நாகரத்தினம் கிருஷ்ணா
திராவிடர்களுக்கும் ஆப்ரிக்க மக்களுக்கும் உள்ள உறவு தெரிஞ்சதுதான், அதை நாம மறந்தாலும் அவங்க மறக்கமாட்டாங்கண்ணு நினைக்கிறேன், மூட்டை மூட்டையா டாலரை சுமந்து முதுகு கூன்போட்டுவிட்டது கொஞ்சம் இறக்கிவைக்கணும் பங்காளி, உன்னுடைய வங்கிக் கணக்கைக் கொடு என்று கேட்டு, வாரத்துக்கு நாலு மின்னஞ்சலையாவது அனுப்பிவைக்கிறார்கள். எல்லாக் கடிதங்களிலும் பொதுவாக ஒரு விஷயமிருக்கும், கடிதம் எழுதுகிறவன் கற்பனையா உருவாக்கின வங்கியிலே, மில்லியன் கணக்கிலே டாலரை வச்சிட்டு வாரிசில்லாம ஒருத்தன் செத்துபோனதாகவும், தனித்து உண்ணல் தகாது என்றுணர்ந்த ஆப்ரிக்க நண்பர், உலகிலுள்ள கோடானுகோடியான மனிதன் முதல் கிருமி ஈறாக உள்ள ஜீவராசிகளில் நம்மைக் கண்டுபிடித்து(இளிச்சவாயனாக இருக்ககூடுமென்ற நம்பிக்கையில்), பகுத்துண்ண விரும்புவதாகவும், நம்ம அக்கவுண்ட் நெம்பரைக் கொடுத்தா பணமடையைத் திறந்து விடுவதாகவும் சத்தியம் செய்திருப்பார். இந்திய வம்சாவளியிலே வந்த நமக்கு இராமயனச் சகோதரர்களைக் காட்டிலும், மகாபாரதக் கௌரவர்களைத்தான் அனுபவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இந்த லட்சணத்தில் ஆப்ரிக்க பங்காளி தானதருமம் செய்ய முன்வந்தால் சந்தேகம் வரத்தானே செய்யும். அதிலும் அவர்கள் கற்பனையில் உதிக்கிற வங்கி ஒரு சுவிஸ் வங்கி அல்லது மேற்கத்திய வங்கியாக இருந்தாலும் ஓரளவு நம்பலாம். ஆப்ரிக்க கண்டத்தின் கடன்களில் ஐம்பது சதவீதத்திற்கு மேற்பட்டத் தொகையை, அந்நாடுகளின் தலைவர்கள்- சர்வாதிகாரிகள்- தங்கள் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் வெளிநாட்டுவங்கிகளில் போட்டுவைத்துள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கைத் தெரிவிக்கிறது. இதற்கு மேற்கத்திய நாடுகளும் உடந்தை. அவர்கள் நாட்டில் (மேற்கத்திய) விலை போகாதப்பொருட்களையெல்லாம், மூன்றாம் உலக நாடுகள் தலையில் கட்டுகிறபோது சம்பந்தப்பட்டத் தலைவர்களையும் கவனிப்பது ஊரறிந்த ரகசியம். இந்தியா போன்ற நாடுகளில் நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் போய்ச்சேருகிறதென்றால், ஆப்ரிக்க நாடுகளில் இறைக்கிற நீரெல்ல்லாம் புல்லுக்கு மட்டுமே பாய்கிற கொடுமையுண்டு. இங்கிலாந்து தனது நேற்றைய காலனி நாடுகளைக் குறித்து என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறதோ, பிரான்சைப் பொறுத்தவரை இன்றைக்கும் அவை காலனி நாடுகள்தான். பிரெஞ்சுக்காரர்களுடைய காலனி ஆதிக்கம் என்பது பதினேழாம் நூற்றாண்டில் ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதிவரை நீடித்திருந்தது எனலாம். காலனிய நிலப்பரப்பில் பிரிட்டன் மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்து மூன்றாவது இடத்தையே பிரான்சு பெற்றிருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் வட அமெரிக்காவிலும், ஆசியாவிலும் தனது காலனி ஆதிக்கத்திற்கு வேரூன்றிய போதிலும், பிரெஞ்சுகாரர்கள் பெருமைகொள்ள முடிந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம்வரை காலனி ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்த தென்கிழக்கு ஆசிய நாடுகள், வட ஆப்ரிக்க நாடுகள் மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளால். இன்றைய தேதிவரை குறிப்பாக மத்திய ஆப்ரிக்க நாடுகளைச்(மோரிட்டேனியா, செனெகல், மாலி, சாடு(Chad)…)சேர்ந்த மக்கள், பிரெஞ்சுக்காரர்களென்றால் முகம் சுளிப்பவர்கள் ஆனால் அவர்களின் த¨லைவர்கள் பிரெஞ்சு நிர்வாகத்திற்கு அடிபணிகிறவர்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணத்தைச் சொல்கிறேன்.
‘L’Arch de Zoe’ என்பது பிரான்சில் 2004ல் தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனம், நோக்கம் சுனாமியில் பாதிக்கப்பட்ட சிறுவர்களைத் தத்தெடுத்து, அவர்களது கடந்தகாலப் பண்பாட்டிற்குப் பாதகமின்றி வளர்த்து எதிர்காலத்திற்கு உத்தரவாதமளிப்பது. முதற்கட்டமாக சுமத்ராவிற்கு அருகில் Banda Aceh என்ற கிராமத்திற்கருகே ஒரு புணர்வாழ்வு இல்லம் அமைப்பது என்றெல்லாம் அறிவித்தார்கள். இந்தோனேசியாவிலிருந்து சுனாமியால் பாதிக்கபட்டிருந்த ஓர் அநாதைச் சிறுவனைப் பாரீஸ¤க்கு அழைத்துவந்து அவன் கால்களுக்குச் செய்யவேண்டிய அறுவைச் சிகிச்சையைச் செய்து செய்தித்தாளிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பிடிக்க தொண்டு நிறுவனத்தின் மதிப்பு பிரெஞ்சு மக்களிடையே ஓங்கியே இருந்தது. இந்நிலையில் ஏப்ரல்(2007) 24ந்தேதியிட்ட தொண்டு நிறுவனத்தின் அறிக்கை டார்·பர்(1) உள்நாட்டுப்போரை, ஐக்கிய நாட்டுச் சபை அலட்சியம் செய்து, பல்லாயிரக் கணக்கானவர்கள் படுகொலைக்கு காரணமாகிவிட்டதென்று குற்றம் சாட்டியது. தொடர்ந்து, அநாதையாக்கப்பட்ட பத்தாயிரம் சிறுவர்களை அங்கிருந்து வெளியேற்றி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யப் போவதாகவும், தத்தெடுக்க விரும்பும் குடும்பங்கள் தங்களோடு தொடர்பு கொள்ளவேண்டுமென்றும் அறிவித்தது. பலர் தொண்டு நிறுவனத்தின் போக்கே தவறு என்றார்கள், பல சட்ட சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தார்கள், பிரெஞ்சு அரசாங்கமும் தமது 14-6- 2007 அறிக்கையில் Arche de Zoe தொண்டு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல், அதன் நடவடிக்கைகள் அரசின் சட்டதிட்டங்களுக்கு ஒத்ததல்ல என்று அறிவித்தது. ஆனால் அடுத்தமாதமே- ஜூலையில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில், மனித உரிமை மற்றும் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் Rama Yade டார்·பர் அநாதைச் சிறுவர்களுக்கு உதவ விரும்பும் தொண்டு நிறுவனங்கள் தங்கள் திட்டத்தைத் தெரிவித்தால், அரசு பரிசீலிக்குமென அறிவித்தார், அதன்படி ஆறு தொண்டு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை முன் வைத்தன, அவற்றுள் Arche de Zoe ஒன்று. பிரெஞ்சு அரசாங்கத்தின் தரப்பில் ஆகஸ்டு 3,2007 அன்று மற்றொரு அறிக்கை. இம்முறை தொண்டு நிறுவனத்தினை நம்பி இறங்கும் குடும்பங்கள் எச்சரிக்கப்பட்டனர்: டார்·பர் களத்தில் இருக்கும் இதர அரசு சாரா நிறுவனங்கள் தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவாக இல்லை என்பதோடு, பிரச்சினைக்குறிய பிள்ளைகள் அநாதைகளா இல்லையா என்பதையும் உறுதிசெய்ய முடியவில்லை என்றும், சூடான் நாட்டுச் சட்டமும் தத்து எடுப்பதற்கு ஆதரவாக இல்லையென்பதால் இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக நடந்துகொள்வது அவசியமென்றும் வற்புறுத்தியது. தொண்டு நிறுவனம் ஆரம்பத்தில் பணத்தைப் பற்றி பிரஸ்தாபிக்கவில்லையென்றபோதிலும் 300 குடும்பங்கள் தலா குழந்தையொன்றிற்கு 2400 யூரோவை, டார்·பிலிருந்து வெளியிற்கொண்டுவரும் செலவுக்கென கொடுத்திருந்தார்கள், (தற்போதைய தகவலின்படி கிட்டத்தட்ட 550000யூரோவை தொண்டு நிறுவனம் வசூல் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது)
2007 அக்டோபர் மாதம் 24ந்தேதி, திட்டமிட்டபடி தத்தெடுத்தக் குழைந்தைகளுக்காக ஒரு சில குடும்பங்கள் பிரெஞ்சு விமான தளமொன்றில் காத்திருக்க, கடைசியில் ஏமாற்றத்தில் முடிந்தது. சூடான், சாடு பார்டர் எல்லையில் தொண்டு நிறுவனத்தினைச் சார்ந்தவர்களும் அவர்களுக்கு உதவிய மற்ற ஐரோப்பியர்கள், உள்ளூர் ஆட்கள் நான்குபேர் ஆக மொத்தம் பதினேழுபேரை சாடு அரசாங்கம் கைது செய்தது. அவர்கள் விமானத்தில் கடத்த முயன்றதாகச் சொல்லப்பட்ட சிறுவர் சிறுமியர் எண்ணிக்கை 103. இப்பிரச்சினையில் முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டியது பிரெஞ்சு தொண்டு நிறுவனம் சொல்வதுபோன்று உண்மையிலேயே அவர்களுடைய நோக்கம் அநாதைச் சிறுவர்களுக்குப் புணர்வாழ்வு கொடுப்பதா? அல்லது உள்நாட்டுப்போரால் பாதிக்கபட்டிருக்கும் டார்·பர் பக்கம் உலக நாடுகளின் கவனத்தைத் திருப்புவதா என்ற கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் இரண்டுமே உண்மையில்லை, கடத்தப்படவிருந்த சிறுவர்கள் அநாதைகள் இல்லை. குழந்தைகளின் ஏழைப் பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைகளை ஐரோப்பாவிற்குச் கொண்டு சென்று நன்கு வளர்க்க விரும்புகிறோம், பிறகு திரும்ப அனுப்பிவிடுவோம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளைக் கூறி மயக்கியிருக்கிறார்கள். தவிர அக்குழந்தைகள் பிரச்சினைக்குறிய டார்·பூர் பிரதேசத்துக் குழந்தைகளும் அல்ல அதன் எல்லையிலுள்ள சாடு நாட்டைச் சேர்ந்த கிராமத்தின் குழந்தைகள்.
வேறு சில சந்தேகங்களும் எழுகின்றன அதாவது ஏன் அக்குழந்தைகள் சிறுவர் விபச்சாரத்திற்காகவோ அல்லது மனித உறுப்புகளுக்காகவோ(தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஒரு மருத்துவர்), கடத்தப்பட்டிருக்கக்கூடாது? அனைத்துக்கும் மேலாக இன்றைய தேதியில் ஐரோப்பிய நாடுகளில் தத்தெடுப்பதென்பது இலாபகரமான தொழில் அல்லது வியாபாரம். இத்தனைச் சந்தேகங்கள் இருப்பதால் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் தண்டிக்கப்படத்தானே வேண்டும் அதுதானில்லை. சாடு அரசாங்கம் தொண்டு நிறுவனத்தினரை கைது செய்த போது அனைத்துத் தரப்பினரும் அவர்கள் தண்டிக்கப்படக்கூடியவர்கள் என்றே நினைத்தனர். ஆனால் நடந்தது வேறு. இங்கேதான் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல ஆப்ரிக்க நாடுகளுக்கேயுரிய பிரச்சினைகள் மூக்கை நுழைக்கின்றன. 1960ம் ஆண்டுவரை சாடு பிரெஞ்சு காலனியாக இருந்தது. தற்போதைய அதிபர் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதே பிரெஞ்சு அரசாங்கத்தின் தயவில். எதிர்ப்பாளர்கள் எப்பொழுதெல்லாம் அதிபருக்கு எதிராக கலவரம் செய்து, ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார்களோ அப்போதேல்லாம் பிரெஞ்சு அரசாங்கம் தனது படையை அனுப்பி அதிபரைக் காப்பாற்றி வருகிறது. எனவே Arche de Zoe அமைப்பாளர்கள் சாடில் தீர்ப்பு கூறப்பட்டு அங்கே தண்டனையை அனுபவிக்காமல் பிரெஞ்சு சிறைக்குக் கொண்டுவரப்பட்டு, கடைசியில் சாடு அதிபர் கருணையுடன் மன்னிப்பு வழங்க இன்றைக்குச் சுதந்திர பறவைகள். கடைசியில் முத்தாய்ப்பாக ஒரு செய்தி குழந்தைகளைக் கடத்த Arche de Zoe தொண்டு நிறுவனத்திற்கு(?) உதவிய விமானம் பிரெஞ்சு அரசாங்கத்திற்குச் சொந்தமானது.
1. மேற்கு சூடானைச் சேர்ந்த பல்வேறு பழங்குடிகளைச் சேர்ந்த பிரதேசம், பலகாரணங்களை முன்னிட்டு 2003லிருந்து அவர்களுக்குள் யுத்தம் நடந்துவருகிறது, அவர்களில் ஒரு பிரிவினருக்கு சூடான் அரசாங்கத்தின் ஆதரவு இருந்துவருகிறது, விளைவு, எண்ணற்றமக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள், உயிரிழப்பும் அதிகம். http://en.wikipedia.org/wiki/War_in_Darfur
- தாகூரின் கீதங்கள் – 26 இசை எழுப்புபவன் யார் ?
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரிய குடும்பம் எப்படி உண்டானது ? (கட்டுரை: 25)
- சுஜாதா
- ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது..!
- தமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்
- சிவமடம்
- Last Kilo byte – 11 ஒத்த சொல்லு, ஒத்த பானம், ஒத்த கேசு, ஒத்த பேரு
- Lecture on “A Study on the status of traditional shadow puppetry and puppeteers of South India” by Dr.R.Bhanumathi
- இப்னுபஷீரின் சிரிப்பு
- இலக்கிய வட்டம், ஹாங்காங்
- சித்திரைதான் புத்தாண்டு
- காலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- தமிழ் விடுதலை ஆகட்டும்!
- விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி
- க ழ னி
- கண்ணதாசன் காப்பியடித்தானா?
- ஈழத்தமிழரின் அனுதாபி சுஜாதா
- வரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க!
- பெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – சுப்ரபாரதிமணியன் “ஓடும் நதி (நாவல்)
- ஏமாற்றுத் தமிழ்ப்பற்று!
- நர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்
- கவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய நிழல் தேடும் கால்கள் வெளியீட்டு விழா
- “சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா” கட்டுரை குறித்து
- காற்றினிலே வரும் கீதங்கள் – 15 கருமேனியான் வருகை அறிவிப்பு !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது)
- கடைசி உணவு நாட்கள்
- ஜெயாவும், அவர் சார்ந்த துயரங்களும் !
- சம்பந்தமில்லை என்றாலும் – திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்
- யாம் மெய்யாய் கண்டவற்றுள்
- தலைப்பில்லா கவிதை
- திறப்பதற்கு மறுக்கட்டுமே !…
- எட்டு கவிதைகள்
- நான், நீ, அவன்
- சிலரின் கைகளில் விமர்சனம்
- வெளி – விதைத்ததும் விளைந்ததும்
- உலகம் உலர்ந்து விட்டது
- மரணம்-வியாக்கியானம்-இறந்தவர்கள்
- தேடலில்…!
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 7
- ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்
- தமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்
- தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 2