மூன்றாவது நாற்காலியின் வெற்றிடம்

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

கே.பாலமுருகன்



1
வாங்கய்யா. . எப்ப வந்தீங்க? வீட்டுல எல்லாம் நல்லாருக்காங்களா? வீட்டுப் பக்கமே வரமாட்டுறீங்க? ஆமாம். . என்னைலாம் பாக்க வந்துட்டாலும் அன்னிக்கு மழையா பெய்து வெள்ளம் வந்து 10 பேரு செத்துப் போயிருவாங்க போல. ஆமாம் இப்பல்லாம் மழையே பேயறது இல்லியே?
சரி பரவால்லே. . நம்மள யாரு பாக்க வரா யாரு வர்றது இல்லேனு பாத்துக்கிட்டா இருக்க முடியும்? வந்து உக்காருங்க. மிலோ குடிப்பீங்களா? ஆமாம் எப்பவும் வந்தா அதைத்தானே குடிப்பீங்க. சாரி, ரொம்ப நாள் கழிச்சி வர்றீங்களே அதான்யா. மறதி ரொம்பயா. இப்பல்லாம் சின்ன வயசுலே இந்த மறதி கோளாறு வந்துர்றுது. வயசான கெழடுக்கு என்ன எளவு வந்துர்ற போது? சாப்பாடு அப்படி. நீங்க உக்காருங்க. நல்லா தாராளமா உக்காந்து சாப்புடுங்க. நீங்க உக்கார்றே அளவெ வச்சித்தான் மத்தவங்களோட நீங்க எப்படிப் பொழங்கறீங்கன்னு சொல்ல முடியும், நல்லா சூத்த நாக்காலிலே வச்சி அமுத்தி உக்காருங்க. கொஞ்ச நேரம் பேசலாம்.
வெளில வெயில் அதிகமா இருக்குலே? ஆமாம் இப்பெல்லாம்தான் மழையே பேய மாட்டுதே.
உள்ளே
வீட்டு முன்னுக்கு எப்பவும் 3 நாக்காலி வைக்கச் சொல்லி அடம் பிடிச்சாரு இருக்கற வரைக்கும். ‘எவனாவது வீட்டுக்கு வருவானுங்க, அவனுக்கு நம்ப செய்யற நல்லது உக்கார நாக்காலி கொடுக்கறதுதான்’ எப்பயும் இப்படிச் சொல்லிட்டு வீட்டு முன்னுக்குத்தான் உக்காந்துருப்பாரு. ரெண்டு நாக்காலி காலியா கெடக்க, ஒன்னுல அவரு உக்காந்திருப்பாரு. அவருகிட்ட பகிர்ந்துக்க பேசிக் கொள்ள நிறைய வார்த்தைங்க இருந்துச்சி. ஏதாவது முனகிகிட்டே இருப்பாரு.
யாராச்சம் கிடைச்சிட்டா அவரு குனம், பேச்சு, உடல்மொழி, எல்லாம் மாறிடும். ரொம்ப உற்சாகமா அங்கயும் இங்கயும் சின்ன பையன் மாதிரி நடந்துகிட்டு வந்தவங்களே கவனிப்பாரு. யாரும் இல்லாத நேரத்துல ‘மழை யேன் இப்பலாம் பேயவே மாட்டுதுனு புலம்பிகிட்டு இருப்பாரு. கதவைத் திறந்து வெளில நிண்டு சாக்கடையில மூத்திரம் பேயுவாரு. ரொம்ப நேரம் யாரும் அவருகிட்ட பேசலான அழ ஆரம்பிச்சிருவாரு. எவ்ள நேரம் அழுவாருன்னு சொல்ல முடியாது. கட்டுப்படுத்த முடியாது. தேம்பி தேம்பி அழுந்துகிட்டு மூனாவது நாக்காலிலே உக்காந்துக்குவாரு. இழுத்து வந்து வீட்டுக்கு உள்ள வச்சி சாப்பாடு கொடுக்க கொஞ்சமாவது பலம் வேண்டும், போங்க.
வீட்டுல அவரெ தனியா விட்டுட்டு எங்கயும் போக முடியாது. கதவெல்லாம் சாத்தி பூட்டிட்டு போனாலும், சட்டை சிலுவாரு எல்லாத்தையும் கழட்டி வீசிட்டு வீடு முழுக்க அசிங்கம் பண்ணி வச்சிட்டு அம்மணமா படுத்துருப்பாரு. இந்தக் கோலத்தெ பாத்தும், அவரெ எப்படித் தனியா வீட்டுல உட்டுட்டு போக முடியும்?

வெளியே
1
எங்க? அந்த வீடா? ஆமாம் இப்படி நேரா போனிங்கனா முன் வாசல்லே பந்தல் கட்டி கூடாரம் போட்டுருப்பாங்க பாருங்க. அங்கத்தான். அங்க போயி அவரு பேரெ சொல்லிக் கேளுங்க சொல்லுவாங்க. வீட்டு முன்னுக்கு மூனு மர நாக்காலி இருக்கும் பாருங்க. ஒன்னு ரொம்பவே அமுங்கிப் போயிருக்கும். மத்தெது ரெண்டும் புதுசு மாதிரி இருக்கும். அங்கத்தான் அவரு வீடு. 5 நாள் ஆச்சே. இப்ப வந்துருக்கீங்க? உறவா இல்லெ கூட்டாளியா? பாக்க வயசான ஆளு மாதிரி இருக்கீங்க, கூட்டாளியாத்தான் இருப்பீங்க. இதுக்கு முன்னெ வந்துருக்கீங்களா அவரெ பாக்க? வந்துருக்கலாமே.
2
ஓ! அந்த மண்ட ஓடியோட கூட்டாளியா நீங்க? என்னா பாக்கறீங்க? ஓ, மண்டெ ஓடினு சொன்னனே அதுக்காகவா? மண்டெ எங்க ஓடப் போது. . மனுசனோட சிந்தனையும் எண்ணமும்தான் ஓடுது. வெயில் மண்டையா பொளந்தா அப்படித்தானே வரும்! சரி. . 5 வீடு தள்ளி போனிங்கனா அவரு வீடு வரும். அங்கப் பாருங்க, முன்னுக்கு பந்தல் கட்டிருக்காங்க. மூன்னு நாக்காலி இருக்கும் பாருங்க. அதுலே நானாவது போய் உக்காந்துருக்கலாம். எனக்குத்தான் மழை வந்தாலே கட்டுல்லே படுத்து தூங்கத்தானே தெரியும்.
அழுக வச்சித்தான் எடுத்தானுங்க. வீட்டுலேந்து மனுசன் ஓடிப் போயிட்டாரு. ஒரு வாரம் கழிச்சி எங்கயோ நகரத்துலே உள்ள, ஆஸ்பித்தல்லே செத்து அழுக வச்சித்தான் எடுத்தாங்களாம். உடம்பெ கழுவும் போது சதைலாம் விலகி, அழுவன நாத்தம் இன்னும் இந்தப் பக்கம் அடிச்சிக்கிட்டு இருக்கு. அதை மோந்து பாத்துக்கிட்டே போங்க. அங்கத்தான் அவரு வீடு.
வெற்றிடம்
மூன்று நாற்காலிகள். கொஞ்சமாய் காற்று. எப்பொழுதாவது மழைப் பெய்யும். கடப்பவர்கள் எப்பொழுதும் போல பைத்தியக்கார யதார்த்தத்துடன் மூன்று நாற்காலியையும் பார்த்துவிட்டுப் போகிறார்கள். அவ்வளவுதான்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
http://bala-balamurugan.blogspot.com/

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்