பத்ரிநாத்
அவள் மாநிறத்தவளானாலும், அவள் முகத்தின் தேஜஸ் மனதை அட்டை போல் கவ்வியது.. கன்னக் கதுப்புகளில் தெரியும் செழுமை.. செதுக்கப்பட்டதைப் போல இருக்கும் உதடுகள்.. அதிலும் அதிகமானச் சதைப் பற்றுள்ள கீழுதடு.. ஓவியம் போல இருக்கும் கண்கள்.. நீளமான கருமுடி.. அதற்கு மேல் வர்ணிப்பதற்குமுன், சுவாமிகள் அறையில் பிரவேசித்தார்.. இன்று பக்தர்கள் கூட்டம் குறைவு. இருப்பினும் அவள் சுவாமியைத் தரிசிக்க வந்திருக்கிறாள்.. ருக்மாங்கதன் தன் ஆவலை அடக்கிக் கொண்டான். சுவாமிகளுக்கு வேண்டிய சிஸ்ருக்ஷைகள் நிறைய இருக்கிறது.. துளசி தீர்த்தம், கோபீ சந்தனம், பசுவின்பால், தயிர், நெய், கோமூத்திரம் மற்றும் பூஜைக்கு வேண்டிய புஷ்பங்கள் எடுத்தாகிவைத்து விட்டது.. ஏதாவது ஒன்று குறைந்தாலும் சுவாமிகள் அவனைத்தான் பார்த்துச் சைகை செய்வார்.
ருக்மாங்கதன் சுவாமிகளின் பிரதான சிஷ்யர்களில் ஒருவன்.. அடுத்தாகப் பீடத்திற்கு அவன்தான் வரப்போகிறான் என்ற பேச்சு பரவலாக வந்து கொண்டருக்கும் இந்நேரத்தில் அம்மாதிரியான நினைவுகள் அவனுக்குத் தேவையா.. ? அவன் மனம் அவனைக் கொன்றது.. இது என்ன சிந்தனை.. ? சந்நியாசம் வாங்கிக் கொண்டு உலகை உய்விக்கப் போகும் இவ்வேளையில் இந்தக் காமத்தீ தொடிற்சுடின் அல்லது காமநோய்ப் போல இவனை வாட்டியது.. இது பாவமல்லவா.. அவனால் இந்நோயை வெல்ல முடியவில்லை.. என்ன செய்வது.. ? எப்படி இந்நோயை கொல்வது.. ?
சுவாமிகள் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.. அங்கு அனைவரும் அமர்ந்து, சொற்பொழிவைக் கேட்டார்கள்..
‘ ‘… மனித ஜென்மமே துர்லபம்.. இந்த ஜென்மத்திலிருந்து தான் நாம் மோட்சத்திற்குப் போகமுடியும்..நமது மத சாதானானுஷ்டானம் செய்யதாதிருந்தால், பிறகு ஆறறிவு பெறாத பிராணிகள் நிலையையும், பிறப்பையும் அடைய நேரிடும்.. ஆண்டவன் இப்படிப் பட்ட ஜென்மத்தைக் கொடுத்து சாதனானுஷ்டானம் செய்வதற்காக மட்டுமே என்பதை நாம் பலமுறை மறந்து மிருகங்களைப் போல உண்பது உறங்குவது, சுகப்படுவது இப்படியாகச் செய்து கொண்டு வந்தால், பகவான் தந்த வாய்ப்பை பயன்படுத்தாத படியால் இவன் இந்த ஜென்மத்தை பாழாக்கிவிட்டான்.. இனிமேல் இப்படிப்பட்ட ஜென்மத்தைக் கொடுக்கக் கூடாது.. உண்டு தின்று உறங்கும் பிராணி ஜென்மமே போதும் என்ற முடிவுக்கு, பகவான் வந்துவிடுவான்.. ஆகவே, ஆன்மீக பக்தகோடிகள் இது விஷயமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. நம்மால் முடிந்த சிறிதளவான அனுஷ்டானத்தைப் பக்தி பூர்வமாக செய்வதுடன் நமது பந்து பரிவாரங்களையும், தர்ம மார்க்கத்தில் தூண்டி நாமும் உயர்வு அடைந்து, அவாளையும் உயர்வடைய முயற்சி எடுத்தல் அவஸ்யம்… ‘ ‘,
சொற்பொழிவு நடந்து கொண்டிருந்த சமயத்தில், அவள் எழுந்து வாசலில் வந்த பெரியவரை வரவேற்று உள்ளே அழைத்து வந்ததை ருக்மாங்கதன் கவனித்தான்.. அவள் எழுவதே ஓர் அழகு.. உட்காருவது ஓர் அழகு..அவள் சுவாமிகளிடத்தில வந்து, அருகே பெரியவரைக் காட்டி எதோ சொல்ல அவர் இங்கிருந்தே ஆசிர்வதித்தார்.. சுவாமிகள் தொடர்ந்தார்..
‘ ‘அஸாத்ய ஸாதக ஸாவமிந் அஸாத்யம் தவகிம் வத… ‘ ‘ —என்ற மந்திரங்களைக் கொண்டு ஜபித்தால், ஸர்வ கார்ய ஸித்தி உண்டாகும்… ‘ ‘,
சுவாமிகள் அனைவரையும் ஆசிர்வதித்து, பிரசாதங்களை அருளினார்.. அவள் சுவாமிகளிடத்தில் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.. அவளை ருக்மாங்கதன் சில நாட்களாக இங்குப் பார்த்து வருகிறான்.. முதல் சந்திப்பிலேயே ருக்மாங்கதன் கிறங்கிவிட்டான்.. அவள் ஏதோ பக்கத்து கிராமத்திலிருந்து வருகிறாள் என்பதைத் தெரிந்து கொண்டான்..
இவர்கள் ஹோசூரில் முகாமிட்டு இரண்டு மாதங்கள் ஆகிறது.. அடுத்ததாக, ஸ்ரீரங்கம் அன்பர்களும், கோவை பக்தர்களும் அழைத்திருந்தார்கள்.. ருக்மாங்கதனுக்கு இந்தப் பெட்டித் தூக்கும் வேலை அலுத்துவிட்டது.. சுவாமிகளிடம் தன் அபிலாஷைகளை எப்படித் தெரிவிப்பது என்று திணறினான்,. ‘ ‘அய்யோ.. என்னால் இந்த இல்லற வாழ்க்கை வேட்கையை விடமுடியவில்லையே… அதுவும் இப்பெண்ணைப் பார்த்தது முதல் இவ்வேட்கை இரட்டிப்பாகிவிட்டது.. ‘ ‘..
சுவாமிகளிடன் இதைப் பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டும்.. ‘ ‘ ஸ்வாமி.. என்னை க்ஷமியுங்கள்.. என்னால் துறவறத்தை ஏற்க முடியாது.. மனம் இந்த ஸ்திரியின் பின் சென்றுவிட்டது.. என்னால் இந்தச் சன்னிதானத்தின் புகழ் க்ஷீணிக்க வேண்டாம்.. ஹே.. பரமாத்மா.. ‘ ‘, என்று சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்.. ஆம்.. அவன் முடிவுக்கு வந்தான்..
ஆனால் அவளிடம் எப்படித் தெரிவிப்பது.. அவள் பெயர் கூட நிர்மலா தேவி என்று ஒருவர் கூப்பிடத்தான் அவனுக்குத் தெரியவந்தது.. மற்றபடி சுவாமிகளைப் பார்த்துவிட்டு, அவள் இவனைப் பார்க்கும் போது, புன்னகைப்பாள்.. அது எதற்கான புன்னகை என்று இவன் பலமுறை யோசித்திருக்கிறான்.. ஓரு வேளை.. ஒரு வேளை.. ‘அவளுக்கும் ஏதோ ஓர் அபிப்பிராயம் என் மேல் ஏற்பட்டுவிட்டதோ.. ‘ இதுதான் கருத்தொருமித்தலோ..அவன் மனம் குதூகலித்தது.. அதோ .. அவள்.. தீர்த்தப் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருகிறாள்.. என் திசையை நேக்கித்தான் வந்துகொண்டிருக்கிறாள்..
‘ ‘குமாரி நிர்மலா தேவி.. ‘ ‘, என்றான்..
‘ ‘எ.. என்ன சுவாமிஜி.. ‘ ‘, அவனையும் சுவாமிஜி என்றுதான் அழைப்பாள்.. கண்களில் மிரட்சி..
அவளைத் தனியாக அழைத்தான்..
‘ ‘ கொஞ்சம் பேசணும்.. சுவாமி ஆசி நேக்கு நெறய உண்டு.. சொல்றத கவனமாக நீங்க கேக்கணும்.. ‘ ‘, என்று ஆரம்பித்தான்.. இது என்ன.. நான் ஒரு பிரசங்கத்தைப் போல் அல்லவா ஒரு பெண்ணிடம் இந்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. பல்லால் நாக்கைக் கடித்துக் கொண்டான்..
‘ ‘சுவாமிஜி.. ஆத்துல அப்பாண்ட பேசுங்க.. ‘ ‘, இனிமையான யாழ் குரலில் முந்திக் கொண்டு சொன்னாள்.. அடிக் கள்ளி.. இவ்வளவு சீக்கிரத்தில் விஷயத்தைப் புரிந்து கொண்டு விட்டாளே.. அட.. நாம் நினைத்ததைப் போலத்தான்..
‘ ‘சாயரட்ச வரட்டுமா.. ‘ ‘, என்றான் ஆசையுடன்..
அவனைப் பார்க்காமல் அழகாகத் தலையசைததாள்.. ருக்மாங்கதனுக்குத் தலை கால் புரியவில்லை..
‘அட ஈஸ்வரா.. என்னே நின் கருணை.. என் மனுவை, மனோபீஷ்டத்தை இவ்வளவு சீக்கிரத்தில் சுவீகரித்துக் கொண்டாயோ.. ஹே.. பகவானே.. ‘ மனம் அரற்றியது.. இனி.. சுவாமிகளிடம் கூறி ஆசி வாங்க வேண்டியது மட்டும்தான் பாக்கி.. அது கடினமாக காரியம் அல்ல.. அதுவும் இல்லாமல் நான் கிரகஸ்தத்தை ஏற்கக் கூடாது என்று தடுக்க யாருக்கும் உரிமையும் இல்லை.. நிச்சயமாக சுவாமிகள் அவனைத் தடுக்க மாட்டார்.. அதற்கு முன்னர் நிர்மலாவின் தந்தையைப் பார்த்துப் பேசி, ஒரு சுபயோக சுபதினத்தில் விவாஹத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்..
அந்தக் கிராமத்தில் அவர்கள் வீடு கொஞ்சம் பெரியதாக இருந்தது.. விசாலாமான திண்ணை.. காவியும் வெள்ளையும் பளிச்சென்று அடித்திருந்தார்கள்..
ருக்மாங்கதனைப் பார்த்ததும் ஏகமரியாதை செய்தார்கள்.. நிர்மலாவின் தந்தை சாஷ்டாங்கமாக காலில் விழுந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்தான் ருக்மாங்கதன்..
‘ ‘சன்னிதானம் வீடு தேடி வர நாங்க பாக்யம் செஞ்சிருக்கணும்.. ‘ ‘, என்றார் பயபக்தியுடன் தந்தை..
‘ ‘வரவேண்டியதா ஆய்டுத்து.. ‘ ‘, ருக்மாங்கதனுக்குச் சொற்கள் தடுமாறின..
தந்தையே தொடர்ந்தார்.. ‘ ‘இதனால பிரச்சன மடத்துக்கு வரப்படாது.. அதுக்கு நாங்க காரணமா ஆகிடக் கூடாது.. ‘ ‘., என்றார் அவர்..
அட.. பரவாயில்லையே.. நிர்மலா காரியத்தைச் சுலபமாக்கிவிட்டாள்.. அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டாள் போலும்.. நமக்கு வேலையே இல்லை என்று நினைத்தான்..
‘ ‘வர்ற இங்கிலீஷ் தேதி 15 முஹூர்த்தம்.. அதுக்கு முன்னால உங்க பங்ஷன் 10ந் தேதி வச்சுடப் போறதா சொன்னார்.. ஏன்னா ஒரு 5 நாள் கேப்பு வேணும்னு சொல்லிண்டிருந்தார்.. ‘ ‘, என்றவர், ‘ ‘ என்ன நான் சொல்றது சரிதான.. ‘ ‘, என்று வேறு கேட்டார்..
ருக்மாங்கதன் குழம்பினான்.. இது என்ன இந்த மனிதர் 10ந் தேதி என் பங்ஷன் என்று கூறுகிறார்.. புரியவேயில்லையே..
‘ ‘க்ஷமிக்கணும்.. அது என்ன 10ந் தேதி.. ‘ ‘,
‘ ‘தெரியாதா.. அட.. நிர்மலா.. இங்கப் பாரு.. சுவாமி இவரண்ட சொல்லயேயில்லையாம்.. அதான் என்னண்ட சொன்னார்.. ருக்மாங்கதன்கிட்ட அப்புறமா தெரிவிக்கிறேன்னு.. ‘ ‘, என்றவர் நிறுத்தினார்.. பின்னர் தொடர்ந்தார்.. ‘ ‘சுவாமிஜி.. உங்களுக்கு 10ந் தேதி பட்டாபிஷேகம்.. அடுத்த பீடாதிபதியாக.. 15ந் தேதி பெரியவருக்கும் நிர்மலாவுக்கும் விவாஹம்.. மன்னிக்கணும்.. உங்க பட்டாபிஷேகத்தைப் பத்தி உங்களண்டயே சொல்றேன்.. ‘ ‘, என்று சிரித்தார்..
****
ருக்மாங்கதன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது, அந்தத் தெருவின் திருப்பத்தில் நிர்மலாவைப் பார்த்தான்.. அவனைப் பார்த்ததும் அவள் விழுந்து வணங்கினாள்..
‘ ‘நான் எத்தனையோ தடவ சொல்லியும் பெரியவர் கேட்கல.. என்ன மன்னியுங்கோ.. எல்லாம் நடந்தப்புறம் விவாஹம் செய்யமா இருக்க முடியுமா.. ? அதான் நான் கண்டிப்பா அவரண்ட சொன்னேன்.. அப்பறம்தான் ஒங்களுக்கு அடுத்த பட்டத்தைக் கொடுத்துட்டு கல்யாணம் செஞ்சிகிறேன்னு சொன்னார்.. ‘ ‘,
ருக்மாங்கதன் அதற்குமேல் அவர்கள் காதல் கதையைக் கேட்க விரும்பவில்லை..
****
(1998)
prabhabadri@yahoo.com
- மெய்மையின் மயக்கம்-23
- ஐசாக் அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் சமயம்
- டிராக்கின் மின்னணுக்குழிக் கோட்பாடு.(Dirac ‘s hole theory)
- DRDO வெள்ளை யானையா ?
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (6)
- நேசகுமார்களுக்கு நேசமுடன்
- தஞ்சைப் பெரியகோவிலின் புத்தர் சிற்பங்களும், திபெத்திய புத்த சித்தர்களும்
- உரத்த சிந்தனைகள்- 5 – தொடரும் அவலங்கள்
- அ.முத்துலிங்கம் பரம்பரை -6
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 7
- கருப்புக் குதிரை கூட்டுரோட்டில் காலைச் சாப்பாட்டு நேரம்
- கடிதம் அக்டோபர் 28,2004
- கடிதம் அக்டோபர் 28,2004
- கடிதம் அக்டோபர் 28,2004 – பெயர் சூட்டும் பெருந்தகையோரே!
- கடிதம் அக்டோபர் 28,2004 – விடுதலை க. இராசேந்திரன் எழுதிய வீர( ?) சாவர்க்கர்: புதைக்கப் பட்ட உண்மைகள் ‘
- கடிதம் அக்டோபர் 28,2004 – தமிழில் குர்ஆன்
- நிழல் – தமிழில் திரைப்படம் பற்றிய இதழ்
- ஊடாத உன் நான்
- சுட்ட வீரப்பன்
- கீதாஞ்சலி (2) (வழிப்போக்கன்) (மூலம் கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- தனியார் ஊடகங்களுக்குத் தேவை – தணிக்கை!
- விருந்தாளிகள் புலம்(பல்)
- தேவதரிசனம்! (அறிவியற் கதை!)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 43
- யாதனின் யாதனின்….
- வாரபலன் அக்டோபர் 28,2004 –
- திசை மாறும் திருமாவளவன்
- புலம்பல் – பக்கம்:1 வெள்ளியும் மழையும் இன்ன பிற புலம்பல்களும்
- சீனி பூசிய தாலிபானிசம் – ரூமியின் ‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘
- சொற்களின் சீனப்பெருஞ்சுவர்
- வடிகால்
- தனியாய் ஓர் ரயில் பயணம்
- பேதமை
- களை பல….
- நீயா அவள்
- பெரியபுராணம் – 15 ( இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )
- எங்கெங்கும்
- வெறுமை
- களை பல….