எம் வேதசகாயகுமார், முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் தமிழ்துறை, திருவனந்தபுரம் பல்கலை கழகம்.
சென்ற இதழில் ரவி சீனிவாஸ் பற்றிய என் குறிப்பை சிலருக்கு அனுப்பியியும் நேரிலும் பல நண்பர்களுடன் விவாதித்தேன். திண்ணை இதழில் வெளிவந்த பிறகு பல நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு இது பற்றி தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள் . என் கணனிக்கு மிக அதிகமான கடிதங்கள் வந்தன. இந்த விஷயம் சார்ந்து ஆதங்கமும் கோபமும் பலருக்கும் இருப்பதனை உணர்ந்திட முடிகின்றது .ஆனால் இத்தகைய விவாதங்களில் காணப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் கல்வித்துறையினரால் தாங்கக் கூடியதாக இல்லை. ஆகவே தங்களுக்குள் பேசியபடி மெளனம் சாதிக்கின்றார்கள்.
நான் எழுதிய விஷயத்தினைக்குறித்து மேலும் சில தெளிவுகளை முன்வைக்கலாமென்று சிலர் கோரினர். திரு ரவி சீனிவாஸ் அவர்கள் சற்று புண்பட்டு இவ்விதழுக்கு ஒரு பயங்கரமான கடிதம் எழுதக் கூடும் என அவதானிக்கின்றேன். அதன் உள்ளடக்கத்தையும் ஒருவாறு ஊகித்திட முடிகின்றது . அது நான் என் துறையினில் மேற்கொண்டு படித்திடவேண்டிய நூல்களின் பட்டியலும் , கல்வித்துறை இலக்கியவிமரிசனம் என்றால் என்ன என்பது குறித்து சில புதியமேலைநாட்டு நூல்களின் உதவியுடன் எனக்கு ஒரு ஆரம்பப் பாடமுமாகவே அமையுமென எண்ணுகின்றேன். இங்கே விஷயங்களெல்லாம் அப்படித்தானே நடந்துவருகின்றன.
திரு ரவி சீனிவாஸை புண்படுத்திடும் நோக்கம் எனக்கில்லை என்பதனை தெரிவித்துக்கொண்டு, அப்படி அவர் எண்ணினாரென்றால் அதற்கான மனமார்ந்த மன்னிப்பினையும் கோருகின்றேன். ஆகவேதான் முன்கூட்டியே இதனை எழுதிடநேர்ந்தது. பொதுவாக பல்வேறு உலகவிஷயங்கள்பேசப்படாத தமிழ்ச்சூழலிலே அவரைப்போன்று அர்ப்பண உணர்வுடன் ஒருவர் தொடர்ந்து நிறைய எழுதுவது உதவியானதென்றுதான் எண்ணுகின்றேன். பல்வேறு துறைகளில் என்ன நடக்கிறதென்ற பொதுவான புரிதலினை அது உருவாக்கும் . அவர் தன் எல்லைகளினைப்பற்றிய ஒரு தெளிவினை அடைந்திடவேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம். இலக்கியவாதிக்கு இலக்கியம் சொல்லிக் கொடுக்கவும், சமூகவியலாளனுக்கு சமூகவியல் சொல்லிக் கொடுக்கவும் ஓரிரு நூல்களைபடித்த வேகத்தில் அவர் முனைவது சரியல்ல அவ்வளவுதான். மற்றபடி அவரது குறிப்புகள் மிக நனறாக உள்ளன.
**
பல வருடங்களுக்கு முன்னர் நாகார்ச்சுனன் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் மொழியியல் மாணவர்களிடையே உரையாற்றும்படி அழைக்கப்பட்டிருந்தார் . பின் அமைப்பியல் மற்றும் தெரிதா பற்றி அவர் பேசினார் . ஆனால் ஆரம்பகட்ட மொழியியல் மாணவர்கள் கேட்ட எளிய வினாக்களைக் கூட அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. அவர் மொழியியலின் அடிப்படைகளை கற்றிருக்கவில்லை எனபதும் பல சிக்கல்களை உணர்ந்திருக்கவில்லை என்பதும் பல கருத்துக்களின் முன் தொடர்ச்சியினை அறிந்திருக்கவுமில்லை என்பதும் தெரியவந்தது. கல்வித்துறையினைப்பற்றிய நாகார்ச்சுனனின் சில எதிர்மறைக்குறிப்புகளால் கோபம் கொண்டிருந்த மொழியியலாளர்கள் அதனை நன்கு கொண்டாடினார்கள். நாகார்ச்சுனன் சற்று மனம் சோர்ந்திருக்கக் கூடும். தன் நூலை திரும்பபெற்றுக் கொண்டுவிட்டதாக அவர் பின்னர் சொன்னதாக அறிந்தேன். அந்நூல் கிடைப்பதுமில்லை. இவ்வகை விமரிசனத்திலிருந்தே அவர் விலகிக் கொண்டார்.ஆனால் அவர் கருத்தியல்சார் இதழியலில் ஒரு துறைநிபுணர் என்று பிறகு சொல்லப்பட்டது. அத்துறையில் மேலும் தீவிரமாக ஈடுபட்டு இன்று அத்துறையின் முக்கியமான சிலரில் ஒருவராக இருக்கின்றாரென்றும் அறிந்தேன். அவரது நூலில்கூட கருத்தியல்சார் இதழியல் கட்டுரைகள் , புறப்பாடு இதழில் அவர் எழுதியவை, முக்கியமானவையே ஆகும் . நாகார்ச்சுனன் தெரிதாவை படித்ததும் பேசியதும் தவறா என்ன ? இல்லை . அவர் தன் எல்லைகளை உணர்ந்து அதன் அடிப்படையிலே பேசியிருக்கவேண்டும் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்.
ஒருவர் பேச ஆரம்பிக்கின்ற போது எந்த தளத்தினில் நின்று பேசுகின்றார் என்பதனை தெளிவுபடுத்திடவேண்டும் – அதாவது துறைசார்ந்த நிபுணராகவா இல்லை பொது அறிவுஜீவியாகவா ? அடுத்தபடியாக எவரிடம் பேசுகின்றோம் என்று பேசுபவரே முன்னரே வரையறை செய்திடவேண்டும்.. மூன்றாவதாக ஏன் ஒன்றை பற்றி பேச முற்படுகின்றோம் என்று ஒரு தெளிவு அவருக்கு இருந்திடவேண்டும். . இத்தெளிவுகள் இல்லாத நிலையினில் பேசும்போதுதான் பொதுவாக நாகார்ச்சுனன் ஆற்றியதுபோன்ற குழப்பம் மிக்க நிலை உருவாகின்றது. ரவி சீனிவாஸ் இங்கு நிகழ்த்திக் கொண்டுப்பனபோன்ற அத்துமீறல்களும் நேர்கின்றன..
துறைசார்ந்த நிபுணராக பிற அறிஞர்களிடம் விவாதிக்கிறீர்கள் என்றால் நீங்கள் முதலில் துறை சார்ந்த முறையான படிப்பு உடையவராக இருந்திடவேண்டும். கல்வித்துறைசார் இலக்கியவிமரிசனம் குறித்து என்னிடம் அதிகாரபூர்வமாக பேசிட முன்வரக்கூடிய ஒருவருக்கு முனைவர் பட்ட தகுதி இருந்திடவேண்டுமென்றே நான் எதிர்பார்ப்பேனென்றால் அதில் பிழையில்லை . இது ஏன் என்று சிலர் வினவினார்கள். கல்வியின் முறைமை [ கரிக்குலம்] என்பது புறக்கணிக்கக் கூடிய விஷயமல்ல என்பதை நம் சூழலில் இன்று மிகமிக வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கின்றது. உளவியல் பயிலாத ஒரு வாசகருக்கு ஃப்ராய்டின் சில கட்டுரைகள் , யுங்கின் சில கருத்துக்கள் என்று தெரிந்துகொள்ளும்போது உற்சாகம் ஏற்படுகின்றது. நடுநடுவே தெரியாத சிலவற்றை அவரே ஊகிக்கும்போது அந்த உற்சாகம் ஏறுகின்றது, தன்னம்பிக்கையும் உருவாகின்றது. ஆனால் முறைப்படியான உளவியல் கல்வியானது அந்த அளவுக்கு விறுவிறுப்பானதாக இராது. அதிலே நாம் அடிப்படை விதிகளையெல்லாம் உட்கார்ந்து மனப்பாடம் செய்தாக வேண்டும். உப்புசப்பில்லாத தகவல்களை முழுக்கவே நினைவுக்குள் நிறுத்திடவேண்டும். [இலக்கியத்தில் பட்டப்படிப்பு படிக்கையில் நன்னூலை பயில்வது ஒரு தாங்கமுடியாத இம்சைதான். ] ஆனால் அவையெல்லாம் இன்றியமையாதனவும் அடிப்படைத்தகுதியினை உருவாக்குவனவுமாகும்.
உதாரணமாக உளவியல்கல்வியில் உளவியலின் முழுமையான வளர்ச்சி வரலாறு, அதன் பல்வேறு உட்கூறுகளைப்பற்றிய விரிவான தகவல்கள் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. நரம்பியல் போன்ற உளவியலின் சக அறிவுத்துறைகள் கற்பிக்கப்படுகின்றன. அடிப்படைக் கருத்துக்களைப்பற்றிய கூட்டு விவாதங்கள் நிகழ்த்தப்படுகின்றன. களப்பணிக்கு சென்று தரவுகளை நேரடியாக சேகரிக்கும் பயிற்சி கிடைக்கிறது .இவ்வாறு உளவியலை படித்த ஒருவர் , அவரது படிப்பு எந்த அளவுக்கு சாதாரணமாக இருந்தாலும் சரி, படிக்காத அதிபுத்திசாலியினை விட தெளிவானவரேயாவார் . அவர் ழாக் லகானின் ஒரு நூலினைப் பயின்று கருத்து சொல்வதற்கும் ஆர்வம் காரணமாக ஒருவர் அதனை படித்துப் பார்ப்பதற்கும் பெரும் வேறுபாடு உண்டு என்பது கண்கூடு. பிந்தையவர் ஒரு சிறு விடுதல் காரணமாக மிக பிழையான புரிதலினை அடைந்திடக் கூடும். அது தொடர்ந்து நிகழ்கின்றது, தமிழில் அதற்கு ஏராளமான உதாரணங்களை நான் சொல்லிட முடியும். சரியாகச் சொல்வோமென்றால் , ஆசிரியன் என்ற நிலையில், எனக்குப் படுவது என்னவென்றால், முறையான கல்வியின் முக்கியத்துவமே அது கறாரான புரிதலினை மட்டும் வலியுறுத்தி , எல்லைமீறிய சிந்தனை ஓட்டத்தினை மட்டுப்படுத்துகின்றது என்பதுதான்.
முறையான கல்வியில் மேலும் முக்கியமான விஷயம் என்னவெனில் அந்த அமைப்புதான் . எனக்கு பேராசிரியர் சி.ஜேசுதாசன் ஆசிரியராக அமைந்தார். அவர் எஸ்.வையாபுரிப்பிள்ளை கா.சு.பிள்ளை ஆகியோரின் மாணவர். அவரது இடத்தை நான் பெரிய நூலகங்களைவைத்துக் கூட நிரப்பிக் கொள்ளல் இயலாது. இலக்கிய விமரிசனத்தில் ஆயிரம் நூல்களை பயில்வதனைவிட ஒரு நல்ல ஆசிரியன் கீழே வேலைசெய்வது மேலானது என்பதனை அனுபவித்தவர்கள் அறிவார்கள் . கல்லூரி, பல்கலை போன்ற அமைப்புகளே இதற்கென உருவாக்கப்பட்டுள்ளவைதாம். இல்லையேல் நூலகமும் மின்னஞ்சலுமே போதுமே. ஒரு துறையின் முறைமையினை வெளியாள் ஒருவர் கற்று திறம்பட செய்ய இயலும் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. உதாரணமாக சிட்டியும் சிவபாத சுந்தரமும் சேர்ந்து எழுதியுள்ள ‘தமிழ் சிறுகதை வரலாறு ‘ ‘தமிழ் நாவல் வரலாறு ‘ போன்ற நூல்களினைக் குறிப்பிடலாம். ஆனால் அவர்களுக்கு கூட துறைசார்ந்த அமைப்பு ஒன்றின் உதவி இல்லாமை மிகுந்த போதாமையையும் அளிக்கின்றது. உதாரணமாக அவர்கள் தங்கள் நூல்களில் ஆ.மாதவன் என்ற மிக மிக முக்கியமான பெரும் படைப்பாளியை விட்டுவிட்டார்கள். அந்த நூல் ஒரு முனைவர் பட்ட ஆய்வேடாகச் சென்றிருந்ததெனில் அப்பிழையை சுட்டிக் காட்ட ஓர் அமைப்பு அங்கே உள்ளது அல்லவா .
துறைசார்ந்த அறிஞனாக பொது வாசகனிடம் பேசுவதாக இருந்தால் நமது ஆய்வுகளிலும் நாம் உண்மைகளை எடுத்துக் கொள்வதிலும் முறைமை செயல்படவேண்டும் . ஆனால் நமது வெளிப்பாட்டுமுறையானது பொதுவான மொழியிலும் பொதுவான தர்க்கத்தை கூடுமானவரை ஒட்டியும் இருந்திடவேண்டும். என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேடு முழுத்தாளில் அச்சில் 790 பக்கம் ஆகும். கட்டுரையினைவிட அடிக்குறிப்புகளின் நீளம் அதிகம். ஆனால் அது தமிழினி வெளியீடாக பொதுவாசகனுக்காக வெளியிடப்பட்டபோது கால்பங்காக 200 பக்க நூலாகியது. ஆய்வேடுகளுக்கு ஒவ்வொரு சொல்லையும் தெளிவாக வரையறை செய்து எழுதவேண்டியுள்ளது . சொற்றொடர்களை ஒன்றுக்கொன்று திட்டவட்டமாக இணைக்கவேண்டும். ஊகங்களுக்கும் புரிதல் திரிபுகளுக்கும் இடம் தரலாகாது . சிறு முற்கருத்துக்குக் கூட மூல ஆதாரம் காட்டவேண்டும். இவ்வாறு ஓர் பொதுக்கட்டுரையை எழுதுவது பொதுவாசகனுக்குச் செய்யும் சித்திரவதையாகும். . அதை வாசகனிடம் பொதுவாகப் பேசும்பாணியிலேயே அமைத்திடவேண்டும் . பதிப்பாளர் வசந்தகுமாருடன் அமர்ந்து உழைத்து எனது ஆய்வேட்டு மொழி பொதுமொழியாக மாற்றியமைக்கப்பட்டது . எந்த துறைசார்ந்த விஷயத்தையும் துறைகளுக்குரிய தனிமொழியில் ,யாதன் தனிமுறைமையுடன் பொதுவாசகனுக்கு கொண்டுவரலாகாது.
ஒரு துறைசார்ந்த விஷயத்தை பொதுவாசகனுக்காகக் கொண்டுவரும் துறைசார்ந்த அறிஞன் பொது விவாதங்களில் துறையின் முறைமைக்குள் சென்று ஒளிந்து கொண்டும் , துறைசார்ந்த கலைச்சொற்களை தூக்கிபோட்டும், தன் துறையின் தனியான முறைமையை பயன்படுத்தியும் வாசகனை குழப்பவும் மிரட்டவும் கூடாது . ஆய்வேட்டின் முறைமையையும் மொழியையும் கொண்டு பொதுவாசகனை மருட்டி தன் கருத்துக்கு செயற்கையான கனத்தை உருவாக்கிக் கொள்ள முயல்வதை தாழ்வுச்சிக்கலாகவே கொள்ளவேண்டும்.தான் சொல்லவரும் கருத்துக்கு ஒருவித ‘பந்தா ‘ கூட்டவே பலர் இந்த உத்திகளை எல்லா விவாதங்களிலும் கடைப்பிடிக்கின்றார்கள் .அனைத்தையும் விடக் குறிப்பாக தன் துறையின் தனி முறைமைக்குள் வந்து விவாதிக்கும்படி பொதுவாசகனைக் கோருவது அறிவுத்துறைக் கீழ்மையே ஆகும்.,
அடுத்தபடியாக ஒரு துறைசார்ந்த தனிஅறிவானது எதற்காக , எந்த தருணத்தில் பொது வாசகனுக்காக பொதுவான விவாதத் தளத்திலே கொண்டுவரப்படவேண்டும் என்ற வினா முக்கியமானது . அறிவுதுறைகளுக்குள் பலவிதமான உள்விவாதங்கள் நடக்கலாம். அவை அத்துறையின் அறிஞர்களுக்கு மட்டுமே உரியவை. அவற்றை பொதுவாசகனுக்கு கொண்டுவருவதற்கு தெளிவான நோக்கம் இருக்கவேண்டும். பொதுவான அறிவுச்சூழலில் விவாதிக்கப்படும் விஷயங்களை தெளிவுபடுத்தவும் , விரிவுபடுத்தவும் அந்த புதிய அறிவு பயன்பட வேண்டும். ஒரு போதும் அந்த துறைசார்ந்த அறிவை வைத்துக் கொண்டு பொதுவாசகனைவிட அதிகமாக அறிந்தவன் நான் என்று காட்டிக் கொள்ளவோ, அவனை மட்டம்தட்ட முயலவோ கூடாது.
பொது அறிவுத்துறை என்பது பலவிதமான தனி அறிவுத்துறைகளில் ஈடுபடுபவர்கள் ஒன்றாக கூடும் பொது தளம் ஆகும். அங்கே ஒரு துறைசார்ந்த அறிவைக் கொண்டு வரும்போது பல்வேறு விதமான அறிவுதுறைகளின் மாறுபட்ட முறைமைகள் அதன் மீது போடப்பட்டு பலவிதமாக புரிந்துகொள்ளப்படகூடும் . அப்படித்தான் ஒரு துறையறிவு பொது அறிவுக்கு வந்து சேர்கிறது . ஓர் உளவியல் கருத்தை இலக்கியவாசகன் தன் கோணத்தில் புரிந்துகொள்ளக் கூடும். ஒரு பொருளியல் கருத்தை சமூகவியல் கோணத்தில் ஒருவர் புரிந்துகொள்ளலாம். உதாரணமாக இலக்கிய விமரிசனத்திலே திட்டவட்டமான ‘நிறுவல்முறைமை ‘ இல்லை. ஆகவே கருத்துக்கள் அங்கே ‘உண்மை ‘களாக பார்க்கப் படுவது இல்லை. அவை அவதானிப்புகளாக[ அப்சர்வேஷன்ஸ்] மட்டுமே பார்க்கபடுகின்றன . ஈடிஃபஸ் உளச்சிக்கல் போன்ற ஓர் உளவியல் கருத்தை இலக்கியவிமரிசனத்தில் ஒரு அவதானிப்பாக மட்டுமே காண்பார்களேயொழிய உண்மையாக காணமாட்டார்கள் . அப்படித்தான் நடக்கும், வேறு வழியே இல்லை. இப்புரிதல்களின் ஒட்டுமொத்தச் சராசரியாகவே அக்கருத்து பொதுதளத்தில் உருவம் பெறும். தன் முறைமையே சரியானது என்றும் எல்லாரும் இங்கே வந்தாகவேண்டும் என்றும் ஒரு துறைசார்ந்த அறிஞன் பேசுதல் தவறு.
அடுத்தபடியாக ஒரு துறையில் உள்ள ஓரளவேனும் நிறுவப்படாத விஷயங்களை, விவாதத்துகுரிய விஷயங்களை ஒருசார்பாக பொது வாசகனுக்குச் சொல்லலாகாது. உதாரணமாக தமிழவன் ஒரு கட்டுரையினில் ரோலன் பார்த் பால்ஸாக் நாவலை பகுப்பாய்வு செய்து அந்நாவலை சில குறியீடுகளாகவும் வழக்காறுகளாகவும் மாற்றிக் காட்டியதை குறிப்பிட்டு இதோ இலக்கிய படைப்பின் ரகசியமே வெளிப்பட்டுவிட்டது என்று எழுதினார். அவர் அதை வலியுறுத்தி எழுதும் 1984 ல் [ அலை இதழில் வெளிவந்த கட்டுரை. ஆன்மாவும் கணித நிபுணனும்] தெரிதாவின் கருத்துக்கள் வந்து மேற்கே ரோலான் பார்த் முற்றாக மறுக்கப்பட்டுவிட்டிருந்தாரென துறைசார்ந்த அறிஞர்கள் பிற்பாடுதான் சொன்னார்கள் என்பது நம் முன்னுள்ள வரலாறாகும் . மொழியியல் சார்ந்த அணுகுமுறையையே பிராங்பர்ட் பள்ளி மார்க்ஸியர்கள் மறுக்கிறார்கள் என்றும் தமிழவனோ நாகார்ச்சுனனோ சொல்லவில்லை என்பதும் நம் முன்னுள்ள வரலாறே. மேற்கே நிரூபிக்கப்பட்டுவிட்ட கருத்துக்கள் அவை என்றுதான் சொன்னார்கள் என்பதுடன் அதைவைத்து உள்ளூர் விமரிசனங்களை பாடாவதியானவை [ இது தமிழவனின் பிரபலமான சொல்லாட்சி ] என்றும் அறிவிலயலடிப்படை இல்லாத பிற்பட்டகருத்துக்கள் என்றுமெல்லாம் மட்டம் தட்டினார்கள் .பிற்பாடு க.பூரணசந்திரன், நோயல் இருதயராஜ் போன்றவர்கள் மூலம் மெள்ள மெள்ள கல்வித்துறைதான் தெளிவைக் கொண்டுவந்தது என்பதும் வரலாற்றில் உள்ள உண்மையாகும் .
நமது துறை சார்ந்து பொதுவான மொழியிலே பொதுவாசகனுக்கு முன்னிலையினில் பேச வரும்போது நாம் வேறு துறையின் கருத்துக்களையோ சொற்களையோ பயன்படுத்தலாம், பயன்படுத்தாமல் பேச முடியாது . அதன் எல்லை என்னவெனில் அந்தக் கருத்துக்களும் அச்சொற்களும் ஏற்கனவே அவற்றுக்குரிய துறை நிபுணர்களால் பொதுவிவாத தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு பொதுவான தளத்திலே அங்கீகாரமும் சாதாரணமான புரிதலும் புழக்கமும் கொண்டவையாக இருக்கவேண்டும் என்பதாகும் . ‘தாழ்வுணர்ச்சிச் சிக்கல் ‘ என்று சொல்லலாம். அது மிகவும் பழகிப்போன ஒரு சொல்லாட்சிதான். அழித்தெழுதும் பாலிம்ஸெஸ்ட் பிரதி என்றுகூட சொல்லலாம். அதுவும் இப்போது நல்ல இலக்கிய வாசகனுக்குப் பழகிபோனதே. ஒரு சம்பந்தமில்லாத துறைக்குள் போய் புதிய சொல் ஒன்றை பொறுக்கி கொண்டுவந்து போடக் கூடாது. நமக்கு அன்னியமான துறை ஒன்றின் கருத்தை அத்துறை நிபுணனின் ஆதரவில்லாமல் பயன்படுத்தக் கூடாது. இதுதான் எல்லை.
அடுத்த விஷயம், பொதுவான விமரிசனத்திலே வேறு துறையின் சமானமான கருத்தினை உதாரணம் காட்டுவது. அதை சுயமான படிப்பால் நாம் செய்யலாம் . நான் சமூகவியலில் உள்ள ஒரு கருத்தினை என் இலக்கிய கருத்துடன் உவமித்து காட்டலாம். ஆனால் அதை என் ஆய்வுக்கு அடிப்படையாக கொள்ளக் கூடாது. அப்படிக் கொள்வதாக இருந்தால் அந்ததுறையின் முறைமைக்குள் சென்று முழுமையான ஆய்வினை நிகழ்த்தியிருக்கவேண்டும். மனவசியம் செய்யப்பட்ட ஒருவரின் வெளிப்பாடு போன்றதே இலக்கிய ஆக்கமனநிலை என்று ஒரு இலக்கியவாதி உவமை சொல்லலாம். ஆனால் மனவசியத்தைப் பற்றி பேசவேண்டுமென்றால் உளவியலுக்குள் முறைப்படி போக வேண்டும். இலக்கியம் பற்றிப் பேச ஆழ்மனம் என்ற பொதுவான சொல்லை பயன்படுத்தலாம். ஆழ்மனம் என்றால் என்ன என்பதற்கு நம் பொதுவான சூழலில் ஒரு புரிதல் உண்டு. ஆழ்மனதினைப் பற்றி இலக்கியத்தின் கோணத்தில் ஓர் அவதானிப்பையும் அளிக்கலாமெனினும் ஆழ்மனம் பற்றி ஒரு விளக்கமோ வரையறையோ தர முயன்றால் உளவியல் முறைமை வேண்டும். ஜெயமோகன் இலக்கியம் பற்றியே பேசுகிறார். ஒரு படைப்பாளியாகவும் வாசகனாகவும் தன் அவதானிப்புகளை சொல்கிறார். அதை விளக்க உளவியலிலோ மொழியியலிலோ அத்துறை அறிஞர்களால் முறைப்படி பொது அறிவுத்தளத்துக்கு கொணரப்பட்ட சொற்களையும் கருத்துக்களையும் பயன்படுத்துகிறார். இது இயல்பே . அவர் உளவியல் அல்லது மொழியியல் குறித்து தன் சொந்த மதிப்பீடுகளைப் பேசமுயன்றால் அது அத்து மீறலாகும்.
ஒரு கருத்துக்கு பின்னால் உள்ள ஆளுமை, அவ்வாளுமையை உருவாக்கிய பின்னணி எப்போதுமே முக்கியமானதேயாகும். க.நா.சுப்ரமணியம் பெரும்பாலும் நூல்களைப்பற்றிய அவரது வெறும் இறுதியபிராயங்களையே தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளாரெனினும் தமிழில் வலிமையான ஒரு விமரிசன அடிப்படையை அவரால் உருவாக்க முடிந்தது. வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, மு.தளையசிங்கம் ஆகியோர் எழுதிய விமரிசனங்களும் அவர்களின் பின்னணி ஆளுமையால் முக்கியமானவையே ஆகும். அவர்கள் அபிப்பிராயங்களை மட்டிலும் சொன்னார்களேயொழிய முறைமைசார்ந்த ஆய்வையோ மெய்ப்பித்தல்களையோ செய்யவில்லை என்பதை நாமறிவோம். அவர்களுக்கு இலக்கியப் படைப்பில் உள்ள அனுபவமும் விரிவான இலக்கிய வாசிப்பின் பின்புலமும் உள்ளன என்பதனையே அக்கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.ஜெயமோகன் இவர்களின் வரிசையில் வருபவரே. அவருக்கு தமிழ் ,மலையாள நவீன இலக்கியத்திலும் , பண்டைய இலக்கிய மரபுகளிலும் , இந்தியமொழி இலக்கியங்களிலும் செவ்விலக்கியங்களிலும்லுள்ல விரிவான வாசிப்புக்கும் , இலக்கியவாசிப்புக்கு துணைபோகக் கூடிய வரலாறு, தத்துவம், நாட்டாரியல் போன்ற துறைகளில் உள்ள அடிப்படை அறிதலுக்குமுரிய சான்றாதரங்கள் அவரது கட்டுரைகளினில் உள்ளன. அவரது படைப்பிலக்கிய அனுபவமும் நாமறிந்ததேயாகும் . தன் துறையில் கடுமையான உழைப்பு ஆழ்ந்த சிரத்தை ஆகியவற்றின் விளைவாக உருவானவை அவ்வெழுத்துக்கள்
முறைப்படி இலக்கியம் கற்றவன் என்று என்னை கருதும் நான் இவர்கள் கருத்துக்களை என் முறைசார்ந்த ஆய்வுகளில் தீவிரமாக விவாதிப்பதுடன் மாணவர்களுக்கும் பரிந்துரை செய்யவும் செய்கிறேன். ஆனால் இந்த தகுதிகள் ஏதுமில்லாத ரவி சீனிவாஸ் அவர் வாசித்த ஓரிரு புதிய நூல்களின் பலத்தில் இவர்களை மட்டம்தட்டி நிராகரிக்கலாம் என்றும், இவர்களுக்கு இலக்கியம் பற்றி தான் பாடம் நடத்தலாம் என்றும் எண்ணுகிறார். உண்மையில் முறைசார்ந்தகல்வி உடையவன் என்ற நிலையில் இம்மாதிரி அமெச்சூர் முயற்சிகளை நான் கடுமையாக அதட்டி விலக்கவேண்டும். ஆனால் நம் சூழலில் எழுதுபவர்களே குறைவு என்பதனால் எல்லையை உணர்ந்து பேசுங்கள் என்று மட்டும் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.
திரு ரவி சீனிவாஸ் என்ன செய்யலாம் என இக்கட்டுரை தெளிவுபடுத்தியிருக்கும் என்று எண்ணுகிறேன் . இது போன்ற சிறு ஊடகங்களினில் போதுமான அறிமுகமின்றி படிக்கக் கூடிய பொதுவாசகர் சிலரிடம் ஒரு பிம்பத்தை உருவாக்குவதற்கு மேலதிகமென அவருக்கு தீவிரமான ஏதேனும் நோக்கங்களிருக்குமெனில் அவர் எந்த துறையினில் முறையான கல்வி கொண்டவரோ, எந்த துறையினில் தொடர்ந்த பலவருட உழைப்பினை செலுத்தி காத்திரமான அறிதலினை அடைந்துள்ளாரோ ,அந்த துறையினில் அத்துறை நிபுணர்கள் பொருட்படுத்தும் ஆய்வுகளை செய்யலாம். மேலும் அத்துறையின் அறிவை பொதுவாசகர்களுக்காக தன்னடக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் எடுத்துச்சொல்லலாம். அத்துறையில் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையான விஷயங்களினை மட்டும், பொதுவான விவாத தளத்தில் அவை முக்கியமான பயன்களை உருவாக்கும் என்று நம்பிக்கை இருந்தால் மட்டும், கொண்டுவரவேண்டும். அவ்விவாதத்தில் அவருக்கு ஆர்வமுள்ள பிற துறைகளை பற்றிச் சொல்ல நேர்ந்திட்டால் அத்துறையில் உள்ள நிபுணர்கள் அவ்வாறு பொதுவான தளத்துக்குக் கொண்டுவந்தவற்றை மட்டிலுமே பேசிடவேண்டும். தனது துறையை ஆழ்மாக புரிந்துகொள்ள தன் வாசிப்பினை அந்தரங்கமாக அவர் பயன்படுத்துவது வேறுவிசயம்.
நவீன அறிவுத்துறைகள் ஆழம் மிக்கவையும் சிக்கலானவையும் தனிதனியான முறைமை கொண்டவையுமாகும் என்ற புரிதலிலிருந்து இதனை எழுதுகின்றேன். ஜெயமோகன் இந்திய மெய்யியல் பற்றிய தேடலுடன் பலவாறு அலைந்தவர். கல்வித்துறை போலவே முறைமைகொண்ட இன்னொருகல்வி அமைப்பில் [நாராயணகுருகுலம்] பலவருடம் பயின்றவர். இந்திய மெய்யிய துறைசார்ந்தவர்களால் முக்கியமானதெனக் கருதப்படும் ஒர் அறிமுக நூலையும் ஆக்கியுள்ளார். ஆனாலும் அவர் அத்துறையில் அசலான முடிவுகளை முன்வைக்கவும் அத்துறைசார்ந்த ஒருவரை தன்தரப்பில் நின்று மறுக்கவும் இதுகாறும் துணியவில்லை, அதற்கு வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது . கடந்த 30 வருடங்களாக் தென்திருவிதாங்கூர் வரலாற்றினை பயின்று வருகின்றேன் , வரலாற்றாசிரியர் ஆய்வுகளில் உதவியுள்ளேன். ஆனாலும் அவ்வரலாற்றுத்துறையில் ஒரு கருத்தை அசலாக சொல்லவோ ஒரு வரலாற்றாசிரியரை மறுக்கவோ நான் துணிந்திட மாட்டேன். ஓரிரு நூல்களை படித்து உறசாகமும் தன்னம்பிக்கையும் கொள்ளும்போது ஒரு சூழலில் தேவையற்ற குழப்பத்தை விளைவிக்கக் கூடிய நிலையில் நாமிருக்கிறோம் என்பதனை நாம் உணர்ந்திடல் வேண்டும்.
இது என் வேண்டுகோள் மட்டுமே, யாருடனும் மல்லுக்கட்டுதலென் நோக்கமில்லை. இது சிறந்தமரபு, இதை தவிர்த்து தன்னைப் பத்துதலை ராவணனாக எண்ணிக் கொள்ளுதல் பிறருடைய தனித்தேர்வு. வேறென்ன சொல்ல முடியும்!
****
துறை சார்ந்த முதன்மை அறிஞர்கள் அடக்கத்துடனும் பொறுப்புடனும்தான் இருக்கிறார்கள். நரம்பியல் நிபுணர் ராம மூர்த்தி நரம்பியல்துறையை வைத்து நம்மை மிரளச்செய்வது இல்லை . கணிப்பொறியைப்பற்றிய உவமைகளையும் சில கொள்கைகளையும் நரம்பியலை விளக்க பயன்படுத்துகிறார் . அதனை வைத்து அவரை மட்டம்தட்ட எந்த கணிப்பொறி நிபுணனும் பாய்ந்து செல்வதும் இல்லை என்பதையும் நாம் அறிவோம். பயிற்றியல் பற்றி வ.செ குழந்தைசாமி அனைவருக்கும் புரியும்படித்தான் எழுதுகிறார். இருசாராரும் ஆங்கிலத்தை ஆரம்பநிலையிலேயே கற்பிக்கவேண்டுமா என்ற விவாதத்தை நாளிதழ்களில் சமீபத்தில் நிகழ்த்தியபோது தங்கள் துறைகள் சார்ந்த அறிவே உண்மையானது என்று வாதிடவில்லை. மற்ற அறிவுத்துறையை மட்டம்தட்ட தன் துறையின் உள்விவாதங்களை பயன்படுத்தவில்லை. இரு துறைகளுக்கும் நடுவேயுள்ள பொதுவான தளத்தில்தான் விவாதமே நடந்தது.
தங்களுடைய தனித்துவத்தையும் திறனையும் பொதுவான விவாதத் தளத்திலே செயற்கையாகத் தூக்கிக் காட்ட விரும்பக் கூடிய துறையறிஞர்கள் அல்லாத சிற்சிலர்தான் பற்பல துறைகளுக்குள் ஒரேசமயம் நுழைந்து ஆங்காங்கே படித்து விட்டு மிதமிஞ்சிய உற்சாகத்துடனும் தவறான தன்னம்பிக்கையுடனும் விஷயங்களை பிழைபடவும் அரைகுறையாகவும் முன்வைத்துவிடுகிறார்கள். அடிக்குறிப்புகளையும் மேற்கோள்களினையும் கலைச்சொற்களினையும் அளித்து அதற்கு அந்த துறைகளின் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தோரணையை மட்டும் செயற்கையாக உருவாக்கி அளித்து போலியான ஒரு மதிப்பையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். ஐயப்படுபவர்களயும் விவாதிக்க வருபவர்களையும் புதிய கலைச்சொற்கள், புதிய நூல்களின் பெயர்கள் போன்றவற்றை சொல்லி அவமதித்து மருட்டி அனுப்பிவிடுகிறார்கள்.
குறுகிய காலம் அமைப்பியலின் பேரால் இங்கே நிகழ்ந்த இந்த வன்முறையானது இலக்கியத்தில் மிகவும் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கியது. இலக்கியத்தில் தரவேறுபாடு இல்லை என்றும் நல்ல எழுத்து மோசமான எழுத்து என்று ஏதும் இல்லை என்றும் இலக்கியத்தில் படைப்பாளியின் தனித்துவம் இருந்திடக் கூடாது என்றும் இலக்கியமும் செய்திகட்டுரையும் ஒன்றுதான் என்றுமெல்லாம் பிழைபட்ட கூற்றுகள் மிகையாகப் பிரச்சாரம் செய்யப்பட்டன. இது பல இளைஞர்களை குழப்பியும் அவர்களுடைய இயல்பான கலைத்திறனை திசைதிருப்பியும் செயற்கையான இலக்கியங்களை உருவாக்கச் செய்தது .இப்போது இணையத்தில் இப்போக்கு மீண்டும் தலையெடுக்கின்றது. இடம் ,தருணம் தெரியாத தன்னம்பிக்கையாக அது வெளிப்படுவதனைக் காண்கின்றேன். ஆகவேதான் இதை எழுத நேர்ந்தது. பல கூட்டங்களில், வகுப்புகளில் சொல்லிச்சொல்லி சலித்துப்போன விஷயம்தான் இது . இணையத்தில் மீண்டும் சொல்லவேண்டியுள்ளது.
***
emveethaa@rediffmail.com
- உணவும் நம்பிக்கையும்
- பேசாதிரு மனமே
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 1
- செந்தில்
- அறிவுத்திறத்தின் பரிணாமம்- செடி SETI மற்றும் விண்வெளி உயிரியலின் இன்றியமையா பகுதி
- வியாழனைச் சுற்றிய காலிலியோ விண்வெளிக் கப்பல் [Galileo Spaceship that orbited Jupiter (1989-2003)]
- யார் எழுதலாம் எவ்வளவு எழுதலாம் ?
- கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி
- முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும்
- அறிவியல் புனைவுகள் – ஓர் எளிய அறிமுக வரலாறு
- ஆவேசமும் குழந்தைமையும் -வில்லியம் பாக்னரின் ‘இரு சிப்பாய்கள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 74 )
- சிவகாசி சித்திரங்கள்
- கோபிகிருஷ்ணனை முன்வைத்து எழுத்தாளர்களுக்கான இயக்கம்
- குறிப்புகள் சில – 28 ஆகஸ்ட் 2003 தி ஹிந்து-குளிர் பானங்கள்-வணிக முத்திரை,பதிப்புரிமையும் கருத்துச்சுதந்திரமும்
- உயிர்மை
- பேய் அரசுசெய்தால்
- தெய்வமனம் அமைந்திடுமோ!
- பிக்பாக்கெட்
- நந்தா விளக்கு !
- பச்சோந்த்ி வாழ்வு
- யேன் செய்ததில்லை ?
- பண்பெனப்படுவது யாதெனக் கேட்பின்….
- …காற்று தீரும் வரை
- யாதுமாகி நின்றாய் பராசக்தி…….
- விடியும்! நாவல் – (11)
- ஜாதிகள் ஜாக்கிரதை
- பிறகு….
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்று
- கடிதங்கள்
- வாரபலன் ஆகஸ்ட் 22 (பெல்ஜிய அதிகாரிகள், விபச்சார வர்த்தகம், காந்தர்வம்)
- 40 சீனில் என்ன செய்யமுடியும் ?
- மறைந்த எழுத்தாளருக்கான மரியாதையும் மதிப்பீடுகளும்
- குயவன் (குறுநாவல்)
- ஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை, மணப்பெண் சொத்துரிமை, மணப்பெண் வயது, வரதட்சணைக்கு அஞ்சி பெண்சிசுக்கள் கருஅழிப்பு!
- ஜேனஸின் முகங்கள் : 20 ஆம் நூற்றாண்டில் மார்க்சியமும் பாசிஸமும்
- எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி
- புதுமைப்பித்தனின் சமூகப்பார்வை
- வானம் காலடியில்
- இறுதி
- தாரகை
- அசல் வரிகள்
- சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கிறேன்