ருத்ரா (இ.பரமசிவன்)
செஞ்சுடர்ப்பூவே!
உன் செடியுடம்பு உருகிய
வெள்ளை வேர்வையில்
நீர் பாய்ச்சிய
வெளிச்சத்தின்
விவசாயம் இது.
உன் ஒளியிதழ் உாித்து
அவள் சிாிப்பை
இந்த அறைக்குள்ளெல்லாம்
மஞ்சள் பூசினாய்.
உருகிக் கரையுமுன்
மெழுகுவர்த்தியே!
மெல்லிதாய்…எனக்கு
உன்னோடு ஒரு பேச்சு..
பாக்கியிருக்கிறது.
அவளுடைய
நெருப்பின் உதடுகள்
செங்குத்தாய் இங்கு
குவிந்து
குவிக்கும்
கோடிச்சொற்கள்.
விளையாட்டாய்
அன்றொரு நாள்
என்னிடம்
இந்த மெழுகுவர்த்தியை
அவள் தந்தாள்.
‘என்னோடு
இதன் மூலம் பேசுங்கள் ‘என்று.
டெலிஃபோனில்
நிறையப் பேசலாமே.
இது என்ன பைத்தியக்காரத்தனம்
என்று நினைத்தேன்.
இப்போது புாிகின்றது.
பேசாத அவள் வார்த்தைகள்
ஆடும் இந்த சுடாில்
ஆயிரம் ‘கலைடோஸ் ‘
சித்திரங்களையல்லவா
காட்டிக்கொண்டியிருக்கிறது.
ஒரு கிரேக்க காலத்து
கிண்ணத்தை கையில்
வைத்துக்கொண்டு
கவிதை ஒன்று எழுதினான் ‘கீட்ஸ் ‘.
‘கிரேஷியன் அர்ன் ‘
என்ற கோப்பையை
அவன்
சுழற்றி சுழற்றிப் பார்க்கின்றான்.
பூவேலைப்பாடுகளின்
பின்னணியில்
காதலனும் காதலியும்
பளிங்கு சிற்பமாய்
பவனி வருகின்றனர்.
‘அவர்கள் என்னென்ன
பேசியிருப்பார்கள் ‘
மெளனம்
உருகிக் கரைந்த கரைசலில்
மின்னல் குழம்பில் தோய்த்த
வார்த்தைகள்…
‘கீட்சுக்குள் ‘ ஒரு கிம்பர்லி சுரங்கம்.
‘காதில் விழுந்த இசையை விட
காதில் விழபோகும் இசை
ஆயிரம் மடங்கு இனிமையானது. ‘
என்கின்றான்.
அந்த
ஆண் உருவமும்
பெண் உருவமும்
பக்கத்தில் மிக நெருக்கமாய்
படர்ந்திருக்கின்றன.
அந்த உதடுகள்
இன்னும் உரசி முடிக்கவில்லை.
ஆனால்
ஒரு முத்தம் உதிர்க்கப்போகும்
பூகம்ப இனிப்பை
எழுத்துக்களில் எல்லாம்
அவன் தூவிவிடுகின்றான்.
`ஆதாம்-ஏவாளின் ‘ முதல் முத்தம்.
இந்த உலகத்தின்
முதல் எாிமலை!
கீட்சின் கண்முன்னே
சத்தம் இல்லாமல் நடக்கும்
அந்த எாிமலையின் ஒத்திகையே
அவன் கவிதைக்குள் எாியும்
‘சொக்கப்பனை! ‘
அந்த உதடுகளுக்கிடையே
இருக்கும் இடைவெளி
இன்னும் அப்படியே இருக்கின்றது.
பல நூற்றாண்டுகள் கடந்தும்-
அந்த கிண்ணம்
காணாமல் போகும் வரை
அது அப்படியே இருக்கும்.
முத்தமிடாமலேயே
முத்தமிட்டுக்கொண்டிருக்கும்
ஒரு கவிதையின் முத்தம் அது.
ஓ!மெழுகுவர்த்தியே!
உன் முன்னே
ஒரு `கீட்ஸினுள் ‘ அமர்ந்து
ஒரு ‘கீட்ஸ் ‘
உருகியோடுவதை
உற்றுக்
கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த செம்பிழம்பில்
அவள் நாணத்தின் நர்த்தனம்.
பொய்விழி காட்டுகின்றது.
முகத்தையே
ஒரு திரை ஆக்கி
அதனுள் இன்னொரு
முகம் ஒளித்து விளையாடும்
அவள் மாய்மாலம்
இங்கே ஒரு வெளிச்சம் காட்டுகிறது.
அந்த முத்தங்கள்
தந்த உயிர்ப்பில்
இருட்டு சடலம்
விருட்டென்று எழுந்து
விழித்துக் கொண்டது.
நின்றுபோய்க்கிடந்த
வெளிச்ச இதயம்
துடிக்கத்துவங்கியது!
காதல் வெப்பத்தில்
அவள் செதுக்கிய சிற்பத்தில்
இன்பத் தீயின் உளி பட்டு
அந்த திாியில் எாிகின்றேன்.
மெளன சிகரங்கள் உருகிய
வெள்ளி ஆற்றில்
அவளோடு கரையும்
தருணங்கள்
உன் காலடியில்.
மெழுகுவர்த்தியே!
எாியும் தீக்குச்சியின்
மூச்சு உன் மீது படும் வரை
வெளிச்சத்தின் சவம்
உன்னுள் உறைந்துகிடக்க
வெள்ளைக்கல்லறையாய்
படுத்துக்கிடந்தாய்.
அது நீயல்ல…நான்.
அது தீக்குச்சியும் அல்ல…அவள்.
வெளிச்சம் எது ?
இருட்டு எது ?
உருகி உறையும்
இருட்டுகளின்
இடைவேளக்குள்
மெழுகுவர்த்தியின்
வெளிச்ச சுவாசத்தில் நடந்த
இரண்டு
மனங்களின்
மகரந்த சேர்க்கையே
எங்கள் காதல்!
ஒரு மெழுகுவர்த்தியை
வைத்துக்கொண்டு…அந்த
‘மொினா ‘ கடற்கரையைக் கூட
இந்த மேஜைமீது
கொண்டுவருகின்றேன்.
என் மடியில்
அவள் தலைவைத்து
அவள் நெஞ்சில்
என் உயிர் வைத்து
கரைந்து கிடக்கும்
அந்த ‘அந்தி சிவப்பை ‘
பொன் துளியாய்
சிதறிக்கிடக்கும்
அந்த மணல் துளி
ஒவ்வொன்றிலும்
அரங்கேற்றுகின்றேன்.
எங்களைச் சுற்றி
கொத்து கொத்தாய்
காக்காய் கூட்ட்ங்கள் போல்
மக்கள் இறைசல்கள்.
சுண்டல் தின்ற மிச்சங்களாய்
சுருண்டுகிடக்கும்
காகித கசக்கல்களிலும்
சுரதா கவிதை தேடுகின்ற
தாபங்கள் எாிக்கும்
கசிவு வெளிச்சங்கள்.
இன்னும் இது போல்
எத்தனையோ காட்சிகளை
கண்முன் கொண்டுவந்து
நிறுத்துகின்றாய்.
திடாரென்று
தலைவிாிகோலமாய்
உன் தீச்சுடர்
ஏன் வெறிகொண்டு
ஆடுகின்றது ?
வெளிச்சக்கூந்தலின்
விடிவிளக்கே!
உன்னைப்
‘பேயோட்ட வருவதாய் ‘
பயமுறுத்தும்
இந்த இருட்டு சூன்யக்காரனைக்
கண்டா உனக்கு அச்சம் ?
உன் மெழுகு விழுதுகளின்
ஏட்டில் எழுதிக்கிடக்கும்
அந்த எட்டயபுரத்துக்காரனின்
மூச்சுதுடிப்புகளை
படித்துப் பார்.
‘ஒளி படைத்த கண்ணினாய்
வா! வா! வா! ‘
காதல் ஒளி ஏற்றிவைத்து
‘அந்த விண்ணையே ‘
சாடச் சொல்லியிருக்கிற
ஒரு நம்பிக்கையின்
உற்சாக ஊற்று அல்லவா
உன் காலடியின்
கங்கோத்திாி!
இந்த திாியில்
எங்கள் காதல்
எாிந்து கொண்டேதான் இருக்கும்.
கருக விடாமல்
உருகிக் கொண்டேதான் இருக்கும்!
திண்ணை
|