சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா
காற்ற டிக்குது! கடல் குமுறுது!
கண்ணை விழிப்பாய் நாயகனே!
வானம் சினந்தது! வையம் நடுங்குது!
வாழி பராசக்தி காத்திடவே!
நேற்றிருந் தோம் அந்த வீட்டினிலே! இந்த
நேர மிருந்தால் என்படுவோம் ?
மகாகவி பாரதியார் [புயற் காற்று -புதுச்சேரி (1916)]
முன்னுரை: வட அமெரிக்காவில் பெரிய பூகம்பங்கள் காலிஃபோர்னியா, வாஷிங்டன், அலாஸ்கா மாநிலங்களில் ஏற்பட்டது போல், மத்திய அமெரிக்கா, தென்னமெரிக்கா நாடுகளிலும் மாபெரும் நிலநடுக்கங்கள் நிகழ்ந்து, ஆயிரக் கணக்கான மக்கள் மாண்டதோடு, பொருட் சேதாரங்களும் விளைந்துள்ளன. கடந்த நூறாண்டுகளில் மிகப் பெரும் நிலநடுக்கங்கள் 13 அப்பிரதேசங்களில் நேர்ந்துள்ளன! தென்னமெரிக்காவின் ஈகுவடார் [Ecuador] நாட்டில் 1868 ஆம் ஆண்டில் நேர்ந்த நிலநடுக்கத்தில் 70,000 பேரும், 1939 இல் நிகழ்ந்த சில்லி [Chile] பூகம்பத்தில் 30,000 நபர்களும் மடிந்துள்ளனர். மறுபடியும் சில்லியில் 1960 இல் ஏற்பட்ட 9.5 ரிக்டர் அளவு உலகிலே மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டு அடுத்து நிலநடுக்கத்தில் கடல் பொங்கலைகள் [Tsunami] உண்டாகி கடற்கரைப் பகுதிகளும் சிதைவடைந்தன! மேற்குப் பெருவின் பகுதியில் [Peru] 1970 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில், நிலச்சரிவும் சேர்ந்து கொண்டு 66,794 மாந்தர் மரண மடைந்ததாக அறியப் படுகிறது! 1995 அக்டோபர் 9 இல் மெக்ஸிகோவின் மன்ஸானில்லோ [Manzanillo] நகரில் 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டு 50 பேர் மாண்டு போய் 10,000 மக்கள் குடியிருக்கும் வீடிழந்தனர்!
மெக்ஸிகோ நகரைத் தாக்கிய பூகம்பம், சுனாமி!
கடந்த நூறாண்டுகளில் மத்திய அமெரிக்காவில் மெக்ஸிகோ நாட்டில் மட்டும் 7 ரிக்டர் அளவு தீவிரத்துக்கு மேற்பட்ட 42 நிலநடுக்கங்கள் நேர்ந்து பன்முறைச் சேதாரங்கள் விளைந்ததாக வரலாற்றில் அறியப்படுகிறது! 1972 இல் நிகராகுவா [Nicaragua] நாட்டில் நேர்ந்த நிலநடுக்கத்தில் 5000 பேரும், 1976 இல் குவதமாலாவில் [Guatemala] நிகழ்ந்த பூகம்பத்தில் 23,000 நபரும் உயிரிழந்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக 1985 செப்டம்பர் 19 இல் மெக்ஸிகோ நகரத்தில் ஏற்பட்ட 8.1 ரிக்டர் அளவு பூகம்பத்தில் 20 மில்லியன் மாந்தர் உலுக்கப்பட்டு, அத்துடன் பெருங் கடற்பொங்கு அலையும் [Tsunami] கடற்கரை ஊர்களைத் தாக்கியது.
அதே ஆண்டு செப்டம்பர் 21 இல் 7.5 ரிக்டர் அளவில் உண்டான பின்னதிர்ச்சியால் [Aftershock], இரண்டாவது கடற்பொங்கு அலையைச் சிறிய வடிவத்தில் எழும்பியது! முதற்பொங்கு அலைத் தாக்கலினால் கடற்கரைப் பிரதேசங்களில் சிறிது பாதிப்புகள் விளைந்தன! இரண்டு சுனாமிகளும் பரந்த பசிபிக் கடலில் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, பிரென்ச் பாலினேஸியா, ஹவாயித் தீவுகளின் கடலலைக் கண்காணிப்பு நிலையங்களில் [Tide Stations of Central America, South America (Columbia, Ecuador), French Polynesia, Somoa, Hawaii Islands] பதிவாகி யிருக்கின்றன! பசிபிக் மகாக் கடலில் அடிக்கடி பூகம்ப அலைகள் உண்டாகி, சுனாமிகள் வட, மத்திய, தென் அமெரிக்காவின் கடற்கரைகள், ஹவாயித் தீவுகள், ஜப்பான் தீவுகள் ஆகியவற்றைத் தாக்கி வருகின்றன!
1985 இல் ஏற்பட்ட 8.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மெக்ஸிகோ பசிபிக் கடற்கரையில் 3 நிமிடங்கள்தான் நீடித்தன! அச்சமயம் உலுக்கு மையத்திலிருந்து [Epicenter] 210மைல் தூரத்தில் இருக்கும் மெக்ஸிகோ நகரம் 10 சதுர மைல் பரப்பளவில் பெருஞ் சேதமுற்றது! 18 மில்லியன் நகர ஜனத்தொகையில் 10,000 பேர் மரணம் அடைந்தனர்! 50,000 நபர் காயமுற்றனர்! 250,000 மக்கள் வீடிழந்தனர்! மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்கள், ஹோட்டல்கள், வர்த்தக மாளிகைகள் உள்பட 800 கட்டடங்கள் பிளவுபட்டுச் சரிந்தன! அதனால் மெக்ஸிகோ நகருக்கு ஈடு செய்ய முடியாத உயிர்ச் சேதமுடன், விளைந்த பொருட்சேதம் தனியாக 5 பில்லியன் டாலர் என்று அனுமானிக்கப் பட்டது.
அநேக நாடுகள் மெக்ஸிகோவுக்கு உதவிக்கு வந்தன. ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், அல்ஜீரியா, பிரேஸில், கொலம்பியா, வெனிசுவேலா, கியூபா, காஸ்ட ரீகா, நிகராகுவா, பனாமா, அமெரிக்கா, கானடா போன்ற நாடுகள் பண உதவியும், பணிப்படை [Relief Brigades] உதவிகளையும் அளித்தன. பல நாட்டின் ஜனாதிபதிகள் மெக்ஸிகோவிற்கு விஜயம் செய்தனர். குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ரேகனின் மனைவி நான்சி ரேகன் மெக்ஸிகோ நகருக்கு வருகை தந்து ஒரு மில்லியன் டாலர் அன்பளிப்பு செய்தார்.
மெக்ஸிகோ பீடங்களில் எப்படிப் பூகம்பம், எரிமலை ஏற்படுகின்றன ?
பசிபிக் தட்டு, வட அமெரிக்கத் தட்டு, கோகாஸ் தட்டு எனப்படும் முப்பெரும் பூதளவிசைத் தட்டுகளின் [Tectonic Plates: Pacific Plate, North American Plate & Cocos Plate] முதுகின் மீது மிதக்கும் மெக்ஸிகோப் பிரதேசம், பூமியில் தீவிர நிலநடுக்கங்கள் தாக்க வல்ல ஓர் உச்சக் கொந்தளிப்புப் பகுதியாகக் கருதப்படுகிறது! வெவ்வேறு அளவு நில நகர்ச்சிகளைப் பல்வேறு திசைகளில் கொண்ட, இம்மூன்று பூவிசைத் தட்டுகளால்தான் மெக்ஸிகோவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலைக் கொந்தளிப்புகள் ஏற்படுகின்றன! மெக்ஸிகோ பீடத்தின் நிலப்பிணைப்பு மேற்கு நோக்கி நகலும் வட அமெரிக்கத் தட்டுடன் சேர்ந்துள்ளது. தென்புறத்தில் உள்ள பசிபிக் கடற்தளம், அதற்கு அடியில் கிடக்கும் கோகாஸ் தட்டால் [Cocos Plate] இழுக்கப்பட்டு வட கிழக்கில் தூக்கிச் செல்லப்படுகிறது!
பசிபிக் கடற்தள நிலத்தின் திணிவு [Density] மிகையானது. அத்திணிவு நிலம், மென்மையான மெக்ஸிகன் பாறையுடன் முட்டும் போது, கனமான கடல் நிலம் மெக்ஸிகன் நிலத்திட்டுக்குக் கீழாக தள்ளப்படுகிறது! இந்நகர்ச்சி ‘கீழ்ச்செருகுதல் ‘ [Subduction Process] என்று குறிப்பிடப்படுகிறது. அப்போது ஓர் ஆழமான மத்திய அமெரிக்கக் குழிப்பகுதி, மெக்ஸிகோவின் தென்கரைப் புறத்தே ஏற்படுகிறது! அதே சமயத்தில் வட அமெரிக்கத் தட்டின் மேற்குத் திசை நகர்ச்சி மெதுவாகி, அது சந்திக்கும் கோகாஸ் தட்டின் பகுதியில் இடைமோதல் ஏற்பட்டுப் பள்ளம் விழுகிறது! கோகாஸ் தட்டில் ஏற்படும் பள்ளப் படைப்புகளே மெக்ஸிகோவின் தென்கரைப் பிரதேசங்களில் அடிக்கடி பூகம்பம் உண்டாக்கக் காரணமாகின்றன.
Chile Shore Washout
பசிபிக் கடற்தரைத் தட்டின் கனப் பாறைகள் கீழே அமுக்கப்படும் போது, பூமி உட்கருவின் கடுமையான வெப்பத்தில் அவை உருகி, உருக்கப் பட்ட கனற் குழம்பு, மேலே தள்ளப்பட்டு மென்மையான பாறைகளைத் துளைத்துக் கொண்டு, அவை எரிமலைகளாய் வெளிப்படுகின்றன! 1983 ஆண்டில் தென் மெக்ஸிகோவில் எல் சிசான் [El Chichon] நகரில் ஓர் எரிமலையும், 1994 இல் கடற்கரையில் உள்ள கோலிமாவில் [Colima] ஓர் எரிமலையும் இவ்விதமே கொக்கரித்து எழுந்தன! 1995-1996 ஆண்டுகளில் மெக்ஸிகோ நகருக்கு அருகே ஓர் எரிமலை மீண்டும் தலைதூக்கி, அண்டையில் இருந்த அநேக கிராம மக்களைப் புலப்பெயர்ச்சி செய்ய வேண்டியதாயிற்று!
தென் அமெரிக்கா பெருவைத் தாக்கிய சுனாமி கடற்பொங்கு அலைகள்!
உலகிலே பெரிய பூகம்பம் என்று கருதப்படுவது, 1960 மே மாதம் 22 இல் தென்னமெரிக்காவின் சில்லி நாட்டின் நடுவே 9.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்! அரை பில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தியது, அப்பூகம்பம்! நிலநடுக்கத்தின் குவிமைய ஆழம் [Focal Depth] 20 மைல். பூகம்ப ஆட்டத்தில் தரையில் நிற்க முடியாத பல நபர்கள், படகுகளில் ஏறிக் கடலில் மிதந்தனர்! ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட 10 அல்லது 15 நிமிடங்களில், பயங்கரச் சுனாமி [கடற்பொங்கு அலை] ஒன்று சில்லியில் 300 மைல் அகலக் கடற்கரையைத் தாக்கியது!
சுனாமியைத் தூண்டி விட்ட நிலநடுக்கம் 8.6 ரிக்டர் அளவு என்று அறியப்படுகிறது! சில வினாடிகளில் படகுகளில் மிதந்த மனித வடிவங்களும், படகுகளும் காணாமல் போயின! கடற்பொங்கு அலைகள் கரையை நோக்கி ஓடி 80 அடி உயரத்தில் எழும்பி வீடுகளையும், உள்ளிருந்த மனிதர்களையும் மூழ்க்கி கடலுக்குள் இழுத்துச் சென்றது! சுனாமியில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 330 முதல் 2000 வரை இருக்கலாம் என்று அனுமானிக்கப் படுகிறது! சில்லியைச் சுனாமி தாக்கி 15 மணி நேரங் கழித்து, காலிஃபோர்னியா மாநிலத்தின் வட கோடியில் உள்ள கிரஸென்ட் நகரில் [Crescent City] கடல் மட்டநிலை 5 அடி உயர்ந்தாகக் காணப்பட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது!
சில்லியில் சுனாமி தாக்கி சுமார் 15 மணி நேரங் கழித்து, 6000 மைலுக்கு அப்பாலிருக்கும் ஹவாயித் தீவுகளிலும் அலைகள் தாவின! கரையோரங்களில் கடலின் உயரம் 36 அடிக்கு மேல் எழுந்தது! சுனாமியின் அலை வீச்சுகள் ஹவாயித் தீவுகளை அடித்து 61 பேர் மாண்டதாக அறியப்படுகிறது! ஹவாயியின் முக்கிய இடமான ஹிலோ [Hilo] என்னும் நகர் பெரும் சேதமுற்றது! ஹவாயித் தீவுகளில் 24 மில்லியன் டாலர் பொருட் சேதத்தைச் சுனாமி உண்டாக்கியதாக அறியப்படுகிறது!
பூகம்பத்திற்குப் பிறகு அடிக்கும் தீவிரக் கடற்பொங்கு அலைகள்!
சுனாமி [Tsunami] என்பதைக் ‘கடற்பொங்கு அலைகள் ‘ என்று தமிழில் கூறலாம். ஜப்பான் மொழியில் ‘சுனாமி ‘ என்றால் ‘கடற்கரை அலை ‘ என்று பொருள்! பெளர்ணமி, அமாவாசைக் காலங்களில் எழும்பி, இறங்கும் சாதாரணக் கடல் அலைகள் [Sea Waves] வேறு! சுனாமி எனப்படும் கடற்பொங்கு அலைகள் வேறு! சூரிய, சந்திர ஈர்ப்பியல்புகளால் பூமியின் சுழற்சி நிலைக்கும், திசைக்கும் உகந்தபடி ஏற்படுபவை, கடலின் உச்ச அலைகள் [High Tides], நீச்ச அலைகள் [Low Tides].
ஆனால் பூமியின் உட்தளத்தில் உண்டாகும் கொந்தளிப்புகள் தூண்டி ஏற்படும் பூகம்பத்தால் கடல் அடித்தளம் பொங்கிச், சக்தி வாய்ந்த அலைகள் உண்டாகி, அதி வேகத்தில் பயணம் செய்து, கரையை அண்டும் போது 100 அடி உயரத்துக்கு மேல் எழும்பித் தாக்குகின்றன! அப்போது கடற்கரைகள் உடைபட்டு வழிக்கப்பட்டுத் துடைக்கப் படுகின்றன! அச்சமயத்தில் கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் ஆடு, மாடு, கோழி, மனித இனத்துக்கும், கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கும் என்ன நிகழும் என்று கற்பனித்துக் கொள்ளலாம்!
சுனாமிகளைப் பூகம்பம் மட்டும் தூண்டி உண்டாக்குவதில்லை! நிலச்சரிவுகளும், விண்கற்கள் [Meteorites] வீச்சுகளும் கடலில் சுனாமியைத் தூண்டி விடலாம்! நிலநடுக்கத்தின் போது பெருமளவு பரப்பில் கடற்தரை மட்டங்கள் திடாரெனத் தணிந்து, உயரும் போது, மேலிருக்கும் ‘பிரம்மாண்டமான நீர்த்தூண் ‘ [Huge Water Column] அசைத்து ஆட்டப்படுகிறது! நிலை தடுமாறிய அகண்ட பரப்பளவு நீர்ப்பளுவைப் பூமியின் ஈர்ப்பு விசை இழுத்துச் சரிசெய்ய முற்படும் சமயத்தில், கொந்தளிப்பு அதிர்வுகள் உண்டாகிச் சுனாமி எனப்படும் பொங்கு அலைகள் கடலில் எழும்புகின்றன!
சுனாமி கடற்கரையை அணுகும் போது என்ன நிகழும் ?
கடல் ஆழத்தில் பிறந்த பிரளய சுனாமி, பல்லாயிரம் மைல் பயணம் செய்து ஆழமற்ற கடற்கரையை நெருங்கும் போது, பெருத்த மாறுதலை அடைகிறது. சுனாமியின் வேகம் கடல் ஆழத்திற்கு ஏற்ப வேறுபடுகிறது. கடலின் ஆழம் குன்றும் போது, சுனாமியின் வேகமும் குறைகிறது! ஆனால் அலையின் உயரம் மிகையாகிறது! ஓரளவு நிலையான சுனாமியின் சக்தி அடர்த்தி அலையின் உயரத்தையும், வேகத்தையும் ஒத்தது [Tsunami ‘s Energy Flux (Constant) is related to Waves Velocity & Waves Height]. அதாவது கடற்கரையை நெருங்கும் சுனாமியின் வேகம் குறையும் போது, அலையின் உயரம் அதிகரிக்கிறது! கடற் தளத்தில் தூண்டப்பட்டு அலைகள் அதி வேகத்தில் பயணம் செய்யும் போது அலைகளின் உயரம் சிறியது! சுனாமி கடற்கரையை அணுகும் போது 100 அடி உயரங் கூட ஏறுமென்று அறியப்படுகிறது!
Chile
கரையை அண்டும் சுனாமியின் வேகம் தணிந்து உயரம் மிகுந்தாலும், மற்ற சாதாரண அலைகள் போல அதன் வீரிய ஆற்றல் குறைகிறது. இறுதியில் கரையை மோதும் போது, நீர்ப்படை வெள்ளம் பயங்கர வலுவுடன் தாக்குகிறது! அப்போது கரைப் பகுதிகள் உடைபடுகின்றன! கடல் அலைகள் 30 அடி, 60 அடி, 100 அடி வரை உயர்ந்து உள்நாட்டிற்குள் நுழைந்து வழித்துத் துடைத்துக் கடலுக்கு மீள்கின்றன! மரங்கள், செடிகள், வீடுகள், விலங்கினம், மனித இனம் மூழ்க்கப்பட்டு அழிக்கப் படுகின்றன!
பூகம்பத்தின் அழிவு சக்தி! சுனாமியின் அதிர்வு சக்தி!
பூகம்பத்திற்கும், புவியியலுக்கும் [Earthquake & Geology] உள்ள அடித்தள நட்பை ஒப்பிட்டுச் சுனாமி, பூகம்பம் ஆகியவற்றின் அதிர்வு சக்தியைக் [Earthquake Energy, Tsunami Energy] கணக்கிட முயன்றார்கள். அவ்விதம் கணித்ததில் 1985 செப்டம்பர் 19 இல் மெக்ஸிகோ பூகம்பம் சக்தி 5.61 x 1024 ergs, செப்டம்பர் 21 இல் மெக்ஸிகோ பூகம்பம் சக்தி 9.9 x 1024 ergs என்றும், முதல் சுனாமியின் சக்தி 0.56 x 1020 ergs, இரண்டாம் சுனாமியின் சக்தி 0.7 x 1020 ergs என்றும் அறியப்பட்டன.
சுனாமிகள் பெரும் பூகம்ப நிகழ்ச்சியால் கடல் ஆழத்தில் தூண்டப்பட்டு உற்பத்தி யாகின்றன! வட அமெரிக்கத் தட்டின் கீழாக கோகாஸ் தட்டு மட்டச் சாய்வுக் கோணத்தில் [Shallow Angle of Subduction of the Cocos Plate underneath the North American Plate] அமைந்துள்ளதால் அப்பரப்புகளில் சுனாமிகள் அதிகமாக எழுவதற்குக் காரணமாகின்றன! 1985 மெக்ஸிகோ பூகம்பத்தில் முதல் சுனாமி தாக்கிய பகுதி பூகம்பத் துவங்க தளத்தில் பாதியளவு பரப்பு 4500 சதுர கி.மீ நீட்சி என்பது அறியப்பட்டது. இரண்டாவது சுனாமி கரை ஓரங்களில் பூகம்பத் தளம் முழுவதும் தழுவிதாகத் தெரிகிறது!
தகவல்கள்:
1. Historical Earthquake -1985 Mexico City The Pithy Details.
2. Great Earthquakes for the Past 100 Years www.geo.arizona.edu
3. Mexico City Earthquake www.geo.arizona.edu
4. Earthquake Hazards Program: Poster of the Colima, Mexico www.usgs.gov/neis/poster/2003
5. The Greatest Catastrophe Suffered By Mexico City [Sep 20, 1998]
6. The October 9, 1995 Manzanillo, Mexico Earthquake www.eqe.com/publications
7. Mexico Earthquakes http://countrystudies.us/mexico/
8. The Greatest (South America) Chilean Earthquake & Tsunami [May 22, 1960]
9. How Do Earthquakes Generate Tsunamis ? www.geophys.washiton.edu/tsunami
********************
jayabar@bmts.com
- சென்ற வாரங்கள் அப்படி… (பரிசோதனை, சோதனை, பரிபோல வேகம், பரி வியாபாரம், வேதனை, சாதனை, நாசம்)
- ஒரு விருதும் நாவல் புனைவிலக்கியமும்
- புதுக்கவிதையின் வழித்தடங்கள்
- சாகித்ய அகாதெமியின் சார்பில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு
- இலக்கியப் பற்றாக்குறை
- சண்டியர் மற்றும் விருமாண்டி – முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள்
- எழுத்தாளர் விழா 2004- ஒரு கண்ணோட்டம்
- எமக்குத் தொழில் டுபாக்கூர்
- கடிதங்கள் – ஜனவரி 29,2004
- பெற்றோர் பிள்ளைகள் இடையே தலைமுறை இடைவெளி குறையுமா ?
- பங்களாதேஷ் அரசுகள் தொடர்ந்து நசுக்கும் மதச்சிறுபான்மையினர்
- விருமாண்டி – ஒரு காலப் பார்வை..!
- ஒரு சிறு பத்திரிக்கை வாசகியின் கையறு நிலை
- சொல்வதெப்படியோ
- அன்புடன் இதயம் – 5 – வேங்கூவர் – கனடா
- பாண்டிச்சேரி நாட்கள்!
- சரணாகதி
- தடுத்து விடு
- முத்தம் குறித்த கவிதைகள்
- நம்பிக்கை இழந்துவிட்டேன் நாராயணா..
- இன்னும் காயாமல் கொஞ்சம்!!
- பிலடெல்பியா குறும்பட விழா, 2003-ல் அருண் வைத்யநாதனின் குறும்படம்
- ம(ை)றந்த நிஜங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று
- நீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் -4
- விடியும்!-நாவல்- (33)
- ஒன்னெ ஒன்னு
- வேறொரு சமூகம்
- பொன்னம்மாவுக்குக் கல்யாணம்
- கல்லட்டியல்
- வாரபலன் –
- ஒரு புகைப்படமும், சில சிந்தனைகளும்
- சவுதி அரேபிய அரசியலில் பெண்கள் : ஓர் அனுபவம்
- கரிகாலன்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)
- மறு உயிர்ப்பு
- தமிழ் அமிலம்
- மூன்று கவிதைகள்
- கறுத்த மேகம் வெளுக்கின்றது
- என்னை என்ன
- பெண்கள்
- க்வாண்டம் இடம்-பெயர்த்தல்
- மெக்ஸிகோ நகரைத் தாக்கிய மிகப் பெரும் பூகம்பமும், சுனாமி [Tsunami] கடற்பொங்கு அலைகளும்! [1985]
- எனக்குப் பிடித்த கதைகள் – 96 – பொறாமை என்னும் நெருப்பு – ந.சிதம்பர சுப்ரமணியனின் ‘சசாங்கனின் ஆவி ‘
- அலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை