யார் இவர்கள்?

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

புதியமாதவி, மும்பை


2008 புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்தப் பின்
மறுநாள் பத்திரிகையின் முதல் பக்கத்தைப் புரட்டிய எந்த மும்பைவாழ் மனிதரும் தலைநிமிர்ந்து பெருமையுடன் உலாவ முடியவில்லை.
ஜூகு ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வெளியில் வந்த இரு ஜோடிகள்,
மும் பை ஜுகு சாலையில், ஜே. டபிள்யு. மேரியாட் ஐந்து நட்சத்திர ஓட்டலின் முன், வெளிநாட்டில் வாழும் இந்திய பெண்கள் இருவர், 80 பேர் கொண்ட கும்பலால் மானபங்கப்படுத்தப் பட்டார்கள்.


தங்களைக் கேலி செய்து ஆண்கள் கூட்டத்தை நோக்கி பெண்கள் சத்தமிட,விளைவு.. அந்த இருபெண்களைச் சுற்றிக் கூடி அவர்களின் உள்ளாடைத் தெரியுமளவுக்கு அவர்களின் ஆடைகளைத் தூக்கிக் கிழித்து மிருகத்தனமாக நடக்கத் துணிந்தார்கள். அச்சமயம் அங்கிருந்த
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை நிருபர் அக்காட்சியை புகைப்படம் எடுத்து சாட்சியமாக்கி, தக்க நேரத்தில் அங்கு வந்த காவல்துறை உதவியுடன் அவ்விரு ஜோடிகளையும் காப்பாற்றினார்.

இதில் பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக கூறியதாவது:
ஓட்டலை விட்டு நான், என் கணவர் மற்றும் உறவினர்கள் வெளியே வந்த போது, அங்கிருந்த தடுப்பை கடக்க முயன் றோம். அப்போது சிலர் வந்து எங் கள் உடையை பிடித்து இழுத்தனர். அப்போது, மேலும் சிலர் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பது தெரியாது. சிலர் எங்களை காப்பாற்ற முயன்றனர். என் கணவர் மற்றும் உறவினராலும் ஒன்றும் செய்ய முடியவில் லை. ஏதாவது ஆட்டோ அல்லது
டாக்சிக்குள் ஏறிவிட முயன்றேன். முடியவில்லை.எங்கள் உடைகள் கிழிக்கப்பட் டன; அவ்வளவு தான். ஆனால், சில பத்திரிகைகள் இதை மிகைப் படுத்தி விட்டன. நான் நிர்வாணப்படுத்தப் படவும் இல்லை; கற்பழிக்கப்படவும் இல்லை. பத்திரிகையில் வெளிவந்துள்ள படத்தில் என்னை சுற்றி உள்ளவர்களில், எங்களை காப்பாற்ற முயன்றவர்களும் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முயன்று வருகிறோம்.
இனி இந்தியாவில் எந்த விழாவுக்கும் எங்கும் செல்ல மாட் டோம். இப்பிரச்னையை இத் தோடு முடித்துக் கொள்ளவே விரும்புகிறோம். அதனால் தான் போலீசில் புகார் செய்யவில்லை. ஆனால், பத்திரிகைகள் விடாப்பிடியாக எங்களை தொடர்கின்றன. இது வெளிப்படுத்தப்பட வேண் டிய விஷயம் தான். இருந்தாலும், நான் பெரிதும் மனம் பாதிக்கப் பட்டுள்ளேன். மானபங்கப்படுத் தப்பட்டதை பெரிதுபடுத்த
வேண்டாம்; இது போன்ற சிறிய சம்பவங்கள் நடப்பது சகஜம் தான் என்று போலீஸ் கமிஷனர் கூறியது குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.இவ்வாறு அந்தப் பெண் கூறினார்.

அந்தப் பெண்களைச் சுற்றி இந்த வெறியாட்டம் நடத்திய இவர்கள் யார்?

இவர்களுக்கு குடும்பம் இல்லையா?
இவர்கள் என்ன கல்லிடுக்குகளிலிருந்து தவறிவிழுந்த உடைந்தச் சில்லுகளா?
குடி, கும்மாளம், வெறி… இதெல்லாம் இப்படியும் நடக்கத் தூண்டுமா?
ஏன் இதெல்லாம் நடக்கிறது?
இந்தக் கூட்டத்தில் தன் மகனை, தன் சகோதரனைப் பார்க்கும் குடும்பத்தின் கதி என்ன?
இவர்களினால் பாதிக்கப்பட்ட பெண், அவள் கணவர்/காதலன் இவர்களின் மனநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும்?
இப்படியானக் கவலைகளில் நடுத்தரக் குடும்பங்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன.
அப்போது தான் பத்திரிகைகள் , அரசியல் தலைவர்கள் தங்கள் தங்கள் கருத்துகளை அதிமேதாவித்தனமாக வாரி வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

மாதிரிக்கு ஒன்றிரண்டு:

>இந்தியத் தலைநகரம் டில்லியுடன் ஒப்பிடும்போது
மும்பை எவ்வளவொ பரவாயில்லை! (இந்த கேடு கெட்ட விசயத்தில்).

> மும்பைக்கருக்கு அடையாள அட்டை வழங்கப்படல் வேண்டும்.

> பெண்களை அவமானப்படுத்திய இவர்கள் மும்பைக்காரர்கள் அல்லர். மும்பைக்கு வெளிமாநிலங்களிலிருந்து வந்திருப்பவர்கள்!

> பெண்கள் அணியும் ஆடைகள்தான் இதெற்கெல்லாம் காரணம்.

> பெண்கள் ஏன் இருட்டில் வெளியில் வரவேண்டும்?

> பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸில் குற்றத்தைப் பதிவு செய்யாத வரை போலீஸ் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?

இப்படியாக தொடர்கிறது.

இதில் எதுவுமே இந்தப் பிரச்சனைக்கான தீர்வையோ அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையோ வைக்கும் நோக்கத்தில் பேசப்படும் அக்கறையுள்ள விமர்சனங்கள் இல்லை.

டில்லியுடன் ஒப்பிடும்போது மும்பை பரவாயில்லை என்பதும் மும்பைக்கருக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்பதும் பிரச்சனையைத் திசைத்திருப்பவே உதவும்.

சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே “இதைச் செய்தவர்கள் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள் என்று இதிலும் அரசியல் பண்ணபார்க்கிறார்.,
கொஞ்சமும் விவஸ்தை இல்லாமல்!
(Involved in the juhu molestation were outsiders. if this police does not take any action we will blacken their faces and parade then around the city- uddhav thackeray)

கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்திருக்கும் 14பேரில் 9 பேர் மும்பையில் வாழும் மராத்திய குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.

குற்றவாளிகளுக்கு மதம், இனம், மொழி, நாடு, குடும்ப அடையாளங்கள் கிடையாது. இப்படி எந்த அடையாளத்துடனும் அவர்களை அடையாளம் காட்ட முயல்வது அந்தக் குற்றங்களைச் செய்யாத அவரைச் சார்ந்த அப்பாவிகளையும் உறவுகளையும்
மீள முடியாத தண்டனைக்குள்ளாக்கிவிடும்.

பெண்கள் ஏன் இரவில் வெளியில் வரவெண்டும்?
என்று இந்தக் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் இப்போது 07/1/2008 , பிற்பகல் 3.15க்கு) சொல்லிக்கொண்டிருக்கிறார்.
அவரிடம் கேட்கிறார்கள்
“நீங்கள் ஏன் இரவில் வெளியில் வந்தீர்கள்?’
-புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு-
என்று பதில் சொல்கிறார்.
நீங்க்ள் வெளியில் வரலாம், பெண்கள் வரக்கூடாதா என்று அடுத்த கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

எந்த நாட்டில் இரவிலும் பெண்கள் பத்திரமாக வெளியில் போய்விட்டு திரும்ப முடிகிறதோ அந்த நாட்டில் தான் சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்படுகிறது என்பது மட்டுமல்ல, அந்த நாட்டில் தான் பண்பாடும், கலாச்சாரமும் மதிக்கப்படுகிறது, உண்மையான சுதந்திரம்
இருக்கிறது.

“படிதாண்டி, குளம் சுற்றி
உனைத் தரிசிக்க வரும்
உன் மகளை
உன் மகனே
கேலி செய்கிறான்,
அழகி மீனாட்சி
உன் காலத்தில்
எப்படி நீ உலாப்போனாய்?
( கவிஞர் இரா.மீனாட்சி)
என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.

பெண்கள் அணியும் ஆடைகள் தான் காரணமாம்!

இக்காரணம் சொல்லப்படும் போது தான் அண்மையில் சென்னைக் கல்லூரி ஒன்றில் ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் அணிந்து சென்ற தோழி லீனாமணிமேகலையை துப்பட்டா அணிந்து உள்ளே வர சொன்னதும் அவர் மறுத்து வெளியேறியதும் கவனிக்கப்பட வேண்டியது என்ற எண்ணம் வலுப்பெறுகிறது.
உலகச்சந்தையை நடுத்தெருவில் திறந்து வைத்துவிட்டு பெண்கள் யாரும் துப்பட்டா அணியாமல் வெளியில் வரக்கூடாது என்று சொல்வதில் நியாயமில்லை.
ஆமாம் அப்படி என்னதான் துப்பட்டாவில் காப்பாற்றப்பட்டுவிடும் பெண்ணின் மானமும் நாம் வாய்கிழியப் பேசும் நம் பண்பாடும்.?
புடவைக் கட்டிய எந்தப் பெண்ணும் பாதிக்கப்படுவதில்லை என்பதையாவது இந்த மாதிரி பேசுபவர்களால் நிரூபிக்க முடியுமா?
துப்பட்டா மறைப்பில் இருக்கிறது நம் பண்பாடு என்று ஒரு கல்லூரி சொல்கிறது, அந்தக் கல்லூரியிலிருந்து இந்த நாட்டின் இளைய தலைமுறை வெளிவருகிறது.. அவர்களிடமிருந்து உருவாகும் எண்ணங்கள் எப்படிப் பட்டவையாக இருக்கும்!

மினியும் இறுக்கமான ஆடைகளும் அணிந்து சாலைகளில் நடக்கும் பெண்களை வெளிநாடுகளில் ஆண்கள் கூட்டமாய்ப் பாய்ந்து
ஆடைக் கிழித்துதான் அலைகிறார்களா?

ஏன் நம் கலைச் சிற்பங்களில் தன் உடலழகு எடுப்பாக தெரிய ஆடை அணிந்த பெண்ணுருவ சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள் எல்லாம் இருக்கிறது தானே. அந்தப் பெண்களை எல்லாம் இந்த மாதிரிதான் ஆண்கள் நடத்தினார்களா?

இரண்டு வர்க்கங்களுக்கு நடுவில் உலகமயமாதல் பெரும் இடைவெளியை, நிரப்ப முடியாதப் பள்ளத்தாக்கு போல ஏற்படுத்திவிட்டது.
இம்மாதிரி கொண்டாட்டங்களின் போது உயர்மட்டத்திலிருப்பவர்களை அணுகுவது கீழ்த்தட்டு மனிதர்களுக்கு மிகவும் இலகுவாகிறது. இந்தத் தீடீர் நெருக்கத்தில் அவர்கள் பார்க்கும் பெண்கள், அவர்கள் இதுவரைப் பழகும் பெண்களைப் போலில்லை . இம்மாதிரி உடை அணிந்திருந்தால் அவள் நம் பண்பாட்டுக்கு எதிரானவாள் என்ற ஒரு கருத்துருவாக்கமும் ஏற்கனவே அவர்களிடம் திணிக்கப்பட்டிருக்கிறது. எனவே என்ன வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம், கூட்டத்துடன் கோவிந்தா, நம்மை யாரால் என்ன செய்ய முடியும்..? இத்தியாதி எண்ணங்கள் ஏற்பட்டு விடுகிறதா? இதையும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. வர்க்கப்பிரச்சனையின் ஊடாக இதைப் பார்ப்பதும் எப்போதும் பொருத்தமாக இருப்பதில்லை.

ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் இந்த ஆண்கள்?

இந்த ஆண்களும் ஒரு பெண்ணின் மகன், கணவன், அப்பா, அண்ணன். தம்பி… என்ற பார்வையில் பார்க்கும் போது சம்மந்தப்பட்ட இவர்கள் சார்ந்த பெண்ணின் மனநிலையை, வேதனையை நினைக்கும்போது … அந்த வேதனையை வார்த்தைகளால் எழுத முடியவில்லை.

மொத்தத்தில் பெருகி வரும் இம்மாதிரி சமூகத்தலைகுனிவுக்களுக்கு யார்ப் பொறுப்பு?


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை