யார் அகதிகள்?

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

சக்தி சக்திதாசன்


பேந்தப் பேந்த விழித்தவாறே அருணன் அந்த விமானத்தினின்றும் இறங்கினான். இருண்ட எதிர்காலம், சுபீட்சமற்ற வாழ்க்கை, நாளை என்ன நடக்கும் என்று அறியாத நிலை இதுதான் அவனது தாய்மண்ணின் இன்றைய நிலை.

பணம், அந்தஸ்து வசதி அனைத்தையும் கொண்ட குடும்பத்தின் ஒரே வாரிசாக இருந்தும், இவையனைத்தும் அவனுக்கு ஒரு தீர்க்கமான எதிர்காலத்தை அவனது தாய்மண்னிலே கொடுக்காது என்று திடகாத்திரமாக நம்பியதனால்தான் இன்று அவனுக்கு இந்த வனவாசம்.

தமது வாழ்வு சிதைந்து போனாலும் போகட்டும் தமது செல்வமகன் மட்டும் பாதுகாப்பாக வாழட்டும் என்று இருந்த பணம் நைத்தையும் செலவழித்து அவனது அப்பா மருதாசலம் அவனை விமானம் ஏற்றி லண்டன் நோக்கி அனுப்பி விட்டார்.

ஆமாம் நிர்க்கதியற்று உயிரின் பாதுகாப்புக்காக தாய்மண்னை விட்டு ஓடும் அந்த அகதிகள் கூட்டத்தின் எண்ணிக்கை அவனால் இன்னும் ஒன்றாக அதிகரித்தது. அந்த விமானத்தில் அமர்ந்திருக்கும் போது அவனுக்கு மன்ம் மிகவும் வேதனைப்பட்டது. சே! எனது சுயநலத்துக்காக எனது நாட்டின் அவலநிலையைப் பயன்படுத்தி சர்வதேச சமூகத்தின் இரக்கசிந்தையை துஷ்பிரயோகம் செய்கிறேனோ என்ற எண்ணம் அவனை வாட்டச் செய்தது.

ஆனால் தான் செய்வது தனக்காக இத்தனை காலமும் எத்தனையோ தியாகங்களைப் புரிந்த தன்னுடைய அன்புப் பெற்றோரின் மன அமைதிக்காவேயன்றி தனது சுயநலத்துக்காகவல்ல என்னும் நினைவை பலாத்காரமாஅக மனதில் இழுத்து வைத்து த்ன்னைச் சமாதானப்படுத்திய வண்ணமே வந்தான்.

லண்டனின் நீலநிற வானம் கண்ணுக்குக் குளிர்மையாகவிருந்தது, அழகாக உடையுடுத்திய விமான நிலையப் பணியாளர்கள் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடியாடுவதத் திகைப்புடன் பார்த்தான். மனதில் ஒருவித அச்சம் தலைவிரித்தாடியது. அது அவ்னது உயிரைப்பற்றியது அல்ல, தெளிவர்ர எதிர்காலம், அறியாத புது உலகம் என்பன கொடுத்த அந்தக் கலவை எண்ணங்கள் கொடுத்த அச்சம்.

அவனை விமானம் ஏற்றி விட்ட அந்த ஏஜண்ட் கூறியவைகளை மனதில் மீண்டும் ஒப்புவித்துக் கொண்டான். கடைசியாக அவன் கூறிய வாக்கியங்கள் மட்டும் மனதில் அப்படியே அச்சாகி நின்றன,

“என்ன செய்தாலும் நீ ஆரம்பத்தில் கூரியவர்ரை எந்த வகையிலும் பின்பு மாற்றிக் கூறாதே அப்படிக் கூறினால் அவ்வளவுதான், இத்த்னை பணமும் வேஸ்ட் ”

அப்போது

” கமோன் லெட் மீ சீ யுவர் பாஸ்போர்ட் ” என்று அந்த விமானத்தளத்தில் வாயிலில் நின்ற அதிகாரி கொஞ்சம் அதட்டும் தோரணையில் கூறவும், அவனுக்கு முன்னால் சென்றவர் பாஸ்போர்ட்டைக் காட்டுவதைப் பார்த்து, தானும் தனது பாஸ்போர்ட்டை எடுத்துக் கொடுத்தான்.

” வாட் இஸ் யுவர் பேர்ப்பஸ் ஒவ் தி ஜேர்னி ” என்று தொடர்ந்தார் அந்த அதிகாரி. அவர் சொன்னது அவனுக்கு ஓரளவு புரிந்தாலும், அந்த ஏஜண்டின் கூற்றுப்படி

” நான் இங்கே அகதிகள் அந்தஸ்து கோருகிறேன்” என்றான் தமிழில்.

அதைத்தொடர்ந்து அந்த ஏஜண்டுதான் அவர்களுக்கு ட்றெயினிங் கொடுத்திருப்பானோ என்று சந்தேகிக்கும் வகையில், அத்தனை காரியங்களும் அவன் சொன்னது போலவே நடைபெற்றது.

அந்த அகதிகளுக்கான முகாமில் அவன் வந்து இப்போ மூன்று நாட்களாகிவிட்டது. அன்று காலை எழுந்திருந்த போது ஏனோ அவனது நெஞ்சம் கனத்தது. அவனது அன்புப் பெற்றோரின் எண்ணம் அவன் எண்ண அலைகளில் கனமான துளிகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன.

அவன் ஊரை விட்டுக் கிளம்பும் போது கண்ணீர் மல்க அவனருகே நின்றிருந்த தாய்ம், அவரோடு சோகமேயுருவாக அப்பாவும் நின்ற காட்சி அவன் நெஞ்சத்தை கிழித்து கண்களைக் குளமாக்கிக் கொண்டிருந்தன.

அவன் அப்பா ” தம்பி, ஏஜண்ட் சொன்னபடி, நீ அங்கே சென்று சேர்ந்ததும் ஒரு மாதம் வரை எம்மைத் தொடர்பு கொள்ல முடியாது இருக்கலாம், ஆனாலும் நீ உடனடியாகத் திருப்பி அனுப்பபடாவிட்டால் நீ அங்கே சென்றடைந்து விட்டாய், என்பது எமக்குத் தெரியும் ஆகவே, எம்மையிட்டுக் கவலையடையாதே., உனது காரியங்களைச் சரிவரச் செய்துகொள் ” என்று சொன்னது அவன் ஞாபகத்துக்கு வரவே அவன் மனம் கொஞ்சம் சமாதானமடைந்தது.

இந்த மூன்று நாட்களில் இரண்டு முறை அவனுக்கு மொழிபெயர்ப்பதற்கென அவர்கள் அழைத்து வந்த அந்த நடுவயதான அத்தமிழைரைச் சந்தித்துள்ளான். அவரது பெயர் தியாகராஜா. அவர் கூரியவைகளில் இருந்து அவன் லண்டன் ஹீத்ரோ விமான நிலயத்துக்கருகாமையில் உள்ள ஒரு இடைக்கால தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் என்றும், விரைவில் மற்றுமொரு அகதிகள் முகாமிற்கு மாற்றப்படுவான் என்றும், அதைத்தொடர்ந்து ஒரு மாத காலத்திற்குள் அவன் வெளியே செல்லக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதையும் அறிந்து கொண்டான்.

அன்றுதான் அந்தப் புது அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டு முதல் காலை, காலைக்கடன்களை முடித்து விட்டு கண்மூடி மானசீகமாக இரைவனை வணங்கி விட்டு அவர்கள் குறிப்பிட்டிருந்த அந்த டைனிங் ஹாலுக்கு காலைச் சிற்றுண்டிக்காகச் சென்றான்.

அங்கே பல ஆசிய முகங்கள் தென்பட்டன, “இதிலே எத்தனை பேர், என்னைப்போலத் தாய்ண்ணைத் துறந்து” அவன் மனம் ஏங்க, கண்கள் ஏக்கம் மிகுந்த பார்வையை அங்குமிங்கும் செலுத்தியது.

அப்போது காலைச் சிற்றுண்டிக்கான வரிசையில் இருந்த அந்தப்பெண் இவனது கவனத்தை ஈர்த்தாள். அவனுக்குப் பிடித்தமான அந்த கருநீல நிறச் சுடிதார் தான் அவனது கவனத்தை முதலில் ஈர்த்தது. சுமாரான நிறம், உயரம், கருநிறக்கூந்தல் மயிலின் தோகை போல அவளது பின்புறத்தில் படர்ந்திருந்தது.

அவளின் பார்வை மட்டும் இவனைப்போலவே ஏக்கத்துடன் அந்த டைனிங் ஹாலை துழாவிக் கொண்டிருந்தது.

கையிலே சாப்பாட்டுத் தட்டை ஏந்தியவண்ணம் நடந்து கொண்டிருந்த அருணனின் கண்களில் மீண்டும் அந்தக் கருநீலச் சுடிதார் தட்டுப்பட்டது. ஆமாம் ஒரு வட்டமேஜையில் சாப்பாட்டுத் தட்டை வெறித்துப் பார்த்த வண்ணம் அதே பெண் தனியாக அமர்ந்திருந்தாள். சற்றுத் தயங்கியவாறே அவள் முன்னால் இருந்த காலியான இடத்தில் தனது சாப்பாட்டுத் தட்டை வைத்து விட்டு, அவளைப் பார்த்தான்.

அவள் கண்களோ “ப்ளீஸ் உட்கார்ந்துக்கோயேன்” என்ர தோரணையில் அவனைப் பார்த்தது. தயங்கியவாறே உட்கார்ந்தான்.

பின் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் ” ஜ ஆம் சிறீலங்கா …. யூ ?” என்றான்.

அவனைப்பார்த்துப் புன்னகைத்தவாறே ” நீங்கள் தமிழா? ” என்றாள். திடுக்கிட்ட அவனது காதில் யாரோ இன்பத் தேனிசை இசைப்பது போல இருந்தது அவனுக்கு.

” ஆமாம் என் பெயர் அருணண், நான் யாழ்ப்பாணம், நீங்க?….” திரும்பவும் இழுத்தான்.

” என்னுடைய பெயர் பத்மா, நான் இளவாலை ” திரும்பவும் உறுதியுடன் ஒலித்தது அவள் குரல்.

” நல்லவேளை , ஓரேயடியாக நாந்தான் தனிய இங்க மாட்டுப்பட்டு விட்டேனோ என்று பயந்து கொண்டிருந்தேன், பேச்சுத்துணைக்கு நீங்க கிடைச்சுட்டீங்க..” நிம்மதியுடன் ஒலித்தது அருணன் குரல்.

” எனக்கும் அப்படித்தான், ஏதோ ஒரு துணிச்சலில் கிளம்பி வந்து விட்டேன், இனி என்ன நடக்கப் போகுதோ…?” அதுதான் பயமாக இருக்கிறது ” மீண்டும் பத்மா.

” பயப்பிடாதேங்கோ, நாங்கள் இரண்டுபேருமே ஓரே சிட்டுவேஷனில தான் இருக்கிறோம்… பார்ப்பம் ஒருவழி பிறக்கும் தானே..” ஆறுதலுடன் கூடிய அருணணது வார்த்தைகள் ஏனோ பத்மாவின் செவிகளுக்கு இதமாகத்தான் இருந்தது.

” என்னுடைய மாமா இங்கதான் இருக்கிறார், நான் வெளியே போனபின்புதான் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.” பத்மா கொஞ்சம் கவலையுடன்.

” வீணாக அக்வலைபாடாதீர்கள் அதுமட்டும் நான் இங்க உங்களுக்குத் துணையாக இருப்பேன்” ஏனோ ஒரு அசாத்திய தைரியம் அவன் மனதில் உந்த வர்த்தைகள் வெளிவந்தன அருணணிடமிருந்து.

அன்று மதியம் உணவு, இரவு உணவு என இருவரும் சேர்ந்தே இருந்தனர். அவர்கள் இருவரும் ஏதோ நீண்டநாள் பழகியவர்கள் போல நடந்து கொண்டார்கள். பத்மாவுக்குக் கூட என்னவென்று புரியாத ஒரு உணர்வு, அதேசமயம், அருணண் என்னும் ஒரு பாதுகாப்பு வலயம் என பல விளக்கமுடியா உணர்வுகள்.

அன்று இரவு படுத்து விட்டாலும், அருணனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. மிகவும் சொற்ப நேரத்தினுள் பத்மாவின் நினைவுகள் அவன் நெஞ்சத்தில் நிகழ்த்திய மாற்றங்களைப் புரியமுடியாது தவித்தான்.

“சே என்ன இது ! இதுதான் காதலோ …. பைத்தியக்காரத்தனம் கண்டது காதல்….” அவன் மனமே இரண்டு பக்கத் தரப்பிலும் வாதாடியது. உற்றம், சுற்றம், தாய்நாடு இவர்ரின் பிரிவு கொடுத்த பலவீனமான நிலையில், தன் நாட்டுப் பெண்ணைக் கண்டதும், அதற்குக் காதல் என்று அவசரமான தலைப்பைக் கொடுத்து விட்டேன், என அருணன் சமாதானம் கூறிக் கொண்டான்.

அன்று பத்மா அவனுடன் உரையாடுகையில் கூறியவை அவன் ஞாபகத்திற்கு வந்தன. மூன்ரு பெண்பிளைகளில் கடைசியானவள் பத்மா, இரண்டு அக்காமாரும் திருமணமாகி ஈழத்தில் வசித்து வந்தார்கள். சமீபத்தில் அவர்களது வீட்டிற்கு அருகாமையில் இலங்கை ராணுவத்தினரின் குண்டுத்தாக்குதலுக்கு பலர் பலியாகவும், எப்படியாவது தமது மகளைக் காப்பாற்றி விடவேண்டும் என்னும் ஆதங்கத்தில் அருணணைப்போலவே அவளையும் அகதி என்னும் அந்தஸ்துடன் பெற்றோர் நாடுகடத்தி விட்டனர்.

பத்மாவை உலக அழகி என்று கூறிவிடமுடியாது. சுமாராக இருந்தாள், ஆனால் அவளின் முகத்தில் தெரிந்த அந்தப் பாந்தமான அழகு ஏனோ அருணணின் மனதைளாக்கிரமித்துக் கொண்டிருந்தது .

தினமும் அந்த அகதிகள் முகாமில் காலை எழிந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை அருணன் தனது நேரத்தை பத்மாவுடனே தான் செலவு செய்தான். அங்கே அவர்களுக்கு நேரம் போவதற்காக வாசிகசாலை போன்ற பகுதி ஒன்றும், மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்குரிய வசதியும் செய்து கொடுத்திருந்தார்கள்.

டேபிள் டென்னிஸ் எப்படி ஆடுவது என்று பத்மாவுக்குக் கற்றுக் கொடுத்தான் அருணன், இருவரும் சிரித்தபடி விளையாடிக் கொண்டிருப்பதையும், எப்பவும் ஒன்றாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதையும் கண்ணுற்ற ஆங்கிலேய பவார்டன் ஒருவன்,

” ஹேய், யூ ஆர் லக்கி டொ பி இன் த ஸெம் பிளேஸ் வித் யுவர் கேர்ல் பிரண்ட் ” ( உனது காதலியுடன் ஓர் இடத்தில் இருப்பதற்கு நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்) என்றதும் அருணனும், பத்மாவும் திகைத்து விட்டார்கள். பத்மாவின் வதனம் பெண்களுக்கேயுரிய நாணம் பூத்துச் சிவந்தது.

” நோ, நோ….” என்று தடுமாறிய அருணனைப் பார்த்து,

“ஏன் நான் உங்களோட காதலியாக இருக்க முடியாதா?” என்றாள் ஒரு புன்னகையுடன், இந்தக் கேள்வியை எதிர்பார்த்திராத அருணன்,

” இல்லை…… நான்…… நீங்க ….. நீ….நான் எப்படி உனக்குப் பொருத்தமாக ..” முடிக்கவில்லை அருணன்

” அருணன், யாருமில்லாத இடத்தில் தவித்த மனதுடன் தாங்கவொணாத் துயரத்துடன் இருந்தபோது எனக்கு ஆதரவாக என்னைத் தேற்ரிய இந்த அன்பு உள்லத்தைத் தவிர வேறு எதை ஒரு பெண்ணால் எதிர் பார்க்கமுடியும் ” என்றாள் பத்மா.

ஆயிரம் வண்ணத்திப் பூச்சிகள் அவனது இதயத்துக்குள் வட்டமடித்தன. அவன் யாரும் எட்டமுடியா உயரத்தில் பறந்து கொண்டிருந்தான்.

” என்னை நீ ……. விரும்புகிறாயா ? ” திக்கித் திக்கி வார்த்தைகள் தெறித்தன.

புன்னகையைப் பதிலாய்த் தந்துவிட்டு, தரையை நோக்கினாள் பத்மா.

அன்று பத்மா மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.

” என்ன பத்மா? ஒரே சந்தோசமாக இருக்கிறாய் ….” வினவினான் அருணன்

” அருணன், என்னுடைய கேஸ் ஓகேயாம், நாளைக்கு ந்ஆன் வெளியே போகப்போகிறேன், மாமா என்னைக் கூட்டிக் கொண்டு போவதற்காய் வருகிறார். ஆனால் ஒரேயொரு கவலை, உங்களைப் பார்க்க முடியாதே … ” என்றாள் கவலையுடன்

” என்ன பத்மா, இதுக்குப் போய் கவலையா? போனதும் மாமாவினுடைய தொலைபேசி இலக்கத்தை எனக்கு அறிவித்து விடு, நான் ஒவ்வொருநாளுமே உன்னோடு பேசிக் கொள்கிறேன்” என்றான் அத்தோடு

” அது மட்டுமல்ல, பத்மா நான் கூட இன்னும் இரண்டு கிவாரத்துக்குள் வெளியே வந்து விடுவேன் என்று சொல்கிறார்கள், பிறகு என்ன நான் உன்னைச் சந்திப்பது மிகவும் சுலபமாயிற்றே ” என்றான் அருணன்.

கண்களில் நீரோடு அவனிடமிருந்து பிரிய மனமில்லாமல் வெளியே செல்லும் பத்மாவைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சொன்றை விட்டான் அருணன்.

பத்மாவின் மாமா வீட்டு விலாசத்தைக் கொடுத்த பத்மா, அவனை அடிக்கடி மாமா வீட்டுக்கு போன் பண்ண வேண்டாமென்று சொன்னாள். அவளுடைய மாமாவிற்கு எதுவும் இப்போ தெரிவது அவ்வளவு நல்லதல்ல எனபது அவளது வாதம்.

இரண்டு நாலைக்கொருமுறை தொலைபேசியில் அவளுடைய குரலைக் கேட்பது ஒன்றே அவனுக்கு மிகுந்த தெம்பைக் கொடுத்தது.

” ஹேய் யூ ஆர் லீவிங் டுமாரோ ” ( நாளை நீ வெளியே போகப்போகிறாய்) என்றான் அந்த வெள்ளை வார்டன். அருணனுக்குத் தலைகால் புரியவில்லை. ஓ நாளை என் பத்மாவைச் சந்திக்கப்போகிறேன், எனது அப்பா, அம்மாவுடன் தொலைபேசியில் பேசப்போகிறேன்.உள்லத்தில் ஆனந்த வெள்ளம் கரைபுரண்டோடியது.

வெளியே போனவுடன் உடனடியாக அவனது சித்தப்பாவின் மகன் கோபியைத் தொடர்பு கொண்டு அவனிடம் செல்ல வேண்டும். அவனுடன் தங்குவதாகத்தான் ஏற்பாடு.

தூக்கமே வராமல் புரண்டு கொண்டிருந்தவனுக்கு காலையைக் கண்டதும் களிப்பேறியது. சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, உத்தியோகபூர்வமான பத்திரங்களில் கையொப்பமிட்டுவிட்டு வெளியே வந்தான். வானத்தை அண்னாந்து பார்த்தான் காலைச் சூரியன் சுளீரென்று அடித்தாலும், அந்த நவம்பர் மாதக் குளிர் அவனை வாட்டியது. நல்லவேளையாக அப்பா கொழும்பில் வாங்கிக் கொடுத்த ஓவர்கோர்ட் அவனுக்குத் துணை வந்தது.

ஓ, சுதந்திரமான இந்த வானிலே நான் எனது பத்மாவுடன் சுற்றிச் சுற்றி வரப்போகிரேன் என்ற கனவில் அவன் மனம் துள்ளித் துள்ளி தாவியது.

அவனைக் கண்டதும் கோபி அவனைக் கட்டியணைத்துக் கொண்டான்.

” நன்றாக குளித்து ரெஸ்ட் எடுத்துக்கோ, இன்னைக்குத் தீபாவளி சாயந்தரம் கோவிலுக்குப் போவோம்” என்ற கோபியைப் பார்த்து,

” இல்லேடா நான் குளித்து விட்டு அப்பா, அம்மாவுடன் போனில் பேசவேண்டும், அதற்குப் பின்பு பத்மாவைப் பார்க்க வேண்டும் ” என்றான் அருணன்

” ஓ, ஜயா அகதிகள் முகாமிலேயே ஜோடியத் தேடீட்டார் என்பதை மறந்து விட்டேனே…” என்று சிரித்தான் கோபி.

அப்போது அங்கே கோபியுடன் நின்றிருந்த கோபியின் வீட்டுச் சொந்தக்காரர் தியாகு ” தம்பி, என்ன வந்ததும், வாராததுமாய் கேர்ல் பிரண்ட் பிடிச்சாச்சோ ….. பரவாயில்லை ஏதோ எங்கள் ஊர் பெண்ணென்றால் சரிதான் ” என்றார் சிரித்தபடி.

அவருக்கு ஒரு அறுபது வயதிருக்கும், லண்டனில் ஒரு முப்பது வருடமாக வாழ்ந்து வருபவர். கோபி வசிகிகும் வீட்டின் சொந்தக்காரர். மிகவும் நல்லவர் என்று கோபி ஏற்கனவே சொல்லியிருந்தான்.

அப்பா, அம்மாவுடன் திலைபேசியில் பேசியதுமே, அவனுக்கு பலமடங்கு தைரியம் வந்தது. என்னதான் ஆனாலும் எனது வாழ்க்கையை இங்கே வெற்றிகரமாக ஆக்கி அப்பா, அம்மாவுக்கும் நான் பிறந்த நாட்டுக்கும் பெருமை தேடித்தருவது என்று உறுதி பூண்டான்.

அவனது மனதில் ஆனந்தராகம் இசைத்துக் கொண்டிருந்தது. தீபங்களின் திருநாள் தீபாவளியன்று அவனது மனதில் குடியிருக்கும் தேவதையைச் சந்திக்கப் போகிறான்.

தீபங்களால் மனத்தின் இருளகற்றி கொண்டாடும் இத்திருநாளில் என் மனத்தேவதையை ஆராதிக்கப்போகிறேன் என்று அவனது மனம் ஆனந்தத்தால் எகிறிப் பாய்ந்தது.

பத்மா கொடுத்திருந்த விலாசத்தை அடைந்தான், மனம் ஆவலினால் படபடக்க கைகள் காலிங் பெல்லை அமுக்கியது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கதைவைத் திறந்தாள்,

” ஹ¥ ஆர் யூ ” ஒரு விதமான சந்தேகத்துடன் கேட்டாள் அந்த அம்மணி ( பத்மாவின் மாமியாக இருக்கலாம்)

” ஜ… நான் பத்மாவைப் பார்க்க வந்திருக்கிறேன் என் பெயர் அருணன் ” என்றான் அருணன்

” ஓ நீதான் அந்த அருணனா உள்ளே வா ” என்று அழைத்துச் சென்று அந்தப் பெரிய ஹாலில் உள்ள விலையுயர்ந்த சோபாவில் உட்கார்த்தினாள் அந்த அம்மா,

” நான் போய் பத்மாவை அனுப்புகிறேன் ” என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

ஆர்வத்துடன் கண்கள் அகல விரிய அந்தப் பெரிய வீட்டின் உட்புறத்தை நோட்டம் விட்டான் அருணன். அனைத்துப் பொருட்களும் மிகவும் விலையுயர்ந்தவை. பத்மாவின் மாமாவின் செல்வநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியது.

அப்போது, அதே கருநீலச் சுடிதாரில் அவன் தேவதை உள்ளே நுழைந்தாள். அவன் இதயத்துள் ஆயிரம் spb க்களும் kjக்களும் காதல் கானம் இசைத்தனர். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் அருணன்,

” என்ன அருணன் எப்படி இருக்கிறீர்கள்? ” முகத்தில் எதுவித ஆவலும் தென்படாமலே சாரணமாகக் கேட்டுவிட்டு அவன் முன்னால் இருந்த சோபாவில் உட்கார்ந்தாள்.

” இன்று காலைதான் முகாமிலிருந்து வெளியே வந்தேன், என் பெற்றோருடன் தொலைபேசியில் பேசி விட்டு, உன்னைப் பார்க்கவே ஓடி வருகிறேன், உன் முகம் காணாது மிகவும் தவித்து விட்டேன் பத்மா” என்றான் அருணன் மூச்சு விடாமலே.

திரும்பவும் முகத்தில் எதுவிதமான உணர்ச்சியலைகள் எதுவுமின்றி,

” அப்படியா, உங்க பெற்றோர் நலமாக இருக்கிறார்களா?” என்றவள் எழுந்தவாறே ” கொஞ்சம் இருங்கள் உங்களுக்குக் காப்பி கொண்டு வருகிறேன் ” என்று உள்ளே சென்றாள்.

என்ன என் பத்மாவா ? நான் முகாமை விட்டு வெளியே வந்து விட்டதைப் பற்றி எதுவித சந்தோஷமும் இல்லாதவள் போலக் காட்டிக் கொள்கிறாளே என்று சிறிது மனம் பதைத்தது. சே அவளுக்கு கொஞ்சம் ஷாக்காக இருக்கலாம் என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.

கையில் காப்பியுடனும், தீபாவளிப் பட்சணங்களுடனும் வந்து அவற்றை அவனுக்கு முன்னால் வைத்தாள். பின்பு முன்பிருந்த அதே சோபாவில் உட்கார்ந்தாள்.

அப்போது காலிங் பெல் அடித்தது, ஜன்னலூடாக பார்த்தபோது வீட்டின் முன்னால் பளிச்சிடும் ஒரு BMW கார் நின்றிருப்பது தெரிந்தது. பத்மா எழுந்து சென்று கதவைத் திறந்தாள் வாட்டசாட்டமான பார்ப்பதற்கு உயர்ந்த இடத்தைச் சேர்ந்தவனைப் போல் தோற்ரமளிக்கும் ஒரு வாலிபன் உள்ளே நுழைந்தான்.

அப்படியே பத்மாவைக் கட்டியணத்து கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து விட்டு

” ஹாய் டார்லிங் ஹவ் ஆர் யூ? ” என்றவனின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவனை அழைத்து வந்த பத்மா

“சுரேஷ் இதுதான் அருணன் நான் சொல்லியிருந்தேன் “நல்ல நண்பன்” என்று, இவர்தான் சுரேஷ் என்னுடைய பாய் பிரண்ட் பெரியதோர் கம்பெனியில் எஞ்ஞினியராக இருக்கிறார். நமக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது ” என்றாள் மிகவும் சாதாரணமாக.

அருணனின் இதயம் உடைந்து தூள் தூளாய் நொறுங்கியது. ஆசைக்கோட்டைகள் எல்லாம் தகர்ந்து சின்னாபின்னமாகியது. இப்போதுதான் யாருமற்ற அனாதையாக நடுத்தெருவில் அகதியாக நிற்பதைப் போன்ற உணர்வு அவனைத் தாக்கியது.

கண்களில் திரளும் நீரை மறைத்துக் கொண்டு,

” ஆ அப்படியா சந்தோஷம் ” என்றவன் ” பத்மா ஒரு ஜந்து நிமிடம் உன்னோடு தனியாகப் பேசலாமா? ” என்றான் தயங்கியவாறே

பத்மா அவனை பின்புறத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றாள்.

” பத்மா, என்ன இதெல்லாம் எப்படி இப்படியான முடிவுக்கு வந்தாய்? நம்முடைய காதல் எல்லாம் என்னாச்சு ? ” ஆர்வத்துடன் கேள்விகளை அடுக்கினான்

” இங்க பாருங்க அருணன், அந்த முகாமில நான் தனியாக இருக்கும் போது நீங்கள் காட்டிய பரிவு என் மனதில் ஏற்படுத்திய அபிமானத்தை காதல் என்று தவறாக நான் நினைத்து விட்டேன். அது தவிர நீங்களோ “அகதி” எதிர்காலம் என்னவென்று தெரியாமல் இருக்கிரீர்கள், ஆனால் சுரேஷ் இந்த நாட்டின் பிரிட்டிஷ் பிரஜை, அவரை மணப்பதால் என்னுடைய எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும். ஜ ஆம் பீயிங் ப்ராக்டிக்கல் , இவையெல்லாம் என்னுடைய மாமா, மாமி எடுத்துச் சொல்லும் வரை எனக்குப் புரியவில்லை” மிகவும் தெளிவாக ஆனால் எதிவித குற்ரௌணர்வும் இல்லாமல் அவனது இதயத்தின் மீது பாறாங்கல்லைப் போட்டாள் பத்மா.

” பரவாயில்லை பத்மா, உங்களின் ஆசை இதுதான் என்றால் நான் அதற்குக் குறுக்கே நிற்கமாட்டேன். ஆனால் ” அகதிகள்2 என்பதற்கு அர்த்தம் எனக்கு என்னவென்ரு தெரியாமல் போய்விட்டதே !” என்றவாறு உள்ளே நுழைந்தவன்,

“காங்கிராட்ஸ்” என்றவாறு சுரேஷின் கையை குலுக்கி விட்டு வெளியேறினான்.

பஸ்சில் உட்கார்ந்திருந்த வனது மனம் இப்போ கனவுகளைக் களைந்து விட்டு வெறுமையாக வாடியிருந்தது. அவனையுமரியாமல் அவன் விழிகளில் இருதுளி நீர் பனித்தது.

வீட்டில் கோபி இருக்கவில்லை. ஆனால் தியாகு இருந்தார். அவரிடம் நடந்தவற்றையெல்லாம் கூறி கண் கலங்கினான். அதற்கு அவர்,

” தம்பி, யார் அகதிகள் ? நாமெல்லோருமே அகதிகள். இந்த நாட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடும் வசதி கொண்டவர்கள் கூட தாய்மண்ணைப் பிரிந்து விட்ட ஏக்கத்தில் தான் வாழ்கிறார்கள். இது அகதிகளுக்குள் உள்ல ஏற்ற தாழ்வுகளே ஒழிய, நாமனைவருமே இந்நாட்டில் அகதிகள் தான். இது தெரியாமல் பலர் ஒரு மாயையில் வாழ்கிறார்கள், அப்படி ஒரு மாயையில் பத்மாவும் சிக்கிக் கொண்டாள். கவலைப்படாதே ! உனக்கு இன்னும் காலம் இருக்கிறது ” ஆரிதலாக ஒலித்தன அந்த அன்பானவரின் வார்த்தைகள்.

அவன் மனதிலும் தீபம் ஒளி வீசியது, ஆம் அணைத்துக் கொள்ள அன்பான நெஞ்சங்கள் உள்ளவரை இந்த உலகத்தில் “அகதிகள்” என்று எவருமே இல்லை.


sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்