேவையா தம்பி ?! ) இந்தக் கட்டுரையில் அவரின் பெயரை போடாமலிருந்து விடலாமா ? வெறும் தட்டச்சு மட்டுமே தெரிந்த எனக்கே ‘பொகல் ‘ கேட்கும்போது அவருக்குக் கண்டிப்பாக தேவைப்படும். எனவே தலைப்பு ‘ஷண்முகத்தின் ‘ என்று வருகிறது. உழைப்பென்றால் பலன் வேண்டும். காசு அல்ல பலன். அங்கீகாரம். பெயர். ரொம்ப லேட் , இல்லே ?!
‘ ‘டேய்..ஒரு பய மதிக்க மாட்டாண்டா இந்த பட்டணத்துலே..வண்டிக்காசுக்குக் கூட கடன் வாங்கிட்டுத்தான் வருவே ‘ என்று , டைரக்டராக ஆசைப்படும் ரவியிடம் அவரது அப்பா சொல்லும் நிழல்கள் படத்து நிஜம் ஞாபகம் வருகிறது.என் இனிய தமிழ் மக்களே ஏ ஏ….அந்த சிங்காரச் ச்சென்னையில் உட்கார்ந்து கொண்டு எதையோ சாதிக்க தாடியுடன் களமிறங்குகிறார்கள் நம் இளைஞர்கள். சும்மா பெர்க்மான், ரோஷமான் என்று உதார் விட்டுக்கொண்டு வானம் பார்க்காமல் , வேலை செய்ய ஆரம்பித்தால் இவர்கள் நாளை மகேந்திரனாகவோ பாலு மகேந்திராவாகவோ வர வாய்ப்பிருக்கிறது. ஏன், சமகால நிகழ்வுகளின் கொடுமைகள் பற்றியும் கூடவே சிந்தித்தால் ஆனந் பட்வர்த்தன் மாதிரி கூட வரலாம்.
இதற்கு முதல் வாரம் ஒளிபரப்பிய வேறொரு குறும்படத் திறனாய்வு நிகழ்ச்சியில் இதே விருந்தினர் சொன்னார்: ‘நிச்சயமா இப்ப உள்ள (சென்னை) திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சிந்திக்கிறதே இல்லே. முடியாதுண்டு சொல்லலே, சிந்திக்கிறதில்லை! ‘
எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஃபேமிலி என்கிற பேமுழி டிராமா போல இருந்தாலும் அவரை அன்று கதையின் முடிவில் ஆச்சரியப்படுத்திய ராஜ்குமார் (இயக்குநர் : ‘பின்குறிப்பு ‘) போன்றவர்களிடம் நம்பிக்கை இருக்கிறது. நம் இளைஞர்களை நாம் பாராட்டாமல் யார் பாராட்டுவது ? இட்டாலியோவ்ஸ்கியா ? தவிரவும், புரட்சிக் கரடிகளையும் தாலி காத்த நீலி அம்மன்களையும் வைத்து அவர்கள் சினிமா எடுப்பதற்கு முன் இப்போதே பாராட்டி விடுவது நல்லது.
சிந்திக்கும் அந்த சிறப்பு விருந்தினரின் பெயர்: லியாகத் அலிகான். இதுவரை ஆறு படங்கள் இயக்கி 35 படங்களுக்கு வசனம் எழுதியவர். இரண்டு மணி நேர சினிமாவில் மூன்று மணி நேரம் அனைவரையும் பேச வைத்து பல திரைகளை எரிய வைத்தவர். தீவிரவாதி என்றாலே இஸ்லாமிய பட்டான்கள்தான் என்று சொல்லும் படங்களில் அவரது வசனங்களால் கொட்டகைகள் கூட எரியும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ‘கூடாரங்கள் தனித்தனியே கிடக்கட்டும்; இதயங்கள் மட்டும் இணைந்தே இருக்கட்டும் ‘ என்ற நாயகம் (ஸல்) பற்றி அறியாதவராக இருக்க மாட்டார்தான். ஆனால் எது இவரைப் போன்றவர்களையெல்லாம் தனக்குத் தேவையாக உபயோகப் படுத்திக் கொள்கிறது அல்லது இவர் அதை உபயோகப் படுத்திக் கொள்கிறாரா என்பதெல்லாம் எனக்கு விளங்காத புதிர். புதிரல்ல; அப்படித்தான் சொல்ல வேண்டும். அதுவே கண்ணியம்.
சரிதானே கேப்டன் ?
‘சுவடுகள் ‘ கதையிலிருந்து லியாகத் அலி கான் கண்டுபிடித்ததையும் சொல்லி விடுகிறேன். அது: ‘ஏற்கனவே ஒருத்தன் கண்டுபிடிச்சதை அது எங்கே இருக்குண்டு கண்டு பிடிக்கிறதை விட நாம புதுசா கண்டுபிடிக்கனும்! ‘ .
கதையை புரிந்து கொண்டாரா அவர் ? சரியாகப் புரிந்து கொண்டதாகத்தான் தெரிந்தது. அவர் சொன்னார் : ‘நெறைய விஷயங்கள் இப்படித்தான் நடந்துக்கிட்டிருக்குது. சாதிக்கிறவன் ஒருத்தன்; பெயர் வாங்குறவன் வேறொருத்தனா இருக்கான். இதை எச்சரிக்கிற மாதிரி , இப்படிலாம் நீங்க ஏமாந்திடாதீங்கண்டு சொல்றமாதிரி இந்த படம் பயன்படும் இல்லையா ? அந்த உத்வேகம் வரும் இல்லையா ? இந்த படத்துலெ வர்ற ஹீரோ மாதிரி நாம ஏமாந்திடக் கூடாது; விட்டுடக் கூடாது; நம்ம உழைப்புக்கு உண்டான பலன் நிச்சயமா நமக்கு கெடைச்சாகனுங்குற உங்க ஆதங்கம் மாதிரி படம் பாக்குற எத்தனை இளைஞர்களுக்கு வரும் ? அந்த இளைஞர்களைத் தட்டி எழுப்புற படமா இது இருக்கலாம் இல்லையா ? ‘.
ஆனால், நம்ம பசங்களின் ‘முதல் முயற்சி ‘ மட்டும் அவ்வளவாக பாதிக்கவில்லை அவரை . ‘நீங்க எடுத்துக்கிட்ட மேட்டர், வாழ்க்கையோட ஒன்றியதில்லேண்டு நெனைக்கிறேன். சமகால நிகழ்ச்சியா இல்லை. இது ரொம்ப rareஆ நடக்குற வெஷயம் தம்பி ‘ என்றார்.
பார்வையாளராக வந்த ஒரு இளைஞன் மட்டும் கோபப்பட்டான். ‘பெரிய உறுத்தல் என்னாண்டா.. அவன் மூணு மாசமா உழைச்சிருக்கான். அவன் உழைப்பை ஒருத்தன் வெக்கமே இல்லாம திருடிட்டான். அவனுக்கு தண்டனை ஒரு ஒரு வரியா ?! ‘ என்றான். மற்றவர்கள் இளைஞர்களின் கூட்டணியைப் பாராட்டினார்கள்.
எனக்கு உடனடியாக அப்போது ஞாபகத்திற்கு வந்தது : ‘வைஷாலி ‘தான். மிகவும் பிடித்த பரதன் – வாசுதேவன் நாயர் – மது அம்பாட் அணியுடன் பாம்பே ரவியும் தேனாய் பாடல்கள் கொடுத்து அசத்தியது. நம்பிக்கைத் துரோகத்தை எத்தனை அற்புதமாகச் சொன்ன சினிமா அது! கீதாவின் துயர முகம் நெஞ்சிலேயே நிற்கிறது. வைஷாலிக்கும் அவள் தாய்க்கும் (கீதா) மன்னன் செய்யும் துரோகத்திற்குப் பின்னணியைத் தோண்டினால் ராஜகுருவின் நரித்தனம் தெரிந்தாலும் என்னைப் பாதித்தது மன்னனின் பச்சைத் துரோகம்தான்.
இதை ஒரு நண்பரிடம் சொன்னேன். இவர் சொல்லித்தான் M.ஜெயச்சந்திரன் கிறங்கடிக்கும் ‘பbரஸ் பbரஸ்.. ‘ கேட்க முடிந்தது. ஆசியாநெட்டின் ‘நம்மள்தம்மில் ‘ , பி.பி.சி என்று கேட்பவராதலால் அவர் மீது மதிப்புண்டு. ‘உளராதியும். தன்னோட மகள் வைஷாலிதாங்குற உண்மையை எல்லாருக்கும் சொல்றேன்னு வாக்கு கொடுத்துட்டு மன்னன் மீறுனான். அவ்வளவுதானே ? அவன் மகளை தன் மகள்ண்டு குரு சொன்னாக்கா, அது பேருதாங்கனி துரோஹம் ‘ என்றார்.
இந்த முட்டாளுக்கு விளங்கவில்லை.
‘M.S. விஸ்வநாதன் போட்ட சில ட்யூனுக்குல்லாம் தன்னோட பேரை போட்டுக்கிட்டாரே S.M சுப்பையா நாயுடு. அது! ‘ – விளக்கினார். ‘ஆனா கடைசி காலத்துலே அத ஒத்துக்கிட்டு எல்லார்ட்டேயும் சொன்னார் ‘ என்று முடித்தார்.
துரோகத்தின் சுவடுகள் பதியாத துறையே இல்லை போலிருக்கிறது. ஆனால் கோபம் வரவில்லை; தன்னை உற்றுப் பார்த்த அவர் மேல் மரியாதைதான் வந்தது. எவ்வளவு கனிந்த இதயம்!
‘பொதிகை ‘ முயற்சிகளை அனைவரும் வரவேற்க வேண்டும்.
***
நன்றி : ‘பொதிகை ‘ , பி.பி.சி ‘தமிழோசை ‘ (பாட்டொன்று கேட்டேன் – 22ஆம் பாகத்திற்காக), லியாகத் அலி கான் , ஷண்முகம் மற்றும் அவர் குழுவினர்.
பி.கு : சமயம் பார்த்து எனது எலக்ட்ரானிக் மலக்குகள் கழுத்தறுத்ததால் (அதுதானே அவர்களின் வேலையே!) குட்டி ஷைத்தானான MuVoவில் பதிவு செய்ததைக் கேட்டு ‘சுவடுகள் ‘ நிகழ்ச்சியை எழுதியிருக்கிறேன். இதனால் , துரோகம் செய்தவரின் பெயர் குழப்பம் எனக்கு நீங்கவில்லை. ஆனால் துரோகம் மட்டும் நிச்சயம்!
E-Mail : abedheen@yahoo.com
Web : http://abedheen.tripod.com/
- கடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா
- கோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் ?
- சரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்
- எர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி
- பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி! பூகோளக் கடற்தளங்கள் நீட்சி! (Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2]
- யார் செய்யிறது, யார் பேர் வாங்குறது ? (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)
- பெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –
- கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா
- கோட்டல் ருவண்டா
- ஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்
- பி.ஏ கிறிஷ்ணனின் புலிநகக்கொன்றை
- கடிதம் பிப்ரவரி 25,2005
- வருத்தமுடன் ஓர் கடிதம்
- அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…
- ஞானவாணி விரூது 2004
- கடிதம் பிப்ரவரி 25,2005
- கடிதம் பிப்ரவரி 25,2005
- கடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு
- ரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005
- குறும்படப்போட்டி
- சிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்
- சிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சக்தி
- நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா
- சன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘!
- கலைஞன்.
- பறவைகளும் துப்பாக்கிரவைகளும்
- ஐூலியாவின் பார்வையில்….
- து ை ண :4 ( குறுநாவல்)
- பேஜர்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)
- தண்டனை.
- மேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்
- தமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்
- தமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்
- தமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.
- அறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)
- கனவுகள் கொல்லும் காதல்
- சூடான்: தொடரும் இனப் படுகொலை
- சிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்
- புறாக்களுடன்.
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)
- கீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- நவீனத்தின் அளவு
- நம்பிக்கை
- பார்க்கிறார்கள்
- சுகிர்தங்கள் புலரும் கனவு
- பெரியபுராணம்- 30