ராம்ப்ரசாத்
மூன்றாம் வருட பயிற்சி வகுப்பை விட்டு வெளியே வருகையில் கல்லூரி முழுவதும் என் கண்கள் அலைபாய்ந்திருந்தன அவளைத் தேடி. ரீனா வழக்கமாக கல்லூரி மைதானத்தை ஒட்டிய பார்க்கில் அவளின் தோழிகளுடன் இருந்து நான் பார்த்திருக்கிறேன். அவளை அங்கு எதிர்பார்த்து நானும் அங்கு சென்றேன். மணி மாலை ஐந்தைக் கடந்திருந்தது. கல்லூரி வகுப்பறைகள் பெரும்பாலும் காலியாக இருந்தன. வெறுமையான வகுப்பறைகள் ஏனோ திகிலாய் இருந்தது பார்ப்பதற்கு. பழக்கப்பட்ட இடங்கள், அதன் வழக்கத்தில் இல்லாமல் இருந்தாலே ஏதோ அமானுஷ்யமாய்த் தான் தோன்றுகிறது. வெகு நாட்களாய் பூட்டியே கிடக்கும் வீடு போல இந்த வகுப்பறைகளும் தன் இயல்பில் எப்போதும் கல்லூரித்தோழர்களின் கிண்டலும் கேலியும் இல்லாமல் இருப்பது ரொம்பவே வெறுமையாய் இருப்பது போல இருந்தது. அதனால் அவசரமாக காரிடார் கடந்தேன்.
அவளைத் தேடி பார்க் அருகே சென்ற போது அவள் அங்கு இருக்கவில்லை. ஒரு வேளை இன்னும் அவள் இங்கு வராமல் இருந்திருக்கலாம். இனிமேல் தான் வருவாளோ என்னமோ? அவளுக்காக காத்திருக்கலாம் என்று தோன்றியது. இதுவரை ஓரிருமுறைகள் தவிர அதிகமாக அவளிடம் பேசியது இல்லை. ஆனால் வெகு நாட்களாய் என் பார்வையில் அவள் பதிந்துதான் இருக்கிறாள். எதற்குமே ஒரு தொடக்கம் என்பது வேண்டுமல்லவா? அந்த தொடக்கம் இன்றைக்காய் இருக்கட்டுமென்று நான் அங்கேயே அவளுக்காய் காத்திருக்கலாமென்று முடிவு செய்தேன். இந்த நேரத்தில் என்னை இங்கு யாரெனும் பார்த்தால் வித்தியாசமாய் நினைப்பார்களோ என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை யாரும் இல்லை. இப்போதைக்கு யாரும் வருவார்களென்றும் தோன்றவில்லை. அப்படியே வந்தாலும் யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாதென்று, அந்த பார்க்கில் இருந்த ஒரு பெயர் தெரியா மரத்தின் கீழே வந்து நின்று திரும்பிப் பார்த்தேன். என்னை முழுதாக மறைக்கவே அந்த மரம் அங்கு இருப்பது போலப் பட்டது எனக்கு. மாலை கவிழ்ந்து விட்டதென்பதால், வெக்கையாக இல்லாமல், சன்னமாக எரியும் விறகின் மிதமான வெப்பத்துடன் இருந்தது.
பெயர் தெரியா மரத்தின் மறைவில் அந்த புல் தரையில் இரண்டு கால்களையும் நீட்டி, கைகளை பின்னுக்குத் தள்ளி தரையில் முட்டுக்கொடுத்தவாறு அமர்ந்து அவளுக்காக காத்திருக்கத் தொடங்கி சில நொடிகள் தான் கடந்திருக்கும். அப்போது தான் அது நடந்தது. அந்த பெயர் தெரியா மரத்தின் அடியில் இருந்த செடி, காற்றின் திசைக்கு அசையாமல் தன்னிச்சையாய் அசைந்தது. அந்த செடி சற்று வித்தியாசமாய் இருந்தது. ஒற்றைத் தண்டு மட்டுமே இருந்தது. இரு பக்கமும் நீட்டிய காம்புகளில் இலைகள் ஏதுமில்லை. மேற்புறமாக நீண்டிருந்த காம்பில் ஒரே ஒரு பெரிய இலை, நன்றாக பச்சையென செழித்து வளர்ந்திருந்தது. புருவங்களை லேசாக சுருக்கியபடியே நான் உற்று கவனித்தேன்.
ஒரு இலைக்கு கண், மூக்கு, வாய் இதெல்லாம் குட்டி குட்டி பச்சை புழுக்கள் கொண்டு செய்தால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது. ஒரு மனிதனின் உருவத்தில் காம்புகளே கை கால்களாய் கொண்டிருந்தது. அதன் காம்புகள் அசையும் விதம் லாவகமாய், இலகுவாய் இருந்தது. காற்றில் ஆடிக்கொண்டே என் கால்களைத் தொடும் பாவனையில் சட்டேன அது முன்னே நீண்டு வர, அவசரமாய் அனிச்சையாய் ஒரு பயத்தோடு சட்டேன என் கால்களை இழுத்துக்கொண்டேன். எனக்கு வினோதமாக இருந்தது. சுற்றிலும், அங்குமிங்கும் பார்த்தேன் யாரும் இல்லை. அமானுஷ்யமாய் இருப்பது போலப் பட்டது.
கண் கண்டதை நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. சுருங்கிய புருவங்களோடு என் கண்ணிமைகளும் சேர்ந்து கொள்ள, இப்போது என் கண்களுக்கு அது தவிர வேறு எதுவும் தெரியவில்லை. அந்த செடியை(!?) நான் சற்றே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கையில், அந்தக் குரல் கேட்டது.
‘யார் நீ?’ அந்த செடி இருக்கும் திசையிலிருந்து தான் கேட்டது. அந்தக் குரல் உருவான இடம், அந்த செடியைத் தாண்டி இருக்கும் என்று தோன்றவில்லை. அங்கிருந்தே கேட்டதாய் ஒரு உணர்வு. என்னையும் அறியாமல் என் வாய் குழற தொடங்கியது.
‘நான் …ஆஆஆ’.
‘இங்கென்ன செய்கிறாய்’ அதன் குரல் அதட்டும் தோணியில் இருந்தது. என் வாய் குழறுவதை நானே உணர்ந்தபடியால், அதட்டும் அதனிடம் என் தடுமாற்றத்தை காட்டிக்கொள்ள விரும்பாமல் பதிலுக்கு அதனை அதட்டும் தோரணையில் தொடர்ந்தேன்.
‘நீ யார்?’.
என் கேள்வியை அது சட்டை செய்ததாகக் கூட தெரியவில்லை. என் பதில்கேள்வி அதனிடம் எடுபடவில்லை என்பது அடுத்து வந்த அதன் கேள்வியில் புரிந்தது.
‘உனக்கு இங்கே என்ன வேலை?’ மறுபடியும் அதே அதட்டும் தோணி.
மீண்டும் ஒரு முறை சுற்றிலும் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை. அதனிடம் என் உருவமோ, உருட்டலோ மிரட்டலோ செல்லுபடியாகும் என்று தோன்றவில்லை. தவிர நடப்பவை அனைத்தும் மிகவும் வினோதமாக இருந்தது. அதை உடனுக்குடன் ஜீரணிக்க, அசை போட போதிய கால அவகாசம் இருக்கவில்லை.
போகிற போக்கில் அடுத்து ஏடாகூடாமாய் ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்று தோன்றியது. சற்றே பணிவு காட்டி அதன் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ளும் தோரணையில் இறங்கி அதற்கு பதிலளிக்கலானேன்.
‘ நா நான் ரீனாவுக்காக காத்திருக்கிறேன்’ என்றேன்.
ரீனா யாரென்று இதற்கு தெரியுமா? அப்படிச்சொன்னவுடன் எனக்கே தோன்றியது. ரீனாவைப் பற்றி மூன்றாம் மனிதரிடம் சட்டென பேசிவிட்டதற்காய் என் நாவை நானே கடித்துக்கொண்டேன். இப்போது ரீனாவைப் பற்றி கேட்குமோ என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையிலேயே அது கேட்டது.
‘யாரு, போன வாரம் நீ இந்த பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாயே அவளா?’.
எனக்கு தூக்கிவாரிப்போட்டது. அது சொன்னது உண்மைதான். போன வாரம் அவளுடன் இதே இடத்தில் பக்கத்திலிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் அது இதற்கு எப்படித் தெரியும். ஒரு வேளை வெகு நாட்களாய் என்னை நோட்டம் விடுகிறதோ? என்னை ஏன் நோட்டம் விடவேண்டும்?
நான் குழம்பிக்கொண்டிருக்கையிலேயே அது தொடர்ந்தது.
‘அவள் சற்று முன் தான் கோபியுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றாள்’ என்றது.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நடப்பதை என்னாலேயே நம்பமுடியவில்லை. யாரேனும் பார்த்தால் பார்க்கில் தனியே பேசிக்கொண்டிருப்பதாய் நினைப்பார்களோ என்று தோன்றியது. ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வு என்னிடம் வந்து ஒட்டிக்கொள்வதை என்னாலேயே உணர முடிந்தது. இதற்கு எல்லாம் தெரிந்திருக்குமோ? எல்லாரையும் தெரிந்திருக்குமோ? இதனை எப்படிக் கையாள்வது? கோபி யார்? அவனுடன் ரீனா ஏன் பேசவேண்டும்? என்ன பேசியிருப்பாள்?
‘கோபியா? அது யார்? உனக்கேப்படி தெரியும்?’ நான் ஆர்வமிகுதியில் கேட்டே விட்டேன்.
‘ நான் அவ்வப்போது கண்விழிப்பது உண்டு. சென்ற வாரம் கண்விழித்தபோது நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள். நான் கூப்பிடும்முன் போய் விட்டீர்கள்’ என்றது.
நான் எதையோ கேட்க அது எதையோ பற்றி சொன்னது. எனக்கு எதை யோசிப்பது எதை விடுவது என்றே விளங்கவில்லை. ரீனாவைப் பற்றி அது பேசியதால் அதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் கட்டாயம் வந்தது.
‘நீ யார்?’ என்றேன்.
‘நீ ரீனாவைக் காதலிக்கிறாயா?’ என் கேள்வியை சுத்தமாய் புறக்கணித்துவிட்டு அது தன் போக்கிற்கு என்னிடம் கேட்டது என்னைக் கோபமூட்டியது. நான் பதிலேதும் சொல்லவில்லை.
அது என்னையே மெளமாக பார்த்துக்கொண்டிருந்ததாக எனக்குப் பட்டது.
‘நான் எதற்காக உனக்கு பதில் சொல்ல வேண்டும்’ மெளனத்தை நானே கலைத்தேன்.
‘உண்மையைத் தெரிந்துகொள்ள’ என்றது அது.
‘என்ன உண்மை?’ என்றேன் நான்.
‘ரீனாவைப் பற்றிய உண்மை’ அது தெளிவாக பேசியது. என் குடுமி அதன் கையில் இருப்பதாய் பட்டது எனக்கு. ரீனாவைப் பற்றி என்ன உண்மை? அது என்னவாக இருக்கும்? என் மனம் அலைபாய ஆரம்பித்திருந்தது. அதனிடம் தர்க்கம் செய்தால் சரிவராது என்று தோன்றியது. இரண்டாவது முறையாக மீண்டும் அதன் வழிக்கு வந்தேன்.
‘உண்மை என்ன?’ என்றேன் நான்.
‘உண்மை என்னவென்றால், மனிதர்கள் குருடு செவிடு’ என்று நிறுத்தியது அது.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்கிறது இது? ரீனாவைப் பற்றிய செய்தியை எதிர்பார்த்திருந்த எனக்கு ஏமாற்றமாய் இருந்தது. அது என்னை வம்பிக்கிழுக்கிறதோ என்று கூட தோன்றியது.
‘என்ன?’ புரியாமல் கேட்டேன்.
‘என் பாட்டி சொல்வாள், மனிதர்கள் குருடு செவிடு என்று’ என்றது.
‘ஏன் அப்படி?’ பொருமை காத்தேன் நான்.
‘மனிதன் கண்ணால் பார்ப்பதை மட்டுமே உள்வாங்குகிறான். கண்ணால் பார்ப்பது என்பது வேறு, உண்மை என்பது வேறு’ என்றது அது.
எனக்கு ஏதோ புரிவது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
‘ நான் காட்டில் இருந்தேன். என் பாட்டியுடன். என்னை அங்கிருந்து பிய்த்து இங்கே கொண்டுவந்துவிட்டார்கள். நான் அழகாக இருந்தேனாம்.’ என்றது.
அழகா? இதுவா? எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரே ஒரு இலைதான் இருந்தது. இது எப்போதிலிருந்து இங்கிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நான் கவனித்ததில்லை. ஒரு வேளை இங்கே வந்த போது அது அழகாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அதையே பார்த்திருந்தேன். அதுவே தொடர்ந்தது.
‘அவர்கள் கண்களுக்கு என் அழகு மட்டுமே தெரிந்திருக்கலாம். காட்டில் நான் என் பாட்டியுடன் இருக்க வேண்டியவன். என்னை என் பாட்டியிடமிருந்து பிரித்துவிட்டார்கள். காட்டை அழித்திருப்பார்கள் இன்னேரம். அங்கு செங்கல்லில் காடுகள் கட்டியிருப்பார்கள். என் இயல்பை என்னிடமிருந்து வலுக்கட்டாயமாய் பிரித்துவிட்டார்கள். காட்டில் மட்டுமே வாழ பழகியவன் நான். இங்கே என் ஆரோக்யம் குன்றிவிட்டது. நான் நானாக இல்லை. ஆனால் அது இவர்களுக்கு தெரியவில்லை. என் கூக்குரல் யாருக்கும் கேட்பதில்லை. என்னை இங்கே கொண்டு வந்து வைத்துவிட்டு, பசுமையை உருவாக்கிவிட்டதாய் தங்களுக்குள் பரிசுகள் கொடுத்துக்கொண்டார்கள். என் பாட்டி அடிக்கடி சொல்வாள், மனிதர்கள் குருடு செவிடு என்று’.
நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். அது சொல்வதெல்லாம் உண்மைதான். இந்தக் கல்லூரி சேர்ந்த நாளிலிருந்து இந்த செடியை(!?) பற்றி நான் அக்கறை கொண்டதே இல்லை. இப்படி ஒன்று இருக்கிறதென்று கூட தெரியாது. நான் மெளனமாய் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அது தொடர்ந்தது.
‘நீயும் குருடாகத்தான் இருக்கிறாய். ரீனாவை உனக்கு பிடித்திருக்கிறது. அவள் அழகு உனக்குப் பிடித்திருக்கலாம். உன் பார்வையில் அவள் என்னவாகத் தெரிகிறாளோ அதுதான் அவள் என்று நீ நம்புவாய் அல்லது அதுவாகத்தான் அவள் இருக்கவேண்டும் என்று நினைப்பாய். அவளை உனக்கானவளாகத் தான் நீ பார்ப்பாயே தவிர ரீனா என்பவள் எப்படிப்பட்டவள் என்று நீ பார்க்கமாட்டாய். அவள் மேல் உன் விருப்பங்களை திணிக்கமுற்படுவாயே தவிர அவளை அவளாக நீ இருக்க அனுமதிக்கமாட்டாய். மனிதனின் பார்வையில் காட்சிகள் விரிகையில் உண்மை திரிகிறது. நீ ரீனாவைப் பார்ப்பது போல’ என்று சொல்லி அது நிறுத்தியது.
அது மேலும் பேசுவதற்காய் நான் காத்திருந்தேன். ஆனால் அது பேசவில்லை. அதன் மெளனம் வெகு நேரம் தொடர்ந்தது. பொசுக்கென்று அது பேச்சை நிறுத்தியது எனக்கு என்னமோ போலிருந்தது. அதன் அடர்ந்த மெளனம் என் மனதை பிசைந்தது. பாதாளத்தில் சிக்கிக்கொண்ட போது, ஒரு சிறிய துவாரம் வழியே, கண்ணுக்கு தெரியும் சூரிய வெளிச்சம் போல இருந்தது அதன் பேச்சு. எதை எதையோ புரிய வைத்தது. அது மறுபடியும் பேசுமென்று நான் மேலும் காத்திருந்தேன். ஆனால், அதனிடமிருந்து எந்த சத்தமும் இல்லை. காற்றின் போக்கில் தன்னாலே அசைந்து கொண்டிருந்தது. அதன் மெளனம் என் மனதை பாரமாய் அழுத்தியது. ஒருவேளை அது மீண்டும் உறங்கியிருக்கலாம் என்று பட்டது எனக்கு. நான் மெதுவாக எழுந்து நின்றேன். அங்கு சூழ்ந்திருந்த அமைதியை கலைக்க விரும்பாமல் மெளனமாய் திரும்பி நடக்கத் தொடங்கினேன். வானம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் ஒளி வேகத்தை நெருங்கிப் புரோட்டான் கணைகள் மோதல் – 5
- கொட்டப்படும் வார்த்தைகள்
- வெளிவந்துவிட்டது : அசை – தொகுப்பு இதழ் – 03.
- KUROSAWA CENTENARY SCREENING
- ஹாங்காங்கின் நாட்டிய சிகரா பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டம்
- தமிழ் இலக்கியத் தோட்டம் – தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது
- காலம் சஞ்சிகையின் ஆதரவில் “ஈழமின்னல் சூழ மின்னுதே”
- இலக்கியப் பரிசுப் போட்டி
- ‘‘பழமொழிகளில் மருத்துவக் குறிப்புகள்’’
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -8
- எனது வரிகளை இவ்வுலகின் மீது காக்கைச் சிறகால் எழுதுகிறேன்.
- கருணையும் கருணையின்மையும் – வசந்தபாலனின் அங்காடித்தெரு
- திரைவிமர்சனம்: அங்காடித் தெரு -ரங்கநாதன் தெருவின் இரைச்சல்களும் கொடூரங்களுக்குப் பிந்தைய ஒரு காதல் உணர்வும்
- பகை போக்கும் பச்சைமயில்வாகனன்
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் கடவுள் துகளைத் தேடும் சோதனை – 4
- குருமகான் சுப்ராஜி
- வேதவனம் விருட்சம் 79
- வரலாற்றின் நிலப்பரப்புக்குள் பரபரப்போடும் வலியோடும் அலைதல்
- ஊடலின் மௌன வலிகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -6
- சு.மு.அகமது கவிதை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -2
- செய்தாலி கவிதைகள்
- வட்டம்
- வெற்று வெளியிலாடும் பூவின் விரல்கள்
- சத்ரபதி ராஜாராமின் கீழ் மராத்தாக்கள் (1689 to 1700)
- முள்பாதை 23
- மனிதர்கள் குருடு செவிடு
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -11