நரேந்திரன்
மார்க்கையன்கோட்டை இன்றைய தேனி மாவட்டத்தில் சின்னமனூருக்கு அருகிலிருக்கும் ஒரு சிறிய கிராமம். ஊரைச் சுற்றிலும் பச்சைக் கம்பளம் விரித்தது போல நிறைய நெல் வயல்கள். என்னுடைய தாய்வழிப் பாட்டனாருக்கு அங்கு சிறிது நிலமிருந்தது. முல்லைப் பெரியாற்றுப் பாசனம். பாட்டையாவிற்கு அதில் நிரம்பப் பெருமை. ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் போது, எந்நேரமும் மழை பொழியத் தயாராக இருந்த ஒரு மப்பும், மந்தாரமுமான நாளில் அங்கு போனது நினைவிருக்கிறது. கதிரறுப்பதற்கு முன், பூஜைகள் செய்வதற்காக என்று எண்ணம். சேறும், சகதியுமாக நிறைந்து ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலில் நண்டுகளைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது அழியாத சித்திரம் போல என் மனதில் தங்கி விட்டிருக்கிறது. நல்லவேளையாக பாட்டையா இன்று உயிருடனில்லை. இல்லாவிட்டால் முல்லைப் பெரியாறுக்கு ஏற்படப்போகும் கதியை எண்ணி நெஞ்சொடிந்து போயிருப்பார்.
முல்லைப் பெரியாற்றின் விளைவாக உருவாகப் போகும் பிரச்சினையின் பரிணாமம் குறித்து உணர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வெகுசிலரே என்பது என் எண்ணம். ஆட்சியாளர்களுக்கோ அதில் எந்தவிதமான அக்கறையும் இல்லை. பெயருக்கு வழக்குப் போடுவது, அறிக்கைகள் விடுவது போன்ற பம்மாத்துக்கள்தான் தொடர்ந்து நடந்து கொண்டிறது. முல்லைப் பெரியாற்று அணை இடிக்கப்பட்டால் அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் ஏறக்குறைய ஒரு கோடி பேர்களுக்கு மேலானவர்கள் என்பதனை எவரும் எடுத்துச் சொல்வது இல்லை. கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து, ராமநாதபுர மாவட்டம் வரையுள்ள சிறு விவசாயிகளும் அதனைச் சார்ந்து வாழும் மக்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது திண்ணம். இது இன்னொரு காவிரிப்பிரச்சினை மட்டுமல்ல, தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தையே அசைத்துப் பார்க்கக் கூடிய ஒரு பிரச்சினையும் கூட. ஆனால் இந்தப் பிரச்சினை குறித்து தமிழ்நாட்டு ஆட்சியாளார்களின் மெத்தனம் மிகவும் ஆச்சரியமளிக்கக் கூடிய ஒன்று.
நூறு வருடங்களுக்கு முன்பு, எங்கோ பிரிட்டிஷ் மண்ணில் பிறந்த •பென்னி குக் என்ற தனிமனிதனின் கடுமையான முயற்சியால் உருவான இந்த அணையால் விளைந்த நன்மைகள் ஏராளம். வறண்டு கிடந்த தென் தமிழ்நாடு வளம் பெற்றது அவர் கட்டிய அணையால்தான். அந்த அணை பலவீனமானதாக இருக்கிறது என்று சொல்லும் கேரள அரசின் கூற்று உண்மையானதாக இருந்தால், தமிழ்நாட்டு அரசாங்கமல்லவா புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும்? கேரள அரசு அணை கட்டினால், அணையின் மொத்தக் கட்டுப்பாடும் அவர்கள் கைகளுக்கல்லவா சென்றுவிடும்? பின்னர் அவர்கள் சொல்வதுதான் சட்டம்; அவர்கள் விடுவதுதான் தண்ணீர் என்றல்லவா ஆகிவிடும்? இலவசத் திட்டங்களுக்காக ஏழை மக்களின் வரிப்பணைத்தை வீணடித்துக் கொண்டிருப்பவர்கள் இதுகுறித்து சிறிதேனும் யோசிக்க வேண்டாமா?
மற்றொரு கோணத்தில், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கமும், திருவிதாங்கூர் சமஸ்தானமும் செய்து கொண்ட 999 வருட ஒப்பந்தத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடவே கேரளம் முல்லைப்பெரியாற்று அணையை இடிக்கத்துடிக்கிறது என எண்ணுகிறேன். கர்நாடக அரசாங்கத்தைப் போலவே தாங்களும் தமிழர்களை ஆட்டிப்படைக்கலாம் என்பது ஒரு காரணியாக இருக்கலாம். வழக்குப் போடுவதும், அறிக்கைவிடுவதும் வீணான செயல்களே அன்றி வேறொன்றுமில்லை. கேரள அரசுகள் சுப்ரீம் கோர்ட்டென்ன, எந்த கோர்ட்டின் தீர்ப்பையும் தாங்கள் மதிக்கத் தயாராக இல்லை என்பதனை பலமுறை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். எனவே முழு முயற்சியுடன் நேரடிப்பேச்சுவார்த்தையில் இறங்குவதைத் தவிர வேறு வழிகள் ஏதும் இல்லை. ஆனால் யார் அதனை முன்னின்று நடத்தப்போகிறார்கள் என்பது கேள்விக்குறி. அதற்கான சிறு முயற்சியைக் கூட தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இதுவரை எடுக்கவில்லை.
எதிர்வரும் காலங்களில் பற்றி எரியப்போகும் இப்பிரச்சினை குறித்து தமிழக பத்திரிகைகளும் அதிக முக்கியத்துவமளித்துச் செய்திகளை வெளியிடுவதில்லை. அதுபோன்ற செய்திகளை வெளியிடுவதால் என்ன பயன்? சினிமா நடிகர்களைப் பற்றி ‘பரபர’ப்பாக செய்தி வெளியிடுவது எளிது. விற்பனைக்கும் குறைவில்லை. எங்கோ கிராமத்தில் வாழும் ஏழைகள் இருந்தாலென்ன? இறந்தாலென்ன? தமிழகப்பத்திரிகைகள் ஆக்கபூர்வ செய்திகளை வெளியிடுவதை நிறுத்தித்தான் ஆண்டுகள் பல ஆயிற்றே! ஒருவேளை ‘அடக்கி’ வாசிக்கும்படி ‘அறிவுறு’த்தப்படிப்பார்களோ என்னவோ? நமக்கு அரசு விளம்பரம்தானே முக்கியம்?
அதே சமயம், கேரள அரசாங்கம் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் இந்தச் செயலைச் செய்ய ஆலாய்த் துடிப்பது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை. கேரளா உணவிற்கும், வேலை வாய்ப்புகளுக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்திருக்கும் ஒரு மாநிலம். ஆடு, மாடு, அரிசியிலிருந்து கறிவேப்பிலை வரை தமிழ்நாட்டிலிருந்துதான் சென்றாக வேண்டும். சுற்றுலாப் பயணிகளும், வெளிநாடு வாழ் மலையாளிகள் அனுப்பும் பணம் தவிர வேறெதுவும் வருமானமில்லை அங்கே. படித்த மலையாளிகள் வேலை தேடிச் சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும் படையெடுக்கிறார்கள். தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் விடுவதை நிறுத்தினால் உண்டாகப் போகும் பிரச்சினைகளைத் தாங்கும் திராணி கேரளத்திற்கு இல்லையென்றே சொல்ல வேண்டும். பின் எதற்காக இந்த வன்மம்?
கேரள நதிகளில் உற்பத்தியாகும் நீரில் 90 சதவீதம் வீணாகக் கடலில் கலக்கிறது. அதில் வெறும் 10 சதவீதத்தைத் தமிழ்நாட்டிற்கு அளித்தாலே தமிழ்நாடு வளமடையும் என்பதில் சந்தேகமில்லை. தமிழகததை அண்டி வாழும் கேரளத்திற்கும் இது நன்மையளிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கும். எதிர் வரும் காலத்தில், ஒருவேளை முல்லைப் பெரியாற்று அணை இடிக்கப்பட்டால், வாழ்விழந்த தமிழ்நாட்டு விவசாயிகள் கேரளத்திற்குதான் சென்று குடியேற வேண்டியிருக்கும். வேறு வழியில்லை. நீரின்றி அமையாது இவ்வுலகு. தாங்குமா ‘கொச்சு’ கேரளம்?
மெத்தப் படித்த மேதாவிகளான கேரள ‘அறிவுஜீவி’கள் இதுகுறித்து வாயே திறக்காதிருக்கக் காரணம் என்ன?
**
தமிழ்நாடு காலம்காலமாக நீருக்குத் தவித்து வரும் அரைப்பாலைவனம். எனவே நமது முன்னோர்கள் ஊர் ஊருக்கு ஏரிகளையும், குளங்களையும் வெட்டி வைத்தார்கள். அந்த ஏரிகளையும், குளங்களையும் முறையாகப் பராமரித்து வந்தாலே நமது தண்ணீர் பிரச்சினையில் பாதி குறைந்திருக்கும். ஆனால் கடந்த நாற்பதண்டுகளில் நடந்ததே வேறு. தமிழ்நாட்டின் பெரும்பாலான ஏரிகளையும், குளங்களையும் ஆக்கிரமித்து, அதனைக் கூறுபோட்டு விற்றுவிட்டார்கள். குப்பைகளைக் கொட்டிக் கொட்டியே அதனைத் தூர்த்து இருந்த இடம் தெரியாமல் தகர்த்தார்கள். இரண்டு திராவிடக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு இந்தச் செயலைச் செய்தன. அதிலும் தி.மு.க.வினர் இதில் பழம் தின்று கொட்டையிட்டவர்கள். இன்றும் இந்தக் கேவலச் செய்கையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்தான். தட்டிக் கேட்க வேண்டிய அரசாங்க அதிகாரிகளோ வாய்மூடிக் கிடக்கிறார்கள். பாவம். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. தட்டிக் கேட்டுவிட்டு உயிர்பிழைப்பது எம்மாத்திரம்? ஆதாரபூர்வமாக கொலை செய்தவர்களுக்கே விடுதலை வழங்குபவர்களல்லவா தமிழக நீதிபதிகள்.
எனக்குத் தெரிந்து சென்னை நகருக்குள்ளேயே பல ஏரிகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை இன்று இருந்த இடமே தெரியவில்லை. விழுப்புரத்தில் நான் சிறுவனாக இருக்கையில் பார்த்த ஒரு ஏரி இன்று பேருந்து நிலயமாக மாறியிருக்கிறது. மூடத்தனத்தின் உச்ச கட்டம் இது. பேருந்து நிலையம் கட்ட வேறு இடமா இல்லை? தமிழ்நாடு முழுவது இதே நிலமைதான். சிறு நகரங்களுக்கு குடிநீர் அளித்துவந்த பல ஊருணிகளும், குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு காணாமல் போய்விட்டன. மக்கள் குடிநீருக்கு ஆலாய்ப் பறக்கிறார்கள். விலை மதிப்பற்ற, பல கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள இவற்றை திராவிடக் கட்சிகள் கபளீகரம் செய்திருக்குன்றன. மிகப்பெரிய கேவலம் இது. சுற்றுப்புறத்தை மாசு செய்யும் ஆலைகள் நிறைந்து காற்றும், நீரும் விஷத் தன்மை கொண்டவையாக மாறியிருக்கிறது. இந்த அவலம் தமிழ்நாட்டில் மட்டுமே அதிகம் காணக்கிடைக்கிறது. தட்டிக் கேட்பார் ஒருவரும் இல்லை. கேட்பவரின் உயிருக்கு உத்திரவாதமில்லை என்பதுதான் இன்றைய நிலைமை.
**
முல்லைப் பெரியாற்றுப் பாசனப்பகுதி விவசாயிகளின் துயரம் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் துவங்கிய ஒன்று. திடீரென ஒருநாள் அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்க ஒப்பந்தமிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. தேனிமாவட்டம் தப்பித்தாலும், தொலைதூர ராமநாதபுர விவசாயிகள் இந்தத் தான் தோன்றித்தனமான செய்கையால் பாதிப்படைந்தார்கள். தமிழ்நாட்டின் தலைமைச்செயலரில் துவங்கித் தன்னைச் சுற்றிலும் மலையாளிகளையே முக்கிய அதிகாரிகளாக வைத்திருந்தவர் எம். ஜி. ஆர். தனது உண்மையான முகத்தை மறைக்க அவருக்கு அது தேவையாக இருந்தது. கொள்ளையடிக்கும் ‘ஏழை பங்காள’னை யாருக்குத்தான் பிடிக்கும்? பாசனப்பகுதி விவசாயிகளைக் கலந்தாலோசிக்காமல் இரு மாநிலங்களிலும் பணிபுரிந்த மலையாளிகள் தங்களுக்குள் ஒப்பந்தமிட்டு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்தார்கள். தமிழரான அன்றைய பாசனத்துறை அமைச்சர் ராஜா முகம்மது இதுகுறித்து ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை. அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி தனது வழக்கமான செயலைச் செய்தார். அதாவது அது குறித்து ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தார். காவிரிப்பிரச்சினையிலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் அவர் செய்ததுதானே அது?
எம்.ஜி.ஆரின் மீது அபாரமான பிரேமை கொண்டவர்களாக இருந்த, இன்றும் இருக்கும் தேனி மாவட்டத்து மக்கள் அவரை மன்னித்தார்கள். அன்று இதுகுறித்து ஏதேனும் எதிர்ப்பு காட்டியிருந்தால் இன்று கேரள அரசாங்கம் அணையை இடிக்கத் என்னும் ஒரு செயலைச் செய்யத் துணிந்திருக்காது.
இன்றும், தேனிமாவட்ட விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். அவர்களை ஒன்றுபட விடாமலும், போராடுவதைத் தடுப்பவர்களாகவும் இருப்பவர்கள் தமிழர்களே. தமிழகத்தை ஒட்டிய கேரளப்பகுதியான இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் அதிகம். பெரும் பணக்காரர்களான ஏலக்காய்த் தோட்ட, தேயிலைத் தோட்ட முதலாளிகளில் பலரும் தமிழர்களே. தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த அவர்களைக் கேரள அரசு கிடுக்கிப் பிடியில் வைத்திருக்கிறது. மறைமுகமாக அவர்களைத் தூண்டி, போராட்டங்களைத் தடுக்கவும் வைக்க கேரள அரசால் முடியாத செயல் ஒன்றுமில்லை. இரண்டு திராவிடக் கட்சிகளின் மெத்தனத்தின் பின்னால் மேற்கூறிய ஏலக்காய்த் தோட்ட, தேயிலைத் தோட்ட முதலாளிகள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த நிலையில், பெரியாற்றுப் பாசனப்பகுதி விவசாயிகள் சாதி, மத, இன, கட்சி வேறுபாடுகளைத் துறந்து ஒற்றுமையுணர்வுடன் போராடுவதைத் தவிர வேரொரு மார்க்கமும் இல்லை. தமிழ்நாட்டு அரசாங்கமோ, கருணாநிதியோ, ஜெயலலிதாவோ அவர்களுக்கு நன்மை செய்யப்போவதில்லை. குறைந்தபட்சம் இருவரும் இதுகுறித்து லாவணி பாடாமல் இருந்தாலே போதுமானது. லாவணி பாடியே தஞ்சை விவசாயிகளைப் பராரிகளாக்கியவர்கள் இருவரும் என்பது வரலாறு. மேலும், கோபாலசாமி போன்ற ஆசாமிகளை அண்ட விடாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். வெற்று வீராவேசப் பேச்சுக்களால் நன்மை ஒன்றும் விளையப்போவதில்லை. இருக்கும் கொஞ்ச, நஞ்ச நல்லுறவும் கெட்டுப் போய், உள்ளதும் கெட்டு நிற்க வேண்டியதுதான். வாய்ச்சொல் வீரர்களின் வெற்று வீராவேசப்பேச்சை நம்பிய இலங்கைத் தமிழர்கள் இன்று ரணகளப்பட்டு மூலையில் ஒடுங்கிக் கிடக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஒன்றுபட்ட, வன்முறையில்லாத சாத்வீகமான போராட்டமே தமிழ்நாட்டிற்கும், கேரளத்திற்கும் நன்மை செய்யும்.
narenthiranps@yahoo.com
- தொலைந்த பாதங்களின் சுவடுகளேந்தி…
- நிழலின் கீழ் ஒளிந்திருக்கும் சூரியன்
- வேதவனம் -விருட்சம் 74
- கலா பவனத்தில் ஸ்ரீதர் பிச்சையப்பா
- மெலிஞ்சி முத்தனின் “வேருலகு” குறுநாவல் விமர்சன ஒன்றுகூடல்
- கூர்-2010 இரவு எரிந்து கொண்டிருக்கிறது…
- பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா , செந்தமிழ்க் காவலர் பேராசிரியர், முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -3
- ரேனிகுண்டா- சினிமா விமர்சனம் துயரப் பெரும்பாதையில் மரணத்தைப் பின்தொடரும் இளம்குற்றவாளியின் குரல்
- ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி (கதிரியக்கம்)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) – ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் – கவிதை -23 பாகம் -3
- சூதாட்டம்
- வெண்குருகு ஆற்றுப்படை
- குதிரை
- அகாலத்தில் நிகழும் அழைப்புகள்
- துளி விஷத்திற்கான விலையொன்றும் அதிகமில்லை..
- தனது அறைக்கு வந்திருந்த வாப்பா
- பிம்பம்
- முல்லைப் பெரியாறு
- ஹாங்காங்கில் சீன வருடப்பிறப்பு: அனுபவம் புதுமை
- மொழிவது சுகம்: மனுநீதிச் சோழனும் மரண தண்டனையும்
- டீலா, நோ டீலா!
- நினைவுகளின் சுவட்டில் – (44)
- ஜெயந்தன் நினைவுகள்
- முள்பாதை 18
- சார்பு
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -6