நாகரத்தினம் கிருஷ்ணா
இப்போதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக தமிழத்திற்கு வந்தால் தலைவர் என்ற சொல் சர்வசாதாரணமாக காதில் விழுகிறது. குடும்பத்தில், வீதியில், பேருந்தில், நண்பர்கள் வட்டத்தில், அரசியலில், அலுவலகத்தில், இருவர் சந்தித்தால், நான்குபேர் கூடிப்பேசினால், பத்துபேர் திரண்டால் இப்படி அன்றாட வாழ்க்கையில் யாரோ, எவரையோ, செயற்கையாக, அழைப்புக்குறிய மனிதரிடமிருந்து பெறும் பலன்களின் அடிப்படையில்- அஞ்சலகத்தில் பேனாவை இரவல் கேட்பதில் ஆரம்பித்து – ‘ஐயம் இட்டு ஊழலை உண்ணும்’ பெருச்சாளிகளைப் போற்றும் சங்கேதப் பொருளாக உபயோகிப்பதுவரை என எங்கும் ‘தலைவரே!’ என்ற குரலைக் கேட்க முடிகிறது. அதில் உள்ள போலித்தன்மையையும் புரிந்துகொள்ளவேண்டும். அரசியல்வாதிகள் அறிவார்கள், பிறர் குறைவாகவே அறிவார்கள். ‘தலைவர்’ என்று அழைக்கிற ஒன்றிரண்டு முகங்களை நினைவுபடுத்தி பார்க்கிறேன், கண்கள் இரண்டொருமுறை படபடக்கின்றன, மூக்கோடு கூடிய மேல்தாள் உயர்ந்துகொள்ள, முப்பது பாகைமானி அளவில் வாய்பிளந்து நிற்பார்கள், சம்பந்தப்பட்ட நபரால் கிடைக்கும் பலனுக்கு எடை அதிகமென்றால் கைகள் இயல்பாகக் கும்பிடு போடும் இல்லையெனில் உடலோடு ஒட்டி கிடக்கும், நுணி பற்களைத் நாக்கு ஒருமுறை தொட்டு அடங்கும். ‘தலைவர்’ என்ற சொல்லுக்கான பொருளை இதுதானென்று அகராதிபடுத்திவிட முடியாது. இடம், பொருள், காலம் எல்லாம் சார்ந்தது; அதற்குமேலாக அழைக்கிற நபரும் அழைக்கப்படும் நபரும் அறிந்த உண்மையென்று ஒன்றுண்டு. தலைவர் என்று அழைக்கப்படும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எனினும் அச்சொல்லை நெஞ்சத்திலிருந்து மேலே கொண்டுவரும் எண்ணமிருக்கிரதில்லையா அதில் சூதுண்டு. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என நான்கும் தலைவரென்று அழைக்கிற சூதுடன் கலந்தவை. அவை அவற்றுக்கான தருணங்களுக்கென காத்துக்கிடக்கின்றன. தலைமை பீடத்திற்கான கவர்ச்சிக்கு வரலாறுகள் பதிவு செய்திருக்கிற ‘அதிகாரம்’ மட்டும் காரணமல்ல, ‘எத்தனைபேர்கள் என்னைக்கொண்டாடுகிறார்கள்’, என்பதற்கான விடையையும் அது பொறுத்தது. அதிகாரத்தின் பாய்ச்சலைக்காட்டிலும், புகழின் வீச்சுக்குக் கிடைக்கும் நிலப்பரப்பு அதிகமென்று சம்பந்தப்பட்டவர்கள் அறிவார்கள். தலைமை எடுக்கும் புகழ்ரூபம் வயிற்றெரிச்சலுக்கு காரணமாகின்றன. வரலாற்றில் திருப்பங்களாக நாம் வாசிப்பதனைத்தும், பிறர் புகழ் கண்டு காழ்ப்புறுவதால் உண்டகிற குடற்புண்களே. ஒரு தலைவர் மற்றொருவரை தலைவராக கனவில் பொய்தோற்றமாகக்கூட கற்பனை செய்வதில்லை. ‘பெரியார்’ ‘அண்ணா’ என உரிமையோடு அழைத்ததெல்லாம் சம்பந்தப்பட்ட மனிதர்களின் தலைமையை மறுப்பதற்கு உபயோகித்த தந்திர வார்த்தைகளென்று நினைக்கிறேன். எனக்கு மேலே இன்னொரு தலைவனா என்ற அசூயையின் வெளிப்பாடுகளே அவைகள். தலைவர்கள் வானத்திலிருந்து குதித்துவிடுவதில்லை, நம்மிலிருந்து வருபவர்கள். அன்று நம்மிலும் மேன்மக்கள் தலைமையேற்றார்கள், இன்று நம்மிலும் கீழ்மக்கள் தலைமை ஏற்கிறார்கள் என்பது அடிப்படையில் காணும் வேறுபாடு, விளைவு காவிரி பிரச்சினை தொடங்கி, காஷ்மீர் பிரச்சினைவரை அரசியல்வாதிகளின் கையாலாகதக்தன்மைக்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன, அண்மை உதாரணம் அயோத்தி.
மூத்திரம் பேய்ந்தாலும் முழுபக்க விளம்பரம்கொடுக்கும் நமது அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், விளம்பரமின்றி ஓசையின்றி இந்தியாவிற்காக நம்பிக்கை தரும் வகையில் உழைக்கும் மனிதர்களும் இல்லாமலில்லை. இந்தியப்பொருளாதாரமென்பது ரிலையன்ஸ், டாட்டா, இன்போசிஸ், விப்ரோ போன்ற அமெரிக்க முதலாளித்துவ சிந்தனையை அடிப்படையாகக்கொண்டவர்களை மட்டும் கொண்டதல்ல என்பது சற்று ஆறுதலானசெய்தி. அண்மையில் அமெரிக்காவின் மேலாண்மை இதாழான Academy of Management perspectives வெளியிட்டிருந்த “The Indian way: Lessons for the U.S.” என்கிற கட்டுரைபற்றிய செய்தியொன்றை பிரெஞ்சு தினசரியில் படிக்க நேர்ந்தது. இந்திய நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வொன்று தெரிவிக்கும் தகவலின்படி இந்தியாவிலுள்ள சிற்சில நிறுவனங்களின் அதிபர்களுக்கு, முதலீட்டாளர்களிடம் பொதுவில் காண்கிற ‘உபரி-மதிப்பு'(இலாப வீதம்) மீதான மோகம் குறைவு என்று தெரிவவந்திருக்கிறது. முதலீடு என்கிறபோது இலாபமின்றி இயங்குவது எப்படி? வேண்டும் எனினும் அவர்களுடைய தலையாய கவனம் இந்தியாவின் சமூக நலன் பற்றியதாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுவது, ஏழ்மைக்கு எதிராக வினையாற்றுவது, இந்தியத் தகவல் மற்றும் போக்குவரத்தின் வளர்ச்சிக்கு உதவுவது என்று அப்படியல் உள்ளது. இவை வெறும் வார்த்தை அலங்காரங்களல்ல. அடுத்த தேர்தலை குறிவைத்துவைத்து மக்கள் வரிபணத்தில் கொடைவள்ளல்களாக காட்டிகொள்ளும் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளல்ல. தங்கள் சொந்தமுதலீட்டில் கிடைக்கும் உபரி-மதிப்பில் கணிசமான பகுதியை தொழிலார்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறார்கள். இதனால் தங்கள் தொழிலாளர்களுடன் நெருக்கமான உறவை பேணமுடிவதாகக் கூறுகிறார்கள். ‘எங்களுக்குத் தொழிலாளர் நலனே முதலாவது, வாடிக்கையாளர் நலன் இரண்டாவது’ என்கிறார் HCL Tecnologies அதிபர். இக்குரலை கடந்தகால முதலாளித்துவத்தில் கேட்டிருக்க சாத்தியமில்லை. தவிர இந்நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் கல்விக்காகாவும், பயிற்சிக்காகவும் காட்டுகின்ற அக்கறையினால், அவர்களுடைய உழைக்கும் திறன் அமெரிக்க நிறுவனங்களோடு ஒப்பீடு செய்கிறபோது ஏறக்குறைய மூன்றுமடங்காக இருக்கிறதெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நிறுவனங்களின் வெற்றிக்கு தாங்கள் மட்டுமே காரணமல்ல என்பதை வெளிப்படையாகவே இந்திய முதலீட்டார்கள் ஒப்புகொள்கிறார்களென அமெரிக்க மேலாண்மை சஞ்சிகை புகழ்கிறது. அமெரிக்க அதிபர்கள் போலன்றி இவர்கள் கட்டமைப்பு, ஒருமுகப்படுத்துதல், ஒத்துழைப்பு என ஒவ்வொரு கட்டத்திலும் தொழிலாளர்களோடு இணைந்து செயல்படுகிறார்கள். இந்திய முதலாளிகளிடம் பாடம் கற்கவேண்டுமென அமெரிக்க முதலாளிகளுக்கு அறிவுறுத்துகிற ஆங்கிலக் கட்டுரை இறுதியாக பங்கு உரிமையாளர்களை அலட்சியம் செய்து முதலீட்டை வளர்ப்பது எப்படி? என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
முதலாளித்துவ நோக்கில் அமெரிக்க மேலாண்மை இதழியல் கட்டுரையை வெளியிட்டிருப்பினும், காமன்வெல்த் போன்ற துர்நாற்றம் வீசும் செய்திகளுக்கிடையே இதுபோன்ற நல்ல விடயங்களும் இந்தியாவில் நடக்கின்றன எனகோடிட்டுக்காட்டத்தான் எழுதவேண்டியதாயிற்று. எந்திரனுக்கு கொடிபிடித்து ஊர்வலம்போகிற மந்தைகளுக்கிடையே, தெருகூத்தும், பொம்மலாட்டமும், பாரம்பர்யகலைகளும் உயிர்ப்பெறவேண்டுமென தங்களை வதைத்துக்கொள்கிற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
——————————–
- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள்:
- மூன்றாவது கவிதைத் தொகுதி –
- வெட்சி (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து…)
- பரிமளவல்லி பற்றி
- இனிக்கும் கழக இலக்கியம்
- திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல்
- அன்புள்ள அய்யனார்—சுந்தர ராமசாமின் கடிதங்கள்
- சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)
- இவர்களது எழுத்துமுறை – 9. –இந்திராபார்த்தசாரதி
- அம்ஷன் குமார் நடத்தும் குறும்பட ஆவணப்படங்களுக்கான இருதின பயிற்சிப்பட்டறை
- படைப்பாளி
- கடந்து செல்லும் கணங்கள்…
- குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் …
- அதிகாரப்பூர்வமாக!
- நீர்க்குமிழி
- நிராகரிப்பு
- மழை வரப்போகிறது இப்போது !
- பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு
- பரிமளவல்லி – 14. மஞ்சள் கேக்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -15
- மொழிவது சுகம்:- தலைவர்களும் மனிதர்களும்
- நினைவுகளின் சுவட்டில் – (54)
- சூடாமணி, இலக்கிய மகுடம் சூடிக்கொண்ட மணி
- ராமச்சந்திர குஹாவின் “இந்திய வரலாறு காந்திக்கு பிறகு ”- விமர்சனம்
- முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- சமுதாய மேம்பாடும் பக்தி உணர்வும்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -21 நடனம் ஆடப் புல்லாங்குழலிசை
- சங்கத் தேய்வு இலக்கியம் – திணைமாலை நூற்றைம்பது.
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பூரணம் அடைவது கவிதை -34 பாகம் -1
- பெயெரெச்சம்..
- ஏதோவொரு நாள்
- அவன் இவள்…
- அவனும், அவளும்
- பைத்தியக்காரர்களின் உலகம்
- இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்
- முள்பாதை 49